என் மலர்
உள்ளூர் செய்திகள்
- கண்டக்டர் கார்த்திக்ராஜாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீவைகுண்டம்:
கம்பத்தில் இருந்து திருச்செந்தூர் நோக்கி அதிகாலை அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது.
இந்த பஸ்சை பாளையங்கோட்டை, மேலபுத்தனேரியை சேர்ந்த சுடலை மணி என்பவர் ஓட்டி வந்தார். இதில் திருச்செந்தூர் அருகே உள்ள நடுநாலு மூலைக்கிணறு பகுதியை சேர்ந்த கார்த்திக் ராஜா என்பவர் கண்டக்ராக பணியில் இருந்துள்ளார்.
இந்த அரசு பஸ் அதிகாலை 3 மணி அளவில் ஸ்ரீவைகுண்டம் அடுத்த நவலெட்சுமிபுரம் அருகே வந்து கொண்டிருந்தபோது 5 பேர் கொண்ட மர்ம கும்பல் தாமிரபரணி ஆற்றுப்படுகையில் நின்று அரசு பஸ் மீது கல்வீசி தாக்கி உள்ளனர். இதில் கண்டக்டர் கார்த்திக்ராஜாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே டிரைவர் சுடலை மணி சுதாரித்துக் கொண்டு பஸ்சை வேகமாக ஓட்டி உள்ளார். பின்னால் தொடர்ந்து வந்த அந்த மர்ம கும்பல் அரசு பஸ்சின் பின்பக்க கண்ணாடியை கல்வீசி தாக்கியுள்ளது. இதில் பின்பக்க கண்ணாடியும் உடைந்தது.
இதைத்தொடர்ந்து பஸ் டிரைவர் ஆழ்வார்திருநகரி அரசு மருத்துவமனையில் பஸ்சை நிறுத்தி விட்டு இருவரும் முதலுதவி சிகிச்சை பெற்றனர். அதன்பின்னர் இதுகுறித்து ஆழ்வார்திருநகரி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில் அரசு பஸ் டிரைவர் பயணிகள் அனைவரையும் போலீஸ் பாதுகாப்புடன் திருச்செந்தூரில் கொண்டு இறக்கி விட்டு விட்டு ஆழ்வார்திருநகரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் ஆழ்வார்திருநகரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாமிரபரணி ஆற்றுப்படுகையில் நின்று அதிகாலையில் அரசு பஸ் மீது கல்வீச காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் டி.எஸ்.பி. மாயவன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இரவு நேரங்களில் தாமிரபரணி ஆற்றில் மண் கடத்தலில் ஈடுபடும் கும்பல் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதா? அல்லது கஞ்சா போன்ற போதை பொருட்களை பயன்படுத்தும் கும்பல் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதா? என்பதை அறிந்து உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். .
- மனைவி சரண்யாவுடன் 2 நாட்கள் மட்டுமே வாழ்ந்த நிலையில் அரிதாஸ் வெளியூருக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவானார்.
- தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த கருவேப்பிலங்குறிச்சி போலீசார் சரண்யாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம்:
விருத்தாசலம் வட்டம் சாத்துக்கூடல் கிராமத்தைச் சேர்ந்தவர் சரண்யா (வயது22). பி.ஏ. பட்டதாரி. இவர் அதே ஊரை சேர்ந்த தனாதிபதி மகன் அரிதாஸ்(24) என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.
இருவரும் காதலித்து வந்த நிலையில், அரிதாஸ் சரண்யாவிடம் ஆசை வார்த்தை கூறி அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதனால் கர்ப்பம் அடைந்த சரண்யா தம்மை உடனடியாக திருமணம் செய்து கொள்ளுமாறு அரிதாசை வற்புறுத்தியுள்ளார். ஆனால் அதற்கு சம்மதிக்காத அரிதாஸ், பின்னர் திருமணம் செய்து கொள்ளலாம் என காலம் கடத்தியுள்ளார்.
