என் மலர்
உள்ளூர் செய்திகள்
- 10 அடி உயரம் நீர்மட்டம் உயர்ந்து வெள்ளப்பெருக்காக ஓடுகிறது.
- நல்லம்மன் கோவில் முழுவதும் நொய்யல் ஆற்று நீரால் சூழப்பட்டுள்ளது.
திருப்பூர்:
தமிழ்நாட்டின், கோவை மாவட்டத்தின், மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் உருவாகும் நொய்யல் ஆறு கிழக்கு நோக்கி பேரூர், குனியமுத்தூர், வெள்ளலூர், இருகூர், சூலூர், மங்கலம் கடந்து திருப்பூர், ஒரத்துப்பாளையம் என சுமார் 180 கிலோ மீட்டர் வந்து கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றில் கலக்கிறது.
இந்தநிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக நொய்யல் ஆற்றில் வழக்கத்திற்கு மாறாக 10 அடி உயரம் நீர்மட்டம் உயர்ந்து வெள்ளப்பெருக்காக ஓடுகிறது.

இதனால் திருப்பூர் நல்லம்மன் தடுப்பணை நிரம்பி தண்ணீர் கொட்டுகிறது. அணைப்பாளையம் தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் மேம்பாலம் வழியாக வாகனங்கள் செல்கிறது.
ஆனாலும் தரைப்பாலத்தையும் போக்குவரத்துக்கு பயன்படுத்தி வருகிறார்கள். தண்ணீர் அதிகம் செல்வதால் தரைப்பாலத்தின் இருபுறமும் தடுப்புகள் வைத்து போலீசார் வாகன போக்குவரத்தை நிறுத்தி உள்ளனர்.
நொய்யல் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் ஈஸ்வரன் கோவில் வீதியில் பாலத்துக்காக அமைக்கப்பட்ட கான்கிரீட் தூண்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
நொய்யல் ஆற்றில் தண்ணீர் அதிகம் பாய்வதால் நொய்யல் ஆற்றின் கரையோரம் உள்ள மக்களிடம் பாதுகாப்பாக இருக்குமாறு, வருவாய்த்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் மங்கலம் அருகே நொய்யல் ஆற்றில் நல்ல ம்மன் கோவில் உள்ளது. நல்லம்மண் தடுப்பணை கட்டும்போது ஏற்பட்ட இடையூறு காரணமாக தன் உயிரை தியாகம் செய்ததால் நல்லம்மன் என்ற சிறுமிக்கு அங்கு கோவில் கட்டப்பட்டுள்ளது.
இந்த கோவில் பலருக்கும் குலதெய்வ கோவிலாக இருந்து வருகிறது. இந்தநிலையில் வெள்ளப்பெருக்கு காரணமாக நல்லம்மன் கோவில் முழுவதும் நொய்யல் ஆற்று நீரால் சூழப்பட்டுள்ளது.
இதனால் கோவிலுக்கு செல்லும் பாதை தடைபட்டதால் கோவிலுக்கு பக்தர்கள் செல்வது தடைபட்டுள்ளது. மேலும் திருப்பூரில் பெய்து வரும் சாரல் மழையால் குளு, குளு சீதோஷ்ண நிலை நிலவி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
- நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
- பொள்ளாச்சி, நீலகிரி தொகுதி நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்வி அடைந்ததையொட்டி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிர் வாகிகளை சந்தித்து கருத்துகளை கேட்டு வருகிறார். பாராளுமன்ற தொகுதி வாரியாக நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த 10-ந்தேதி தொடங்கிய கருத்து கேட்பு கூட்டம் நாளையுடன் முடிகிறது. இன்று 7-வது நாளாக எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி கருத்துக்களை கேட்டறிந்தார்.
பொள்ளாச்சி, நீலகிரி தொகுதி நிர்வாகிகளை காலையில் அவர் சந்தித்து பேசினார். மாலையில் கோவை, பாராளுமன்ற தொகுதி நிர்வாகிகளிடம் கருத்து கேட்கிறார்.
