என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • ஜூலை 5-ந்தேதி தொடங்குகிறது.
    • 8 அணிகள் இதில் பங்கேற்கின்றன.

    சென்னை:

    தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 8-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜூலை 5-ந்தேதி தொடங்குகிறது. ஆகஸ்ட் 4-ந்தேதி வரை இந்த போட்டி நடக்கிறது.

    சேலம், கோவை, நெல்லை, திண்டுக்கல், சென்னை ஆகிய 5 இடங்களில் போட்டி நடக்கிறது. குவாலிபையர் -1 மற்றும் எலிமினேட்டர் ஆட்டங்கள் திண்டுக்கல்லிலும், குவாலி பையர்-2 மற்றும் இறுதிப்போட்டி சேப்பாக்கம் மைதானத்திலும் நடக்கிறது.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ், நடப்பு சாம்பியன் கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருப்பூர் தமிழன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ், சேலம் ஸ்பார்ட்டன்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ் ஆகிய 8 அணிகள் இதில் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். 'லீக்' முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.

    போட்டிகள் தினசரி இரவு 7.15 மணிக்கு தொடங்கும். ஒரே நாளில் 2 ஆட்டங்கள் இருந்தால் பிற்பகல் 3.15 மணிக்கு தொடங்கும். 7 நாட்கள் மட்டுமே 2 போட்டிகள் நடக்கிறது.

    டி.என்.பி.எல். கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.50 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும். 2-வது இடத்துக்கு ரூ.30 லட்சம் கிடைக்கும். 3-வது மற்றும் 4-வது இடங்களுக்கு தலா ரூ.20 லட்சம் பரிசு தொகை வழங்கப்படும். கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் பரிசு தொகை கிடைக்கும்.

    டி.என்.பி.எல். போட்டிகள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    • கடந்த 3 நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது.
    • பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    இந்நிலையில் கடந்த 3 நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

    இன்று காலை பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 7,149 கன அடியாக நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. காலை நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 64 அடியாக உயர்ந்து உள்ளது. நேற்று ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்துள்ளது. குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி, கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

    இதேபோல் 41 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரிப்பள்ளம் அணை நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 38.93 அடியாக உள்ளது. இதேபோல் 33 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.57 அடியாக உயர்ந்து உள்ளது.

    • தனிநபர் ஒருவருக்கு ஒருமுறை எத்தனை பாட்டில் விற்கப்பட வேண்டும்?
    • ஆதார் உள்ளிட்ட அடையாள ஆவணம் பெற்று மது விற்க வேண்டுமா?

    சென்னை:

    தமிழக டாஸ்மாக் பணியாளர்கள் சங்க பொதுச்செயலாளர் தனசேகரன் கூறியதாவது:-

    மது வாங்க வருவோர், ஒரு பாட்டில், இரு பாட்டில் என வாங்குவர். மதுக் கூடங்களுக்கு மது அருந்த வருவோர், நேரடியாக மதுக்கூடத்திற்கு சென்று, அங்கு பணிபுரியும் ஊழியரிடம் மது வாங்கி வரச்சொல்லி அனுப்புகின்றனர்.

    அவர்களும் ஒரு மேஜைக்கு இரண்டு, மூன்று பாட்டில் வீதம், 4-5 மேஜைகளுக்கு சேர்த்து, ஒரே சமயத்தில் மொத்தமாக மது பாட்டில்களை வாங்கிச் செல்கின்றனர். இது, மது அருந்த வந்தவர்களுக்கு வாங்கப்படுகிறதா? அல்லது பதுக்கி விற்க வாங்கப்படுகிறதா? என்பது, மதுக்கடை ஊழியர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.

