என் மலர்
உள்ளூர் செய்திகள்
- ஆதி திராவிடர், பழங்குடியினர் பிரிவைச் சார்ந்த குறு, சிறு விவசாயிகளுக்கு 20 சதவீத கூடுதல் மானியத்துக்காக ரூ.18 கோடி ஒதுக்கப்படும்.
- தென்னந்தோப்புகளில் வாழையும், நன்கு வளர்ந்த தென்னந்தோப்புகளில் ஜாதிக்காயும் ஊடுபயிராகப் பயிரிட 5 கோடியே 70 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
சென்னை:
தமிழக சட்டசபையில் இன்று 2024-25ம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் விபரம் வருமாறு:
ஊட்டச்சத்து மிகுந்த சோளம், கம்பு, கேழ்வரகு போன்ற சிறுதானியங்கள் வரகு, பனிவரகு, குதிரைவாலி, சாமை, தினை போன்ற குறுதானியங்கள் ஆகியவற்றின் சாகுபடிப் பரப்பு, உற்பத்தி, உற்பத்தித்திறனை அதிகரிக்கும் நோக்கத்தில் தமிழ்நாடு அரசால், 25 மாவட்டங்களைக் கொண்டு ஏற்கனவே இரண்டு சிறுதானிய மண்டலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
2023-2024-ஆம் ஆண்டு முதல் 2027-2028-ஆம் ஆண்டு வரையிலான ஐந்து ஆண்டுகளுக்கு தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் இரண்டு மண்டலங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் 2024-2025-ஆம் ஆண்டிலும் 65 கோடியே 30 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
மாநில அளவில் சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணைய் வித்துகள், கரும்பு பயிர்களில் அதிக உற்பத்தியைப் பெறும் முதல் மூன்று விவசாயிகளுக்கு முதல் பரிசாக 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசாக ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய், மூன்றாம் பரிசாக ஒரு லட்சம் ரூபாய் என 33 பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 2024-2025-ம் ஆண்டிலும் இத்திட்டத்திற்காக 55 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
2023-2024-ம் ஆண்டு முதல், தமிழ்நாடு அரசால் உயிர்ம வேளாண்மையில் ஈடுபடும் சிறந்த விவசாயிகளுக்குச் சிறந்த உயிர்ம விவசாயிக்கான "நம்மாழ்வார் விருது" வழங்கப்பட்டு வருகிறது. 2024-2025-ம் ஆண்டிலும் உயிர்ம விவசாயிகளைக் கௌரவிக்கும் வகையில், பாராட்டுப் பத்திரத்துடன் பணப்பரிசும் முதல் மூன்று விவசாயிகளுக்கு வழங்கப்படும். இதற்கென 5 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
ஆதி திராவிடர், பழங்குடியினர் பிரிவைச் சார்ந்த குறு, சிறு விவசாயிகளுக்கு 20 சதவீத கூடுதல் மானியத்துக்காக ரூ.18 கோடி ஒதுக்கப்படும்.
2024-2025-ம் ஆண்டில், பலன் தரும் பருத்தி சாகுபடித் திட்டம் 14 கோடியே 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும். இதனால், பருத்தி உற்பத்தி தமிழ்நாட்டில் 5 லட்சத்து 50 ஆயிரம் பேல்களாக உயரும்.
பயிர் காப்பீட்டு திட்டத்தில் 2023-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17, 18-ந்தேதிகளில் பெய்த கனமழையால் அதிகம் பாதிப்படைந்த தூத்துக்குடி மாவட்டத்தில், மழையால் ஏற்பட்ட பயிர் சேதத்திற்காக 14 கோடியே 55 இலட்சம் ரூபாய், 9,988 விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக உடனடியாக வழங்கப்பட்டது. 2024-2025-ம் ஆண்டில் இத்திட்டத்தைச் செயல்படுத்த 1,775 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
தென்னந்தோப்புகளில் வாழையும், நன்கு வளர்ந்த தென்னந்தோப்புகளில் ஜாதிக்காயும் ஊடுபயிராகப் பயிரிட 5 கோடியே 70 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
2024-2025-ம் ஆண்டில் 2 லட்சத்து 22 ஆயிரம் ஏக்கர் பரப்பில் ஒரு லட்சம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் 232 கோடியே 50-லட்சம் ரூபாய் ஒன்றிய நிதியுடன், 54 கோடியே 73 லட்சம் ரூபாய் மாநில நிதியை ஒருங்கிணைத்து 773 கோடியே 23 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நுண்ணீர்ப் பாசன அமைப்புகள் நிறுவப்படும.
