என் மலர்
உள்ளூர் செய்திகள்
- உழைப்பவர்களின் அசதியை போக்க அவர்களுக்கு மது தேவை.
- மனிதனாய் பார்த்து திருந்தாவிட்டால் இதனை ஒழிக்க முடியாது.
சென்னை:
கள்ளச்சாராய விற்பனையை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில் மதுவிலக்கு சட்டத்திருத்த மசோதா சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மதுவிலக்கு சட்டத்திருத்த மசோதாவை அமைச்சர் முத்துசாமி தாக்கல் செய்தார். அப்போது நடைபெற்ற விவாதத்தில் அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:
* டாஸ்மாக் மதுவில் கிக் இல்லாததால் கள்ளச்சாராயத்தை நோக்கி செல்கின்றனர்.
* உழைப்பவர்களின் அசதியை போக்க அவர்களுக்கு மது தேவை.
* அரசாங்கம் விற்கும் சரக்கு அவர்களுக்கு Soft drink போல மாறிவிடுகிறது.
* கள்ளச்சாராயத்தை தடுக்க தெருவுக்கு தெரு போலீஸ் ஸ்டேஷன் திறக்க முடியாது.
* கிக் வேண்டும் என்பதற்காக சிலர் கள்ளச்சாராயத்தை குடிக்கின்றனர்.
* மனிதனாய் பார்த்து திருந்தாவிட்டால் இதனை ஒழிக்க முடியாது. கள்ளச்சாராய விற்பனைக்கு துணைபோகக்கூடிய அதிகாரிகளை தூக்கில் போடுவோம் என்று கூட சட்டம் இயற்றலாம். எல்லாத்துக்கும் ஒரு நியாயம் வேண்டாமா. நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும். இனி நடப்பது நல்லவையாக இருக்கட்டும் என்று கூறினார்.
- குழித்துறை ஆற்றில் உள்ள சப்பாத்து பாலத்தை தண்ணீர் மூழ்கடித்து செல்கிறது.
- கோதை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டம் முழுவதும் தொடர்ந்து மழை கொட்டி தீர்த்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளு குளு சீசன் நிலவுகிறது. நாகர்கோவிலில் இன்று காலையில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு மப்பும் மந்தாரமாக இருந்தது. அவ்வப்போது சாரல் மழை பெய்தது. கொட்டாரம், மயிலாடி, சுருளோடு, ஆணைக்கிடங்கு, களியல், குழித்துறை, தக்கலை, இரணியல், முள்ளங்கினா விளை உள்ளிட்ட பகுதிகளிலும் விட்டுவிட்டு மழை பெய்து கொண்ட இருக்கிறது.
முள்ளங்கினாவிளையில் அதிகபட்சமாக 22.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் கொட்டி தீர்த்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு தண்ணீர் அதிகமாக வந்து கொண்டிருக்கிறது. இதனால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து 328 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் காரணமாக குழித்துறை ஆறு, கோதை ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.
குழித்துறை ஆற்றில் உள்ள சப்பாத்து பாலத்தை தண்ணீர் மூழ்கடித்து செல்கிறது. கோதை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. 3-வது நாளாக இன்றும் அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் திற்பரப்புக்கு வந்தனர்.
அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டதையடுத்து அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 44.19 அடியாக இருந்தது. அணைக்கு 1715 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையின் மதகுகள் வழியாக 662 கன அடி தண்ணீரும், உபரிநீராக 2028 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 73.26 அடியாக உள்ளது. அணைக்கு 975 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 1000 கன அடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார் 1 அணை நீர்மட்டம் 17.02 அடியாக உள்ளது. அணைக்கு 270 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
சிற்றாறு-2 அணை நீர்மட்டம் 17.12 அடியாக உள்ளது. அணைக்கு 103 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 45.77 அடியாகவும், முக்கடல் அணை நீர்மட்டம் 22.20 அடியாகவும் உள்ளது. தொடர் மழைக்கு மாவட்டம் முழுவதும் நேற்று 3 வீடுகள் இடிந்து விழுந்துள்ளது.
கீரிப்பாறை, குலசேகரம், தடிக்காரங்கோணம் பகுதிகளில் ரப்பர் மரங்களில் உள்ள சிரட்டைகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் ரப்பர் பால் உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் வேலை இன்றி தவித்து வருகிறார்கள்.
- அனைத்து துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதங்களும் நடைபெற்று முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
- மகளிர் உரிமைத் தொகையை ஏற்கனவே 1 கோடியே 15 லட்சம் பேர் பெற்றுவரும் நிலையில், மேலும் 1 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு அதனை வழங்குவது தொடர்பான அறிவிப்பும் வெளியானது.
