என் மலர்
உள்ளூர் செய்திகள்
- கணேசபுரம் மேம்பாலம் ரூ.147 கோடி மதிப்பீட்டில் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி விரைந்து முடிக்கப்படும்.
- வடசென்னையில் பிரத்யேகமாக மாசுகட்டுப்பாடு வாரியம் அமைக்கப்படும்.
சென்னை:
தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று வடசென்னை பகுதி கொளத்தூரில் பிரசாரம் செய்தார். தி.மு.க. வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து அவர் பேசும் போது கூறியதாவது:-
தேர்தலில் போனமுறை நம்முடைய எதிரிகள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து வந்தார்கள். இருந்தாலும் மிகப்பெரிய வெற்றியை தந்தீர்கள். இந்த முறை நமது எதிரிகள் தனித்தனியாக பிரிந்து அணி அணியாக வருகிறார்கள். எனவே நமக்கு இந்த முறை வெற்றி மிக சுலபம் என நினைத்து விடாதீர்கள்.
சென்னை வடக்கு பகுதியில் உள்ள உள்கட்டமைப்பு பற்றாக்குறை மற்றும் வளர்ச்சியில் உள்ள இடைவெளியை நிவர்த்தி செய்யும் வகையில் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் வடசென்னை வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 10 நாட்களுக்கு முன்புதான் முதலமைச்சர் வந்து இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.
சென்னை ஐ.சி.எப்.-கொளத்தூர் பகுதியை இணைக்கும் புதிய மேம்பாலம் ரூ.62 கோடியில் கட்டப்பட்டுள்ளது.
சென்னை காமராஜ் துறைமுகத்தின் சமூக பொறுப்பு நிதி குஜராத்துக்கு செல்வதை தடுத்து ரூ.162.85 கோடி செலவில் பல நலத்திட்ட உதவிகளை வட சென்னை மக்கள் பயன்பாட்டுக்கு நாம் வழங்கி இருக்கிறோம்.
இப்போது கொருக்குப்பேட்டை எழில்நகர் பகுதியில் சென்னை மாநகராட்சி சார்பாக ரூ.106 கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
எண்ணூர் அனல் மின் நிலையம் விரிவாக்க பணிகள் ரூ.6,381 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. மீனவர்களின் 50 ஆண்டுகால கோரிக்கையான எண்ணூர் கொசஸ்தலை ஆற்று முகத்துவாரத்தில் ரூ.141 கோடி செலவில் தூண்டில் வளைவு அமைத்து கொடுக்கப்பட்டு உள்ளது.
இதுபோன்ற பல்வேறு சாதனைகளை நமது அரசு செய்து கொடுத்துள்ளது. நமது தேர்தல் வாக்குறுதிகளில் சிலவற்றை நான் உங்களிடம் நினைவுபடுத்த விரும்புகிறேன். விம்கோ நகர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து எண்ணூர் வரை ரெயில் பாதை நீட்டித்து அமைக்கப்படும்.
ராஜாஜி நகர் மக்கள் பயன்பெறும் வகையில் வில்லிவாக்கம் ரெயில் நிலையத்தில் இருந்து தெற்கு பக்கமாக செல்வதற்கு சுரங்க நடைபாதை அமைத்து தரப்படும். கணேசபுரம் மேம்பாலம் ரூ.147 கோடி மதிப்பீட்டில் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி விரைந்து முடிக்கப்படும்.
வடசென்னையில் பிரத்யேகமாக மாசுகட்டுப்பாடு வாரியம் அமைக்கப்படும். மக்களின் சுகாதாரத்தை உறுதி செய்யும் வகையில் கொடுங்கையூரில் உள்ள குப்பைமேடு சீரமைக்கப்படும்.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் பட்டா பெறுவதில் சிக்கல்கள் உள்ளன. பலர் பட்டா பெற முடியாத நிலை உள்ளது. இதை சரி செய்ய முதலமைச்சர் ஒரு குழுவை அமைத்து உள்ளார்.
தேர்தல் முடிந்ததும் பட்டா பிரச்சனை தீர்த்து வைக்கப்பட்டு வீட்டு மனை பெற்ற அனைவருக்கும் வழங்கப்படும் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளும் அகற்றப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
மகளிருக்கு கட்டணமில்லா பஸ் சேவை, புதுமைப்பெண் திட்டம், காலை உணவுத் திட்டம், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை திராவிட மாடல் அரசு செய்து வருகிறது.
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து உரிமைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசிடம் அடகு வைத்து விட்டார். அவர்களிடம் விலை போய் விட்டார். அனைத்து முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர்கள் மீதும் சி.பி.ஐ. ரெய்டு, ஐ.டி.ரெய்டு என பல வழக்குகளை பதிவு செய்து அவர்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டனர். அவர்களது அடிமைகளாக வைத்துக் கொண்டனர்.

