என் மலர்
உள்ளூர் செய்திகள்
- ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.
- ஆர்ப்பாட்டத்தையொட்டி விழுப்புரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
விழுப்புரம்:
உச்சநீதிமன்றம் ஆணையிட்டு 1200 நாட்கள் ஆகியும் வன்னியர் இடஒதுக்கீடு 10.5 சதவீதம் வழங்க மறுக்கும் தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என டாக்டர் அன்புமணி அறிவித்திருந்தார்.
அதன் விழுப்புரம் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள நகராட்சி மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்திற்கு டாக்டர் அன்புமணி தலைமை தாங்கினார். இதில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்ட பா.ம.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தையொட்டி விழுப்புரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
பா.ம.க.வில் டாக்டர் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வந்த நிலையில் அன்புமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
- சென்னை கிழக்கு மண்டலம் சைபர் கிரைம் போலீசார் மதுரை ஆதீனம் ஞானசம்பந்தர் தேசிக பரமாச்சாரியார் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
- விசாரணையின்போது ஆதீனத்தை தவிர வேறு யாரும் ஆதீன மடத்திற்குள் இருக்கக் கூடாது என்று சைபர் கிரைம் போலீசார் அறிவுரை வழங்கியிருந்தனர்.
மதுரை:
மதுரை ஆதீன மடத்தின் 293-வது ஆதீனம் ஞான சம்பந்தர் தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் கடந்த மே மாதம் 2-ந்தேதி சென்னை காட்டாங்கொளத்தூரில் நடைபெற்ற சைவ சித்தாந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மதுரை ஆதீனம் தனது காரில் புறப்பட்டு சென்றார்.
அப்போது உளுந்தூர்பேட்டை அருகே மற்றொரு கார் தன் மீது மோதி விபத்து ஏற்பட்டதாகவும், தன்னை சிலர் கொலை செய்ய முற்பட்டதாகவும் கூறி மதுரை ஆதீனம் குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார். அதில் குறிப்பாக "குல்லா மற்றும் தாடி வைத்த நபர்கள்" கொலை செய்ய முயற்சித்ததாக கூறியிருந்தார். இது தொடர்பாக உளுந்தூர்பேட்டை பகுதியில் நடைபெற்ற விபத்து குறித்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகள் காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்டு தவறான தகவல்களை மதுரை ஆதீனம் தரப்பினர் வெளியிடுவதாக, கூறி அறிக்கை வெளியிட்டனர்.
வாகன விபத்து குறித்து தவறான தகவல்களை பரப்பி மத மோதலை தூண்டும் வகையில் பேசிய மதுரை ஆதீனத்தின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யக் கோரி சென்னை எழுப்பூர் அருகே உள்ள அயனாவரத்தைச் சேர்ந்த ஐகோர்ட்டு வக்கீல் ராஜேந்திரன் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை கிழக்கு மண்டலம் சைபர் கிரைம் போலீசார் மதுரை ஆதீனம் ஞானசம்பந்தர் தேசிக பரமாச்சாரியார் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
இதற்கிடையே முன்ஜாமின் கோரி மதுரை ஆதீனம், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு செய்தார். அப்போது மதுரை ஆதீனத்திற்கு 60 வயதுக்கு மேலே ஆனதால் நேரில் ஆஜராக கட்டாயம் இல்லை, போலீசார் நேரில் சென்று விசாரணை செய்து கொள்ளலாம் எனவும் போலீசாரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மதுரை ஆதீனத்துக்கு நிபந்தனையுடன் முன்ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் மதுரை ஆதீனத்திடம் விசாரணை நடத்துவதற்காக சென்னை கிழக்கு மண்டலம் சைபர் கிரைம் போலீசார் மீனாட்சியம்மன் கோவில் அருகே தெற்கு ஆவணி மூல வீதி பகுதியில் அமைந்துள்ள மதுரை ஆதீன மடத்திற்கு நேரில் வருகை தந்தனர். முன்னதாக விசாரணையின்போது ஆதீனத்தை தவிர வேறு யாரும் ஆதீன மடத்திற்குள் இருக்கக் கூடாது என்று சைபர் கிரைம் போலீசார் அறிவுரை வழங்கியிருந்தனர்.
அதன்படி ஆதீன மடத்தில் இருந்த ஊழியர்கள், பணியார்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து மதுரை ஆதீனத்திடம் விசாரணை தொடங்கியது.
சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் பத்மகுமாரி தலைமையிலான 3 போலீசார் விசாரணையை தொடங்கினர். பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் முதன்முறையாக மதுரை ஆதினத்திடம் விசாரணை நடத்தி வருகிறார். சைபர் கிரைம் போலீசாரின் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் விளக்குத்தூண் போலீஸ் உதவி கமிஷனர் சூரக்குமரன் மதுரை ஆதின மடத்திற்குள் சென்றார்.
அப்போது அங்கு திரண்ட பா.ஜ.க. நிர்வாகிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்டது.
- தங்கள் கட்சிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு எந்த அளவுக்கு உள்ளது. மற்ற கட்சிகளுக்கு எவ்வளவு கிடைக்கும் என்பதை கணித்து வருகின்றனர்.
- நடிகர் விஜய் துவங்கிய த.வெ.க. கட்சிக்காக ஆதவ் அர்ஜூனா தனது வாய்ஸ் ஆப் காமென் அமைப்பு மூலம் சர்வே எடுத்து கொடுத்து வருகிறார்.
சென்னை:
2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணி ஒரு அணியாகவும், அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி மற்றொரு அணியாகவும் தேர்தல் களத்தில் சந்திக்க உள்ளது.
இது தவிர புதிதாக கட்சி தொடங்கி உள்ள நடிகர் விஜய் இந்த தேர்தலில் களம் இறங்குகிறார். அவர் அ.தி.மு.க. கூட்டணியில் சேருவாரா? அல்லது புதிய கூட்டணி அமைப்பாரா? இல்லை தனித்து போட்டியிடுவாரா? என்பதை இன்னும் அவர் தெளிவுப்படுத்தவில்லை.
ஆனாலும் அ.தி.மு.க. கூட்டணிக்கு சென்றால் வெற்றி நிச்சயம். ஆட்சியை பிடித்து விடலாம் என்று தொண்டர்கள் மத்தியில் பேச்சு அடிபடுகிறது.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி பிரசார கூட்டங்களில் பேசுகிற போது எங்கள் கூட்டணிக்கு புதிய கட்சிகள் வரப்போகிறது. நீங்கள் எதிர்பார்ப்பது நடக்கும் என்று பேசி வருகிறார். அதுமட்டுமின்றி 234 தொகுதிகளில் 200 தொகுதிக்கு மேல் நாங்கள் வெற்றி பெறுவோம் என்றும் கூறி வருகிறார்.
அதுமட்டுமின்றி அ.தி.மு.க. கூட்டணியில் சேர வரும் கட்சிகளை ரத்ன கம்பளம் விரித்து வரவேற்போம் என்று அழைப்பும் விடுத்துள்ளார். இதனால் அ.தி.மு.க. கூட்டணிக்கு இன்னும் எந்தெந்த கட்சிகள் வரும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 8 மாத காலமே இருப்பதால் பிரதான கட்சிகள் அனைத்தும் தேர்தல் நிலவரங்கள் எப்படி இருக்கிறது? மக்களின் மனநிலை என்ன? என்பதை அறிய தனிநபர் ஏஜென்சிகள் மூலம் 'சர்வே' எடுத்து வருகின்றன.
தங்கள் கட்சிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு எந்த அளவுக்கு உள்ளது. மற்ற கட்சிகளுக்கு எவ்வளவு கிடைக்கும் என்பதை கணித்து வருகின்றனர்.
தி.மு.க.வை பொறுத்த வரை ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால் உளவுத்துறை மூலம் அவ்வப்போது நிலவரங்களை தெரிந்து கொள்ள முடியும். அதுமட்டுமின்றி சபரீசனின் 'பென்டீம்' நிறுவனம் சட்டசபை தொகுதி வாரியாக சர்வே எடுத்து தெரிந்து கொள்கின்றன.
அதே போல் நடிகர் விஜய் துவங்கிய த.வெ.க. கட்சிக்காக ஆதவ் அர்ஜூனா தனது வாய்ஸ் ஆப் காமென் அமைப்பு மூலம் சர்வே எடுத்து கொடுத்து வருகிறார்.
அ.தி.மு.க.வை பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன் தனியாக ஒரு ஏஜென்சி மூலம் தமிழக தேர்தல் களத்தின் நிலவரங்களை அறிந்து கொள்கிறார்.
