search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வேளாண் பட்ஜெட்:  சிறுதானிய உற்பத்திக்கு ரூ.65 கோடி
    X

    வேளாண் பட்ஜெட்: சிறுதானிய உற்பத்திக்கு ரூ.65 கோடி

    • ஆதி திராவிடர், பழங்குடியினர் பிரிவைச் சார்ந்த குறு, சிறு விவசாயிகளுக்கு 20 சதவீத கூடுதல் மானியத்துக்காக ரூ.18 கோடி ஒதுக்கப்படும்.
    • தென்னந்தோப்புகளில் வாழையும், நன்கு வளர்ந்த தென்னந்தோப்புகளில் ஜாதிக்காயும் ஊடுபயிராகப் பயிரிட 5 கோடியே 70 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று 2024-25ம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் விபரம் வருமாறு:

    ஊட்டச்சத்து மிகுந்த சோளம், கம்பு, கேழ்வரகு போன்ற சிறுதானியங்கள் வரகு, பனிவரகு, குதிரைவாலி, சாமை, தினை போன்ற குறுதானியங்கள் ஆகியவற்றின் சாகுபடிப் பரப்பு, உற்பத்தி, உற்பத்தித்திறனை அதிகரிக்கும் நோக்கத்தில் தமிழ்நாடு அரசால், 25 மாவட்டங்களைக் கொண்டு ஏற்கனவே இரண்டு சிறுதானிய மண்டலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

    2023-2024-ஆம் ஆண்டு முதல் 2027-2028-ஆம் ஆண்டு வரையிலான ஐந்து ஆண்டுகளுக்கு தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் இரண்டு மண்டலங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் 2024-2025-ஆம் ஆண்டிலும் 65 கோடியே 30 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

    மாநில அளவில் சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணைய் வித்துகள், கரும்பு பயிர்களில் அதிக உற்பத்தியைப் பெறும் முதல் மூன்று விவசாயிகளுக்கு முதல் பரிசாக 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசாக ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய், மூன்றாம் பரிசாக ஒரு லட்சம் ரூபாய் என 33 பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 2024-2025-ம் ஆண்டிலும் இத்திட்டத்திற்காக 55 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

    2023-2024-ம் ஆண்டு முதல், தமிழ்நாடு அரசால் உயிர்ம வேளாண்மையில் ஈடுபடும் சிறந்த விவசாயிகளுக்குச் சிறந்த உயிர்ம விவசாயிக்கான "நம்மாழ்வார் விருது" வழங்கப்பட்டு வருகிறது. 2024-2025-ம் ஆண்டிலும் உயிர்ம விவசாயிகளைக் கௌரவிக்கும் வகையில், பாராட்டுப் பத்திரத்துடன் பணப்பரிசும் முதல் மூன்று விவசாயிகளுக்கு வழங்கப்படும். இதற்கென 5 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

    ஆதி திராவிடர், பழங்குடியினர் பிரிவைச் சார்ந்த குறு, சிறு விவசாயிகளுக்கு 20 சதவீத கூடுதல் மானியத்துக்காக ரூ.18 கோடி ஒதுக்கப்படும்.

    2024-2025-ம் ஆண்டில், பலன் தரும் பருத்தி சாகுபடித் திட்டம் 14 கோடியே 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும். இதனால், பருத்தி உற்பத்தி தமிழ்நாட்டில் 5 லட்சத்து 50 ஆயிரம் பேல்களாக உயரும்.

    பயிர் காப்பீட்டு திட்டத்தில் 2023-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17, 18-ந்தேதிகளில் பெய்த கனமழையால் அதிகம் பாதிப்படைந்த தூத்துக்குடி மாவட்டத்தில், மழையால் ஏற்பட்ட பயிர் சேதத்திற்காக 14 கோடியே 55 இலட்சம் ரூபாய், 9,988 விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக உடனடியாக வழங்கப்பட்டது. 2024-2025-ம் ஆண்டில் இத்திட்டத்தைச் செயல்படுத்த 1,775 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

    தென்னந்தோப்புகளில் வாழையும், நன்கு வளர்ந்த தென்னந்தோப்புகளில் ஜாதிக்காயும் ஊடுபயிராகப் பயிரிட 5 கோடியே 70 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

    2024-2025-ம் ஆண்டில் 2 லட்சத்து 22 ஆயிரம் ஏக்கர் பரப்பில் ஒரு லட்சம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் 232 கோடியே 50-லட்சம் ரூபாய் ஒன்றிய நிதியுடன், 54 கோடியே 73 லட்சம் ரூபாய் மாநில நிதியை ஒருங்கிணைத்து 773 கோடியே 23 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நுண்ணீர்ப் பாசன அமைப்புகள் நிறுவப்படும.

    தோட்டக்கலைப் பயிர்களில் எந்திரங்களின் பயன்பாடு மிகவும் இன்றியமையாததாக உள்ள நிலையில் நிலம் சீர் செய்தல் முதல் அறுவடை பின்செய் மேலாண்மை வரையில் பயன்படுத்தப்படும் கருவிள், எந்திரங்கள் ஆகியவை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திட, கண்காட்சி ன்று நடத்தப்படும். இதனால் விவசாயிகள், தோட்டக்கலை தொழில் முனைவோர்கள், அலுவலர்கள் ஆகியோர் பயன் அடைவர். இக்கண்காட்சி 10 கோடி ரூபாய் செலவில் ஒன்றிய, மாநில நிதியில் நடத்தப்படும்.

    இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×