தேர்தல் தோல்விக்கு நிர்வாகிகள் பல்வேறு காரணங்களை எடுத்து கூறி வருகிறார்கள். இதுவரையில் நடந்த தேர்தலில் தோல்வியை தழுவினாலும் 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகத்தை வகுத்து செயல்பட வேண்டும் என அ.தி.மு.க. நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தினார்கள்.
நிர்வாகிகளை ஊக்கப்படுத்தும் வகையில் கட்சியை வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்பேன் என்றும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பாதையில் தொண்டர்களை அரவணைத்து கட்சிக்குள் இருக்கும் ஒரு சில முரண்பாடுகளை களைந்து சீர்செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.
கூட்டணி குறித்து நல்ல முடிவு எடுத்து வருகின்ற தேர்தலில் வெற்றி வாகை சூட தேவையான அரசியல் வியூகங்கள் இப்போதே தொடங்கிவிட்டன என்று எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளிடம் உறுதிப்பட கூறியுள்ளார்.
பாராளுமன்ற தொகுதி முதல் கட்ட கருத்து கேட்பு கூட்டம் நாளை முடிகிறது. விழுப்புரம், கன்னியாகுமரி, தர்மபுரி ஆகிய தொகுதி நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசுகிறார்.
தொகுதி வாரியாக எடப்பாடி பழனிசாமி அழைத்து பேசி வருவதால் அ.தி.மு.க.வில் புதிய உத்வேகம் ஏற்பட்டுள்ளது.
- கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதால் தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகி ஹரிஹரன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
- ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மலர்க்கொடி சேகர் அதிமுக-விலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை:
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ஹரிஹரனை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்து தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.
கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதால் தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகி ஹரிஹரன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
ஹரிஹரன் ஏற்கனவே தமாகா மாநில மாணவரணி துணைத்தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டவர். தற்போது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான நிலையில் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மலர்க்கொடி சேகர் அதிமுக-விலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- வேனில் இருந்தபடி சசிகலா தொண்டர்களிடையே உரையாற்றினார்.
- சசிகலா வேனில் அ.தி.மு.க. கொடி கட்டப்பட்டிருந்தது.
தென்காசி:
தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக சசிகலா தெரிவித்திருந்தார்.
அதன்படி நேற்று மாலை தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே காசிமேஜர்புரத்தில் இருந்து தனது சுற்றுப்பயணத்தை தொடங்கினார். இரவு வரையிலும் தென்காசி சுற்றுவட்டார கிராமங்களில் வேனில் இருந்தபடி சசிகலா தொண்டர்களிடையே உரையாற்றினார். தொடர்ந்து குற்றாலம் சென்று ஓய்வெடுத்தார்.
இந்நிலையில் 2-வது நாளான இன்று மாலையில் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பிரானூர் பார்டரில் சசிகலா தனது பயணத்தை தொடங்க உள்ளார்.
தொடர்ந்து செங்கோட்டை, விஸ்வநாதபுரம், தேன்பொத்தை, பண்பொழி, அச்சன்புதூர், இலத்தூர், குத்துக்கல்வலசை, கொடிக்குறிச்சி, நயினாகரம், இடைகால், கடையநல்லூர், திரிகூடபுரம் வழியாக சொக்கம்பட்டியில் இன்றைய சுற்றுப்பயணத்தை அவர் நிறைவு செய்கிறார். இன்று மொத்தம் 17 இடங்களில் சசிகலா தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே உரையாற்றுகிறார்.