சென்னை:
தமிழக சட்டசபை கூட்டத் தொடர் கடந்த 20-ந்தேதி தொடங்கியது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை கையில் எடுத்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 4 நாட்கள் தொடர் அமளி மற்றும் தர்ணாவில் ஈடுபட்டதால் இந்த சட்டசபை கூட்டத் தொடர் பரபரப்புக்கு பஞ்சமில்லாமலேயே காணப்பட்டது. தொடர் அமளி காரணமாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க தடை விதித்து கடந்த 26-ந்தேதி அன்று சபாநாயகர் உத்தரவிட்டார்.
இதனால் 27-ந் தேதியில் இருந்து இன்று வரையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபை கூட்டத்தொட ரில் பங்கேற்கவில்லை. கடைசி நாளான இன்று காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பல்வேறு அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்களுக்கு கடுமையான தண்டனையை விதிக்கும் வகையில் சட்ட திருத்த மசோதாவும் நிறைவேற்றப்பட்டது.
வருவாய் துறை, தொழில் துறை, சுகாதாரத் துறை, நகராட்சி நிர்வாகத் துறை உள்ளிட்ட அனைத்து துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதங்களும் நடைபெற்று முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. மகளிர் உரிமைத் தொகையை ஏற்கனவே 1 கோடியே 15 லட்சம் பேர் பெற்றுவரும் நிலையில், மேலும் 1 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு அதனை வழங்குவது தொடர்பான அறிவிப்பும் வெளியானது.
இப்படி பல்வேறு அறிவிப்புகள் மற்றும் பரபரப்புடன் நடைபெற்ற சட்டசபை கூட்டத் தொடர் இன்றுடன் முடிவடைந்தது. 9 நாட்கள் கூட்டத்தொடர் நடைபெற்ற நிலையில் காலவரையறையின்றி சட்டசபை ஒத்தி வைக்கப்பட்டது.
- இந்த ஆண்டு 2 ஆயிரம் கோவிலில் கும்பாபிஷேகம் என்ற இலக்கில் இந்த கோவிலும் இடம் பெற்றுள்ளது.
- கன்னியாகுமரி பத்ரகாளியம்மன் கோவிலில் இறுதி நாள் விழாவிற்கு அரசு விடுமுறை அளிக்கப்படுமா? என கேள்வி எழுப்பினார்.
சென்னை:
சட்ட சபையில் கேள்வி நேரத்தில், பட்டுக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ. அண்ணாதுரை ஆலத்தூர் ஊராட்சி முசிறி கைலாசநாதர் கோவிலுக்கு திருப்பணி செய்ய அரசு ஆவன செய்யுமா? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, முசிறி கைலாசநாதர் கோவிலில் ஏற்கனவே 5 திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இந்த ஆண்டு 2 ஆயிரம் கோவிலில் கும்பாபிஷேகம் என்ற இலக்கில் இந்த கோவிலும் இடம் பெற்றுள்ளது.
இந்த ஆண்டு இறுதிக்குள் திருப்பணிகள் முடிக்கப்பட்டு முசிறி கைலாசநாதர் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்படும்.
தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார், கன்னியாகுமரி பத்ரகாளியம்மன் கோவிலில் இறுதி நாள் விழாவிற்கு அரசு விடுமுறை அளிக்கப்படுமா? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் சேகர் பாபு, பத்ரகாளியம்மன் கோவில் விழாவிற்கு அரசு விடுமுறை விடுவது தொடர்பாக மாவட்ட கலெக்டர் கருத்துரு பெற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்
- தேர்தல் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்ட காவல்துறையினருக்கு வழங்கப்பட வேண்டிய பயணப்படி இன்னும் வழங்கப்படாமல் இருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
- 83 நாட்களுக்கான பயணப்படி வழங்க ஒப்புதல் அளித்து கடந்த ஏப்ரல் மாதமே அரசாணை பிறப்பித்த பிறகும், இன்னும் காவலர்களுக்கான பயணப்படி வழங்கப்படவில்லை.
சென்னை:
தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தில், பாராளுமன்றத் தேர்தல் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்ட காவல்துறையினருக்கு வழங்கப்பட வேண்டிய பயணப்படி இன்னும் வழங்கப்படாமல் இருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
கடந்த மார்ச் 16-ந்தேதி முதல் ஜூன் 6-ந்தேதி வரையிலான 83 நாட்களுக்கான பயணப்படி வழங்க ஒப்புதல் அளித்து கடந்த ஏப்ரல் மாதமே அரசாணை பிறப்பித்த பிறகும், இன்னும் காவலர்களுக்கான பயணப்படி வழங்கப்படவில்லை.
