search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தி.மு.க.வை அடிமையாக்க நினைக்கும் பிரதமர் மோடிக்கு பயப்பட மாட்டோம்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
    X

    தி.மு.க.வை அடிமையாக்க நினைக்கும் பிரதமர் மோடிக்கு பயப்பட மாட்டோம்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

    • கணேசபுரம் மேம்பாலம் ரூ.147 கோடி மதிப்பீட்டில் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி விரைந்து முடிக்கப்படும்.
    • வடசென்னையில் பிரத்யேகமாக மாசுகட்டுப்பாடு வாரியம் அமைக்கப்படும்.

    சென்னை:

    தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று வடசென்னை பகுதி கொளத்தூரில் பிரசாரம் செய்தார். தி.மு.க. வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து அவர் பேசும் போது கூறியதாவது:-

    தேர்தலில் போனமுறை நம்முடைய எதிரிகள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து வந்தார்கள். இருந்தாலும் மிகப்பெரிய வெற்றியை தந்தீர்கள். இந்த முறை நமது எதிரிகள் தனித்தனியாக பிரிந்து அணி அணியாக வருகிறார்கள். எனவே நமக்கு இந்த முறை வெற்றி மிக சுலபம் என நினைத்து விடாதீர்கள்.

    சென்னை வடக்கு பகுதியில் உள்ள உள்கட்டமைப்பு பற்றாக்குறை மற்றும் வளர்ச்சியில் உள்ள இடைவெளியை நிவர்த்தி செய்யும் வகையில் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் வடசென்னை வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 10 நாட்களுக்கு முன்புதான் முதலமைச்சர் வந்து இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    சென்னை ஐ.சி.எப்.-கொளத்தூர் பகுதியை இணைக்கும் புதிய மேம்பாலம் ரூ.62 கோடியில் கட்டப்பட்டுள்ளது.

    சென்னை காமராஜ் துறைமுகத்தின் சமூக பொறுப்பு நிதி குஜராத்துக்கு செல்வதை தடுத்து ரூ.162.85 கோடி செலவில் பல நலத்திட்ட உதவிகளை வட சென்னை மக்கள் பயன்பாட்டுக்கு நாம் வழங்கி இருக்கிறோம்.

    இப்போது கொருக்குப்பேட்டை எழில்நகர் பகுதியில் சென்னை மாநகராட்சி சார்பாக ரூ.106 கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    எண்ணூர் அனல் மின் நிலையம் விரிவாக்க பணிகள் ரூ.6,381 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. மீனவர்களின் 50 ஆண்டுகால கோரிக்கையான எண்ணூர் கொசஸ்தலை ஆற்று முகத்துவாரத்தில் ரூ.141 கோடி செலவில் தூண்டில் வளைவு அமைத்து கொடுக்கப்பட்டு உள்ளது.

    இதுபோன்ற பல்வேறு சாதனைகளை நமது அரசு செய்து கொடுத்துள்ளது. நமது தேர்தல் வாக்குறுதிகளில் சிலவற்றை நான் உங்களிடம் நினைவுபடுத்த விரும்புகிறேன். விம்கோ நகர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து எண்ணூர் வரை ரெயில் பாதை நீட்டித்து அமைக்கப்படும்.

    ராஜாஜி நகர் மக்கள் பயன்பெறும் வகையில் வில்லிவாக்கம் ரெயில் நிலையத்தில் இருந்து தெற்கு பக்கமாக செல்வதற்கு சுரங்க நடைபாதை அமைத்து தரப்படும். கணேசபுரம் மேம்பாலம் ரூ.147 கோடி மதிப்பீட்டில் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி விரைந்து முடிக்கப்படும்.

    வடசென்னையில் பிரத்யேகமாக மாசுகட்டுப்பாடு வாரியம் அமைக்கப்படும். மக்களின் சுகாதாரத்தை உறுதி செய்யும் வகையில் கொடுங்கையூரில் உள்ள குப்பைமேடு சீரமைக்கப்படும்.

    சென்னையின் பல்வேறு பகுதிகளில் பட்டா பெறுவதில் சிக்கல்கள் உள்ளன. பலர் பட்டா பெற முடியாத நிலை உள்ளது. இதை சரி செய்ய முதலமைச்சர் ஒரு குழுவை அமைத்து உள்ளார்.

    தேர்தல் முடிந்ததும் பட்டா பிரச்சனை தீர்த்து வைக்கப்பட்டு வீட்டு மனை பெற்ற அனைவருக்கும் வழங்கப்படும் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளும் அகற்றப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

    மகளிருக்கு கட்டணமில்லா பஸ் சேவை, புதுமைப்பெண் திட்டம், காலை உணவுத் திட்டம், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை திராவிட மாடல் அரசு செய்து வருகிறது.

    முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து உரிமைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசிடம் அடகு வைத்து விட்டார். அவர்களிடம் விலை போய் விட்டார். அனைத்து முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர்கள் மீதும் சி.பி.ஐ. ரெய்டு, ஐ.டி.ரெய்டு என பல வழக்குகளை பதிவு செய்து அவர்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டனர். அவர்களது அடிமைகளாக வைத்துக் கொண்டனர்.


    அதே போல் தி.மு.க.வையும் பண்ண வேண்டும் என்று நினைக்கிறார்கள். தி.மு.க. அதற்காக பயப்படுமா? நாங்கள் சொல்லி விட்டோம். மோடிக்கும் பயப்பட மாட்டோம். ஈடிக்கும் பயப்பட மாட்டோம். மோடியோட டாடி வந்தாலும் பயப்பட மாட்டோம்.

    தமிழ்நாட்டு மக்களும் பெரியாரும் எங்களுக்கு சுயமரியாதை கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். பிரதமர் மோடிக்கு நாம் எல்லாம் சேர்ந்து ஒரு செல்ல பெயர் வைத்து உள்ளோம்.

    இனிமேல் நீங்கள் அவரது பெயரை சொல்லி கூப்பிடக்கூடாது. அவருக்கு ஒரு பெயர் வைத்துள்ளேன். இனிமேல் நீங்கள் அத்தனை பேரும் ஒன்றிய பிரதமர் மிஸ்டர் 29 பைசா என்று அந்த பெயரை சொல்லிதான் கூப்பிட வேண்டும்.

    ஏன் 29 பைசா என்று கூப்பிட வேண்டும் என சொல்கிறேன் என்றால், ஜி.எஸ்.டி. மூலம் நாம் 1 ரூபாய் கொடுக்கிறோம். ஆனால் திருப்பி நமக்கு பிரதமர் வெறும் 29பைசா தான் தருகிறார். ஆனால் மற்ற மாநிலங்களுக்கு வாரி வாரி கொடுக்கிறார்.

    தமிழ்நாட்டை மட்டும் வஞ்சிக்கிறார். எனவே அவருக்கு பாடம் புகட்ட இந்த தேர்தலில் நீங்கள் எங்கள் வேட்பாளர்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுங்கள்.

    இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

    Next Story
    ×