என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • புவனகிரி அருகே ஜெயகொண்டான் கிராமத்தில் திருமாவளவன் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தார்.
    • திருமாவளவன் கண் முன்னே இந்த மோதல் ஏற்பட்டது.

    புவனகிரி:

    திருமாவளவன் பிரசாரத்தில் வாலிபர்கள் மோதலில் ஈடுப்பட்டனர்.

    சிதம்பரம்(தனி) பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார். அவர் தொகுதி முழுவதும் சென்று தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகிறார். நேற்று அவர் காட்டுமன்னார்கோவில், சேத்தியாதோப்பு, புவனகிரி உள்ளிட்ட பகுதிகளில் ஓட்டு வேட்டையில் ஈடுபட்டார்.

    புவனகிரி அருகே ஜெயகொண்டான் கிராமத்தில் திருமாவளவன் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மற்றும் மருதூர், நத்தமேடு, ஆலம்பாடி, குமுடமூலை கிராமத்தைச் சேர்ந்த வாலிபர்கள் திருமாவளவன் பிரசார வண்டியை தடுத்து நிறுத்தி எங்கள் ஊருக்கு மீண்டும் வர வேண்டுமென வேட்பாளரிடம் கோரிக்கை வைத்தனர். அதற்கு திருமாவளவன் மீண்டும் நான் வருவேன் என்று தெரிவித்தார்.

    ஆனாலும் வாலிபர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். திருமாவளவன் கண் முன்னே இந்த மோதல் ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தி மோதலில் ஈடுப்பட்டவர்களை கலைத்தனர். இந்த மோதலுக்கு போதிய போலீசார் இல்லாததே காரணம் என கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • வருகிற 15-ந்தேதி காஞ்சிபுரத்தில் வேன் பிரசாரத்தில் ஈடுபடும் எடப்பாடி பழனிசாமி, மாலையில் மத்திய சென்னை, வேட்பாளரை ஆதரித்து புரசைவாக்கம் தானா தெருவில் பேசுகிறார்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், எடப்பாடி பழனிசாமியும் தலைநகர் சென்னையில் பிரசாரம் செய்ய இருப்பதால் அதற்கான ஏற்பாடுகளை இப்போதே கட்சி நிர்வாகிகள் பார்க்க தொடங்கிவிட்டனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் அடுத்த வாரம் 19-ந்தேதி நடைபெறுவதையொட்டி ஒவ்வொரு வேட்பாளர்களும் வீதிவீதியாக சென்று பிரசாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக கட்சித் தலைவர்களும் பிரசாரம் செய்து வருகின்றனர்.

    இந்த தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., பாரதிய ஜனதா, நாம் தமிழர் கட்சி இடையே 4 முனை போட்டி நிலவுகிறது. ஒவ்வொரு கட்சித் தலைவர்களும் கடந்த மாதத்தில் இருந்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலையில் நடைபயிற்சி சென்றும் மாலையில் பொதுக்கூட்டங்களில் பங்கேற்றும் பேசி வருகிறார்.

    கடந்த மாதம் 25-ந்தேதியில் இருந்து பிரசாரம் செய்து வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாரம் ஒருமுறை சென்னை வந்து செல்கிறார். 12-ந்தேதி வரை வெளியூர் பிரசாரத்தில் இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற திங்கட்கிழமை முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பிரசாரம் செய்கிறார்.

    15-ந்தேதி திருவள்ளூர் வடசென்னை, 16-ந்தே காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் (கர சங்கால் மைதானம்), 17-ந்தேதி தென்சென்னை, மத்திய சென்னை தொகுதியில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசுகிறார்.

    இதே போல் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 24-ந்தேதியில் இருந்தே பிரசாரம் செய்து வருகிறார்.

    அவர் தனது பிரசாரத்தை திருச்சியில் தொடங்கி ஒவ் வொரு தொகுதி வாரியாக சென்று பேசி வருகிறார். காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து கடந்த 29-ந்தேதி மதுராந்தகம் ஹைவே அருகே நடைபெற்ற பிரமாண்ட கூட்டத்தில் பேசினார். அதன் பிறகு வெளியூர்களுக்கு சென்று பேசி வருகிறார்.