அதே போல் தி.மு.க.வையும் பண்ண வேண்டும் என்று நினைக்கிறார்கள். தி.மு.க. அதற்காக பயப்படுமா? நாங்கள் சொல்லி விட்டோம். மோடிக்கும் பயப்பட மாட்டோம். ஈடிக்கும் பயப்பட மாட்டோம். மோடியோட டாடி வந்தாலும் பயப்பட மாட்டோம்.
தமிழ்நாட்டு மக்களும் பெரியாரும் எங்களுக்கு சுயமரியாதை கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். பிரதமர் மோடிக்கு நாம் எல்லாம் சேர்ந்து ஒரு செல்ல பெயர் வைத்து உள்ளோம்.
இனிமேல் நீங்கள் அவரது பெயரை சொல்லி கூப்பிடக்கூடாது. அவருக்கு ஒரு பெயர் வைத்துள்ளேன். இனிமேல் நீங்கள் அத்தனை பேரும் ஒன்றிய பிரதமர் மிஸ்டர் 29 பைசா என்று அந்த பெயரை சொல்லிதான் கூப்பிட வேண்டும்.
ஏன் 29 பைசா என்று கூப்பிட வேண்டும் என சொல்கிறேன் என்றால், ஜி.எஸ்.டி. மூலம் நாம் 1 ரூபாய் கொடுக்கிறோம். ஆனால் திருப்பி நமக்கு பிரதமர் வெறும் 29பைசா தான் தருகிறார். ஆனால் மற்ற மாநிலங்களுக்கு வாரி வாரி கொடுக்கிறார்.
தமிழ்நாட்டை மட்டும் வஞ்சிக்கிறார். எனவே அவருக்கு பாடம் புகட்ட இந்த தேர்தலில் நீங்கள் எங்கள் வேட்பாளர்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுங்கள்.
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
- தி.மு.க.வும், பா.ஜ.க.வும் கச்சத்தீவு பிரச்சனையில் நடத்துகிற கபட நாடகம், வேஷங்களை தமிழக மீனவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
- மீனவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக இந்த தேர்தலில் அ.தி.மு.க. பக்கம் திரும்பி உள்ளனர்.
மதுரை:
கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக பா.ஜ.க. மற்றும் தி.மு.க. ஒருவரையொருவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வரும் நிலையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த 1974-ம் ஆண்டு கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. அப்போது தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருந்த கருணாநிதி இந்த விவகாரத்தில் வாய்மூடி மவுனியாக இருந்தார். எந்த போராட்டமும் நடத்தவில்லை, இது வரலாறு.
ஆனால் இன்றைக்கு பா.ஜ.க. கச்சத்தீவு பிரச்சனையை கையில் எடுத்துள்ளது. இதற்கு தி.மு.க.வும் பதிலளித்து பேசி வருகிறது. கச்சத்தீவு விவகாரத்தை பொறுத்தவரை தி.மு.க. பொய் பேசுகிறது என்றால் பா.ஜனதா பயங்கர பொய்யை பேசுகிறது. இது அவர்களது தேர்தல் ஸ்டண்டாகும்.
ஆனால் தமிழக மீனவர்கள் பிரச்சனையில் அ.தி.மு.க. அரசு தொடர்ந்து அவர்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறது. எனவே மீனவர்கள் இந்த தேர்தலில் அ.தி.மு.க. பக்கம் திரும்பி உள்ளனர். எனவே தான் பா.ஜனதாவும், தி.மு.க.வும் கச்சத்தீவு விவகாரத்தை கையில் எடுத்து கபடநாடகம் நடத்துகிறது.

கடந்த 2006, 2008, 2009 ஆகிய ஆண்டுகளில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஜெயலலிதா, கச்சத்தீவு விவகாரத்தில் தமிழக மீனவர்களின் உரிமை பாதுகாக்க கூடிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் பலமுறை கடிதங்கள் மூலம் கோரிக்கை வைத்தார்.
கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர்களிலும் இந்த விவகாரம் குறித்து அம்மா பேசினார். அப்போது பதில் அளித்த கருணாநிதி, தமிழக மீனவர்கள் பேராசைப்பட்டு இலங்கை கடற்பகுதிக்குள் மீன்பிடிக்க செல்வதால்தான் இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தும் நிலை ஏற்படுவதாக தெரிவித்தார். இந்த கருத்தை அன்றைக்கு அம்மா கடுமையாக எதிர்த்து கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் எதிர்க்கட்சியாக இருந்த அ.தி.மு.க. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து கச்சத்தீவு விவகாரத்தில் சட்டப் போராட்டங்கள் நடத்தியது. இதை தி.மு.க., பாரதிய ஜனதா தலைவர்கள் மறந்தாலும் மீனவர்கள் மறக்கமாட்டார்கள். இன்றைக்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கச்சத்தீவு பற்றி எதுவுமே தெரியாமல் யாரோ எழுதிக் கொடுத்ததை படிக்கிறார்.
