என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

2026 தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி? எடப்பாடி பழனிசாமி ரகசிய சர்வே
- தங்கள் கட்சிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு எந்த அளவுக்கு உள்ளது. மற்ற கட்சிகளுக்கு எவ்வளவு கிடைக்கும் என்பதை கணித்து வருகின்றனர்.
- நடிகர் விஜய் துவங்கிய த.வெ.க. கட்சிக்காக ஆதவ் அர்ஜூனா தனது வாய்ஸ் ஆப் காமென் அமைப்பு மூலம் சர்வே எடுத்து கொடுத்து வருகிறார்.
சென்னை:
2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணி ஒரு அணியாகவும், அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி மற்றொரு அணியாகவும் தேர்தல் களத்தில் சந்திக்க உள்ளது.
இது தவிர புதிதாக கட்சி தொடங்கி உள்ள நடிகர் விஜய் இந்த தேர்தலில் களம் இறங்குகிறார். அவர் அ.தி.மு.க. கூட்டணியில் சேருவாரா? அல்லது புதிய கூட்டணி அமைப்பாரா? இல்லை தனித்து போட்டியிடுவாரா? என்பதை இன்னும் அவர் தெளிவுப்படுத்தவில்லை.
ஆனாலும் அ.தி.மு.க. கூட்டணிக்கு சென்றால் வெற்றி நிச்சயம். ஆட்சியை பிடித்து விடலாம் என்று தொண்டர்கள் மத்தியில் பேச்சு அடிபடுகிறது.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி பிரசார கூட்டங்களில் பேசுகிற போது எங்கள் கூட்டணிக்கு புதிய கட்சிகள் வரப்போகிறது. நீங்கள் எதிர்பார்ப்பது நடக்கும் என்று பேசி வருகிறார். அதுமட்டுமின்றி 234 தொகுதிகளில் 200 தொகுதிக்கு மேல் நாங்கள் வெற்றி பெறுவோம் என்றும் கூறி வருகிறார்.
அதுமட்டுமின்றி அ.தி.மு.க. கூட்டணியில் சேர வரும் கட்சிகளை ரத்ன கம்பளம் விரித்து வரவேற்போம் என்று அழைப்பும் விடுத்துள்ளார். இதனால் அ.தி.மு.க. கூட்டணிக்கு இன்னும் எந்தெந்த கட்சிகள் வரும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 8 மாத காலமே இருப்பதால் பிரதான கட்சிகள் அனைத்தும் தேர்தல் நிலவரங்கள் எப்படி இருக்கிறது? மக்களின் மனநிலை என்ன? என்பதை அறிய தனிநபர் ஏஜென்சிகள் மூலம் 'சர்வே' எடுத்து வருகின்றன.
தங்கள் கட்சிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு எந்த அளவுக்கு உள்ளது. மற்ற கட்சிகளுக்கு எவ்வளவு கிடைக்கும் என்பதை கணித்து வருகின்றனர்.
தி.மு.க.வை பொறுத்த வரை ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால் உளவுத்துறை மூலம் அவ்வப்போது நிலவரங்களை தெரிந்து கொள்ள முடியும். அதுமட்டுமின்றி சபரீசனின் 'பென்டீம்' நிறுவனம் சட்டசபை தொகுதி வாரியாக சர்வே எடுத்து தெரிந்து கொள்கின்றன.
அதே போல் நடிகர் விஜய் துவங்கிய த.வெ.க. கட்சிக்காக ஆதவ் அர்ஜூனா தனது வாய்ஸ் ஆப் காமென் அமைப்பு மூலம் சர்வே எடுத்து கொடுத்து வருகிறார்.
அ.தி.மு.க.வை பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன் தனியாக ஒரு ஏஜென்சி மூலம் தமிழக தேர்தல் களத்தின் நிலவரங்களை அறிந்து கொள்கிறார்.
அந்த ஏஜென்சி 3 மாதங்களுக்கு ஒரு முறை அரசியல் நிலவரங்களுக்கு ஏற்ப தேர்தல் நிலவரங்களை கணித்து கொடுத்து வருகிறது. அ.தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும். தி.மு.க.வுக்கு எத்தனை தொகுதி கிடைக்கும். விஜய் தனித்து நின்றால் அது யாருக்கு சாதகமாக அமையும் என்றெல்லாம் தனித்தனியாக புள்ளி விவரத்துடன் சர்வே கொடுக்கப்படுகிறது. அதற்கேற்ப எடப்பாடி பழனிசாமி அரசியலில் காய் நகர்த்தி வருகிறார்.






