search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆமாம், நான் எல்லோருக்கும் மேலானவன்தான்- பாடல்கள் காப்புரிமை வழக்கில் இளையராஜா தரப்பு பதில்
    X

    'ஆமாம், நான் எல்லோருக்கும் மேலானவன்தான்'- பாடல்கள் காப்புரிமை வழக்கில் இளையராஜா தரப்பு பதில்

    • 1970, 1980 மற்றும் 1990 ம் ஆண்டுகளில் இளையராஜாவின் பாடல்களுக்கு இருந்த ஈர்ப்பு தற்போது இல்லை
    • ஸ்பாட்டிபை மூலம் இளையராஜா பெற்ற வருமானத்தைத் தனி கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டும்

    1970, 1980 மற்றும் 1990 ம் ஆண்டுகளில் இளையராஜாவின் பாடல்களுக்கு இருந்த ஈர்ப்பு தற்போது இல்லை - இசை நிறுவனங்கள் தரப்பு வழக்கறிஞர்

    இசையமைப்பாளர் இளையராஜாவின் சுமார் 4 ஆயிரத்து 500 பாடல்களைப் பயன்படுத்துவதற்கு எக்கோ மற்றும் அகி உள்ளிட்ட இசை நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்திருந்தன. ஒப்பந்தம் முடிந்த பிறகும், காப்புரிமை பெறாமல் தனது பாடல்களைப் பயன்படுத்துவதாகக் கூறி, இளையராஜா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, தயாரிப்பாளர்களிடம் உரிமை பெற்று, இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு உரிமை உள்ளது எனவும், இளையராஜாவுக்கும் இந்த பாடல்கள் மீது தனிப்பட்ட தார்மீக சிறப்பு உரிமை இருப்பதாகவும் கடந்த 2019ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தார்.

    இந்த உத்தரவை எதிர்த்து இளையராஜா மேல்முறையீடு செய்திருந்தார், இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, இளையராஜாவின் 4,500 பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு இடைக்காலத் தடை விதித்தது.

    இதனிடையே, படத்தின் காப்புரிமை தயாரிப்பாளரிடம் இருப்பதால், அவர்களிடம் செய்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் பாடல்களைப் பயன்படுத்த தங்களுக்கு அதிகாரம் உள்ளதென எக்கோ நிறுவனம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இசை நிறுவனங்கள் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய்நாரயண், இந்தியத் திரைப்படத்துறையில் உள்ள இசையமைப்பாளர்கள் ஒரு குறிப்பிட்ட திரைப்படத்திற்காக ஒரு திரைப்பட தயாரிப்பாளரிடம் இருந்து ஊதியம் பெற்றவுடன், ராயல்டி பெறும் உரிமையைத் தவிர, அனைத்து உரிமைகளையும் இழந்து விட்டதாகத் தெரிவித்தார்.

    எனவே, காப்புரிமை சட்டத்தின் கீழ் பாடல்களின் உரிமையாளராக இளையராஜா வருவாரா என்பதை இறுதி விசாரணையில் தான் முடிவு செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், இளையராஜா ஒரு இசைஞானி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை, ஆனால் 1970, 1980 மற்றும் 1990 ம் ஆண்டுகளில் அவரது பாடல்களுக்கு இருந்த ஈர்ப்பு தற்போது இல்லை என இசை நிறுவனங்கள் தரப்பு வழக்கறிஞர் குறிப்பிட்டார்.

    மேலும் ஸ்பாட்டிபை மூலம் இளையராஜா பெற்ற வருமானத்தைத் தனி கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டும் அல்லது குறைந்தபட்சம் இந்த வருமானத்திற்கான கணக்குகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்ற இடைக்கால உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

    இதற்கு இளையராஜா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன், இசையமைப்பாளருக்கு அவ்வாறு உத்தரவிட முடியாது என்று வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட இசை நிறுவனங்கள் தரப்பு வழக்கறிஞர், இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் என்று தன்னை நினைப்பதாகக் குறிப்பிட்டார்.

    இதற்கு பதிலளித்த இளையராஜா தரப்பு வழக்கறிஞர் சதீஷ் பராசரன், ஆமாம், நான் எல்லோருக்கும் மேலானவன் தான் எனவும் வீம்புக்காக இதனைச் சொல்வதாக நினைக்க வேண்டாம் எனவும் தெரிவித்தார். இதனையடுத்து, நீதிபதிகள் இந்த வழக்கின் விசாரணையை ஏப்ரல் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×