    வருகிற 15-ந்தேதி காஞ்சிபுரத்தில் வேன் பிரசாரத்தில் ஈடுபடும் எடப்பாடி பழனிசாமி, மாலையில் மத்திய சென்னை, வேட்பாளரை ஆதரித்து புரசைவாக்கம் தானா தெருவில் பேசுகிறார். அதன் பிறகு அன்றிரவு 7 மணியளவில் தென் சென்னை தொகுதிக்கான சைதை சின்னமலை வேளச்சேரி ரோட்டில் பேசுகிறார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், எடப்பாடி பழனிசாமியும் தலைநகர் சென்னையில் பிரசாரம் செய்ய இருப்பதால் அதற்கான ஏற்பாடுகளை இப்போதே கட்சி நிர்வாகிகள் பார்க்க தொடங்கிவிட்டனர்.

    இதே போல் ஒவ்வொரு கட்சித் தலைவர்களும் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்துடன் திறந்த வாகனத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
    • ரேஷன் கடை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் தேவைக்கேற்ப அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    களியக்காவிளை:

    விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பா்ட் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நேற்று அவர் மேல்பாலை பகுதியில் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்துடன் திறந்த வாகனத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது வேட்பாளர் தாரகை கத்பர்ட் பேசியதாவது, நான் உங்களில் ஒருவராக போட்டியிடுகின்றேன். இயற்கை வளங்களும், பிரசித்திபெற்ற திருக்கோவில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் உள்ள பகுதியாக இருக்கின்றது.

    நமது மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சியில் மிகப்பெரிய பங்கு வகிப்பது நமது விளவங்கோடு சட்டமன்ற தொகுதி என்பது பெருமைக்குரிய விஷயம். ரப்பர் விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும், நமது மக்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்திடும் வகையில் ரப்பர் தொழிற்சாலை நமது விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நமது பகுதியில் விளையும் முந்திரி, பலா, வாழை, தேன் உள்ளிட்ட பொருட்களை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    மலை கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்களின் அடிப்படை தேவையான மின்சாரம், குடிநீர் வசதிகள் கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். அதேபோல் ரேஷன் கடை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் தேவைக்கேற்ப அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மொத்தத்தில் விளவங்கோடு தொகுதி முன்னேற்றத்திற்காக பாடுபடுவேன்.

    எனவே பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் விஜய் வசந்த் எம்.பி.க்கும், எனக்கும் (தாரகை கத்பர்ட்) கை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ்குமார், மாவட்ட தலைவர் பினுலால் சிங், காங்கிரஸ் நிர்வாகி டாக்டர் சாமுவேல் ஜார்ஜ் கலையரசர் மற்றும் கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

    • 2 நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று முன்தினம் மாலை சென்னை வந்தார்.
    • மாம்பலம், பாண்டி பஜார் காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் உச்சக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக 2 நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று முன்தினம் மாலை சென்னை வந்தார்.

    சென்னை பாண்டி பஜாரில் நடந்த பிரமாண்ட ரோடு- ஷோவில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது தென் சென்னை, மத்திய சென்னை, வடசென்னை தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.

    இதனை தொடர்ந்து நேற்று காலை பிரதமர் மோடி வேலூரில் நடந்த பொதுக்கூட்டத்திலும் அதனை தொடர்ந்து மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    இந்நிலையில், சென்னை தியாகராயர் நகரில் நடந்த பிரதமர் மோடியின் ரோடு ஷோவில் விதிமீறல் நடந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    போலீஸ் விதித்த நிபந்தனைகளை மீறி விளம்பர பதாகைகளை வைத்ததாக தேர்தல் பறக்கும் படை அதிகாரி கொடுத்த புகாரின்பேரில், மாம்பலம், பாண்டி பஜார் காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • மசூதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

    ஈகைப் பெருநாளான ரமலான் பண்டிகை இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அய்யூப் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் அறிவித்தார்.