திருமணத்திற்கு தொடர்ந்து சரண்யா வற்புறுத்தி வந்த நிலையில், 5 மாதம் கர்ப்பமடைந்திருந்த சரண்யாவை தொழுதூர் அடுத்த கழுதூரில் உள்ள மருந்து கடைக்கு அழைத்துச் சென்று சத்து மாத்திரை என பொய் கூறி கர்ப்பத்தை கலைப்பதற்கான மாத்திரையை அரிதாஸ்கொடுத்துள்ளார். இதனால் சரண்யாவின் கர்ப்பம் கலைந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சரண்யா கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் 5-ந் தேதி விருத்தாசலம் மகளிர் போலீஸ் நிலையத்தில் அரிதாஸ் மீது புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரணை செய்ததையடுத்து, அரிதாசுக்கும் சரண்யாவுக்கும் 11.07.2021 அன்று சாத்துக்குடல் மேல்பாதி கிராமத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் மனைவி சரண்யாவுடன் 2 நாட்கள் மட்டுமே வாழ்ந்த நிலையில் அரிதாஸ் வெளியூருக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவானார். வெளியூர் சென்ற கணவன் நீண்ட நாட்களாக திரும்பி வராதது குறித்து அரிதாசின் பெற்றோரிடம் சரண்யா கேட்டபோது மாமனார் தனாதிபதியும் மாமியார் தமிழரசியும் அவரை தகாத வார்த்தையால் திட்டி தாக்கியுள்ளனர். மேலும் சரண்யாவை வீட்டை விட்டு வெளியே துரத்தி உள்ளனர்.
இதனையடுத்து கணவரை தேடி பல இடங்களில் அலைந்த சரண்யா இன்று அரிதாசின் வீட்டிற்கு முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இது குறித்து சரண்யா கூறுகையில்,
தன்னை காதலித்து கர்ப்பமாகி விட்டு திருமணம் செய்து விட்டு தலைமறைவான அரிதாஸ் உடன் தன்னை சேர்த்து வைக்குமாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தனது கணவருடன் சேர்த்து வைக்கும் வரை இந்த இடத்தை விட்டு நகர போவதில்லை எனவும் கூறினார். மேலும் தன்னை தாக்கிய மாமனார் தனாதிபதி மற்றும் மாமியார் தமிழரசி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார். தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த கருவேப்பிலங்குறிச்சி போலீசார் சரண்யாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
- கச்சத்தீவை சின்ன பாறை தான் எனக்கூறியவர் இந்திரா காந்தி.
- கச்சத்தீவு பற்றிய உண்மை தமிழக மக்களுக்கு தெரிய வேண்டும் என்றார்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கச்சத்தீவு விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்க்க காங்கிரசும், தி.மு.க.வும் தான் காரணம் என பா.ஜ.க. குற்றம் சாட்டி வருகிறது. இந்தக் கருத்துக்கு காங்கிரஸ் மற்றும் தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கச்சத்தீவை ஒரு பொருட்டாகவே முன்னாள் பிரதமர்கள் நேருவும், இந்திரா காந்தியும் கருதவில்லை.
ஒரு நாட்டின் பாதுகாப்பு விஷயத்தையம், இறையாண்மை சம்பந்தப்பட்ட விஷயத்தையம் தேர்தலுக்காக தான் பேசவேண்டும் என்பதில்லை. எப்போது வேண்டுமானாலும் பேசலாம். அது நமது உரிமை. அதனால் இப்போது பேசப்படுகிறது.
கச்சத்தீவு தொடர்பாக 50 ஆண்டுகளாக உண்மைக்கு புறம்பான பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது.
தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் அப்போதும் கூட்டணி வைத்திருந்தன. இப்போதும் கூட்டணி வைத்துள்ளன.
தமிழக மக்களுக்கு விரோதமான செயல்களை காங்கிரஸ் கட்சி செய்யும்போது தி.மு.க. அமைதியாகவே இருந்தது.
ஒரு தேசிய கட்சியான காங்கிரஸ் 1967-க்கு பிறகு தமிழகத்தில் இன்றும் வெற்றி பெற முடியவில்லை.
கச்சத்தீவை சின்ன பாறை தான் எனக் கூறியவர் இந்திரா காந்தி.
தேர்தல் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கச்சத்தீவு பற்றிய உண்மை தமிழக மக்களுக்கு தெரிய வேண்டும் என குறிப்பிட்டார்.
