என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • பதிவு பெற்ற வணிகர்களின் எண்ணிக்கை 88,219 ஆக அதிகரித்துள்ளது.
    • வணிகர்களுக்கும் அரசுக்கும் இடையே இடைத்தரகர்கள் கிடையாது.

    சென்னை:

    சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு வணிகர் நல வாரிய உறுப்பினர்களின் முதல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முதலமைச்சர் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * கலைஞர் கருணாநிதியால் தொடங்கப்பட்ட வணிகர் நலவாரியம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    * வணிகர் நல வாரிய உறுப்பினர்களின் எண்ணிக்கையை 30 ஆக திமுக அரசு உயர்த்தியது.

    * 40,000-க்கும் மேற்பட்ட புதிய உறுப்பினர்கள் தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தில் இணைந்துள்ளனர்.

    * பதிவு பெற்ற வணிகர்களின் எண்ணிக்கை 88,219 ஆக அதிகரித்துள்ளது.

    * வணிகர்களுக்காக பல முக்கியமான நடவடிக்கைகளை முன்னெடுக்க தயாராக உள்ளோம்.

    * வணிகர்களுக்கும் அரசுக்கும் இடையே இடைத்தரகர்கள் கிடையாது.

    * தமிழில் பெயர் பலகை வைக்க வணிகர்கள் முன் வரவேண்டும்.

    * நலிவுற்ற வணிகர்களுக்கு பெட்டிக்கடை வைக்கவும், 3 சக்கர வாகனம் வழங்க ரூ.10,000 வழங்கப்படுகிறது.

    * வணிகர் நல வாரிய உறுப்பினர்கள் உயிரிழந்தால் குடும்பத்திற்கு வழங்கப்படும் நிதி ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என்று கூறினார்.

    • இலங்கை கடற்படைக்கு சொந்தமான 2 குட்டி ரோந்து கப்பல்கள் அதிவேகமாக மீனவர்களின் படகுகளை நோக்கி வந்தது.
    • ஒரு மீனவர் குறித்து எந்தவொரு விபரமும் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ராமேசுவரம்:

    பாக் ஜலசந்தி, மன்னார் குளைகுடா பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசி வருவதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று கடந்த 15-ந்தேதி இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதையடுத்து மீனவர்கள் படகுகளை கரையோரம் நிறுத்தி வைத்திருந்தனர்.

    இதற்கிடையே கடலில் காற்றின் வேகம் குறைந்ததையடுத்து மண்டபம் பகுதி மீனவர்கள் நேற்று முன்தினமும், நேற்று காலை ராமேசுவரம் மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அதன்படி ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து நேற்று காலை 497 விசைப்படகுகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    இன்று அதிகாலையில் பெரும்பாலான படகுகள் இந்திய கடல் எல்லையை ஒட்டிய கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே வலைகளை விரித்து மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படைக்கு சொந்தமான 2 குட்டி ரோந்து கப்பல்கள் அதிவேகமாக மீனவர்களின் படகுகளை நோக்கி வந்தது.

    இதைப்பார்த்து அச்சமடைந்த மீனவர்கள் கடலில் விரித்திருந்த வலைகளை சுருட்டிக் கொண்டு அங்கிருந்து புறப்பட தயாரானார்கள். ஆனாலும் ஒரு சில படகுகளில் இருந்த மீனவர்கள் மீது அவர்களின் படகுக்குள் தாவிக்குதித்த இலங்கை கடற்படையினர் சரமாரியாக தாக்குதல் நடத்தி மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர்.

    இந்த கொடூரதாக்குதலின் உச்சக்கட்டமாக ஈஸ்டர் ஆரோக்கியதாஸ் என்பவரது விசைப்படகு மீது தங்களது பலம் வாய்ந்த ரோந்து கப்பலை வைத்து மோதி படகை உடைத்து சேதப்படுத்தினர். இதில் படகில் இருந்த 5 மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக அவர்களின் பிடியில் இருந்து உயிர் தப்பி கரைக்கு வந்து சேர்ந்தனர்.

    மேலும் ஈசாக் ராபீன், செல்வக்குமார் ஆகியோருக்கு சொந்தமான இரண்டு விசைப்படகுகளை சுற்றி வளைத்த கடற்படையினர் அதில் இருந்த சகாய ராபர்ட் (வயது 49), ராதா (44), முத்துராமலிங்கம் (51), யாக்கோப்பு (24), ஹரி கிருஷ்ணன் (50), இவரது மகன்கள் பொன்ராமதாஸ் (26), ராம்குமார் (24), லிபின்ராஜ் உள்ளிட்ட 9 மீனவர்களை கைது செய்து காங்கேசம் துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர்.

