என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜெயலலிதா இறந்து 6 ஆண்டுகள் கடந்த நிலையிலும் அவருக்கான அவரது தொகையை யாருமே செலுத்த முன்வராததால் கோர்ட்டு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
    • ஜெயலலிதாவின் நகைகள் வருகிற மார்ச் 6 மற்றும் 7-ந் தேதிகளில் தமிழகம் கொண்டு வரப்பட்டு உள்துறை செயலாளரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

    சென்னை:

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துக்களை ஏலம் விட்டு அவருக்கு விதிக்கப்பட்ட ரூ.100 கோடி அபராத தொகையை கட்டுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன சொத்து குவிப்பு வழக்கில் கடந்த 2014-ம் ஆண்டு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.100 கோடி அபராதமும் விதித்தது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனையும் தலா ரூ.10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டு இருந்தது.

    இதனை எதிர்த்து ஜெயலலிதா உட்பட 4 பேரும் கர்நாடக ஐகோர்ட்டில் அப்பீல் செய்தனர். அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் 4 பேரையும் நிரபராதிகள் என விடுவித்து தீர்ப்பளித்தது.

    அதைத்தொடர்ந்து கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதன் மீதான விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி ஜெயலலிதா உயிரிழந்தார். சுப்ரீம் கோர்ட்டு பெங்களூரு சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது.

    அதே நேரத்தில் ஜெயலலிதா மீதான குற்றச்சாட்டுகளை கைவிடுவதாக கூறி விட்டு செலுத்த வேண்டிய அபராத தொகையில் எந்த மாற்றமும் இல்லை எனவும் தெரிவித்தது.

    இந்த நிலையில் ஜெயலலிதா இறந்து 6 ஆண்டுகள் கடந்த நிலையிலும் அவருக்கான அவரது தொகையை யாருமே செலுத்த முன்வராததால் கோர்ட்டு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

    அதன்படி ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் அவரது சொத்துக்களை விற்று அபராதம் கட்டுவது என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    ஜெயலலிதா வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட 28 கிலோ நகைகள், 800 கிலோ வெள்ளி நகைகள், வைர நகைகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் அப்போது கைப்பற்றியிருந்தனர். இவைகள் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டன.

    அந்த நகைகளை ஏலம் விட்டு அவரது தொகையில் ஒரு பகுதியை பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதன்படி ஜெயலலிதாவின் நகைகள் வருகிற மார்ச் 6 மற்றும் 7-ந் தேதிகளில் தமிழகம் கொண்டு வரப்பட்டு உள்துறை செயலாளரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

    அதனை அரசு கருவூலத்தில் சேர்த்து பின்னர் நகையின் மதிப்பு கணக்கிடப்பட்டு தற்போதைய மதிப்பின்படி ஏலத்தில் விட்டு பணம் திரட்டப்படும் இந்த நகைகள் மட்டும் 40 கோடி ரூபாய் வரை ஏலம் போகும்.

    அதனை வைத்து அபராத தொகையை செலுத்திவிட்டு மீதமுள்ள ரூ.60 கோடிக்கு அசையா சொத்துக்களை ஏலம் விட முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

    இதை தவிர வழக்கு கட்டணமாக 5 கோடி ரூபாயை கர்நாடக அரசுக்கும் வழங்க வேண்டியுள்ளது. இதற்கும் ஜெயலலிதாவின் சொத்துக்கள் ஏலம் விடப்பட்டு அதன் மூலமாகவே முழுமையாக கட்டப்படும் என்று தெரிகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாராளுமன்றத்தில் கர்ஜனை மொழியாக செயல்படுகிறார் கனிமொழி.
    • வெள்ள பாதிப்புக்காக அனைத்தையும் வழங்கியது இந்த ஸ்டாலின் தான்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த 15 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள், விளைநிலங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கும், வீடுகளை இழந்தோருக்கும் நலத்திட்ட உதவிகள், இலவச வீட்டு மனை பட்டா, படகுகள் சேதமடைந்த மீனவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார். விழாவில் சபாநாயகர் அப்பாவு, திமுக எம்.பி. கனிமொழி, அமைச்சர்கள் பங்கேற்றனர்.