    கள்ளச்சந்தையில் மது பாட்டில்கள் விற்கும் போது, போலீசாரிடம் பிடிபட்டு விசாரணையில், 'எங்கிருந்து இவ்வளவு பாட்டில் வந்தது' என்று கேட்டால், ஊழியர்களை கைகாட்டி விடுகின்றனர். இதனால், டாஸ்மாக் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    இந்த பிரச்சினைக்கு தீர்வு காண, தனிநபர் ஒருவருக்கு ஒருமுறை எத்தனை பாட்டில் விற்கப்பட வேண்டும் என்ற விதிமுறையை டாஸ்மாக் உருவாக்கி, விரைவில் வெளியிட வேண்டும். மதுக்கூடத்தில் பணிபுரிவோருக்கு, 'ஆதார்' உள்ளிட்ட அடையாள ஆவணம் பெற்று மது விற்க வேண்டுமா? எனவும், டாஸ்மாக் நிர்வாகம் தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 4-ம் வகுப்பு தரத்திலான கணிதப் பாட கேள்விகளுக்கு 73.3 சதவீத ஆசிரியர்கள் சரியாக பதில் அளித்தனர்.
    • பள்ளிப் பாட புத்தகங்களில் உள்ள தகவல்களை அப்படியே மனப்பாடம் செய்து தேர்வு எழுதும் கல்வி முறையை நாம் பின்பற்றி வருகிறோம்.

    புதுடெல்லி:

    விகிதம் மற்றும் விகிதாசாரம் தர்க்க ரீதியான பகுப்பாய்வு, இயற்கணிதம் உள்ளிட்ட பாடங்களில் கேட்கப்பட்ட அடிப்படை கேள்விகளுக்கு பதில் அளிக்க இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள 80 சதவீத கணித ஆசிரியர்கள் தடுமாறுவதாக புதிய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் உள்ள 152 பள்ளி களைச் சேர்ந்த 1,300-க்கு மேற்பட்ட கணித ஆசிரியர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த அதிர்ச்சி தகவல் வெளியானது.

    ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் கணிதப் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களின் பாட அறிவை அறிந்து கொள்ளும் வகையிலான ஆய்வு ஒன்றை கல்விக்கான முன்னெடுப்புகள் (இஐ) என்ற தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் நடத்தியது.

    அந்த ஆய்வில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு கணிதப் பாடம் சார்ந்த முதல்நிலை மதிப்பீட்டு பயிற்சி தேர்வு நடத்தப்பட்டது. அவர்கள் பணிபுரியும் பள்ளிகளின் முதல்வர்களுக்கும் இந்த அறிக்கை பகிரப்பட்டது. இது தொடர்பான ஆய்வில் கூறியிருப்பதாவது:-

    அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் திறனை மேம்படுத்த உதவும் விகிதம் மற்றும் விகிதாசாரம், தர்க்க ரீதியான பகுப்பாய்வு இயற்கணிதம் உள்ளிட்ட பாடங்களில் இருந்து அடிப்படையான கேள்விகள் கேட்கப்பட்டன. இதற்கு பதில் அளிக்க 80 சதவீத கணித ஆசிரியர்கள் தடுமாறினர்.

    4-ம் வகுப்பு தரத்திலான கணிதப் பாட கேள்விகளுக்கு 73.3 சதவீத ஆசிரியர்கள் சரியாக பதில் அளித்தனர். ஆனால் 7-ம் வகுப்பு தரத்திலான கேள்விகளுக்கு 36.7 சதவீத ஆசிரியர்கள் மட்டுமே சரியாக விடை அளித்தனர்.

    பயிற்சி தேர்வில் கேட்கப்பட்டிருந்த கேள்விகளில் 50 சதவீத கேள்விகளுக்கு 75 சதவீத ஆசிரியர்கள் சரியாக பதில் அளித்தனர். 25 சதவீத கேள்விகளுக்கு எந்தவித தவறுகளும் இல்லாமல் 25 சதவீத ஆசிரியர்கள் மட்டுமே பதில் அளித்தனர்.

    இந்த ஆய்வு குறித்த நிறுவனத்தின் துணை நிறு வனர் ஸ்ரீதர்ராஜகோபாலன் கூறியதாவது:-

    பள்ளிப் பாட புத்தகங்களில் உள்ள தகவல்களை அப்படியே மனப்பாடம் செய்து தேர்வு எழுதும் கல்வி முறையை நாம் பின்பற்றி வருகிறோம்.