அந்த ஏஜென்சி 3 மாதங்களுக்கு ஒரு முறை அரசியல் நிலவரங்களுக்கு ஏற்ப தேர்தல் நிலவரங்களை கணித்து கொடுத்து வருகிறது. அ.தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும். தி.மு.க.வுக்கு எத்தனை தொகுதி கிடைக்கும். விஜய் தனித்து நின்றால் அது யாருக்கு சாதகமாக அமையும் என்றெல்லாம் தனித்தனியாக புள்ளி விவரத்துடன் சர்வே கொடுக்கப்படுகிறது. அதற்கேற்ப எடப்பாடி பழனிசாமி அரசியலில் காய் நகர்த்தி வருகிறார்.
- விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே காரின் டயர் வெடித்து விபத்துக்குள்ளானத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
டயர் வெடித்து கார் விபத்துக்குள்ளானதில் சங்கீதா, சுபா, தனலட்சுமி, ராகவேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆயுதப்படை காவலர் மாதவன் குடும்பத்துடன் திருவண்ணாமலைக்கு சென்ற போது விபத்து ஏற்பட்டுள்ளது. காயம் அடைந்தவர்கள் அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் வேண்டாம் என நினைக்கும் வாக்காளர்கள் காலம் காலமாக தமிழகத்தில் உள்ளனர்.
- அ.தி.மு.க.வின் பலமே இரட்டை இலை தான்.
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காங்கிரஸ் கட்சி சார்பில் 'அரசியல் அமைப்பு சட்டத்தை காப்பாற்றுவோம்' என்ற பிரசார நடைபயணம் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தலைமையில் நடைபெற்றது.
பா.ஜ.க. மடியில் அமர்ந்து கொண்டு நேர் எதிரான கொள்கைகளை கொண்டுள்ள கம்யூனிஸ்டு கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளை கூட்டணிக்கு எடப்பாடி பழனிச்சாமி எப்படி அழைக்கிறார் என்று தெரியவில்லை. தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் வேண்டாம் என நினைக்கும் வாக்காளர்கள் காலம் காலமாக தமிழகத்தில் உள்ளனர்.
அவர்கள் வாக்குகளை வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் த.வெ.க. தலைவர் விஜய் கணிசமாக பெறுவார். அந்த வகையில் விஜய்க்கு கணிசமான வாக்கு வங்கி உள்ளது. ஆனால் அந்த வாக்குகள் வெற்றி பெறும் அளவிற்கு கிடைக்குமா? என்பதை என்னால் கணித்து சொல்ல முடியாது.
அ.தி.மு.க.வின் பலமே இரட்டை இலை தான். காமராஜர் குறித்த சர்ச்சை தற்போது தேவையற்றது. முதலமைச்சர், திருச்சி சிவா உள்ளிட்டோர் அந்த விமர்சனம் தொடர்பாக போதிய விளக்கம் கொடுத்து விட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழகத்தில் பெருகி வரும் குற்றங்களைத் தான் திமுக அரசால் கட்டுப்படுத்த முடியாது என்றால், பெருகிவரும் குப்பைகளைக் கூட தடுக்க இயலாதா?
- திராவிட மாடல் அரசின் திறனற்ற நிர்வாகத்தால் நோய்களின் தொட்டிலாக தமிழகம் மாறிவருவது மிகக் கொடுமையானது.
சென்னை:
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
மத்திய அரசால் வெளியிடப்பட்ட தூய்மை நகரங்கள் பட்டியலில் தேசிய அளவில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட 40 நகரங்களின் தரவரிசையில் தமிழகத்தின் தலைநகர் சென்னை 38-வது இடத்தையும், மதுரை 40-வது இடத்தையும் பெற்றிருப்பது மிகுந்த கவலையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.
தமிழகத்தின் ஒரு நகரம் கூட தூய்மை நகரங்களின் பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் வராத நிலையில், வருடாவருடம் தூய்மைப்பணிகளுக்காக பல்லாயிரக்கணக்கான கோடிகளை செலவிடுவதாக திராவிட மாடல் அரசு காட்டிய கணக்குகள் எல்லாம் என்ன ஆனது? தமிழகத்தில் பெருகி வரும் குற்றங்களைத் தான் திமுக அரசால் கட்டுப்படுத்த முடியாது என்றால், பெருகிவரும் குப்பைகளைக் கூட தடுக்க இயலாதா?
