என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • ஆகஸ்ட் 18-ந்தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நிறைவடைய உள்ளது.
    • தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் பெருமளவில் பங்கேற்று ஆதரவளிக்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள 10 வகையான உரிமைகளை மீட்டெடுக்கும் நோக்குடன் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கடந்த 25ந்தேதி திருப்போரூர் நகரில் தொடங்கி தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

    இந்த பயணத்தின் முதற்கட்டம் வரும் 4-ந் தேதி மாலை திருப்பத்தூர் நகரில் நிறைவடைய உள்ளது.

    அதைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் வரும் ஆகஸ்ட் 7-ந் தேதி வந்தவாசியில் தொடங்கி, ஆகஸ்ட் 18-ந் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நிறைவடைய உள்ளது. இரண்டாம் கட்ட பயணத்தின் விவரங்கள் வருமாறு:-

    ஆகஸ்ட் 7 - வந்தவாசி, செய்யாறு

    ஆகஸ்ட் 8 - பென்னாத்தூர், போளூர்

    ஆகஸ்ட் 11 - திண்டிவனம், செஞ்சி

    ஆகஸ்ட் 12 - மைலம், விழுப்புரம், விக்கிரவாண்டி

    ஆகஸ்ட் 13 - ரிஷிவந்தியம், உளுந்தூர்பேட்டை

    ஆகஸ்ட் 17 - பர்கூர், ஊத்தங்கரை

    ஆகஸ்ட் 18 - கிருஷ்ணகிரி, ஓசூர்

    மூன்றாம் கட்ட பயண விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.

    தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளையும், நலன்களையும் மீட்டெடுப்பதற்கான இந்த தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் பெருமளவில் பங்கேற்று ஆதரவளிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கோவையில் புதிய பஸ் நிலையத்தை மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கிறார்.
    • மடத்துக்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலையை திறந்து வைக்கிறார்.

    சென்னை:

    கள ஆய்விற்காக கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு செல்லும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அங்கு நடைபெறும் கட்சி நிகழ்ச்சிகளிலும், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும் பங்கேற்கிறார்.

    சென்னையில் இருந்து கோவை சென்று அங்கிருந்து திருப்பூர் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலம்பாளையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மருத்துவமனை கட்டிடத்தை திறந்து வைக்கிறார்.

    இதனைத் தொடர்ந்து கோவையில் புதிய பஸ் நிலையத்தை மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கிறார்.

    இதனைத்தொடர்து மடத்துக்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலையை திறந்து வைக்கிறார்.

    தொடர்ந்து ஆகஸ்ட் 12-ந்தேதி பொள்ளாச்சிக்கு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விவசாய பொதுமக்கள் நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக கட்டப்பட்டுள்ள புதிய அரங்கத்தை திறந்து வைக்கிறார்.

    இந்த 2 நாட்கள் கோவையில், திருப்பூர் மாவட்டங்களில் ரோடு ஷோ மேற்கொள்ளவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.

    • செப்டம்பர் 20-ந்தேதி திருச்சியில் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு நடத்த இருக்கிறோம்.
    • டிசம்பர் 17-ந்தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் நடத்த உள்ளோம்.

    சென்னை:

    சத்துணவு ஊழியர்கள் வருகிற 20-ந்தேதி மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

    இதுகுறித்து சங்க தலைவர் சந்திரசேகரன் கூறியதாவது:-

    சத்துணவு துறையில் காலியாக உள்ள 60 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 4 வருடங்களாக பல கட்ட போராட்டங்களை நடத்தி உள்ளோம்.

    ஆனாலும் அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இப்போது 7 கட்ட தொடர் போராட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

    முதல் கட்டமாக வருகிற 20-ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் ஒருநாள் மறியல் போராட்டம் நடத்தப்படும். தொடர்ந்து செப்டம்பர் 20-ந்தேதி திருச்சியில் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு நடத்த இருக்கிறோம்.

    அதன்பிறகு அக்டோபர் மாதம் 8-ந்தேதி தற்செயல் விடுப்பு போராட்டமும், நவம்பர் 7-ந்தேதி சென்னையில் பேரணியும் நடத்த உள்ளோம். டிசம்பர் 17-ந்தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் நடத்த உள்ளோம்.

    சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் என்று நம்புகிறோம். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விஜயகாந்த் தலைவராக இருந்த போது 3 பாராளுமன்ற தேர்தல்களை கட்சி சந்தித்தது.
    • 104 தொகுதிகளில் போட்டியிட்டும் ஒரு தொகுதியில் கூட தே.மு.தி.க. வெற்றி பெற முடியவில்லை.

    தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா முதலமைச்சர் மு .க. ஸ்டாலினை நேரில் சந்தித்தது அரசியல் களத்தில் பல்வேறு யூகங்களை கிளப்பியுள்ளது. முக்கியமாக தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க. சேரும் என்று நம்பப்படுகிறது .

    உடல் நலமில்லாமல் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று திரும்பிய முதலமைச்சரை சந்தித்தது மரியாதை நிமித்தமான சந்திப்பு தான் என்றும், ஏற்கனவே விஜயகாந்த் உடல்நலம் பாதித்து இருந்தபோது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று விசாரித்தார். எனவே அந்த நட்பின் அடிப்படையில் இதுவும் மரியாதை நிமித்தமான சந்திப்பு தான் என்று பிரேமலதா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் இந்த சந்திப்பின்போது தே.மு.தி.க.முக்கிய நிர்வாகிகள் உடன் சென்றதும், தி.மு.க. தரப்பிலும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அது மட்டுமல்ல ஏற்கனவே தே.மு.தி.க வை கூட்டணிக்கு இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் அமைச்சர் எ.வ.வேலு ஆகியோரும் உடன் இருந்துள்ளார்கள். எனவே தான் இந்த சந்திப்பை கூட்டணிக்கான அச்சாரமாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். திடீரென்று தி.மு.க. பக்கம் பிரேமலதாவின் பார்வை திரும்பியது ஏன்? என்பது பற்றி விசாரித்த போது கட்சி நிர்வாகிகள் கூறியதாவது :-

    கடந்த 2005-ல் கட்சி தொடங்கப்பட்டு 2011-ல் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் பெற்றது. விஜயகாந்த் தலைவராக இருந்த போது 3 பாராளுமன்ற தேர்தல்களை கட்சி சந்தித்தது. ஆனால் எந்த தேர்தலிலும் வெற்றி பெறவில்லை.

    கட்சி ஆரம்பித்த மறு ஆண்டு அதாவது 2006 சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு விஜயகாந்த் மட்டும் வெற்றி பெற்றார். பின்னர் தனித்து போட்டியிடும் முடிவை மாற்றி 2011 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து 41 தொகுதிகளில் போட்டியிட்டு 29 தொகுதிகளில் வெற்றி பெற்றது. முதல் முறையாக எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தும் அப்போதுதான் தே.மு.தி.க.வுக்கு கிடைத்தது

    எதிர்க்கட்சி அந்தஸ்து கூட அப்போது தி.மு.க.வுக்கு கிடைக்காமல் போனது அரசியல் களத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது. அதை வைத்து அடுத்து வரும் காலம் விஜயகாந்த் காலம் தான் என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால் அதன் பிறகு கட்சி எடுத்த முடிவுகள் கை கொடுக்காததால் 8 சதவீதமாக இருந்த வாக்கு வங்கி சுமார் ஒரு சதவீதம் என்ற அளவுக்கு இறங்கி விட்டது.

    2016 தேர்தலில் மக்கள் நல கூட்டணியை அமைத்து ம.தி.மு.க., த.மா.கா., விடுதலை சிறுத்தைகள், 2 கம்யூனிஸ்டுகள் இணைந்து தேர்தலை சந்தித்தன. அந்த தேர்தலில் 104 தொகுதிகளில் போட்டியிட்டும் ஒரு தொகுதியில் கூட தே.மு.தி.க. வெற்றி பெற முடியவில்லை.

