என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பட்டாசு ஆலை விபத்து குறித்து சாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
- வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதி உதவி அறிவிப்பு.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பந்துவார்பட்டியில் இன்று காலை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், வெடி விபத்தில் 3 அறைகள் சேதமாகியுள்ளதாகவும், சிலர் உள்ளே சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியானது.
மேலும் பட்டாசு ஆலை விபத்து குறித்து சாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.3 லட்சம் நிதி உதவி அறிவித்துள்ளார்.
வெடி விபத்து சம்பவத்தை தொடர்ந்து, பட்டாசு ஆலையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்து மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளார்.
- கள்ளச்சாராயம் குடித்து 65 உயிர்களை இழந்து வாடும் பட்டியல் இன மக்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
- ஒரு மூத்த அமைச்சரின் இந்த செயல் மிகவும் கண்டனத்திற்குறியது
தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
சட்ட சபையில் துரை முருகன் பேச்சை கேட்டு கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 65 உயிர்களை இழந்து வாடும் பட்டியல் இன மக்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
துரைமுருகன் டாஸ்மாக்கில் கிக் இல்லை, என்று கிறுக்குத்தனமாக அறிக்கை வெளியிட்டிருப்பது மிகவும் கண்டனத்திற்குறியது.
"டாஸ்மாக் சரக்கில் கிக் இல்லை..." என ஒரு மூத்த அமைச்சர், அதுவும் சட்ட சபையில் முதலமைச்சரை வைத்துக் கொண்டே கூறுவது, கிறுக்குத்தனமான ஒரு செயலாகத் தான் மக்கள் அனைவருமே பார்க்கிறார்கள். மூத்த அமைச்சர் இப்படியொரு பதில் அளிப்பது மிக மிகக் கண்டனத்திற்குறியது.
டாஸ்மாக் கடைகளில் கிக் இல்லை, என்றால் அந்த அளவுத் தரம் இல்லாத ஒரு டாஸ்மாக்கை தமிழக அரசு நடத்துகிறது. இந்த தரம் இல்லாத அரசு தன் நிலையை தாங்களே ஒப்புக்கொண்டுள்ளது என்பதுதான் இதற்கு அர்த்தம். டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக ஒழித்து, போதை இல்லா தமிழகத்தை உருவாக்கத் தற்போதைய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குடியை மக்களுக்குக் கொடுத்துக் கோடிகளை நீங்கள் சம்பாதிக்க கோடிக்கணக்கான மக்களை ஏமாற்றுவது ஏற்புடையதல்ல. எனவே தமிழகத்தில் ஏற்பட்ட இத்தனை இறப்புகளுக்கும் தற்போதைய தமிழக அரசு தான் காரணம் என்பதை துரை முருகன் அவர்கள் தன் வாயினாலே ஒப்புக்கொண்டார். ஒரு மூத்த அமைச்சரின் இந்த செயல் மிகவும் கண்டனத்திற்குறியது என்று கூறியுள்ளார்.
- 10வது மாடியில் இருந்து லிஃப்ட் அறுந்து விழுந்து விபத்து.
- விபத்து தொடர்பாக போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை புளியந்தோப்பு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் லிஃப்ட் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
10வது மாடியில் இருந்து லிஃப்ட் அறுந்து விழுந்ததில் கணேசன் (55) என்பவர் உயிரிழந்துள்ளார்.
முறையான பராமரிப்பு இல்லாததால், லிஃப்ட் அறுந்து விழுந்ததாக குடியிருப்பு வாசிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.
லிஃப்ட் அறுந்து விழுந்து ஏற்பட்ட விபத்து தொடர்பாக போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிறுவன் உயிரிழப்புக்கு என்ன காரணம் என்பது குறித்து உடற்கூறாய்விற்கு பிறகே தெரியவரும்.
- கேன் குடிநீரின் தரத்தை ஆய்வு செய்வதில் சில மாறுதல்கள் தெரிய வந்துள்ளது.