    நலத்திட்ட உதவிகளை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

    * திமுக ஆட்சிக்கு வந்தபின் லட்சக்கணக்கான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு உள்ளன.

    * பாராளுமன்றத்தில் கர்ஜனை மொழியாக செயல்படுகிறார் கனிமொழி.

    * கனிமொழியைப்போல அமைச்சர் கீதாஜீவனும் சிறப்பாக செயல்படுகிறார்.

    * மழை வெள்ளத்தின்போது நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு இங்கேயே இருந்தார்.

    * உடைந்த பாலங்களை எல்லாம் சரிசெய்த பிறகே அமைச்சர் எ.வ.வேலு சென்னை திரும்பினார்.

    * அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒருவாரம் நெல்லை, தூத்துக்குடியில் தங்கி இருந்தார்.

    * 258 இடங்களில் ஏற்பட்ட உடைப்புகள் போர்க்கால அடிப்படையில் சரி செய்யப்பட்டன. உடைப்புகளை நிரந்தரமாக சரிசெய்ய ரூ.15 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

    * தென்மாவட்ட மக்களின் வாழ்க்கை மேம்பட பெரிய நிறுவனங்களை கொண்டு வருகிறோம். இன்றுகூட கார் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டியுள்ளோம்.

    * மலேசியா, சிங்கப்பூர் நிறுவனங்களும் தூத்துக்குடியில் தொழிற்சாலைகளை தொடங்க உள்ளன.

    * தொழிற்சாலைகள் தொடங்கப்படும்போது தென் மாவட்ட இளைஞர்கள் அதிகம் பயன்பெறுவார்கள்.

    * கொரோனா பாதிப்பின்போது ரூ.4 ஆயிரம் நிவாரண நிதி வழங்கினோம்.

    * வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா ரூ.6 ஆயிரம் நிவாரண உதவி வழங்கி உள்ளோம்.

    * பாதிக்கப்படும்போது மட்டும் அல்லாமல் இறுதி வரை துணை நிற்போம்.

    * கால்நடைகள், பயிர்கள் பாதிப்புக்கு நிவாரணம் வழங்கினோம்.

    * சிறு வணிகர்களுக்கு கடனுதவித் தொகை வழங்கப்படுகிறது.

    * கால்நடைகளை இழந்தோருக்கு தனிநபர் கடனுதவி வழங்க ஆணை பிறப்பித்துள்ளோம்.

    * சாலைகளை சீரமைக்க ரூ.343 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    * சேதம் அடைந்த படகுகள், வலைகள், மீன்பிடி இயந்திரங்களுக்கு நிவாரணம் வழங்கி உள்ளோம்.

    * அரசு ஆவணங்களை இழந்தோருக்கு சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.

    * வெள்ள பாதிப்புக்காக அனைத்தையும் வழங்கியது இந்த ஸ்டாலின் தான்.

    * 2 பெரிய பேரிடர்களுக்காக ரூ.37 ஆயிரம் கோடி மத்திய அரசிடம் கேட்டோம். சாதுர்யம் இருந்தால் நீங்களே சமாளிக்க வேண்டியதுதானே என்கிறார்கள்.

    * உங்களுக்காக களத்தில் இருக்கும் ஆட்சிதான் திமுக என்று கூறினார்.