    இரண்டு படகுகள் மற்றும் அதில் பிடித்து வைத்திருந்து மீன்களை பறிமுதல் செய்தனர். மேலும் 9 மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்கு பதிவு செய்யும் பணியில் இலங்கையில் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். மீன்பிடிக்க சென்ற 9 மீனவர்களில் 8 மீனவர்கள் குறித்த விபரம் மட்டுமே உள்ளது. ஒரு மீனவர் குறித்து எந்தவொரு விபரமும் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில், மீனவ சங்கத்தலைவர் சாகயம் கூறியதாவது:-

    ராமேசுவரத்தில் மீன்பிடி தடைகாலம் நிலைவடைந்து மீன்பிடிக்க சென்ற நிலையில் ராமேசுவரம் மீனவர்கள் 22 பேருடன் மூன்று படகுகள் பறிமுதல், இதன் பின்னர் பாம்பன், நம்பு தாளை மீனவர்கள் 25 பேருடன் நான்கு நாட்டுப்படகு பறிமுதல் செய்யப்பட்டது. இந்தநிலையில் இன்று 9 மீனவர்களுடன் இரண்டு படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இலங்கை கடற்படையினர் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதுடன் மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன் என்றார். படகுகளையும், மீனவர்களையும் மீட்கவில்லையென்றால் ராமேசுவரத்தில் மீன்பிடி தொழில் முடங்கி விடும் எனவும் அவர் ஆதங்கம் தெரிவித்தார்.

    • தீவிரமாக கண்காணிக்க பொதுசுகாதாரத்துறை உத்தரவு.
    • எல்லைகளில் மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது.

    கோவை:

    கேரள மாநிலம் மலப்புரத்தில் நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக 14 வயது சிறுவன் உயிரிழந்தான். மேலும் அங்கு 60 பேருக்கும், பாலக்காடு மாவட்டத்தில் 2 பேருக்கும் நிபா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

    தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழம்-கேரளா எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டுமென பொதுசுகாதாரத்துறை உத்தரவிட்டு உள்ளது.

    அதன்படி கோவை-கேரளா எல்லையில் வாளை யார், வேலந்தாவளம், மேல்பாவி, முள்ளி, மீனாட்சி புரம், கோபாலபுரம், செம்மனாம்பதி, வீரப்பகவு ண்டன்புதூர், நடுப்புணி, ஜமீன்காளியாபுரம், வடக்காடு உள்ளிட்ட 13 சோதனைச்சாவடிகளில் சுகாதாரத்துறை ஊழியர்கள் சிறப்பு தற்காலிக முகாம் அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கேரளாவில் இருந்து கோவைக்கு கார், பஸ் மற்றும் வாகனங்களில் வருவோருக்கு நிபா காய்ச்சல் பாதிப்பு இருக்கிறதா என மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது.

    இதில் அவர்களுக்கு நிபா வைரஸ் அறிகுறிகள் இல்லை என்பது உறுதிசெய்யப்பட்ட பின்னரே சம்பந்தப்பட்ட வாகனங்கள் கோவைக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன.

    மேலும் நிபா வைரஸ் தாக்கம் குறையும்வரை தமிழக மக்கள் கேரளாவுக்கு தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாமென கோவை சுகாதார த்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    நிபா வைரஸ் காய்ச்சல் என்பது வவ்வால்கள் மூலம் பரவக்கூடியது. அவை உட்கொள்ளும் பழங்கள், சிறுநீர், உமிழ்நீர், கழிவுகள் ஆகியவை மூலம் தொற்று பரவும் வாய்ப்பு உள்ளது. தீராத காய்ச்சல், இருமல், தலைவலி, வயிற்றுப்போக்கு, மூச்சு திணறல், மனநிலை பிரச்சினை ஆகியவை நிபா வைரசின் முக்கிய அறிகுறிகள் ஆகும்.

    இதுகுறித்து கோவை மாவட்ட சுகாதார அதிகாரி அருணா கூறியதாவது:-

    கேரளாவில் நிபா வைரஸ் பரவலை தொடர்ந்து கோவை மாவட்டத்தில் உள்ள 13 சோதனைச்சாவடிகளிலும் சுகாதாரக்குழு நியமிக்க ப்பட்டு அங்கு 24 மணிநேரமும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மேலும் கேரளாவில் இருந்து தமிழகத்துக்குள் நுழையும் வாகனங்கள் கிருமிநாசினி மூலம் தூய்மை செய்யப்படுகிறது.