தோட்டக்கலைப் பயிர்களில் எந்திரங்களின் பயன்பாடு மிகவும் இன்றியமையாததாக உள்ள நிலையில் நிலம் சீர் செய்தல் முதல் அறுவடை பின்செய் மேலாண்மை வரையில் பயன்படுத்தப்படும் கருவிள், எந்திரங்கள் ஆகியவை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திட, கண்காட்சி ன்று நடத்தப்படும். இதனால் விவசாயிகள், தோட்டக்கலை தொழில் முனைவோர்கள், அலுவலர்கள் ஆகியோர் பயன் அடைவர். இக்கண்காட்சி 10 கோடி ரூபாய் செலவில் ஒன்றிய, மாநில நிதியில் நடத்தப்படும்.
இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
- உழைக்கும் மக்களுக்கு 10% இட ஒதுக்கீடு.
- கடமையை செய்யத் தவறுகிறது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்.
சென்னை :
பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
சமூக நீதி : இங்கில்லை.... அங்கே!
உழைக்கும் மக்களுக்கு 10% இட ஒதுக்கீடு.
தமிழ்நாட்டில் இல்லை, மகாராஷ்டிராவில்.
உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட மராத்தா இட ஒதுக்கீட்டை மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரையுடன் மீண்டும் கொண்டு வருகிறது மகாராஷ்டிரா அரசு.
அதற்காக அம்மாநில சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று கூட்டப்பட்டு, இட ஒதுக்கீட்டு சட்டம் நிறைவேற்றப்படுகிறது. இது தான் சமூகநீதி
ஆனால், உச்சநீதிமன்றமே வழங்க வலியுறுத்தியும் வன்னியர் 10.50% இட ஒதுக்கீட்டை வழங்க மறுக்கிறது தமிழக அரசு; கடமையை செய்யத் தவறுகிறது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்.
இப்போது சொல்லுங்கள்....
இங்குள்ளவர்களுக்கு சமூகநீதி குறித்து பேச தகுதி உள்ளதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
சமூக நீதி : இங்கில்லை.... அங்கே!
— Dr S RAMADOSS (@drramadoss) February 20, 2024
உழைக்கும் மக்களுக்கு 10% இட ஒதுக்கீடு.
தமிழ்நாட்டில் இல்லை, மராட்டியத்தில்.
உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட மராத்தா இட ஒதுக்கீட்டை மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரையுடன் மீண்டும் கொண்டு வருகிறது மராட்டிய அரசு.
அதற்காக…
- வேளாண் பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்கும் திட்டங்கள் பட்ஜெட்டில் இல்லை.
- அறுவடை கரும்புக்கு நிதி பெற முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.
சென்னை:
தமிழக சட்டசபை வளாகத்தில் பாரதிய ஜனதா சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* வேளாண் பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லை.
* வேளாண் பட்ஜெட்டில் 60 சதவீதம் திட்டங்கள் மத்திய, மாநில அரசு பங்களிப்பு என அறிவிப்பு.
* வேளாண் பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்கும் திட்டங்கள் பட்ஜெட்டில் இல்லை.
* தமிழ்நாட்டின் வேளாண் நிதிநிலை அறிக்கை ஏமாற்றம் அளிக்கிறது.
* அறுவடை கரும்புக்கு நிதி பெற முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.
* வேளாண் பட்ஜெட்டில் தென்னை விவசாயிகளுக்கு எந்த அறிவிப்பும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- ராமேசுவரத்தில் உள்ள மீன்பிடி துறைமுகம் மற்றும் மீன்வளத்துறை அலுவலகத்தில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக புறப்பட்டனர்.
- மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சதீஷ் தலைமையில் ஏராளமான போலீசார் அந்தப்பகுதியில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 4-ந்தேதி ஏராளமான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அப்போது ராமேசுவரத்தை சேர்ந்த 23 மீனவர்களையும், 2 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களை இலங்கைக்கு கொண்டு சென்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்தனர்.
இந்த நிலையில் கடந்த வாரத்தில் 20 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். அதில் 2 படகு ஓட்டுநர்களுக்கு 6 மாத சிறை தண்டனையும், 2-வது முறையாக கைது செய்யப்பட்ட மீனவர் ஒருவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும் இலங்கை நீதிமன்றம் வழங்கியது. இதனை கண்டித்து இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தியும், அவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 3-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்திலும் படகுகளில் கறுப்பு கொடி கட்டியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி கச்சத்தீவு, புனித அந்தோணியார் ஆலய திருவிழா புறக்கணிப்பு போராட்டத்திலும் இன்று (செவ்வாய்க்கிழமை) ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர். மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தை நோக்கி பேரணியில் ஈடுபடப்போவதாகவும் அறிவித்திருந்தனர்.
இதையொட்டி இன்று காலை ஏராளமான மீனவர்களும், சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களின் உறவினர்களும் மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக புறப்பட்டனர். ராமேசுவரத்தில் உள்ள மீன்பிடி துறைமுகம் மற்றும் மீன்வளத்துறை அலுவலகத்தில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக புறப்பட்டனர். மத்திய-மாநில அரசுகள் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை விரைந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மீனவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சதீஷ் தலைமையில் ஏராளமான போலீசார் அந்தப்பகுதியில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. துணை சூப்பிரண்டு உமாதேவி உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மீனவர்களின் பேரணி காரணமாக ராமேசுவரம், ராமநாதபுரம் பகுதிகளில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.