தரம் குன்றி வரும் அரசு மருத்துவமனைகள், குப்பைகளின் கூடாரமாகி வரும் மாநகரங்கள், பராமரிப்பு என்ற பெயரில் நடக்கும் ஊழல் முறைகேடுகள், அவற்றைக் கண்டுகொள்ளாத ஆட்சியாளர்கள் என திராவிட மாடல் அரசின் திறனற்ற நிர்வாகத்தால் நோய்களின் தொட்டிலாக தமிழகம் மாறிவருவது மிகக் கொடுமையானது.
குப்பைக்காடாக தமிழகத்தை மாற்றிவிட்டு, நாடு போற்றும் நல்லாட்சி என்று இனியொரு முறை கூறுவதற்கு திமுகவின் தலைவர்கள் கூனிக்குறுக வேண்டும்! என்று கூறியுள்ளார்.
- மதுரை ஜான்சி ராணி பூங்காவில் பூத்த நம் இளைஞரணி, 46-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
- 2026 சட்டமன்றத் தேர்தலில் நம் கழக அணி, வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றிட ஓரணியில் தமிழ்நாட்டை திரட்டுவோம்.
சென்னை:
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தமிழர்களை உயர்த்தும் திராவிட இயக்கத் தத்துவங்களை அடுத்தடுத்து வரும் இளம் தலைமுறையின் இரத்த அணுக்களில் ஏற்றும் கொள்கைப் பாசறையாம் தி.மு.க. இளைஞரணி தொடங்கப்பட்ட நாள் இன்று!
மதுரை ஜான்சி ராணி பூங்காவில் பூத்த நம் இளைஞரணி, 46-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் வழிகாட்டலில் நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் உருவாக்கப்பட்ட இளைஞரணி எனும் தீரர் படையின் இன்றைய செயலாளராகப் பணியாற்றுவதை எண்ணி பெருமை கொள்கிறோம்.
தமிழ்நாட்டின் இளைஞர்களை கொள்கை மயப்படுத்தும் இலக்கில் இருந்து சிறிதும் விலகாமல் கட்டுப்பாட்டுடன் கடமையாற்றும் நம் இளைஞரணி, கழகத்தின் நாற்றங்காலாக திகழ்கிறது.
களப் பணியிலும் - கொள்கை நெறியிலும் இளையச் சமுதாயத்தைத் தயார்படுத்த இளைஞரணி மேற்கொண்டு வரும் பணிகள் இன்னும் நூறு ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டைக் காத்து நிற்கும்.
2026 சட்டமன்றத் தேர்தலில் நம் கழக அணி, வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றிட ஓரணியில் தமிழ்நாட்டை திரட்டுவோம்.
தமிழ்நாட்டின் மண் - மொழி - மானம் காக்க, தலைவர் அவர்களிட்ட கட்டளையை நிறைவேற்ற களம் புகுவோம் - பாசிசத்தை நொறுக்குவோம்!
தமிழ்நாடு வெல்லும்! என்று பதிவிட்டுள்ளார்.
- மு.க.ஸ்டாலினின் 50 மாத ஆட்சியில் ரூ.4.38 லட்சம் கோடி கடன் வாங்கி உள்ளனர்.
- 2026 தேர்தலில் எங்களது கூட்டணி வெற்றி பெறும், அ.தி.மு.க. தலைமையில் தனிப்பெரும் கட்சியாக வெற்றிபெற்று ஆட்சி அமையும்.