    இதை நிறுத்தி விட்டு புதிய சிந்தனைகளைத் தூண்டும் வகையில் நமது கல்வி முறையை மாற்றி அமைப்பதற்கான விழிப்புணர்வாக நாம் இந்த ஆய்வை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    நவீன கால பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும் மாணவர்களிடம் புதிய கண்டுபிடிப்புகளை மேம்படுத்தும் திறனை அதிகரிக்கும் நோக்கிலும் தேசிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதேபோல் வடிவியல் பாடம் சார்ந்த அடிப்படைக் கேள்விகளுக்கும் தவறான புரிதலோடு ஆசிரியர்கள் பதில் அளித்தனர். தசம எண்களை முழு எண்களாக எடுத்து மதிப்பீடு செய்வது போன்ற தவறுகளையும் ஆசிரியர்கள் செய்தனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • சர்வதேச அரசியல் படிப்புக்காக வெளிநாடு பயணம்.
    • தனியாக ரகசிய ஆய்வும் செய்துள்ளது.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வருகிற செப்டம்பர் மாதம் லண்டன் செல்கிறார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சார்பில் சர்வதேச அரசியல் படிப்புக்காக இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள 12 பேரில் அண்ணாமலையும் ஒருவர்.

    இதற்காக லண்டன் செல்லும் அண்ணாமலை 6 மாதங்கள் அங்கேயே தங்கி இருப்பார். இந்த 6 மாதங்களும் தலைவர் இல்லாமல் இருந்தால் கட்சி பணி தொய்வடையும் என்று கருதுகிறார்கள்.

    இந்த நிலையில்தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை டாக்டர் தமிழிசை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது என்ன பேசினார்கள் என்ற தகவல் வெளியாகவில்லை.

    ஆனால் புதிய தலைவரை நியமிப்பது பற்றி டெல்லி மேலிடம் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

    ஆனால் அண்ணாமலை ஆதரவாளர்கள் இதை மறுத்தனர். ஏற்கனவே இதேபோல் அண்ணாமலை 3 மாதம் லண்டன் சென்றிருந்தார். அப்போது புது தலைவர் நியமிக்கப்படவில்லை. எனவே அண்ணாமலைக்கு பதிலாக புதிய தலைவரை நியமிப்பது சாத்தியமில்லை என்கிறார்கள்.

    ஆனால் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாதது கட்சி மேலிடத்தை யோசிக்க வைத்துள்ளது. தோல்விக்கான காரணங்கள் குறித்து தமிழக பா.ஜ.க. தலைமையிடமும் அறிக்கை பெற்றுள்ளது. தனியாக ரகசிய ஆய்வும் செய்துள்ளது.

    அதன் அடிப்படையில் கட்சியை பலப்படுத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையில் நாடு முழுவதும் ௧௦-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் கவர்னர்கள் பதவி காலியாக உள்ளது. அது தொடர்பாகவும் பல தலைவர்கள் பெயர்களை டெல்லி மேலிடம் பரிசீலிக்கிறது. தமிழ்நாட்டை சேர்ந்த சி.பி.ராதா கிருஷ்ணன், இல.கணேசன் ஆகியோர் கவர்னர்களாக இருக்கிறார்கள்.

    இந்த நிலையில் கூடுதலாக யாருக்காவது கவர்னர் பதவி வழங்கப்படுமா? என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.

    • குண்டாறு அணை நிரம்பி வழிகிறது.
    • மலைப்பகுதியில் மழை வெகுவாக குறைந்துவிட்டது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த தென்மேற்கு பருவமழை காரணமாக அணைகள் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதனால் விவசாய பணிகள் தீவிரம் அடைந்துள்ளன.

    நெல்லை மாவட்டத்தில் தொடர்மழையால் பிரதான அணையான 143 அடி கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. நேற்று 100 அடியை எட்டிய அந்த அணையில் இன்று மேலும் 2 அடி நீர் இருப்பு அதிகரித்து 102 அடியாக உள்ளது. இன்று காலை நிலவரப்படி 2 மில்லிமீட்டர் மட்டுமே மழை பெய்துள்ளது.