நேற்று தனது முதல் நாள் பயணத்தின்போது சசிகலா வேனில் அ.தி.மு.க. கொடியை கட்டிக்கொண்டு புறப்பட்டார். சசிகலா தனது சுற்றுப்பயணத்தில் அ.தி.மு.க. கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்தக்கூடாது என அ.தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
ஆனால் அந்த எதிர்ப்புகளை மீறி சசிகலா வேனில் அ.தி.மு.க. கொடி கட்டப்பட்டிருந்தது. மேலும் சசிகலாவின் பிரசார வாகனத்தை பின் தொடர்ந்து சென்ற வாகனங்களிலும் அ.தி.மு.க. கொடிகளே கட்டப்பட்டிருந்தது.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு ‘அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.
- குற்றாலத்தில் குளு குளு சீசன் நிலவி வருகிறது.
தென்காசி:
தமிழகத்திற்கு இன்று வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு 'அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி களில் கடந்த 4 நாட்களுக்கும் மேலாக பெய்து வரும் சாரல் மழையினால் குற்றால அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலி அருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் ஐந்தருவியில் வெள்ளப் பெருக்கு சீரானதால் நேற்று சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
மாலையில் விட்டு விட்டு சாரல் மழை பெய்தாலும் அருவிகளில் நீர்வரத்து சற்று சீராக தொடங்கியதால் ஒவ்வொரு அருவிகளிலும் படிப்படியாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
இன்று காலையில் மெயின் அருவி ஐந்தருவி பழைய குற்றாலம் என அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை விட்டு விட்டு பெய்தாலும் குற்றாலத்தில் குளு குளு சீசன் நிலவி வருவதால் சுற்றுலா பயணிகள் காலை முதலே ஆர்வமுடன் அருவிகளில் குளிக்க தொடங்கி உள்ளனர்.
மேலும் அரசு சார்பில் நடத்தப்படும் சாரல் திருவிழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்து துறை அதிகாரிகளின் ஆய்வு கூட்டம் இன்று மாலையில் மாவட்ட கலெக்டரின் தலைமையில் நடைபெற உள்ளது.
இந்த மாத இறுதி அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் சாரல் திருவிழா நடத் தப்படும் எனகூறப்படுகிறது.
- பஸ்சின் முன்பகுதி திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கி உள்ளது.
- துரித நடவடிக்கை காரணமாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை.
சித்தோடு:
சென்னை கோயம்பேட்டில் இருந்து கோவை செல்லும் தனியார் ஆம்னி பஸ் நேற்று இரவு சுமார் 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தது.
இந்த பஸ்சை டிரைவர் கார்த்திகேயன் இயக்கிய நிலையில், பயணிகளில் சிலர் ஆங்காங்கே அவர்களுக்கு தேவையான இடங்களில் இறங்கினர்.
இந்நிலையில் சுமார் 15 பயணிகளுடன் ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே செல்லும் தேசிய நெடுஞ் சாலையில், பஸ் இன்று அதிகாலை சென்று கொண்டிருந்த போது, பஸ்சின் முன்பகுதி திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் கார்த்திக் கேயன், பஸ்சை உடனடியாக சாலை யோரமாக நிறுத்திய தோடு, உள்ளே இருந்த பயணிகளுக்கு தகவல் தெரிவித்து உடனடியாக வெளியேற்றியுள்ளார். டிரைவரின் இந்த துரித நடவடிக்கை காரணமாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படாத நிலையில், பஸ் முற்றிலும் எரிந்து சேதமானது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த சித்தோடு போலீசார், தீயணைப்பு துறை வீரர்கள் உதவியுடன் பஸ்சில் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- கடந்த 2 மாதங்களாக ரேசன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் கிடைக்கவில்லை.
- ரேஷன் கடையில் பருப்பு, பாமாயில் தடையின்றி வினியோகிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழ்நாட்டில் 2 கோடியே 21 லட்சம் குடும்ப அட்டை தாரர்கள் உள்ளனர். இவர்களில் 1 கோடியே 90 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் மாதம் தோறும் ரேசன் கடைகளில் துவரம் பருப்பு, சமையல் எண்ணெயை (பாமாயில்) மிக குறைந்த விலையில் பெற்று வருகிறார்கள்.