    கருணாநிதி, ஜெயலலிதா, ஆகிய 2 மாபெரும் ஆளுமைகளும் சந்தித்த கடைசி தேர்தலும் அதுதான். அதன் பிறகு கடந்த சட்டமன்ற தேர்தலிலும் தே.மு.தி.க. எடுத்த முடிவு கை கொடுக்கவில்லை. 60 தொகுதிகளில் போட்டியிட்டும் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற முடியாமல் போனது.

    விஜயகாந்த் உயிருடன் இருந்தவரை அவர் ஒரு அரசியல் தலைவர் என்பதையும் தாண்டி மக்கள் மத்தியில் தனிப்பட்ட செல்வாக்கும் இருந்தது. அப்படி இருந்தும் கட்சியை சிகரம் தொட கொண்டு செல்ல முடியவில்லை.

    இந்த நிலையில் தான் விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு பிரேமலதா பொதுச்செயலாளர் ஆனார். மீண்டும் கட்சியை எழுச்சி பெற செய்ய வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்.

    இந்த நிலையில் தான் கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் சேர்ந்து தேர்தலை சந்தித்தார். அந்தத் தேர்தலும் அவருக்கு கை கொடுக்கவில்லை. ஆனால் கூட்டணி ஒப்பந்தப்படி தே.மு.தி.க.வுக்கு ஒரு மேல் சபை எம்.பி. பதவி தருவதாக கூறப்பட்டது. தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி மோசமான தோல்வியை தழுவியது. இதையடுத்து பேசியபடி மேல் சபை எம்.பி. பதவியும் தே.மு.தி.க.வுக்கு வழங்கப்படவில்லை. அடுத்து வரும் வாய்ப்பில் உறுதியாக தரப்படும் என்று அ.தி.மு.க. உறுதி அளித்துள்ளது. இது பிரேமலதாவை அதிருப்தி அடைய வைத்தது. அவரது தம்பி எல்.கே.சுதீசை மனதில் வைத்தே எம்.பி. பதவி கேட்கப்பட்டதாகவும் அது நடக்காமல் போனது அவரை வருத்தத்தில் ஆழ்த்தியதாகவும் கூறுகிறார்கள்.

    எனவே வருகிற சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைப்பதில் சொதப்பி விடக்கூடாது என்று நினைக்கிறார். எனவே தான் தேசிய ஜனநாயக கூட்டணியை இனியும் நம்பி பலனில்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் ஐக்கியமாகி விடலாம் என்று அவர் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. அதேநேரம் கூட்டணியில் இடம் பெற்றால் மட்டும் போதாது. நினைத்த பேரத்தை முடிக்க வேண்டும் என்றால் கட்சியின் பலத்தையும் காட்ட வேண்டியது அவசியம். எனவே கட்சி இன்னும் பலமாக தான் உள்ளது என்பதை காட்டுவதற்காக தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க.வை தொடர்ந்து பிரேமலதாவும் ரத யாத்திரை செல்ல உள்ளார். தி.மு.க. கூட்டணியை பொறுத்தவரை கூட்டணி கட்சிகள் அனைத்தும் உறுதியாக இருந்தாலும் மேலும் கட்சிகளை இணைத்து கூட்டணியை பலப்படுத்தி ஆட்சியை தக்க வைப்பதில் தி.மு.க. தலைமை தீவிரமாக உள்ளது. அந்த வகையில் தான் தே.மு.தி.கவையும் கூட்டணிக்கு மகிழ்ச்சியுடன் வரவேற்று உள்ளது. கூட்டணியில் சேர்வதற்கு பிரேமலதாவும் பெரிய அளவில் பேரம் எதையும் பேசவில்லை . மூன்றே மூன்று கோரிக்கை மட்டும் தான் அவர் வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் முதல் கோரிக்கை மேல்சபை எம்.பி பதவி ஒன்று கட்டாயம் வேண்டும். இரண்டாவதாக சட்டமன்றத் தேர்தலில் கவுரவமான எண்ணிக்கையில் தொகுதிகள் ஒதுக்க வேண்டும். மூன்றாவதாக தேர்தல் செலவுகளை தி.மு.க. ஏற்க வேண்டும் என்பதுதான்.

