என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • பா.ஜனதாவில் இணைய சில நிபந்தனைகளை விதித்து இருப்பதாக கூறப்படுகிறது.
    • ஒவ்வொருவரும் அதிருப்தி உள்பட பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்டவர்கள்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் கட்சியின் விளவங்கோடு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த விஜயதாரணி சமீபத்தில் பா.ஜனதாவில் இணைந்தார்.

    இதையடுத்து தனது பதவியையும் ராஜினமா செய்தார். இப்போது விளவங்கோடு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    விஜயதாரணியை தொடர்ந்து காங்கிரசில் இருந்து 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட மேலும் 5 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்கு தாவ இருப்பதாக கூறப்படுகிறது. முன்னணி கட்சிகளை சேர்ந்த இவர்கள் ஒவ்வொருவரும் அதிருப்தி உள்பட பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்டவர்கள்.

    அவர்களை தங்கள் பக்கம் இழுப்பதற்கான வேலைகளில் பா.ஜனதா ஈடுபட்டுள்ளது. அவர்களும் பா.ஜனதாவில் இணைய சில நிபந்தனைகளை விதித்து இருப்பதாக கூறப்படுகிறது.

    அவற்றை பா.ஜனதாவும் ஏற்றுக்கொண்டதால் விரைவில் பா.ஜனதாவில் இணைய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    • தீவனப்பயிர் மற்றும் 20 தென்னை மரங்கள் தீயில் கருகியது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து குமார் என்பவரை கைது செய்தனர்.

    தருமபுரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் பகுதியை சேர்ந்தவர் சுகுமார் (வயது 68). விவசாயி. இவருடைய மகன் டோக்கியோலிலும், மருமகள் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திலும் வேலை பார்த்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இவர் கடந்த 2011-ம் ஆண்டு குட்டூர் கிராமத்தில் 21/2 ஏக்கர் நிலம் விலைக்கு வாங்கி சுற்றிலும் கம்பி வேலி அமைத்து தென்னை மரம் மற்றும் தீவனப்பயிர்களை நடவு செய்து விவிசாயம் செய்து வந்தார்.

    நிலத்தின் பாதுகாப்பிற்காக காரிமங்கலத்தை சேர்ந்த நாகராஜ் என்பவரை வேலைக்கு வைத்துள்ளார்.

    இந்நிலையில் கடந்த 27-ம் தேதி குட்டூர் பகுதியை சேர்ந்த குமார் என்பவர் தென்னந் தோப்பிற்கு தீ வைத்துள்ளார். இதனால் தீவனப்பயிர் மற்றும் 20 தென்னை மரங்கள் தீயில் கருகியது.

    தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக சுகுமார் காரிமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து குட்டூர் கிராமத்தை சேர்ந்த குமார் என்பவரை கைது செய்தனர்.

    • தருமபுரம் ஆதீனத்தின் சகோதரர் விருத்தகிரி என்பவர் மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார்.
    • பொய்யான தகவலை கூறி பணம் பறிக்க முயலும் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீன மடத்தின் 27-வது ஆதீனமாக மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளார். இந்த நிலையில் தருமபுரம் ஆதீனத்தின் சகோதரர் விருத்தகிரி என்பவர் மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார்.

    தஞ்சை மாவட்டம் ஆடுதுறையை சேர்ந்த பா.ஜனதா நிர்வாகி வினோத், மடாதிபதியின் உதவியாளர் செந்தில் ஆகியோர் என்னை நேரில் சந்தித்து ஆதீன மடாதிபதியின் ஆபாச வீடியோ, ஆடியோ தங்களிடம் உள்ளது. இதனை சமூக வலைத்தளங்கள், டி.வி சேனல்களில் வெளியிடாமல் இருக்க நாங்கள் கேட்கும் பணத்தை தர வேண்டும் என்று கூறி மிரட்டல் விடுத்தனர். ஏன் பொய்யான தகவல்களை கூறி பணம் பறிக்க ஆசைப்படுகிறீர்கள் என தட்டிக் கேட்டபோது, என் கழுத்தை நெறித்து கொலை செய்ய முயற்சி செய்தனர்.