ஏழை எளியவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு துவரம் பருப்பு, பாமாயிலை வெளி சந்தையில் அதிக விலைக்கு கொள்முதல் செய்து அவற்றை மிக மிக குறைந்த மானிய விலையில் வழங்கி வருகிறது. அதாவது துவரம் பருப்பு ஒரு கிலோ 30 ரூபாய்க்கு ரேசன் கடைகளில் வழங்கப்படுகிறது.
அதுபோல சமையல் எண்ணெய் ஒரு லிட்டர் 25 ரூபாய்க்கு கொடுக்கப்படுகிறது. கடந்த 2007-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் இந்த விலையில் இந்த இரு பொருட்களும் கிடைக்கிறது. இதனால் ஏழைகள், நடுத்தர மக்கள் மிகவும் பயன் அடைந்து வருகிறார்கள்.
கடந்த 2 மாதங்களாக ரேசன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் கிடைக்கவில்லை. இந்த பொருட்களை விரைவில் வழங்குவோம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் அடுத்த 2 மாதத்திற்கு தேவையான பாமாயில், துவரம் பருப்பை கொள்முதல் செய்ய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் டெண்டர் கோரி உள்ளது.
பாமாயில், துவரம் பருப்பு கொள்முதல் டெண்டருக்கு ஆவணங்களை சமர்பிக்க 27-ந்தேதி கடைசிநாள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
ரேஷன் கடையில் பருப்பு, பாமாயில் தடையின்றி வினியோகிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொது விநியோகத் திட்டத்தில் பருப்பு, பாமாயில் விநியோம் நிறுத்தப்பட உள்ளதாக தகவல் பரவிய நிலையில் கொள்முதல் செய்ய டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.
விரைவாக கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்யும் வகையில் குறுகிய கால டெண்டர் விடப்பட்டுள்ளது.
- படகை ஏற்றி வலையை சேதப்படுத்திவிட்டு சென்று விட்டனர்.
- வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் கூறினர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த ஆறுக்காட்டுதுறை பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.
அவர்கள் மீன்பிடி வலையை பயன்படுத்தி கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அந்த வழியே வந்த நாகை பகுதியை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் ஆறுக்காட்டுத்துறை மீனவர்களின் வலையின் மீது விசை படகை ஏற்றி வலையை சேதப்படுத்திவிட்டு சென்று விட்டனர்.
இந்த நிலையில் ஆறுக்காட்டுத்துறை மீனவ்ாகளின் வலையை விசைப்படகு மூலம் சேதப்படுத்திய நாகை மீனவர்களை கண்டித்தும், இழுவை மடி வலையை பயன்படுத்தி மீன்கள் பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆறுகாட்டுத்துறை கிராமத்தைச் சேர்ந்த பைபர் படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் தங்கள் படகுகளை கரையில் நிறுத்தி வைத்து, நேற்று முதல் கடலுக்குள் செல்லாமல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று தொடர்ந்து 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதனால் சுமார் ரூ.5 லட்சம் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் கூறினர்.
இந்நிலையில் இது தொடர்பாக இன்று மீன்வளத்துறை அதிகாரிகள் ஆறுக்காட்டுதுறை மீனவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர். இந்த தொடர் வேலை நிறுத்தத்தால் அப்பகுதியில் உள்ள மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
- நாணயத்தை முறைப்படி வெளியிட தமிழக அரசு மத்திய அரசிடம் அனுமதி கோரி உள்ளது.
- தபால் நிலையங்களில் விற்பனைக்கு வரும்
சென்னை:
மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சரான 'முத்தமிழ் அறிஞர் கலைஞர் டாக்டர் எம்.கருணாநிதி' என்ற பெயரில் ஒரு நினைவு நாணயம் வெளியிட தமிழ்நாடு அரசு விரும்பியது.
இதற்காக ரூ.100 மதிப்பில் நினைவு நாணயம் வெளியிடும்படி மத்திய நிதி அமைச்சகத்திடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த வருடம் கோரிக்கை வைத்தார்.