    நிபா வைரஸ் தொற்று ஏற்பட்ட நபரின் உமிழ்நீர், சிறுநீர், சளி மூலமாக மற்றவர்களுக்கு நோய் பரவும் ஆபத்து உள்ளது. எனவே மாவட்டத்தின் அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் நிபா வைரஸ் அறிகுறியுடன் சிகிச்சைக்கு வருவோர் பற்றிய விவரங்களை தெரிவிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

    இதுதவிர கோவை மாவட்டம் முழுவதும் நிபா வைரஸ் தொடர்பாக தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை யாருக்கும் பாதிப்பு கண்டறியப்படவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வந்தது.
    • குடியிருப்புகளின் கூரைகள் காற்றில் பறந்தது.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்து வந்தது. கடந்த 2 நாட்களாக மழை சற்று குறைந்திருந்தது.

    அதேவேளையில் காற்றின் வேகம் அதிகரித்து சூறாவளி காற்று வீசி வருகிறது. இன்றும் பலத்த சூறாவளி காற்று வீசியது. குறிப்பாக குன்னூர், ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில் வரலாறு காணாத காற்று வீசுகிறது. இதனால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுவது, வீடுகளின் மேற்கூரைகளும் காற்றில் தூக்கி வீசப்பட்டுள்ளன.

    காற்றின் வேகத்தால் ஊட்டி அருகே உள்ள கோவில்மேடு பகுதியில் வீடுகளின் மேற்கூரை பெயர்ந்து, கூரை ஓடுகள் காற்றில் தூக்கி வீசப்பட்டு தரையில் கிடக்கின்றன. 40-க்கும் மேற்பட்ட வீடுகளின் கூரைகள் சேதம் அடைந்துள்ளன.

    குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கொலக்கம்பை, சேலாஸ், கோடேரி, கைகாட்டி, வண்டிச்சோலை, பாரத் நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த சூறாவளி காற்று வீசியது. இதன் காரணமாக குடியிருப்புகளின் கூரைகள் காற்றில் பறந்தது.

    குறிப்பாக காமராஜர் புரம் பகுதியில் ஊராட்சி சார்பில் கொடுக்கப்பட்ட தொகுப்பு வீடுகளின் மேற்கூரையும் காற்றில் பறந்தன. குன்னூர் சுற்றுவட்டாரத்தில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்துள்ளன.

    உபதலை, மேல்பாரத் நகர், சப்ளை டிப்போ, பழைய அருவங்காடு உள்பட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.

    மரங்கள் விழுந்த பகுதிகளில் குன்னூர் தாசில்தார் கனி சுந்தரம் மேற்பார்வையில் வருவாய்த்துறையினர், தீயணைப்பு நிலைய அலுவலர் குமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மரங்களை அகற்றி அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

    சின்ன வண்டிச்சோலை பகுதியில் 3 மின் கம்பங்கள் அடுத்தடுத்து சாய்ந்ததால் அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது. மின்வாரிய ஊழியர்கள் 5 மணி நேரம் போராடி சீரமைத்தனர்.

    காத்தாடி மட்டம் அருகே சாலையில் நின்றிருந்த ராட்சத மரம் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது. அப்போது மரத்தின் கீழே இருந்த கோவில் சேதம் அடைந்தது. குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின் கம்பிகள் மீது மரக்கிளைகள் தொடர்ந்து விழுந்து வருவதால், அவ்வப்போது மின்தடையும் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்துள்ளனர்.

    குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் வீசிய சூறவாளி காற்றுக்கு, பல ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கொய்மலர் சாகுபடி குடில்கள் காற்றில் தூக்கி வீசப்பட்டு சேதம் அடைந்தன. பல இடங்களில் குடில்களின் பிளாஸ்டிக்குகள் கிழிந்துள்ளதால் மலர் சாகுபடி தொழிலை மேற்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கொய்மலர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    கோத்தகிரி சுற்றுவட்டார பகுதியில் வீசிய பலத்த காற்றுக்கு, கோத்தகிரியில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையின் மேற்கூரை காற்றில் பறந்தது. இந்த பணிமனை தற்போது தான் புதிதாக கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வீசி வரும் சூறவாளி காற்றுக்கு மாவட்டம் முழுவதும் 70க்கும் மேற்பட்ட இடங்களில் சிறியது முதல் பெரிய அளவிலான மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்துள்ளன.