    இதற்கிடையே கோவை- சாரமேடு கரும்பு கடை மற்றும் குமரி-வேர் கிளம்பி பகுதிகளில் பிறை தெரிந்ததாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் அறிவிக்கப்பட்டது.

    அந்த வகையில், தமிழகத்தில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, மசூதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ரம்ஜான் பண்டிகையையொட்டி முதலமைச்சர் மு.க ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    தொடர்ந்து, பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

    அந்த பதிவில், "ஈகைப் பெருநாள் நல்வாழ்த்துக்கள். இந்த சந்தர்ப்பம் இரக்கம், ஒற்றுமை மற்றும் அமைதியின் உணர்வை மேலும் பரப்பட்டும். அனைவரும் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கட்டும். ரமலான்! " என குறிப்பிட்டுள்ளார்.

    • சென்னை பாண்டி பஜாரில் நடந்த பிரமாண்ட ரோடு- ஷோவில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
    • தென்காசியில் நடைபெறும் ரோடு-ஷோவில் பங்கேற்று வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் உச்சக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக 2 நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று முன்தினம் மாலை சென்னை வந்தார்.

    சென்னை பாண்டி பஜாரில் நடந்த பிரமாண்ட ரோடு- ஷோவில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது தென் சென்னை, மத்திய சென்னை, வடசென்னை தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.

    இதனை தொடர்ந்து நேற்று காலை பிரதமர் மோடி வேலூரில் நடந்த பொதுக்கூட்டத்திலும் அதனை தொடர்ந்து மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    இந்நிலையில், நாளை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருகிறார்.

    நாளை மாலை மதுரை வரும் அமித்ஷா சிவகங்கையில் நடைபெறும் ரோடு- ஷோவில் பங்கேற்று பிரசாரத்தில் ஈடுபடுகிறார். மறுநாள் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் காலை 9.50 மணிக்கு ரோடு-ஷோவில் பங்கேற்கும் அமித்ஷா பிற்பகல் 3 மணிக்கு நாகையில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும், மாலை 6.30 மணிக்கு தென்காசியில் நடைபெறும் ரோடு-ஷோவில் பங்கேற்று வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

    ஏற்கனவே, கடந்த வாரத்தில் அமித்ஷா தமிழகம் வருவதாக இருந்த நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் அமித்ஷாவின் தமிழக சுற்றுப்பயணம் ரத்து ஆனது குறிப்பிடத்தக்கது.

    • கேரள மாநிலம் மலப்புரத்தில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் வரை ராமநவமி யாத்திரை செல்ல ஸ்ரீ ஆஞ்சநேயம் அறக்கட்டளை அனுமதி கோரியிருந்தது
    • இந்த யாத்திரை தமிழ்நாட்டின் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாகச் சென்று கன்னியாகுமரியில் முடிவடைகிறது

    கேரள மாநிலம் மலப்புரத்தில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் வரை ஏப்ரல் 12ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை ராமநவமி யாத்திரை செல்ல ஸ்ரீ ஆஞ்சநேயம் அறக்கட்டளை திட்டமிட்டிருந்தது.

    தமிழ்நாட்டின் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட தமிழ்நாட்டின் 11 மாவட்டங்கள் வழியாகச் சென்று கன்னியாகுமரியில் முடிவடையும் இந்த யாத்திரைக்கு சட்டம் - ஒழுங்கை காரணம் காட்டி தமிழக அரசு அனுமதி மறுத்தது.

    தமிழக அரசின் இந்த உத்தரவை எதிர்த்து ஸ்ரீ ஆஞ்சநேயம் அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளரான திலீப் நம்பியார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

    இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், ராம நவமி யாத்திரைக்கு ஏன் அனுமதி மறுக்கப்பட்டது? இதனால் என்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும்? என காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்திருந்தார்.

    இந்நிலையில் இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாகவே இந்த முறை ராம நவமி யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தமிழக அரசு தரப்பு விளக்கம் அளித்தது.

