என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் - மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
- தமிழ்நாட்டில் தற்போது செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 180 ஆக உயர்ந்துள்ளது.
- மொத்தம் 36 கோடியே 17 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் செலவிலான கட்டிடங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை:
ஏழை எளிய கிராமப்புற மாணவ, மாணவியரின் உயர்கல்வித் தேவையை நிறைவுசெய்யும் பொருட்டு, 2025-26-ம் ஆண்டிற்கான உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கையில் 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பின்படி, 2025-26-ம் கல்வியாண்டு முதல் செயல்படும் வகையில் 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் 26.5.2025 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, வரப்பெற்ற கோரிக்கைகளின் அடிப்படையிலும், கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையிலும், இக்கல்வியாண்டில் (2025-2026), உயர் கல்வித் துறையின் சார்பில் வேலூர் மாவட்டம் கே.வி. குப்பம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூர், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஆகிய நான்கு இடங்களில் கூடுதலாக 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் 30.5.2025 அன்று அறி க்கப்பட்டது.
அதன்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் இன்றைய தினம் 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த 4 கல்லூரிகளும், தலா 5 பாடப்பிரிவுகளுடன் தொடங்கப்படும். மேலும், ஒவ்வொரு கல்லூரிக்கும் 12 ஆசிரியர்கள் (உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்கள் முதலாமாண்டிற்கு மட்டும்) மற்றும் 14 ஆசிரியரல்லாப் பணியிடங்கள் வீதம் 4 கல்லூரிகளுக்கு மொத்தம் 48 ஆசிரியர்கள் மற்றும் 56 ஆசிரியரல்லாப் பணியிடங்களைத் தோற்றுவிக்கப்பட்டு, 4 கல்லூரிகளுக்கு ஓராண்டுக்கான தொடர் மற்றும் தொடராச் செலவினத்திற்காக மொத்தம் 8 கோடியே 67 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம், இப்பகுதிகளிலுள்ள சுமார் 1,120 மாணவர்கள் உயர்கல்வி பயிலும் வாய்ப்பைப் பெறுவார்கள்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் இன்றைய தினம் தொடங்கி வைக்கப்பட்ட இப்புதிய 4 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைச் சேர்த்து தமிழ்நாட்டில் தற்போது செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 180 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், வேலூர் மாவட்டம், சேர்க்காடு, திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 18 கோடியே 74 இலட்சம் ரூபாய் செலவில் ஐந்து தளங்களுடன் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடம், 2 கோடியே 38 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள துணைவேந்தர் குடியிருப்பு, 8 கோடியே 49 லட்சம் ரூபாய் செலவில் உதவி பேராசிரியர்கள் குடியிருப்புகள் மற்றும் 6 கோடியே 56 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஆசிரியரல்லா பணியாளர்களுக்கான குடியிருப்புகள், என மொத்தம் 36 கோடியே 17 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் செலவிலான கட்டிடங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் எ.வ. வேலு, கோவி. செழியன், தலைமைச் செயலாளர் முருகானந்தம், உயர் கல்வித்துறை செயலாளர் சமயமூர்த்தி கல்லூரி கல்வி ஆணையர் சுந்தரவல்லி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