    இதேபோல் 50-க்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரைகளும் காற்றில் பறந்து சேதம் அடைந்துள்ளது. ஊட்டி, குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் 5 இடங்களில் டிரான்ஸ்பார்மர்களும் கீழே விழுந்து சேதம் அடைந்துள்ளன. ஊட்டி, குன்னூர், மஞ்சூர், கோத்தகிரி, கூடலூர், பந்தலூர் உள்பட பல்வேறு இடங்களில் 150க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் ஆங்காங்கே விழுந்து மின் வினியோகம், குடிநீர் வினியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து வீசி வரும் பலத்த சூறாவளி காற்று காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. காற்று தொடர்ந்து வீசுவதால் பாதிப்புகள் மேலும் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • கடலூர் மாநகராட்சியில் முதல் பெண் மேயராக சுந்தரி ராஜா பதவி ஏற்றார்.
    • தமிழகம் முழுவதும் மாநகராட்சிக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

    கடலூர்:

    கடலூர் நகராட்சியாக இருந்து வந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து கடந்த 2022-ம் ஆண்டு மாநகராட்சி தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் கடலூர் மாநகராட்சியில் முதல் பெண் மேயராக சுந்தரி ராஜா பதவி ஏற்றார். கடலூர் நகராட்சி மாநகராட்சியாக மாற்றப்பட்டதால் கலெக்டர் பொறுப்பில் உள்ளவர்கள் நியமிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக பலர் ஆணையாளராக நியமிக்கப்பட்டனர். அதன்படி கடந்த ஆணையராக காந்திராஜ் இருந்தார்.

    நேற்று தமிழகம் முழுவதும் மாநகராட்சிக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். அதன்படி கடலூர் மாநகராட்சி ஆணையாளராக ஐ.ஏ.எஸ்.பொறுப்பில் உள்ள அனு என்பவரை தமிழக அரசு நியமித்தது.

    கடலூர் மாநகராட்சிக்கு முதல் முறையாக ஐ.ஏ.எஸ். பொறுப்பில் உள்ள அனு நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலூர் மாவட்ட புதிய கலெக்டராக சிபி ஆதித்யா செந்தில்குமார் தமிழக அரசால் நியமிக்கப்பட்டார். அவர் பொறுப்பேற்று உள்ள நிலையில் அவரது மனைவி அனு கடலூர் மாநகராட்சியில் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

    • வெள்ளி விலையும் குறைந்துள்ளது.
    • பார் வெள்ளி ரூ.95,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.80 குறைந்த நிலையில் இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது.

    தங்கம் கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ. 6,810-க்கும் சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.54,480-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு 40 பைசாக்கள் குறைந்து ரூ.95.60-க்கும் கிலோவுக்கு ரூ.400 குறைந்து பார் வெள்ளி ரூ.95,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    • ஆண்டு தோறும், 9.25 லட்சம் வரை குழந்தைகள் பிறக்கின்றன.
    • பிக்மி இணையதளத்தில் பதிவு செய்தல் அவசியம்.

    சென்னை:

    தமிழகத்தில் ஆண்டு தோறும், 9.25 லட்சம் வரை குழந்தைகள் பிறக்கின்றன. அனைத்து கா்ப்பிணிகளும், பேறு காலத்தில் தாய்சேய் ஒருங்கிணைந்த கண்காணிப்புக்கான, 'பிக்மி' இணையதளத்தில் பதிவு செய்தல் அவசியம். இவ்வாறு பதிவு செய்பவா்களுக்கு, 'ஆா்.சி.ஹெச். ஐ.டி.,' என்ற தாய்சேய் நல அடையாள எண் வழங்கப்படுகிறது.

    இந்த பிக்மி பதிவு, ஆரம்ப சுகாதார நிலையங்களில் கிராம அல்லது நகர சுகாதார செவிலியா் வாயிலாக பதிவு செய்யப்படுகிறது. இந்த நடைமுறையை மாற்றி, கா்ப்ப காலத்தை, கா்ப்பிணிகள் தாங்களாகவே, இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளும் நடைமுறை கொண்டு வரப்பட்டது.

    ஆனால், தொடா்ந்து செவிலியா்கள் வாயிலாக பதிவு செய்யும் முறையைத்தான் பலா் பின்பற்றி வருகின்றனா். இதனால், கா்ப்பிணிகள் தாங்களாகவே பதிவு செய்தல் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்த, பொது சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.