    • திருப்பூர், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 6 லட்சம் தொழிலாளர்கள் இ.எஸ்.ஐ.க்கு பணம் செலுத்தி வருகிறார்கள்.
    • தற்போது தமிழக அரசால் இடம் வழங்கப்பட்டு மத்திய அரசால் இ.எஸ்.ஐ. மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    பின்னலாடை தொழில் நகரான திருப்பூரில் 10 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை பெற்று வருகிறார்கள். வெளிமாவட்ட, வெளிமாநில தொழிலாளர்கள் இங்கு லட்சக்கணக்கில் தங்கி பணியாற்றி வருகிறார்கள். உள்நாடு மற்றும் வெளிநாடு ஏற்றுமதி மூலம் ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் நடக்கிறது. திருப்பூர், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 6 லட்சம் தொழிலாளர்கள் இ.எஸ்.ஐ.க்கு பணம் செலுத்தி வருகிறார்கள்.

    இ.எஸ்.ஐ. பங்களிப்பில் முதன்மை இடத்தில் திருப்பூர் உள்ளதால், இங்குள்ள தொழிலாளர்களின் வசதிக்காக இ.எஸ்.ஐ. மருத்துவமனை கொண்டு வர வேண்டும் என்பது தொழில்துறையினர், தொழிலாளர்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வந்தது.

    இந்நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பிரசாரத்துக்கு திருப்பூர் வந்த பிரதமர் மோடி, திருப்பூர் பூண்டி ரிங் ரோட்டில் இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். 7½ ஏக்கர் பரப்பளவில் ரூ.81 கோடியே 34 லட்சம் மதிப்பில் 100 படுக்கை வசதி, 32 பணியாளர் குடியிருப்புகளுடன் மகப்பேறு சிகிச்சை மையம் உள்ளிட்ட வசதிகளுடன் கட்டுமான பணி தொடங்கியது.

    இந்நிலையில் கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டு திறப்பு விழாவுக்கு இ.எஸ்.ஐ. மருத்துவமனை தயார்படுத்தப்பட்டது. இந்த நிலையில் பிரதமர் மோடி, காணொலிக்காட்சி மூலமாக இன்று மதியம் 3 மணிக்கு திருப்பூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனையை திறந்து வைத்து தொழிலாளர்களுக்கு அர்ப்பணிக்கிறார். இந்த மருத்துவமனை மூலம் மருத்துவ சேவைகள் தொழிலாளர்களுக்கு மருத்துவ சேவைகள் கிடைக்கும். இதன் மூலமாக திருப்பூர், ஈரோடு மாவட்ட தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவை சிங்காநல்லூர் சென்று சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் இங்கேயே சிகிச்சை பெற தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளதால் பனியன் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இந்தநிலையில் திருப்பூரில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை கொண்டுவர அடித்தள மிட்டது எம்.எல்.எப்., தொழிற்சங்கம்தான் என்று ம.தி.மு.க.வில் இருந்து ராஜினாமா செய்த முன்னாள் எம்.எல்.ஏ. திருப்பூர் துரைசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

    திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள இ.எஸ்.ஐ. மருத்துவனையை பிரதமர் மோடி இன்று திறந்து வைப்பதாக தகவல் கிடைத்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை கொண்டு வருவதற்கு அடித்தளமிட்டது எம்.எல்.எப். தொழிற்சங்கம் தான். கடந்த 2005-ம் ஆண்டு மே மாதம் 1-ந் தேதி திருப்பூர் டவுன்ஹால் அரங்கில் நடைபெற்ற எம்.எல்.எப். தொழிற்சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து மத்திய அரசு அப்போது 3 படுக்கையுடன் கூடிய மருத்துவமனை அமைக்க அனுமதி வழங்கியது. அதன் பிறகு இந்த மருத்துவமனையை விரிவுபடுத்துவதற்கான இடத்தை தமிழக அரசு தராமல் காலம் தாழ்த்தி வந்தது.

