என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • முழுநேரம் தண்ணீர் கிடைக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது.
    • புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைப்பது குறித்து ஆய்வு.

    சென்னை:

    சட்ட சபையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், தி.நகர் பஸ் நிலையம் அருகே உள்ள முத்துரங்கன் சாலை பகுதியில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கப்படுமா எனவும் தியாகராய நகர் தொகுதியில் உள்ள ஏழு வார்டுகளில் குடிநீரில் கழிவுநீர் கலக்கும் பிரச்சனை இருப்பதாகவும், எனவே புதிய சேம்பர்கள் அமைத்து சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஜெ.கருணாநிதி எம்.எல்.ஏ. (தி.மு.க.) கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்து பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறும்போது:-

    தியாகராய நகரில் குடிநீர் கட்டமைப்பை மேம்படுத்த ஒடிசா நிறுவனத்துடன் ஆலோசித்து 24 மணி நேரமும் முழுநேரம் தண்ணீர் கிடைக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது.

    முத்துரங்கன் சாலை பகுதியில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு உடனே கட்டிக்கொடுக்கபடும். வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கல் வாரியத்திற்கு இந்தாண்டு ரூ.900 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகிறது.

    தியாகராயநகர் தொகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலப்பது குறித்து ஓரிரு நாட்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு சுத்தமான குடிநீரை மக்களுக்கு விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    முன்னதாக ஜெ. கருணா நிதி பேசுகையில், தி. நகர் கண்ணம்மா பேட்டை பகுதியில் நீண்ட காலமாக குடிநீர் பிரச்சினை இருக்கிறது. லாரி மூலம் தான் சப்ளை ஆகிறது.

    இந்த இடம் கடைசி பாயிண்ட். வள்ளுவர் கோட்டத்தில் இருந்து தண்ணீர் வரும்போது இங்கு குறைந்து விடுகிறது. எனவே மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி அமைக்க வேண்டும் என்றார். அத்துடன் தொகுதி முழுவதும் பம்பிங் ஸ்டேசன் சரிவர இயங்காததால் குடிநீரில் கழிவுநீர் கலப்பதாகவும் தெரிவித்தார்.

    ஜெ/கருணாநிதி கூறிய இரு பிரச்சினைகளையும் உடனே நிறைவேற்றித் தருவதாக அமைச்சர் கே.என். நேரு அறிவித்தார்.

    • குழந்தை ஆணா? பெண்ணா? என்று சொல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
    • சட்டவிரோத கருக்கலைப்பு செய்வதை வாடிக்கையாக் கொண்டுள்ளார்.

    தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரத்தை அடுத்த நல்லம்பள்ளி தாலுகாவில் நெல்குந்தி என்ற மலைப்பகுதியில் ஒரு வீட்டில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு மையம் செயல்பட்டு வந்துள்ளது. ஸ்கேன் மிஷின் வைத்து கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்று சொல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    இதுகுறித்து அறிந்த மாவட்ட நலப்பணி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உதவியுடன் காலை முதலே இவர்களை கண்காணித்து வந்தனர். அப்போது கள்ளக்குறிச்சியை சேர்ந்த முருகேசன் என்பவரை இவர்கள் கையும் களவுமாக பிடித்துள்ளனர். இவர் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து சட்டவிரோத கருக்கலைப்பு செய்வதை வாடிக்கையாக் கொண்டுள்ளார்.

    ஏற்கனவே கைதான இவர், ஜாமினில் வெளியே வந்து தொடர்ந்து இந்த செயலில் ஈடுபட்டு வந்துள்ளதும் தெரியவந்துள்ளது. இவர் கர்ப்பிணி பெண்களை வரவழைத்து அவர்களுக்கு ஸ்கேன் செய்து கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா என்றும், பெண் குழந்தையாக இருந்தால் அவற்றை கருக்கலைப்பு செய்துள்ளதும் தெரியவந்தது. இதற்கு ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு ரூ.13 ஆயிரம் வசூலித்து வந்துள்ளதும் தகவல் வெளியாகி உள்ளது.

    முருகேசன் என்பவர் மருத்துவர் இல்லை என்றும் இவருக்கு கீழ் மிகப்பெரிய நெட்வொர்க் உள்ளது என்றும் அப்பகுதியில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் முருகேசனை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சட்டசபை கூட்டத்தொடரில் அதிமுகவின் நிலைப்பாடு வருத்தம் அளிக்கிறது.
    • ஒரு பக்கம் தேர்தல் தோல்வி, மறுபக்கம் சொந்த கட்சி நெருக்கடி, இவைகளால் அவை நிகழ்வுகளில் அதிமுக பங்கேற்கவில்லை.