- காரில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பசிலியான் நசரேத்திற்கு ஆதரவாக 5000 நோட்டீஸ்கள் இருந்தது தெரியவந்தது.
- பறக்கும் படை அதிகாரி சுனில் மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதையடுத்து பறக்கும் படை அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
ஆரல்வாய்மொழி காந்திநகர் பகுதியில் எந்த ஒரு அனுமதியும் இன்றி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நேரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக அ.தி.மு.க.வினர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக தோவாளை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜசேகர் ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ., நடிகர் சிங்கமுத்து உள்பட 300 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
குளச்சல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மணவாளக்குறிச்சி பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். காரில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பசிலியான் நசரேத்திற்கு ஆதரவாக 5000 நோட்டீஸ்கள் இருந்தது தெரியவந்தது. அந்த நோட்டீசுகளை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து பறக்கும் படை அதிகாரி சுனில் மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் தோவாளை ஊராட்சி ஒன்றிய தலைவரும், அ.தி.மு.க. மாவட்ட இணை செயலாளருமான சாந்தினி பகவதியப்பன் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- பொதுமக்களின் புகாரை யாரும் அலட்சியப்படுத்த கூடாது.
- அரசியல் கட்சியினரின் வாகனங்கள் அனைத்தையும் கண்டிப்பாக சோதனையிட வேண்டும்.
சென்னை:
பாராளுமன்றத் தேர்தல் விறுவிறுப்படைந்துள்ள நிலையில் ஒவ்வொரு வேட்பாளர்களும் பிரசாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். வேட்பாளருடன் கட்சி நிர்வாகிகளும், தோழமை கட்சியினரும் உடன் சென்று வாக்கு கேட்டு வருகின்றனர்.
தேர்தலுக்கு இன்னும் 2 வார காலமே உள்ள நிலையில் ஒவ்வொரு கட்சியிலும் வாக்குச்சாவடி ஏஜெண்டுகளுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டு வருவதாக தேர்தல் கமிஷனுக்கு புகார்கள் சென்று உள்ளன.
இதனால் பணப்பட்டு வாடாவை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமைச் செயலகத்தில் இன்று தேர்தல் பணியில் ஈடுபட்டு உள்ள உயர் அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார்.
இதில் வருமான வரித்துறை, சுங்கத்துறை, அமலாக்கத்துறை அதிகாரிகள், ஜி.எஸ்.டி, கலால் துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இவர்களுடன் தேர்தலுக்காக நியமிக்கப்பட்டுள்ள மாநில செலவினப் பார்வையாளர்களும் பங்கேற்றனர்.
தமிழ்நாட்டில் இதுவரை 109 கோடிக்கு மேல் பணம், நகை, பொருட்கள் பிடிபட்டு உள்ள நிலையில் பணப்பட்டு வாடாவை தடுக்க சோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பறக்கும் படையினர் ஒரே இடத்தில் நின்று சோதனையில் ஈடுபடாமல் பல பகுதிகளுக்கும் சென்று சோதனையிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
சிவிஜில் செயலி மூலம் பொதுமக்களிடம் இருந்து 1822 புகார்கள் வந்துள்ளதால் அவ்வாறு பெறப்படும் புகாரின் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறினார்.
பொதுமக்களின் புகாரை யாரும் அலட்சியப்படுத்த கூடாது. இந்த புகாரின் மீது என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்ற விவரத்தை தேர்தல் ஆணையத்துக்கு உடனுக்குடன் தெரியப்படுத்த வேண்டும் என்று சத்யபிரதா சாகு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அரசியல் கட்சியினரின் வாகனங்கள் அனைத்தையும் கண்டிப்பாக சோதனையிட வேண்டும். எந்த வாகனமும் அதில் விதிவிலக்கல்ல என்றும் அவர் கூறினார்.
இதனால் இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் வாகன சோதனையும் தீவிரம் அடைந்துள்ளது.
- வாக்காளர் விழிப்புணர்வு பேரணி, வாக்காளர் உறுதிமொழி கையெழுத்து இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டது.
- அனைவருக்கும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து எடுத்துக்கூறி தேர்தல் நாள் அன்று தவறாமல் வாக்கினை பதிவு செய்ய வேண்டும்.