    இதற்காக, 2,681 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், 27-ந்தேதி வரை காலை 9 முதல் மாலை 5 மணி வரை சென்று பதிவு செய்யும் முறை குறித்து அறிந்து கொள்ளும் முகாம் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    கா்ப்பிணிகள் தங்களது கைப்பேசி அல்லது கணினி வாயிலாக https://picme3.tn.gov.in என்ற இணைய தளத்தில், ஆதாா் அட்டை, கா்ப்பம் உறுதி செய்த ஆவணங்களை பதிவு செய்து, நிரந்தர தாய் சேய் அடையாள எண் பெறலாம். இந்த எண் நிரந்தரமானது. மற்றொரு குழந்தைக்கும் இந்த எண்ணை பயன்படுத்தி கொள்ளலாம்.

    அதேபோல், மகப்பேறு நிதியுதவி பெற விரும்புவோா், பட்டியலினத்தவா், பழங்குடியினா், மாற்றுத்திறனாளிகள், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்ப அட்டை, மத்திய, மாநில மருத்துவ காப்பீடு திட்டம் உள்ளிட்ட 14 ஆவணங்களில் ஒன்றை சமர்ப்பித்து பதிவு செய்யலாம்.

    அவ்வாறு பதிவு செய்பவா்களுக்கு, முதல் தவணை யாக கா்ப்பகாலத்தின் 4-வது மாதத்தில் ரூ. 6 ஆயிரம், 2-ம் தவணையாக குழந்தை பிறந்த 4-வது மாதத்தில் ரூ. 6 ஆயிரம், 3-ம் தவணையாக குழந்தையின் 9-வது மாதத்தில் ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும்.

    மேலும், கா்ப்பகாலத்தில் ரூ. 2 ஆயிரம் மதிப்புள்ள 2 ஊட்டச்சத்து பெட்டகம் என ரூ. 18 ஆயிரம் முதல் 2 குழந்தைகளுக்கு வழங்கப்படும்.

    இத்தொகை, ஆதாருடன் இணைந்த வங்கி சேமிப்புக் கணக்கில் மட்டுமே செலுத்தப்படும். இதுகுறித்து, கா்ப்பிணிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவா்கள் தெரிவித்தனா்.

    • தன்னை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்த ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கமலா ஹாரிஸ் நன்றி தெரிவித்துள்ளார்.
    • கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பதை தொடர்ந்து துளசேந்திரபுரம் கிராம மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

    அமெரிக்காவில் வருகிற நவம்பர் 5-ந் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் ஜனாதிபதி ஜோ பைடனும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டிரம்பும் போட்டியிடுவதாக அறிவித்தனர். அதன்படி இருவரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    ஆனால் ஜனாதிபதி ஜோ பைடனின் நடவடிக்கைகள் சமீப காலமாக விமர்சனத்துக்குள்ளாகின. குறிப்பாக நேரடி விவாதத்தின்போது டிரம்பின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறியது, உக்ரைன் அதிபரை புதின் என குறிப்பிட்டது மற்றும் மனைவி என்று நினைத்து வேறொரு பெண்ணுக்கு முத்தம் கொடுக்க முயன்றது போன்றவை பெரும் சர்ச்சையை கிளப்பியது.

    இதனையடுத்து ஜனாதிபதி தேர்தல் போட்டியில் இருந்து அவர் விலக வேண்டும் என சொந்த கட்சியினரே கூறி வந்தனர். ஆனால் அவர் தேர்தலில் போட்டியிடுவேன் என பிடிவாதமாக இருந்து வந்தார். இதற்கிடையே அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் டெலாவரில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்தநிலையில் ஜனாதிபதி தேர்தல் போட்டியில் இருந்து தான் விலகுவதாக ஜோ பைடன் அறிவித்தது அமெரிக்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக இந்திய வம்சாவளியும், துணை ஜனாதிபதியுமான கமலா ஹாரிசின் பெயரை அவர் முன்மொழிந்தார்.

    இவரது இந்த அறிவிப்புக்கு ஜனநாயக கட்சியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர். இதனையடுத்து தன்னை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்த ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கமலா ஹாரிஸ் நன்றி தெரிவித்துள்ளார்.

    இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் பூர்வீகம் திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராமம் ஆகும். ஆங்கிலேய அரசாங்கத்தில் இவரது தாத்தா பி.வி.கோபாலன் ஸ்டெனோகிராபராக பதவி வகித்துள்ளார். அதன் தொடர்ச்சியாக சிவில் சர்வீஸ் அதிகாரியாகவும் பணியாற்றி இருக்கிறார்.