    சென்னை:

    சட்டசபையில் அதிமுக நிலைப்பாடு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

    * சட்டசபை கூட்டத்தொடரில் அதிமுகவின் நிலைப்பாடு வருத்தம் அளிக்கிறது.

    * ஒரு பக்கம் தேர்தல் தோல்வி, மறுபக்கம் சொந்த கட்சி நெருக்கடி, இவைகளால் அவை நிகழ்வுகளில் அதிமுக பங்கேற்கவில்லை.

    * ஆக்கப்பூர்வமான விவாதத்திற்கு திமுக தயார். ஆனால் அதிமுக தயாராக இல்லை என்று கூறினார்.

    • தமிழ்நாடு அமைதி மிகுந்த மாநிலமாக திகழ்கிறது.
    • எனது அமைச்சரவை சகாக்களால் தான் அரசுக்கு இந்த வெற்றி கிடைத்துள்ளது.

    சென்னை:

    சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * தமிழ்நாடு அமைதி மிகுந்த மாநிலமாக திகழ்கிறது.

    * திருவிழாக்களை எந்த பிரச்சனையும் இன்றி அமைதியாக நடத்தி காட்டி உள்ளோம்.

    * அறிவிக்கப்பட்ட 190 திட்டங்களில் 179 திட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன.

    * குற்றங்களை குறைக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    * தமிழ்நாட்டின் அனைத்து துறைகளும் இந்திய அளவில் முதல் இடத்தை நோக்கி முன்னேறி வருகின்றன.

    * எனது அமைச்சரவை சகாக்களால் தான் அரசுக்கு இந்த வெற்றி கிடைத்துள்ளது. அவர்களுக்கு நன்றி என்று கூறினார்.

    • கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் மற்றும் ஏற்காடு ஆகிய இடங்களில் புதிய போக்குவரத்துக் காவல் நிலையங்கள்.
    • கோவை-பொள்ளாச்சி, திருப்பூர்-நல்லூர் ஆகிய இடங்களில் 229 காவல் குடியிருப்புகள் கட்டப்படும்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டசபையில் இன்று காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகள் தொடர்பான மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்திற்கு அளித்த பதில் உரையில் கூறி இருப்பதாவது:-

    இந்த ஆண்டு மானியக் கோரிக்கையில் 100 அறிவிப்புகள் உள்ளன. அதில் சிலவற்றை மட்டும் இப்போது அறிவிக்க விரும்புகிறேன். மீதமுள்ள அறிவிப்புகளை நான் படித்ததாகக் கருதி அவைக்குறிப்பில் சேர்த்திடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    * கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் மற்றும் ஏற்காடு ஆகிய இடங்களில் புதிய போக்குவரத்துக் காவல் நிலையங்கள், கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை புறக்காவல் நிலையம், படப்பை, ஆதமங்கலம்புதூர், திருப்பரங்குன்றம் கோவில் ஆகிய இடங்களில் புதிய காவல் நிலையங்கள் அமைக்கப்படும்.

    * அவை முன்னவர், நீர்வளத்துறை அமைச்சர் இன்று காலை நான் அவைக்கு வந்தவுடன், நெடுநாள் கோரிக்கை என்று தெரிவித்து, என்னிடம் ஒரு கோரிக்கையைக் கொடுத்தார். அதாவது, பேரணாம்பட்டில் இருக்கக்கூடிய காவல் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றிட வேண்டுமென்று கோரிக்கை வைத்திருக்கிறார். அது நிச்சயமாகப் பரிசீலிக்கப்படும்.

    *கொளத்தூர், கேளம்பாக்கம், செங்குன்றம் உள்ளிட்ட இடங்களில் புதிய அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கப்படும். தாம்பரம் காவல் ஆணையரகத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்படும்.

    * கோவை-பொள்ளாச்சி, திருப்பூர்-நல்லூர் ஆகிய இடங்களில் 229 காவல் குடியிருப்புகள் கட்டப்படும்.

    * தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்றும் ஆளிநர்கள் பணியின்போது உயிரிழப்போ, உடலுறுப்பு இழப்போ, காயமோ ஏற்பட்டால் வழங்கப்படும் கருணைத்தொகை உயர்த்தப்படும். சிறப்பு இலக்குப் படையில் பணி யாற்றும் ஆளிநர்களுக்கும் அத்தொகை உயர்த்தி வழங்கப்படும்.