- 5 மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் தேர்தல் நிதியாக சுமார் ரூ. 2½ கோடி வழங்கினர்.
- பல்வேறு சிறப்பு அம்சத்துடன் கூடிய தமிழக பட்ஜெட்டை ம.தி.மு.க வரவேற்கிறது.
நெல்லை:
ம.தி.மு.க. நெல்லை மண்டலம் சார்பில் தேர்தல் நிதி மற்றும் கட்சி வளர்ச்சி நிதி வழங்கும் நிகழ்ச்சி நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் மஹாலில் இன்று நடைபெற்றது.
இதில் ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளிடம் இருந்து தேர்தல் நிதியினை பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி உள்ளிட்ட 5 மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் தேர்தல் நிதியாக சுமார் ரூ. 2½ கோடி வழங்கினர்.
நெல்லை மத்திய மாவட்டம் சார்பில் மட்டும் ரூ.35 லட்சம் நிதியாக வழங்கப்பட்டது. இதில் துணை பொதுச்செயலாளர் தி.மு.ராஜேந்திரன், மாவட்ட செயலாளர்கள் கே.எம்.ஏ. நிஜாம், புதுக்கோட்டை செல்வம், ஆர்.எஸ். ரமேஷ், சுதா பாலசுப்பிரமணியன், ராம.உதயசூரியன், வக்கீல் வெற்றிவேல், ரவிச்சந்திரன், வேல்முருகன், கண்ணன், பகுதி செயலாளர் பொன் வெங்கடேஷ், அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் கல்லத்தியான், செய்தி தொடர்பாளர் மின்னல் முகமது அலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் சமூக நீதி மற்றும் சமத்துவத்தை நிலை நாட்ட சிறப்பான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் முழுமையாக வறுமையை ஒழிக்க தாயுமானவர் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. குடிசை இல்லா தமிழகம் என்ற திட்டத்தை நிறைவேற்ற கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் அமைக்க நடவடிக்கைகள் எடுக்க அரசு நிதி ஒதுக்கி உள்ளது.
தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை உருவாக்குவதுடன் வேலை வாய்ப்பு உருவாக்க பல ஜவுளி பூங்காக்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு சிறப்பு அம்சத்துடன் கூடிய தமிழக பட்ஜெட்டை ம.தி.மு.க வரவேற்கிறது. மாற்றான் தாய் மனப் பான்மையுடன் மத்திய அரசு தமிழகத்தை நடத்தி வருகிறது. கடுமையான நிதி நெருக்கடி, மத்திய அரசின் குறுக்கீட்டை கடந்து தமிழக பட்ஜெட் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு போதுமான நிதியை ஒதுக்காத காரணத்தால் மாநில அரசே நிதி ஒதுக்கி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
தமிழகத்திற்கு பெரிய நிதி நெருக்கடி உள்ளது. மழை வெள்ளத்தால் தமிழகத்திற்கு ரூ. 37 ஆயிரம் கோடி நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மின்வாரியம் கடுமையான நஷ்டத்தில் இயங்குகிறது. கடந்த ஆண்டு மட்டும் 17 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தை தமிழக அரசு தான் செலுத்தி உள்ளது.
எதிர்கட்சிகளை தவிர அனைவரும் இந்த பட்ஜெட்டை பாராட்டுகின்றனர். மழை வெள்ள பாதிப்பு, ஜி.எஸ்.டி. வரி வருவாய் இழப்பு, நிலுவை தொகை வராதது போன்றவையே தமிழகத்தின் வருவாய் குறைய காரணம். நிதி பற்றாக்குறை தமிழகத்தில் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.
தமிழக அரசு, முதலமைச்சரின் சிறப்பான செயல்பாட்டால் தமிழகத்தில் உள்ள 39 தொகுதியிலும் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்.
விருதுநகர் தொகுதி, திருச்சி மையப்படுத்திய தொகுதி, சென்னையை மையப்படுத்திய தொகுதி, ஈரோட்டை மையப்படுத்திய தொகுதி என 4 பாராளுமன்ற தொகுதியில் ம.தி.மு.க. போட்டியிட வேண்டும் என தொண்டர்கள் விரும்புகிறார்கள்.
எண்ணிக்கை முடிவான பின்னர் தொகுதி குறித்து ம.தி.மு.க. அறிவிக்கும். விருதுநகர் தொகுதியில் நான் (துரை வைகோ) போட்டியிட வேண்டும் என்பது ம.தி.மு.க. தொண்டர்களது விருப்பம்.