திருப்பூர்:
பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருநங்கைகள் பங்கேற்ற பேரணி திருப்பூரில் நடைபெற்றது. அதனை கலெக்டரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான கிறிஸ்து ராஜ் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது: -
பாராளுமன்ற பொதுத்தேர்தல் தமிழகத்தில் 19.4.2024 அன்று நடைபெறவுள்ளதையொட்டி, திருப்பூர் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தும் வகையில் நாள்தோறும் தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதில் திருப்பூர் மாநகராட்சி, எல்.ஆர்.ஜி. மகளிர்அரசு கலைக் கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி, வாக்காளர் உறுதிமொழி கையெழுத்து இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டது.
திருப்பூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட மூத்தக்குடிமக்களுக்கு வீட்டிலிருந்தவாறு தபால் மூலம் வாக்களிப்பதற்கான 12 டி படிவங்கள் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 26.3.2024 அன்று தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம்குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 100-க்கும் மேற்பட்ட இருசக்கரப் வாகனங்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி தொடங்கி வைக்கப்பட்டது.
தேர்தல் விழிப்புணர்வு ஒட்டு வில்லைகளை பயணிகள் ஆட்டோக்களில் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், செய்தி மக்கள் தொடர்பு த்துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனம் மூலம் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து குறுபடம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் நாள்தோறும் பொதுமக்கள் பார்வைக்கு காட்சிபடுத்தப்பட்டு வருகிறது.
மேலும், 29.3.2024 அன்று திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து ராட்சத பலூன் பறக்க விடப்பட்டது. மேலும் அரசுப்பேருந்துகளில் வாக்காளர் விழிப்புணர்வு ஒட்டுவில்லையை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இன்று திருநங்கைகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், வாக்களிப்பது என்பது ஒவ்வொருவரின் உரிமை. வாக்களிக்கும் உரிமை பெற்ற வாக்காளர்கள் வாக்களிப்பது என்பது ஜனநாயகத்தின் கடமையாகும். ஒவ்வொரு வாக்காளர்களின் வாக்குகளும் மிகவும் முக்கியமானது என்பதை மனதில் நிறுத்தி கொள்ள வேண்டும். குறிப்பாக 18 வயது பூர்த்தியடைந்த இளம் வாக்காளர்கள் தங்களுக்கு வாக்களிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது என்பதை எண்ணி தவறாமல் வாக்களிக்க வேண்டும். உங்கள் ஊரில் உள்ளவர்கள், குடும்பத்தினர்கள், நண்பர்கள் மற்றுமல்லாமல்
அனைவருக்கும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து எடுத்துக்கூறி தேர்தல் நாள் அன்று தவறாமல் வாக்கினை பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் கிறிஸ்துராஜ், தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் , உதவி கலெக்டர் (பயிற்சி) ஹிறிதியா எஸ்.விஜயன், வாக்காளர் விழிப்புணர்வு பொறுப்பு அலுவலர் குமாரராஜா, மாவட்ட சமூகநல அலுவலர் ரஞ்சி தாதேவி மற்றும் தொடர்புடைய தேர்தல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- தேர்தல் கண்காணிப்பாளர் வினோத்குமார் சென்ற அரசு வாகனத்தை வழிமறித்து தகராறு செய்ததாக தெரிகிறது.
- 5 பேர் மீது அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல், ஆபாச வார்த்தைகளால் திட்டுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
கரூர்:
கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே உள்ள நெரூர் அரங்கநாதன்பேட்டையில் தேர்தல் கண்காணிப்பு அலுவலர் வினோத்குமார் தலைமையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நெரூர் அருகே உள்ள மறவாபாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் அ.தி.மு.க. தேர்தல் பிரசார வாகனங்களுக்கு பின்னால் கண்காணிப்பு குழுவினர் சென்றனர்.
இந்த வேளையில் கரூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அ.தி.மு.க.வை சேர்ந்த ரமேஷ்குமார், மதுசூதணன், கார்த்திக், ஜெகன் மற்றும் பலர் தேர்தல் கண்காணிப்பாளர் வினோத்குமார் சென்ற அரசு வாகனத்தை வழிமறித்து தகராறு செய்ததாக தெரிகிறது.