சென்னை சைதாப்பேட்டையில், தொடர் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு பீகாரை சேர்ந்த 11 வயது சிறுவன் உயிரிழந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விவகாரத்தில், சென்னை குடிநீர் வழங்கல் வாரியம் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் எடுக்கப்பட்ட ஆய்வில் மெட்ரோ குடிநீரில் எந்த கலப்படமும் இல்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், " சிறுவன் உயிரிழப்புக்கு என்ன காரணம் என்பது குறித்து உடற்கூறாய்விற்கு பிறகே தெரியவரும்.
பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் தற்போது வழங்கப்பட்டு வருகிறது" என்றார்.
இதேபோல், மெட்ரோ குடிநீரில் எந்த கலப்படமும் இல்லை. சம்பந்தப்பட்ட குடியிருப்பு பகுதிகளுக்கு தனியார் சார்பில் கேன் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது என சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், " கேன் குடிநீரின் தரத்தை ஆய்வு செய்வதில் சில மாறுதல்கள் தெரிய வந்துள்ளது.
சம்பந்தப்பட்ட கேன் குடிநீர் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை முழுவதும் கேன் குடிநீர் விநியோகம் செய்பவர்கள் தரத்தை ஆய்வு செய்யப்படும்.
குடிநீரில் பாக்டீரியா உள்ளிட்ட தொற்றுகள் ஏதேனும் கலந்து உள்ளதா என்பது குறித்தும் ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன.
ஆய்வுக்குப் பிறகு சிறுவனின் உயிரிழப்பிற்கான காரணம் என்ன என்பது தெரியவரும்" என்றார்.
- அமைச்சர் அறிவிப்பது, மீண்டும், மீண்டும் மக்களை ஏமாற்றும் செயலாகும்.
- டாஸ்மாக் கடைகளை படிப்படியாக மூடும் அறிவிப்பினை வெளியிட வேண்டும்
தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
கடந்த சட்டமன்ற தேர்தல் தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து மதுவிலக்கு என்று கூறிவிட்டு இன்று சட்டமன்ற கூட்டத் தொடரில் மதுவிலக்கு சாத்தியம் இல்லை அந்த துறை அமைச்சர் அறிவித்துள்ளார். இது தமிழக மக்களுக்கு அளித்து மிகப் பெரிய துரோகம்.
மதுவினாலும் மதுக்கடைகளினாலும் பிரச்சனை ஏற்படும்போதெல்லாம் மதுக்கடைகளை படிப்படியாக மூடுவோம் என்று பலமுறை அறிவித்துவிட்டு அவற்றை மூடாமல் இன்று தமிழக அரசு கள்ளக்குறிச்சி கள்ளச்சாரயத்தால் பல பலர் இறந்த பிறகு இன்று கள்ளச்சாராயத்தை ஒழிப்போம், மீண்டும் டாஸ்மாக் கடைகளை விரைவில் படிப்படியாக மூடுவோம் என்றும் அத்துறை
அத்துறை அமைச்சர் அறிவிப்பது, மீண்டும், மீண்டும் மக்களை ஏமாற்றும் செயலாகும்.
தேர்தல் அறிக்கையில் கொடுத்த பல வாக்குறிதிகளை நிறைவேற்றாத, நடைமுறைப்படுத்தாத தமிழக அரசு, இனிமேலும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக பூர்ண மதுவிலக்கை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும். மக்கள் நலன் கருதி அதற்கு முதல்படியாக டாஸ்மாக் கடைகளை படிப்படியாக மூடும் அறிவிப்பினை வெளியிட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
- டாஸ் வென்று பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 603 ரன்கள் குவித்தது.
- இரண்டாம் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா 236 ரன்கள் எடுத்துள்ளது.
சென்னை:
இந்தியா-தென் ஆப்பிரிக்கா பெண்கள் அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஷபாலி வர்மா, ஸ்மிரிதி மந்தனா பொறுப்பாக ஆடி சதமடித்து அசத்தினர். ஷபாலி வர்மா-ஸ்மிரிதி மந்தனா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 292 ரன்கள் சேர்த்தனர்.
ஸ்மிர்தி மந்தனா 149 ரன் எடுத்து அவுட்டானார். சுபா சதீஷ் 15 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். பொறுப்பாக ஆடிய ஷபாலி வர்மா இரட்டை சதம் அடித்து, 205 ரன்னில் வெளியேறினார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 55 ரன்னிலும் அவுட்டானார்.