கூட்டணி தலைவர்கள் எடுக்கும் முடிவை பொறுத்து வேட்பாளர் அறிவிப்பு இருக்கும். இந்த முறை எங்களது பம்பரம் சின்னத்தில் போட்டியிட தி.மு.க. தலைமையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பகல் நேரங்களில் வெளியே செல்பவர்கள் குளிர்பான கடைகளில் பழஜூஸ், மோர் உள்ளிட்டவற்றை பருகி தாகம் தீர்த்து வருகிறார்கள்.
- தினந்தோறும் 20க்கும் மேற்பட்ட லாரிகளில் சுமார் 200டன் அளவுக்கு தர்பூசணி பழங்கள் விற்பனைக்கு குவிந்து வருகிறது.
போரூர்:
தமிழகத்தில் தற்போது பனி சீசன் முடிந்து கடந்த சில நாட்களாகவே கோடை வெயிலின் தாக்கம் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெயில் வாட்டி எடுக்க தொடங்கி விட்டது. இதனால் சாலை ஓரங்களில் நீர் மோர், இளநீர், கரும்புச்சாறு, பழச்சாறு, நுங்கு, தர்பூசணி பழங்கள் விற்பனை அதிக அளவில் முளைத்து உள்ளன.
பகல்நே ரங்களில் வெளியே செல்பவர்கள் குளிர்பான கடைகளில் பழஜூஸ், மோர் உள்ளிட்டவற்றை பருகி தாகம் தீர்த்து வருகிறார்கள். தொடர்ந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்பதால் சாலையோர குளிர்பான கடைகளில் விற்பனை ஜோராக நடந்து வருகிறது.
மேலும் சாலையோரங்களில் ஆங்காங்கே தற்போது வெயிலுக்கு இதமான தர்பூசணி விற்பனையும் அதிகரித்து உள்ளன. குவித்து வைத்து விற்கப்படும் தர்பூசணியை முழுபழங்களாகவும் வீடுகளுக்கு அதிக அளவில் வாங்கி செல்வதை காணமுடிகிறது.
இந்த நிலையில் கோயம்பேடு பழ மார்க்கெட்டுக்கு தர்பூசணி வரத்து அதிகரித்து உள்ளது. கடந்த 10 நாட்களாகவே செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், மதுரை ஆகிய மாவட்டங்களில் இருந்து தர்பூசணி பழங்கள் அதிகளவில் விற்பனைக்கு குவியத் தொடங்கி உள்ளன.
தற்போது தினந்தோறும் 20க்கும் மேற்பட்ட லாரிகளில் சுமார் 200டன் அளவுக்கு தர்பூசணி பழங்கள் விற்பனைக்கு குவிந்து வருகிறது. மொத்த விற்பனையில் தர்பூசணி ஒரு கிலோ ரூ.18-க்கு விற்கப்படுகிறது.
வெளி மார்கெட்டில் உள்ள கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட் கடைகளில் ஒரு கிலோ தர்பூசணி ரூ.25 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்படுகிறது.
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் இனி வரும் நாட்களில் தர்பூசணி பழங்களின் வரத்து மேலும் அதிகரித்து விற்பனை சூடு பிடிக்கும் என்று பழ வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.
- விஜயன் என்கிற ஆண் வங்கப்புலிக்கு கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது.
- மருத்துவ குழுவினரால் வங்கப்புலிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
வண்டலூர்:
வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள், விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பூங்காவில் உள்ள 21 வயது உடைய விஜயன் என்கிற ஆண் வங்கப்புலிக்கு கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது. அது உணவு உண்பதை குறைத்து சோர்வாக காணப்படுகிறது.
இதை த்தொடர்ந்து வங்கப்பு புலியின் உடல்நிலையை பூங்காவில் உள்ள மருத்துவ குழு வினர் கண்காணித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது தொடர்பாக வண்டலூர் பூங்கா நிர்வாகம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
பூங்காவில் பராமரிக்கப் பட்டு வரும், விஜயன் என்கிற 21 வயது ஆண் வங்கப்புலியானது கடந்த மாதம் 24-ந்தேதி முதல் உணவு உட்கொள்ளு தலைக் குறைத்துக் கொண்டது. இதன் காரணமாக படிப்படியாக அதன் உடல்நிலை சரியில்லாமல் போனது. புலியின் ரத்தத்தை மதிப்பீடு செய்ததில் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் பாதிப்புகளுக்குள்ளானது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தின் ஆலோசனையுடன் வங்கப்புலிக்கு சிகிச்சை தொடங்கப்பட்டது. இருப்பினும் வயிறு இறக்கம் ஏற்பட்டு சோர்வாக காணப்படுகிறது. மேலும் பூங்கா மருத்துவ குழுவினரால் வங்கப்புலிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- அடுத்த ஆறு நாட்களில் 6 எய்ம்ஸ் மருத்துவமனைகளை திறந்து வைக்கிறார் பிரதமர்.