இது தொடர்பாக வாங்கல் காவல் நிலையத்தில் வினோத்குமார் புகார் செய்தார். அதன்பேரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 5 பேர் மீது அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல், ஆபாச வார்த்தைகளால் திட்டுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
- தமிழ்நாட்டில் போட்டியிடும் பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
- உள்துறை மந்திரி அமித்ஷா வந்து செல்லும் பகுதிகளில் தென்காசி மாவட்ட காவல்துறையினர் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தென்காசி:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. இதனை ஒட்டி அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் போட்டியிடும் பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
இதைத்தொடர்ந்து உள்துறை மந்திரி அமித்ஷா தென்காசி பாராளுமன்ற தொகுதியில் வருகிற 5-ந்தேதி பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக அவர் ஹெலிகாப்டர் மூலமாக தென்காசி அருகே இலஞ்சியில் உள்ள ராமசாமி பிள்ளை பள்ளியில் வந்து இறங்குகிறார்.
பின்னர் அவர் ஆசாத் நகரில் இருந்து தென்காசி புதிய பஸ் நிலையம் வரை திறந்தவெளி வாகனத்தில் பிரசாரம் மேற்கொள்கிறார் என தென்காசி மாவட்ட பா.ஜனதா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இதையொட்டி உள்துறை மந்திரி அமித்ஷா வந்து செல்லும் பகுதிகளில் தென்காசி மாவட்ட காவல்துறையினர் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- கடந்த ஆண்டு வரை 483 மண்டகப்படிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- தற்போது வரை சாதிய பிரச்சனைகள் ஏற்பட்டதாக புகார் ஏதுமில்லை என தெரிவிக்கப்பட்டது.
மதுரை:
மதுரை ஐகோர்ட்டு கிளையில் மானகிரி பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது. சாதி, மதம், இனம், மொழி என அனைத்து வேறுபாடுகளையும் களைந்து பொதுமக்களால் கொண்டாடப்படுகிறது. ஆனால் கட்டணம் பெற்றுக்கொண்டு சில சாதி அமைப்புக்கு சொந்தமான தனியார் மண்டகப் படிகளுக்கும், தனியாருக்கு சொந்தமான இடங்களுக்கும் கள்ளழகரை கொண்டு செல்லும் நிலை உள்ளது. இதனால் மக்களிடையே வேறுபாடு ஏற்படும் நிலை உள்ளது.
இதுதொடர்பாக அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே, இந்த ஆண்டு சித்திரை திருவிழாவில் சாதி ரீதியான தனியார் மண்டகப்படிகள் மற்றும் தனிநபர்களுக்கு சொந்தமான இடங்களுக்கு கள்ளழகரை கொண்டு செல்ல தடை விதிக்க வேண்டும். மேலும் கள்ளழகரை பாரம்பரிய மண்டகப்படிகளுக்கு மட்டுமே கொண்டு செல்ல உத்தரவிட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள் முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், தனியார் மண்டகப்படிகளுக்கு சாதி ரீதியான அமைப்பு மண்டகப்படிகளுக்கும் கள்ளழகரை கொண்டு செல்வதால் பொருளாதார வேறுபாடு ஏற்படுவதோடு, தேவையற்ற பிரச்சனைகள் உருவாகும் நிலை உள்ளது என தெரிவிக்கப்பட்டது.
அரசுத்தரப்பில், பல நூற்றாண்டுகளாக இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு வரை 483 மண்டகப்படிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டும் அனுமதி கேட்டு விண்ணப்பங்கள் வந்துள்ளன. முறையான ஏற்பாடுகளுடன் அனுமதி கோரினால் மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. தற்போது வரை சாதிய பிரச்சனைகள் ஏற்பட்டதாக புகார் ஏதுமில்லை என தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதிகள், சித்திரைத் திருவிழா தென் தமிழகத்தின் மிகப்பெரும் பாரம்பரிய கொண்டாட்டம். மண்டகப்படிகளை அதிகரிப்பது சாமியை தரிசிக்கும் வாய்ப்பை அதிகரிக்கும் விதமாகவே அமையும் பல லட்சம் பக்தர்கள் இந்த விழாவிற்கு வருவதால் போதிய அடிப்படை வசதிகளையும், பாதுகாப்பையும் அரசு தரப்பு உறுதிப்படுத்த வேண்டும். மண்டகப்படி விவாகரத்தில் இதுவரை எந்த புகார்களும் இல்லாததால் அதில் நீதிமன்றம் எந்த உத்தரவு பிறப்பிக்க முடியாது எனக்கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
- நாகலெட்சுமி உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
நெல்லை:
தென்காசி பண்பொழியை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மகள் நாகலெட்சுமி (வயது18).
