என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
    • காவிரி ஆற்றில் நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    தருமபுரி:

    கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணைக்கும், கபினி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இந்த நிலையில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நேற்று 17 ஆயிரம் கன அடியாக வந்தது.

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்துள்ளது. இதன் காரணமாக இன்று காலை 8 மணி நிலவரப்படி 7,500 கன அடியாக தண்ணீர் குறைந்து வந்தது.

    இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்து மகிழ்ந்தனர். பின்னர் அவர்கள் மெயின் அருவியில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

    அவர்கள் மீன் சாப்பாடு வாங்கி கொண்டு பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

    காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • நேற்று சவரனுக்கு 560 ரூபாயும் உயர்ந்து ஒரு சவரன் ரூ.75,760-க்கு விற்பனையானது.
    • வெள்ளி விலையில் மாற்றமில்லை.

    சென்னை:

    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. விலை மாற்றம் இல்லாத நாட்களே இல்லை என்ற வகையில் ஏறுவதும், இறங்குவதுமாக தங்கம் இருந்து வருகிறது. அந்த வகையில் வார தொடக்க நாளான திங்கட்கிழமை சவரனுக்கு 40 ரூபாயும், செவ்வாய்கிழமை சவரனுக்கு 600 ரூபாயும், புதன்கிழமை சவரனுக்கு 80 ரூபாயும், வியாழக்கிழமை சவரனுக்கு 160 ரூபாயும், நேற்று சவரனுக்கு 560 ரூபாயும் உயர்ந்து ஒரு சவரன் ரூ.75,760-க்கு விற்பனையானது.

    இந்த நிலையில், வார இறுதிநாளான இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,445-க்கும், சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.75,560-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 127 ரூபாய்க்கும், பார் வெள்ளி 1 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    08-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.75,760

    07-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.75,200

    06-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.75,040

    05-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,960

    04-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,360

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    08-08-2025- ஒரு கிராம் ரூ.127

    07-08-2025- ஒரு கிராம் ரூ.127

    06-08-2025- ஒரு கிராம் ரூ.126

    05-08-2025- ஒரு கிராம் ரூ.125

    04-08-2025- ஒரு கிராம் ரூ.123

    • தமிழர்கள் நாங்கள் இந்த நாட்டிற்கு வரி செலுத்தவில்லையா? அல்லது வாக்குச் செலுத்தவில்லையா?
    • அரசால் ஒதுக்கப்பட்ட முகாமுக்குள் செய்யப்படுவது அது எப்படி ஆக்கிரமிப்பாகும்?

    சென்னை:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் அமைந்துள்ள ஈழத்தமிழர் முகாமில் வசிக்கும் மக்களுக்கு நிபந்தனைகளுடன் 420 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், வீடு ஒதுக்கீடுப் பெற்ற ஈழச்சொந்தங்கள் தங்கள் வீட்டின் முன் இருந்த, ஆபத்தான திறந்தவெளி சாக்கடைக்கு மூடியிட்டு, முகப்பு கூரை அமைத்தனர் என்பதற்காக, தமிழ்நாடு அரசின் Q - பிரிவு காவலர்கள் சாக்கடை மூடியை அகற்றாவிட்டால் அளித்த வீடுகள் திரும்பப்பெறப்படும் என கடும் மிரட்டல் விடுத்து, அச்சுறுத்துவது வன்மையான கண்டனத்துக்குரியது.

    வீடுகள் திரும்பப்பெறப்படும் என்ற Q - பிரிவு காவல்துறையின் மிரட்டலால் மனமுடைந்த பவானிசாகர் முகாமில் வசிக்கும் ஈழத்தமிழ்ச்சொந்தம் அருள்குமார் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ள நிகழ்வு பெரும் அதிர்ச்சியையும், மிகுந்த மனவலியும் தருகிறது. வந்தவரை எல்லாம் வசதியாக வாழவும், ஆளவும் வைத்த தமிழர் நிலம் தம் சொந்த இனத்தவரை சொந்தமாக பத்தடி நிலம் கூட உரிமை கோர முடியாத நிற்கதியான நிலையில் தவிக்க விட்டிருப்பதுதான் வரலாற்றுப் பெருந்துயரம்.

    தமிழ் இனத்திற்கும், நிலத்திற்கும் துளியும் தொடர்பற்ற வடவர்களை இலட்சக்கணக்கில் உள் நுழைய அனுமதித்து, தமிழர் வேலை வாய்ப்பினை தட்டிப்பறித்து வழங்கியதுடன், ஆதார் அட்டை முதல் குடும்ப அட்டைவரை வழங்கி, நிரந்தரமாய் இங்கே தங்க வைத்துள்ளதற்கு விதிக்கப்படாத கட்டுப்பாடுகளும், ஏற்படுத்தப்படாத தடைகளும் எம் ஈழத்தமிழ் மக்களுக்கு விதிக்கப்படுகிறது என்றால் இந்த ஆட்சியும், அதிகாரமும் யாருக்கானது? வடவர்கள் தமிழ் மண்ணிற்கு வந்த ஓரிரு வருடங்களில் வாக்களிக்கும் உரிமை வரை தரத் தயாராகிவிட்ட இந்த நாட்டின் ஆட்சியாளர்கள், இரண்டு தலைமுறையாக ஈழச்சொந்தங்கள் இந்த மண்ணில் வாழ்ந்தும்கூட இன்றுவரை குடியுரிமை தர மறுப்பது ஏன்?