    இந்த சம்பவத்தில் செம்பனார்கோவிலை சேர்ந்த தனியார் கல்வி நிறுவன தாளாளர் குடியரசு, திருவெண்காடு பா.ஜனதா நிர்வாகி விக்னேஷ், மயிலாடுதுறை மாவட்ட பா.ஜனதா தலைவர் அகோரம், மதுரையை சேர்ந்த ஜெயசந்திரன் ஆகியோர் தூண்டுதலாக உள்ளனர்.

    எனவே பொய்யான தகவலை கூறி பணம் பறிக்க முயலும் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

    முதல்கட்ட விசாரணையில் ஆபாச வீடியோ, ஆடியோ இருப்பதாக கூறி தருமபுர ஆதீனத்திற்கு மிரட்டல் விடுக்கப்பட்டது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து வினோத் ( வயது 32), குடியரசு (39 ) , விக்னேஷ் (33), நெய் குப்பத்தை சேர்ந்த ஸ்ரீநிவாஸ் ( 28 ) ஆகிய 4 கைது செய்தனர். பின்னர் அவர்களை மயிலாடுதுறை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். 4 பேரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து 4 பேரும் மயிலாடுதுறை கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த வழக்கில் அகோரம், அமிர்த விஜயகுமார், ஆதீனத்தின் உதவியாளர் செந்தில், ஜெயச்சந்திரன், பிரபாகரன் ஆகிய 5 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    தருமபுரம் ஆதீனத்திற்கு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் மயிலாடுதுறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • விசாரணையில் அண்ணன் முறையிலான உறவினர்களே மாணவியை சீரழித்து இருப்பது தெரிந்தது.
    • அஜய் மற்றும் கண்ணா பாண்டா ஆகியோரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    ராயபுரம்:

    புதுவண்ணாரப்பேட்டை பூண்டி தங்கம்மாள் தெருவை சேர்ந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 13 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தாள்.

    சிறுமிக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை ராயபுரத்தில் உள்ள ஆர்.எஸ்.ஆர்.எம். ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். டாக்டர்கள் அவரை பரிசோதித்த போது மாணவி 6 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. விசாரணையில் அண்ணன் முறையிலான உறவினர்களே மாணவியை சீரழித்து இருப்பது தெரிந்தது. வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தில் வந்து மாணவியிடம் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு உள்ளனர்.

    இது தொடர்பாக ராயபுரம் அனைத்து மகளிர் போலீசார், சிறுமியின் தாயின் அக்கா மகனான மனோஜ், சிறுமியின் தந்தையின் அண்ணன் மகன்களான அஜய், கண்ணா பாண்டா ஆகிய 3 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

    இதில் மனோஜை போலீசார் கைது செய்தனர். அவர் ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வந்ததாக தெரிகிறது.

    அஜய் மற்றும் கண்ணா பாண்டா ஆகியோரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    விருகம்பாக்கம் குமரன் காலனியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவியை அவரது பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்ற போது 4 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிந்தது.

    விசாரணையில் அவரது அக்காள் கணவர் அத்துமீறியது தெரிந்தது. இது தொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • விபத்தில் பயணிகள் ஆட்டோ லாரியின் அடியில் சிக்கிக் கொண்டது.
    • இறந்தவர்கள் உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர்.

    ஜீயபுரம்:

    காரைக்காலில் இருந்து சேலம் மாவட்டம் மேச்சேரிக்கு தாது மணல் ஏற்றிக்கொண்டு ஒரு டிப்பர் லாரி புறப்பட்டது. இந்த லாரியை கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியைச் சேர்ந்த வெள்ளி ராஜா (வயது 42) என்பவர் ஓட்டி சென்றார்.

    இந்த லாரி நேற்று நள்ளிரவு 11.30 மணி அளவில் திருச்சி மாவட்டம் பட்டவாய்த்தலை சக்தி நகர் பகுதியில் வந்த போது அதன் பேரிங் பழுதானது.