    * ஊர்க்காவல் படையில் பணியாற்றும் ஆளிநர்கள் உயிரிழக்கும்போது அவர்கள் குடும்பத்திற்கு தமிழ்நாடு ஊர்க்காவல் படை நலன் மற்றும் கருணைக் கொடை நிதியில் இருந்து வழங்கப்படும் இழப்பீடு 15 ஆயிரம் ரூபாயிலிருந்து 1 லட்சம் ரூபாயாகவும், காயமுற்றவர்களுக்கான நிதி 10 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்படும்.

    * கோவை மாநகராட்சியை விபத்தில்லாத மாநகரமாக மாற்ற 5 கோடி ரூபாய் மதிப்பில் செயல்திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும்.

    * தஞ்சாவூர் வட்டார தடய அறிவியல் ஆய்வகத்தில் 5 கோடியே 21 லட்ச ரூபாய் செலவில் புதிய ஆயப்பிரிவு ஒன்று உருவாக்கப்படும்.

    * தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபடும் பணியாளர்களின் பயன்பாட்டிற்காக 1,500 தற்காப்பு உடைகளும், மீட்பு பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு சிறிய உபகரணங்களுடன் கூடிய 3,000 மீட்பு உடைகளும் 4 கோடியே 50 லட்ச ரூபாய் செலவில் வழங்கப்படும்.

    * ஏரல், கருமத்தம்பட்டி, மடத்துக்குளம், கோவளம், படப்பை, திருநெல்வேலி மாநகரம், புதுவயல் உள்ளிட்ட 7 இடங்களில் புதிய தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையங்கள் நிறுவப்படும்.

    * சமயபுரம், மேடவாக்கம், பெரம்பலூர், தியாகதுருகம், நீடாமங்கலம், கொளத்தூர் ஆகிய 6 தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையங்களுக்கு புதிய கட்டிடம் கட்டப்படும்.

    அது மட்டுமல்ல; அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் அரசு ஊழியர்களைச் சார்ந்துள்ள தாய், தந்தையரையும் பயனாளிகளாக சேர்த்திட வேண்டும் என்று காவல் துறையினர் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலர்களிடம் இருந்தும் கோரிக்கைகள் வரப் பெற்றுள்ளன. அவற்றை உரிய முறையில் ஆராய்ந்து, அரசு அலுவலர்களைச் சார்ந்து வாழும் அவர்களது பெற்றோருக்கும் மருத்துவக் காப்பீட்டின் பலன் சென்றடையும் வகையில் சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்களின் விருப்பத்தைப் பெற்று, தற்போது நடைமுறையில் உள்ள புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மறுசீரமைக்கப்படும். மேலும், புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் பயன்களைப் பெறும் அரசு அலுவலர்கள் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்களை களைந்திட தலைமைச் செயலாளர் தலைமையில் விரைவில் ஆய்வுக் கூட்டம் நடத்திடவும், தேவைப்படும் நெறிமுறைகளை வழங்கிடவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

    • துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.
    • உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், பந்துவார்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு தயாரிக்கும் ஆலையில் இன்று காலை எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் அச்சங்குளம் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (45), நடுச்சூரங்குடியைச் சேர்ந்த மாரிச்சாமி (40), வெம்பக்கோட்டை பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் (35) மற்றும் மோகன் (30) ஆகியோர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.

    மேலும், இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

    • 2026 சட்டசபை தேர்தலிலும் மகத்தான வெற்றியை நாங்கள் பெறுவோம்.
    • கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடையவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன.

    சென்னை:

    கள்ளச்சாராய விற்பனையை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில் மதுவிலக்கு சட்டத்திருத்த மசோதா சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மதுவிலக்கு சட்டத்திருத்த மசோதாவை அமைச்சர் முத்துசாமி தாக்கல் செய்தார்.

    இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அவர் கூறியதாவது:

    * மக்களவை தேர்தலில் 40க்கு 40 வெற்றி என்ற பெருமிதத்துடன் சட்டசபைக்கு வந்துள்ளோம்.

    * பொய் பிரசாரங்களை முறியடித்து செய்கூலி சேதாரம் இல்லாத வெற்றியை மக்கள் திமுக கூட்டணிக்கு வழங்கி உள்ளார்கள்.