    இலங்கை இனவெறி சிங்கள அரசின் இனப்படுகொலையை எதிர்கொண்டு, எல்லையில்லா அழிவுகளுக்கும், இழப்புகளுக்கும் ஆளாகி வீட்டை இழந்து, நாட்டை இழந்து, உறவுகளைப் பறிகொடுத்து, உரிமைகளும், உடைமைகளும் அற்று இப்பூமிப்பந்தில் உயிர்வாழ்வதற்கு ஒரு இடம் கிடைக்காதா? என ஏக்கத்தோடும், தவிப்போடும் பத்து கோடி தமிழ் மக்களின் தாயகமாக விளங்கும் தாய்த்தமிழகத்தை நாடிவந்த ஈழச்சொந்தங்களுக்கு இல்லாத உரிமை எங்கிருந்தோ இந்த நாட்டிற்கு வந்த திபெத்தியர்களுக்கு மட்டும் எப்படி வந்தது? திபெத்தியர்களுக்கு இந்நாடு அளிக்கும் வசதிகள், சலுகைகள் என்ன? அவர்களிடம் காட்டும் அக்கறை, பரிவு, பற்றில் ஆயிரத்தில் ஒரு பங்குகூட, நாட்டுக்குப் பெருத்த பொருளாதாரப் பங்களிப்புகளைச் செய்யும் தமிழ்ப்பேரினத்தின் தொப்புள்கொடி உறவுகளான ஈழத்தமிழர்களிடம் காட்ட மறுப்பதேன்? தமிழர்கள் நாங்கள் இந்த நாட்டிற்கு வரி செலுத்தவில்லையா? அல்லது வாக்குச் செலுத்தவில்லையா?

    நாட்டின் விடுதலைப்போராட்டம் முதல் இன்றைக்கு எல்லைப் பாதுகாப்பு போர்கள் வரை தமிழர்களின் பங்கு எவருக்கும் குறைந்தது இல்லையே? அதற்கு இந்நாடு தரும் கைமாறுதான் எம் ஈழச்சொந்தங்களை துரத்துவதா?

    இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு குடியுரிமை தர மறுக்கிறது. தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசோ குறைந்தபட்சம் நிம்மதியாக குடியிருக்கும் உரிமையைக்கூட தர மறுக்கிறது. இரண்டிற்கும் என்ன வேறுபாடு உள்ளது? இதுதான் திமுக அரசு இனத்தையும், மானத்தையும், மண்ணையும், மொழியையும் காக்கும் செயலா? இதுதான் திமுக தமிழர் உரிமையை மீட்கும் முறையா? வடவர்களுக்கு வாசல் திறந்துவிட்டு, ஈழத்தமிழ்ச் சொந்தங்களை Q - பிரிவு காவலர்கள் மூலம் ஒவ்வொரு நாளும் சித்ரவதை செய்வதற்கு பெயர்தான் திராவிட மாடலா?

    வீடு என்ற பெயரில் திமுக அரசால் வழங்கப்படும் வெப்பத்தை உமிழும் கான்கீரிட் கொட்டைகளுக்குள் ஈழச்சொந்தங்களை அடைத்துவைக்க முயல்வது கொடுங்கோன்மை இல்லையா? உயிருக்கு ஆபத்தான, பாதுகாப்பு அற்ற சாக்கடைக்கு மூடி இடுவதினாலோ, வெயில் வரமாலிருக்க மேற்கூரை அமைப்பதினாலோ திமுக அரசுக்கு நேர்ந்த இழப்பு என்ன? அரசால் ஒதுக்கப்பட்ட முகாமுக்குள் செய்யப்படுவது அது எப்படி ஆக்கிரமிப்பாகும்?

    ஈழத்தமிழ்ச்சொந்தங்களுக்கு திமுக அரசின் Q - பிரிவு காவலர்கள் தொடர்ச்சியாக தரும் நெருக்கடிகளை கண்டித்து தற்போது சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகே அறப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர் என்பதை இவ்வறிக்கையின் வாயிலாக அரசுக்கு சுட்டிக்காட்டுகிறேன்.

    ஆகவே, ஈரோடு மாவட்டம் பவானிசாகர் முகாமில் வசிக்கும் ஈழத்தமிழ்ச் சொந்தங்களுக்கு திமுக அரசு Q - பிரிவு காவல்துறை மூலம் தரும் அச்சுறுத்தல்களை உடனடியாக நிறுத்தி, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட குடியிருப்புகளில் பாதுகாப்பாக, நிம்மதியாக வாழ அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

    ஆகவே, ஈரோடு மாவட்டம் பவானிசாகர் முகாமில் வசிக்கும் ஈழத்தமிழ்ச் சொந்தங்களுக்கு திமுக அரசு Q - பிரிவு காவல்துறை மூலம் தரும் அச்சுறுத்தல்களை உடனடியாக நிறுத்தி, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட குடியிருப்புகளில் பாதுகாப்பாக, நிம்மதியாக வாழ அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

    இதற்கு மேலும், Q - பிரிவு காவலர்களின் நெருக்கடிகளும், அச்சுறுத்தல்களும் தொடர்ந்தால் முகாம்களில் வசிக்கும் ஈழத்தமிழ்ச்சொந்தங்களைக் காக்க என்னுடைய தலைமையில் விரைவில் ஈரோட்டில் மாபெரும் போராட்டம் நடைபெறும் எனவும் எச்சரிக்கின்றேன்.



    • தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு, மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.
    • பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

    திருப்பத்தூர்:

    தெற்கு கடலோர ஆந்திர பிரதேசத்திலிருந்து கடலோர தமிழகம் வழியாக வடக்கு இலங்கை வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல் தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இதன்காரணமாக, இன்று வடதமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு, மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி, பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில், மழை முன்னெச்சரிக்கை காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சிவ.சௌந்தரவல்லி உத்தரவிட்டுள்ளார். இன்று சனிக்கிழமை என்பதால் அரசு பள்ளிகளுக்கு ஏற்கனவே விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது. 

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யலாம்.

    தெற்கு கடலோர ஆந்திர பிரதேசத்திலிருந்து கடலோர தமிழகம் வழியாக வடக்கு இலங்கை வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல் தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, இன்று வடதமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு, மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    அதன்படி, தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணிவரை 12 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களிலும், புதுவை மற்றும் காரைக்காலிலும் இன்று காலை 10 மணிவரை மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது. 

    • அண்ணா, காமராஜர் போன்றோர் நாட்டு மக்களுக்காக உழைப்பைக் கொடுத்தவர்கள்.
    • மறைந்தாலும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என தெரிவித்தார்.