    இதனால் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த அந்த லாரி தாறுமாறாக ஓடி வலது புறம் எதிரே வந்த ஆட்டோ மீது பயங்கரமாக மோதி அங்குள்ள அய்யன் வாய்க்கால் ஓரம் கவிழ்ந்தது.

    இந்த கோர விபத்தில் பயணிகள் ஆட்டோ லாரியின் அடியில் சிக்கிக் கொண்டது. அதில் பயணம் செய்த திருச்சி திருப்பராய்த்துறை அணலை கீழத் தெருவை சேர்ந்த சுசீலா (60 ), அவரது மகன் சரவணன் (38), ஆட்டோ டிரைவர் அரவிந்த் (34) ஆகிய 3 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியாகினர்.

    இதில் லாரி டிரைவர் அதிர்ஷ்டவசமாக எந்த காயமும் இன்றி உயர் தப்பினார். விபத்து நடந்து சிறிது நேரம் கழித்து தான் லாரியின் அடியில் ஆட்டோ சிக்கி இருப்பது தெரியவந்தது.

    லாரியின் ஓரம் ஆட்டோவின் ஒரு சக்கரம் மட்டும் வெளியே தெரிந்தது. அதை வைத்துத்தான் லாரிக்கு அடியில் ஆட்டோ சிக்கியது தெரியவந்தது. இது பற்றி தகவல் அறிந்த பெட்டவாய்த்தலை போலீசார் சம்பவ இடம் விரைந்தனர். பின்னர் ஜே.சி.பி. எந்திரம் மூலம் லாரியை தூக்கினர். பலியான 3 பேர் உடல்களை மீட்க முயற்சித்தனர்.

    ஆனாலும் உடல்களை முழுமையாக மீட்பதில் சிக்கல் ஏற்பட்டதால் 2 ராட்சத கிரேன்கள் வரவழைக்கப்பட்டு இறந்தவர்கள் உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர்.

    இறந்த சுசீலாவுக்கு நேற்று இரவு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. உடனே அவரது மகன் சரவணன் தாயே திருப்பராய்த்துறையில் இருந்து ஒரு ஆட்டோவில் பெட்டவாய்த்தலையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

    பின்னர் அதே ஆட்டோவில் வீடு திரும்பிய போது விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • சென்னையில் இருந்தும், பிற இடங்களில் இருந்தும் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
    • பல்வேறு பகுதிகளுக்கு 200 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 1130 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை :

    அரசு விரைவு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    முகூர்த்த தினமான இன்று மற்றும் வார விடுமுறை நாளான நாளை சனிக்கிழமை (2-ந்தேதி) ஞாயிற்றுக்கிழமை (3-ந்தேதி) ஆகிய தினங்களை முன்னிட்டு சென்னையில் இருந்தும், பிற இடங்களில் இருந்தும் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய ஊர்களுக்கு இன்று 365 பஸ்களும், நாளை (சனிக்கிழமை) 425 பஸ்களும் இயக்கப்படும்.

    மேலும், சென்னை கோயம்பேட்டில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) 70 பஸ்களும், நாளை 70 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, தினசரி இயக்கக் கூடிய பஸ்களுடன் கூடுதலாக இன்று 435 சிறப்பு பஸ்களும், நாளை (சனிக்கிழமை) 495 பஸ்களும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு 200 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 1130 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காவிரி டெல்டா மாவட்டங்களை பொன்விளையும் பூமியாக காத்தது அ.தி.மு.க. அரசு.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசைக் கண்டிக்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், தமிழகத்துக்குக் காவிரி நீர் பெற்றுத்தராத தி.மு.க. அரசை கண்டித்தும் தஞ்சாவூர் திலகர் திடலில் அ.தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் திருவாரூர் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான காமராஜ் வரவேற்று பேசினார்.

    ஆர்ப்பாட்டத்திற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை தாங்கி பேசியதாவது:-

    காவிரி டெல்டா மாவட்டங்களை பொன்விளையும் பூமியாக காத்தது அ.தி.மு.க. அரசு. ஆனால் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மீத்தேன், ஈத்தேன் திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டு விவசாயிகளுக்கு துரோகம் செய்தார்.