    ஷாம்பியா நாட்டுக்கு அகதிகளை கணக்கெடுக்க ஆங்கிலேய அரசாங்கம் பி.வி.கோபாலனை அனுப்பி வைத்திருந்தது. அப்போது ஷாம்பியா நாட்டுக்கு குடும்பத்தோடு சென்று பின்னர் அமெரிக்காவில் பி.வி கோபாலன் குடியேறி உள்ளார். இவரது இரண்டாவது மகளான சியாமளாவுக்கும் ஜமைக்கா நாட்டை சேர்ந்தவருக்கும் பிறந்தவர் தான் இந்த கமலா ஹாரிஸ்.

    இவர் முன்பு வழக்கறிஞராக பணியாற்றினார். அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு கலிபோர்னியாவின் முதல் பெண் உறுப்பினராகவும் அவர் பதவி வகித்து வந்துள்ளார். நீண்ட நாட்களாக அரசியலில் இருந்து வளர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    இந்த நிலையில் கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பதை தொடர்ந்து துளசேந்திரபுரம் கிராம மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மேலும், கமலா ஹாரிஸ் வெற்றி பெற்று துளசேந்திரபுரம் கிராமத்திற்கு வருகை தந்து மக்களை சந்திக்க வேண்டும் எனவும் இந்தியாவிற்கு உறுதுணையாக அவர் பணியாற்ற வேண்டும் என கிராம மக்கள் தெரிவித்தனர்.

    மேலும் கமலா ஹாரிஸ் வெற்றி பெற கிராம மக்கள் ஒன்றிணைந்து கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

    • 'ஆல் இந்தியா பாட்டில் அசோசியேஷன்' சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
    • அரசுக்கு வருமானம் வரக்கூடிய டெண்டரை நான்கு மாதங்களுக்கும் மேலாக நிறுத்தி வைத்துள்ளது ஏன்?

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    உயர்நீதிமன்ற ஆணைப்படி, டாஸ்மாக் நிறுவனம் காலி பாட்டில்களை டெண்டர் விட்டு திரும்பப் பெற வேண்டும்; அதன்மூலம் அரசுக்கு வருவாய் அதிகரிக்கும். ஆனால், இந்த விடியா திமுக அரசு பதவியேற்றது முதல் டாஸ்மாக்கில் காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை செயல்படுத்தாத காரணத்தால், தமிழ்நாடு அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு சுமார் 200 கோடி ரூபாய் வரை வருமான இழப்பு ஏற்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே, ஆளும் கட்சியினர் சிண்டிகேட் அமைத்து முறைகேடாக டாஸ்மாக் பார் நடத்துவதால், அரசுக்கு ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.

    உயர்நீதிமன்ற ஆணைப்படி நீலகிரி, திண்டுக்கல், கோவை வடக்கு, கோவை தெற்கு, தேனி, நாகப்பட்டினம், நாகர்கோவில், தருமபுரி, பெரம்பலூர், அரியலூர் என்று சில குடோன்களில் படிப்படியாக காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை

    அரசு நடைமுறைப்படுத்தியது. ஆனால், மற்ற மாவட்ட குடோன்களுக்கு காலி பாட்டில்களை திரும்பப் பெறுவதற்கான டெண்டரை கோராமல் இந்த அரசு காலதாமதம் செய்தது.

    எனவே, காலி பாட்டில்களை திரும்பப் பெறுவதற்கான திட்டத்தை அமல்படுத்த வேண்டி 'ஆல் இந்தியா பாட்டில் அசோசியேஷன்' சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த நீதிபதிகள், வருமானம் வரக்கூடிய திட்டத்தை செயல்படுத்த ஏன் தாமதம் என்றும், யார் அதிக விலைக்கு டெண்டர் கோரியுள்ளனரோ அவர்களுக்கு டெண்டரை வழங்கவும் அறிவுறுத்தியது.