    விருதுநகர்:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சாத்தூரை அடுத்து விருதுநகர் பாவாலி சாலையில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான மக்களிடம் எழுச்சியுரை நிகழ்த்தினர். அப்போது அவர் பேசியதாவது:

    விருதுநகர் மண், கர்மவீரர் காமராஜர் பிறந்த மண். இந்திய அளவில் இந்த மண்ணுக்குப் பெருமை சேர்த்த பெருந்தலைவர். இந்த மண்ணில் பேசுவது எனது பாக்கியம். அவர் எந்தக் கட்சி என்றாலும், நல்லது செய்தால் மக்களிடம் புகழ் நீடிக்கும். எம்ஜிஆர், அம்மா இன்றும் வாழ்வதற்குக் காரணம் மக்களுக்குச் சேவை செய்தார்கள்.

    அண்ணா, காமராஜர் போன்றோர் நாட்டு மக்களுக்காக உழைப்பைக் கொடுத்தவர்கள். மறைந்தாலும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட தலைவரை திமுக எம்.பி. ஒருவர் அவதூறாகப் பேசியது கண்டனத்துக்குரியது. அதை முதல்வர் ஸ்டாலின் கண்டிக்கக் கூட இல்ல. அப்படிப்பட்ட கட்சி தமிழ்நாட்டுக்குத் தேவையா? தன்னலமற்ற தலைவர்கள் யாரையும் கொச்சைப்படுத்துவது சரியல்ல. திமுகவுக்கு அப்படிப்பட்ட பண்பு கிடையாது. அதனால் காற்றில் கரைவது போல திமுக கரையும்.

    எம்ஜிஆர், அம்மா ஆட்சிக் காலத்திலும் புதிய கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டன. 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் 17 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டுவந்து சாதனை படைத்தோம். இந்த விருதுநகரிலும் 400 கோடி மதிப்பீட்டில் ஒன்று கொடுத்தோம். இந்திய வரலாறிலேயே ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரி வேறு எங்கும் கொண்டுவரப்படவில்லை. இதைப் பெருமையோடு சொல்கிறோம். 50 மாத திமுக ஆட்சியில் ஒரு மருத்துவக் கல்லூரி கூட கொண்டுவரமுடியவில்லை. அதுக்குத் திறமை வேண்டும். திறமையில்லாத முதல்வர் ஆள்கிறார்.

    67 கலை அறிவியல் கல்லூரி, 21 பாலிடெக்னிக் கல்லூரி, 5 பொறியியல் சுல்லூரி, வேளாண்மை கல்லூரி என ஏராளமான கல்லூரிகளைத் திறந்தோம். அதனால், இந்தியாவிலேயே உயர்கல்வியில் முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. 2011ல் 100க்கு 32 பேர் உயர்கல்வி படித்தார்கள். இன்று நாட்டிலேயே முதல் மாநிலம் என்ற பெருமையை அதிமுக உருவாக்கிக் கொடுத்தது.

    படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்க 2015 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் இரண்டு முறை உலக முதலீட்டாளர் மாநாடுகளை நடத்தி பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. இதனால் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது. திமுக அரசும் தொழில் முதலீட்டாளர் மாநாடு நடத்தினார்கள். எவ்வளவு முதலீடுகள் ஈர்த்தீர்கள், எவ்வளவு வேலைவாய்ப்பு என்று வெள்ளை அறிக்கை கேட்டும் கிடைக்கவில்லை.

    விலைவாசி உயராமல் அதிமுக பார்த்துக்கொண்டது. எந்த மாநிலத்தில் விலை குறைவாக விற்கிறதோ, அங்கு வாங்கி இங்கு குறைந்த விலையில் விற்பனை செய்தோம். கொரோனா காலத்தில் கூட விலைவாசி ஏறாமல பார்த்துக்கொண்டோம். விலைமதிக்க முடியாத உயிர்களைக் காப்பாற்றினோம். ரேஷன் கடையில் விலையில்லாமல் பொருட்கள் கொடுத்தோம்.

    நீட் தேர்வு ரத்து செய்வோம் என்றது திமுக, அதன் ரகசியம் தெரியும் என்று உதயநிதி சொன்னார். எல்லாம் பொய். நீட் தேர்வை எங்களால் ஒன்றும் செய்யமுடியாது என்று முதல்வர் கையை விரித்துவிட்டார். இதைத்தான் நாங்களும் குறிப்பிட்டோம். ஆனால் பொய்யைத் திருப்பித் திருப்பி சொல்லி ஆட்சி அமைத்த பிறகு ரத்துசெய்ய முடியாது என்று பொய் சொல்லும் முதல்வர் தேவையா?

    சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டது. சகோதரர்களின் சண்டையைத் தடுக்கச் சென்ற காவல்துறை அதிகாரி கொலை செய்யப்பட்டார். சப் இன்ஸ்பெக்டருக்கே இந்த நிலை. கடந்த 6 மாதத்தில் 6 காவலர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். காவலருக்கே இந்த நிலை என்றால் மக்கள் பாதுகாப்பை சிந்தித்துப் பாருங்கள். போதைக்கு அடிமையாகி என்ன செய்வதென்று தெரியாமல் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை தினமும் நடக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 20 நாளில் 11 பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது எவ்வளவு பெரிய கேவலம்.? இப்படிப்பட்ட ஆட்சி தொடர வேண்டுமா? பலமுறை எச்சரிக்கை கொடுத்தேன். ஸ்டாலின் கண்டுகொள்ளவே இல்லை. ஏனென்றால் விற்பனை செய்வதே திமுககாரர்கள். திமுக பொதுக்குழுவில் ஸ்டாலினே இதை சொல்லிவிட்டார். கட்சிக்காரர் செய்வதை அவரே ஒப்புகொண்டார். நாங்கள் சொல்லலை, அவர் சொன்னதையே திருப்பிச் சொல்கிறேன்

    சேலம் மாவட்டம் ஆத்தூரில் நகைக்கடையில் நகை வாங்குவதுபோல வீசி நகையை திருடிவிட்டுச் சென்றனர். பெண்களுக்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பில்லை. நான் உண்மை மட்டுமே பேசுகிறேன். ஸ்டாலினைப் பொறுத்தவரை குடும்பத்தினர் அதிகாரத்துக்கு வர வேண்டும் என்பதற்காக கம்பெனி நடத்துகிறார். மக்களை பார்க்கவில்லை, குடும்பத்தைப் பற்றித்தான் கவலைப்படுகிறார். நாட்டு மக்கள் பிரச்னையை தீர்ப்பதற்கு தில்லு இல்லை. விலைவாசி உயர்வு, மின்கட்டணம் உயர்வு தொழிற்சாலைக்கு கட்டணம் உயர்த்திவிட்டதாகவும், அதை குறைக்க வேண்டும் என்றும் என்னிடம் கோரிக்கை வைத்தனர்.