ஏற்கனவே, காவல்துறையினரின் கைகளைக் கட்டிப்போட்டு, சட்டம் ஒழுங்கைச் சீர்குலைத்து வைத்திருக்கிறது திமுக அரசு. தேவையில்லாத வீண் விளம்பரங்களுக்கு, பல கோடி ரூபாய் மக்களின் வரிப்பணத்தை செலவு செய்வதில் முனைப்பாக இருக்கும் திமுக அரசு, காவலர்களுக்கு வழங்க வேண்டிய பயணப்படியை வழங்கத் தாமதிப்பது, காவல்துறையினரிடையே பணியாற்றும் ஆர்வத்தைக் குறைத்து விடும். உடனடியாக, தேர்தல் பணிகளில் ஈடுபட்ட காவலர்களுக்கு, 83 நாட்களுக்கான பயணப்படியை வழங்க வேண்டும் என்று பாரதிய ஜனதா சார்பாக வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
- இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா தாலுகாக்களில் மழையின் தாக்கம் குறைந்த நிலையில் கூட லூர் மற்றும் பந்தலூர் தாலுகாக்களில் மழையின் தாக்கம் தீவிரம் அடைந்துள்ளது.
இந்நிலையில் நீலகிரிக்கு இன்று முதல் 3 நாட்ளுக்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.
கோவையில் நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழை பெய்யும் எனவும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையை பொருத்தவரை வெப்பநிலை பகல் நேரத்தில் சற்றே அதிகமாக காணப்படும்.
மாலை நேரங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு, அரசின் நலத்திட்டங்கள் விவசாய பெருங்குடி மக்களுக்கு விரைவில் சென்றடைவது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.
- நிகழ்ச்சியில், வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சென்னை:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் 85 தோட்டக்கலை அலுவலர்கள் மற்றும் 48 வேளாண்மை அலுவலர்கள் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகள் இன்று வழங்கப்பட்டன.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இதன்மூலம், வேளாண்மை-உழவர் நலத்துறையில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு, அரசின் நலத்திட்டங்கள் விவசாய பெருங்குடி மக்களுக்கு விரைவில் சென்றடைவது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.
புதிதாக அரசுப் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு, பணி நியமன ஆணைகளை பெற்றுக்கொண்ட தோட்டக்கலை அலுவலர்கள் மற்றும் வேளாண்மை அலுவலர்கள் இப்பணியிடங்களுக்கு முறையாக தேர்வு நடத்தி, குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவுகளை வெளியிட்டு, பணிநியமன ஆணைகள் வழங்கியதற்காக முதலமைச்சருக்கும் தமிழ்நாடு அரசிற்கும் தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில், வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- தமிழ்நாட்டில் இருந்து கள்ளச்சாராயத்தின் அச்சுறுத்தலை முற்றிலுமாக ஒழிப்பது அவசியம் என்று அரசு கருதுகிறது.
- மதுவகை மதி மயக்கக்கூடிய மருந்தினை தயாரிக்கவும் கொண்டு செல்வதற்கும் வைத்திருப்பதற்கும் நுகர்வுக்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
சென்னை:
சட்டசபையில் மது விலக்கு திருத்த சட்ட முன் வடிவை அமைச்சர் முத்துசாமி இன்று தாக்கல் செய்தார். அதில் கூறி இருப்பதாவது:-
கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில் அதை தயாரிப்பது மற்றும் விற்பனை செய்பவர்களுக்கு ஆயுள் வரை கடுங்காவல் தண்டனையோடு, ரூ.10 லட்சம் வரை தண்டனை தொகையை உயர்த்தி கடுமையான தண்டனைகளையும் விதிப்பதற்கான சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
தற்போதுள்ள 1937-ம் ஆண்டு தமிழ்நாடு மது விலக்கு சட்டத்தின்படி விதிகளை மீறி மதுவினை இறக்குமதி செய்வது, ஏற்றுமதி செய்வது, அருந்துவது போன்ற குற்றங்களுக்கு தண்டனைகள் வழங்கப்படுகிறது.
இதே போல மனித உயிருக்கு கேடு விளைவிக்க கூடிய கள்ளச்சாராயத்தை தயாரித்தல், உடைமையில் வைத்திருத்தல், விற்பனை செய்வது போன்று வழக்கமாக ஈடுபடும் குற்றங்களுக்கு வழங்கப்படக்கூடிய தண்டனைகள் போதுமானதாக இல்லை என்று கருதி இச்சட்டத்திருத்தம் கொண்டு வரப்படுகிறது.
