search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தி.மு.க. பொய்யும், பா.ஜ.க. பயங்கர பொய்யும் பேசுகிறது- செல்லூர் ராஜூ
    X

    தி.மு.க. பொய்யும், பா.ஜ.க. பயங்கர பொய்யும் பேசுகிறது- செல்லூர் ராஜூ

    • தி.மு.க.வும், பா.ஜ.க.வும் கச்சத்தீவு பிரச்சனையில் நடத்துகிற கபட நாடகம், வேஷங்களை தமிழக மீனவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
    • மீனவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக இந்த தேர்தலில் அ.தி.மு.க. பக்கம் திரும்பி உள்ளனர்.

    மதுரை:

    கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக பா.ஜ.க. மற்றும் தி.மு.க. ஒருவரையொருவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வரும் நிலையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த 1974-ம் ஆண்டு கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. அப்போது தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருந்த கருணாநிதி இந்த விவகாரத்தில் வாய்மூடி மவுனியாக இருந்தார். எந்த போராட்டமும் நடத்தவில்லை, இது வரலாறு.

    ஆனால் இன்றைக்கு பா.ஜ.க. கச்சத்தீவு பிரச்சனையை கையில் எடுத்துள்ளது. இதற்கு தி.மு.க.வும் பதிலளித்து பேசி வருகிறது. கச்சத்தீவு விவகாரத்தை பொறுத்தவரை தி.மு.க. பொய் பேசுகிறது என்றால் பா.ஜனதா பயங்கர பொய்யை பேசுகிறது. இது அவர்களது தேர்தல் ஸ்டண்டாகும்.

    ஆனால் தமிழக மீனவர்கள் பிரச்சனையில் அ.தி.மு.க. அரசு தொடர்ந்து அவர்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறது. எனவே மீனவர்கள் இந்த தேர்தலில் அ.தி.மு.க. பக்கம் திரும்பி உள்ளனர். எனவே தான் பா.ஜனதாவும், தி.மு.க.வும் கச்சத்தீவு விவகாரத்தை கையில் எடுத்து கபடநாடகம் நடத்துகிறது.


    கடந்த 2006, 2008, 2009 ஆகிய ஆண்டுகளில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஜெயலலிதா, கச்சத்தீவு விவகாரத்தில் தமிழக மீனவர்களின் உரிமை பாதுகாக்க கூடிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் பலமுறை கடிதங்கள் மூலம் கோரிக்கை வைத்தார்.

    கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர்களிலும் இந்த விவகாரம் குறித்து அம்மா பேசினார். அப்போது பதில் அளித்த கருணாநிதி, தமிழக மீனவர்கள் பேராசைப்பட்டு இலங்கை கடற்பகுதிக்குள் மீன்பிடிக்க செல்வதால்தான் இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தும் நிலை ஏற்படுவதாக தெரிவித்தார். இந்த கருத்தை அன்றைக்கு அம்மா கடுமையாக எதிர்த்து கண்டனம் தெரிவித்துள்ளார்.

    மேலும் எதிர்க்கட்சியாக இருந்த அ.தி.மு.க. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து கச்சத்தீவு விவகாரத்தில் சட்டப் போராட்டங்கள் நடத்தியது. இதை தி.மு.க., பாரதிய ஜனதா தலைவர்கள் மறந்தாலும் மீனவர்கள் மறக்கமாட்டார்கள். இன்றைக்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கச்சத்தீவு பற்றி எதுவுமே தெரியாமல் யாரோ எழுதிக் கொடுத்ததை படிக்கிறார்.

    தி.மு.க.வும், பா.ஜ.க.வும் கச்சத்தீவு பிரச்சனையில் நடத்துகிற கபட நாடகம், வேஷங்களை தமிழக மீனவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இது ஒரு தேர்தல் ஸ்டண்டாகவே அவர்கள் பார்க்கிறார்கள். எனவே மீனவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக இந்த தேர்தலில் அ.தி.மு.க. பக்கம் திரும்பி உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×