    ஆனாலும் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் 5 ஆயிரம் கனஅடி நீர் வந்த நிலையில், இன்று 2 ஆயிரம் அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்காக 806 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. சேர்வலாறு அணை நீர்மட்டம் இன்று மேலும் 1 அடி உயர்ந்து 115.81 அடியாக உள்ளது.

    118 அடி கொண்ட மணிமுத்தாறு அணையில் 78.64 அடி தண்ணீர் உள்ளது. திருக்குறுங்குடி அருகே உள்ள 52.50 அடி கொள்ளளவு கொண்ட கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 51 அடியை எட்டியுள்ள நிலையில், அணைக்கு வரும் 20 கனஅடி நீர் அப்படியே உபரியாக வெளியேற்றப்படுகிறது. அந்த அணையில் இருந்து கார் பருவ சாகுபடி பணிக்காக வருகிற 1-ந்தேதி முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதற்கிடையே மலைப்பகுதிகளில் மழை குறைந்தாலும், தண்ணீர் வரத்து தொடர்ந்து இருந்து கொண்டே இருப்பதால், மணிமுத்தாறு அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு இன்று 4-வது நாளாக தடை நீடிக்கிறது.

    அதே நேரம் களக்காடு மலைப்பகுதியில் பெய்த கன மழையால் கடந்த 26-ந்தேதி முதல் தலையணையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அங்கு சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் மீண்டும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.

    தென்காசி மாவட்டத்திலும் மலைப்பகுதியில் மழை வெகுவாக குறைந்துவிட்டது. எனினும் அணைகளுக்கு நீர் வரத்து இருப்பதால், அவற்றின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. கடனா அணை நீர்மட்டம் ஒரு அடி உயர்ந்து 60 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 76 அடியாகவும் உள்ளது.

    குண்டாறு அணை நிரம்பி வழிகிறது. அடவிநயினார் அணை நீர்மட்டம் இன்று 2 அடி உயர்ந்து 92 அடியை எட்டியுள்ளது. அந்த அணை பகுதியில் அதிகபட்சமாக 4 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. 

    • வாரத்தில் 3 நாட்கள் தங்கம் விலை குறைந்த விலையில் நேற்றும், இன்றும் உயர்ந்துள்ளது.
    • வெள்ளி விலையில் இன்றும் மாற்றமில்லை.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் இருந்து ஏறுவதும், குறைவதுமாக இருந்தது. வாரத்தில் 3 நாட்கள் தங்கம் விலை குறைந்த விலையில் நேற்றும், இன்றும் உயர்ந்துள்ளது.

    இன்று ஆபரணத்தங்கம் கிராமுக்கு ரூ.19 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,685-க்கும் சவரனுக்கு ரூ.152 உயர்ந்து ஒரு சவரன் ரூ.53,480-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையில் இன்றும் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.94.50-க்கும் பார் வெள்ளி ரூ.94,500-க்கும் விற்பனையாகிறது.

    • மழையின் தாக்கம் தீவிரம் அடைந்துள்ளது.
    • ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

    ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா தாலுகாக்களில் மழையின் தாக்கம் குறைந்த நிலையில் கூட லூர் மற்றும் பந்தலூர் தாலுகாக்களில் மழையின் தாக்கம் தீவிரம் அடைந்துள்ளது.

    நேற்றும் கூடலூர், பந்தலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான தேவாலா, அய்யன்கொல்லி, கொளப்பள்ளி, சேரம்பாடி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை கொட்டி தீர்த்தது.

    இதன் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. இன்று பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பனி மூட்டத்துடன் மழை பெய்து வருகிறது. வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே வாகனங்களை இயக்கி வருகின்றனர்.