    விருதுநகரில் மண் வீடாக இருந்து காலியிடமான பகுதிக்கு சொத்து வரி 56-ல் இருந்து 1,107 ரூபாயாக உயர்த்திவிட்டனர். வீடு கட்ட அனுமதி வாங்க அதிமுக ஆட்சியில் 1000 சதுரடிக்கு 37,000 ரூபாயாக இருந்தது. இன்று 74,000 ரூபாய் கட்ட வேண்டும். கட்டுமானப் பொருட்களின் விலையும் உயர்ந்துவிட்டது. எனவே இப்போது யாராலும் வீடு கட்ட முடியாது. அதனால் அதிமுக ஆட்சி அமைந்ததும் ஏழை மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு கான்கிரீட் வீடு கட்டிக்கொடுக்கப்படும்.

    அதிமுக ஆட்சியில் பொங்கலுக்கு 2500 ரூபாய் கொடுத்தோம், பொங்கல் தொகுப்பு கொடுத்தோம். விலையில்லா வேட்டி, சேலை கொடுத்தோம். திமுக ஆட்சியில் கொடுக்கவில்லை, அதிமுக ஆட்சி அமைந்ததும் வேட்டி, சேலை கொடுக்கப்படும். அதேபோல தீபாவளிக்கு பெண்களுக்கு சேலை கொடுப்போம். சந்தோஷமாகக் கொண்டாடலாம்.

    உங்களுடன் ஸ்டாலின் என்று 46 பிரச்சனைகள் இருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறார். அப்படியென்றால் கடந்த நான்காண்டுகள் என்ன செய்தீர்கள். இன்னும் 7 மாதத்தில் என்ன செய்வார்கள்? தேர்தல் வருவதால் நாடகம் ஆடுறார். இதேபோல் தான் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது புகார் பெட்டி திட்டம் கொண்டுவந்து ஏமாற்றினார். ஏற்கனவே போட்ட மனுக்கள் என்ன ஆனது? உங்கள் ஆசையைத் தூண்டி வாக்குகள் பெறுவதற்கு தந்திரமாக செயல்படுகிறார்.

    விருதுநகர் தொகுதியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ரெயில்வே சாலை கொடுத்தோம். கூட்டுக்குடிநீர் திட்டம் அடிக்கல் நாட்டினோம், அதை திமுக செயல்படுத்தவில்லை. தார்சாலைகள், காமராஜருக்கு மணிமண்டபம், விருதுநகரில் காமராஜர் படித்த பள்ளியில் கல்வி திருவிழா, சங்கரலிங்க நாடார் மணிமண்டபம் என பல திட்டங்கள் நிறைவேற்றினோம்

    இப்போது நீங்கள் கொடுத்திருக்கும் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம். பைபை ஸ்டாலின் என தெரிவித்தார்.

    • மாநகராட்சி தேர்தலில் கள்ள ஓட்டு போட முயன்றவரை ஜெயக்குமார் பிடித்துக் கொடுத்தார்.
    • ஆர்.கே.நகர், பெரம்பூர் தொகுதிகளில் அதிமுகவின் முயற்சியால் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்

    தேர்தல் ஆணையம் மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுடன் இணைந்து வாக்குகளை திருடியதாக பாராளுமன்ற எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார்.

    இதனையடுத்து, SIR என்ற முறைகேடான வாக்காளர் பட்டியல் திருத்தம் பற்றி இ.பி.எஸ். வாய் திறக்காதது ஏன்? என்று அமைச்சர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார்.

    இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.

    அப்போது மக்களிடம் உரையாற்றிய எடப்பாடி பழனிச்சாமி, "திமுக ஆட்சி பொறுப்பேற்று 50 மாதம் ஓடிவிட்டது. உருப்படியான திட்டங்கள் எதுவுமில்லை. ஆனால் தமிழகம் வளர்ந்துவிட்டது என்பது போன்ற தோற்றத்தை திமுகவும் கூட்டணிகளும் பொய்யாக உருவாக்குகிறார்கள். இன்று வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு இபிஎஸ் வாய்த்திறக்காதது ஏன் என்று துரைமுருகன் கேள்வி கேட்கிறார். 86 வயதில் பொய்யான அறிக்கை வெளியிடுகிறார்.

    இப்போது ஆட்சியில் இருப்பது திமுகதானே... அவர்களிடம் தானே அதிகாரம் இருக்கிறது. ஸ்டாலினுக்குக் கீழே தானே அதிகாரிகள் உள்ளனர். ஸ்டாலின் உத்தரவின்பேரில், அமைச்சரின் கட்டுப்பாட்டில் தானே அவர்கள் செயல்படுகின்றனர்..? வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் போன்றவை மாவட்ட ஆட்சியரின் பணி. அதில் இப்போது அதிமுக என்ன செய்ய முடியும்..? அதிமுக பாஜக கூட்டணி வைத்ததும் திமுகவுக்குப் பயம் வந்துவிட்டது. அவர்களுக்கு வெற்றி பெற முடியாதென்று எண்ணம் வந்துவிட்டது. அதனால் தான் மடைமாற்றம் செய்கிறார். துரைமுருகன் அவர்களே, ஆட்சி உங்களிடம் உள்ளது. நீங்கள்தான் போலி வாக்காளர்களை சேர்க்கிறீர்கள்

    உண்மையிலேயே தில்லு, திராணி, தெம்பு இருந்தால் நான் கேட்பதற்குப் பதில் சொல்லுங்கள். அவர் வயதில் மூத்தவர் என்பதால் மதிக்கிறோம். அதேநேரம், தவறான தகவல் வெளியிட்டால் நிச்சயம் கண்டிப்போம் சென்னை மாநகராட்சியில் ஆர்.கே. நகர் தொகுதியில் 27,779 வாக்கு நீக்கப்பட்டது. நீதிமன்றம் நாடி, மாவட்டச் செயலாளர்கள் புகார் கொடுத்தோம். அதையும் கண்டுகொள்ளவில்லை. போலி வாக்காளர்களை நீக்கவில்லை. உடனே நீதிமன்றம் சென்று ஆதாரத்தோடு வாதாடி இப்போது நீக்கியிருக்கோம். ஒரு தொகுதியில் 27779 பேர் என்றால், இந்த ஆட்சியில் எத்தனை போலி வாக்காளர்கள் என்பதை எண்ணிப்பாருங்கள்.