முதல் நாள் முடிவில் இந்திய அணி 98 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 525 ரன்கள் குவித்திருந்தது. கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 42 ரன்னும், ரிச்சா கோஷ் 43 ரன்னும் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர்.
இந்நிலையில், இன்று இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற்றது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்பிற்கு 603 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 69 ரன்னும், ரிச்சா கோஷ் 86 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.
இதன்மூலம் மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோர் (603) விளாசிய அணி என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது.
இதையடுத்து, தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சை ஆடியது. அந்த அணியின் சுனே லுஸ் மற்றும் மரிஜான் காப் அரை சதம் அடித்தனர்.
இரண்டாம் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்துள்ளது. மரிஜான் காப் 69 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இந்திய அணி 367 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இந்தியா சார்பில் ஸ்னே ரானா 3 விக்கெட் வீழ்த்தினார்.
- சைதாப்பேட்டை அபித்காலனியில் சிறப்பு மருத்துவ முகாமும், நோய்த் தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது.
- மருத்துவ முகாமினைத் தொடர்ந்து மூன்று நாட்கள் நடத்தப்படவும், அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
சென்னை மாநகராட்சி கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் ஆணையாளர் ராதாகிருஷ்ணன் சைதாப்பேட்டை அபித் காலனியில், மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள மருத்துவ முகாம் மற்றும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
சைதாப்பேட்டை அபித் காலனியில் உள்ள வெளி மாநிலத் தொழிலாளி ராஜேஷ்குமார் என்பவரின் மகன் யுவராஜ் (வயது 11) என்பவர் நோய்த் தொற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்ததைத் தொடர்ந்து,
சைதாப்பேட்டை அபித்காலனியில் சிறப்பு மருத்துவ முகாமும், நோய்த் தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது.

இதனை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் ஆணையாளர் ராதாகிருஷ்ணன் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் இப்பகுதி மக்களுக்கு பிளிச்சீங் பவுடர், ஓ.ஆர்.எஸ் கரைசல், ஆகியவற்றினையும் இப்பகுதி மக்களிடம் வழங்கி, வீட்டின் குடிநீர்த் தொட்டியினை சுத்தம் செய்திடவும், சுற்றுப்புறப் பகுதியினை தூய்மையாக வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தி, விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களையும் வழங்கினார்.
இப்பகுதியில் 12 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு டாக்சி சைக்ளின் (Doxycycline) மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளதையும், லைசால், பிளீச்சிங் பவுடர் (Lysol, Bleaching powder) கொண்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளதையும், மக்களிடம் மருத்துவப் பணியாளர்கள் மேற்கொண்ட மருத்துவப் பரிசோதனை நடவடிக்கைகளையும் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.

இப்பகுதிக்கு வழங்கப்படும் குடிநீரில் குளோரின் உள்ளதை உறுதி செய்யப்பட்டுள்ளதோடு, இப்பகுதியில் தொடர் கண்காணிப்பினை மேற்கொள்ளவும், இம்மருத்துவ முகாமினைத் தொடர்ந்து மூன்று நாட்கள் நடத்தப்படவும், அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். முன்னதாக சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை மற்றும் மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனை ஆகியவற்றினை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் ஆணையாளர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்வின் போது மத்திய வட்டார துணை ஆணையாளர் பிரவீன் குமார், மண்டலக் குழுத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாநகர நல அலுவலர் ஜெகதீசன், கூடுதல் மாநகர நல அலுவலர் ஆஷாலதா, சென்னைக் குடிநீர் வாரியம், மாநகராட்சி அலுவலர்கள், மருத்துவப் பணியாளர்கள் உடனிருந்தனர்.
- தமிழக அரசின் தோல்வியையும், இயலாமையையுமே அமைச்சரின் கருத்துகள் காட்டுகின்றன.