    பந்தலூர், கூடலூர் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

    தொடர் மழையால், அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குட்டைகள், ஓடைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மழை காரணமாக அங்குள்ள சில குடியிருப்பு பகுதிகளையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

    ஆங்காங்கே சில இடங்களில் மண் சரிவுகளும், மரங்களும் முறிந்து விழுந்தன. இதனை தீயணைப்புத் துறையினர் வெட்டி அகற்றினர். தொடர் மழை காரணமாக கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து கலெக்டர் அருணா உத்தரவிட்டுள்ளார்.

    தேவால-உப்பட்டி டவர் பகுதியில் மழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்தது. நிலச்சரிவு ஏற்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அந்த வாகனம் நகர்ந்ததால் காரில் வந்தவர் உயிர்தப்பினார்.

    கூடலூர் பகுதியில் பெய்த கனமழையில் இதுவரை 6 மின் கம்பங்கள், 5 வீடுகள் சேதம் அடைந்தன. பெரிதும், சிறிதுமாக 17 இடங்களில் விழுந்த மரங்கள் உடனடியாக அகற்றப்பட்டன.

    காற்றில் 2,500 நேந்திரன் வாழை மரங்கள் பாதிக்கப்பட்டன. 24 இடங்களில் சிறிய அளவில் மண்சரிவு ஏற்பட்டது. பருவமழையின் போது மழைநீர் சூழ்ந்து பாதிக்கப்பட்ட தேன்வயல், சிறுவயல் கிராம மக்களுக்கு இலவச வீடுடன் மாற்றிடம் வழங்கப்பட்டது.

    இதனால் கூடலூரில் தற்காலிக தங்கும் முகாம் அமைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படவில்லை. இருவயல் பகுதியில் மட்டும் குடியிருப்புக்குள் மழை வெள்ளம் புகுந்ததால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் பந்தலூர் அருகே கொளப்பள்ளியில் இருந்து பாலாவயல் வழியாக பாட்டவயல் மற்றும் பிதர்காடு உட்பட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலை அமைந்துள்ளது.

    இந்த சாலை வழியாக, 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் நாள்தோறும் சென்று வருகிறார்கள். சாலையின் நடுவே பாயும் ஆற்றைக் கடப்பதற்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாலம் கட்டப்பட்டது.

    இந்த பாலம் கடந்த 2019-ம் ஆண்டு பெய்த மழையின் போது இடிந்து விழுந்தது. இதனால் தற்போது அங்கு புதிய பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. மக்கள் ஆற்றை கடந்து செல்வதற்கு வசதியாக அங்கு தற்காலிக பாலம் அமைக்கப்பட்டு, மக்கள் அதனை பயன்படுத்தி வந்தனர்.

    தற்போது மழை பெய்து வருவதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பாலத்தின் ஒரு பகுதியை ஆற்று வெள்ளம் சூழ்ந்தது. மற்றொரு பகுதி தண்ணீரின் மேல் பகுதியில் அமைந்துள்ளதால் மக்கள் பாலத்தை கடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால் இந்த பகுதி மக்கள் 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றி வேறு வழியில் பயணித்து வருகிறார்கள்.

    மாவட்ட கலெக்டர் அருணா கூறும்போது, `நீலகிரியில் பெய்து வரும் மழையால் பெரியளவில் பாதிப்பில்லை. மரங்கள் விழுந்துள்ளன. அவற்றை நெடுஞ்சாலை மற்றும் தீயணைப்புத்துறையினர் வெட்டி அகற்றினர். பந்தலூர் அருகே பாலாவயல் பகுதியில் ஆற்றை கடக்க அமைக்கப்பட்ட தற்காலிக பாலத்தை வெள்ளம் சூழ்ந்தது. அதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றார்.

    நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

    அப்பர் பவானி-72,

    சேரங்கோடு-39,

    ஓவேலி-28,

    பந்தலூர், நடுவட்டம்-22,

    பாடந்தொரை-18,

    செருமுள்ளி-16. 

    • கேரளாவில் பெய்துவரும் கனமழையால் தமிழக பகுதிக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது.
    • அணையிலிருந்து மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 1946 மி.கனஅடியாக உள்ளது.