    இதையடுத்து தற்போது தமிழக அரசால் இடம் வழங்கப்பட்டு மத்திய அரசால் இ.எஸ்.ஐ. மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையை பிரதமர் மோடி நேரில் வந்து திறந்திருக்க வேண்டும் அல்லது தொழில்துறை, மருத்துவ துறை மந்திரிகளில் யாராவது ஒருவர் நேரில் வந்து திறந்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

    • பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையினர் முகாமிட்டு சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • மாநகர மற்றும் மாவட்ட போலீசார் 24 மணி நேரமும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    நெல்லை:

    தமிழகத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி நாளை மறுநாள் (27-ந்தேதி) வருகிறார். வருகிற 28-ந்தேதி தூத்துக்குடி துறைமுகத்தில் நடைபெறும் குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

    பின்னர் அங்கிருந்து காலை 10.45 மணிக்கு ஹெலிகாப்டர் மூலமாக நெல்லைக்கு வருகிறார். அவர் பாளை ஜான்ஸ் கல்லூரி மைதானத்தில் வந்திறங்கி அங்கிருந்து குண்டு துளைக்காத கார் மூலமாக பாளை ஒருங்கிணைந்த நீதிமுன்றம் எதிரே அமைந்துள்ள பெல் பள்ளி மைதானத்தில் பா.ஜனதாவினர் ஏற்பாடு செய்துள்ள பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

    இதனையொட்டி மைதானத்தில் விழா மேடை மற்றும் பொதுமக்கள் அமருவதற்கான பந்தல் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அங்கு பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையினர் முகாமிட்டு சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். விழா நடைபெறும் மைதானத்தில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தூரம் வரையிலும் சுற்றிலும் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், ஓட்டல்களில் வசிப்பவர்களின் பெயர் உள்ளிட்ட விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.


    அங்கு நடைபெறும் கட்டுமான பணிகள், வடமாநில பணியாளர்கள் உள்ளிட்டவர்கள் குறித்து மாநகர உளவுப்பிரிவு, கியூ பிரிவு போலீசார் வீடு வீடாக சென்று விசாரித்து வருகின்றனர். மேலும் வெளியாட்கள் யாரேனும் அப்பகுதியில் உள்ள ஓட்டல்களில் தங்கியுள்ளனரா எனவும் விசாரித்து வருகின்றனர். மாநகர மற்றும் மாவட்ட போலீசார் 24 மணி நேரமும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    அதே நேரத்தில் ஜான்ஸ் கல்லூரி மைதானத்தில் ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி வரும்போது மொத்தம் 3 ஹெலிகாப்டர் அவருடன் வருகிறது. இதனால் அங்கு 3 ஹெலிகாப்டர்கள் ஒரே நேரத்தில் வந்து நிற்குமாறு கான்கிரீட் கலவை கொண்டு இறங்குதளம் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இரவிலும் ஜெனரேட்டர் மூலமாக விளக்கு வெளிச்சம் ஏற்படுத்தப்பட்டு பணிகள் நடக்கிறது.

    விழா நடைபெறும் மைதானம் மற்றும் ஹெலிபேட் மைதானம் முழுவதும் பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு பிரிவினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட தற்காலிக சி.சி.டி.வி. கேமராக்கள் நிறுவப்பட்டு கட்டுப்பாட்டு அறை அமைத்து பாதுகாப்பு பிரிவினர் கண்காணித்து வருகின்றனர்.

    அந்த மைதானத்திற்குள் வெளியாட்கள் யாரும் வருவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதேபோல் விழா நடைபெறும் பெல் மைதானத்திலும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    • கடையில் வைத்திருந்த ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் திருடி சென்றுள்ளனர்.
    • இருவர் மீது வழக்கு பதிவு ஊத்தங்கரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள உப்பாரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாதையன். இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 13-ம் தேதி அன்று மளிகை பொருட்கள் வாங்குவதாக 2 பேர் வந்து மளிகை பொருட்கள் வாங்கிச் சென்றனர்.

    அப்போது கடையில் வைத்திருந்த ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் திருடி சென்றுள்ளனர். இது குறித்து மாதையன் ஊத்தங்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    புகாரின் பேரில் ஊத்தங்கரை டி.எஸ்.பி பார்த்தீபன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து செல்போன் திருடிய நபர்களை சிசிடிவி கேமரா மூலம் ஆய்வு செய்து தனிப்படை போலீஸார் தேடி வந்துள்ளனர்.