    இதனால் மத்திய அரசு டெல்டாவில் ஹைட்ரோகார்பன் எடுக்க தனியாருக்கு அனுமதி கொடுத்தனர். இதன் காரணமாக விவசாய நிலங்கள் பறிபோய் விடுமோ என விவசாயிகள் அச்சத்தில் உறைந்தனர். அவர்களின் அச்சத்தை போக்கும் வகையில் நானும் ஒரு விவசாயி என்பதால் காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக எனது தலைமையிலான அ.தி.மு.க. அரசு அறிவித்து சட்டம் கொண்டு வந்தது. இதனால் இன்றைக்கு மட்டுமல்ல எப்போதுமே மீத்தேன், ஹைட்ரோகார்பன் எடுக்க முடியாது. இதனை சாதித்தது அ.தி.மு.க. அரசாங்கம்.

    விவசாயிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசு என்றால் அது அ.தி.மு.க அரசுதான். விவசாயி நலமோடு வாழ அதிமுக அரசு எப்போதும் உதவும். காவிரி பிரச்சனையில் சட்டப் போராட்டம் நடத்தி அதற்கு தீர்வு கண்டதும் அ.தி.மு.க அரசுதான்.


    ஜெயலலிதா எண்ணங்கள் படி 50 ஆண்டுகால காவிரி பிரச்சனைக்கு தீர்வு கண்டோம். உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை நிறைவேற்ற நம்முடைய கோரிக்கையை அ.தி.மு.க.வின் 37 எம்பிக்கள் நடைமுறைப்படுத்த பாராளுமன்றத்தில் வலியுறுத்தி பாராளுமன்றத்தை ஒத்திவைக்க செய்ததும் அதிமுக தான். ஆனால் தற்போது தி.மு.க ஆட்சியில் விவசாயிகளுக்கு வேதனை தான் மிஞ்சியது.

    மேலும் நமக்கு கிடைக்க கூடிய காவிரி நீர் கிடைக்கவில்லை. மேகதாதுவிலும் அணை கட்டுவோம் என கர்நாடகா அரசு தொடர்ந்து கூறி வருகிறது. அதை திராணியில்லாத தி.மு.க அரசு கண்டு கொள்வதில்லை. போராடிப் பெற்றுத் தந்த வெற்றியை காக்க தவறியதும் தி.மு.க. அரசு தான்.

    காவிரி ஆணையத்தில் கர்நாடகாவிற்கு மேகதாது அணை கட்ட வைக்கப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக தமிழக அரசு அதிகாரிகள் ஓட்டு அளித்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளி நடப்பு செய்யாமல் திமுக அரசின் அதிகாரிகள் தீர்மானத்திற்கு ஆதரவாக ஓட்டளித்தது சரியான செயல் அல்ல.

    மேகதாது அணைகட்ட கருத்துரு வரக்கூடாது என்று அதிமுக போராடியது. ஆனால் தற்போது காவிரி ஆணையத்தில் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது அது எந்த வகை தீர்மானம் என்று தெரியாத நிலை உள்ளது.

    காவிரியில் இருந்து உரிய நீர் திறந்து விடாததால் டெல்டா மாவட்டங்களில் 3.5 லட்சம் ஏக்கரில் பயிர்கள் காய்ந்து வீணாகி விட்டது.

    பயிர் காப்பீடு திட்டத்தில் சேர்க்கப்பட்டு இருந்தால் ஒரு எக்டேருக்கு ரூ.84 ஆயிரம் நிவாரணம் கிடைத்து இருக்கும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதேப்போல் சம்பா, தாளடியும் உரிய தண்ணீரின்றி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

    அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக காவிரி-கோதாவரி இணைப்பு திட்டம், காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்தை முடிக்காமல் தி.மு.க. அரசு கிடப்பில் போட்டுள்ளது. தூர் வாரப்படாதால் ஏரி, குளங்களுக்கு தண்ணீர் செல்ல முடியாத நிலை. பொதுப்பணித்துறை வசம் உள்ள 14,000 ஏரிகள், ஊராட்சி நிர்வாகங்கள் வசம் உள்ள 26,000 குளங்கள் ஆகியவற்றை குடிமராமத்து திட்டம் மூலம் புனரமைத்து தூர் வார உத்தரவிட்டது அதிமுக அரசுதான்.