    அதனைத் தொடர்ந்து, டாஸ்மாக் நிறுவனம் இந்தாண்டு பிப்ரவரி மாதம் 17-ஆம் தேதி காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தின்கீழ் ஒப்பந்தப் புள்ளி கோரியது. அதன் அடிப்படையில் டாஸ்மாக் நிபந்தனையின்படி, உரிய சான்றிதழ்களுடன் ஒவ்வொரு டாஸ்மாக் குடோனுக்கும் 2 லட்சம் ரூபாய் வீதம் முன்வைப்புத் தொகை செலுத்தி டெண்டரில் பலர் கலந்துகொண்டதாகவும், பிப்ரவரி மாதம் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளிலேயே 'டெக்னிக்கல் பிட்டை' அதிகாரிகள் திறந்துவிட்டதாகவும், ஆனால், டெண்டர் போட்டவர்களிடம் பேரம் படியாததால், 'பைனான்ஸ் பிட்டை' திறக்காமல் கடந்த 5-ஆம் தேதி டெண்டரை ரத்து செய்துவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    அரசு நடத்தும் டாஸ்மாக் கடைகளிலிருந்து மதுபானங்களை வாங்கிக் குடித்துவிட்டு விவசாய நிலங்கள், காலி மனைகள், பூங்காக்களில் மறைவான இடங்கள், சுற்றுலாப் பகுதிகள் என்று அனைத்துப் பகுதிகளிலும் காலி பாட்டில்களை தூக்கி எறிந்து, அவை உடைந்து சுற்றுலாப் பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும், குறிப்பாக பாதசாரிகளுக்கும் பெரும் பாதிப்பை 'குடிமகன்கள்' ஏற்படுத்தி வரும் நிலையில், அரசுக்கு வருமானம் வரக்கூடிய இந்த டெண்டரை நான்கு மாதங்களுக்கும் மேலாக நிறுத்தி வைத்துள்ளது ஏன்?

    ஏற்கெனவே, டாஸ்மாக் பார்களை சிண்டிகேட் அமைத்து, முழுமையாக ஏலம் விடாமலும், டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிக விலை வைத்துவிற்பதாகவும், சந்துக் கடைகளின் மூலம் திருட்டுத்தனமாக மதுபானங்கள் விற்கப்படுவதாகவும், இதனால் அரசுக்கு வரக்கூடிய கோடிக்கணக்கான ரூபாய் வருமானம் ஒருசிலரின் பாக்கெட்டுகளுக்கு சென்றுவிடுகிறது என்றும்; டாஸ்மாக் அதிக ஊழல் நிறைந்த துறையாக செயல்படுகிறது என்று குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், மூன்று ஆண்டுகளாக காலி பாட்டில்களை ஏலம் விடாமல் அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி வரும் இச்செயல், அக்குற்றச்சாட்டுகளில் உண்மை உள்ளது போல் இருக்கிறது.

    ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், காலி பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தைச் செயல்படுத்தாமல் அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். உடனடியாக காலி பாட்டில்களை திரும்பப் பெறுவதற்கான டெண்டரை விட்டு, சட்டவிதிகளின்படி அதிக விலை கோரியவர்களுக்கு முறைப்படி ஒப்பந்தம்விட்டு, அரசின் வருவாயை அதிகரிப்பதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    • அணையில் இருந்து வினாடிக்கு 13 ஆயிரத்து 452 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    • அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    மேட்டூர்:

    கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருவதால் அங்குள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகள் நிரம்பியது. இதையடுத்து அந்த அணைகளுக்கு வரும் தண்ணீர் உபரிநீராக காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இன்று காலை நிலவரப்படி கிருஷ்ணராஜசாகர் அணை நீர்மட்டம் 122.85 அடியாக இருந்தது.

    அணைக்கு வினாடிக்கு ௪௦ ஆயிரத்து 29 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 45 ஆயிரத்து 327 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதேபோல் கபினி அணையின் நீர்மட்டம் 83.30 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 20 ஆயிரத்து 386 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கறது.

    அணையில் இருந்து வினாடிக்கு 13 ஆயிரத்து 452 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 2 அணைகளில் இருந்தும் மொத்தம் 58ஆயிரத்து 779 கனஅடி தண்ணீர் தமிழகத்துக்கு காவிரியில் திறக்கப்பட்டு உள்ளது. இந்த தண்ணீர் தொடர்ந்து தமிழகத்துக்கு வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டமும் வேகமாக நிரம்பி வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 82 அடியை எட்டி இருந்தது.

    அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 79ஆயிரத்து 682 கனஅடியாக அதிகரித்து காணப்பட்டது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
    • சிலர் விதிமுறையை பின்பற்றாமல் ஸ்டைலாக ஹெல்மெட்டை வாகனத்தில் வைத்து பயணிப்பார்கள்.

    சென்னையில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த, இரு சக்கரவாகனத்தில் பயணிக்கும் வாகன ஓட்டுநர் மற்றும் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்கள் என இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும் என்ற விதிமுறை உள்ளது.

