என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக எடப்பாடி பழனிசாமியை நான் அறிவிக்கவில்லை.
    • அ.தி.மு.க. இணைய வேண்டும் என ஆரம்ப காலத்தில் இருந்தே நான் கூறி வருகிறேன்.

    நெல்லை:

    பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * நெல்லை பூத் கமிட்டி கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வேண்டும் என அண்ணாமலைதான் கூறினார்.

    * தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக எடப்பாடி பழனிசாமியை நான் அறிவிக்கவில்லை.

    * கூட்டணியில் இருந்து அ.ம.மு.க. விலக நான்தான் காரணம் என்று எந்த அடிப்படையில் டிடிவி தினகரன் கூறுகிறார் என தெரியவில்லை.

    * டி.டி.வி. தினகரனுக்கும் எனக்கும் இதுவரை எந்த கருத்து வேறுபாடும் இருந்ததில்லை.

    * அ.தி.மு.க. இணைய வேண்டும் என ஆரம்ப காலத்தில் இருந்தே நான் கூறி வருகிறேன்.

    * செங்கோட்டையனை எங்கள் கட்சிக்கு அழைப்பது நாகரிகமாக இருக்காது என்றார்.

    • நாளை நண்பகல் 12 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி வாயிலாக கூட்டம் நடைபெறுகிறது.
    • தி.மு.க.வின் முப்பெரும்விழா மற்றும் ஓரணியில் தமிழ்நாடு- உறுப்பினர் சேர்க்கை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

    சென்னை:

    தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ளதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

    நாளை நண்பகல் 12 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி வாயிலாக கூட்டம் நடைபெறுகிறது.

    இக்கூட்டத்தில் தி.மு.க.வின் முப்பெரும்விழா மற்றும் ஓரணியில் தமிழ்நாடு- உறுப்பினர் சேர்க்கை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

    • வீட்டின் முன்பக்க கதவுகள் உடைக்கப்பட்ட நிலையில் திறந்து கிடந்தது.
    • வேணி காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தந்தை பெரியார் நகர் ஒன்பதாவது வீதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் வேணி (வயது 41). இவருடன் அவரது வயதான தாயாரும் தங்கியுள்ளார். இந்தநிலையில் இவர் நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு மதுரை சென்றிருந்தார். அங்கு உறவினர்கள் சார்பில் பாண்டி கோவிலில் நடை பெற்ற கிடாவெட்டு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு நேற்று நள்ளிரவில் வீடு திரும்பினார்.

    அப்போது வீட்டின் முன்பக்க கதவுகள் உடைக்கப்பட்ட நிலையில் திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வேணி, அச்சத்துடன் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது வீட்டின் அறைகளில் இருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. மேலும் தனி அறையில் வைக்கப்பட்டிருந்த பீரோவை உடைத்து 40 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

    இதுகுறித்து வேணி காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் கொள்ளை நடந்த வீட்டிற்கு வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து சோதனை செய்தனர். அருகில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கைப்பற்றி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    பூட்டியிருந்த வீட்டில் வீட்டின் கதவை உடைத்து 40 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    • கடற்கரை கிராமங்களிலும் கடல் நீர்மட்டம் தாழ்ந்து உள்வாங்கி காணப்பட்டது.
    • வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு சவாரி நடத்தப்படவில்லை.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் பவுர்ணமியையொட்டி கடல் நீர்மட்டம் இன்று திடீரென தாழ்வாக காணப்பட்டது. முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் சுமார் 50 அடி தூரத்துக்கு கடல் உள்வாங்கியது. இந்திய பெருங்கடல், அரபிக்கடல் ஆகிய 2 கடல்களும் சீற்றமாக காணப்படுகிறது.

    கடல் உள்வாங்கியதால் கடலுக்கு அடியில் இருந்த மணல் பரப்புகளும், பாசி படிந்த பாறைகளும் வெளியே தெரிந்தன. இதன் காரணமாக கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை.

    இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். காலை 9 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியதும் படகு போக்குவரத்து தொடங்கியது. இதைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் படகில் ஆர்வமுடன் பயணம் செய்து விவேகானந்த நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை மற்றும் கண்ணாடி பாலத்தை பார்வையிட்டு வருகின்றனர்.