தி.மு.க.வும், பா.ஜ.க.வும் கச்சத்தீவு பிரச்சனையில் நடத்துகிற கபட நாடகம், வேஷங்களை தமிழக மீனவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இது ஒரு தேர்தல் ஸ்டண்டாகவே அவர்கள் பார்க்கிறார்கள். எனவே மீனவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக இந்த தேர்தலில் அ.தி.மு.க. பக்கம் திரும்பி உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பாரதிய ஜனதா, காங்கிரஸ், அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டு உள்ளனர்.
- எனக்கான அங்கீகாரம் பாரதிய ஜனதா கட்சியில் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விளவங்கோடு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த விஜயதரணி, பாரதிய ஜனதா கட்சியில் இணைந்ததையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவருக்கு கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணனுக்கு பா.ஜனதா வாய்ப்பு வழங்கியது.
எனவே விளங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மீண்டும் பா.ஜ.க. சார்பில் விஜயதரணி களமிறக்கப்படுவார் என்று பேசப்பட்ட நிலையில், அதுவும் நடக்கவில்லை. அங்கு வேட்பாளராக நந்தினி களமிறக்கப்பட்டார். இதையடுத்து விஜயதரணி குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்கள் பதிவிடப்பட்டது.
இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது விளவங்கோடு இடைத்தேர்தலில், 4 முனை போட்டி நிலவுகிறது. பாரதிய ஜனதா, காங்கிரஸ், அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக தலைவர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர். இதனால் தேர்தல் களம் தற்போது சூடு பிடித்துள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் செய்தபோது, விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தலுக்கான செலவுகளை, தனது பதவியை ராஜினாமா செய்த விஜயதரணியிடம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நகைச்சுவையாக கூறினார். கனிமொழி எம்.பி. பிரச்சாரத்தின்போது, இந்த தொகுதியில் நடப்பது தேவையற்ற தேர்தல்... மக்களுக்கு தேவையான தேர்தல் என்று கூறினார்
இந்த நிலையில் விளவங்கோடு தொகுதியின் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த விஜயதரணி நேற்று வந்தார். அவர் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முதல் முறையாக கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
எனக்கான அங்கீகாரம் பாரதிய ஜனதா கட்சியில் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. விளவங்கோடு தொகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை நிறைவேற்றி உள்ளேன். பல்வேறு திட்டங்களை போராடி செய்துள்ளேன். இது மக்களுக்கு தெரியும். கடின உழைப்பால் இந்த தொகுதியை உயர்த்தி காட்டி உள்ளேன். தற்பொழுது இந்த தொகுதியில் போட்டியிடுவதற்கு பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதை நான் பெருமையாக கருதுகிறேன்.
மத்தியில் மீண்டும் பாரதிய ஜனதா ஆட்சி பிரதமர் மோடி தலைமையில் அமையும். தமிழகத்தில் 39 எம்.பி.க்கள் உள்ளனர். வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றால் எந்த நன்மையையும் கிடைக்காது. எனவே கன்னியாகுமரி உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து பாராளுமன்ற தொகுதிகளிலும் பாரதிய ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற வேண்டும். மத்தியில் எந்த கட்சி ஆட்சி நடத்து கிறதோ அந்த கட்சியை சேர்ந்தவர் வெற்றி பெற்றால் மட்டுமே, தொகுதிக்கு வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற முடியும். கடந்த 10 ஆண்டுகளாக தமிழ கத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள், பாராளுமன்றம் முன்பு பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தியதுடன் வேறு எதுவும் செய்யவில்லை. இந்த நிலை மாற வேண்டும். ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக வரவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன், நாகர்கோவிலில் தனது தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டார். இதிலும் விஜயதரணி பங்கேற்றார். முன்னதாக பார்வதிபுரம் பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் பொன். ராதாகிருஷ்ணன் தரிசனம் செய்தார். அவருக்கு பூசாரி விபூதி பூசி ஆசி வழங்கினார். விஜயதரணிக்கும் ஆசி வழங்கிய பூசாரி, தனது இரண்டு கைகளால் அவரது கன்னத்திலும் விபூதியை பூசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக தொடங்கியுள்ளது.
- முதலமைச்சர் வருகையொட்டி சி.எம்.சி. ஆஸ்பத்திரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
- ஆற்காடு ரோட்டில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.
வேலூர்:
வேலூர் கோட்டை மைதானத்தில் இன்று தி.மு.க. பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார்.