    அப்பொழுது ஏரி குளங்களில் இருந்து வண்டல் மண்ணை விவசாயிகள் எடுத்துச் சென்று தங்கள் வயல்களில் இயற்கை உரமாக பயன்படுத்தினர். ஆனால் தற்போது அவ்வாறு செய்ய இயலுமா? குடிமராமத்து திட்டம் மூலம் மழை நீர் சேகரிக்கப்பட்டது. நிலத்தடி நீர் உயர்ந்தது. குடிநீர் தடை இன்றி கிடைத்தது. அந்தத் திட்டத்திற்கும் மூடு விழா நடத்தியது திமுக அரசு தான்.

    தற்போது இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் போதை பொருள் விற்பனை அதிகமாக உள்ளது. திமுக அயலக அணியை சேர்ந்த ஜாபர்சாதிக் என்பவர் 2000 கோடி போதை பொருட்கள் கடத்தியதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

    போதை பொருள் நிறைந்த மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது. இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திறமையில்லாத ஆட்சி தான் காரணம்.

    போதைப்பொருள் வழக்கில் மத்திய அரசு தனி கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுங்கள். அவர்கள் எம்.பியாகி தமிழக விவசாயிகளுக்காக பாராளுமன்றத்தில் ஓங்கி குரல் கொடுப்பார்கள்.

    ஒருவேளை தி.மு.க. வெற்றி பெற்றால் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பேராசிரியர்கள், அலுவலர்கள் பணியை புறக்கணித்து சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.
    • சென்னை பல்கலைக்கழகத்திற்கு வழங்க வேண்டிய மானியத்தொகையை முறையாக வழங்க வேண்டும்.

    சென்னை:

    சென்னை பல்கலைக்கழகத்தின் 37 வங்கி கணக்குகளை வருமான வரித்துறை கடந்த 6-ந்தேதி முடக்கியது. ரூ.424 கோடி வருமான வரி செலுத்தாமல் நிலுவை வைத்து இருந்ததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    வங்கி கணக்கு முடக்கப்பட்டதால் சென்னை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு ஊதியம், ஓய்வூதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. வழக்கமாக ஒவ்வொரு மாதமும் இறுதியில் சம்பளம் வழங்கப்படும்.

    ஆனால் நேற்று வரை அவர்களுக்கு சம்பளம் கிடைக்கவில்லை. ஓய்வூதியதாரர்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இதனால் பேராசிரியர்கள், அலுவலர்கள் பணியை புறக்கணித்து சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.

    காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு அமர்ந்தனர். தமிழக அரசிடம் இருந்து சென்னை பல்கலைக்கழகத்திற்கு 2017-ம் ஆண்டு முதல் வழங்கப்படாமல் உள்ள மானிய நிலுவைத் தொகையை விரைவாக கொடுக்கக்கோரி இப்போராட்டம் நடந்தது. இதில் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றனர்.

    போராட்டம் குறித்து சென்னை பல்கலைக்கழக அலுவலக பேரவை தலைவர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:-

    மாதம் வழங்க வேண்டிய சம்பளத்தை உடனே வழங்க வேண்டும். சென்னை பல்கலைக்கழகத்திற்கு வழங்க வேண்டிய மானியத்தொகையை முறையாக வழங்க வேண்டும்.

    தற்காலிக பணியாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். அடுத்த கட்ட போராட்டம் குறித்து கலந்து பேசி முடிவு செய்வோம் என்றார்.

    • வனப்பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காட்டு யானைகள் சுற்றி திரிந்தன.
    • குட்டி யானையை பிடித்து சிகிச்சை அளிப்பதற்காக வனத்துறையினர் தேடினர்.