    மேலும் கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடிபோன்ற கடற்கரை கிராமங்களிலும் கடல் நீர்மட்டம் தாழ்ந்து உள்வாங்கி காணப்பட்டது. இதனால் இந்த கடற்கரை கிராமங்களில் உள்ள கடற்கரை பகுதி மணல் பரப்பாகவும், பாறைகள் நிறைந்த பகுதியாகவும் காட்சியளித்தது. வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு சவாரி நடத்தப்படவில்லை. 

    • செங்கோட்டையன் டெல்லி செல்கிறாரா அல்லது ஹரித்துவார் செல்கிறாரா என எனக்கு தெரியாது.
    • இந்த முறை தனது இளையமகன் ஜெயபிரதீப்புடன் ஆலப்புழா செல்வது குறிப்பிடத்தக்கது.

    போடி:

    தேனி மாவட்டம் போடியில் உள்ள தனது கட்சி அலுவலகத்திற்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று வருகை தந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,

    சந்திரகிரகணம் நல்ல முறையில் முடிந்தது. இதனால் கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள சக்குளத்துக்காவு பகவதியம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய செல்கிறேன். திரும்பி வந்த பிறகு உங்களை சந்திக்கிறேன் என்றார்.

    செங்கோட்டையன் டெல்லி செல்கிறாரா அல்லது ஹரித்துவார் செல்கிறாரா என எனக்கு தெரியாது. அ.தி.மு.க.வில் பலர் கட்சியை தவிடு பொடியாக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர் என எடப்பாடி கூறியது குறித்து கேட்டதற்கும் பதில் அளிக்காமல் சென்று விட்டார்.

    வழக்கமாக ஓ.பன்னீர்செல்வம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனது குலதெய்வ கோவில் உட்பட சபரிமலை கோவிலுக்கு அடிக்கடி செல்வது வழக்கம். ஆனால் இந்த முறை தனது இளையமகன் ஜெயபிரதீப்புடன் ஆலப்புழா செல்வது குறிப்பிடத்தக்கது.

    • என் மீதான நடவடிக்கை எதிர்பார்த்த ஒன்றுதான் என மல்லை சத்யா கூறியுள்ளார்.
    • தனது மகன் குறித்தே வைகோ சிந்திக்கிறார்.

    சென்னை:

    ம.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நிரந்தரமாக நீக்கப்பட்டு உள்ளார்.

    இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சி.ஏ. சத்யா ஆகிய தாங்கள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் வகித்த துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்தும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் என்ற தகுதியில் இருந்தும், தங்களை நிரந்தரமாக ஏன் நீக்க கூடாது என கடந்த 17-ந்தேதி அன்று விளக்கம் கேட்டு கழக சட்டதிட்டங்கள் படி நான் அறிவிப்பு வழங்கியிருந்தேன்.

    அந்த அறிவிப்பை, கடந்த 19-ந்தேதி பெற்றுக் கொண்டு தாங்கள் அளித்துள்ள, கடந்த 24-ந்தேதியிட்ட பதில் அறிவிப்பு, மின்னஞ்சல் மூலமாகவும், கடந்த 27-ந்தேதி பதிவு அஞ்சல் மூலமாகவும் கிடைக்கப்பெற்றேன். தாங்கள் அளித்துள்ள பதில் அறிவிப்பை, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு 6-ந்தேதி அன்று ஆய்வு செய்து அறிக்கை அளித்தது.