இதற்காக மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர் இன்று கார் மூலம் வேலூர் வந்தனர்.

வேலூர் சி.எம்.சி ஆஸ்பத்திரியில் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துர்கா ஸ்டாலின் ஆகியோர் சி.எம்.சி. ஆஸ்பத்திரிக்கு சென்றனர்.
அங்கு துரை தயாநிதியை சந்தித்து நலம் விசாரித்தனர். அப்போது அமைச்சர் துரைமுருகன் உடன் இருந்தார்.
முதலமைச்சர் வருகையொட்டி சி.எம்.சி. ஆஸ்பத்திரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆற்காடு ரோட்டில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.
- மக்களை பிரதமர் மோடி சந்தித்து ஆறுதல் தெரிவிக்கவில்லை.
- தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பிரதமர் மோடி அணுகி வருகிறார்.
மதுரை:
மதுரையில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை ஆதரித்து நடிகை ரோகிணி மதுரையில் பல்வேறு பகுதிகளில் வாகன பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
மக்களின் குரல் உண்மையாகவே பாராளுமன்றத்தில் ஒலிக்க செய்ய வேண்டுமானால் நமது வேட்பாளரை வெற்றிபெற செய்ய வேண்டும். மக்களின் குரலை எதிரொலிக்க பாராளுமன்றத்தில் அக்கட்சியின் பலம் அதிகரிக்க வேண்டும். பா.ஜ.க. 400 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என பிரதமர் மோடி ஆசைப்படுகிறார். ஆனால் அதை முடிவு செய்ய வேண்டியது மக்கள்தான். யாரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதை மக்கள்தான் முடிவு செய்வார்கள்.
ஜனநாயகத்தையும் மதச் சார்பின்மையையும் காக்க மக்கள் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும். மழை, வெள்ளத்தால் தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டு தத்தளித்தபோது மத்திய அரசு நிவாரணமாக ஒரு பைசா கூட தரவில்லை. அப்போது வந்து மக்களை பிரதமர் மோடி சந்தித்து ஆறுதல் தெரிவிக்கவில்லை. ஆனால் இப்போது தேர்தல் நேரம் என்பதால் ஓட்டு கேட்க மட்டும் தமிழகத்துக்கு அடுத்தடுத்து ஓடோடி வருகிறார்.
தமிழக மக்கள் மிகவும் தெளிவாக உள்ளனர். எனவே இந்த தேர்தலில் பா.ஜ.க.வுக்கு தகுந்த பாடம் புகட்டுவர். தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பிரதமர் மோடி அணுகி வருகிறார். தமிழகத்துக்கு எந்தவொரு நன்மையையும் செய்துவிடக் கூடாது என்ற திடமான முடிவோடு இருக்கிறார். தேர்தல் பத்திரங்கள் மூலம் பா.ஜ.க. பல்லாயிரக்கணக்கான கோடி பணத்தை திரட்டி ஊழல் செய்துள்ளது. தமிழகம் மட்டுமின்றி தென்னிந்தியா அனைத்திலும் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- தமிழகத்தை பொறுத்த வரை அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு மட்டுமே போட்டி.
- கடந்த முறை எம்.பி.யாக இருந்த வெங்கடேசன் இந்த முறையும் போட்டியிடுகிறார்.
மதுரை:
மதுரை பாராளுமன்ற தொகுதியல் அ.தி.மு.க. சார்பில் மக்களின் மருத்துவர் டாக்டர் சரவணன் போட்டியிடுகிறார். இதையொட்டி தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்த செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இதில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வேட்பாளர் டாக்டர் சரவணன் பேசியதாவது:-
தமிழகத்தை பொறுத்த வரை அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு மட்டுமே போட்டி. எடப்பாடி பழனிசாமி மக்களுக்காக சேவையாற்றி வருகிறார். தி.மு.க.வுடன் கம்யூனிஸ்டு கட்சி கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்திக்கிறார்கள். கடந்த முறை எம்.பி.யாக இருந்த வெங்கடேசன் இந்த முறையும் போட்டியிடுகிறார். அவர் டுவிட்டர் அரசியல் வாதியாக செயல்பட்டு வருகிறார். மதுரை மக்களுக்காக எந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை.
கடந்த 4 வருடங்களாக மக்களை சந்திக்காத அவர் தற்போது தேர்தல் நேரத்தில் மக்களை சந்திக்கிறார். அவரது சொத்து 10 மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த தேர்தலின்போது சு.வெங்கடேசன் உள்ளிட்ட எண்ணற்ற 44 வாக்குறுதிகளை மதுரை மக்களுக்கு அளித்திருந்தார். ஆனால் அதை எதையும் நிறைவேற்றவில்லை. மோடி, மு.க.ஸ்டாலின் வாயால் வடை சுடுவது போல சு வெங்கடேசனும் 44 ஊசி போன வடைகளை சுட்டுள்ளார்.