    இந்த மூன்று கோரிக்கைகளையும் தி.மு.க.வும் பரிசீலிப்பதாக கூறியிருக்கிறது. கூட்டணி கட்சிகளுக்கு உரிய மரியாதையும், அங்கீகாரமும் தி.மு.க.வில் கிடைக்கும் என்று பிரேமலதாவிடம் உறுதியும் அளித்துள்ளார்கள். எனவே விரைவில் கூட்டணி பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தற்போதைய சூழ்நிலையில் பிரேமலதா போடுவது தேர்தல் கணக்கு மட்டும் தான். அதேநேரம் தனது கணவர் தொடங்கி உச்ச நிலைக்கு கொண்டு சென்ற கட்சி அதல பாதாளத்தில் விழுந்து கிடக்கும் நிலையில் மீண்டும் தனது தலைமையில் வழி நடத்தி கட்டி காப்பதில் பிரேமலதா சாதிப்பாரா? என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும்.

    • உறுப்பினராக இல்லாத சூரிய மூர்த்தி, கட்சி செயல்பாடு குறித்து கேள்வி எழுப்ப முடியாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
    • கட்சி விதிப்படி பொதுச்செயலாளர், கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும்.

    சென்னை:

    2022-ம் ஆண்டு ஜூலை 11-ந்தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும் சூர்யமூர்த்தி சார்பில் சென்னை உரிமையியல் நீதி மன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

    அந்த மனுவில், பொதுச் செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த வழக்கை நிராகரிக்க கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், சூரியமூர்த்தி, அ.தி.மு.க. உறுப்பினரே அல்ல. உறுப்பினராக இல்லாத சூரிய மூர்த்தி, கட்சி செயல்பாடு குறித்து கேள்வி எழுப்ப முடியாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த வழக்கை விசாரித்த 4-வது உதவி உரிமையியல் நீதிமன்ற நீதிபதி சிவசக்தி வேல் கண்ணன், கட்சி விதிப்படி பொதுச்செயலாளர், கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும். இந்த விதிகளின்படி பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார் என தெரிவிக்கவில்லை என்பதால், இந்த வழக்கு விசாரணைக்குரியது எனக்கூறி, சூரியமூர்த்தியின் வழக்கை நிராகரிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    • நடப்பாண்டு ஏற்காட்டில் பருவமழை நல்லமுறையில் கைகொடுத்துள்ளதால் காபி பயிர் விளைச்சல் நல்லமுறையில் உள்ளது.
    • காபி பயிரை பொறுத்தமட்டில் ஏப்ரல், மே மாதத்தில் பூ பூக்கும், ஜூன், ஜூலையில் காபி கொட்டை உற்பத்தியாகும்.

    சேலம்:

    தமிழகத்தில் கொடைக்கானல், ஊட்டிக்கு அடுத்தபடியாக ஏற்காட்டில் தான் காபி அதிகளவில் பயிரிடப்படுகிறது.

    இங்கு 5 ஆயிரத்து 800 ஹெக்டேர் பரப்பில் காபி பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக அராபிகா வகை காபி பயிர் சாகுபடி செய்யப்படுகிறது.

    நடப்பாண்டு ஏற்காட்டில் பருவமழை நல்லமுறையில் கைகொடுத்துள்ளதால் காபி பயிர் விளைச்சல் நல்லமுறையில் உள்ளது. காபி செடிகளில் காய்ப்பு பிடித்துள்ளது. அவ்வாறு காய்த்துள்ள செடிகளை பராமரிக்கும் பணியில் விவசாயிகள் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர்.