இந்த நாணயத்தை தயாரித்து வெளியிட மத்திய அரசு அனுமதி அளித்து கடந்த 12-ந் தேதி அதை மத்திய அரசிதழிலும் வெளியிட்டது.
ரூ.100 மதிப்புள்ள நினைவு நாணயம், அதன் அமைப்பு, உள்ளடக்கம் விலை ஆகியவை குறித்து இப்போது புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த நாணயத்தின் ஒரு பக்கம் சிங்கத்தின் தலையுடன் கூடிய அசோகதூண், சத்யமேவ ஜெயதே, பாரத் ஆகிய வார்த்தைகள் தேவநாகரி எழுத்திலும் இந்தியா என ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டிருக்கும்.
மறுபக்கம் நாணயத்தின் மையத்தில் கலைஞர் எம்.கருணாநிதி உருவப்படமும், கீழே அவர் பயன்படுத்திய தமிழ் வெல்லும் என்ற வாசகமும் இடம் பெறுகிறது.
கலைஞர் எம்.கருணாநிதி பிறந்த நூற்றாண்டு (1924-2024) என தேவநாகரி எழுத்திலும், ஆங்கிலத்திலும் இடம் பெறும்.
சுமார் 35 கிராம் எடை கொண்ட இந்த ரூ.100 நாணயத்தில் 50 சதவீதம் வெள்ளியும், 40 சதவீதம் தாமிரமும், நிக்கல் மற்றும் துத்தநாகம் முறையே தலா 5 சதவீதமும் கலந்திருக்கும் என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனால் இதன் விலை ரூ.2,500 என மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த நாணயம் அச்சிடப்பட்டு வந்தவுடன் ரிசர்வ் வங்கி விற்பனையகங்கள் மற்றும் தபால் நிலையங்களில் விற்பனைக்கு வரும் என்று மத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அதற்கு முன்னதாக இந்த நாணயத்தை முறைப்படி வெளியிட தமிழக அரசு மத்திய அரசிடம் அனுமதி கோரி ஒரு விழா நடத்தும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
- 2024-25-ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ளது.
- 2 லட்சம் மாணவ-மாணவிகளுக்கான ரேங்க் பட்டியல் வெளியிப்பட்டது.
சென்னை:
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 2024-25-ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ளது.
வருகிற 22-ந் தேதி முதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது. 2 லட்சம் மாணவ-மாணவிகளுக்கான ரேங்க் பட்டியல் வெளியிப்பட்டது. இந்த அண்டு பொறியியல் கல்லூரிகளில் கம்ப்யூட்டர் தொடர்பான பாடப் பிரிவு களில் சேர மாணவ-மாணவிகள் ஆர்வமாக உள்ளனர்.
வேலைவாய்ப்புகளுக் கான சூழல் அதிகமாக இருப்பதால் கம்ப்யூட்டர் தொடர்பான 22,248 இடங்களை கல்லூரிகள் அதிகரித்துள்ளன.
பொறியியல் கல்லூரி களில் கடந்த ஆண்டு 2 லட்சத்து 1 ஆயிரமாக இருந்த இடங்கள் இந்த வருடம் 2 லட்சத்து 3 ஆயிரமாக அதிகரித்துள்ளது. ஆனால் மெக்கானிக்கல் மற்றும் சிவில் என்ஜினீயரிங் போன்ற முக்கிய பிரிவுகளில் இந்த வருடம் 3000 இடங்கள் குறைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் கூறியதாவது:-
நல்ல உள் கட்டமைப்பு உள்ள கல்லூரிகளில் மட்டுமே தங்கள் சேர்ககையை அதிகரிக்க அனுமதிக்கப்பட்டன. இதன் மூலம் அதிக மாணவர்கள் நல்ல கல்லூரிகளில் சேர முடியும். எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ரானிக்ஸ் என்ஜினீயரிங், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் என்ஜினீயரிங், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேஷன் என்ஜினீயரிங் ஆகியவற்றில் கூடுதல் இடங்களை சேர்க்கத் தொடங்கியுள்ளன.