    பெரம்பூர் தொகுதியில் 12,085 வாக்காளர்கள் முறைகேடாக சேர்க்கப்பட்டதாக நாங்கள் கொடுத்த புகார் விசாரணையில் உள்ளது. திநகர் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக புகார் கொடுத்திருக்கிறோம். சென்னை மாநகராட்சி தொகுதியில் பல்லாயிரக்கணக்கான போலி முழுவதும் திமுக போலி வாக்காளர்களால் மட்டுமே வெற்றி பெறுகிறது. இது உண்மை, ஆதாரபூர்வமாக நீதிமன்ற உத்தரவின் பேரில் சம்பந்தபட்ட அதிகாரிகள் வீடுவீடாகச் சென்று போலி வாக்காளர்களை நீக்கியுள்ளனர். இது திமுகவின் பித்தலாட்டம்தானே? திமுக மக்களின் கட்சிக்காரர்களின் செல்வாக்கை இழந்துவிட்டனர். அதனால் 2006 தேர்தலில் திமுக கூட்டணி படுதோல்வி அடையும்.

    சென்னை மாநகராட்சித் தேர்தலில் கள்ள ஓட்டு போட முயன்ற ஒருவரை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பிடித்து போலீஸில் ஒப்படைத்தார். ஆனால் அன்று ஒப்படைத்தவரை கைது செய்தார்கள். கள்ள ஓட்டு போட்டவரை விடுவித்தார்கள். இப்படிப்பட்ட கட்சிக்கு கட்சி எங்களைப் பற்றி விமர்சனம் செய்ய அருகதை கிடையாது. அம்மா இருக்கும்போது சென்னை மாநகராட்சி தேர்தல் நடந்தது. அப்போது ஒன்றரை மணிநேரத்தில் 1200 ஓட்டுகளை பதிவுசெய்தார்கள் நீதிமன்றம் சென்றோம். ஒன்றரை மணிநேரத்தில் எப்படி இவ்வளவு ஓட்டு பதிவாகும் என்று கேட்டு, முறைகேடு தேர்தலை ரத்துசெய்தது நீதிமன்றம். கூட்டுறவு சங்கத் தேர்தல் நடத்தியதிலும் முறைகேடு நடந்தது. திமுக அரசாங்கமே அந்த தேர்தலை ரத்து செய்துவிட்டது.

    இன்று ஊழல் இல்லாத துறையே இல்லை. எதற்கெடுத்தாலும் பணம்தான். ஊழலில் ஸ்டாலின் அரசுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம். டாஸ்மாக் கடையில் ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக விற்பதன் மூலம் மட்டும் வருடத்துக்கு 5400 கோடி ஊழல் நடக்கிறது. மேலிடத்து உத்தரவு என்று சேல்ஸ்மேன் சொல்கிறார். இந்த நான்காண்டில் 22 ஆயிரம் கோடி ரூபாய் திமுக அரசு கொள்ளையடித்திருக்கிறது. 10 ரூபாய் மந்திரி செந்தில்பாலாஜி என்று மக்களே பெயர் வைத்துவிட்டனர்.

    போதைப் பொருள் விற்பனை சுனஜோராக நடக்கிறது. இளைஞர்கள் சீரழிகிறார்கள் என்று நான் பலமுறை சொன்னதை முதல்வர் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. இந்த போதை ஆசாமிகளால் கொலை, கொள்ளை, பாலியல் சீண்டல்கள் நடக்காத நாளே இல்லை. 2022ம் ஆண்டு காவல்துறை மானியம் வந்தபோது, கொள்கை விளக்க குறிப்பில் 20வது பக்கத்தில், பள்ளி கல்லூரிக்கு அருகில் 23418 பேர் கஞ்சா விற்றதாக கண்டறியப்பட்டது. ஆனால் கைதுசெய்யப்பட்டது 148 பேர், மற்றவர்கள் எல்லாம் யார்? அவர்கள் எல்லாம் திமுககாரர்கள். அப்புறம் எப்படி கஞ்சாவை கட்டுப்படுத்த முடியும்?

    ஸ்டாலின் அவரது கட்சிப் பொதுக்குழு கூட்டத்தில் பேசும்போது. காலையில் கண்விழிக்கும்போது எங்க கட்சிக்காரர்களால் என்ன நடக்குமோ என்று பதறிப்போகிறேன் என்கிறார். அவருடைய கட்சிக்காரரையே கட்டுப்படுத்த முடியாதவர், நாட்டில் குற்றங்களை எப்படிக் கட்டுப்படுத்துவார்..? பொம்மை முதல்வரை பிடித்து உட்கார வைத்திருக்கிறார்கள். எந்த கேள்வி கேட்டாலும் பதிலே கிடையாது நான் சட்டமன்றத்தில் 2 மணி நேரம் 50 நிமிடம் பேசினேன். அப்போது அவர், இவ்வளவு நேரம் பேசிவிட்டீர்கள். நான் போய் பதிலுக்காக குறிப்பெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதனால் பேச்சை நிறுத்திக்கொண்டேன்

    இவ்வளவு நேரம் ஏன் பேசுகிறேன்? ஆட்சியில் நடக்கும் குறைகளைத்தானே சுட்டிக்காட்டுகிறேன். திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து இன்றுவரை மக்கள் போராடுகிறார்கள். ஆசிரியர்கள், செவிலியர்கள். போக்குவரத்து ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள் என எல்லா தரப்பினரும் போராடுகிறார்கள். ஆனால் ஸ்டாலின் எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. வீட்டில் உள்ளவர்களை மட்டும்தான் கவனிப்பார்.