- குஜராத், ஆந்திரா, பஞ்சாப், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளை திறந்து வைக்க உள்ளார்.
சென்னை:
பிரதமர் நரேந்திர மோடி இன்று மற்றும் 25-ந்தேதி கட்டி முடிக்கப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளை திறந்து வைக்கிறார். அதாவது இன்று ஜம்முவில் நடைபெறும் விழாவில் சம்பா மாவட்டத்தில் கட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனையை திறந்து வைக்கிறார்.
இதனை தொடர்ந்து வருகி 25-ந்தேதி குஜராத், ஆந்திரா, பஞ்சாப், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளை திறந்து வைக்க உள்ளார்.
இந்நிலையில் மதுரை பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
அடுத்த ஆறு நாட்களில் 6 எய்ம்ஸ் மருத்துவமனைகளை திறந்து வைக்கிறார் பிரதமர் .
ஒரே அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்ட அனைத்து எய்ம்ஸ்களும் திறக்கப்பட்டு விட்டன மதுரையைத் தவிர .
தமிழ்நாட்டிற்கு நீங்கள் தருவது தப்புத் தப்பாய் உச்சரிக்கும் திருக்குறள் மட்டும் தானா? என சில புகைப்படங்களையும் வெளியிட்டு கேள்வி எழுப்பியுள்ளார்.
அடுத்த ஆறு நாட்களில் 6 எய்ம்ஸ் மருத்துவமனைகளை திறந்து வைக்கிறார் பிரதமர் .
— Su Venkatesan MP (@SuVe4Madurai) February 20, 2024
ஒரே அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்ட அனைத்து எய்ம்ஸ்களும் திறக்கப்பட்டு விட்டன மதுரையைத் தவிர .
தமிழ்நாட்டிற்கு நீங்கள் தருவது தப்புத் தப்பாய் உச்சரிக்கும் திருக்குறள் மட்டும் தானா ?#AIIMS… pic.twitter.com/lMgUa96as5
- உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்து வசதிகள், ஹெலிபேட் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை செய்வதற்காக ஆயத்தப்பணிகள் வேகமாக முடுக்கி விடப்பட்டுள்ளது.
- அரசியல் மாநாடாக மட்டும் அல்லாது தமிழகத்திற்கு பல்வேறு சலுகைகளை அறிவிக்கின்ற அரசு நிகழ்ச்சியாகவும் இருக்க வாய்ப்பு உள்ளது.
பல்லடம்:
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' என்ற பெயரில் நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். இந்த பாதயாத்திரை இந்த மாதம் நிறைவடைய உள்ளது. என் மண், என் மக்கள் பாதயாத்திரை நிறைவு விழாவை பாராளுமன்ற தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டமாக நடத்த பா.ஜனதா கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.
அந்த வகையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலை எதிரே 1000 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு வருகிற 27-ந்தேதி பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசுகிறார். இதையடுத்து கூட்டத்திற்கான ஏற்பாடு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இது குறித்து பா.ஜனதா மாநில துணை பொதுச்செயலாளரும், பொதுக்கூட்ட பொறுப்பாளருமான ஏ.பி.முருகானந்தம் கூறியதாவது:-
பல்லடத்தில் 27-ந்தேதி நடைபெறும் என் மண், என் மக்கள் நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்வது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் கலந்து கொள்ள உள்ள மாநாட்டிற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அனைத்து உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்து வசதிகள், ஹெலிபேட் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை செய்வதற்காக ஆயத்தப்பணிகள் வேகமாக முடுக்கி விடப்பட்டுள்ளது.
பொதுக்கூட்டத்தில் பா.ஜனதா கட்சியினர் சுமார் 10 லட்சம் பேர், பொதுமக்கள் சுமார் 3 லட்சம் பேர் என 13 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம். 400 ஏக்கர் பரப்பளவில் பொதுக்கூட்ட மைதானமும், வாகனங்கள் நிறுத்த சுமார் 600 ஏக்கர் என ஆயிரம் ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. மதிய உணவு உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட உள்ளது.

பெரிய பொம்மைகளை காட்சிப்படுத்தியும், நோட்டீஸ் வழங்கியும் கல்லூரி மாணவிகளுக்கு அழைப்பு விடுத்த பா.ஜ.க.வினர்.
பல்லடத்தில் பிரதமர் 25-ந் தேதி கலந்து கொள்வார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அன்றைய தினம் பிரதமருக்கு மிகவும் பிடித்த மனதின் குரல் நிகழ்ச்சியில் பேச வேண்டி இருந்ததால் தேதி மாற்றப்பட்டு உள்ளது. மனதின் குரல் நிகழ்ச்சியை குஜராத்திற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் அதிகம் பேர் கேட்டு வருகிறார்கள்.