இந்த படிப்புகளில் 1,147 இடங்கள் அதிகரித்துள்ளது. 'சிப்' தயாரிப்பு மற்றும் உற்பத்திக்கு அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. இந்த துறைகளில் அதிக வேலை வாய்ப்புகளை எதிர்பார்த்து கல்லூரிகளில் இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டில் அண்ணா பல்கலைக் கழகத்தின் அனுமதியை பெறுவதற்கு விண்ணப்பித்த 476 கல்லூரிகளில் 223 கல்லூரிகளில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. 50 கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் ஆய்வு நடத்தப்பட்டது.
உள் கட்டமைப்பு இல்லாத கல்லூரிகளுக்கு நிபந்தனையுடன் அனுமதி வழங்க முடியு செய்துள்ளோம். இந்த கல்லூரிகள் உள் கட்டமைப்பு வசதியை பூர்த்தி செய்ததா? என்பது மீண்டும் ஆய்வு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அம்மையகரம் அரசு உயர்நிலை பள்ளிக்கு கலெக்டர் பிரசாந்த் சென்றார்.
- சின்னசேலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 2 பஞ்சாயத்து அலுவலகங்களுக்கு ஒரு அதிகாரி என நியமனம் செய்யப்பட்டு உள்ளது.
சின்னசேலம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் இன்று உங்களைத் தேடி உங்கள் ஊரில் சிறப்பு திட்ட முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சின்னசேலம் பேரூராட்சி, பூண்டி, அமையாகரம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள அரசு அலுவலகங்கள்,ரேஷன் கடை கிராம நிர்வாக அலுவலகங்கள், இ-சேவை மையம் உள்ளிட்ட அரசு அலுவலர்களில் பணிகள் எவ்வாறு நடைபெறுகிறது என்பது குறித்து கலெக்டர் பிரசாந்த் ஆய்வு மேற்கொண்டார்.
அம்மையகரம் அரசு உயர்நிலை பள்ளிக்கு கலெக்டர் பிரசாந்த் சென்றார். அப்போது அப்பள்ளியில் 6-ம் வகுப்பில் ஆங்கில பாடம் நடைபெற்று கொண்டிருந்தது. அதனை மாணவர்களுடன் அமர்ந்து கலெக்டர் பிரசாந்த் கவனித்தார். மேலும் பள்ளியிலும் ஆய்வு மேற்கொண்டார்.
இன்று மாலை 4.30 மணியிலிருந்து 6 மணி வரை சின்னசேலம் தாலுக்கா அலுவலகத்தில் சின்னசேலம் பேரூராட்சி மற்றும் பூண்டி ஊராட்சிக்கு உட்பட்ட பொதுமக்களிடம் மனுக்களை வாங்குகிறார்.
சின்னசேலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 2 பஞ்சாயத்து அலுவலகங்களுக்கு ஒரு அதிகாரி என நியமனம் செய்யப்பட்டு உள்ளது. அந்த அதிகாரியிடம் மாலை கிராம மக்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பஞ்சாயத்து அலுவலகத்திற்கு சென்று தங்களுடைய குறைகளை மனுக்களாக கொடுக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
- பல இடங்களில் மண்சரிவு மற்றும் மரங்களும் முறிந்து விழுந்து வருகின்றன.
- விவசாய நிலங்களையும் தண்ணீர் சூழ்ந்து பயிர்கள் சேதம்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கடந்த சில தினங்களாக மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது.
மாவட்டத்தில் பெய்யும் கனமழையால் பல இடங்களில் மண்சரிவு மற்றும் மரங்களும் முறிந்து விழுந்து வருகின்றன.