    தமிழகத்தில் சூப்பர் முதல்வர் என்கிறார்கள். எதில் என்றால், கடன் வாங்குவதில் தான். இந்த ஐந்தாண்டில் 5 லட்சத்து 38 ஆயிரம் கோடி கடன் சுமை உங்களிடம் தான் வசூல் செய்வார்கள். ஒருநாள் திமுக அரசு தமிழ்நாட்டையே கடன் வாங்கியதற்கு அடமானம் வைக்கப்போகிறது. அப்படிப்பட்ட காலம் வந்துவிடும்.

    எதிர்க் கட்சித் தலைவராக இருந்தபோது கடனை குறைக்க நிபுணர் குழு அமைக்கப்படும் என்றார். ஆனால், அதற்காக அமைத்தார்களா.? கடன் வாங்குவதற்கே நிபுணர் குழு அமைத்தார்கள். பொருளாதார வளர்ச்சி 11.19% என்கிறார் புள்ளிவிவரம் மாறிக்கொண்டே இருக்கும். இந்த புள்ளி விவரத்தால் மக்களுக்கு நன்மை கிடைக்குமா?

    சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலை போயிருந்தேன், பெண்களிடம் பேசினேன். இதற்கு என்னிடம் வீடியோ ஆதாரமே உள்ளது. அதிமுக ஆட்சியில் ஒருநாளைக்கு 700 800 ரூபாய் ஊதியம் கிடைத்தது, இந்த திமுக ஆட்சியில் 150 ரூபாய்தான் கிடைக்கிறது என்றார்கள். நீங்கள் புள்ளிவிவரம் சொல்கிறீகள் வெளியே வந்து நாட்டு மக்களைப் பாருங்கள் மக்கள் கஷ்டத்தை பார்த்து தெரிந்து பேசுங்கள் ஸ்டாலின்

    அந்தக் காலத்தில் மன்னர் அமைச்சர்களைப் பார்த்து, 'நாடு எப்படி இருக்கிறது?' என்று கேட்பார் உடனே அவர்கள், "நாடு சுபிட்சமா இருக்கிறது. மும்மாரி மழை பெய்கிறது' என்று பொய் சொல்வார்கள். அப்படி சொல்வதையே நம் முதல்வர் நம்பிக்கொண்டிருக்கிறார். சட்டம் ஒழுங்கு சீர்கேடு, விலைவாசி உயர்வு விண்ணை முட்டிவிட்டது. விலை குறைப்பதற்கு திமுக என்ன நடவடிக்கை எடுத்தது..? இதே அதிமுக ஆட்சியில் விலை கட்டுப்பாட்டு நிதியம் அமைத்து 100 கோடி ரூபாய் ஒதுக்கி, உணவுத்துறை மூலமாக எங்க விலை குறைவாக இருக்கிறதோ, அங்கிருந்து வாங்கி வந்து இங்கு விற்பனை செய்தோம். அண்டை மாநிலத்தில் இருந்தும் கூட வாங்கி வந்து விலையைக் கட்டுப்பாட்டில் வைத்தோம். அப்படி ஏதாவது இ ஆட்சியில் செய்தார்களா? இப்போது கட்டுமானப் பொருட்களின் விலைய உயர்ந்துவிட்டது. அதிமுக ஆட்சி அமைந்ததும் ஏழை, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கான்கிரீட் வீடு கட்டிக்கொடுப்போம்.

    அதிமுக ஆட்சியில் பொங்கல் அன்று பொங்கல் தொகுப்பு, 2500 ரூபாய் கொடுத்தோம். திமுக ஒழுகிற வெல்லம் கொடுத்தனர், திருவண்ணாமலையில் 2 டன் கெட்டுப்போன வெல்லம் வைத்திருந்தனர். திமுக 525 அறிவிப்புகள் வெளியிட்டனர். அவற்றில் 98% நிறைவேற்றிவிட்டோம் என்று பச்சை பொய் சொல்கிறார்கள். 100 நாள் வேலைத்திட்டத்தை 150நாளாக உயர்த்தவில்லை, ரேஷன் கடையில் 2 கிலோ சர்க்கரை, கேஸ்மானியம், பெட்ரோல் டீசல் விலை குறைப்பு மாணவர் கல்விக் கடன் ரத்து என்றெல்லாம் ஏராளமான திட்டங்களைச் சொல்லி, ஏமாற்றி கொள்ளைப்புறமாக ஆட்சிக்கு வந்ததும் எல்லாவற்றையும் மறந்துவிட்டனர்.

    அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த அம்மா மினி கிளினிக் திட்டத்தை நிறுத்திவிட்டார். மீண்டும் அதிமுக ஆட்சியில் அத்திட்டம் செயல்படுத்தப்படும். நலன காக்கும் ஸ்டாலின் என்று இப்போதுதான் மக்களை பற்றி சிந்திக்கிறார். பெயர் வைப்பதில் தான் அவர் பிரபலம். பெயர் வைப்பதற்கு ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம்.

    அதிமுக ஆட்சியில் 15 லட்சம் மருத்துவ முகாம் நடத்தினோம். அதற்கு ஸ்டிக்கர் ஒட்டிவிட்டார். அதுதான் நலன் காக்கும் ஸ்டாலின் திட்டம் ஆரம்ப சுகாதார நிலையம், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், நடமாடும் மருத்துவ குழு ஆகியவற்றை அதிமுக ஆட்சியில் அமைத்தோம். இப்படி அதிமுக ஆட்சியின் திட்டத்துக்குப் பெயர் மட்டும் மாற்றிவிடுகிறார்

    அரசு பள்ளி மாணவர்களும் மருத்துவராக 7.5% உள் இடஒதுக்கீடு கொண்டுவந்தோம். அவர்களில் 2818பேர் இலவசமாகப் படித்து மருத்துவர் ஆகிவிட்டனர். திமுக ஆட்சியில் வேட்டி, சேலை கொடுப்பதில்லை. மீண்டும் அதிமுக ஆட்சியில் வேட்டி, சேலை உரிய நேரத்தில் கொடுப்போம். தீபாவளி அன்று பெண்களுக்கு சேலை கொடுப்போம். கொரோனா காலத்தில் மக்களுக்கு ரேஷன் கடையில் விலையில்லா பொருள் கொடுத்தோம், விலையில்லா உணவு கொடுத்தோம். மேலும் மாணவர்கள் நலன் கருதி ஆல்பாஸ் போட்டோம். கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு நடத்தினோம்