    வால்பாறை:

    கோவை மாவட்டம் வால்பாறை தேயிலை தோட்டங்களும், வனப்பகுதியும் நிறைந்த பகுதியாகும். வனத்தையொட்டி இருப்பதால் வனவிலங்குகள் அடிக்கடி வெளியேறி ஊருக்குள் புகுந்து வருவது வாடிக்கையாக உள்ளது. குறிப்பாக காட்டு யானைகள் அவ்வப்போது வந்து செல்கின்றன.

    வால்பாறை அருகே உள்ள கேரள மாநிலம் அதிரப்பள்ளி வனப்பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காட்டு யானைகள் சுற்றி திரிந்தன.

    அப்போது அந்த யானைகளுடன் ஒரு குட்டி யானையும் இருந்தது. அந்த குட்டியானைக்கு தும்பிக்கை இல்லாமல் இருந்தது.

    இதை பார்த்த வனத்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். குட்டி யானை தண்ணீர் குடிக்க சென்ற போது, அங்கிருந்த முதலை, குட்டி யானையை தாக்கி இருக்கலாம் என்றும், அதில் தும்பிக்கையை இழந்திருக்கலாம் எனவும் வனத்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இதையடுத்து அந்த குட்டி யானையை பிடித்து சிகிச்சை அளிப்பதற்காக வனத்துறையினர் தேடினர். ஆனால் நீண்ட நாட்களாக அந்த குட்டி யானையை பார்க்க முடியவில்லை. தொடர்ந்து வனத்துறையினர் தேடும் பணியை தீவிரப்படுத்தினர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அருகே உள்ள சாலையில் வழக்கம் போல சுற்றுலா வாகனங்கள் சென்று கொண்டிருந்தன.

    அந்த சமயம் அந்த சாலையை யானை கூட்டம் கடந்தது. அப்போது அதில் தும்பிக்கை இல்லாத குட்டி யானை ஒன்றும் நடந்து சென்றது.

    அதனை பார்த்ததும் சுற்றுலா பயணிகள் ஆச்சரியம் அடைந்தனர். தும்பிக்கை இல்லாமல் தன் தாயுடன் தன்னம்பிக்கையுடன் வாழும் குட்டி யானையை கண்டு சுற்றுலா பயணிகள் நெகிழ்ச்சி அடைந்தனர்.

    மேலும் அந்த யானையை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • தொண்டர்களின் வாழ்த்துகளை பெறுவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயம் சென்றார்.
    • தொண்டர்கள், பிரமுகர்கள் ஒவ்வொருவரும் மாலைகள், புத்தகங்கள், பழக்கூடைகள் மற்றும் நினைவு பரிசுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கினார்கள்.

    சென்னை:

    தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு இன்று 71-வது பிறந்த நாள். இதையொட்டி அவருக்கு வாழ்த்து சொல்ல அண்ணா அறிவாலயத்திலும் அவரது வீட்டு முன்பும் ஏராளமான தொண்டர்கள் காலையிலேயே குவிந்திருந்தனர்.

     முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலையில் எழுந்ததும் வீட்டில் இருந்த கலைஞரின் படத்துக்கு மாலை அணிவித்து வணங்கி விட்டு குடும்பத்தாருடன் 'கேக்' வெட்டினார்.

     அவருக்கு மனைவி துர்கா, மகன் உதயநிதி ஸ்டாலின், மகள் செந்தாமரை மற்றும் குடும்பத்தினர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

    அதன் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மெரினா கடற்கரைக்கு சென்று அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார்.

     இதைத் தொடர்ந்து வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்துக்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பெரியார் திடலில் திராவிட கழக தலைவர் கி.வீரமணி வரவேற்று வாழ்த்து தெரிவித்தார். மேளதாளம் முழங்க அங்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பொதுச் செயலாளர் துரைமுருகன், டி.ஆர்.பாலு எம்.பி, ஆ.ராசா, அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரிய சாமி, எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், சக்கர பாணி, அன்பில் மகேஷ், சென்னை மேயர் பிரியா, பரந்தாமன், புழல் நாராயணன், மதன் மோகன் மேற்கு மாவட்ட கழக செயலாளர் நே.சிற்றரசு உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் உடன் வந்திருந்தனர். கலைஞர் நினைவிடத்தில் அவரது உதவியாளர் கே.நித்யா நினைவு பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அவருடன் தலைமை பொதுக்குழு உறுப்பினர் பல்லாவரம் மு.ரஞ்சன் மற்றும் நிர்வாகிகளும் வாழ்த்து தெரிவித்தனர்.