    இதில் தனிப்படை உதவி காவல் ஆய்வாளர் சீனிவாசன் தலைமையில் தலைமை காவலர்கள் வடிவேல், பிராபாகரன், மணிவேல் அடங்கிய தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் தேடி சென்று சிசிடிவி கேமரா மூலம் ஆய்வு செய்து விசாரணை செய்து வந்தனர்.

    விசாரணையில் திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பகுதியை சேர்ந்த முகமதுஅலி வயது (22), அதே பகுதியைச் சேர்ந்த ஜாபர்பாஷா (22) ஆகியோர் செல்போனை திருடியது தெரிய வந்தது. 2 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்ததுடன் இருவர் மீது வழக்கு பதிவு ஊத்தங்கரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.

    • 10-ம் திருவிழா தேரோட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.
    • 11-ம் திருவிழாவான நேற்று இரவு தெப்ப உற்சவம் நடைபெற்றது.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித்திருவிழா கடந்த 14-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. விழாவில் ஒவ்வொரு நாளும் காலை, மாலை நேரத்தில் சுவாமி பல்வேறு வாகனம் மற்றும் சப்பரத்தில் எழுந்தருளி பவனி வருதல் நடைபெற்று வந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 5-ம் திருவிழா வில் குடவருவாயில் தீபாரா தனையும், 7-ம்திருவிழாவில் காலையில் வெட்டி வேர் சப்பர பவனியும், மதியம் சிவப்பு சாத்தி கோலத்தில் வீதி உலாவும் நடைபெற்றது.

    8-ம்திருவிழா அன்று அதிகாலையில் வெள்ளை சாத்தி கோலத்தில் வீதி உலாவும், மதியம் பச்சை சாத்தி கோலத்தில் வீதி உலாவும் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருவிழா தேரோட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

    11-ம் திருவிழாவான நேற்று இரவு தெப்ப உற்சவம் நடைபெற்றது. தெப்பத்தில் சுவாமி குமரவிடங்க பெருமான் தெய்வானை அம்பாளுடன் தெப்பத்தில் 11 முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். 12-ம் திருவிழாவான இன்று இரவு 7மணியளவில் சுவாமி அம்பாள் தனித்தனி பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்று விழா நிறைவு பெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், ராமதாஸ், கணேசன், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து குறைந்து வருகிறது.
    • அணையின் நீர்மட்டம் 2.29 அடியாகவும், வரட்டு பள்ளம் அணையின் நீர்மட்டம் 29.43 அடியாகவும் குறைந்து உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. அதேநேரம் அணைக்கு வரும் நீர்வரத்தை விட பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 70.74 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 49 கன அடியாக நீர் வந்து கொண்டிருக்கிறது. கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 2-ம் சுற்று நீர் திறக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

    தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 800 கனஅடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடியும் என மொத்தம் 900 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. குண்டேரிபள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 39.58 அடியாகவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 2.29 அடியாகவும், வரட்டு பள்ளம் அணையின் நீர்மட்டம் 29.43 அடியாகவும் குறைந்து உள்ளது.

    மழை பொழிவு இல்லாததாலும், நீர் வரத்து குறைந்ததாலும் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • பிரதமர் மோடி பங்கேற்று பேச உள்ளார்.
    • விமானப்படை ஹெலிகாப்டரை இறக்கி சோதனை நடத்தப்பட்டது.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாதப்பூரில் வருகிற 27-ந்தேதி பா.ஜ.க. சார்பில் என் மண், என் மக்கள் பாதயாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று பேச உள்ளார். இதற்காக கேரளாவில் இருந்து கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்திற்கு வரும் அவர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பொதுக்கூட்டம் நடைபெறும் மாதப்பூர் மைதானத்திற்கு செல்கிறார். இதற்காக அங்கு ஹெலிகாப்டர் இறங்கு தளம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் இன்று காலை மைதானத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஹெலிகாப்டர் இறங்குதளத்தில் சூலூரில் இருந்து வரவழைக்கப்பட்ட விமானப்படை ஹெலிகாப்டரை இறக்கி சோதனை நடத்தப்பட்டது.