இவர் நெல்லையில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தார். இதனால் கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வரும் விடுதியில் தங்கி இருந்து நாகலெட்சுமி படித்தார்.
இந்நிலையில் நேற்று இரவு சாப்பிட்டுவிட்டு தூங்க சென்ற நாகலெட்சுமி, விடுதி அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதனை அந்த அறையில் தங்கியிருந்த சக தோழிகள் இன்று காலை எழுந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக அவர்கள் கல்லூரி விடுதி வார்டனுக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து பாளை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக கல்லூரிக்கு விரைந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து கணேஷ் தலைமையிலான போலீசார், நாகலெட்சுமி உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
சமீபத்தில் செமஸ்டர் தேர்வு முடிவு வெளியான நிலையில் அதில் நாகலெட்சுமி சில பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர் விரக்தியில் யாரிடமும் பேசாமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் தான் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனால் தேர்ச்சி பெறாத விரக்தியில் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- ஒவைசியின் கட்சியான அகில இந்திய மஜ்லிஸ் இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சி தமிழகத்தில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
- தேசிய தலைவர் அஷ்ஸாதுதின் ஒவைசி வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க.வை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளதாக வக்கீல் அகமது தெரிவித்து உள்ளார்.
சென்னை:
ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஒவைசியின் கட்சியான அகில இந்திய மஜ்லிஸ் இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சி (ஏ.ஐ.எம். ஐ.எம்.) தமிழகத்தில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
திருப்பத்தூரில் தனியார் ஓட்டலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அந்த கட்சியின் மாநில தலைவர் வக்கீல் அகமது சந்தித்து ஆதரவை தெரிவித்தார்.
அக்கட்சியின் தேசிய தலைவர் அஷ்ஸாதுதின் ஒவைசி வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க.வை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளதாக வக்கீல் அகமது தெரிவித்து உள்ளார்.
- சமூகநீதிதான் எங்களது லட்சியம். அதற்காக எந்த கூட்டணியில் இருந்தாலும் போராடுவோம்.
- அ.தி.மு.க.தான் எங்கள் கூட்டணியில் இருந்து பிரிந்து சென்றுள்ளது.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அளித்துள்ள ஒரு பேட்டியில் தி.மு.க.-அ.தி.மு.க. இரு கட்சிகளையும் கடுமையாக தாக்கி உள்ளார். 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு கூட்டணி அமைத்து இருப்பதாகவும் அந்த பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கேள்வி:- கூட்டணி அமைப்பது தொடர்பாக உங்களுக்கும், உங்களது தந்தைக்கும் கருத்து வேறு பாடு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானதே?
பதில்:- அது அ.தி.மு.க. உருவாக்கிய புரளி. நானும், எனது தந்தையும் பா.ஜனதா கூட்டணியில் இடம் பெற வேண்டும் என்பதை எப்போதோ தீர்மானித்து விட்டோம். அ.தி.மு.க.வுடன் நாங்கள் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவே இல்லை.
எனது தந்தையை முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சந்தித்து பேசிய பிறகுதான் இந்த புரளி கிளம்பியது.
கேள்வி:- பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க என்ன காரணம்?
பதில்:- 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் திராவிட கட்சிகள் இல்லாத புதிய ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே எங்களது இலக்கு. தி.மு.க.வுடனும், அ.தி.மு.க.வுடனும் கூட்டணி அமைத்து பட்டதுபோதும். இதை கருத்தில் கொண்டுதான் பாரதிய ஜனதா கட்சியுடன் பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி அமைத்துள்ளது.