    இதுகுறித்து ஏற்காட்டை சேர்ந்த காபி விவசாயிகள் கூறியதாவது:-

    ஏற்காட்டில் சேர்வராயன் மலைப்பகுதியில் நாகலூர், மஞ்சக்குட்டை, கொம்மக்காடு, செம்மநத்தம், காவேரிபீக், கொட்டச்சேடு, தலைச்சோலை உள்பட பல கிராமங்களில் காபி அதிகளவில் பயிரிடப்படுகிறது. காபி பயிரை பொறுத்தமட்டில் ஏப்ரல், மே மாதத்தில் பூ பூக்கும், ஜூன், ஜூலையில் காபி கொட்டை உற்பத்தியாகும். பின்னர் நவம்பர் முதல் ஜனவரி மாதங்கள் வரை அறுவடை செய்யப்படும். கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் காய்ப்பு பிடித்துள்ள காபி கொட்டைகளில் புழு, பூச்சி தாக்குதல் ஏற்படாமல் இருக்க மருந்து தெளிக்கும் பணியும், அவ்வப்போது பராமரிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

    • பழமையான முருகர் கற்சிலை ஒன்று இருப்பதை பார்த்து ஆச்சரியம் அடைந்தனர்.
    • பொதுமக்கள் அங்கு திரண்டு முருகர் சிலைக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம் வைத்து வழிபட தொடங்கினர்.

    ஒடுகத்தூர்:

    வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த கரடிகுடி ஊராட்சிக்கு உட்பட்ட தாங்கல் மலை மீது சாமி சிலை இருப்பதாக அப்பகுதியில் வசித்து வரும் ராஜமாணிக்கம் என்பவர் கனவு வந்ததாக கூறினார்.

    இந்நிலையில், கடந்த 17-ந்தேதி ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை திடீரென ராஜமாணிக்கம் அருள் வந்து ஆடினார். அப்போது, வேப்பிலை வாயில் மென்றபடி சாமி ஆடி கொண்டே அருகே உள்ள மலை மீது ஏறியுள்ளார்.

    அப்பகுதி மக்களும் அவரது பின்னே சென்றுள்ளனர். அப்போது, மலை மீது உள்ள அடர்ந்த முட்புதர்கள் மற்றும் பாறைகளுக்கு நடுவே ஓர் இடத்தை குறிப்பிட்டு அங்கு தோண்டும்படி கூறியுள்ளார். அந்த இடத்தில் தோண்டியுள்ளனர்.

    அப்போது, பழமையான முருகர் கற்சிலை ஒன்று இருப்பதை பார்த்து ஆச்சரியம் அடைந்தனர்.

    தொடர்ந்து தோண்டும் போது மார்பளவு மட்டுமே தோண்ட முடிந்துள்ளது. அதற்குமேல் அவர்களால் சிலையை வெளியே எடுக்க முடியவில்லை. ஆடி முதல் நாளில் மலை மீது முருகர் சிலை கண்டெடுக்கப்பட்ட தகவல் காட்டு தீ போல் பரவியது.

    இதனால், சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டு முருகர் சிலைக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம் வைத்து வழிபட தொடங்கினர்.

    இதற்கிடையே, தகவலறிந்த தாசில்தார் வேண்டா, தொல்லியியல் துறை அதிகாரிகள் மற்றும் வருவாய் துறையினர் அங்கு வந்து சிலையை ஆய்வு செய்தனர்.

    மேலும், இது தொடர்பாக நில உரிமையாளர் கலெக்டர் சுப்பு லெட்சுமியிடம் கோரிக்கை மனு அளித்தார். அதனை தொடர்ந்து, தொல்லியல் துறை அதிகாரிகள் சிலையை ஆய்வு செய்தபோது அது புதியதாக செய்து கொண்டு வந்து வைக்கப்பட்டது என தெரியவந்துள்ளது.

    இதனை அடுத்து சிலையை அகற்ற கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி, இன்று அதிகாலை 4 மணியளவில் ஏடிஎஸ்பி பாஸ்கரன் தலைமையில் 4 டிஎஸ்பிகள், 7 இன்ஸ்பெக்டர்கள், 14 சப்-இன்ஸ்பெக்டர்கள் என 100-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர்.

    தொடர்ந்து, தாசில்தார் வேண்டா மற்றும் வருவாய் துறையினர் முன்னிலையில் 4.30 மணியளவில் சுயம்பாகத் தோன்றியதாக கூறப்பட்ட முருகர் சிலையை அகற்றி பறிமுதல் செய்தனர். பின்னர், முருகர் சிலையை அணைக்கட்டு தாலுகா அலுவலகத்தில் வைக்கப்பட்டு சிறிது நேரத்திலேயே வேலூரில் உள்ள அருங்காட்சியகத்திற்கு கொண்டு சென்றனர்.