    • நெல்லை, தூத்துக்குடி சிப்காட் பகுதிகளில் புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்படுகிறது.
    • தூத்துக்குடி சில்லாநத்தம் சிப்காட் வளாகத்தில் 400 ஏக்கர் நிலபரப்பில் மின் கார் உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்படுகிறது.

    தூத்துக்குடி:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு பொறுப்பேற்றது முதல் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் பொருட்டு புதிய தொழிற்சாலைகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    குறிப்பாக தென் மாவட்டங்களில் உள்ள சிப்காட் பகுதிகளில் தொழில் வளங்களை பெருக்கி அதன்மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து வருகிறார்.

    நெல்லை, தூத்துக்குடி சிப்காட் பகுதிகளில் புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்படுகிறது. சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் உலகின் பல்வேறு முன்னணி நிறுவனங்களுடன் தமிழக அரசு சார்பில் தொழிற்சாலைகள் தொடங்க ஒப்பந்தம் கையெழுத்தானது.

    அந்த வகையில் தென் மாநிலத்தில் முதல்முறையாக தூத்துக்குடியில் முதல் மின் வாகன தொழிற்சாலை அமைக்கப்படுகிறது. இந்த நிறுவனத்தை வியட்நாமை சேர்ந்த பிரபல நிறுவனமான வின் பாஸ்ட் தொடங்க உள்ளது.

    இதற்காக தூத்துக்குடி சில்லாநத்தம் சிப்காட் வளாகத்தில் 400 ஏக்கர் நிலபரப்பில் மின் கார் உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்படுகிறது. இந்த தொழிற்சாலையில் ஆண்டு ஒன்றுக்கு 1½ லட்சம் மின் வாகனங்கள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

    வின் பாஸ்ட் மின் கார் தொழிற்சாலை அமையவுள்ள இடத்தின் நுழைவுவாயில்.

    வின் பாஸ்ட் மின் கார் தொழிற்சாலை அமையவுள்ள இடத்தின் நுழைவுவாயில்.

    ரூ.16 ஆயிரம் கோடி முதலீட்டில் தொடங்கப்படும் இந்த தொழிற்சாலையில் முதற்கட்டமாக 3,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த புதிய மின் கார் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டு விழா தூத்துக்குடி சில்லா நத்தத்தில் இன்று பிரமாண்டமாக நடைபெற்றது.

    இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் கலந்து கொண்டு புதிய கார் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

    விழாவில் சபாநாயகர் அப்பாவு, கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, கீதாஜீவன், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், மனோ தங்கராஜ், ராஜ கண்ணப்பன், ஞானதிரவியம் எம்.பி., வின் பாஸ்ட் நிறுவனத்தின் இந்தியாவுக்கான தலைமை செயல் அலுவலர் பாம் சான் சவு, துணை தலைமை செயல் அலுவலர் பார்த்தா டட்டா, கலெக்டர் லட்சுமிபதி, சிப்காட் நிர்வாக இயக்குனர் செந்தில்ராஜ் மற்றும் மேயர் ஜெகன் பெரியசாமி, எம்.எல்.ஏ.க்கள் மார்கண்டேயன், சண்முகையா, ஊர்வசி அமிர்தராஜ் மற்றும் அரசு அதிகாரிகள், தி.மு.க.வினர் திரளாக கலந்து கொண்டனர்.

    பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து கார் மூலம் புதுக்கோட்டை சூசைபாண்டியாபுரம் பகுதியில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டார்.