    இதையடுத்து ராம நவமியை முன்னிட்டு தமிழ்நாட்டில் 11 மாவட்டங்கள் வழியே யாத்திரை செல்ல மாநில அரசு அனுமதி மறுத்தது சரியே என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    கன்னியாகுமரியில் மட்டும் யாத்திரைக்கு அனுமதி வழங்க வேண்டும் என மனுதாரர் கோரிக்கை வைக்க, அதுகுறித்து 2 நாட்களில் பரிசீலித்து அரசு முடிவெடுக்க நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

    • மோடி ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம் இருக்காது; தேர்தல் இருக்காது என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
    • பிரதமர் மோடி தேர்தல் காரணமாக உள்நாட்டில் சுற்றுலா வந்துள்ளார் என்றார்.

    தேனி:

    தேனி லட்சுமிபுரம் பகுதியில் தேனி தொகுதி வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், திண்டுக்கல் தொகுதி வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோரை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை ஆற்றி வருகிறார். அப்போது அவர் பேசியதாவது:

    பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அமைதியான இந்தியா, அமளியான இந்தியாவாக மாறிவிடும்.

    மோடி ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம் இருக்காது; தேர்தல் இருக்காது. பாராளுமன்றத்தில் விவாதம் இருக்காது. மாநிலங்களுக்கு அதிகாரம் இருக்காது.

    பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் சமூக நீதியை குழிதோண்டி புதைத்து விடும். வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்ற பிரதமர் மோடி, தேர்தல் காரணமாக உள்நாட்டில் சுற்றுலா வந்துள்ளார்.

    திராவிட மாடலால் தமிழ்நாடு வளர்ந்துள்ளது. வளர்ச்சியை மோடி மஸ்தான் வேலையால் தடுக்கமுடியாது. வேண்டாம் மோடி என்று தெற்கிலிருந்து ஒலிக்கும் குரல் இந்தியா முழுவதும் எதிரொலிக்கும்.

    தமிழ்நாட்டை வளர்க்கப் போகிறேன் என இந்தியில் பேசி மோடி மஸ்தான் வித்தை காட்டுகிறார் பிரதமர் மோடி.

    10 ஆண்டுகள் பிரதமராக இருந்த மோடி சாதனைகளாக எதையும் சொல்ல முடியாமல் உள்ளார் என தெரிவித்தார்.

    • 1970, 1980 மற்றும் 1990 ம் ஆண்டுகளில் இளையராஜாவின் பாடல்களுக்கு இருந்த ஈர்ப்பு தற்போது இல்லை
    • ஸ்பாட்டிபை மூலம் இளையராஜா பெற்ற வருமானத்தைத் தனி கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டும்

    1970, 1980 மற்றும் 1990 ம் ஆண்டுகளில் இளையராஜாவின் பாடல்களுக்கு இருந்த ஈர்ப்பு தற்போது இல்லை - இசை நிறுவனங்கள் தரப்பு வழக்கறிஞர்

    இசையமைப்பாளர் இளையராஜாவின் சுமார் 4 ஆயிரத்து 500 பாடல்களைப் பயன்படுத்துவதற்கு எக்கோ மற்றும் அகி உள்ளிட்ட இசை நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்திருந்தன. ஒப்பந்தம் முடிந்த பிறகும், காப்புரிமை பெறாமல் தனது பாடல்களைப் பயன்படுத்துவதாகக் கூறி, இளையராஜா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, தயாரிப்பாளர்களிடம் உரிமை பெற்று, இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு உரிமை உள்ளது எனவும், இளையராஜாவுக்கும் இந்த பாடல்கள் மீது தனிப்பட்ட தார்மீக சிறப்பு உரிமை இருப்பதாகவும் கடந்த 2019ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தார்.

    இந்த உத்தரவை எதிர்த்து இளையராஜா மேல்முறையீடு செய்திருந்தார், இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, இளையராஜாவின் 4,500 பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு இடைக்காலத் தடை விதித்தது.