இது மதுரை மக்களுக்கு ஆரோக்கியமானதல்ல. கீழடிக்கு அவர் தன்னை முன்னிலை படுத்தி வருகிறார். கீழடி தொடர்பாக முதலில் வெளிப்படுத்தியவர் வரலாற்று ஆசிரியர் பாலசுப்பிரமணியன். ஆனால் வெங்கடேசன் உரிமை கொண்டாடி வருகிறார். இதன் மூலம் அவர் போலி விளம்பர அரசியல் செய்து வருகிறார்.
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் மதுரை பாராளுமன்ற தொகுதிக்கு 26 வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டிருந்தன. கடந்த 10 ஆண்டுகால ஆட்சியின் போது மதுரையில் பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தியது அ.தி.மு.க. தான். குறிப்பாக மருத்துவ படிப்பில் அரசு பள்ளியில் படிப்பவர்களுக்கு உள் இடஒதுக்கீடு. குடிமராமத்து பணி, அம்மா கொண்டு வந்த மழைநீர் சேகரிப்பு திட்டம், மடிக்கணினி, பெண்களுக்கு இலவச கால்நடை திட்டம்
திட்டங்களை அ.தி.மு.க. செயல்படுத்தி உள்ளது. மதுரை மாவட்டத்தில் அ.தி.மு.க. ஆட்சியின்போது ரூ.7 ஆயிரம் கோடி மதிப்பில் வளர்ச்சிப்பணிகள் நிறைவேற்றப்பட்டன.
தி.மு.க. அரசு கடந்த முறை தேர்தல் அறிக்கையின்போது கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.100 குறையும் என தெரிவித்தார்கள். ஆனால் அதனை நிறைவேற்றவில்லை. பெட்ரோல், டீசல் விலையை ரூ.3 மட்டும் குறைத்தார்கள். தற்போது 75 ரூபாய்க்கு பெட்ரோல், டீசல் விலை கொண்டு வருவோம் என கூறுகிறார்கள். தி.மு.க. அரசு இதுபோன்ற பொய் வாக்குறுதிகளை அளித்து ஆசையை தூண்டுகிறார்கள். ஆனால் மக்கள் ஏமாற மாட்டர்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
- தேர்தல் அறிவிப்பு வருவதற்கு சில நாட்களுக்கு முன்பு தேர்தல் ஆணையர் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும்?
- இந்த ஆட்சி மீண்டும் தொடர்ந்தால் நாட்டில் ஜனநாயகம் அழிந்து விடும்.
மதுரை:
மதுரையில் தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசாரத்தில் அவர் பேசியதாவது:-
பா.ஜ.க.வின் செயல்பாடுகள் காரணமாக தற்போது நாட்டின் நிலையைப் பார்த்தால் மீண்டும் ஆங்கிலேய ஆட்சி வந்து விட்டதோ என்ற சந்தேகம் மக்களுக்கு எழுந்துள்ளது. தேர்தல் நேரத்தில் 2 முதலமைச்சர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். எதிர்க்கட்சிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்படுகின்றன. இதனால் அனைத்து கட்சிகளும் பாரபட்சமின்றி தேர்தலை சந்திக்க இயலாத நிலை உள்ளது.
தேர்தல் அறிவிப்பு வருவதற்கு சில நாட்களுக்கு முன்பு தேர்தல் ஆணையர் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும்? புதிய சட்டத்தின் படி 2 தேர்தல் ஆணையர்கள் ஏன் நியமிக்கப்பட்டனர்? இது முழுக்க முழுக்க மத்திய அரசின் ஒரு சார்பான நடத்தையையே காட்டுகிறது.
இந்த நாட்டில் என்னதான் நடக்கிறது? 543 தொகுதிகளில் ஒரு தேர்தலை நடத்த 3 மாதம் ஆகும் நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தலை எப்படி நடத்துவீர்கள்? இந்த லட்சணத்தில் ஒரே நாடு, ஒரே தேர்தலை நடத்த வேண்டுமானால் தேர்தல் ஆணையத்துக்கு 2 ஆண்டுகள் தேவைப்படும்.
ஜாமின் கொடுக்காமல், வழக்கு விசாரணை நடத்தாமல் ஒரு அமைச்சரை 1 வருடம் சிறையில் வைத்திருக்கின்றனர். அதேபோல் டெல்லியிலும் அமைச்சர்களை சிறை வைத்துள்ளனர். அன்றைக்கு சர்வாதிகார மன்னர் லண்டனில் இருந்தார் தற்போது டெல்லியில் இருக்கிறார். இந்த ஆட்சி மீண்டும் தொடர்ந்தால் நாட்டில் ஜனநாயகம் அழிந்து விடும்.