    அப்போது கடந்த டிசம்பர் மாதம் நெல்லை, தூத்துக்குடியில் பெய்த கனமழையால் வீடுகளை இழந்தவர்கள், வீடு சேதம் அடைந்தவர்கள், படகுகள் சேதம் அடைந்த மீனவர்கள் என 16 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இந்த விழாக்களில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். வாகைகுளம் விமான நிலையத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பிலும், அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையிலும் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.

    இதே போல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமான நிலையத்தில் இருந்து விழாக்கள் நடைபெற்ற பகுதிகளுக்கு செல்லும் வழியில் சாலைகளில் இருபுறமும் தி.மு.க.வினரும், பொதுமக்களும் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

    முதலமைச்சரை வரவேற்கும் விதமாக தூத்துக்குடி முழுவதும் தி.மு.க. கொடிகள், தோர ணங்கள் வைக்கப்பட்டு நகரமே விழாக்கோலம் பூண்டி ருந்தது. மேலும் முதலமைச்சர் வருகையையொட்டி தூத்துக்குடி முழுவதும் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    • கடமலைக்குண்டு போலீசார் மற்றும் மயிலாடும்பாறை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • நீண்ட நேரம் போராடி பாறை இடுக்குகளுக்கு இடையே சிக்கி இருந்த தங்கபாண்டியை பிணமாக மீட்டனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் வருசநாடு அருகே காமாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம் மகன் தங்கபாண்டி (வயது18). இவர் உசிலம்பட்டியில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.எஸ்.சி. படித்து வந்தார்.

    விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தார். உப்புத்துரை பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்கு உணவு தயாரிக்கும் பணிக்காக தங்கபாண்டி தனது நண்பர்களுடன் சென்றார். வேலை முடிந்ததும் அனைவரும் யானைகஜம் பகுதிக்கு குளிக்க சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதியில் மூழ்கிய தங்கபாண்டி உதவி கேட்டு அலறினார். அவரை நண்பர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.

    இதனால் கடமலைக்குண்டு போலீசார் மற்றும் மயிலாடும்பாறை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அவர்கள் வந்து நீண்ட நேரம் போராடி பாறை இடுக்குகளுக்கு இடையே சிக்கி இருந்த தங்கபாண்டியை பிணமாக மீட்டனர். அவரது உடலை பார்த்து பெற்றோர் கதறிய காட்சி சோகத்தை ஏற்படுத்தியது. சதுரகிரி மலைக்கு செல்லும் வழியில் யானைகஜம் அமைந்துள்ளது. குளிர்ச்சியான நீர்வீழ்ச்சி என்றபோதும் பெருமளவில் ஆபத்துக்கள் உள்ளன. இந்த யானைகஜம் பகுதியில் வருடத்திற்கு சராசரியாக 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். குறிப்பாக வெளியூர்களில் இருந்து வருபவர்களுக்கு நீர்வீழ்ச்சியின் ஆழமான பகுதி மற்றும் பாறை இடுக்குகள் தெரிவதில்லை. இதனால் தொடர்ந்து சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

    எனவே வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த நீர்வீழ்ச்சியில் பாதுகாப்பை மேம்படுத்தி சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சாலை வளைவில் நிலை தடுமாறிய ஆட்டோ அருகில் இருந்த கிணற்றுக்குள் பாய்ந்தது.
    • விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கவும், தேவைப்பட்டால் மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைக்குமாறும் அங்குள்ள டாக்டர்களுக்கு அறிவுருத்தினார்.

