என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • பெரியாறு அணையில் 23.6, தேக்கடியில் 25.8 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.
    • மழை பெய்து வருவதால் வறண்டு கிடந்த மூலவைகையாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் அருகே கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14,707 ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது.

    தென்மேற்கு பருவமழை கேரளாவில் முன்கூட்டியே தொடங்கியதால் அணையின் நீர்மட்டம் 136 அடிவரை உயர்ந்தது. அதனை தொடர்ந்து மழை குறைந்ததால் அணையின் நீர்மட்டமும் படிப்படியாக குறைந்து இன்று காலை 129.95 அடியாக உள்ளது. இருந்த போதும் அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 1867 கனஅடி நீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் முல்லை பெரியாற்றின் கரை பகுதியில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு 105 கனஅடியாக குறைக்கப்பட்டது. இதனால் லோயர்கேம்ப் மின் உற்பத்தி நிலையத்தில், மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது.

    சீரமைப்பு பணிகள் முடிந்த பின்னர் மாலையில் மீண்டும் அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 1867 கனஅடி நீர் திறக்கப்பட்டது. அணைக்கு நீர்வரத்து 1858 கனஅடியாக அதிகரித்துள்ளது.

    பெரியாறு அணையில் 23.6, தேக்கடியில் 25.8 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது. கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் லோயர்கேம்ப், பெரியாறு நீர்மின் உற்பத்தி நிலையத்தில் மீண்டும் 4 ஜெனரேட்டர்கள் மூலம் முழு அளவான 168 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படுகிறது.

    தொடர் மழை காரணமாக கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்தனர்.

    இன்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமானோர் சுருளி அருவிக்கு வந்தனர். ஆனால் தடை விதிக்கப்பட்டதால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவி மற்றும் வருசநாடு பகுதியில் உள்ள மேகமலை அருவியில் நீர்வரத்து சீரானதால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் நீர் வரத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    மழை பெய்து வருவதால் வறண்டு கிடந்த மூலவைகையாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு நீங்கும் என கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

    • ½ கிலோ மீட்டர் தூரத்துக்கான பணிகள் முடிக்க முடியாமல் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது.
    • திட்டம் முழுமை அடையாததால் சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை மட்டுமே தற்போது பறக்கும் ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.

    சென்னை:

    சென்னையில் பறக்கும் ரெயில் திட்டம், 3 கட்டங்களாக திட்டமிடப்பட்டது. அதன்படி, முதல் கட்டமாக சென்னை கடற்கரை-மயிலாப்பூர் இடையே கடந்த 1984-ம் ஆண்டு இதற்கான பணிகள் தொடங்கியது. 1995-ம் ஆண்டு இதற்கான பணிகள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. 2-ம் கட்ட பணிகள் மயிலாப்பூர்-வேளச்சேரி இடையே 1998-ம் ஆண்டு தொடங்கி, 2004-ம் ஆண்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. மேலும், 2-ம் கட்ட பணி விரிவாக்கமாக கடந்த 2008-ம் ஆண்டு வேளச்சேரி-பரங்கிமலை இடையே ரூ.495 கோடி மதிப்பீட்டில் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரெயில் பாதை அமைக்கும் பணி தொடங்கியது. இதில், 4.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு 167 தூண்களுடன் ரெயில் பாதை அமைக்கப்பட்டது.

    இந்த நிலையில், ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகர் பகுதிகளில் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதனால், ஆதம்பாக்கம்-பரங்கிமலை இடையே எஞ்சியிருந்த ½ கிலோ மீட்டர் தூரத்துக்கான பணிகள் முடிக்க முடியாமல் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது. இந்த திட்டம் முழுமை அடையாததால் சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை மட்டுமே தற்போது பறக்கும் ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே, 15 ஆண்டுகளுக்கு பின்பு கோர்ட்டு மூலம் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டு, கடந்த ஆண்டு பணிகள் மீண்டும் தொடங்கியது. அப்போது, ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகர் பகுதியில் தூண்கள் மீது அமைக்கப்பட்ட ரெயில் பாலம் திடீரென சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. தற்போது அந்த பாலம் சரிசெய்யும் பணி முடிவடைந்துள்ளது. எஞ்சிய ஒரு சில பணிகள் மட்டுமே தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், வரும் நவம்பர் மாதம் இந்த பணிகள் முழுமையாக முடிவடையும் எனவும் ரெயில்வே அதிகாரிகள் தொிவித்துள்ளனர்.

    இதுகுறித்து தெற்கு ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், 'வேளச்சேரி-பரங்கிமலை இடையிலான பறக்கும் ரெயில் பணிகள் 85 சதவீதம் முடிந்துள்ளது. ரெயில்வே பாதுகாப்பு ஆணையத்தின் அனுமதி பெறப்பட்ட பின்பு, இந்த வழித்தடத்தில் ரெயில் சேவை தொடங்கும். அதன்படி, வரும் நவம்பர் மாதம் இறுதியில் வேளச்சேரி-பரங்கிமலை இடையே பறக்கும் ரெயில் சேவை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது' என்றனர்.

    • அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவைவிட நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணை 120 அடியை எட்டியது.
    • மேட்டூர் அணை 3-வது முறையாக நிரம்பியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மேட்டூர்:

    தென்மேற்கு பருவமழை காரணமாக கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பியதால் பாதுகாப்பு கருதி உபரிநீர் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

    கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 18,000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதாவது நேற்று மாலை அணைக்கு வினாடிக்கு 28,784 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

    இந்த நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்தானது இன்று காலை முதல் வினாடிக்கு 31,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

    அணையில் இருந்து டெல்டா மற்றும் கால்வாய் பாசன தேவைக்காக வினாடிக்கு 22,500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவைவிட நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணை 120 அடியை எட்டியது. இந்த ஆண்டில் 3-வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. நீர் இருப்பு 93.47 டி.எம்.சி.யாக உள்ளது. மேட்டூர் அணை 3-வது முறையாக நிரம்பியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 31,000 கன அடியாக உள்ள நிலையில் 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் திறக்கப்பட உள்ளது. இதனால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.
    • கேகே ரோடு, வெங்கடாபுரம் பள்ளி சாலை, விஜயலட்சுமிபுரம்.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (21.07.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

    கீழ்ப்பாக்கம்: பூந்தமல்லி நெடுச்சாலை ஒரு பகுதி, சாஸ்திரி நகர், புல்லா ரெட்டி புரம், ஓசங்குளம், புதிய பூபதி நகர், பிளவர்ஸ் ரோடு, தம்புசாமி தெரு, கெங்கு ரெட்டி சாலை.

    அம்பத்தூர்: கேகே ரோடு, வெங்கடாபுரம் பள்ளி சாலை, விஜயலட்சுமிபுரம், பழைய எம்டிஎச் சாலை.

    • சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு.
    • தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் வருகிற 25-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    அதன்படி, தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணிவரை 9 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், தேனி, மதுரை, கடலூர், கோவை ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது. 

    • தகராறின் போது விஸ்ரூத் தாக்கியதில் காயமடைந்த ஸ்ருதி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்துள்ளார்.
    • மனைவியை கொலை செய்து விட்டு தலைமறைவான விஸ்ரூதை போலீசார் தேடி வருகின்றனர்.

    கரூர் மாவட்டம் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மனைவியை கத்தியால் குத்தி கணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    குளித்தலை அரசு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த ஸ்ருதி(27)-யை அவரது கணவரான விஸ்ரூத் கத்தியால் 3 குத்தியதில் ஸ்ருதி பரிதாபமாக உயிரிழந்தார்.

    ஏற்கனவே தகராறின் போது விஸ்ரூத் தாக்கியதில் காயமடைந்த ஸ்ருதி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்துள்ளார். இதனை தொடர்ந்து இன்று அதிகாலை அரசு மருத்துவமனைக்குள் புகுந்து மனைவியை கொலை செய்து விட்டு தலைமறைவான விஸ்ரூதை போலீசார் தேடி வருகின்றனர்.

    அதிகாலையில் நடந்த இந்த கொலை சம்பவத்தால் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பீதியடைந்தனர். 

    • டி.எஸ்.பி. சுந்தரேசன் அலுவலகத்திற்கு நடந்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலானது.
    • லஞ்சம் வாங்காமல் நேர்மையாக பணிபுரிவதால் எனக்கு தண்டனை தருகிறார்கள்.

    மயிலாடுதுறை மதுவிலக்கு பிரிவு டி.எஸ்.பி.யாக பணிபுரிந்து வருபவர் சுந்தரேசன். அவருக்கு வழங்கப்பட்டிருந்த அலுவலக வாகனம் திரும்ப பெறப்பட்டதால், அவரது வீட்டில் இருந்து அலுவலகத்திற்கு நடந்து சென்றதாக கூறி ஒரு வீடியோ இணையத்தில் வைரலானது.

    இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுந்தரேசன், "லஞ்சம் வாங்காமல் நேர்மையாக பணிபுரிவதால் எனக்கு தண்டனை தருகிறார்கள். எனது அலுவலக வாகனத்தை எடுத்துக்கொண்டு மனரீதியாக என்னை சித்ரவதை செய்கிறார்கள். நான் தன்னிச்சையாக பேட்டியளிப்பதால் ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் 'சஸ்பெண்டு' செய்யப்படுவேன் என்றும் தெரிந்துதான், இந்த பேட்டி அளிக்கிறேன்" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டி.எஸ்.பி. சுந்தரேசனை சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொது ஊழியருக்கான விதிகளை மீறி ஒழுங்கீன செயலில் ஈடுபட்டதாக கூறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    • கடன் வாங்கும் மாநிலமாக மாற்றிவிட்டார் ஸ்டாலின்.
    • பிறக்கும் குழந்தைகூட ஒன்றரை லட்சம் ரூபாய் கடனுடன்தான் பிறக்கிறது.

    'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' எழுச்சிப்பயணம் மேற்கொள்ளும் அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று நாகை மாவட்டம் வேதாரண்யம் மக்களிடம் உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசுகையில், "4 ஆண்டுகளாக திட்டங்களை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்ற நாடகம் அரங்கேற்றம் ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் வீடு வீடாக சென்று கட்சியில் சேர சொல்லி கேட்கிறார்கள். கடன் வாங்கும் மாநிலமாக மாற்றிவிட்டார் ஸ்டாலின். கடன் வாங்குவதில்தான் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. பிறக்கும் குழந்தைகூட ஒன்றரை லட்சம் ரூபாய் கடனுடன்தான் பிறக்கிறது. கொரோனா காலத்தில்கூட விலைவாசி உயராமல் அதிமுக ஆட்சியில் பார்த்துக் கொண்டோம்" என்று கூறினார்.

    இந்நிலையில், தேர்தல் பிரசாரத்தின்போது இஸ்லாமியர்கள் தொழுகை நடத்துவதை அறிவிக்கும் பாங்கு ஒலித்த சத்தம் கேட்காமல் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து மக்களிடம் உரையாற்றினார்.

    பாங்கு ஓதப்பட்டு முடிந்த பிறகு தொண்டர்கள் அவரிடம் நினைவு படுத்தியதை அடுத்து மேடையிலேயே எடப்பாடி பழனிசாமி மன்னிப்புக் கேட்டார்.

    • கல்லீரல் விற்பனை தொடர்பாக அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட அனுமதி புதுப்பித்தல் சான்றிதழ் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அபிராமி கிட்னி கேர் மருத்துவமனை செயல்பட தடை விதித்து மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட அனுமதி புதுப்பித்தல் சான்றிதழ் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

    கல்லீரல் விற்பனை தொடர்பாக அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

    • பெரியார் பெயரில் கட்டப்படும் நூலகத்தில் கண் திருஷ்டி படம் வைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
    • தபெதிக பொதுசெயலாளர் கு.ராமகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்தார்,

    தந்தை பெரியார் பெயரில், தமிழ்நாடு அரசு சார்பில் கோவை காந்திபுரத்தில் கட்டப்பட்டு வரும் நூலகம் மற்றும் அறிவியல் மையத்தின் நுழைவு வாயிலில் கண் திருஷ்டி படம் வைக்கப்பட்டிருப்பது பேசுபொருளாகியுள்ளது.

    மூடநம்பிக்கைக்கு எதிராக குரல் கொடுத்த பெரியார் பெயரில் கட்டப்படும் நூலகத்தில் கண் திருஷ்டி படம் வைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், கண் திருஷ்டி படத்தை நீக்காவிட்டால் அந்த கட்டடம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தபெதிக பொதுசெயலாளர் கு.ராமகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்தார்,

    இதனையடுத்து, பெரியார் நூலகம் கட்டப்படும் இடத்தில இருந்து கண் திருஷ்டி படம் அகற்றப்பட்டுள்ளது. 

    • மு.க.முத்து இறுதி ஊர்வலம் இன்று மாலை நடைபெற்றது
    • சென்னை, பெசன்ட் நகர், மின் மயானத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.

    மு.க.முத்துவின் உடல் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் இருந்து கொண்டு வரப்பட்டு கோபாலபுரம் இல்லத்தில் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

    இந்நிலையில் தனது சகோதரர் மு.க.முத்துவின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினார். மு.க.முத்து மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

    மு.க.முத்து இறுதி ஊர்வலம் இன்று மாலை நடைபெற்றது. சென்னை, பெசன்ட் நகர், மின் மயானத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

    • மாதிரி வினாத்தாள்களை ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி வெளியிட்டுள்ளது.
    • இந்த மாதிரி வினாத்தாள்களை வாட்ஸ்அப் வழியாக இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

    தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள 1,996 பணியிடங்களுக்கான முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு அனைத்துப் பாடங்களுக்கும், புதிய பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்களை ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி வெளியிட்டுள்ளது.

    சென்னையில் இயங்கி வரும் ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி, கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய - மாநில அரசுகள் நடத்தும் அனைத்துப் போட்டித் தேர்வுகளுக்கு சிறப்பான முறையில் பயிற்சியளித்து வரும் முன்னணி பயிற்சி நிறுவனம் ஆகும்.

    இந்த அகாடமியில் படித்தவர்கள் தமிழகம் முழுவதும் பல ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், அரசின் பல்வேறு முக்கிய பணிகளில் பதவி வகித்து வருகின்றனர்.

    ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு புதிய பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய பாடத்திட்டத்தின்படி, அனைத்துப் பாடங்களுக்கும் மாதிரி வினாத்தாள்களை ஆட்சித் தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி வெளியிட்டுள்ளது.

    முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு எழுதும் அனைவரும் முன்பதிவு செய்து, இந்த மாதிரி வினாத்தாள்களை வாட்ஸ்அப் வழியாக இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

    இந்த மாதிரி வினாத்தாள்களைப் பெற முன்பதிவுக்கு 'PG -TRB MODEL QUESTION PAPER-2025' என்று டைப் செய்து தங்களது 'SUBJECT' மற்றும் முகவரியுடன் 9176055568 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் அனுப்பி முன்பதிவு செய்ய வேண்டும்.

    மேலும் விவரங்களுக்கு, 9176055576, 9176055578 என்கிற எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமியின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×