search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rama Navami Yatra"

    • கேரள மாநிலம் மலப்புரத்தில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் வரை ராமநவமி யாத்திரை செல்ல ஸ்ரீ ஆஞ்சநேயம் அறக்கட்டளை அனுமதி கோரியிருந்தது
    • இந்த யாத்திரை தமிழ்நாட்டின் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாகச் சென்று கன்னியாகுமரியில் முடிவடைகிறது

    கேரள மாநிலம் மலப்புரத்தில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் வரை ஏப்ரல் 12ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை ராமநவமி யாத்திரை செல்ல ஸ்ரீ ஆஞ்சநேயம் அறக்கட்டளை திட்டமிட்டிருந்தது.

    தமிழ்நாட்டின் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட தமிழ்நாட்டின் 11 மாவட்டங்கள் வழியாகச் சென்று கன்னியாகுமரியில் முடிவடையும் இந்த யாத்திரைக்கு சட்டம் - ஒழுங்கை காரணம் காட்டி தமிழக அரசு அனுமதி மறுத்தது.

    தமிழக அரசின் இந்த உத்தரவை எதிர்த்து ஸ்ரீ ஆஞ்சநேயம் அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளரான திலீப் நம்பியார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

    இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், ராம நவமி யாத்திரைக்கு ஏன் அனுமதி மறுக்கப்பட்டது? இதனால் என்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும்? என காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்திருந்தார்.

    இந்நிலையில் இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாகவே இந்த முறை ராம நவமி யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தமிழக அரசு தரப்பு விளக்கம் அளித்தது.

    இதையடுத்து ராம நவமியை முன்னிட்டு தமிழ்நாட்டில் 11 மாவட்டங்கள் வழியே யாத்திரை செல்ல மாநில அரசு அனுமதி மறுத்தது சரியே என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    கன்னியாகுமரியில் மட்டும் யாத்திரைக்கு அனுமதி வழங்க வேண்டும் என மனுதாரர் கோரிக்கை வைக்க, அதுகுறித்து 2 நாட்களில் பரிசீலித்து அரசு முடிவெடுக்க நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

    ×