    இதனிடையே, படத்தின் காப்புரிமை தயாரிப்பாளரிடம் இருப்பதால், அவர்களிடம் செய்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் பாடல்களைப் பயன்படுத்த தங்களுக்கு அதிகாரம் உள்ளதென எக்கோ நிறுவனம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இசை நிறுவனங்கள் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய்நாரயண், இந்தியத் திரைப்படத்துறையில் உள்ள இசையமைப்பாளர்கள் ஒரு குறிப்பிட்ட திரைப்படத்திற்காக ஒரு திரைப்பட தயாரிப்பாளரிடம் இருந்து ஊதியம் பெற்றவுடன், ராயல்டி பெறும் உரிமையைத் தவிர, அனைத்து உரிமைகளையும் இழந்து விட்டதாகத் தெரிவித்தார்.

    எனவே, காப்புரிமை சட்டத்தின் கீழ் பாடல்களின் உரிமையாளராக இளையராஜா வருவாரா என்பதை இறுதி விசாரணையில் தான் முடிவு செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், இளையராஜா ஒரு இசைஞானி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை, ஆனால் 1970, 1980 மற்றும் 1990 ம் ஆண்டுகளில் அவரது பாடல்களுக்கு இருந்த ஈர்ப்பு தற்போது இல்லை என இசை நிறுவனங்கள் தரப்பு வழக்கறிஞர் குறிப்பிட்டார்.

    மேலும் ஸ்பாட்டிபை மூலம் இளையராஜா பெற்ற வருமானத்தைத் தனி கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டும் அல்லது குறைந்தபட்சம் இந்த வருமானத்திற்கான கணக்குகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்ற இடைக்கால உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

    இதற்கு இளையராஜா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன், இசையமைப்பாளருக்கு அவ்வாறு உத்தரவிட முடியாது என்று வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட இசை நிறுவனங்கள் தரப்பு வழக்கறிஞர், இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் என்று தன்னை நினைப்பதாகக் குறிப்பிட்டார்.

    இதற்கு பதிலளித்த இளையராஜா தரப்பு வழக்கறிஞர் சதீஷ் பராசரன், ஆமாம், நான் எல்லோருக்கும் மேலானவன் தான் எனவும் வீம்புக்காக இதனைச் சொல்வதாக நினைக்க வேண்டாம் எனவும் தெரிவித்தார். இதனையடுத்து, நீதிபதிகள் இந்த வழக்கின் விசாரணையை ஏப்ரல் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சீமானின் நாம் தமிழர் கட்சி தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது
    • நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தமது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்

    வரும் பாராளுமன்ற தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி "மைக்" சின்னத்தில் போட்டியிடுகிறது.

    சீமானின் நாம் தமிழர் கட்சி தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. இந்த 40 தொகுதிகளில் போட்டியிடுபவர்களில் 20 பேர் ஆண்கள், 20 பேர் பெண்கள் . சீமானின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் மைக் சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தமது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

    முன்பு கரும்பு விவசாயி சின்னத்திற்கு ஓட்டு கேட்டு வந்த சீமான், மைக் சின்னத்தை மக்கள் மனதில் பதிய வைக்க தீவிரமாக பரப்புரை செய்து வருகிறார்.

     

    பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி, வாக்குப்பதிவு எந்திரங்களில் கட்சி சின்னம் வேட்பாளர் பெயர், புகைப்படம் ஆகியவை ஒட்டப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், தேர்தல் ஆணையம், வாக்குப்பதிவு எந்திரங்களில் ஒட்டியுள்ள மைக் சின்னம் வேறு மாதிரி இருப்பதாக நாம் தமிழர் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

    ஸ்விட்ச் இல்லாத மைக் சின்னத்தை கொடுத்துவிட்டு, ஸ்விட்ச் இருக்கும் மைக் சின்னத்தை வாக்குப்பதிவு எந்திரங்களில் ஒட்டுகிறார்கள் என நாம் தமிழர் கட்சியினர் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

     

    • கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சி செய்து வருகிறது. மோடி பிரதமராக உள்ளார்
    • மோடி தேசபக்தி கொண்டவர். அவர் ஒரு மகான், புண்ணியவான், சந்நியாசி. இரவு பகல் பாராமல் மோடி நாட்டுக்காக உழைத்து கொண்டிருக்கிறார்.

    இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் பெரம்பலூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார். தேர்தல் நெருங்கி வருவதால், பாரிவேந்தர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

    அந்த வகையில், இன்று திருச்சியில் உள்ள தும்பலம், அயித்தாம்பட்டி, வாளசிராமணி பகுதியில் பாரிவேந்தர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    அப்போது பொது மக்களுக்கு மத்தியில் அவர் பேசியதாவது:-

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் அனைவரும் தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். 2019-ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தீர்கள். வெற்றி பெற செய்த நான் உங்களுக்காக என்ன செய்தேன் என்று கேட்கலாம். உங்களுக்காக பாராளுமன்றத்திலே பேசிருக்கிறேன், ரெயில்வே மந்திரி, நிதிமந்திரி, பிரதமர் ஆகியோரை சந்தித்து பேசியிருக்கிறேன் இவை அனைத்தையும் உங்களுக்கு புத்தமாக போட்டு கொடுத்திருக்கிறேன்.

    இந்த புத்தகம் எல்லாருடைய வெற்றிக்கும் வந்து சேர்ந்திருக்கும். இல்லையென்றாலும் விரைவில் வரும். மற்ற தொகுதிகளில் வெற்றி பெற்ற எம்பிக்கள் இது போன்ற புத்தகங்கள் போடுவதில்லை. பாராளுமன்ற உறுப்பினரின் பணிக்கு மதிப்பெண்கள் கொடுத்தால் எனக்கு நீங்கள் 100 மதிப்பெண்கள் கொடுப்பேர்கள். அந்த அளவிற்கு இந்த பகுதியில் நான் வேலை செய்துள்ளேன்.

    ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் வேலை உங்களின் பிரச்சனைகளை பாராளும்னறத்தில் பேசுவது. உங்களின் பிரச்சினைகளை தீர்க்க மத்திய அரசு 17 கோடி கொடுத்தது. அந்த 17 கோடி ரூபாயில் எனது பாராளுமன்ற தொகுதிக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்துள்ளேன்.

    குறிப்பாக இந்த தொகுதியில் உள்ள அரசுப்பள்ளிகளில் போதுமான வகுப்பறைகள் இல்லாமல் இருந்தது. பெண்கள் மரத்தடியில் அமர்ந்து படித்து கொண்டிருந்தார்கள். அதனால் அரசுப்பள்ளிகளுக்கு 42 வகுப்பறைகளை கட்டி கொடுத்துள்ளேன். எந்தெந்த ஊருக்கு சமுதாய கூட்டங்கள் கேட்டீர்களா அங்கெல்லாம் சமுதாய கூடங்கள் கட்டி கொடுத்துள்ளேன்.

    இதேபோல் நியாயவிலை கடைகள், நீர்த்தேக்க தொட்டிகள், கழிப்பறைகள் கட்டி கொடுத்துள்ளேன்.

    மீண்டும் என்னை எம்.பி.யாக நீங்கள் தேர்ந்தெடுத்தால் இந்த தும்பலம் தொகுதியில் சமுதாய கூடம் கட்டி கொடுப்பேன். அதே போல் காவேரி ஆற்றில் இருந்து குடிநீர் கேட்டுள்ளீர்கள். நான் மீண்டும் வென்றால் காவேரி குடிநீர் திட்டம் கொண்டு வருவேன்.

    பெரம்பலூர் தொகுதியில் ஏழை மாணவர்களால் உயர்கல்வி பெற முடியாமல் தவித்தனர். அதனால் ஏழை மாணவர்களை தேர்வு செய்து அவர்களில் 1200 மாணவர்களுக்கு மருத்துவம் , எஞ்ஜினியர், விவசாயம் ஆகிய உயர்கல்விகளை படிக்க வைத்துள்ளேன். எனது தொகுதியில் 1200 மாணவ, மாணவிகள் பட்டாதாரிகளாக ஆக்கியுள்ளோம். இதுவரை எந்த எம்பி செய்யாத ஒன்றை நான் செய்திருக்கிறேன். இதுவரை 118 கோடி மாணவர்களுக்காக செலவு செய்திருக்கிறேன்.

