என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சந்திரகிரகணத்தில் பிடிமானம் இல்லாமல் உலக்கையை நிறுத்தி சோதனை: கோவில்களில் பரிகார பூஜை
    X

    சந்திரகிரகணத்தில் பிடிமானம் இல்லாமல் உலக்கையை நிறுத்தி சோதனை: கோவில்களில் பரிகார பூஜை

    • கிரகணம் நேரம் முடியும் வரை உலக்கை செங்குத்தாக நின்றது.
    • இன்று காலையில் நடை திறக்கப்பட்டு பரிகார பூஜைகள் செய்த பின் வழிபாடு நடத்தப்பட்டன.

    திண்டுக்கல்:

    இந்த ஆண்டின் கடைசி சந்திரகிரகணம் நேற்று இரவு தென்பட்டது. பூமி, சந்திரன், சூரியன் ஆகிய 3 கோள்களும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் இந்த நிகழ்வு நேற்று இரவு 9.57 மணிக்கு தொடங்கி நள்ளிரவு வரை தென்பட்டது. பல்வேறு இடங்களில் இதனை தொலைநோக்கிகள் மூலம் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

    கொடைக்கானலில் உள்ள வான் இயற்பியல் மையத்தில் சந்திரகிரகணத்தை பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் கடும் பனிமூட்டம் காரணமாக தென்படவில்லை. இதனால் அங்கு திரண்டிருந்த மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    திண்டுக்கல் மற்றும் வடமதுரை, அய்யலூர், எரியோடு உள்ளிட்ட பகுதிகளில் கிரகணத்தை முன்னிட்டு அரிய நிகழ்வை காண பொதுமக்கள் திரண்டனர். ஆனால் லேசான சாரல் மழை பெய்ததால் கிரகணம் தென்படவில்லை.

    பொதுவாக கிரகணம் ஏற்படும் சமயங்களில் உலக்கையை எந்தவித பிடிமானமும் இல்லாமல் நிறுத்தி சோதனை செய்வது வாடிக்கை. இதேபோல் திண்டுக்கல் நாகல்புதூர் 3-வது தெருவில் நாகரத்தினம் (73) என்ற மூதாட்டி கடந்த பல ஆண்டுகளாகவே இதனை பொதுமக்களிடம் செய்து காட்டி வருகிறார். அதேபோல் நேற்று இரவும் கிரகண நேரத்தில் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளை வரவழைத்து உலக்கையை நிறுத்தி செய்து காட்டினார். கிரகணம் நேரம் முடியும் வரை அந்த உலக்கை செங்குத்தாக நின்றது.

    இதேபோல் எரியோடு அருகே உள்ள ஒரு விவசாயி தனது வீட்டில் உலக்கையை செங்குத்தாக நிறுத்தி வைத்து அப்பகுதி மக்களிடம் கிரகணத்தை உறுதி செய்தார். கிரகணத்தை வானில் பார்க்க முடியவில்லை என்றாலும் அதனை இவ்வாறாக உணர்ந்த பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் வியப்படைந்தனர்.

    கிரகணத்தை முன்னிட்டு பழனி தண்டாயுதபாணி சுவாமி, திண்டுக்கல் அபிராமி அம்மன், சவுந்தரராஜபெருமாள், நத்தம் மாரியம்மன் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற கோவில்கள் அனைத்தும் நேற்று மாலை மூடப்பட்டன. இன்று காலையில் நடை திறக்கப்பட்டு பரிகார பூஜைகள் செய்த பின் வழிபாடு நடத்தப்பட்டன.

    Next Story
    ×