    அதிமுக ஆட்சியில் நாங்கள் எந்த ஒரு திட்டத்தையும் நிறைவேற்றவில்லை என்கிறார் ஸ்டாலின் இந்த சாத்தூர் தொகுதிக்கு அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டதை மட்டும் சொல்கிறேன், சாத்தூரில் அதிநவீன மருத்துவமனை, தாலுகா அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்றம். கல்லூரி கட்டிடம், வைப்பாற்றில் தடுப்பணை, பாலம், குடிநீர் திட்டம், 520 கோடியில் விருதுநகர் சாத்தூர் அருப்புக்கோட்டை தாமிரபரணி நீரை ஆதாரமாகக் கொண்டு கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டினோம். இந்த நான்காண்டுகளில் பணிகள் ஆமை வேகத்தில் நடக்கிறது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் துரிதமாக பணிகள் முடிக்கப்பட்டு, அதை பயன்பாட்டுக்குக் கொண்டுவருவோம். சாத்தார் வைப்பாற்றில் சாக்கரை கலக்காத வண்ணம், 50 கோடி மதிப்பீட்டில் பாதா சாக்கடை திட்டம் கொண்டுவந்தோம். கோட்டாட்சியர் அலுவலகம், அதிநவ.... மின் விளக்குகள், தரமான சாலைகள், ஒவ்வொரு கிராமத்திலும் தனித்தனி நீர்த்தேக்கம் அமைத்தோம்" என்று தெரிவித்தார்.

    இப்போது நீங்கள் இருக்கன்குடி அணை, வெம்பக்கோட்டை அணை தூர் வாரவேண்டும் என்று கேட்டுள்ளீர்கள், அதிமுக ஆட்சியில் நிச்சயம் தூர்வாரப்படும். சாத்தூர், சிவகாசி, ராஜபாளையம் ஆகிய ஊர்களை இணைக்கும் வகையில் ஆலங்குளத்தில் பேருந்து நிலையம் கேட்டுள்ளீர்கள். அதுவும் ஆட்சி அமைந்ததும் அமைக்கப்படும். ஆலங்குளம் முதல் நிலை ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும். உங்கள் மற்ற கோரிக்கைகளும் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்படும்" என்று தெரிவித்தார். 

    வாக்காளர் பட்டியல் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி கள்ள மெளனம் சாதிப்பதாக துரைமுருகன் குற்றம் சாட்டியிருந்த நிலையில், திமுகவை விமர்சித்து எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். இருப்பினும் தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து அவர் எதுவும் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

    • எடப்பாடி பழனிசாமி இன்று சிவகாசியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
    • தீப்பெட்டி உற்பத்தியாளர்கள், பட்டாசு உற்பத்தியாளர்களுடன் இபிஎஸ் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

    மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' எழுச்சிப் பயணத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சிவகாசியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

    அப்போது அச்சக உரிமையாளர்கள். தீப்பெட்டி உற்பத்தியாளர்கள், பட்டாசு உற்பத்தியாளர்கள், காலண்டர் தயாரிப்பாளர்கள், மற்றும் வணிகர் சங்கத்தினருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

    அப்போது பேசிய எடப்பாடி பழனிச்சாமி, "இந்த நெருக்கடியான சூழலிலும் பட்டாசு தொழிலில் பல லட்சம் தொழிலாளர்கள் வேலை பார்க்கிறார்கள். வெளிநாட்டுக்கு பட்டாசு ஏற்றுமதியாகி அரசுக்கு வருமானம் வருகிறது ஒரு சிலர் பொதுநல வழக்கை உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த காரணத்தால்தான் இந்த பிரச்சினை வெடித்தது. நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் அரசாங்கம் குறிப்பிட்ட அளவு மட்டுமே செயல்படும் நிலை உள்ளது இந்த வழக்கு நடக்கும்போதே இதற்கு தீர்வுகாண அதிமுக ஆட்சியில் சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர்களை சந்தித்து பிரச்சினைகளை சொல்லி, நீதிமன்றத்தில் முத்த வழக்கறிஞர்களை நியமித்து வாதாட வைத்தோம்.

    இருந்தாலும் தீபாவளி காலத்தில் ஒரு குறிப்பிட்ட நேரம் மட்டும்தான் பட்டாசு வெடிக்கவேண்டும் என்ற கட்டுப்பாடு வரும் சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. உச்சநீதிமன்றம் மாசுக் கட்டுப்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுப்பது பொதுநல வழக்கை போட்டவர்களுக்கு சாதகமாகி விடுகிறது. நம் மாநிலத்தில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் ஒட்டுமொத்த இந்தியாவில் ஏற்படும் நிலைகளை எடுத்துச் சொல்லித்தான் இதற்கு தீர்வுகாண முடியும்.

    அதிமுகவைப் பொறுத்த வரையில், எல்லா தொழிலுக்கும் உரிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். உங்கள் பிரச்சினைகளை மாநிலங்களவை உறுப்பினர்கள் மூலம் எடுத்துச் சொல்வோம். மத்திய அமைச்சர்களை சந்தித்தும் உங்கள் பிரச்னைகளை சொல்லி உதவி செய்யத் தயாராக இருக்கிறோம்.

    அதிமுக ஆட்சியில் பட்டாசு தொழில் சிறக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் பட்டாசு தொழிலாளர்கள் தீக்காயத்தால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிவகாசியில் 10 கோடி ரூபாயில் தீக்காய சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டது. மதுரை அரசு மருத்துவமனையிலும் இது தொடங்கப்பட்டது. விருதுநகர் மாவட்டத்தில் பிரம்மாண்டமான அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையையும் கொண்டு வந்திருக்கிறோம். அடுத்து ஆட்சிக்கு வந்ததும் உங்களுடைய குறைகளைக் களைவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்" என்று உறுதி கொடுத்தார்.

    இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி உதயகுமார், காமராஜ் கே டி ராஜேந்திரபாலாஜி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    • பஹல்காமில் தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த டாக்டர் ஏ.பரமேஸ்வரன் காயமடைந்தார்.
    • மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பரமேஸ்வரனை முதலமைச்சர் நலம் விசாரித்தார்.