    பதில் அறிவிப்பில் குற்றச்சாட்டுக்களை நீங்கள் மறுக்கவில்லை. குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமும் அளிக்கவில்லை. தாங்கள் அளித்துள்ள பதில் அறிவிப்பு ஒழுங்கு நடவடிக்கைகளை கைவிட முகாந்திரமாக இல்லை. தங்கள் மீதுள்ள குற்றச்சாட்டுகளுக்கான பதில் முற்றிலும் ஏற்கத்தக்கது அல்ல. தங்கள் மீதுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளும் உறுதி செய்யப்படுகிறது. கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை குறிக்கோள், நன்மதிப்பு, ஒற்றுமை ஆகியவற்றிற்கு கேடு விளைவிக்கும் வகையில், பொது வெளியில் கட்சிக்கும், தலைமைக்கும் எதிராக செயல்பட்டு, கழக சட்ட திட்டங்கள் விதி-35 பிரிவு 2-ன் படி, கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றம் புரிந்து, கழக சட்ட திட்டங்கள் விதி-35 பிரிவு 6-ன் படி, ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு உள்ளாகி துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்தும், கழகத்தின் அடிப்படை உறுப்பினர் தகுதியில் இருந்தும் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டு இருக்கும் தங்களை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின், சட்ட திட்டங்கள் படி துணைப் பொதுச் செயலாளர் உள்ளிட்ட கழகத்தின் அடிப்படை உறுப்பினர் என்ற தகுதியில் இருந்து நிரந்தரமாக நீக்கி அறிவிக்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    இந்நிலையில் என் மீதான நடவடிக்கை எதிர்பார்த்த ஒன்றுதான் என மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா விளக்கம் அளித்துள்ளார். மேலும் தனது மகன் குறித்தே வைகோ சிந்திக்கிறார். ஒரு தலைவராக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தோற்றுவிட்டார். ஜனநாயகப் படுகொலை செய்துள்ளார் எனவும் மல்லை சத்யா கூறினார். 

    • மக்களிடம் தே.மு.தி.க.விற்கு எழுச்சி மிகுந்த வரவேற்பு கிடைக்கிறது.
    • தே.மு.தி.க.வுக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது.

    திருவாரூர்:

    "உள்ளம் தேடி இல்லம் நாடி" என்ற பெயரில் தே.மு.தி.க. பிரசாரத்தை கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தொடங்கி உள்ளார்.

    இந்த பிரசாரத்தின் ஒரு பகுதியாக விஜயகாந்த் நினைவாக கேப்டன் ரதயாத்திரை நடைபெற்று வருகிறது. அதன்படி  திருவாரூரில் பிரேமலதா விஜயகாந்த் பிரசார பயணம் மேற்கொண்டார்.

    அப்போது அவர் பழைய பஸ் நிலையத்தில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் அவர் ரோடுஷோ மேற்கொண்டார். இதில் அவர் கடைவீதி, நேதாஜி ரோடு, கீழவீதி வரை நடந்து சென்றார். அவருக்கு வழி நெடுகிலும் தே.மு.தி.க. தொண்டர்கள், பெண்கள் திரண்டு வந்து வரவேற்பு அளித்தனர்.

    மேலும் பெண்கள் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். மேலும் முரசை அடித்து தொண்டர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தினார்.

    அதனைத்தொடர்ந்து அவர் அங்கு கூடியிருந்து பொதுமக்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளுக்கும் நேரடியாக சென்று கொண்டிருக்கிறோம்.

    அங்கெல்லாம் மக்களிடம் தே.மு.தி.க.விற்கு எழுச்சி மிகுந்த வரவேற்பு கிடைக்கிறது.

    வருகிற 2026-ம் ஆண்டு தே.மு.தி.க.விற்கான காலம். அப்போது நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. கூட்டணி மகத்தான வெற்றி பெறும். நீங்கள் விரும்பும் கூட்டணியை அமைத்து வெற்றி பெறுவோம்.

    கேப்டன் விஜயகாந்த் நம்முடன் தான் இருக்கிறார். நம்முடைய உணர்விலும், உள்ளத்திலும் என்றும் இருக்கிறார். அவரது சொத்து தமிழக மக்கள் தான். சந்திரகிரகணம் இன்று இரவு (அதாவது நேற்று) பிடிக்கிறது என்கிறார்கள்.

    அதுபோல் அரசியலில் யார் யாருக்கு கிரகணம் பிடிக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    தே.மு.தி.க.வுக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது. 2026-ல் தே.மு.தி.க. யாருடன் கூட்டணி வைக்கிறதோ அவர்கள் தான் தமிழகத்தில் ஆட்சி அமைப்பார்கள்.

    வருகிற ஜனவரி மாதம் 9-ந் தேதி கடலூரில் நடைபெற உள்ள தே.மு.தி.க. மாநாட்டில் தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

    திருவாரூருக்கு நான் வந்தவுடன் பொதுமக்கள் நேரடியாக என்னிடம் வந்து ரோடு வசதி இல்லை, ரெயில் வசதி இல்லை, படித்த இளைஞர்களுக்கு வேலை இல்லை என குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.