    ஹெல்மெட் இருவருக்கும் கட்டாயம் என்ற விதி பல ஆண்டுகளாக இருந்தாலும், பின்பற்றுபவர்கள் குறைவாக உள்ளனர். சமீப காலங்களில் சென்னை நகரத்தில் அதிகரித்துவரும் இருசக்கரவாகன ஓட்டிகளின் உயிரிழப்புகளை கருத்தில் கொண்டு, ஹெல்மெட் இருவருக்கும் கட்டாயம் என்பதை உறுதிப்படுத்த சாலைகளில் சோதனை நடத்தப்படும் என்றும், விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    இருப்பினும் சிலர் இந்த விதிமுறையை பின்பற்றாமல் ஸ்டைலாக ஹெல்மெட்டை வாகனத்தில் வைத்து பயணிப்பார்கள். போலீசாரை கண்டதும் ஹெல்மெட்டை எடுத்து மாட்டிக்கொள்வார்கள்.

    இப்படிப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் பயனர் ஒருவர் கூகுள் மேப் செயலியில் வேளச்சேரியை ஒட்டிய பகுதி ஒன்றில் 'போலீஸ் இருப்பாங்க ஹெல்மெட் போடுங்க' என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இதனை சமூக வலைதளங்களிலும் பதிவிட்டார். இது தொடர்பான பதிவு வைரல் ஆனது.

    சென்னையில் எந்தெந்த இடங்களில் போக்குவரத்து போலீசார் இருக்கிறார்கள் என்பதை காட்டிக்கொடுக்கும் வகையில் 'போலீஸ் இருப்பாங்க ஹெல்மெட் போடுங்க' என்ற குறிப்பு கூகுள் மேப்ஸ்-இல் இடம்பெற்றால், பலரும் ஹெல்மட் அணிய தொடங்குவார்கள்.

    இதை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து அமைச்சர் டிஆர்பி ராஜா, ஹெல்மெட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த சென்னை முழுவதும் இத்தகைய முயற்சியை கையாளலாம் என போக்குவரத்து போலீசாருக்கு நகைச்சுவையாக அறிவுறுத்தியுள்ளார்.

    • ஆன்லைன் மூலம் கட்டிட அனுமதி பெறும் திட்டத்தின்படி, www.onlineppa.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
    • கட்டுமானப் பணிகள் முடிந்த 30 நாட்களுக்குள் சொத்து வரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

    ஆன்லைன் மூலம் கட்டிட அனுமதி பெறும் திட்டத்தின்படி, www.onlineppa.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

    இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ள நிலையில், திட்ட அனுமதிக்கான கால அளவு 5 ஆண்டுகளாகவும், அதில் கட்டிட விதிமீறல்கள் இருக்கக்கூடாது என்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. கட்டிட வரைபட அனுமதி அளிக்கப்படும் நாளில் இருந்து 5 ஆண்டுகள் மட்டுமே செல்லும். இந்த அனுமதி உத்தரவு, விண்ணப்பதாரர்தான் நிலத்தின் உரிமையாளர் என்பதற்கான உரிமையை உறுதிப்படுத்தாது. அதை ஆவணமாக பயன்படுத்த இயலாது. சம்பந்தப்பட்ட நிலம், விவசாய நிலமாக, நிறுவனத்துக்கு சொந்தமானதாக, திறந்தவெளிப் பகுதியாக, கேளிக்கை பயன்பாட்டுப் பகுதியாக அல்லது சாலைக்கு ஒதுக்கப்பட்டதாக இருந்தால், அனுமதி உத்தரவு தானாக ரத்து செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஒருங்கிணைந்த கட்டிட விதிகளின்படிதான் கட்டிடங்கள் கட்டப்பட வேண்டும். கட்டிடம் கட்டும்போது விதிமீறல் கண்டறியப்பட்டால், உரிய சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும். விண்ணப்பதாரரின் சுய சான்றிட்ட ஆவணங்கள் மற்றும் கட்டிட வரைபட அனுமதி ஆகியவை அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டு, அதில் ஏதாவது தவறு கண்டறியப்பட்டால், விண்ணப்பதாரருக்கு உரிய தண்டனை விதிக்கப்படும்.

    விண்ணப்பத்தில் காட்டப்பட்ட கட்டிட வடிவமைப்பு, அடித்தளம், பயன்படுத்தப்படும் மரம், கான்கிரீட், கம்பி, கழிவுநீர்த்தொட்டி, மழைநீர் சேகரிப்பு அமைப்பு, தண்ணீர் தொட்டி ஆகியவை உரிய விதிகளின்படி அமைக்கப்பட வேண்டும். தெருக்களில் கட்டுமானப்பொருட்கள், கழிவுகளை கொட்டக்கூடாது. கட்டுமானப் பணிகள் முடிந்த 30 நாட்களுக்குள் சொத்து வரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

    இதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    ×