- மது ஆலை அதிபர்களின் ஆதரவைப் பெற்ற திமுக அரசுக்கு அந்த எண்ணம் இல்லை என்று தோன்றுகிறது.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
"தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை கொண்டு வருவதற்கான சூழல் இல்லை. தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தினால், அண்டை மாநிலங்களிலிருந்து மது உள்ளே வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது'' என்று மதுவிலக்குத் துறை அமைச்சர் முத்துசாமி அவர்களும், "உழைப்பவர்களின் அசதியை போக்க அவர்களுக்கு மது தேவை. டாஸ்மாக் மதுவில் கிக் இல்லாததால் கள்ளச்சாராயத்தை நோக்கி செல்கின்றனர்" என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களும் கூறியிருக்கின்றனர். அமைச்சர்களின் கருத்துகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. தமிழக அரசின் தோல்வியையும், இயலாமையையுமே அமைச்சரின் கருத்துகள் காட்டுகின்றன.
தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற விவாதத்தின் போது குறுக்கிட்டு பேசிய அமைச்சர் முத்துசாமி, தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கான சூழல் இல்லை என்று கூறியிருக்கிறார். அதன் பொருள் என்னவென்று தெரியவில்லை. மதுவிலக்கை நடைமுறைப்படுத்த எந்த சூழலும் தேவையில்லை. நாட்டு மக்கள் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் போதுமானது. அந்த எண்ணம் இருந்தால் ஒரே ஆணையில் மதுவிலக்கை அறிவித்து, நாளை முதல் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முடியும். ஆனால், மது ஆலை அதிபர்களின் ஆதரவைப் பெற்ற திமுக அரசுக்கு அந்த எண்ணம் இல்லை என்று தோன்றுகிறது.
தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூடினால் அண்டை மாநிலங்களில் இருந்து மது உள்ளே வந்து விடும்; கள்ளச்சாராயம் பெருகிவிடும் என்ற புளித்துப் போன காரணங்களைக் கூறியே மதுவிலக்கை தள்ளிப்போடக் கூடாது. தமிழ்நாட்டில் சுமார் ஐந்தாயிரம் மதுக்கடைகள் இருக்கும்போதே மாநிலம் முழுவதும் கள்ளச்சாராயம் ஆறாக ஓடிக் கொண்டு தான் இருக்கிறது. இது அரசின் தோல்வியே தவிர, இதற்கு வேறு காரணங்கள் இல்லை.
அண்டை மாநிலங்களில் மதுக்கடைகள் இருந்தாலும் அங்கிருந்து தமிழ்நாட்டிற்குள் மது வராமல் தடுக்க வேண்டியதும், கள்ளச்சாராய வணிகத்தை தடுக்க வேண்டியதும் அரசின் அடிப்படைக் கடமைகள். அதற்காகத் தான் காவல்துறை என்ற அமைப்பும், அதில் மதுவிலக்குப் பிரிவு என்ற துணை அமைப்பும் உள்ளன. தமிழகத்தின் எந்த மூலை முடுக்கில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டாலும் அது குறித்து அடுத்த 5 நிமிடங்களுக்குள் அரசுக்கு தகவல் கிடைக்கும் வகையில் காவலர்கள், கிராம உதவியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் என வலிமையான கட்டமைப்பு அரசிடம் உள்ளது. இவ்வளவையும் வைத்துக் கொண்டு அண்டை மாநிலங்களில் இருந்து மது வருவதையும், கள்ளச்சாராயத்தையும் தடுக்க முடியாவிட்டால் அது அரசின் இயலாமை தான். மது விலக்கு சாத்தியமில்லை என்றால் அரசு பதவி விலக வேண்டும்.
அரசு அதன் வருவாய்க்காகவும், ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் நடத்தும் மது ஆலைகள் செழிக்க வேண்டும் என்பதற்காகவும் மதுக்கடைகளை தெருவுக்குத் தெரு திறந்து விட்டு, உழைப்பவர்களின் அசதியைப் போக்க அவர்களுக்கு மது தேவை என்று உழைக்கும் மக்களின் மீது பழியை சுமத்துவது கண்டிக்கத்தக்கது. அதிலும் துரைமுருகன் போன்ற மூத்த அமைச்சர்களே சற்றும் சமூகப் பொறுப்பு இல்லாமல் இப்படி பேசுவது நியாயமல்ல. மதுவால் தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் இரு லட்சம் பேர் உயிரிழப்பதை விட சிறிது நேரம் அசதியாக இருப்பது எவ்வளவோ மேல். எனவே, தமிழ்நாட்டில் உடனடியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
- அரசுத்துறை உரிய நடவடிக்கைகளை எடுத்ததா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும்.