    இவையெல்லாம் 2026-ல் களையப்படும். இன்றிலிருந்து தே.மு.தி.க.வின் 2.0 கவுண்ட்டவுன் ஆரம்பித்து விட்டது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கிரகணம் நேரம் முடியும் வரை உலக்கை செங்குத்தாக நின்றது.
    • இன்று காலையில் நடை திறக்கப்பட்டு பரிகார பூஜைகள் செய்த பின் வழிபாடு நடத்தப்பட்டன.

    திண்டுக்கல்:

    இந்த ஆண்டின் கடைசி சந்திரகிரகணம் நேற்று இரவு தென்பட்டது. பூமி, சந்திரன், சூரியன் ஆகிய 3 கோள்களும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் இந்த நிகழ்வு நேற்று இரவு 9.57 மணிக்கு தொடங்கி நள்ளிரவு வரை தென்பட்டது. பல்வேறு இடங்களில் இதனை தொலைநோக்கிகள் மூலம் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

    கொடைக்கானலில் உள்ள வான் இயற்பியல் மையத்தில் சந்திரகிரகணத்தை பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் கடும் பனிமூட்டம் காரணமாக தென்படவில்லை. இதனால் அங்கு திரண்டிருந்த மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    திண்டுக்கல் மற்றும் வடமதுரை, அய்யலூர், எரியோடு உள்ளிட்ட பகுதிகளில் கிரகணத்தை முன்னிட்டு அரிய நிகழ்வை காண பொதுமக்கள் திரண்டனர். ஆனால் லேசான சாரல் மழை பெய்ததால் கிரகணம் தென்படவில்லை.

    பொதுவாக கிரகணம் ஏற்படும் சமயங்களில் உலக்கையை எந்தவித பிடிமானமும் இல்லாமல் நிறுத்தி சோதனை செய்வது வாடிக்கை. இதேபோல் திண்டுக்கல் நாகல்புதூர் 3-வது தெருவில் நாகரத்தினம் (73) என்ற மூதாட்டி கடந்த பல ஆண்டுகளாகவே இதனை பொதுமக்களிடம் செய்து காட்டி வருகிறார். அதேபோல் நேற்று இரவும் கிரகண நேரத்தில் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளை வரவழைத்து உலக்கையை நிறுத்தி செய்து காட்டினார். கிரகணம் நேரம் முடியும் வரை அந்த உலக்கை செங்குத்தாக நின்றது.

    இதேபோல் எரியோடு அருகே உள்ள ஒரு விவசாயி தனது வீட்டில் உலக்கையை செங்குத்தாக நிறுத்தி வைத்து அப்பகுதி மக்களிடம் கிரகணத்தை உறுதி செய்தார். கிரகணத்தை வானில் பார்க்க முடியவில்லை என்றாலும் அதனை இவ்வாறாக உணர்ந்த பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் வியப்படைந்தனர்.

    கிரகணத்தை முன்னிட்டு பழனி தண்டாயுதபாணி சுவாமி, திண்டுக்கல் அபிராமி அம்மன், சவுந்தரராஜபெருமாள், நத்தம் மாரியம்மன் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற கோவில்கள் அனைத்தும் நேற்று மாலை மூடப்பட்டன. இன்று காலையில் நடை திறக்கப்பட்டு பரிகார பூஜைகள் செய்த பின் வழிபாடு நடத்தப்பட்டன.

    • மல்லை சத்யாவுக்கும், வைகோ மற்றும் துரை வைகோவுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.
    • மக்கள் மன்றத்தில் நீதி கேட்டு சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தை மல்லை சத்யா நடத்தினார்.

    ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளராக இருந்து வரக்கூடிய மல்லை சத்யாவுக்கும், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் முதன்மை செயலாளர் துரை வைகோவுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.

    சமீபத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்ததை போன்று, தன்னுடன் பல போராட்டங்களில் பங்கேற்ற மல்லை சத்யா தனக்கு துரோகம் செய்து விட்டதாக குற்றம்சாட்டினார்.

    இதற்கு பதில் அளித்திருந்த மல்லை சத்யா, தன்னை துரோகி என்று அழைத்ததற்கு பதில், தனக்கு விஷம் கொடுத்திருந்தால், அதை குடித்துவிட்டு இறந்து போயிருப்பேன் என கூறியிருந்தார்.