    இந்நிலையில், இன்று 3-ம் வெள்ளிக்கிழமை என்பதால் சுவாமி தரிசனம் செய்ய மலை மீது ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கூடுவார்கள் என்பதால் அந்த வழியில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியில் இருந்து வரும் நபர்களை கூட போலீசார் அனுமதிக்கவில்லை.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    • விருப்பப்பட்டியலை தயாரித்து மேலிடத்திற்கு அனுப்ப நயினார் நாகேந்திரன் முடிவு செய்துள்ளார்.
    • விருதுநகரில் போட்டியிட சரத்குமார் விருப்பம் தெரிவித்துள்ளார்.

    தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் கட்சி தலைவர்கள் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகின்றனர்.

    இந்நிலையில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகளை தொடர்பு கொண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்பத்தை கேட்டறிந்து வருகிறார். விருப்பப்பட்டியலை தயாரித்து மேலிடத்திற்கு அனுப்ப அவர் முடிவு செய்துள்ளார்.

    பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலையை தொடர்பு கொண்டு நயினார் நாகேந்திரன் பேசி உள்ளார். அப்போது, சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை என அண்ணாமலை கூறிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    தமிழிசை, சரத்குமார் போன்றோர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர். விருதுநகரில் போட்டியிட சரத்குமார் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், சென்னையில் உள்ள ஒரு தொகுதியில் போட்டியிட தமிழிசை விருப்பம் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    • கவியருவியின் நீர்பிடிப்பு பகுதிகளான வால்பாறை சக்கி, தலனார் எஸ்டேட் பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
    • கவியருவியில் தண்ணீர் வரத்து சீரானதை தொடர்ந்து வனத்துறையினர் தடுப்பு வேலிகளை சீரமைத்தனர்.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆழியார் பகுதியில் கவியருவி உள்ளது.

    இந்த கவியருவிக்கு கோவை மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான திருப்பூர், ஈரோடு உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள்.

    அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் தங்கள் குடும்பத்தினருடன் கவியருவியில் உற்சாக குளியல் போட்டு விட்டு, அருகே உள்ள ஆழியார் அணை மற்றும் பூங்காவை சுற்றி பார்த்து செல்வார்கள்.

    வார விடுமுறை நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாக இருக்கும்.

    இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததால் பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை மழை பெய்தது.

    குறிப்பாக கவியருவியின் நீர்பிடிப்பு பகுதிகளான வால்பாறை சக்கி, தலனார் எஸ்டேட் பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

    இதன் காரணமாக கவியருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.

    அருவியில் அமைக்கப்பட்ட தடுப்பு வேலிகளும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.

    வெள்ளப்பெருக்கை அடுத்து கவியருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை தடைவிதித்தது.

    தற்போது மேற்குதொடர்ச்சி மலை பகுதிகளில் மழை குறைந்துள்ளது. கவியருவியின் நீர்பிடிப்பு பகுதிகளான சக்தி, தலனார் எஸ்டேட் பகுதிகளில் மழை குறைந்துள்ளதால், கவியருவிக்கு தண்ணீர் வரத்து சீராக உள்ளது.

    கவியருவியில் தண்ணீர் வரத்து சீரானதை தொடர்ந்து வனத்துறையினர் தடுப்பு வேலிகளை சீரமைத்தனர். நேற்று மதியம் 1 மணி முதல் கவியருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். ஆழியார் அணை பகுதிக்கு சுற்றுலா வந்தவர்கள், அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டதை அறிந்து கவியருவிக்கு சென்று குளித்து மகிழ்ந்தனர். இன்றும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தங்கள் குடும்பத்தினர், நண்பர்களுடன் கவியருவிக்கு வந்து குளித்து மகிழ்ந்து சென்றனர். நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை தினங்கள் என்பதால் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கோவையில் உள்ள மிக முக்கியமான சுற்றுலா தலங்களில் கோவை குற்றாலமும் ஒன்று. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் கோவை குற்றாலத்திற்கு வருவார்கள்.

    இங்கு நிலவும் சீதோஷ்ண நிலை மற்றும் வனத்தில் உள்ள வனவிலங்குகளை பார்ப்பதுடன், அருவியில் உற்சாக குளியல் போட்டு மகிழ்ந்து செல்கின்றனர்.

    கடந்த மே மாதம் இறுதியில் மழை பெய்ததால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து அருவிக்கு செல்ல வனத்துறை தடைவிதித்தது. மீண்டும் ஜூலை 11-ந் தேதி திறக்கப்பட்டது. ஆனால் கடந்த 23-ந் தேதி பெய்த மழை காரணமாக கோவை குற்றால அருவியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அருவிக்கு செல்ல வனத்துறையினர் தடைவிதித்தனர். தற்போது அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால், ஒரு வாரத்திற்கு பிறகு நேற்று முதல் கோவை குற்றால அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.

    இதையடுத்து கோவை குற்றாலத்திற்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்தனர். அவர்கள் அருவியில் குளித்து மகிழ்ந்து, அங்கு நிலவும் சீதோஷ்ண நிலை மற்றும் இயற்கை காட்சிகளை கண்டு ரசித்தனர்.

    • 5,300 பேர் நிலுவைத் தொகையை செலுத்தியதாகவும், ஆனால் அவர்களுக்கு இன்னமும் பத்திரம் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
    • வட்டித் தள்ளுபடி திட்டத்தினை தமிழ்நாடு அரசு அறிவிக்கும் என்று சங்க உறுப்பினர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வீட்டு வசதி சங்கங்களில் நிலுவையில் உள்ள கடனை வசூலிக்க அவ்வப்போது அபராத வட்டி, இ.எம்.ஐ. வட்டி மற்றும் இதர வட்டிகளை தள்ளுபடி செய்யும் திட்டம் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்படுவது வழக்கம். இதன்மூலம் சங்க உறுப்பினர்கள் பயனடைந்து வந்தனர். கடைசியாக 2023-ம் ஆண்டு இதுபோன்ற வட்டித் தள்ளுபடி திட்டம் அறிவிக்கப்பட்டதாகவும், இந்தத் திட்டத்தின் கீழ் 5,300 பேர் நிலுவைத் தொகையை செலுத்தியதாகவும், ஆனால் அவர்களுக்கு இன்னமும் பத்திரம் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

    இந்தச் சூழ்நிலையில், தற்போது நிலுவையிலுள்ள ஆயிரம் கோடி ரூபாய் கடனை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும்; ஆனால் நிலுவைக் கடனை அபராத வட்டி, இ.எம்.ஐ. வட்டி மற்றும் இதர வட்டிகளுடன் திருப்பிச் செலுத்த சங்க உறுப்பினர்கள் தயாராக இல்லை என்றும் கூறப்படுகிறது. வட்டித் தள்ளுபடி திட்டத்தினை தமிழ்நாடு அரசு அறிவிக்கும் என்று சங்க உறுப்பினர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

    கூட்டுறவு வீட்டு வசதி சங்க உறுப்பினர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் வகையில், அபராத வட்டி, இ.எம்.ஐ. வட்டி மற்றும் இதர வட்டி தள்ளுபடி திட்டத்தினை அறிவிக்கவும், ஏற்கெனவே நிலுவைத் தொகையை செலுத்தியவர்களுக்கு பத்திரங்களை விரைந்து வழங்கவும் முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நலம் குறித்து வைகோ விசாரித்தார்.
    • மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு மீண்டும் பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கும்.

    சென்னை :

    சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் முதன்மைச் செயலாளர் துரை வைகோ ஆகியோர் சந்தித்து பேசினர்.

    இச்சந்திப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நலம் குறித்து வைகோ விசாரித்தார். சந்திப்பின் போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடன் இருந்தார்.



    இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வைகோ, கூட்டணி அரசு என்ற பேச்சுக்கே இடமில்லை. மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு மீண்டும் பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கும். பா.ஜ.க. உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளுடன் எந்த காலத்திலும் கூட்டணி இல்லை என்றார்.

