என் மலர்
உள்ளூர் செய்திகள்
- அட்டை பெட்டிகளில் இருந்து திடீரென கரும்புகை எழுந்தது.
- சற்று நேரத்தில் தீ மளமளவென முதல் தளம் முழுவதும் பரவியது.
திருப்பூர்:
திருப்பூர் அனு ப்பர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவர் கலைவாணி தியேட்டர் அருகில் பின்னலாடை நிறுவனம் நடத்தி வருகிறார். 3 மாடி கொண்ட கட்டிடத்தில் செயல்பட்டு வரும் இந்த பின்னலாடை நிறுவனத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
இந்தநிலையில் இன்று காலை பின்னலாடை நிறு வனத்தின் முதல் தளத்தில் வைக்கப்பட்டிருந்த பனியன் துணிகள் மற்றும் அட்டை பெட்டிகளில் இருந்து திடீரென கரும்புகை எழுந்தது. சற்று நேரத்தில் தீ மளமளவென முதல் தளம் முழுவதும் பரவியது.
இதனைப பார்த்து அதிர்ச்சி அடைந்த பனியன் நிறுவன ஊழியர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். மேலும் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை.
பின்னர் திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்ததும் 2 வாகனங்களில் விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.
இருந்த போதிலும் பின்னலாடை நிறுவனத்தில் இருந்த பல லட்சம் மதிப்பி லான 3ஆயிரம் கிலோ பனியன் துணிகள், 100-க்கும் மேற்பட்ட தையல் எந்திர ங்கள் மற்றும் அட்டைப்பெட்டிகள் எரிந்து நாசமானது.
மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா? என அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆயிரம் லிட்டர் மெத்தனாலை பதுக்கி வைத்திருப்பதாக தகவல்.
- சி.பி.சி.ஐ.டி போலீசார் பெட்ரோல் பங்க்கிற்கு சீல் வைத்தனர்.
பண்ருட்டி:
கள்ளக்குறிச்சியில் கடந்த மாதம் 18-ந் தேதி மெத்தனால் கலந்த விஷசாராயம் குடித்ததில் 200-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இதில் 65 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தில் மெத்தனால் சப்ளை செய்த புதுவை மடுகரையை சேர்ந்த மாதேஷ் உள்பட 21 பேரை சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மாதேஷ், மற்றும் சாராயம் விற்ற கண்ணுக்குட்டி என்ற கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா மற்றும் சின்னதுரை உட்பட 11 பேரை சி.பி.சி.ஐ.டி போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
அப்போது சி.பி.சி.ஐ.டி போலீசாரிடம் மாதேஷ் கூறும்போது, `பண்ருட்டி அருகே வீரபெருமாநல்லூர் பகுதியில் மூடப்பட்ட பெட்ரோல் பங்க்கில் 2 ஆயிரம் லிட்டர் மெத்தனாலை பதுக்கி வைத்திருப்பதாக தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து இன்று அதிகாலை சி.பி.சி.ஐ.டி போலீசார் அந்த பெட்ரோல் பங்க்கிற்கு சென்று அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 ஆயிரம் லிட்டர் மெத்தனாலை கைப்பற்றினர். பின்னர் கிராம நிர்வாக அலுவலர் சங்கர் முன்னிலையில் பெட்ரோல் பங்க்கிற்கு சீல் வைத்தனர்.
- 14 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- பெரிய நெட்வொர்க் வைத்து வேலை செய்து செய்து வந்தேன்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த விஷ சாராயம் குடித்த விவகாரத்தில் இதுவரை 229 பேர் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதுவரை சிகிச்சை பலனின்றி 65 பேர் உயிரிழந்துள்ளனர்.
தொடர்ந்து 14 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முக்கிய குற்றவாளிகளான புதுச்சேரி மடுகரையை சேர்ந்த மாதேஷ், கள்ளக்குறிச்சி சாராய வியாபாரி கண்ணுக்குட்டி என்ற கோவிந்தராஜ், சின்னதுரை உள்பட 21 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட மாதேஷ், சாராய வியாபாரி கண்ணுக்குட்டி என்ற கோவிந்தராஜ் உள்பட 11 பேரை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் மாதேஷ் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதன் விபரம் வருமாறு:-
கடந்த 4 மாதங்களாக மெத்தனாலை வாங்கி விற்பனை செய்து வந்தேன் கள்ளக்குறிச்சி, அகரக்கோட்டை, சேஷசமுத்திரம், மாதவசேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு மெத்தனால் வாங்கி சப்ளை செய்துள்ளேன். சென்னையில் உள்ள கெமிக்கல் கம்பெனி உரிமையாளர்கள் பன்சிலால், கவுதம் ஆகியோரிடம் ஒரு பேரல் ரூ.11 ஆயிரம் என 19 பேரல் வாங்கினேன். ஒரு பேரலை 40 ஆயிரத்துக்கு விற்பனை செய்வேன்.
முதல் கட்டமாக கள்ளக்குறிச்சியில் விற்பனை செய்து அது வெற்றி பெற்றால் மற்ற மாவட்டங்களுக்கும் விற்பனை அதிகரிக்க பெரிய அளவில் திட்டமிட்டிருந்தேன்.
இதற்காக பெரிய நெட்வொர்க் வைத்து வேலை செய்து செய்து வந்தேன். ஆனால் முதல் கட்டமே தோல்வியடைந்து கள்ளக்குறிச்சியில் அதிக அளவில் உயிரிழப்பு ஏற்பட்டது.
இவ்வாறு வாக்குமூலத்தில் அவர் கூறியுள்ளார்.
சேஷசமுத்திரத்தை சேர்ந்த பிரபல சாராய வியாபாரி சின்னதுரை அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பது:-
நான் கடந்த 10 ஆண்டுகளாக கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்டு வருகிறேன். ஊர் முக்கியஸ்தர்கள் மத்தியில் சாராயம் விற்பனைக்கு ஏலம் விடப்படும். அந்த ஏலத்தை அதிக விலை கொடுத்து எடுத்து சாராய வியாபாரம் நடத்தி வந்தேன். அதன் படி கன்னுகுட்டி என்கிற கோவிந்தராஜுக்கும் பலமுறை சாராயம் சப்ளை செய்திருக்கிறேன்.
இந்நிலையில் கோவிந்தராஜன் மது பிரியர்களின் ஆசையை நிறைவேற்ற என்னிடம் மெத்தனால் கேட்டதால் அவருக்கு சப்ளை செய்தேன். மீதி மெத்த னாலை சூளாங்குறிச்சி கண்ணனிடம் பதுக்கி வைத்திருக்க சொன்னேன். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி ஏற்பட்ட உயிரிழப்பு அறிந்ததும் பயத்தில் கண்ணனிடம் இருந்து மெத்தனாலை அழிக்குமாறு கூறினேன். அவரும் கீழே கொட்டி அழித்துவிட்டார். இவ்வாறு சின்னதுரை வாக்குமூலம் அளித்துள்ளார்.
கண்ணு குட்டி என்கிற கோவிந்தராஜ் மற்றும் அவரது மனைவி விஜயா அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
நாங்கள் பல ஆண்டு களாக கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்டுவந்தோம். அப்போது எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இப்போது மது பிரியர்களின் விருப்பத்துக்கு ஏற்ப போதையை அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மெத்தனாலை வாங்கி கலந்து சாராயம் விற்பனை செய்ததில் உயிரிழப்பு ஏற்பட்டது எங்களுக்கே அதிர்ச்சி அளிக்கிறது. இதில் எங்கள் உறவினர்களும் இறந்துள்ளனர்.
பலரது உடல்நிலை பாதிக்கப்பட்டு கண்பார்வையும் இழந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் இருந்து ஜாமின் பெற்று வெளியே சென்றாலும், வழக்கு முடிந்து வீடு திரும்பினாலும் உறவினர்களின் முகத்தில் எப்படி விழிப்பது என்று நினைத்தாலே எங்களுக்கு அச்சமாக உள்ளது. இவ்வாறு அவர்கள் கண்ணீர் மல்க கூறினர்.
இவர்களது வாக்கு மூலத்தை சி.பி.சி.ஐ.டி. போலீசார் வீடியோவில் பதிவு செய்து அதனை கோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளனர்.
- கோபாலகிருஷ்ணன் ஓட்டுபட்டறை முத்தாலம்மன் பேட்டை பகுதியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.
- அ.தி.மு.க.வில் ஒன்றிய செயலாளர் உள்பட பல்வேறு பதவிகளையும் வகித்துள்ளார்.
குன்னூர்:
நீலகிரி பாராளுமன்ற தொகுதியின் முன்னாள் எம்.பியாக இருந்தவர் அ.தி.மு.க.வை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (வயது 63). இவர் குன்னூர் அருகே உள்ள ஓட்டுபட்டறை முத்தாலம்மன் பேட்டை பகுதியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.
கடந்த சில மாதங்களாக இவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக தொடர்ந்து மருத்துவ சிகிச்சையும் பெற்று வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை வீட்டில் இருந்தபோது, முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சிறிது நேரத்தில் உயிரிழந்து விட்டார்.
அவர் இறந்த தகவல் அறிந்ததும் நீலகிரி மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள், உறவினர்கள், அப்பகுதி பொதுமக்கள் அவரது வீட்டில் குவிந்தனர். அவர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பொதுமக்கள் அஞ்சலிக்கு பின்னர் அவரது உடல் இன்று மாலை வெலிங்டன் பகுதியில் உள்ள மின்மயானத்தில் எரியூட்டப்பட உள்ளது.
உயிரிழந்த கோபாலகிருஷ்ணன் கடந்த 2014-ம் நடந்த பாராளுமன்ற தேர்தலில் நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டார். அப்போது அவர் தன்னை எதிர்த்து, தி.மு.க சார்பில் போட்டியிட்ட ஆ.ராசாவை தோற்கடித்து எம்.பி.யானார்.
இவர் அ.தி.மு.க.வில் ஒன்றிய செயலாளர் உள்பட பல்வேறு பதவிகளையும் வகித்துள்ளார். 2014-க்கு முன்பு வரை குன்னூர் நகராட்சி தலைவராக பதவி வகித்த அவர், அப்போது நடந்த எம்.பி. தேர்தலுக்காக தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு போட்டியிட்டார் குறிப்பிடத்தக்கது.
இறந்த முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணனுக்கு சுசிலா என்ற மனைவியும், அப்சரா என்ற மகளும் உள்ளனர்.
- தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர்.
- தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் பெரியார் திடலில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.
விழுப்புரம்:
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, தொகுதிக்குப்பட்ட கிராமங்களில் வீதி, வீதியாக சென்று மாம்பழம் சின்னத்தில் பொதுமக்களிடம் ஆதரவு கேட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
அவரை ஆதரித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அக்கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி, இவர்களது மகள் சங்கமித்ரா ஆகியோர் தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணியை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் விக்கிரவாண்டி பெரியார் திடலில் இன்று (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.
இக்கூட்டத்திற்கு பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தலைமை தாங்குகிறார். ஜி.கே.மணி எம்.எல்.ஏ. அனைவரையும் வரவேற்று பேசுகிறார். கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் முன்னிலை வகிக்கின்றனர்.
இதில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் , பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை, அ.தி.மு.க. உரிமை மீட்புக்குழு தலைவர் ஓ.பன்னீர்செல்வம், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர், புதிய நீதிக்கட்சி தலைவர் சண்முகம், இந்திய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் ரவிபச்சமுத்து, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் தேவநாதன்யாதவ், தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மாம்பழம் சின்னத்தில் வாக்குகள் சேகரித்து சிறப்புரையாற்ற உள்ளனர்.
தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் ஒரே மேடையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளதால் பா.ம.க.வினர் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.
- தாழ்த்தப்பட்ட சமுதாயமும், வன்னிய சமுதாயமும் பெரிய சமுதாயங்களாகும்.
- திராவிடக் கட்சிகள் நம்மை பிரித்து சூழ்ச்சி செய்து வருகின்றன.
விழுப்புரம்:
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணியை ஆதரித்து காணை காலனி பகுதியில் அக்கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தேர்தல் பிரசாரம் செய்து பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
தாழ்த்தப்பட்ட சமுதாயமும், வன்னிய சமுதாயமும் பெரிய சமுதாயங்களாகும். தமிழக மக்கள் தொகையில் 40 சதவீதம் இந்த இரு சமுதாயத்தினர்தான் உள்ளனர். இந்த இரு சமுதாயங்களும் ஒன்று சேர்ந்து விட்டால், வேறு எந்த கட்சிகளும் நமக்கு தேவையில்லை.
வன்னியருக்கு எதிரி தாழ்த்தப்பட்டோர் என்றும், தாழ்த்தப்பட்டோருக்கு எதிரி வன்னியர் என்றும் நிலையை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளாகியும் நம்மை முன்னேறவிடாமல் வைத்திருக்கிறார்களே, அவர்கள் தான் நம் முதல் எதிரி. திராவிடக் கட்சிகள் நம்மை பிரித்து சூழ்ச்சி செய்து வருகின்றன.
நான் இங்கு அரசியல் பேச வரவில்லை. நியாயம் கேட்க வந்திரு க்கிறேன்.1949-ம் ஆண்டு தொடங்கப்பட்ட தி.மு.க.வில், தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவருக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைத்தது 1999-ல் தான்.
ஆனால், பா.ம.க.வில் 1998-ம் ஆண்டிலேயே தாழ்த்தப்பட்ட சமூகத்தைச்சேர்ந்த தலித் ஏழுமலைக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
அதுபோல, அம்பேத்கர் சிலையை தமிழகத்தில் அதிகளவில் திறந்தவர்பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் தான். உங்களை வாக்கு வங்கியாகத்தான் அவர்கள் பார்க்கிறார்கள். நீங்கள் முன்னேற வேண்டும் என்பதுதான் பா.ம.க.வின் எண்ணம்.
நமக்குள் சண்டை, பிரச்சினை எதற்கு?. நாம் ஒன்று சேர்ந்தால் இவர்களுக்கு வேலை இல்லை. தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இளைஞர்களே சிந்தித்துப்பாருங்கள். நாம் முன்னேற வேண்டும். நமக்கு ஆட்சி அதிகாரம் வேண்டும். இந்த இடைத்தேர்தல் மூலம் மக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினால்தான் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் மாறுவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
- தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.40 உயர்ந்தது.
- வெள்ளி விலை உயர்ந்துள்ளது.
சென்னை:
தங்கம் விலை மாத தொடக்க நாளான ஜூலை 1-ந்தேதி உயராத நிலையில் அதற்கு அடுத்த நாட்களில் சற்று உயர்ந்து விற்பனையாகிறது. நேற்று சவரனுக்கு ரூ.40 உயர்ந்தது.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து 54 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை கிராமுக்கு 65 ரூபாய் உயர்ந்து 6 ஆயிரத்து 760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 1 ரூபாய் 50 காசுகள் உயர்ந்து 97 ரூபாய் 50 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.
- தொகுதி வாரியாக ஆய்வு நடத்தும்படி மேலிடம் உத்தரவிட்டது.
- அறிக்கை தயார் செய்து மாநில தலைவர் அண்ணாமலையிடம் வழங்குகிறார்கள்.
சென்னை:
பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் ஒரு தொகுதியில் கூட பா.ஜ.க. வெற்றி பெறாதது கட்சிக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
நிச்சயம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட தொகுதிகளில் கூட 2-ம் இடத்தையே பெற்றது. ஏற்கனவே இந்த தொகுதிகளில் நடத்தி இருந்த தேர்தலுக்கு முந்தைய ஆய்வுகள், கணிப்புகள் எல்லாம் பா.ஜ.க.வுக்கு சாதகமாக இருந்தும் அந்த தொகுதிகள் கை நழுவியது எப்படி? என்று மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது.
இதையடுத்து தொகுதி வாரியாக ஆய்வு நடத்தும்படி மேலிடம் உத்தரவிட்டது. அதன்படி ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு பொறுப்பாளர் நியமிக்கப்பட்டு அவர்கள் முன்னிலையில் ஆய்வு நடந்தது.
இந்த கூட்டங்களில் வேட்பாளர்கள், மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் அனைவரும் அழைக்கப்பட்டு காரணங்கள் கேட்கப்பட்டது.
தென் சென்னையில் கனகசபாபதி முன்னிலையில் ஆய்வு கூட்டம் நடந்தது. அப்போது கட்சி தேர்தல் செலவுக்காக வழங்கிய பணத்தை முறையாக விநியோகிக்கவில்லை. கோஷ்டிகளால் தேர்தல் வேலைகளில் உள்ளடி வேலைகளும் நடந்தன என்று பல்வேறு புகார்கள் கூறப்பட்டன.
இதனால் சில தொகுதிகளில் நிர்வாகிகளிடையே மோதல், கைகலப்பு வரை நடந்தது. மாநிலம் முழுவதும் நடத்தப்படும் இந்த ஆய்வு கூட்டம் நாளையுடன் முடிவடைகிறது. தொகுதி வாரியாக தோல்விக்கான காரணம், நிர்வாகிகள் செயல்பாடு பற்றிய விரிவான அறிக்கை தயார் செய்து மாநில தலைவர் அண்ணாமலையிடம் வழங்குகிறார்கள்.
நாளை மறுநாள் (6-ந் தேதி) பா.ஜனதா மாநில செயற்குழுக் கூட்டம் மதுரவாயல் ஸ்ரீவாரி மண்டபத்தில் நடக்கிறது. இதில் மாநில நிர்வாகிகள், அணிகளின் தலைவர்கள், மாவட்ட தலைவர்கள், மண்டலத் தலைவர்கள், தொகுதி பொறுப்பாளர்கள் உள்பட சுமார் 4 ஆயிரம் பேர் பங்கேற்கிறார்கள். இந்த கூட்டத்திலும் தேர்தல் தோல்வி தொடர்பாக விவாதிக்க திட்டமிட்டு உள்ளார்கள்.
செயற்குழு கூட்டத்துக்கு பிறகு மாவட்ட வாரியாக தேர்தல் பணியில் புகாருக்கு ஆளான நிர்வாகிகள் பதவிகளை பறிக்க திட்டமிட்டுள்ளனர். செயற்குழு முடிந்ததும் இந்த வேலைகள் தொடங்கும் என்று கட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
- பண்ருட்டி அருகே பயன்பாட்டில் இல்லாத பெட்ரோல் பங்கை சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தினர்.
- பெட்ரோல் பங்க்-கிற்கு கீழ் 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் கைதான மாதேஷிடம் சிபிசிஐடி போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில், பண்ருட்டியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்-ல் மெத்தனால் மற்றும் ரசாயனம் பதுக்கி வைத்துள்ளதாக அவர் வாக்குமூலம் அளித்தார்.
இதனையடுத்து, பண்ருட்டி அருகே வீரப்பெருமாநல்லூரில் பயன்பாட்டில் இல்லாத பெட்ரோல் பங்கை சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தினர்.
பெட்ரோல் பங்கின் கீழே புதைக்கப்பட்டிருக்கும் பெட்ரோல் டேங்கில் மெத்தனால் பதுக்கி இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், பயன்பாட்டில் இல்லாத பெட்ரோல் பங்க்-கிற்கு சீல் வைக்கப்பட்டது.
பெட்ரோல் பங்க்-கிற்கு கீழ் 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்று வந்த இருதயராஜ், பழனிசாமி, சக்திவேல், குமார் மற்றும் அண்ணாதுரை ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ஆட்சியர் பிரசாந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சங்கராபுரம் மற்றும் சின்னசேலம் பகுதிகளில் 5 பேரும் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
- சம்பவ இடத்திற்கு விரைந்த சிறப்பு படை போலீசார் மோப்ப நாய் உதவியுடன் சுமார் 1 மணி நேரமாக சோதனை நடத்தினர்.
- ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகளிடமும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
சென்னை:
சென்னை போன்ற பெருநகரங்களில் மெட்ரோ ரெயில் சேவை மிக முக்கியமான தேவையாக இருக்கிறது. லட்சக்கணக்கான பயணிகள் தினமும் மெட்ரோ ரெயிலை பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் சென்னை பரங்கிமலை மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வெடிகுண்டு மிரட்டல் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சிறப்பு படை போலீசார் மோப்ப நாய் உதவியுடன் சுமார் 1 மணி நேரமாக சோதனை நடத்தினர். சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என கண்டுபிடிக்கப்பட்டது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகளிடமும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
நேற்று சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு விடுக்கப்பட்டது. சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை அது வெறும் புரளி என்பது தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.
- யூடியூபர் சவுக்கு சங்கரை கடந்த மே மாதம் 4-ம்தேதி தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியில் கோவை போலீசார் கைது செய்தனர்.
- ஜாமீன் கேட்டு சவுக்கு சங்கர், மதுரையில் உள்ள போதைப்பொருட்கள் கடத்தல் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
தேனி:
பெண் போலீசார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கரை கடந்த மே மாதம் 4-ம்தேதி தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியில் கோவை போலீசார் கைது செய்தனர். அப்போது அவர் தங்கியிருந்த விடுதி அறை மற்றும் காரில் இருந்த 409 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் கஞ்சா வைத்திருந்த வழக்கிலும் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு சவுக்கு சங்கர், மதுரையில் உள்ள போதைப்பொருட்கள் கடத்தல் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்தநிலையில், சவுக்கு சங்கர் மீதான கஞ்சா வழக்கில் 280 பக்க குற்றப்பத்திரிகையை போலீசார் நேற்று தாக்கல் செய்தனர். ஆன்லைன் மூலம் மதுரை சிறப்பு கோர்ட்டில் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
- நான் கேரளாவிற்கும் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிற்கும் எம்.பி.யாக பிரதிபலிப்பேன்.
- சபரிமலையை தொட நினைத்தவர்கள் எல்லாம் காணாமல் தான் போவார்கள்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் மத்திய சுற்றுலாத்துறை மந்திரி சுரேஷ் கோபி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கேரள மக்கள் வழங்கிய ஆசிர்வாதத்தால் நான் பாராளுமன்ற உறுப்பினராக தேர்வாகி உள்ளேன். நான் கேரளாவிற்கும் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிற்கும் எம்.பி.யாக பிரதிபலிப்பேன். மக்களுக்கு முக்கியமாக எதை செய்ய வேண்டுமோ அதை செய்வேன். என் பெட்ரோலியம் மற்றும் சுற்றுலாத்துறையின் சார்பில் தமிழ்நாட்டிற்கான திட்டங்கள் இருக்கிறது. சுற்றுலாத்துறை மூலமாக எந்த திட்டமாக இருந்தாலும் செய்து கொடுக்கலாம். பெட்ரோலியம் துறையில் துறை சார்ந்த அனுபவங்கள் எதுவும் தற்போது என்னிடம் இல்லாததால், அதை கற்றுக்கொண்டு வருகிறேன்.
பெட்ரோலிய பொருட்கள் விலை குறைப்பு பற்றி யோசிக்காமல் அதற்குரிய வேறு வழி என்ன என்று யோசிக்க வேண்டும். சபரிமலையை தொட நினைத்தவர்கள் எல்லாம் காணாமல் தான் போவார்கள்.
கேரளாவில் பிறந்தாலும் சென்னை என்னை வளர்த்த இடம். நடிக்க வாய்ப்பு தந்து, தூங்க இடம் தந்தது. தமிழ்நாட்டை நேசிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் அவரிடம் நீட் குறித்து நடிகர் விஜய் பேசியது குறித்து கருத்து கேட்டபோது, அரசியல் பற்றி கேட்க வேண்டாம் என்றார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