கேள்வி:- அடிக்கடி கூட்டணி மாறுவதால் உங்கள் கட்சி மீது குற்றச்சாட்டுகள் எழுப்பபடுமே?
பதில்:- எந்த கூட்டணி என்றாலும் பாட்டாளி மக்கள் கட்சி முழுமையாக பாடுபட்டு உள்ளது. இதை எந்த கட்சியும் மறுக்க இயலாது. நாங்களாக ஒருபோதும் கூட்டணியை மாற்றிக் கொள்வது இல்லை. உண்மையில் தி.மு.க., அ.தி.மு.க.வால்தான் நாங்கள் கூட்டணியில் மாற வேண்டிய நிலை ஏற்பட்டது.
தற்போதைய சூழ்நிலையில் அ.தி.மு.க.தான் எங்கள் கூட்டணியில் இருந்து பிரிந்து சென்றுள்ளது. எங்களது கூட்டணி நிச்சயம் அதிகாரத்துக்கு வரும்.
கேள்வி:- மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக உள்ளது. அது உங்கள் கொள்கைக்கு மாறுபட்டதாக கருதப்படுகிறதே?
பதில்:-சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக இருப்பதாக மத்திய அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. காங்கிரஸ் கட்சிதான் சில மாநிலங்களில் ஆதாயத்துக்காக கணக்கெடுப்பு பற்றி பேசியது.
தற்போதைய கூட்டணியில் டாக்டர் ராமதாஸ் தான் மூத்த தலைவர். அவர் பிரதமரிடம் பேசி சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி நல்ல தீர்வு காண்பார்.
சமூகநீதிதான் எங்களது லட்சியம். அதற்காக எந்த கூட்டணியில் இருந்தாலும் போராடுவோம்.
கேள்வி:- பாராளுமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?
பதில்:- எங்களது கூட்டணிக்கு முழுமையான வெற்றி கிடைக்கும். அது 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மாற்று அணி உருவெடுக்க வாய்ப்பை ஏற்படுத்தி தரும். அந்த தேர்தலின் போது நாங்கள் மிக பிரமாண்டமான அணியை உருவாக்குவோம்.
2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை என்பதை திட்டவட்டமாக இப்போதே என்னால் சொல்ல முடியும்.
கேள்வி:- பா.ம.க. உங்களை முன் நிறுத்தினாலும் தமிழகம் முழுக்க ஆதரவு கிடைக்குமா?
பதில்:- வன்னியர் சங்கம் அடிப்படையில்தான் பா.ம.க. உருவானது. ஆனால் நாளடைவில் அதில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒரு தலித்தான் பொதுச் செயலாளராக இருக்க வேண்டும் என்று திருத்தம் செய்யப்பட்டது.
இப்போது பா.ம.க. மீதான மக்கள் எண்ணம் மாறி வருகிறது. தமிழக மக்கள் அன்புமணியை ஒரு வன்னியர் தலைவராக மட்டும் பார்ப்பது கிடையாது. படித்தவர், டாக்டர், நாட்டுக்கு நல்லது செய்பவர் என்ற கோணத்தில்தான் பார்க்கிறார்கள்.
கேள்வி:- பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. 3-வது முறையாக ஆட்சி அமைக்கும்பட்சத்தில் மேல்சபை எம்.பி.யாக இருக்கும் நீங்கள் மத்திய மந்திரியாக வாய்ப்பு உள்ளதா?
பதில்:- இல்லை. பா.ஜ.க. தலைவர்களுடன் கூட்டணி அமைப்பது பற்றி பேசிய போது மத்திய மந்திரி பதவி பற்றி நாங்கள் எதுவும் பேசவில்லை. அது அவர்களுக்கே ஆச்சரியமாக இருந்தது. நான் மாநில அரசியலில் கவனம் செலுத்தவே விரும்புகிறேன்.
எனது மனைவி சவுமியா தர்மபுரி தொகுதியில் போட்டியிடுகிறார். நிச்சயம் அவர் வெற்றி பெறுவார். அவர் மிக சிறந்த எம்.பி.யாக திகழ்வார் என்பதில் சந்தேகம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.