- தொழிலாளர்கள் உயிரிழப்பதும் தொடர்கதையாக நடந்து வருகின்றன.
தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஜி.கே. வாசன் கூறியிருப்பதாவது,
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், பந்துவார்பட்டி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், துயரத்தையும் தருகிறது. பட்டாசு தொழிற்சாலைகளில் தொடர்ந்து வெடிவிபத்துகள் ஏற்படுவதும், தொழிலாளர்கள் உயிரிழப்பதும் தொடர்கதையாக நடந்து வருகின்றன. இத்தகைய விபத்துகளுக்கு யார் காரணம் ? யார் பொறுப்பு என்பதை அறிய முடியாமலேயே விபத்துகள் அடுத்தடுத்து நடைபெற்று வருகின்றன. இந்த விபத்துகளை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அரசுத்துறை உரிய நடவடிக்கைகளை எடுத்ததா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும்.
பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 3 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருக்கிறார்.
பட்டாசு ஆலை வெடி விபத்துகள் இனி நிகழாமல் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு விரைந்து எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
- இராம்நாத் கோயங்கா அந்தக் காலத்தில் இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவர்.
- மறுபுறம் முனுசாமிக்கோ தேர்தல் செலவுக்கே பணம் கிடையாது. அதனால் அந்தத் தேர்தலில் கோயங்கா தான் வெல்வார்; முனுசாமியின் தோல்வி உறுதி என்று கூறப்பட்டது.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
திண்டிவனம் மண் பல புரட்சி வரலாறுகளுக்கு சொந்தமானது.
பணத்தால் மட்டுமே அனைத்தையும் சாதிக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு பாடம் புகட்டிய மண்.
இந்தியா விடுதலை அடைந்து குடியரசு நாடாக அறிவிக்கப்பட்ட பிறகு 1952-ஆம் ஆண்டில் முதல் மக்களவைத் தேர்தலும், சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெற்றது. அப்போது திண்டிவனம் மக்களவைத் தொகுதி இரட்டை உறுப்பினர் தொகுதியாக இருந்தது.
அந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பொதுப்பிரிவு வேட்பாளராக இராம்நாத் கோயங்காவும், தனிப் பிரிவு வேட்பாளராக முனுசாமி பிள்ளையும் போட்டியிட்டனர். இராமசாமி படையாட்சியார் தலைமையிலான தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி சார்பில் பொதுப்பிரிவு வேட்பாளராக திருகுறள் முனுசாமி அவர்களும், தனிப்பிரிவு வேட்பாளராக ஜெயராமன் அவர்களும் போட்டியிட்டனர்.
இராம்நாத் கோயங்கா அந்தக் காலத்தில் இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவர். டாட்டா, பிர்லா ஆகியோருக்கு அடுத்தபடியாக கோயங்கா தான் பெரும் பணக்காரர். இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி இதழ்களின் அதிபர். சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவர். காந்தியடிகள், ஜவகர்லால் நேருவுக்கு நெருங்கிய நண்பர். 1926-ஆம் ஆண்டிலேயே தமிழ்நாடு சட்ட மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட முனுசாமியோ மிகச்சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர். கோயங்கா விமானத்தில் பயணித்தும், பின்னர் ஹெலிகாப்டரில் பறந்தும் பரப்புரை மேற்கொண்டார். ஆனால், ஏழையான திருக்குறள் முனுசாமி அவர்களுக்கோ அவரது மிதிவண்டி தான் பரப்புரை வாகனம் ஆகும்.
இப்போது இருப்பது போன்று அப்போது தேர்தல் நடத்தை விதிகள் கடுமையானதாக இல்லை. அதைப் பயன்படுத்திக் கொண்டு இராம்நாத் கோயங்கா ஹெலிகாப்டர் மூலம் துண்டறிக்கைகளை வீசி பரப்புரை செய்ததாக கூறப்படுகிறது. ஹெலிகாப்டரில் இருந்து ஒரு ரூபாய் நோட்டுக்களை வாரி இறைத்து தேர்தல் பிரச்சாரம் செய்தார் என்றும் ஒரு சாரார் கூறுகின்றனர்.