தமிழகத்துக்கு கடன் உதவி கிடைக்காத வகையில், உலக வங்கி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு தமிழகத்துக்கு நிதி அளிக்கக் கூடாது என அழுத்தம் கொடுத்து வருகின்றனர். தமிழக வரிப்பணத்தை மட்டும் வாரிச் சுருட்டிக் கொண்டு செல்லும் மத்திய பாஜக அரசு, பேரிடர்களுக்கு 1 ரூபாய் கூட தருவதில்லை. நிதி கேட்டால் சமஸ்கிருதத்தையும் இந்தியையும் திணிக்கிறார்கள்.
நாங்கள் சொல்லும் திட்டத்தின் கீழ் கல்வி கற்றுக்கொள்ளுங்கள், நாங்கள் நடத்தும் நீட் தேர்வை எழுதுங்கள் என கூறுகின்றனர். அரசியலமைப்பு கொடுத்த மாநில உரிமைகளை பறித்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
Madurai: Tamil Nadu Minister Dr Palanivel Thiaga Rajan says, "A minister from Tamil Nadu has been in jail for a year without bail. Similarly, the Chief Minister and ministers of the Delhi government are in jail. If this government continues, democracy will be completely… https://t.co/Ud3IbP3Vkh pic.twitter.com/pysVg0q1sS
— ANI (@ANI) April 2, 2024
- தற்போது உள்ள 1 மற்றும் 2-ம் கட்ட வழித்தடத்தில் இயக்கப்படும் மெட்ரோ ரெயில் பாதைக்கு மேலே இந்த வழித்தடம் அமைகிறது.
- அந்த பகுதியை பயணிகள் மெட்ரோ ரெயில் மூலம் கடக்கும் போது புதிய உணர்வை ஏற்படுத்தும்.
சென்னை:
சென்னை மெட்ரோ ரெயிலின் 2-வது கட்ட திட்டப்பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
மாதவரத்தில் இருந்து சோழிங்கநல்லூர் செல்லும் 5-வது வழித்தடத்தில் கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் பிரமிக்க வைக்கும் உயரத்தில் மெட்ரோ ரெயில் இயக்கப்பட உள்ளது.
தற்போது உள்ள 1 மற்றும் 2-ம் கட்ட வழித்தடத்தில் இயக்கப்படும் மெட்ரோ ரெயில் பாதைக்கு மேலே இந்த வழித்தடம் அமைகிறது.
இதனால் அந்த பகுதியை பயணிகள் மெட்ரோ ரெயில் மூலம் கடக்கும் போது புதிய உணர்வை ஏற்படுத்தும். இன்னும் சில ஆண்டுகளில் புதிய பாதையில் பயணிக்கும் போது நவீன தொழில்நுட்பத்தில் கட்டப்படும் மேம்பாலம், குறுக்காக கீழே செல்லும் மெட்ரோ ரெயில்களை பார்த்து ரசிக்க முடியும்.
சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தில் இதுவரை இல்லாத உயரத்திற்கு கிண்டியில் மிக உயரமான தூண்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த மிக உயரமான தூண்களை கட்டமைக்கும் பணி சவாலாக உள்ளது எனவும் இந்த வேலையை லார்சன் அண்ட் டூப்போரா நிறுவனம் மேற்கொண்டு உள்ளது.
இதுகுறித்து திட்ட இயக்குனர் டி.அர்ச்சுணன் கூறியதாவது:-
விம்கோ நகர்-விமான நிலையம், சென்ட்ரல்-பரங்கிமலை மெட்ரோ ரெயில் வழித்தடத்திற்கு மேலே இந்த மேம்பாலம் அமைவது பெரும் சவாலான பணியாகும்.
'பேலன்ஸ் கான்டிலீவர்' என்ற பொறியியல் முறையை பின்பற்றி சமச்சீர் காண்டிலீவர் முறை 2 காரணங்களுக்காக எடுக்கப்படுகிறது.

சாலையில் அதிக போக்குவரத்து இருக்கும் போது தரையில் குறைந்த இடவசதி இருப்பதாலும் இந்த முறை செயல்படுத்தப்படுகிறது. மேலும் தூண்களை மிக உயரத்தில் கட்ட வேண்டும். இந்த முறையில் தூண்களுக்கு இடையே உள்ள தூரம் மிக அதிகம். முதல் கட்ட மெட்ரோ ரெயில் பணியில் அதே முறையை பயன்படுத்தி தூண்கள் கட்டப்பட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுபற்றி எல் அண்ட் டி திட்ட மேலாளர் கிருஷ்ண பிரபாகர் கூறியதாவது:-
சமச்சீரான கேண்டிலீவர் கட்டுமானத்தில் கத்திப்பாரா சந்திப்பில் மேற்கொள்ளப்பட்டு பட்ரோடு மற்றும் ஆலந்தூர் இடையே கூர்மையான வளைவை உருவாக்க சிறப்பு வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. 125 மீட்டர் சுற்றளவுக்கு இந்த வளைவலான பாதை அமைகிறது.