    நீங்கள் மீண்டும் என்னை பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்தால், 1500 ஏழை குடும்பங்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உயர் மருத்துவம் செய்து தருவேன். குறிப்பாக இதய நோய், சிறுநீரக செயல் இழப்பு, போன்ற பல லட்சம் செய்ய கூடிய மருத்துவ சிகிச்சைகளுக்கு உயர் மருத்துவம் செய்து தருவேன் .

    இந்த 1500 குடும்பங்களுக்கு 10 லட்சம் மதிப்பிலான இன்சூரன்ஸ் செய்து இந்த சிகிக்சை கிடைக்க வழிவகை செய்வேன். இவை அனைத்தும் என் தனிப்பட்ட வாக்குறுதிகள்.

    கேணிப்பள்ளம் ஊரை விட்டு இயங்கி வரும் கல்குவாரி உள்ளது. அங்கிருந்து வரும் புழுதியால் கிராம மக்கள் பாதிப்படைகின்றனர். அதனால் குழந்தைகளுக்கு மூச்சி திணறல் ஏற்படுகிறது என்று நீங்கள் என்னிடம் கூறியுள்ளீர்கள். நான் மீண்டும் எம்.பி.யாக வென்றால் அந்த கல் குவாரியின் இடத்தை மாற்றி அமைப்பேன் என்று உங்களுக்கு உறுதி கூறுகிறேன்.

    கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சி செய்து வருகிறது. மோடி பிரதமராக உள்ளார். மோடி தேசபக்தி கொண்டவர். அவர் ஒரு மகான், புண்ணியவான், சந்நியாசி. இரவு பகல் பாராமல் மோடி நாட்டுக்காக உழைத்து கொண்டிருக்கிறார்.

    தற்போது கூட பாஜக ஆட்சியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களால் பல நூறு ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தை மீட்டு மோடி ராமர் கோவில் கட்டியுள்ளார். நாம் எல்லாரும் இந்தியர்கள் இந்துக்கள். நம் தாய் நாட்டின் மீது நமக்கு பற்று வேண்டும்.

    மோடி ஆட்சியில் காசியில் நடைபெற்ற தமிழ் சங்கம் நிகழ்ச்சியில் இங்கிருந்து பல ஆயிரக்கணக்கானோர் சென்றனர். காசிக்கு செல்வது புண்ணியம்.

    மீண்டும் மோடி 3-வது முறையாக பிரதமராக மக்கள் வாக்களிக்க போகிறார்கள். வட மாநிலங்களில் மோடிக்கு பெரும் ஆதரவு உள்ளது. இந்த முறை தமிழ்நாட்டில் இருந்து பாஜக சார்பாக நாம் எம்.பிக்களை அனுப்ப வேண்டும்.

    பாஜக ஆட்சியில் எந்த அமைச்சர் மீதும் எந்த ஊழல் குற்றசாட்டும் இல்லை. அந்த வகையில் ஊழல் இல்லா ஆட்சியை மோடி கொடுத்திருக்கிறார்.

    இந்தியா முழுவதும் ஊழல் செய்த கட்சி என்றால் திமுகவை தான் அழைக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை டெல்லிக்கு அனுப்பாதீர்கள்.திமுக அமைச்சர்கள் பலர் மீது ஊழல் குற்றசாட்டு உள்ளது. எப்போது வேண்டுமானாலும் அவர்கள் கைது செய்யப்படலாம்.

    சுட்டெரிக்கும் சூரியனை மறந்து விட்டு கல்விக்கடவுளான சரஸ்வதி அமர்ந்திருக்கும் தாமரை சின்னத்தில் எனக்கு வாக்களித்து நீங்கள் வெற்றி பெற செய்ய வேண்டும்.

    • பா.ஜனதா கட்சியில் புதிதாக ஒரு தலைவர் வந்திருக்கிறார். விமானத்தில் ஏறும்போது பேட்டி கொடுப்பார். இறங்கும்போதும் பேட்டி கொடுப்பார்.
    • பேட்டி கொடுத்து தலைவர் மக்களை ஈர்க்க பார்க்கிறார். இன்று தலைவர்கள் பல வழிகளில் மக்களை சந்திப்பார்கள்.

