என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மலை மீது திடீரென தோன்றிய முருகர் சிலை... அடுத்து நடந்த டுவிஸ்ட்
- பழமையான முருகர் கற்சிலை ஒன்று இருப்பதை பார்த்து ஆச்சரியம் அடைந்தனர்.
- பொதுமக்கள் அங்கு திரண்டு முருகர் சிலைக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம் வைத்து வழிபட தொடங்கினர்.
ஒடுகத்தூர்:
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த கரடிகுடி ஊராட்சிக்கு உட்பட்ட தாங்கல் மலை மீது சாமி சிலை இருப்பதாக அப்பகுதியில் வசித்து வரும் ராஜமாணிக்கம் என்பவர் கனவு வந்ததாக கூறினார்.
இந்நிலையில், கடந்த 17-ந்தேதி ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை திடீரென ராஜமாணிக்கம் அருள் வந்து ஆடினார். அப்போது, வேப்பிலை வாயில் மென்றபடி சாமி ஆடி கொண்டே அருகே உள்ள மலை மீது ஏறியுள்ளார்.
அப்பகுதி மக்களும் அவரது பின்னே சென்றுள்ளனர். அப்போது, மலை மீது உள்ள அடர்ந்த முட்புதர்கள் மற்றும் பாறைகளுக்கு நடுவே ஓர் இடத்தை குறிப்பிட்டு அங்கு தோண்டும்படி கூறியுள்ளார். அந்த இடத்தில் தோண்டியுள்ளனர்.
அப்போது, பழமையான முருகர் கற்சிலை ஒன்று இருப்பதை பார்த்து ஆச்சரியம் அடைந்தனர்.
தொடர்ந்து தோண்டும் போது மார்பளவு மட்டுமே தோண்ட முடிந்துள்ளது. அதற்குமேல் அவர்களால் சிலையை வெளியே எடுக்க முடியவில்லை. ஆடி முதல் நாளில் மலை மீது முருகர் சிலை கண்டெடுக்கப்பட்ட தகவல் காட்டு தீ போல் பரவியது.
இதனால், சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டு முருகர் சிலைக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம் வைத்து வழிபட தொடங்கினர்.
இதற்கிடையே, தகவலறிந்த தாசில்தார் வேண்டா, தொல்லியியல் துறை அதிகாரிகள் மற்றும் வருவாய் துறையினர் அங்கு வந்து சிலையை ஆய்வு செய்தனர்.
மேலும், இது தொடர்பாக நில உரிமையாளர் கலெக்டர் சுப்பு லெட்சுமியிடம் கோரிக்கை மனு அளித்தார். அதனை தொடர்ந்து, தொல்லியல் துறை அதிகாரிகள் சிலையை ஆய்வு செய்தபோது அது புதியதாக செய்து கொண்டு வந்து வைக்கப்பட்டது என தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து சிலையை அகற்ற கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி, இன்று அதிகாலை 4 மணியளவில் ஏடிஎஸ்பி பாஸ்கரன் தலைமையில் 4 டிஎஸ்பிகள், 7 இன்ஸ்பெக்டர்கள், 14 சப்-இன்ஸ்பெக்டர்கள் என 100-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து, தாசில்தார் வேண்டா மற்றும் வருவாய் துறையினர் முன்னிலையில் 4.30 மணியளவில் சுயம்பாகத் தோன்றியதாக கூறப்பட்ட முருகர் சிலையை அகற்றி பறிமுதல் செய்தனர். பின்னர், முருகர் சிலையை அணைக்கட்டு தாலுகா அலுவலகத்தில் வைக்கப்பட்டு சிறிது நேரத்திலேயே வேலூரில் உள்ள அருங்காட்சியகத்திற்கு கொண்டு சென்றனர்.
இந்நிலையில், இன்று 3-ம் வெள்ளிக்கிழமை என்பதால் சுவாமி தரிசனம் செய்ய மலை மீது ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கூடுவார்கள் என்பதால் அந்த வழியில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியில் இருந்து வரும் நபர்களை கூட போலீசார் அனுமதிக்கவில்லை.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.