தமிழ்நாட்டில் இருந்து கள்ளச்சாராயத்தின் அச்சுறுத்தலை முற்றிலுமாக ஒழிப்பது அவசியம் என்று அரசு கருதுகிறது. எனவே தான் கள்ளச்சாராயத்துடன் கலக்கப்படக்கூடிய குடி தன்மை இழந்த எரிசாராயம், மெத்தனால் போன்ற தடை செய்யப்பட்ட மதுபானங்களால் விலை மதிப்பற்ற உயிர்களை இழக்க நேரிடுவதால் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தண்டனையை அதிகரிப்பது அவசியம் என்று அரசு கருதுகிறது.
இதற்காக கொண்டு வரப்பட்டுள்ள சட்டத்தில் சிறை தண்டனைக் கால அளவை அதிகரித்தும், தண்டனைத் தொகையின் அளவை கணிசமாக அதிகரித்தும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
மதுவகை மதி மயக்கக்கூடிய மருந்தினை தயாரிக்கவும் கொண்டு செல்வதற்கும் வைத்திருப்பதற்கும் நுகர்வுக்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு அந்த மதுவினை அருந்துவதால் மரணம் ஏற்பட்டால் ஆயுள் காலம் வரை கடுங்காவல் சிறை தண்டனையோடு 10 லட்சம் ரூபாய் வரைக்கும் அபராத தண்டனை விதிக்க திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது.
இதேபோல குற்றங்களை செய்வதற்கு பயன்படுத்தக்கூடிய அனைத்து அசையும் சொத்துக்களையும் பறிமுதல் செய்வதோடு மது அருந்துவதற்கு பயன்படுத்தப்படும் உரிமை இல்லாத இடங்களை மூடி முத்திரையிடவும், இந்த குற்றங்களை செய்யக்கூடிய நபர் எதிர்காலத்தில் இது போன்ற குற்றங்களை செய்வதில் இருந்து தடுப்பதற்கு கணிசமான தொகைக்கு பிணை முறிவினை நிறைவேற்றுவதற்கும் நிர்வாகத் துறை நடுவருக்கு அதிகாரம் அளிக்க வழிவகை செய்யப்பட்டு இருக்கிறது.
இதுபோன்று குற்றங்களை செய்து தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட ஒரு வரை அந்தப் பகுதியில் இருந்தே நீக்கம் செய்வதற்கு மதுவிலக்கு அதிகாரி அல்லது புலனாய்வு அதிகாரியால் நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்வதற்கும் சட்ட திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது.
இவ்வாறு கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் வகையில் இதில் ஈடுபடக்கூடிய நபர்கள், பயன்படுத்தக்கூடிய பொருள்கள், இடம் என அனைத்தையும் வரை முறைப்படுத்தி அதற்கான தண்டனைகளையும், அபராத தொகைகளையும் அதிகரித்து அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்குவதற்கான வழிவகை செய்ய இந்த சட்ட திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தடை செய்யப்பட்ட 10 கிலோ போதை பொருட்கள் இருந்தன.
- வடமாநில வாலிபர்களிடம் போலீசார் சோதனை
கோவை:
கோவை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை, மதுரை, நெல்லை, நாகர்கோவில், பெங்களூரு போன்ற பகுதிகளுக்கு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
இதுதவிர கேரள மாநிலத்திற்கு செல்லக்கூடிய ரெயில்களும் கோவை சந்திப்பு ரெயில் நிலையம் வழியாக இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் ரெயில் நிலையம் எப்போதுமே பரபரப்பாக காணப்படும்.
பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து கோவை வழியாக எர்ணாகுளத்திற்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ரெயில் இன்று மதியம் கோவை சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு வந்தது. இந்த ரெயிலில் போதைப்பொருள் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து ரேஸ்கோர்ஸ் உதவி கமிஷனர் அருண்குமார் தலைமையில் போலீசார் மற்றும் ரெயில்வே போலீசார் ரெயில் நிலையத்திற்கு சென்று, பீகாரில் இருந்த வந்த ரெயிலில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அந்த ரெயிலில் உள்ள ஒவ்வொரு பெட்டி மற்றும் பயணிகளின் உடைமைகளையும் சோதனை செய்தனர். அப்போது ஒரு பெட்டியில் தடை செய்யப்பட்ட 10 கிலோ போதை பொருட்கள் இருந்தன.
அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 10 வடமாநில வாலிபர்களையும் பிடித்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் போதை பொருட்களை கடத்தி வந்தனரா? அல்லது வேறு யாராவது கடத்தி இதில் வைத்தனரா? என பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பா.ம.க. எம்.எல்.ஏ. ஜி.கே.மணி சாதிவாரி கணக்கெடுப்பு இடஒதுக்கீடு குறித்து சில தகவல்களை தெரிவித்தார்.