    * 2026 சட்டசபை தேர்தலிலும் மகத்தான வெற்றியை நாங்கள் பெறுவோம்.

    * திமுக அரசின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையின் பேரில் இதனை துணிச்சலுடன் சொல்கிறேன்.

    * மக்களவை தேர்தல் முடிவுகளின்படி 221 தொகுதிகளை திமுக கூட்டணி கைப்பற்றி உள்ளது.

    * மக்கள் மனதில் யார் உள்ளார்கள், மக்கள் யாரை புறக்கணித்தார்கள் என்பதை இந்த வெற்றி உணர்த்தும்.

    * தேர்தல் தோல்வியின் தாக்கத்தால் கள்ளச்சாராய விவகாரத்தை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கையில் எடுத்து வருகின்றன.

    * கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் 24 மணி நேரத்தில் அரசு துரித நடவடிக்கை எடுத்தது.

    * சாத்தான்குளம் சம்பவத்தை அப்போதைய அதிமுக அரசு மறைக்க நினைத்தது. அதனால் திமுக சிபிஐ விசாரணை கேட்டது.

    * கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சட்டப்படி அனைத்து நடவடிக்கைகளும் உடனுக்குடன் எடுக்கப்பட்டன.

    * கள்ளக்குறிச்சி சம்பவம் போல் இனி நடந்தால் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. தான் பொறுப்பு என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    * கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 8 செல்போன், 4 சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    * கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் 8,000 பக்க அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

    * கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடையவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன. அதனை இன்டர்போல் விசாரிக்க வேண்டும் என்று கூறினார்.

    • பாரம்பரிய வினோத காளியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.
    • காளைகளை தழுவி ஓட விட்டு விளையாடினர்.

    ஒடுகத்தூர்:

    வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த பீஞ்சமந்தை ஊராட்சிக்கு உட்பட்ட தொங்குமலை கிராமத்தில் 350-கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் குடும்பங்களாக வசித்து வருகின்றனர்.

    இங்கு 100 ஆண்டுகள் கடந்த பாரம்பரிய வினோத காளியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.

    கடந்த 48 நாட்களுக்கு முன்பு இருந்து அப்பகுதி மக்கள் காளியம்மனுக்கு காப்பு கட்டி விரதம் இருந்து மலைவாழ் மக்களின் பாரம்பரிய முறைப்படி ஊர் சீதனம் கொண்டு வரப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு வழிப்பட்டனர்.

    மேலும் தொடந்து, மலைவாழ் மக்களின் முன்னோர்கள் வழிபட்டு வந்த 'ஜாலாமரம்' என்றழைக்கப்படும் மரம், முன்னோர்கள் வைத்து வழிபட்டு வந்த கயிறு, மரக்கட்டையாலான கத்திகள், தோலால் செய்யப்பட்ட மேளம் வைத்து ஊர் பெரியோர்கள் முன்னிலையில் ஒரு வாரமாக பல்வேறு தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

    அதன் தொடர்ச்சியாக நேற்று மதியம் 12 கிராமங்களின் பாரம்பரிய திருவிழாவான எருது கட்டும் திருவிழா தொங்குமலை கிராமத்தில் கொண்டாடப்பட்டது. இதற்காக, சுற்றியுள்ள மலை கிராமங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட காளைகளை அங்கு அமைக்கப்பட்டிருந்த 4 பெரிய மந்தையில் அடைத்து வைத்திருந்தனர்.

    பின்னர், 12 கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் ஊர் பெரியோர்களின் காலில் விழுந்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, பாரம்பரிய முறையில் மந்தையில் அடைத்து வைத்திருந்த காளைகளை ஒவ்வொன்றாக கயிறுகட்டி மைதானத்திற்கு அழைத்து வந்து காளைகளை தழுவி ஓட விட்டு விளையாடினர்.

    இந்த விழாவினைக் காண பீஞ்சமந்தை, சின்ன எட்டிபட்டு, கட்டியப்பட்டு, தேந்தூர், பெரியபணப்பாறை, பலாம்பட்டு, ஜார்தான்கொல்லை, எல்லுப்பாறை உள்ளிட்ட ஏராளமான மலை கிராமங்களில் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் திரண்டனர்.

    ஆண்களுக்காக 5 நாள் ஒதுக்கப்பட்டு பெண்களுக்கு என்று கடைசியாக ஒரு நாள் திருவிழா நடைபெறுகிறது.

