என் மலர்
உள்ளூர் செய்திகள்

பிரதமர் மோடி வருகை: நெல்லை கல்லூரி மைதானத்தில் 'ஹெலிபேட்' அமைக்கும் பணி தீவிரம்
- பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையினர் முகாமிட்டு சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
- மாநகர மற்றும் மாவட்ட போலீசார் 24 மணி நேரமும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நெல்லை:
தமிழகத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி நாளை மறுநாள் (27-ந்தேதி) வருகிறார். வருகிற 28-ந்தேதி தூத்துக்குடி துறைமுகத்தில் நடைபெறும் குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
பின்னர் அங்கிருந்து காலை 10.45 மணிக்கு ஹெலிகாப்டர் மூலமாக நெல்லைக்கு வருகிறார். அவர் பாளை ஜான்ஸ் கல்லூரி மைதானத்தில் வந்திறங்கி அங்கிருந்து குண்டு துளைக்காத கார் மூலமாக பாளை ஒருங்கிணைந்த நீதிமுன்றம் எதிரே அமைந்துள்ள பெல் பள்ளி மைதானத்தில் பா.ஜனதாவினர் ஏற்பாடு செய்துள்ள பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.
இதனையொட்டி மைதானத்தில் விழா மேடை மற்றும் பொதுமக்கள் அமருவதற்கான பந்தல் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அங்கு பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையினர் முகாமிட்டு சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். விழா நடைபெறும் மைதானத்தில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தூரம் வரையிலும் சுற்றிலும் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், ஓட்டல்களில் வசிப்பவர்களின் பெயர் உள்ளிட்ட விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
அங்கு நடைபெறும் கட்டுமான பணிகள், வடமாநில பணியாளர்கள் உள்ளிட்டவர்கள் குறித்து மாநகர உளவுப்பிரிவு, கியூ பிரிவு போலீசார் வீடு வீடாக சென்று விசாரித்து வருகின்றனர். மேலும் வெளியாட்கள் யாரேனும் அப்பகுதியில் உள்ள ஓட்டல்களில் தங்கியுள்ளனரா எனவும் விசாரித்து வருகின்றனர். மாநகர மற்றும் மாவட்ட போலீசார் 24 மணி நேரமும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதே நேரத்தில் ஜான்ஸ் கல்லூரி மைதானத்தில் ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி வரும்போது மொத்தம் 3 ஹெலிகாப்டர் அவருடன் வருகிறது. இதனால் அங்கு 3 ஹெலிகாப்டர்கள் ஒரே நேரத்தில் வந்து நிற்குமாறு கான்கிரீட் கலவை கொண்டு இறங்குதளம் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இரவிலும் ஜெனரேட்டர் மூலமாக விளக்கு வெளிச்சம் ஏற்படுத்தப்பட்டு பணிகள் நடக்கிறது.
விழா நடைபெறும் மைதானம் மற்றும் ஹெலிபேட் மைதானம் முழுவதும் பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு பிரிவினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட தற்காலிக சி.சி.டி.வி. கேமராக்கள் நிறுவப்பட்டு கட்டுப்பாட்டு அறை அமைத்து பாதுகாப்பு பிரிவினர் கண்காணித்து வருகின்றனர்.
அந்த மைதானத்திற்குள் வெளியாட்கள் யாரும் வருவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதேபோல் விழா நடைபெறும் பெல் மைதானத்திலும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.