மறுபுறம் முனுசாமிக்கோ தேர்தல் செலவுக்கே பணம் கிடையாது. அதனால் அந்தத் தேர்தலில் கோயங்கா தான் வெல்வார்; முனுசாமியின் தோல்வி உறுதி என்று கூறப்பட்டது.
தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியான போது அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோயங்கா தோல்வியடைந்தார். அவருக்கு கிடைத்த வாக்குகள் 1,22,561 மட்டும் தான். ஆனால், திருக்குறள் முனுசாமி 2,14,772 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
பணம் தான் வெல்லும் என்று நினைத்திருந்தவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து இனம் தான் வெல்லும் என்று நிரூபித்த மண் திண்டிவனம்.
அதே வரலாற்றை படைக்க காத்துக் கொண்டிருக்கிறது விக்கிரவாண்டி. பாட்டாளிகளாகிய நீங்கள் ஆற்றும் களப்பணி தான் அந்த புதிய வரலாறுக்கான அடித்தளமாக அமையும் என்று கூறியுள்ளார்.
- புதிய மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதற்கான சட்ட மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டன.
- மக்கள்தொகை, ஆண்டு வருமானத்தை தளர்த்தி திருத்தப்பட்ட மசோதா நிறைவேற்றம்.
தமிழகத்தில் புதிதாக திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி, புதுக்கோட்டை மாநகராட்சிகள் உதயமாகின்றன.
சட்டசபையில் புதுக்கோட்டை நகராட்சி மற்றும் 11 ஊராட்சிகளை ஒன்றிணைத்து புதுக்கோட்டை மாநகராட்சி, திருவண்ணாமலை நகராட்சி மற்றும் 18 ஊராட்சிகள், அடி அண்ணாமலையில் உள்ள பகுதிகள் ஆகிவற்றை ஒன்றிணைத்து திருவண்ணாமலை மாநகராட்சி உதயமாகிறது.
இதேபோல், நாமக்கல் நகராட்சி மற்றும் 12 ஊராட்சிகளை ஒன்றிணைத்து நாமக்கல் மாநகராட்சி, காரைக்குடி நகராட்சி மற்றும் இரண்டு பேரூராட்சிகள், ஐந்து ஊராட்சிகளை ஒன்றிணைத்து காரைக்குடி மாநகராட்சி என மொத்தம் 4 புதிய மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதற்கான சட்ட மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டன.
இந்நிலையில் மாநகராட்சியை தரம் உயர்த்த தடையாக இருந்த மக்கள்தொகை, ஆண்டு வருமானத்தை தளர்த்தி திருத்தப்பட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
நகர்ப்புற உள்ளாட்சி சட்டப்பிரிவில் மக்கள் தொகை 3 லட்சத்தில் இருந்து 2 லட்சமாகவும், ஆண்டு வருமானம் ரூ.30 கோடியில் இருந்து ரூ.20 கோடியாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
- ஜெகநாதனுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டன.
- ஜெகநாதனின் பதவிக்காலத்தை 2025ம் ஆண்டு மே மாதம் வரை நீட்டித்து உத்தரவு.
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீது ஊழல் குற்றச்சாட்டுகள், விதிமீறல்கள் என அடுக்கடுக்காக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார்.
துணை வேந்தருக்கு பதவி நீட்டிப்பு கிடைக்காமல் உரிய நடவடிக்கை எடுப்போம் என சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார்.
ஜெகநாதனுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டன.
இந்நிலையில், சர்ச்சைக்குள்ளான சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனின் பதவிக்காலத்தை நீட்டித்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.
ஜெகநாதன் மீது பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் பதவிநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. பதவிக்கால நீட்டிப்புக்கான உத்தரவை ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் இருந்து ஜெகநாதன் பெற்றுக்கொண்டார்.
அதன்படி, ஜெகநாதனின் பதவிக்காலத்தை 2025ம் ஆண்டு மே மாதம் வரை நீட்டித்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.