திருத்துறைப்பூண்டி:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' பிரசார பயணத்தை நேற்று (சனிக்கிழமை) இரவு திருவாரூர் மாவட்டத்தில் மேற்கொண்டார். அப்போது திருத்துறைப்பூண்டி காமராஜர் சிலை அருகில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் மக்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
திருத்துறைப்பூண்டி நகரம் குலுங்கும் அளவுக்கு மக்கள் கூட்டம் உள்ளது. எப்போது பார்த்தாலும் கூட்டணி..கூட்டணி.. என்று கூட்டணியை நம்பி இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் கூடியுள்ள கூட்டமும், மக்கள் முகத்தில் உள்ள எழுச்சியை பார்க்கும்போதே அ.தி.மு.க.வுக்கு வெற்றியின் அறிகுறி தெரிகின்றது.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் விவசாய தொழிலாளர்களுக்கு பசுமை வீடுகளை கொடுத்தோம், முதியோர் உதவித்தொகையை அதிகமாக கொடுத்தோம், விவசாய தொழிலாளிகளுக்கு 100 நாள் வேலை திட்டத்திற்கு சரியான நேரத்தில் பணம் வந்து கிடைத்தது. ஆனால், இந்த தி.மு.க. ஆட்சியில், மு.க.ஸ்டாலின் 100 நாள் வேலையை 150 நாளாக உயர்த்துவோம் என்றார். ஆனால், அந்த 100 நாள் வேலை திட்டம், தற்போது 50 நாளாக குறைந்துவிட்டது. வேலை பார்த்தவர்களுக்கு சம்பளம் கூட கொடுக்கப்படவில்லை. அதன் பின்னர் நான் 100 நாள் வேலை செய்கின்ற ஏழைகளுக்கு தேவையான நிதியை விடுவியுங்கள் என மத்திய மந்திரியிடம் கோரிக்கை விடுத்தேன். அதன் பின்னர் ரூ.2 ஆயிரத்து 995 கோடி நிதி ஒதுக்கிடப்பட்டது.
மு.க.ஸ்டாலினின் 50 மாத ஆட்சியில் ரூ.4.38 லட்சம் கோடி கடன் வாங்கி உள்ளனர். இன்னும் ஒரு லட்சம் கோடி கடன் வாங்கவும் முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். அதையும் வாங்கினால் ரூ.5 லட்சத்து 38 ஆயிரம் கோடி கடன் ஆகிவிடும். இந்தியாவில் கடன் வாங்குவதில் முதல் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. மாணவர்களுக்கு மடிக்கணினி திட்டம், அம்மா மினி கிளினிக் திட்டம் உள்ளிட்ட அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை நிறுத்தி விட்டார்கள். மீண்டும் அ.தி.முக. ஆட்சி அமைந்ததும் இந்த திட்டம் தொடரும்.
இதையெல்லாம் இங்கு இருக்கின்ற கம்யூனிஸ்டுகள் கேட்க மாட்டார்கள். மக்கள் பிரச்சனை வந்தால் முதலில் எதிர்த்து குரல் கொடுப்பது கம்யூனிஸ்ட் கட்சி. ஆனால், இன்று தி.மு.க.வை எதிர்த்து கம்யூனிஸ்டுகள் போராடுவதில்லை. 4 வருடத்தில் கம்யூனிஸ்டுகள் ஏதேனும் போராட்டம் நடத்தி உள்ளார்களா? பருத்தி விலை குறைவாக சென்றதற்கு முத்தரசன் ஏன் போராட்டம் நடத்தவில்லை? என்றார்.
பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததை விமர்சனம் செய்கின்றனர். கூட்டணி வைத்தால் என்ன தவறு? ஏற்கனவே, தி.மு.க.-பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததா இல்லையா? நீங்கள் கூட்டணி வைத்தால் பா.ஜ.க. நல்ல கட்சி, ஆனால் நாங்கள் கூட்டணி வைத்தால் மதவாத கட்சி என்பதா?.
இந்த நியாயத்தை கேட்காமல், கூட்டணி கட்சிகளான கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தை, காங்கிரஸ் கட்சிகள் தி.மு.க.வுக்கு மத்தளம் தட்டிக் கொண்டிருக்கின்றனர். பா.ஜ.க.வுடன் நாங்கள் கூட்டணி வைத்ததுமே தி.மு.க.வும், கூட்டணி கட்சிகளும் அச்சம் அடைந்துவிட்டன. எங்களுக்கு தி.மு.க. ஆட்சியை அகற்ற வேண்டும், அதற்கு ஒன்று சேர்ந்து வருகின்ற கட்சிகளை இணைத்து கூட்டணி அமைத்துள்ளோம்.
எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க.வுக்கு ஆட்சியில் பங்கு கொடுப்பாரான்னு கேட்கிறார்கள். ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளி அல்ல. அ.தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெற்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.
எங்கள் கூட்டணி வேண்டும் என்றால் வேண்டும் வேண்டாம் என்றால் வேண்டாம். எதைப்பற்றியும் கவலைப்படவில்லை. தி.மு.க.வை போல் வாரிசுக்காக ஆட்சிக்கு வர நினைக்கவில்லை. மக்கள் விருப்பத்திற்காக மட்டுமே ஆட்சிக்கு வர நினைக்கிறோம். தி.மு.க. ஆட்சியை அகற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள் ஓரணியில் திரள வேண்டும்.