    செஞ்சி:

    சென்னையை சேர்ந்த 9 பேர் திருவண்ணாமலை கிரிவலத்திற்கு ஆட்டோவில் வந்தனர். கிரிவலம் முடிந்து தங்களின் குலதெய்வம் கோவிலுக்கு சென்றனர். பின்னர் அருகில் இருந்த தங்களின் உறவினர் வீட்டிற்கு நள்ளிரவு 2.30 மணிக்கு சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது செஞ்சி அருகேயுள்ள கப்பை என்ற ஊர் அருகே சென்று கொண்டிருந்த போது, சாலை வளைவில் நிலை தடுமாறிய ஆட்டோ அருகில் இருந்த கிணற்றுக்குள் பாய்ந்தது. ஆட்டோவில் பயணித்தவர்களின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அவர்களை மீட்டனர். இதில் ஆட்டோ டிரைவர் யுவராஜ், சத்யா ஆகியோர் உட்பட உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர். யுவராஜின் மகன்கள் பிரதீஸ்வரன் (வயது 11), ஹரி பிரசாத் (வயது 7) ஆகியோர் கிணற்றில் மூழ்கி இறந்து போனார்கள்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் படுகாயம் அடைந்து செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் இதுகுறித்து தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றார். இதையடுத்து விபத்தில் இறந்து போன 2 சிறுவர்களின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.2 லட்சம் முதல்வர் நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவு பெற்றுள்ளதாகவும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறினார்.

    மேலும், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கவும், தேவைப்பட்டால் மேல் சிகிச்சைக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்குமாறும் அங்குள்ள டாக்டர்களுக்கு அறிவுருத்தினார். அப்போது செஞ்சி ஒன்றிய குழு தலைவர் விஜயகுமார், பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலி மஸ்தான், தாசில்தார் ஏழுமலை ஆகியோர் உடனிருந்தனர்.

    • அம்மனுக்கு விசேஷ அலங்கார பூஜைகள் நடந்து வருகிறது.
    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்கினர்.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசிமாதத்தில் குண்டம் திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினமும் அம்மனுக்கு விசேஷ அலங்கார பூஜைகள் நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மயான பூஜை நிகழ்ச்சி கடந்த 22-ந் தேதி நள்ளிரவு நடந்தது.

    நேற்று காலை 7.30 மணிக்கு ஆனைமலை குண்டம் மைதானத்தில் குண்டம் கட்டுதல் தொடங்கியது. இதில் 41 அடி நீளம், 11 அடி அகலத்தில் குண்டம் அமைக்கப்பட்டது. குண்டத்தில் பூக்கள் தூவப்பட்டு வழிபாடு நடந்தது.

    குண்டத்துக்கு தேவை யான விறகுகளை கொடுத்து பக்தர்கள் வழிபாடு செய்தனர். பல கிராமங்களில் இருந்து மக்கள் பால்குடும் எடுத்து வந்து அம்மனை வழிபட்டனர். மாலை 6.30 மணிக்கு சித்திரைத் தேர் வடம்பிடித்தல், அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடந்தது. இதனை தொடர்ந்து இரவு 10 மணிக்கு குண்டம் பூ வளர்க்கப்பட்டது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது. குண்டம் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்கினர். சிலர் தங்கள் கைகளில் குழந்தைகளை வைத்துக் கொண்டு குண்டம் இறங்கியது காண்போரை பரவசப்படுத்தியது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், பக்தர்கள் குண்டம் இறங்குவதற்கு தேவையான உதவிகளை செய்தனர்.

    குண்டம் திருவிழாவை காண உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கோவிலுக்கு வந்திருந்தனர். இதனால் கோவில், குண்டம் மைதானம் உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மாசாணி அம்மனை தரிசனம் செய்தனர்.

    கோவை, பொள்ளாச்சி, பழனி உள்ளிட்ட இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனைமலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஆனைமலை துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநிதி தலைமையில் ஆனைமலை இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    குண்டம் திருவிழாவை தொடர்ந்து வருகிற 26-ந்தேதி காலை கொடி இறக்குதல் நிகழ்ச்சியும், காலை 10 மணிக்கு மஞ்சள் நீராடுதலும் நடக்கிறது. இரவு 8 மணிக்கு மகா முனி பூஜை நடக்கிறது. 27-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11.30 மணிக்கு மகாஅபிஷேகம் மற்றும் அலங்கார பூஜையுடன் குண்டம் திருவிழா நிறைவு பெறுகிறது.

    ×