    இதையடுத்து, மக்கள் மன்றத்தில் நீதி கேட்டு சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தையும் மல்லை சத்யா நடத்தினார்.

    இந்த நிலையில், கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்கும் வகையில் செயல்பட்டதாக கூறி ம.தி.மு.க.வில் இருந்து தற்காலிகமாக மல்லை சத்யாவை நீக்கி வைகோ அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் ம.தி.மு.க. உடமைகள், ஏடுகள் அனைத்தையும் ஒப்படைக்கக் கூறி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

    முன்னதாக ம.தி.மு.க.வில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட நிலையில் தற்போது மல்லை சத்யா நிரந்தரமாக நீக்கப்பட்டதாக வைகோ அறிவித்துள்ளார்.

    • ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்க விதிக்கப்பட்ட தடை 9-வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • தற்போது நீர்வரத்து குறைந்துள்ளதால் பரிசல் இயக்க மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    பென்னாகரம்:

    தென்மேற்கு பருவமழை காரணமாக கேரள, கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக அணைகளில் திறந்து விடப்படும் உபரிநீர் வெளியேற்றம் அளவு கூடுவதும், குறைவதுமாக உள்ளது.

    இந்த நிலையில் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 28 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து குறைந்து நேற்று காலை மேலும் குறைந்து வினாடிக்கு 20 ஆயிரம் கன அடியாக குறைந்தது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 18 ஆயிரம் கன அடியாக குறைந்தது.

    இருப்பினும் ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி போன்ற அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்க தடை 9-வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

    தற்போது நீர்வரத்து குறைந்துள்ளதால் பரிசல் இயக்க மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    • கடந்த வாரம் இதுவரை இல்லாத வகையில் வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டு சவரன் ரூ.80 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது.
    • வெள்ளி விலையும் குறைந்துள்ளது.

    சென்னை:

    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. விலை மாற்றம் இல்லாத நாட்களே இல்லை என்ற வகையில் ஏறுவதும், இறங்குவதுமாக தங்கம் இருந்து வருகிறது. இதனிடையே கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்த வண்ணமே காணப்படுகிறது. இதனை தொடர்ந்து கடந்த வாரம் இதுவரை இல்லாத வகையில் வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டு சவரன் ரூ.80 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது.

    இந்நிலையில், வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 35 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,970-க்கும் சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.79,760-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 137 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 37ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    07-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 80,040

    06-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 80,040

    05-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.78,920

    04-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.78,360

    03-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.78,440

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    07-09-2025- ஒரு கிராம் ரூ.138

    06-09-2025- ஒரு கிராம் ரூ.138

    05-09-2025- ஒரு கிராம் ரூ.136

    04-09-2025- ஒரு கிராம் ரூ.137

    03-09-2025- ஒரு கிராம் ரூ.137

    • பல வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்யவே விரும்புகின்றனர்.
    • தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா துடிப்பானவர் என்பதை நிரூபித்துள்ளார்.

    சென்னை:

    ஜெர்மனி, இங்கிலாந்து பயணங்களை முடித்துக்கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தாயகம் திரும்பினார். அவரை அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் திரண்டு வரவேற்றனர். இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    * ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளில் முதலீடுகளை ஈர்த்து மன நிறைவுடன் திரும்பி இருக்கிறேன். வெற்றிப்பயணத்தால் மனநிறைவு ஏற்பட்டுள்ளது.

    * தமிழ்நாட்டின் மீது நம்பிக்கை வைத்து நிறுவனங்கள் முதலீடுகள் செய்துள்ளன.

    * இதுவரை சென்ற பயணங்களிலேயே முத்தாய்ப்பான பயணம் இது.

    * பல வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்யவே விரும்புகின்றனர்.

    * தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா துடிப்பானவர் என்பதை நிரூபித்துள்ளார்.

    * முதலீடுகளை ஈர்ப்பதற்கான எனது வெற்றிப்பயணத்தை பொறுக்க முடியாமல் சிலர் புலம்பி வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முதலீடுகளை ஈர்ப்பதற்காக கடந்த மாதம் 30-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு புறப்பட்டு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    ×