2026 தேர்தலில் எங்களது கூட்டணி வெற்றி பெறும், அ.தி.மு.க. தலைமையில் தனிப்பெரும் கட்சியாக வெற்றிபெற்று ஆட்சி அமையும். இன்னும் சில கட்சிகள் இந்த கூட்டணியில் வந்து இணைய உள்ளனர். இந்த சட்டமன்ற தேர்தலில் யார் ஆட்சிக்கு வர வேண்டும்? என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.
ஆட்சிகாலம் முடிவடைய உள்ள நிலையில், 'உங்களுடன் ஸ்டாலின்' என வீடு, வீடாக தி.மு.க.வினர் சென்று வருகின்றனர். மக்களின் பிரச்சனைகள் 45 நாட்களில் தீர்த்து வைக்கப்படும் என்கிறார்கள். 4 ஆண்டு காலமாக இந்த பிரச்சனை இருப்பதாக தெரிந்து கொண்ட நீங்கள் ஏன் தீர்த்து வைக்கவில்லை? சதுரங்க வேட்டை படத்தில் சொல்வதை போல ஏழை மக்களின் ஆசையை தூண்டி மீண்டும் ஆட்சிக்கு வர 'உங்களுடன் ஸ்டாலின்' போன்ற திட்டங்களை அறிவித்து ஆட்சிக்கு வர தி.மு.க.வினர் துடிக்கிறார்கள். மக்கள் விரோத தி.மு.க. ஆட்சியை அகற்றி ஒரு குடும்பப் பிடியில் இருந்து தமிழகத்தை மீட்போம், மக்களை காப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
- மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குற்றால அருவிகளில் நேற்று திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
- சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி 2-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி:
தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குற்றால அருவிகளில் நேற்று திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அதனைதொடர்ந்து, குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.
இன்று சாரல் திருவிழா தொடங்கப்பட உள்ள நிலையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வந்துள்ளனர். இந்த நிலையில், அருவிகளில் வெள்ளப்பெருக்கு சற்று குறைந்ததால் பழைய குற்றால அருவி, சிற்றருவி, புலியருவி ஆகிய அருவிகளில் தற்போது சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் நீர்வரத்து சற்று அதிகரித்து காணப்படுவதாய் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி 2-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அருவியில் தண்ணீர் வரத்து சீரான உடன் உடனடியாக சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்படும் என குற்றாலம் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே சாரல் திருவிழா தொடங்கப்பட உள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டு வருவதால் குற்றாலம் பகுதி சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் களைகட்டி வருகிறது. தொடர்ந்து மாவட்டம் முழுவதும் வெயிலின் தாக்கம் குறைந்து வானம் மேகமூட்டத்துடன் குளிர்ச்சியான காலநிலை நிலவி வருகிறது.
- சேலம் மாநகரம், வாழப்பாடி, கரியகோவில், ஓமலூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் மழை பெய்தது.
- ஓமலூர்-7.4, டேனிஷ் பேட்டை-21 என மாவட்டம் முழுவதும் 122.7 மி.மீ. மழை பெய்தது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பகல் நேரங்களில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்த அளவிலேயே இருந்தது. இந்த நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் குளிர்ந்த காற்று வீசியது. மேலும் மேக கூட்டம் இருட்டாக திரண்டு மழை வருவது போல் இருந்தது.
இந்த நிலையில் மாலை 4 மணியளவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் குளிர்ந்த காற்று வீசியது. பின்னர் திடீரென சாரல் மழை பெய்தது. குறிப்பாக நேற்று விடுமுறை தினம் என்பதால் ஏற்காடுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. திடீரென ஏற்காட்டில் சாரல் மழை பெய்ய தொடங்கியது. பின்னர் அது கனமழையாக சுமார் 1 மணி நேரம் நீடித்தது. பின்னர் தொடர்ந்து சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் குளிர்ந்த காற்று வீசியது. இதை சுற்றுலா பயணிகள் உற்சாகமாக ரசித்து குதூகலம் அடைந்தனர்.
இதே போல் சேலம் மாநகரம், வாழப்பாடி, கரியகோவில், ஓமலூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் மழை பெய்தது.