    இதனிடையே, தி.மு.க. கூட்டணிக்கு தே.மு.தி.க. வந்தால் ம.தி.மு.க. வெளியேறும் என்ற தகவலுக்கு வைகோ மறுப்பு தெரிவித்தார். 

    • தனது அக்காள் சுபாஷினியுடனான காதலை கைவிடாததால் கவினை வெட்டிக்கொன்றதாக போலீசாரிடம் சுர்ஜித் தெரிவித்தார்.
    • கவின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நெல்லை:

    தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி தமிழ்செல்வி. ஆசிரியை. இவர்களது மகன் கவின் செல்வ கணேஷ் (வயது 27). இவர் சென்னையில் ஐ.டி.ஊழியராக பணியாற்றி வந்தார்.

    இந்நிலையில் கடந்த 27-ந்தேதி தனது தாத்தாவை பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியில் உள்ள சித்த மருத்துவமனைக்கு அழைத்து வந்தபோது அதே பகுதியை சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தம்பதியான சரவணன்-கிருஷ்ண குமாரி ஆகியோரின் மகன் சுர்ஜித் (24) என்பவரால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

    இந்த கொலை சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் வழக்குப்பதிவு செய்தார். உதவி கமிஷனர் சுரேஷ் விசாரணை நடத்தியதில் தனது சகோதரி சுபாஷினியுடனான காதலை கைவிட வலியுறுத்தி அதனை கேட்காத காரணத்தினால் கவினை சுர்ஜித் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    இதனிடையே கொலைக்கு தூண்டுதலாக சுர்ஜித்தின் பெற்றோர் செயல்பட்டதாகவும், அவர்களை கைது செய்யும் வரை கவின் உடலை பெற்றுக்கொள்ள மாட்டோம் எனவும் உறவினர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர்கள் பெயர்களும் வழக்கில் சேர்க்கப்பட்டு நேற்று முன்தினம் சரவணன் கைது செய்யப்பட்டார்.

    இதனிடையே இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்க தமிழக அரசு உத்தரவிட்டது. தொடர்ந்து வழக்கு குறித்த ஆவணங்கள் சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. ராஜ்குமார் நவ்ரோஜிடம் ஒப்படைக்கப்பட்டு நேற்று முதலே சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர்.

    இதனிடையே கவினை காதலித்ததாகவும், அது தனது பெற்றோருக்கு தெரியாது எனவும் சுபாஷினி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்த நிலையில் கவின் உடலை பெற்றுக்கொள்ள அமைச்சர்கள் கே.என்.நேரு, அனிதா ராதாகிருஷ்ணன், கனிமொழி எம்.பி., ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. என பல்வேறு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    மேலும் கவின் பெற்றோரை சந்தித்து பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், த.ம.மு.க. ஜான்பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் என பல்வேறு தரப்பினரும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

    தொடர்ந்து 5-வது நாளாக நேற்றும் கவின் உடலை வாங்க அவரது உறவினர்கள் மறுப்பு தெரிவித்து வந்த நிலையில், இன்று காலை அவரது உடலை பெற்றுக்கொள்ள கவின் உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர்.

    அதன்படி கவினின் தந்தை சந்திரசேகர், சகோதரர் பிரவீன், தாய்மாமா இசக்கிமுத்து மற்றும் உறவினர்கள் பாளையங்கோட்டையில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்திற்கு இன்று காலையில் வந்தனர். அவர்களிடம் கவின் உடல் ஒப்படைக்கப்பட்டது.

    இதனிடையே சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் சரிபார்ப்பு, ஆவணங்கள் எழுதும் பணிகளை மேற்கொள்ள உள்ளதாகவும், கவின் உடலுக்கு இறுதிச்சடங்குகள் முடிவடைந்த பின்னர் மேற்கொண்டு விசாரணைகள் தொடங்கும் எனவும் சி.பி.சி.ஐ.டி. வட்டாரங்கள் தெரிவித்தன.

    ×