கத்திப்பாரா மேம்பாலத்தின் அதிகபட்ச உயரம் 12 மீட்டர் என்றாலும் சென்னை மெட்ரோ ரெயிலின் தாழ்வாரம் 20 மீட்டர் உயரத்தில் செல்கிறது. தூண்கள் 30 மீட்டருக்கும் அதிகமான உயரத்துடன் இருப்பதால் கான்கிரீட் அல்லது கட்டிட இடிபாடுகள் எவர் மீதும் விழாமல் இருக்கவும் பொதுமக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாமல் இருக்கவும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கிறோம்.
மிக உயரமான தூண்கள் அடித்தளம் கத்திப்பாராவில் உள்ள பால்வெல்ஸ் சாலையில் உள்ளது. இது சாதாரண தூண் போல் இல்லாமல் மிகப்பெரியது.
உயரமான தூணின் அடித்தளம் 1.5 மீட்டர் விட்டம் மற்றும் 12 பைல்கள் கொண்டதாகவும் தற்போது அடித்தளம் அமைக்கப்பட்டு விட்டதால் தூண் கட்டுவதற்கான முக்கிய பணிகள் தொடங்க உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் இந்த மாதம் முதல் ஜூன் மாதம் வரையில் அனல் காற்றுடன் வெப்ப அலை வீசும்.
- மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளையொட்டிய பகுதிகளில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் நேரத்தில் கடுமையான வெயில் வாட்டி எடுக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் இந்த மாதம் முதல் ஜூன் மாதம் வரையில் அனல் காற்றுடன் வெப்ப அலை வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த 3 வாரங்களும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர்களும் கணித்துள்ளனர். இது தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளரான ஸ்ரீகாந்த் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தில் கோடை வெப்பம் வரும் நாட்களில் அதிகமாக வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக சென்னையில் மேற்கு புறநகர் பகுதிகளில் வெயில் வாட்டி எடுக்கவும் வாய்ப்பு உள்ளது. சென்னையில் கோடைமழை பெய்வதற்கான அறிகுறிகள் தற்போது தென்படவில்லை. அதே நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளையொட்டிய பகுதிகளில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் கோடை வெப்பம் தேர்தல் நேரத்தில் இப்போது இருப்பதை விட மேலும் அதிகமாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மைய அதிகாரிகளும் கணித்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே 10 மாவட்டங்களில் 100 டிகிரியை எட்டும் அளவுக்கு வெயில் பதிவாகி உள்ளது. இதே வெப்பநிலை அடுத்த சில நாட்களிலும் நீடிக்கவே வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியுள்ளனர். குறிப்பாக அடுத்த 5 நாட்களுக்கு அதிக வெப்பம் மற்றும் ஈரப்பதம் காரணமாக அசவுகரியமான நிலை ஏற்படும். புழுக்கம், வியர்வை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றும் அதிகாரிகள் கூறி உள்ளனர்.
- உலக கோட்டீஸ்வரர்கள் வரிசையில் 2014 ஆம் ஆண்டு 609 இடத்தில் இருந்த அதானி, இன்றைக்கு 13-வது இடத்தில் உயர்வதற்கு யார் காரணம்? யார் பொறுப்பு?
- தேர்தல் பத்திர நன்கொடை ஊழல் மூலம் ரூபாய் 6572 கோடி குவித்த பிரதமர் மோடி ஊழலைப் பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப் பெருந்தகை வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக பா.ஜ.க. அரசு எப்போதும் செயல்பட்டதில்லை என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.
கடந்த 9 ஆண்டுகளில் மோடியின் நெருங்கிய நண்பரான அதானியின் சொத்து 2229 சதவிகிதமும், அம்பானியின் சொத்து 400 சதவிகிதமும் அதிகரித்து இருக்கிறது. உலக கோட்டீஸ்வரர்கள் வரிசையில் 2014 ஆம் ஆண்டு 609 இடத்தில் இருந்த அதானி, இன்றைக்கு 13-வது இடத்தில் உயர்வதற்கு யார் காரணம்? யார் பொறுப்பு? மோடி ஆட்சியால் கார்ப்பரேட்டுகள் பயனடைந்தார்கள். அதனால் தேர்தல் பத்திர நன்கொடை ஊழல் மூலம் ரூபாய் 6572 கோடி குவித்த பிரதமர் மோடி ஊழலைப் பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை.