     

    இதன் பிறகு தொண்டர்களின் வாழ்த்துகளை பெறுவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயம் சென்றார். அங்கு அவருக்கு மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி முருகன், துரை முருகன், காஜா உள்ளிட்டோர் வாசலில் நின்று வரவேற்றனர்.

    சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் நே.சிற்றரசு ஏற்பாட்டில் 'கேக்' கொண்டு வரப்பட்டது. அதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிர்வாகிகள் மத்தியில் 'கேக்' வெட்டி வழங்கினார். அதன் பிறகு கலைஞர் அரங்கிற்கு சென்று தொண்டர்களின் வாழ்த்துக்களை பெற்றார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நடிகர் கமல்ஹாசன்,நடிகர் விஜய் ஆகியோரும் வாழ்த்து செய்தி அனுப்பி இருந்தனர். அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சென்று வாழ்த்தியவர்கள் வருமாறு:-

    அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோ. அன்பரசன், தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், எம்.எல்.ஏ.க்கள் பல்லாவரம் இ.கருணாநிதி, தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா, தியாகராய நகர் எம்.எல்.ஏ.ஜெ.கருணாநிதி, ஐட்ரீம் மூர்த்தி, அம்பத்தூர் ஜோசப் சாமுவேல், ஏ.எம்.வி. பிரபாகர ராஜா, எழும்பூர் பரந்தாமன் மற்றும் படப்பை மனோகரன், வி.எஸ்.ராஜ், ஐ.கென்னடி, மா.பா.அன்பு துரை, தாயகம் கவி எம்.எல்.ஏ, பாலவாக்கம் விசுவநாதன், சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. மாணவரணி மாவட்ட அமைப்பாளர் துபாய் வி.ஆர்.விஜய், முக்கூடல் பேரூராட்சி தலைவர் ராதா, துணைத் தலைவர் லட்சுமணன் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள்,தொண்டர்கள், வாழ்த்து தெரிவித்தனர். தொண்டர்கள், பிரமுகர்கள் ஒவ்வொருவரும் மாலைகள், புத்தகங்கள், பழக்கூடைகள் மற்றும் நினைவு பரிசுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கினார்கள்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாற்காலியில் அமர்ந்தபடி தொண்டர்களிடம் வாழ்த்துகளை பெற்றார். நீண்ட கியூ வரிசையில் நின்று தொண்டர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

    • லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனையால் கள்ளக்குறிச்சி மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.
    • லஞ்ச ஒழிப்புத் துறையை ஏவிவிட்டு சோதனை மேற்கொண்டிருக்கும் விடியா திமுக அரசின் இச்செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சென்னை:

    கள்ளக்குறிச்சி தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ., பிரபு வீ்டு மற்றும் தொழில் நிறுவனங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த திடீர் சோதனையால் கள்ளக்குறிச்சி மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.

    இந்நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனைக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கள்ளக்குறிச்சி தொகுதி கழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிரபு மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, பழிவாங்கும் எண்ணத்தோடு லஞ்ச ஒழிப்புத் துறையை ஏவிவிட்டு சோதனை மேற்கொண்டிருக்கும் விடியா திமுக அரசின் இச்செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

    • நந்தனம் திடலில் பிரமாண்ட பொதுக்கூட்ட மேடை மற்றும் ஹெலிகாப்டர் இறங்கு தளங்கள் அமைக்கும் பணி இரவு-பகலாக நடந்து வருகிறது.
    • தேர்தல் பிரசாரத்துக்காக இந்த மாத இறுதியிலும் பிரதமர் மோடி தமிழகம் வர இருப்பதாகவும் அதற்கான பயண திட்டங்கள் தயாராகி வருவதாகவும் கட்சியினர் தெரிவித்தனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் வரவிருக்கும் நிலையில் பிரதமர் மோடி தமிழகத்துக்கு அடிக்கடி வருவது அரசியல் களத்தை கலகலக்க வைத்துள்ளது.