இதன் காரணமாக இரவில் கடுங்குளிர் நிலவியது. இன்று காலையும் குளிர்ந்த காற்று வீசியது. மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
சேலம்-16.5, ஏற்காடு-25.2, வாழப்பாடி-13, ஆனைமடுவு-6, ஆத்தூர்-2, கெங்கவல்லி-4, தம்மம்பட்டி-3, ஏத்தாப்பூர்-7, கரிய கோவில்-13, எடப்பாடி-1, மேட்டூர்-3.6, ஓமலூர்-7.4, டேனிஷ் பேட்டை-21 என மாவட்டம் முழுவதும் 122.7 மி.மீ. மழை பெய்தது.
- த.வெ.க.வுக்கு புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்காக “மை டி.வி.கே.” என்ற புதிய செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது.
- பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
சென்னை:
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு தீவிரமாக தயாராகி வருகிறார்.
இதையடுத்து தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாட்டை அடுத்த மாதம் (ஆகஸ்டு) 25-ந்தேதி நடத்துவதற்கு திட்டமிட்டுள்ள அவர் அதற்கான பணிகளை முடுக்கி விட்டு உள்ளார்.
மதுரை மாநாட்டை பிரமாண்டமாக நடத்துவதற்காக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை மேற்கொண்டு வரு கிறார்.
த.வெ.க.வுக்கு புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்காக "மை டி.வி.கே." என்ற புதிய செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த செயலியை விஜய் இன்று அறிமுகப்படுத்தி வைத்து மாவட்ட செயலாளர்களுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட முடிவு செய்திருந்தார். பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
இந்த நிலையில் மை டி.வி.கே. செயலி தொடக்க விழா மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திடீரென ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
டி.வி.கே. செயலியில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே அதன் தொடக்க விழா தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து வருகிற 24-ந்தேதி புதிய செயலியின் தொடக்க விழா மற்றும் மாவட்ட செயலாளர்களுடனான ஆலோசனை கூட்டம் ஆகியவை வருகிற 24-ந்தேதி நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அன்றைய தினம் புதிய செயலியை தொடங்கி வைத்து மாவட்ட செயலாளர்களுடன் விஜய் ஆலோசனை நடத்த உள்ளார்.
- பெரியாறு அணையில் 23.6, தேக்கடியில் 25.8 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.
- மழை பெய்து வருவதால் வறண்டு கிடந்த மூலவைகையாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கூடலூர்:
தேனி மாவட்டம் கூடலூர் அருகே கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14,707 ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது.
தென்மேற்கு பருவமழை கேரளாவில் முன்கூட்டியே தொடங்கியதால் அணையின் நீர்மட்டம் 136 அடிவரை உயர்ந்தது. அதனை தொடர்ந்து மழை குறைந்ததால் அணையின் நீர்மட்டமும் படிப்படியாக குறைந்து இன்று காலை 129.95 அடியாக உள்ளது. இருந்த போதும் அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 1867 கனஅடி நீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் முல்லை பெரியாற்றின் கரை பகுதியில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு 105 கனஅடியாக குறைக்கப்பட்டது. இதனால் லோயர்கேம்ப் மின் உற்பத்தி நிலையத்தில், மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது.
சீரமைப்பு பணிகள் முடிந்த பின்னர் மாலையில் மீண்டும் அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 1867 கனஅடி நீர் திறக்கப்பட்டது. அணைக்கு நீர்வரத்து 1858 கனஅடியாக அதிகரித்துள்ளது.
பெரியாறு அணையில் 23.6, தேக்கடியில் 25.8 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது. கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் லோயர்கேம்ப், பெரியாறு நீர்மின் உற்பத்தி நிலையத்தில் மீண்டும் 4 ஜெனரேட்டர்கள் மூலம் முழு அளவான 168 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படுகிறது.
தொடர் மழை காரணமாக கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்தனர்.
இன்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமானோர் சுருளி அருவிக்கு வந்தனர். ஆனால் தடை விதிக்கப்பட்டதால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவி மற்றும் வருசநாடு பகுதியில் உள்ள மேகமலை அருவியில் நீர்வரத்து சீரானதால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் நீர் வரத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
மழை பெய்து வருவதால் வறண்டு கிடந்த மூலவைகையாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு நீங்கும் என கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.