    பஹல்காம் தீவிரவாதிகள் தாக்குதலில் காயமடைந்த டாக்டர் ஏ.பரமேஸ்வரன் மற்றும் அவர் குடும்பத்தினர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

    இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜம்முவின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22 அன்று நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த டாக்டர் ஏ.பரமேஸ்வரன் அவர்கள் குண்டடிப்பட்டு புதுடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது 'அவரது மருத்துவ மற்றும் பிற செலவுகளை தமிழ்நாடு அரசே ஏற்கும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உறுதிமொழி அளித்து சிகிச்சை பெற்று வந்தார். அத்துடன் முதலமைச்சர் அவர்கள், புதுடெல்லி சென்றிருந்த போது, எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த டாக்டர் ஏ.பரமேஸ்வரன் அவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

    தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் முயற்சியினால் நடைபெற்ற சிகிச்சையின் காரணமாக நலம் பெற்று இல்லம் திரும்பிய டாக்டர் ஏ.பரமேஸ்வரன் அவர்களும் அவர் குடும்பத்தாருமான அவரது துணைவியார் டாக்டர் மநயன்தாரா, தந்தையார் திரு பி. ஆறுமுகம். மாமனார் டாக்டர் டி.கே.மணிகுமார், மாமியார் டாக்டர் ஜெ.சித்ரா, மாமன் டாக்டர் வேதாந்த சீனிவாசன் ஆகியோர் மாபுமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் இன்று (08-08-2025) காலை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

    இற்றிகழ்வின் போது கழக பொதுச்செயலாளர் துரைமுருகன், வி.செந்தில்பாலாஜி, அமைச்சர் தங்கம் தென்னரக, கழக விவசாய அணிச் செய்வாளரும் டெல்லி சிறப்பு பிரதிநிதியுமான ஏ.கே.எஸ்,விஜயன், செய்தி தொடர்பு தலைவர் டி கே.எஸ்.இளங்கோவன் ஆகிடியோர் உடனிருந்தனர்.

    • எடப்பாடி பழனிசாமியின் காரில் செல்லூர் ராஜு ஏற முயன்றார்.
    • வேறு காரில் வருமாறு செல்லூர் ராஜுவிடம் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

    சிவகங்கை மாவட்டம் கீழடி அருகே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் காரில் செல்லூர் ராஜு ஏற முயன்றபோது அந்த வாகனத்தில் ஏற வேண்டாமென எடப்பாடி பழனிச்சாமி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. வேறு காரில் வருமாறு எடப்பாடி பழனிச்சாமி கூறியதை அடுத்து செல்லூர் ராஜு வேறு காரில் ஏறி பயணித்தார்.

    இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாக பரவியது. இதனையடுத்து செல்லூர் ராஜு மீது எடப்பாடி பழனிசாமி கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

    இந்நிலையில், இதுகுறித்து பேசிய செல்லூர் ராஜு, "என் மீது எடப்பாடி பழனிசாமிக்கு எந்த அதிருப்தியும் இல்லை. காரில் இடமில்லாத காரணத்தால்தான் என்னால் அந்த வாகனத்தில் செல்ல முடியவில்லை" என்று விளக்கம் அளித்தார்.

    • நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அழைப்பை ஏற்று அன்புமணி நீதிமன்றத்திற்கு வருகை புரிந்தார்.
    • பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று நீதிமன்றத்திற்கு வர மாட்டார் எனத் தகவல்

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆதரவு மாநில பொதுச்செயலாளர் முரளி சங்கர் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார்.

    அந்த மனுவில், "கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்ட அன்புமணியின் பதவிக்காலம் கடந்த மே மாதம் 28-ந்தேதியுடன் நிறைவடைந்து விட்டது. கட்சியின் பொதுக்குழு, அவசர பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை கூட்ட கட்சியின் நிறுவனர் ராமதாசுக்கே அதிகாரம் உள்ளது. தன்னைத்தானே தலைவர் என சொல்லிக்கொண்டு அன்புமணி செயல்படுகிறார். அவர் வருகிற 9-ந்தேதி கூட்டும் பொதுக்குழுவுக்கு தடை விதிக்கவேண்டும்" என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க கோரி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு முறையீடு செய்யப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்கை இன்று விசாரித்தார்.

    அப்போது பேசிய நீதிபதி ஆனந்த் வெங்டேஷ், "5 நிமிடத்தில் இந்த வழக்கை என்னால் முடித்துவிட முடியும். இருப்பினும் இருதரப்பு நலன் கருதி இன்று மாலை 5.30 மணிக்கு அன்புமணி, ராமதாஸ் ஆகிய இருவரையும் நீதிபதி அறைக்கு அழைத்து வரமுடியுமா? வேறு யாரும் உடன் இருக்கக் கூடாது. இருவரிடம் தனித்தனியாகப் பேசப் போகிறேன்; உடனடியாக ராமதாசை புறப்படச் சொல்லுங்கள். இதை வேண்டுகோளாக வைக்கிறேன் என்று கூறி வழக்கை ஒத்திவைத்தார்.

    நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அழைப்பை ஏற்று அன்புமணி நீதிமன்றத்திற்கு வருகை புரிந்தார். ஆனால் உடல்நலக் குறைவால் ராமதாஸ் இன்று உயர்நீதிமன்றத்திற்கு வர இயலவில்லை. ஆனாலும் காணொலி வாயிலாக நீதிபதி ஆனந்த் வெங்டேஷ் பேச்சுவார்த்தையில் ராமதாஸ் கலந்துகொள்வார் என்று கூறப்படுகிறது.

    • விவேகானந்தர் பாறையை பார்ப்பதற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
    • முன்னதாக கவுண்டர்களில் மட்டுமே டிக்கெட்டுகளை பெறும் வசதி இருந்தது.

    கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சூரிய உதயம், திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறையை பார்ப்பதற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    இந்நிலையில், கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறைக்கு படகுகளில் செல்ல இன்று ( ஆகஸ்ட் 08) முதல் ஆன்லைனில் டிக்கெட்டுகளை பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    கவுண்டர்களில் மட்டுமே டிக்கெட்டுகளை பெறும் வசதி இருந்த நிலையில், https://www.psckfs.tn.gov.in/ என்ற இணையதளத்தில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ×