என் மலர்
நீங்கள் தேடியது "C.B.C.I.T. police கள்ளக்குறிச்சி"
- 14 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- பெரிய நெட்வொர்க் வைத்து வேலை செய்து செய்து வந்தேன்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த விஷ சாராயம் குடித்த விவகாரத்தில் இதுவரை 229 பேர் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதுவரை சிகிச்சை பலனின்றி 65 பேர் உயிரிழந்துள்ளனர்.
தொடர்ந்து 14 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முக்கிய குற்றவாளிகளான புதுச்சேரி மடுகரையை சேர்ந்த மாதேஷ், கள்ளக்குறிச்சி சாராய வியாபாரி கண்ணுக்குட்டி என்ற கோவிந்தராஜ், சின்னதுரை உள்பட 21 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட மாதேஷ், சாராய வியாபாரி கண்ணுக்குட்டி என்ற கோவிந்தராஜ் உள்பட 11 பேரை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் மாதேஷ் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதன் விபரம் வருமாறு:-
கடந்த 4 மாதங்களாக மெத்தனாலை வாங்கி விற்பனை செய்து வந்தேன் கள்ளக்குறிச்சி, அகரக்கோட்டை, சேஷசமுத்திரம், மாதவசேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு மெத்தனால் வாங்கி சப்ளை செய்துள்ளேன். சென்னையில் உள்ள கெமிக்கல் கம்பெனி உரிமையாளர்கள் பன்சிலால், கவுதம் ஆகியோரிடம் ஒரு பேரல் ரூ.11 ஆயிரம் என 19 பேரல் வாங்கினேன். ஒரு பேரலை 40 ஆயிரத்துக்கு விற்பனை செய்வேன்.
முதல் கட்டமாக கள்ளக்குறிச்சியில் விற்பனை செய்து அது வெற்றி பெற்றால் மற்ற மாவட்டங்களுக்கும் விற்பனை அதிகரிக்க பெரிய அளவில் திட்டமிட்டிருந்தேன்.
இதற்காக பெரிய நெட்வொர்க் வைத்து வேலை செய்து செய்து வந்தேன். ஆனால் முதல் கட்டமே தோல்வியடைந்து கள்ளக்குறிச்சியில் அதிக அளவில் உயிரிழப்பு ஏற்பட்டது.
இவ்வாறு வாக்குமூலத்தில் அவர் கூறியுள்ளார்.
சேஷசமுத்திரத்தை சேர்ந்த பிரபல சாராய வியாபாரி சின்னதுரை அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பது:-
நான் கடந்த 10 ஆண்டுகளாக கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்டு வருகிறேன். ஊர் முக்கியஸ்தர்கள் மத்தியில் சாராயம் விற்பனைக்கு ஏலம் விடப்படும். அந்த ஏலத்தை அதிக விலை கொடுத்து எடுத்து சாராய வியாபாரம் நடத்தி வந்தேன். அதன் படி கன்னுகுட்டி என்கிற கோவிந்தராஜுக்கும் பலமுறை சாராயம் சப்ளை செய்திருக்கிறேன்.
இந்நிலையில் கோவிந்தராஜன் மது பிரியர்களின் ஆசையை நிறைவேற்ற என்னிடம் மெத்தனால் கேட்டதால் அவருக்கு சப்ளை செய்தேன். மீதி மெத்த னாலை சூளாங்குறிச்சி கண்ணனிடம் பதுக்கி வைத்திருக்க சொன்னேன். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி ஏற்பட்ட உயிரிழப்பு அறிந்ததும் பயத்தில் கண்ணனிடம் இருந்து மெத்தனாலை அழிக்குமாறு கூறினேன். அவரும் கீழே கொட்டி அழித்துவிட்டார். இவ்வாறு சின்னதுரை வாக்குமூலம் அளித்துள்ளார்.
கண்ணு குட்டி என்கிற கோவிந்தராஜ் மற்றும் அவரது மனைவி விஜயா அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
நாங்கள் பல ஆண்டு களாக கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்டுவந்தோம். அப்போது எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இப்போது மது பிரியர்களின் விருப்பத்துக்கு ஏற்ப போதையை அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மெத்தனாலை வாங்கி கலந்து சாராயம் விற்பனை செய்ததில் உயிரிழப்பு ஏற்பட்டது எங்களுக்கே அதிர்ச்சி அளிக்கிறது. இதில் எங்கள் உறவினர்களும் இறந்துள்ளனர்.
பலரது உடல்நிலை பாதிக்கப்பட்டு கண்பார்வையும் இழந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் இருந்து ஜாமின் பெற்று வெளியே சென்றாலும், வழக்கு முடிந்து வீடு திரும்பினாலும் உறவினர்களின் முகத்தில் எப்படி விழிப்பது என்று நினைத்தாலே எங்களுக்கு அச்சமாக உள்ளது. இவ்வாறு அவர்கள் கண்ணீர் மல்க கூறினர்.
இவர்களது வாக்கு மூலத்தை சி.பி.சி.ஐ.டி. போலீசார் வீடியோவில் பதிவு செய்து அதனை கோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளனர்.