பா.ஜனதா ஆளும் மாநிலங்களை பின்னுக்குத்தள்ளி தமிழகம் மனதின் குரல் நிகழ்ச்சியை கேட்பதில் மூன்றாவது இடத்தில் இடம் பிடித்துள்ளது. பல்லடத்தில் நடைபெறுகின்ற மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கின்ற போது வெறும் அரசியல் மாநாடாக மட்டும் அல்லாது தமிழகத்திற்கு பல்வேறு சலுகைகளை அறிவிக்கின்ற அரசு நிகழ்ச்சியாகவும் இருக்க வாய்ப்பு உள்ளது. பல்லடத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற பிறகு தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம் ஏற்படும்.
இந்தியா கூட்டணி தற்போது ஒவ்வொரு எழுத்துக்களாக இழந்து வருகிறது. கடைசியாக ஜம்மு காஷ்மீரில் பரூக் அப்துல்லாவுக்கு இந்தியா கூட்டணி மீது நம்பிக்கை இல்லாததால் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறார். தமிழகம் மட்டுமே இந்தியா கூட்டணியை தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறது. அதுவும் மூழ்கக் கூடிய கப்பலாக, எப்போது கரை தட்டி நிற்கும் என தெரியாமல் உள்ளது.பிரதமர் மோடியுடன் பா.ஜனதாவின் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். பா.ஜனதா கட்சியின் வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது. பிரதமர் மோடியை ஏற்றுக்கொள்ளும் யார் வேண்டுமானாலும் பா.ஜனதா கூட்டணிக்கு வரலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு விடுத்து திருப்பூர் மாவட்ட பா.ஜ.க.வினர் துண்டு பிரசுரம் வழங்கி அழைப்பு விடுத்து வருகின்றனர். மேலும் பெரிய பொம்மைகளை காட்சிப்படுத்தியும், வேண்டும் மோடி, மீண்டும் மோடி என்ற வாசகத்துடன் ராட்சத பலூன்களை திருப்பூரில் பறக்கவிட்டுள்ளனர். திருப்பூர் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட வடக்கு, தெற்கு, பல்லடம் ஆகிய தொகுதிகளில் 19 மண்டலங்களில் வாகன பிரசாரம் மூலம் நோட்டீஸ்களை வழங்கி வருகின்றனர். திருப்பூர் குமரன் கல்லூரி மற்றும் ஜெய்வாபாய் பள்ளி அருகே பெரிய பொம்மைகளை காட்சிப்படுத்தி பொதுக்கூட்டம் குறித்து விழிப்புணர்வு நோட்டீஸ்களை கல்லூரி மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கினர்.
- ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 27 கிலோ தங்க, வைர நகைகளில் 7 கிலோ விற்க கோர்ட்டு விலக்கு அளித்து உள்ளது.
- ஜெயலலிதாவுக்கு அவரது தாய் கொடுத்த பாரம்பரிய நகைகள் என்பதால் விலக்கு அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பெங்களூரு:
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 1996-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது. அப்போது ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் நடந்த சோதனையில் தங்க, வைர நகைகள், வெள்ளிப் பொருட்கள், கைக் கடிகாரங்கள் என ஏராளமானவை பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தம் 468 வகையான 27 கிலோ தங்க, வைர நகைகள் மற்றும் 700 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை பெங்களூரு நீதிமன்றத்தில் நடைபெற்றதால் பறிமுதல் செய்யப்பட்ட நகை உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் அங்குள்ள கருவூலத்தில் வைக்கப்பட்டன. சொத்து குவிப்பு வழக்கில் கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சிறப்பு நீதிபதி ஜான் மைக்கேல் டிகுன்ஹா 1136 பக்க தீர்ப்பு வழங்கினார்.
அதில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தார். மேலும் அவர்கள் அனைவருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதில் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும் மற்ற 3 பேருக்கும் தலா ரூ.10 கோடியும் அபராதம் விதித்தார். இதை எதிர்த்து இவர்கள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதில் அனைவரும் விடுவிக்கப்பட்ட நிலையில் சுப்ரீம் கோர்ட்டுக்கு இந்த வழக்கு சென்றது.
கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந் தேதி ஜான் மைக்கேல் டிகுன்ஹாவின் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. ஆனால் அதற்குள் ஜெயலலிதா இறந்து விட்டதால் அவர் மீதான குற்றச்சாட்டுகள் காலாவதியாகி விடும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியது. ஆனாலும் மற்ற 3 பேரும் 4 வருட சிறை தண்டனை அனுபவித்து அபராதம் செலுத்த வேண்டியிருந்தது.
மேலும் சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட ரூ.100 கோடி அபராதத்தை வசூலிக்கும் வகையில் அவரது அசையும் மற்றும் அசையா சொத்துக்களை ஏலம் விட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கோர்ட்டு அறிவித்தது.