கூடலூர் பகுதியில் பெய்து வரும் மழையால் தொரப்பள்ளி, இருவயல், பாடந்தொரை, குற்றிமுற்றி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. அங்குள்ள விவசாய நிலங்களையும் தண்ணீர் சூழ்ந்து பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.
கூடலூர்-மசினகுடி செல்லும் சாலையில் மாயாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் தெப்பக்காடு தரைப்பாலம் நீரில் மூழ்கியது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து தடை பட்டது.
தரைப்பாலம் மூழ்கியதால் மசினகுடி ஊராட்சியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
கூடலூர் கோக்கால் பகுதியில் சாலைகள் மற்றும் தெருக்களில் விரிசல்கள் அதிகரித்துள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். அங்குள்ள முதியோர் காப்பகம் மற்றும் வீடுகளில் சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டது.
இருவயல் கிராமத்தை தொடர்ந்து வெள்ளம் சூழ்ந்துள்ளது. அங்குள்ள 13 குடும்பத்தை சேர்ந்த 48 பேர் மீட்கப்பட்டு தொரப்பள்ளி அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளியில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பந்தலூர், சேரம்பாடி திருவள்ளுவர் நகர் பகுதியில் மழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டுள்ளதுடன், குடியிருப்புகள் முன்பு விரிசலும் ஏற்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.
கனமழையால் ராஜகோபாலபுரம் புதுக்காலனியில் மண்சரிவு ஏற்பட்டது. நெலாக்கோட்டை அடுத்த விலாங்கூர் கிராமத்தில் மழைக்கு மதரசா கட்டிடம் விழுந்து சேதமானது.
எருமாடு அருகே சிறைச்சாலை பகுதியில் இருந்து வெள்ள கட்டு என்ற இடத்திற்கு செல்லும் சாலையில் மண்சரிவு ஏற்பட்டு சாலை முழுவதுமாக மூடியது. இதனால் அங்குள்ள மக்கள் வெளியிடங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மழை காரணமாக பல இடங்களில் மண்சரிவுகளும் ஏற்பட்டது.
ஊட்டி அருகே உள்ள இத்தலார் கிராமத்தில் குடியிருப்புகளுக்கு நடுவே பெரிய அளவிலான மண்சரிவு ஏற்பட்டது. ஊட்டியில் இருந்து எமரால்டு செல்லும் சாலை, முத்தோரை பாலடாவில் இருந்து லவ்டேல் செல்லும் சாலையிலும் பெரிய அளவில் மண்சரிவு ஏற்பட்டது.
அப்பர் பவானியில் விடிய, விடிய பெய்த மழைக்கு அங்குள்ள மின்வாரிய ஓய்வு விடுதிக்கு செல்லும் சாலையில் மண்சரிவு ஏற்பட்டது. சாலையின் ஒரு பகுதியில் பிளவு ஏற்பட்டு மண் திட்டு சரிந்து விழுந்தது.
பாலடா அருகே பைகமந்து ஒசட்டி பகுதியில் சாலையோர மண்திட்டு சரிந்து நடுரோட்டில் விழுந்தது. சாலையோரம் இருந்த மின் கம்பமும் சாய்ந்ததால் உடனடியாக மின்சாரம் நிறுத்தப்பட்டு, சீரமைப்பு பணிகள் நடந்தது.
இத்தலார், அவலாஞ்சி சுற்றுப்புற பகுதிகளில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
மஞ்சூர் கிண்ணக்கொரை சாலையில் 3 இடங்கள், பிக்கட்டி, மணியட்டி, அட்டுபாயில் ஆகிய பகுதிகளில் 3 என மொத்தம் 6-க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, குந்தா, கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு உத்தரவிட்டுள்ளார்.
மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-
அவலாஞ்சி-204, எமரால்டு-123, அப்பர் பவானி-106, கூடலூர்-72, அப்பர் கூடலூர்-71, தேவாலா-68, நடுவட்டம்-63, செருமுள்ளி-56, பாடந்தொரை-52.