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று பொள்ளாச்சியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    பொள்ளாச்சி நாடாளுமன்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் எங்கு பார்த்தாலும் மக்கள் வெள்ளம் கடல்போல் காட்சி அளிக்கிறது. பொள்ளாச்சி நகரம் குலுங்கும் வகையில் மக்கள் வெள்ளம் கூடியிருக்கின்றன. இது தேர்தல் பிரசாரம் கூட்டம் அல்ல. வெற்றி விழா கூட்டம்போல் காட்சியளிக்கிறது. வேட்பாளரின் வெற்றி இந்த எழுச்சியில் இருந்து பார்க்கப்படுகிறது.

    மு.க.ஸ்டாலின் அதிமுக 2, 3-ஆக போய்விட்டது என்று கூறுகிறார். பொள்ளாச்சி வந்து பாருங்கள். அதிமுக எப்படி இருக்கிறது என்று தெரியும். ஒன்றாக இருக்கிறது என்பது மக்கள் வெள்ளமே சாட்சி.

    அம்மா மறைவிற்குப் பிறகு அதிமுக-வை மு.க. ஸ்டாலின் உடைக்க, முடக்க முயற்சி செய்தார். ஆனால் உங்கள் ஆதரவோடு அனைத்தும் தவுடுபொடியாக்கப்பட்டது.

    எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தமிழக மக்களுக்கு இறைவன் கொடுத்த கொடை. நம்முடைய தலைவர்கள் நாட்டு மக்களுக்காக வாழ்ந்தார்கள். சில தலைவர்கள் வீட்டு மக்களுக்காக வாழ்ந்தார்கள். கூட்டுப் பொறுப்போடு தேர்தல் என்ற போரில் எதிரிகளை ஓடஒட விரட்டி வெற்றிக் கொடிகளை நாட்டுவோம்.

    மத்தியில் இருந்து தமிழ்நாட்டிற்கு அடிக்கடி வந்துவிட்டு செல்கிறார்கள். இதனால் என்ன பயன்?. வருகிறீர்கள். அதனால் ஒரு திட்டத்தை கொடுத்து மக்கள் நன்மை பெற்றிருந்தால் ஒரு பிரயோஜனம் உண்டு. அதைவிட்டு நேராக வருகிறர்கள். ரோட்டில் செல்கிறார்கள். அதோடு கதை முடிந்து விட்டது.

    மக்கள் ஓட்டு போட்டுவிடுவார்களா?. தமிழ்நாட்டு மக்கள் என்ன சாதாரண மக்களா?. அறிவுத்திறன் படைத்தவர்கள். எது சரி? தவறு? என எடைபோட்டு தீர்ப்பு அளிக்கக்கூடிய மக்கள் தமிழக மக்கள். இந்த ஏமாற்று வேலைகள் ஒன்றும் தமிழகத்தில் எடுபடாது.

    பா.ஜனதா கட்சியில் புதிதாக ஒரு தலைவர் வந்திருக்கிறார். விமானத்தில் ஏறும்போது பேட்டி கொடுப்பார். இறங்கும்போதும் பேட்டி கொடுப்பார். பேட்டி கொடுப்பதுதான் அவருடைய வேலை. பேட்டி கொடுத்து தலைவர் மக்களை ஈர்க்க பார்க்கிறார். இன்று தலைவர்கள் பல வழிகளில் மக்களை சந்திப்பார்கள்.

    ஆனால் இந்த தலைவர் டெக்னிக்கலாக அவ்வப்போது பேட்டி கொடுத்து மக்களை நம்பவைத்து வாக்குகளை பெற முயற்சிக்கிறார். அது அதமிழகத்தில் எடுபடாது. இங்கு உழைக்கின்றவர்களுக்குதான் மரியாதை உண்டு. மக்களுக்காக உழைக்கும் கட்சி அதிமுக., எவ்வளவு பேட்டிகளில் கொடுத்தாலும் ஒன்றும் எடுபட போவதில்லை.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

    ×