    கூடலூர்:

    கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் சீராக உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 123.30 அடியாக உள்ளது. அணைக்கு 2469 கனஅடி நீர் வருகிறது. அணையிலிருந்து கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாயம் பாசனம் உள்ளிட்ட தேவைக்களுக்காக 1200 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. 3281 மி.கனஅடிநீர் இருப்பு உள்ளது.

    இந்த தண்ணீர் பாசனத்திற்கு போக வைகை அணையை வந்து சேருகிறது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை மாவட்ட விவசாய பாசனத்திற்காக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் நீர்மட்டம் குறைந்தது. அதனை தொடர்ந்து போதிய அளவு மழை பெய்யாததால் அணையின் நீர்மட்டமும் உயராமல் இருந்தது.

    தற்போது கேரளாவில் பெய்துவரும் கனமழையால் தமிழக பகுதிக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் லோயர் கேம்ப்பில் உள்ள மின்உற்பத்தி நிலையத்தில் 4 ஜெனரேட்டர்களில் 108 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் வைகை அணைக்கு நீர்வரத்து 1113 கனஅடியாக அதிகரித்தது. இதனால் நீர்மட்டம் 49.64 அடியாக உயர்ந்துள்ளது. விரைவில் 50 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அணையிலிருந்து மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 1946 மி.கனஅடியாக உள்ளது.

    கடந்த 4 நாட்களில் அணையின் நீர்மட்டம் 4 அடிவரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மழை தொடர்ந்து கை கொடுத்தால் இந்த வருடமும் பாசனத்திற்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது என அவர்கள் நம்பிக்கையுடன் விவசாய பணிகளை தொடங்கி உள்ளனர்.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியில் நீடித்து வருகிறது. அணைக்கு வரும் 30 கனஅடிநீர் அப்படியே திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 122.24 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. பெரியாறு 10.2, தேக்கடி 6.4 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.

    • கடையில் பெண் ஒருவரிடம் "பேல் பூரி" வாங்கிய யூடியூபர், ஓகே... தாங்க்யூ என்று கூறினார்.
    • அதற்கு அந்த பெண்ணும் "நன்றி அண்ணா" என்று கூறுவதை கேட்டு யூடியூபர் சிரிக்கிறார்.

    அமெரிக்காவை சேர்ந்த பிரபல யூடியூபர் கிறிஸ்டோபர் லூயிஸ் தமிழில் "நன்றி தங்கச்சி" என்று பேசிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கடையில் பெண் ஒருவரிடம் "பேல் பூரி" வாங்கிய யூடியூபர், ஓகே... தாங்க்யூ என்று கூறினார்.

    what do you say for like sister in... என்று கேட்கிறார்.

    அதற்கு அந்த பெண் "தங்கச்சி" என்று கூறுகிறார்.

    younger sister is தங்கச்சி என்று கேட்கிறார்.

    அந்த பெண்ணும் ஆம் என்று கூறுகிறார். 

    இதையடுத்து "நன்றி தங்கச்சி" என்று கூறுகிறார். அதற்கு அந்த பெண்ணும் "நன்றி அண்ணா" என்று கூறுவதை கேட்டு யூடியூபர் சிரிக்கிறார்.

    தான் கூறியது சரியா என்று கேட்கிறார். அப்பெண்ணும் சரி என்கிறார்.

    அவர் வாங்கியதின் பெயர் என்ன என்று கேட்கிறார். அப்பெண் மசாலா பொரி என்று கூறுகிறார்.

    அந்த பெண்ணின் பெயரை கேட்கிறார். வெண்ணிலா என்று அப்பெண் பதிலளிக்கிறார்.

    வெண்ணிலாவின் "பேல் பூரி" என்று சுவைக்கிறார்.

    இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • சாத்தூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    • பட்டாசு ஆலை விபத்து குறித்து சாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பந்துவார்பட்டியில் இன்று காலை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

    மேலும், வெடி விபத்தில் 3 அறைகள் சேதமாகியுள்ளதாகவும், சிலர் உள்ளே சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    வெடி விபத்தில் 3 அறைகள் சேதமான நிலையில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சாத்தூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும் பட்டாசு ஆலை விபத்து குறித்து சாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஈரோடு காவல் தெய்வமாகவே ராவுத்தர் இருக்கின்றார்.
    • எம்மதமும் சம்மதமே என்று சொல்லுகின்ற இந்த ஆட்சியில் இந்த நல்லுறவு பேணிக்காக்கப்படும்.

    சென்னை:

    சட்டசபை கேள்வி நேரத்தின்போது காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் செல்வப்பெருந்தகை, இந்து கடவுள்களும், இஸ்லாமியர்களும் எப்படி இணக்கமாக இருந்திருக்கிறார்கள் என்பதை அறநிலையத்துறை சார்பாக புத்தகம் வெளியிட முடியுமா? என்றார்.

    அதற்கு அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்து பேசியதாவது:-

    பல நூறாண்டுகளை கடந்து இஸ்லாமியர்கள், இந்துக்களுடன் நல்லுறவு பேணிப் பாதுகாக்கப்படுகின்ற கோவில்கள் தமிழகத்தில் 20 இருக்கின்றன. இந்த நடைமுறைகளை தகர்க்க வேண்டும்., மக்களிடையே மதவாதத்தை தூண்ட வேண்டும் என்ற நோக்கத்தோடு முற்படுகின்ற சக்திகளை வீழ்த்துகின்ற சக்திதான் திராவிட மாடல் ஆட்சி.

    விழுப்புரத்தில் படே சாயுபு திருக்கோவில் இருக்கின்றது. அங்கு இந்துக்களுக்கும், இஸ்லாமிய சகோதரர்களுக்கும்தான் மரியாதை. அது இருவரும் சேர்ந்து தொழுகின்ற இடமாக இருக்கின்றது. அதேபோல் ஈரோடு காவல் தெய்வமாகவே ராவுத்தர் இருக்கின்றார். ராவுத்தரை தொழுதுவிட்டு தான் அடுத்து இந்து கோவில்களை இந்து சாமிகளை தொழ வேண்டும். அதேபோல புதுக்கோட்டையில் பிரசித்தி பெற்ற தேர்வலம் என்பது முதலில் அதை தொட்டு வணங்கி ஆரம்பித்து வைப்பது இஸ்லாமிய நண்பர்கள் தான். அதன் பிறகுதான் தேர்வடமே புறப்படும். அதேபோல் ஈரோட்டில் ஒரே கருவறையில் இரண்டு ராவுத்தர் சிலைகளும் நடுவில் முருகரும் உள்ளனர்.

    எம்மதமும் சம்மதமே என்று சொல்லுகின்ற இந்த ஆட்சியில் இந்த நல்லுறவு பேணிக்காக்கப்படும். இதுகுறித்த விழிப்புணர்வை அனைத்து மதத்திற்கும் கொண்டு சேர்ப்பதற்கு அனைத்து வரலாற்றையும் எடுத்து புத்தகமாக தொகுத்து, வெளியிடுவதற்கு முதல்-அமைச்சரின் அனுமதி பெற்று நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மேலும் செல்வப்பெருந்தகை, 'ஸ்ரீபெரும்புதூர் தொகுதி வி.ஆ.பி.சத்திரம் ராமானுஜர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் வசிப்பவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்படுமா?' என்று கேள்வி எழுப்பினார்.

    அதற்கு பதில் அளித்து அமைச்சர் சேகர்பாபு பேசும்போது, 'ராமானுஜர் கோவில் ரூ.2 கோடி செலவில் திருப்பணிகள் நடைபெற உள்ளன. அந்த கோவிலுக்கு சொந்தமான இடத்தில் இருக்கின்ற 48 குடும்பங்களுக்கு நிச்சயமாக மறுவாழ்வு தந்த பிறகுதான் அங்கிருந்து அப்புறப்படுத்தும் பணி நடைபெறும்' என்று கூறினார்.

    ×