இதற்கிடையே, ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விட வேண்டும் எனவும், அதன் மூலம் வரும் பணத்தை நலத் திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும் எனவும் கோரி சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி என்பவர் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, அரசால் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் பொருட்களில் தனக்கு உரிமை உண்டு எனவும், அவற்றை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் மனுதாக்கல் செய்தார். அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
ஜெயலலிதாவுக்கு சொந்தமான பொருட்கள் தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட ரூ.100 கோடியை திரட்டுவதற்காக அவரது சொத்துக்களை விற்க நீதித்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி ஜெயலலிதாவுக்கு சொந்தமான 27 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகளை அடுத்த மாதம் (மார்ச்) 6, 7-ந் தேதிகளில் தமிழக உள்துறை செயலாளரிடம் ஒப்படைக்க பெங்களூரு 36-வது சிட்டி சிவில் நீதிமன்றம் அறிவித்தது.
மேலும் 27 கிலோவில் 20 கிலோ நகைகளை மட்டும் விற்க வேண்டும் என்றும் மீதியுள்ள 7 கிலோ நகைகள் ஜெயலலிதாவுக்கு அவரது தாய் கொடுத்த பாரம்பரிய நகைகள் என்று கருதப்படுவதால் இவற்றுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது என்று அறிவித்தனர். மேலும் ஜெயலலிதா கணக்கு வைத்திருந்த நிறுவனம் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ரூ.59 லட்சத்தை ஒப்படைத்தது. மேலும் ஜெயலலிதாவின் நகைகளை பெற தமிழக உள்துறை செயலாளர் வருமாறு உத்தரவிடப்பட்டு உள்ளது. நகைகளை கொண்டு செல்லும்போது தேவையான பாதுகாப்புடன் வீடியோகிராபர் மற்றும் 6 பெரிய டிரங்க் பெட்டிகளுடன் வரவேண்டும் என்று கூறி உள்ளனர். மேலும் பாதுகாப்புக்காக உள்ளூர் போலீசாரை ஏற்பாடு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி பெங்களூருவில் இருந்து 27 கிலோ தங்கம், வைர நகைகள், 700 கிலோ வெள்ளி நகைகள், 11,344 விலை உயர்ந்த பட்டுப் புடவைகள், 740 விலை உயர்ந்த செருப்புகள் என மொத்தமாக 6 பெட்டகங்களில் உள்ள ஜெயலலிதாவுக்கு சொந்தமான நகைகள் தமிழ்நாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளது. இவற்றின் மதிப்பு பல கோடி இருக்கலாம் எனத் தெரிகிறது. அவை, தமிழ்நாடு அரசின் கருவூலத்தில் வைக்கப்படும்.
ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 27 கிலோ தங்க, வைர நகைகளில் 7 கிலோ விற்க கோர்ட்டு விலக்கு அளித்து உள்ளது. ஜெயலலிதாவுக்கு அவரது தாய் கொடுத்த பாரம்பரிய நகைகள் என்பதால் விலக்கு அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே 20 கிலோ நகையை ஏலம் மூலம் விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் மீதி உள்ள 7 கிலோ நகை யாரிடம் ஒப்படைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இதுகுறித்து சட்ட நிபுணர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-
ஜெயலலிதாவின் உண்மையான சட்ட வாரிசாக ஜெ.தீபா உள்ளார். அவரிடம் தான் தற்போது போயஸ் கார்டன் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. எனவே பாரம்பரியமான குடும்ப நகையான இந்த 7 கிலோ நகையும் ஜெ.தீபாவிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவித்தனர்.
- வேளாண் பட்ஜெட்டில் தென்னை விவசாயிகளுக்கு எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
- பாதிக்கப்பட்ட சம்பா, தாளடி சாகுபடி விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35,000 இழப்பீடு வழங்க வேண்டும்.
சென்னை:
தமிழக சட்டசபை வளாகத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்திதார். அப்போது அவர் கூறியதாவது:-
* தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கையால் விவசாயிகளுக்கு பலனில்லை.
* பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து வேளாண் பட்ஜெட் என்று தாக்கல் செய்துள்ளனர்.
* நெல், கரும்பு குறித்து தி.மு.க. வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
* தி.மு.க. ஆட்சியில் பயிர்க் காப்பீட்டு திட்டத்தில் குறுவை சாகுபடி சேர்க்கப்படவில்லை.
* குறுவை சாகுபடி விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை பட்ஜெட்டில் அறிவிக்காதது வேதனை அளிக்கிறது.
* குறுவை சாகுபடி விவசாயிகள் காப்பீடு திட்டத்தில் இடம்பெறச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை முழுமையாக இயக்க நடவடிக்கை தேவை.