- உங்களுக்கு தேவையான அளவுக்கு ஏற்கனவே வாய்ப்புகள் தந்துள்ளேன்.
சென்னை:
சட்டசபையில் இன்று இறுதி நாள் கூட்டம் என்பதால் ஒவ்வொரு தொகுதி எம்.எல்.ஏ.க்களும் தாங்கள் கொடுத்திருந்த முக்கிய பிரச்சனை குறித்து அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பேசினார்கள். அதில் பா.ம.க. எம்.எல்.ஏ. ஜி.கே.மணி சாதிவாரி கணக்கெடுப்பு இடஒதுக்கீடு குறித்து சில தகவல்களை தெரிவித்தார்.
இது தொடர்பாக சில கருத்துகளையும் கூறினார். ஆனால் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. தனது கருத்தை சபையில் பதிய வைக்க எழுந்து நீண்ட நேரம் வாய்ப்பு கேட்டார். ஆனால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இது குறித்து சபாநாயகர் அப்பாவு கூறுகையில், உங்களுக்கு தேவையான அளவுக்கு ஏற்கனவே வாய்ப்புகள் தந்துள்ளேன். நீங்கள் பேசியது பதிவு செய்யப்பட்டுள்ளன என்றார். இதை தொடர்ந்து ஜி.கே.மணி உள்ளிட்ட பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
- உயிரிழந்தோருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும், வருத்தங்களையும் தெரிவித்து கொள்கிறேன்.
- மெத்தனப் போக்கின் மொத்த உருவாக இருக்கும் தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பந்துவார்ப்பட்டி பகுதியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாக வரும் செய்திகள் கவலையளிக்கின்றன. உயிரிழந்தோருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும், வருத்தங்களையும் தெரிவித்து கொள்கிறேன்.
பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு நெறிமுறைகள் சரிவர உறுதிசெய்யப்படாதது குறித்து நான் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்தும் தி.மு.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததன் விளைவே, இதுபோன்ற தொடர் விபத்துகளும் உயிரிழப்புகளும். மெத்தனப் போக்கின் மொத்த உருவாக இருக்கும் தி.மு.க. அரசுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு உரிய நிவாரணம் வழங்க இந்த தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- முழுநேரம் தண்ணீர் கிடைக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது.
- புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைப்பது குறித்து ஆய்வு.
சென்னை:
சட்ட சபையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், தி.நகர் பஸ் நிலையம் அருகே உள்ள முத்துரங்கன் சாலை பகுதியில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கப்படுமா எனவும் தியாகராய நகர் தொகுதியில் உள்ள ஏழு வார்டுகளில் குடிநீரில் கழிவுநீர் கலக்கும் பிரச்சனை இருப்பதாகவும், எனவே புதிய சேம்பர்கள் அமைத்து சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஜெ.கருணாநிதி எம்.எல்.ஏ. (தி.மு.க.) கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறும்போது:-
தியாகராய நகரில் குடிநீர் கட்டமைப்பை மேம்படுத்த ஒடிசா நிறுவனத்துடன் ஆலோசித்து 24 மணி நேரமும் முழுநேரம் தண்ணீர் கிடைக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது.
முத்துரங்கன் சாலை பகுதியில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு உடனே கட்டிக்கொடுக்கபடும். வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கல் வாரியத்திற்கு இந்தாண்டு ரூ.900 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகிறது.
தியாகராயநகர் தொகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலப்பது குறித்து ஓரிரு நாட்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு சுத்தமான குடிநீரை மக்களுக்கு விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
முன்னதாக ஜெ. கருணா நிதி பேசுகையில், தி. நகர் கண்ணம்மா பேட்டை பகுதியில் நீண்ட காலமாக குடிநீர் பிரச்சினை இருக்கிறது. லாரி மூலம் தான் சப்ளை ஆகிறது.
இந்த இடம் கடைசி பாயிண்ட். வள்ளுவர் கோட்டத்தில் இருந்து தண்ணீர் வரும்போது இங்கு குறைந்து விடுகிறது. எனவே மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி அமைக்க வேண்டும் என்றார். அத்துடன் தொகுதி முழுவதும் பம்பிங் ஸ்டேசன் சரிவர இயங்காததால் குடிநீரில் கழிவுநீர் கலப்பதாகவும் தெரிவித்தார்.
ஜெ/கருணாநிதி கூறிய இரு பிரச்சினைகளையும் உடனே நிறைவேற்றித் தருவதாக அமைச்சர் கே.என். நேரு அறிவித்தார்.