போதை பொருள் தடுப்புக்காக கொண்டு வரப்பட்ட சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தை அரசியல் காரணங்களுக்காக எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்கு பா.ஜ.க. பயன்படுத்தி வருகிறது. இத்தகைய பாசிச, சர்வாதிகார ஆட்சி நடத்தி வருகிற பிரதமர் மோடி வருகிற மக்களவை தேர்தலில் மக்கள் உரிய தீர்ப்பை வழங்கி ஜனநாயகத்தை காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- கவுஸ்பீக்கு ஆதரவாக அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரும் ராஜாவை திட்டினார்.
- விக்னேஷ் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த குண்டுப்பட்டி கிராமத்தில் 17 குடியிருப்பு வீடுகள் உள்ளன.
இக்கிராமத்தின் குடிநீர் தேவைக்காக கிராமத்தின் மையப்பகுதியில் புளியம்பட்டி ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் சின்டெக்ஸ் டேங்க் அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த 26-ந் தேதி அன்று ராஜா (வயது55) என்பவர் அதே பகுதியில் உள்ள சின்டெக்ஸ் டேங்க் அருகே கட்டி வரும் புதிய குடியிருப்பு வீட்டிற்கு பைப் மூலம் தண்ணீர் எடுத்துள்ளார். இதனை அருகே குடியிருக்கும் கவுஸ்பீ என்பவர், தட்டி கேட்டார்.
இதைத்தொடர்ந்து ராஜா கட்டிடத்திற்கு எடுத்து சென்ற குடிநீர் பைப் லைனை அகற்றியுள்ளார். இதனால் ராஜாவுக்கும், கவுஸ்பீக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் பேச்சுவார்த்தை முற்றிவிட, கவுஸ்பீயின் மருமகள் பாத்திமா (30) வீட்டிலிருந்து வெளியே வந்து ராஜாவை திட்டியுள்ளார். அப்போது கவுஸ்பீக்கு ஆதரவாக அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரும் ராஜாவை திட்டினார்.
அப்போது அவர் ராஜவையும் அவரது மகன்கள் மணி (25), பிரபு (23) ஆகியோரை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த ராஜாவின் மகன் மணி வீட்டிலிருந்த கட்டையை எடுத்து வந்து விக்னேஷை தாக்க முயன்றார். அதற்குள் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இதனை விக்னேஷ் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இதனால், குடிநீர் பிடிப்பதில் தகராறு பிரச்சனை, மத பிரச்சனையாக மாறியதாக புரளி கிளம்பியது. மேலும், இந்த வீடியோ மாவட்டம் முழுவதும் பரவியதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து போச்சம்பள்ளி போலீசார் இருதரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்து விக்னேஷ், மணி, பிரபு ஆகிய 3 பேரை கைது செய்து தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி சிறையில் அடைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தலைமறைவாக உள்ள பழனிசாமி மற்றும் வெண்ணிலா ஆகியோரை தேடி வருகின்றனர். இதுகுறித்து கைதான கவுஸ்பீ கூறியதாவது:- எங்களுக்குள் குடிநீர் பிடிப்பதில் தான் தகராறு ஏற்பட்டது. மற்றபடி சமூக வலைதளங்களில் வெளியானது அனைத்தும் புரளி என்று தெரிவித்தார்.
- தமிழக முதலமைச்சராக இருந்த கருணாநிதி மற்றும் தலைமை செயலாளர் ஒப்புதலுடன் தான் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டு உள்ளது.
- 2004 முதல் 2014-ம் ஆண்டு வரை மட்டும் 600-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளனர்.
மேட்டுப்பாளையம்:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பாரதிய ஜனதா தேர்தல் அலுவலகத்தை இன்று மத்திய மந்திரி எல்.முருகன் திறந்துவைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கச்சத்தீவு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஒப்புதலுடன் தான் தாரைவார்க்கப்பட்டுள்ளது.
கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்க சென்னையில் நடந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் மற்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர், இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்றுள்ளனர்.
அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த கருணாநிதி மற்றும் தலைமை செயலாளர் ஒப்புதலுடன் தான் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டு உள்ளது. அது குறித்து தற்போதைய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் உரிய ஆதாரங்களுடன் விளக்கி அதனை சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் 2004 முதல் 2014-ம் ஆண்டு வரை மட்டும் 600-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளனர். இதற்கு முழு காரணம் கச்சத்தீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டது தான். இதற்கு முழு பொறுப்பு அப்போதைய காங்கிரஸ் மற்றும் தி.மு.க. கூட்டணி அரசு தான். இதனால் இன்று வரை தமிழக மீனவர்கள் பாதிப்படைந்து வருகிறார்கள். எனவே மீனவர்களின் இந்த நிலைக்கு தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சி தான் காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.