    இந்த திருவிழாவின் மங்கையர்களுக்காக கொடுக்கப்படும் மகத்துவமான மரியாதை என கூறி வருகின்றனர்.

    இன்று நடைபெறும் பெண்களுக்கான திருவிழாவில் ஆண்கள் யாரும் பங்கேற்க கூடாது அப்படி பங்கேற்றால் சாமி அவர்களை சும்மா விடாது என்று, அருள் வந்து ஆடிடும் பெண்கள் ஆண்களை ஓட ஓட விரட்டி அடிப்பது இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. 

    • பதுவார்பட்டியில் ஏற்பட்ட பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
    • வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உயர்ந்தபட்ச இழப்பீடு வழங்க வேண்டும். காயமுற்றவர்களுக்கு உரிய உயர்சிகிச்சை அளிக்க வேண்டும்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பதுவார்பட்டியில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தி மிகவும் வருத்தம் அளிக்கிறது.

    தமிழகத்தில் தொடர்ந்து பட்டாசு தொழிற்சாலையில் ஏற்படும் வெடிவிபத்தால் பலநூறு அப்பாவிகள் உயிரிழந்துள்ளனர். தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தை காக்கும் நோக்கில் குறைவான ஊதியத்தில் தங்கள் உயிரையே பணையம் வைத்து பட்டாசு தயார் செய்யும் ஆபத்தான தொழிலில் ஈடுபடுகிறார்கள்.

    பதுவார்பட்டியில் ஏற்பட்ட பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உயர்ந்தபட்ச இழப்பீடு வழங்க வேண்டும். காயமுற்றவர்களுக்கு உரிய உயர்சிகிச்சை அளிக்க வேண்டும். இதுபோன்ற வெடி விபத்துகள் மீண்டும் ஏற்படாதவாறு உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் - 1937ன்படி விதிகளை மீறி மது இறக்குமதி, ஏற்றுமதி செய்வதற்கு தண்டனை வழங்கப்படுகிறது.
    • மது அருந்தப் பயன்படுத்தப்படும் உரிமை இல்லாத இடங்கள் மூடி சீலிடப்படும்.

    சென்னை:

    கள்ளச்சாராய விற்பனையை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில் மதுவிலக்கு சட்டத்திருத்த மசோதா சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

    தண்டனைகள் கடுமையாக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில் மசோதாவை அமைச்சர் முத்துசாமி தாக்கல் செய்தார்.

    கள்ளச்சாராயத்தை தயாரித்து விற்பவர்களுக்கு ஆயுள் வரை கடுங்காவல், ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் - 1937ன்படி விதிகளை மீறி மது இறக்குமதி, ஏற்றுமதி செய்வதற்கு தண்டனை வழங்கப்படுகிறது.

    கள்ளச்சாராய விற்பனைக்காக பயன்படுத்தப்படும் அனைத்து அசையும் அசையா சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்.

    மது அருந்தப் பயன்படுத்தப்படும் உரிமை இல்லாத இடங்கள் மூடி சீலிடப்படும்.

    தண்டனை வழங்கப்பட்ட ஒருவரை அந்த பகுதியில் இருந்தே நீக்கம் செய்ய மதுவிலக்கு, புலனாய்வு அதிகாரியால் விண்ணப்பம் செய்ய சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும்.

    தண்டனைகளையும், அபராத தொகைகளையும் அதிகரித்து, அதிகாரிகளுக்கான அதிகாரம் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    • தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது.
    • குற்றாலத்தில் குளு குளு சீசன் நிலவுகிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது.

    கேரளாவில் மழை தீவிரம் எடுத்துள்ள நிலையில் தென்காசியிலும் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் அங்கு குளு குளு சீசன் நிலவுகிறது.

    சாரல் மழையின் காரணமாக குற்றாலம் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. தற்போது மெயின்அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வரும் நிலையில் குளுமையான காற்றுடன் அவ்வப்போது சாரல் மழையும் விட்டுவிட்டு பெய்து வருகிறது.

    இதனால் குற்றாலத்தில் சீசன் களைகட்டி உள்ளது. இதனால் அருவிகளில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இன்று விடுமுறை தினம் என்பதால் காலை முதலே அனைத்து அருவிகளிலும் குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகள் குடும்பம் குடும்பமாக கார்களிலும், வேன்களிலும் வந்தனர்.

    இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. மேலும் அருவியில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளதால் அங்கு பாதுகாப்பு பணியில் போலீசார் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

    • பேராசிரியை தனலட்சுமி பட்டியலினத்தவர் என்பதாலேயே அவருக்கு துறைத்தலைவர் பதவி மறுக்கப்பட்டிருக்கிறது.
    • பேராசிரியர் நிலையில் இருப்பவரை புறக்கணித்து விட்டு, இணைப்பேராசிரியர் நிலையில் உள்ளவரை துறைத்தலைவராக நியமிப்பது எந்த வகையில் நியாயம்?

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள கல்வியியல் துறைத் தலைவர் பதவிக்கு உரிய தகுதியும், பணிமூப்பும் கொண்ட தனலட்சுமி என்ற பேராசிரியையை புறக்கணித்து விட்டு, வெங்கடேஸ்வரன் என்ற ஆசிரியரை நியமித்து பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் ஆணையிட்டுள்ளார். பேராசிரியை தனலட்சுமிக்கு அனைத்து தகுதிகளும் இருந்தும் அவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக அவருக்கு துறைத்தலைவர் பதவி மறுக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

    கல்வியியல் துறையின் பொறுப்புத் தலைவராக இருந்த முனைவர் பெரியசாமி அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், துறையின் மூத்த பேராசிரியரான தனலட்சுமிக்கு தான் அப்பொறுப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தகுதியும், பணி மூப்பும் இல்லாத வெங்கடேஸ்வரன் என்பவருக்கு அப்பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இது ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.

    துறைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ள வெங்கடேஸ்வரன் பேராசிரியர் தகுதியை எட்டாதவர். அவர் கடந்த ஆண்டு தான் கல்வியியல் துறையில் பணியில் சேர்க்கப்பட்டார். எடப்பாடியில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியில் முதல்வராக பணியாற்றியவர். உறுப்புக் கல்லூரிகளை அரசே ஏற்றுக் கொண்ட நிலையில், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தான் கல்வியியல் துறையில் தற்காலிக அடிப்படையில் அயல்பணி முறையில் வெங்கடேஸ்வரன் சேர்க்கப்பட்டார். விதிகளின்படி அவர் இணைப் பேராசிரியராகத் தான் கருதப்பட வேண்டும். ஆனால், அந்த தகுதி கூட இன்னும் அவருக்கு வழங்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, வெங்கடேஸ்வரன் அவரை எடப்பாடி கல்லூரியில் முதல்வராக நியமிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இத்தகைய சூழலில் பேராசிரியர் நிலையில் இருப்பவரை புறக்கணித்து விட்டு, இணைப்பேராசிரியர் நிலையில் உள்ளவரை துறைத்தலைவராக நியமிப்பது எந்த வகையில் நியாயம்?

    பேராசிரியை தனலட்சுமி பட்டியலினத்தவர் என்பதாலேயே அவருக்கு துறைத்தலைவர் பதவி மறுக்கப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் தகுதியும், அனுபவமும் இல்லாத வெங்கடேஸ்வரன் துணைவேந்தருக்கு நெருக்கமானவர் என்பதாலேயே பதவி வழங்கப்பட்டிருக்கிறது. இது பெரும் சமூக அநீதி ஆகும். அதுவும் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் நாளையுடன் ஓய்வு பெறவிருக்கும் நிலையில் இத்தகைய ஆணையை பிறப்பிக்க தார்மீக அடிப்படையில் உரிமை இல்லை. துணைவேந்தரின் இந்த நடவடிக்கை குறித்து விசாரணை நடத்த அரசு ஆணையிட வேண்டும்.

    அதுமட்டுமின்றி, மத்திய அரசின் தீனதயாள் உபாத்யாயா திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பட்டியலின மாணவர்களுக்கு திறன் மேம்பாடு வளர்க்கும் திட்டத்தை பெரியார் பல்கலைக்கழகத்தில் செயல்படுத்துவதிலும் பெருமளவில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மாணவர்களுக்கு தங்குமிடமும், உணவும் வழங்காமல் போலியான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு பணம் மோசடி செய்யப்பட்டிருப்பதாகவும், இத்திட்டப்படி பயிற்றுனர்களாக பணியில் சேர்க்கப்பட்ட 17 பேருக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுள்ள இந்த முறைகேடுகள் குறித்தும் விரிவான விசாரணைக்கு மத்திய, மாநில அரசுகள் ஆணையிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×