    பிரதமர் மோடி கடந்த இரண்டு மாதத்தில் 3 முறை தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஜனவரி மாதம் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்துக்கு முன்னதாக திருச்சி ஸ்ரீரங்கம், ராமேசுவரம் ஆகிய கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினார்.

    கடந்த மாதம் மீண்டும் திருச்சி வந்தார். அப்போது திருச்சி விமான நிலையத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி மற்றும் பட்டமளிப்பு விழாக்களில் பங்கேற்றார். மீண்டும் கடந்த மாதம் இறுதியில் 2 நாள் பயணமாக தமிழகம் வந்தார்.

    அப்போது பல்லடத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி மற்றும் மதுரை, தூத்துக்குடி, நெல்லையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இது கட்சியினரிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது. தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் அரசியல் ரீதியாக அவர் ஆற்றிய உரை அரசியல் களத்தை அதிர வைத்தது.

    இந்த நிலையில் மீண்டும் பிரதமர் மோடி வருகிற 4-ந்தேதி (திங்கட்கிழமை) தமிழகம் வருகிறார். முன்னதாக காலையில் தெலுங்கானா மாநிலம் ஆதிலாபாத்தில் நடைபெறும் 2 நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அதன்பிறகு அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வருகிறார்.

    பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் கல்பாக்கம் அணுமின் நிலையத்துக்கு செல்கிறார். அங்கு ரூ.400 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள விரைவு எரி பொருள் மறுசுழற்சி உலையை தொடங்கி வைக்கிறார். இது முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது.

    கல்பாக்கம் நிகழ்ச்சியை முடித்து கொண்டு ஹெலிகாப்டரில் சென்னை வருகிறார். நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் வந்து இறங்குகிறார். பின்னர் அங்கு நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.

    இதற்காக நந்தனம் திடலில் பிரமாண்ட பொதுக்கூட்ட மேடை மற்றும் ஹெலிகாப்டர் இறங்கு தளங்கள் அமைக்கும் பணி இரவு-பகலாக நடந்து வருகிறது.

    பிரதமர் வருகை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக காவல்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை உயர் அதிகாரிகள் பொதுக்கூட்டம் நடைபெறும் நந்தனம் திடலில் ஆலோசனை நடத்தினார்கள். அதைத் தொடர்ந்து செய்ய வேண்டிய ஏற்பாடுகள் பற்றியும் ஆலோசனை வழங்கினார்கள்.

    இந்திய விமானப்படை அதிகாரிகள் ஹெலிகாப்டர் இறங்கும் இடம், அதை சுற்றிலும் உள்ள மரங்கள், கட்டிடங்களை பார்வையிட்டார்கள். மொத்தம் 3 ஹெலிகாப்டர்கள் தரை இறங்கும். அதை நாளை தரையிறக்கி ஒத்திகை பார்க்க திட்டமிட்டு உள்ளார்கள்.

    4-ந்தேதிக்கு முன்னதாக கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணி கட்சி தலைவர்களையும் மேடையில் இடம்பெற வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    தற்போதைய நிலையில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், புதிய நீதிக்கட்சி ஏ.சி.சண்முகம், பாரிவேந்தர், தேவநாதன் யாதவ் ஆகியோர் கலந்து கொள்வது உறுதியாகி உள்ளது. மற்ற கட்சிகளிடமும் பேசி வருகிறார்கள்.

    பொதுக்கூட்டத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த தொண்டர்களை திரட்டும் வேலையில் கட்சியினர் ஈடுபட்டுள்ளார்கள்.

    தேர்தல் பிரசாரத்துக்காக இந்த மாத இறுதியிலும் பிரதமர் மோடி தமிழகம் வர இருப்பதாகவும் அதற்கான பயண திட்டங்கள் தயாராகி வருவதாகவும் கட்சியினர் தெரிவித்தனர்.

    ×