* நீரின்றி காய்ந்த சம்பா, தாளடி சாகுபடி பயிரால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
* பாதிப்புக்குள்ளான விளைநிலங்களை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* வேளாண் பட்ஜெட்டில் தென்னை விவசாயிகளுக்கு எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
* காவிரி நதிநீர் பங்கீடு முறையாக பெறாத காரணத்தால் டெல்டா விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.
* பாதிக்கப்பட்ட சம்பா, தாளடி சாகுபடி விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35,000 இழப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கரும்புப் பயிரில் உயர் தொழில்நுட்பங்களைக் கடைப்பிடித்து எக்டருக்கு 111 மெட்ரிக் டன் உற்பத்தித்திறனுடன் தமிழ் நாடு, தேசிய அளவில் முதலிடத்தில் உள்ளது.
- நடப்பாண்டில் ஏற்பட்ட பல்வேறு இயற்கை இடர்ப்பாடுகளுக்கிடையிலும், 114 லட்சத்து 19 ஆயிரம் ஏக்கர் பரப்பில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழக சட்டசபையில் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அப்போது அவர் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். வேளாண் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் கடந்த மூன்று ஆண்டுகளில் 7,705 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு, இதுவரை, 23,237 ஏக்கர் பரப்பளவில் வேளாண் பயிர்களும், 3,587 ஏக்கர் பரப்பளவில் பழ மரக்கன்றுகள், மரங்கள் முதலியவையும் நடப்பட்டு, தரிசு நிலங்கள் நிரந்தர சாகுபடிக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.
2020-2021-ம் ஆண்டில் 89 லட்சத்து ஆறாயிரம் ஏக்கராக இருந்த பாசனம் பெற்றபயிர் பரப்பு, 2022-2023-ஆம் ஆண்டில் 95 லட்சத்து 39 ஆயிரம் ஏக்கராக உயர்ந்துள்ளது.
இயற்கை இடர்ப்பாடுகளினால் ஏற்படும் வருவாய் இழப்பிலிருந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காத்திட, 25 லட்சம் விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையாக இந்த அரசு பொறுப்பேற்றது முதல் இதுவரை, 4,436 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதில் விதைப்பு பொய்த்தல் இனத்தில் அறிவிக்கை செய்யப்பட்ட சம்பா நெற்பயிருக்கு 2022-2023, 2023-2024-ம் ஆண்டுகளில் பயிர் இழப்பு ஏற்பட்ட அதே ஆண்டிலேயே இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
தமிழ்நாட்டில், கடந்த 2022-2023-ம் ஆண்டில், தென்மேற்குப் பருவமழை காலத்தில் பெய்த கனமழை, மாண்டஸ் புயல், வடகிழக்குப் பருவமழை காலத்தில் பெய்த கனமழை, பருவம் தவறிப் பெய்த மழை, வறட்சி, கடந்த மார்ச் 2023-ல் பெய்த ஆலங்கட்டி மழை ஆகிய இயற்கைப் பேரிடர்களால் ஏற்பட்ட பயிர்ச் சேதத்திற்கு, 380 கோடியே 40 லட்சம் ரூபாய் நிவாரணத்தொகை, 4 லட்சத்து 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது.
குறுவைப் (காரீப்) பருவத்தில் ஏற்பட்ட மகசூல் இழப்பு, மிச்சாங் புயல், மக்காச்சோளப்பயிரில் ஏற்பட்ட மகசூல் இழப்பு ஆகியவற்றினால் பாதிக்கப்பட்ட ஒரு லட்சத்து 85 ஆயிரம் விவசாயிகளுக்கு 118 கோடியே 77 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. மேலும், கோடை மழை, தென்காசி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை காலத்தில் மழை குறைவால் ஏற்பட்ட மகசூல் இழப்பு, தென் மாவட்டங்களில் 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட பெருமழை போன்ற இயற்கைப் பேரிடர்களால் ஏற்பட்ட பயிர் சேதத்திற்கு 208 கோடியே 20 லட்சம் ரூபாய் நிவாரணத்தொகை, 2 லட்சத்து 74 ஆயிரம் விவசாயிகளுக்கு விரைவில் வழங்கப்படும்.
2022-2023-ம் ஆண்டு 35 லட்சத்து 15 ஆயிரம் ஏக்கராக இருபோகச் சாகுபடிப் பரப்பு உயர்ந்துள்ளது. கரும்புப் பயிரில் உயர் தொழில் நுட்பங்களைக் கடைப்பிடித்து எக்டருக்கு 111 மெட்ரிக் டன் உற்பத்தித்திறனுடன் தமிழ் நாடு, தேசிய அளவில் முதலிடத்தில் உள்ளது.
நடப்பாண்டில் ஏற்பட்ட பல்வேறு இயற்கை இடர்ப்பாடுகளுக்கிடையிலும், 114 லட்சத்து 19 ஆயிரம் ஏக்கர் பரப்பில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2023- 2024-ம் ஆண்டில் 127 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தியினை எட்டுவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.






