search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "சூறாவளி"

  • கொசுக்கள் சூறாவளி போல கூட்டமாக பறக்கிறது.
  • ஆற்றங்கரைகளில் கொசுக்கள் குவிந்து கிடப்பதை காணமுடிகிறது.

  தட்பவெப்ப நிலை மாற்றம் காரணமாக மணல் சூறாவளி, நீர் சூறாவளி உருவாவதை பார்த்திருப்போம். ஆனால் மராட்டிய மாநிலம் புனேவில் ஆயிரக்கணக்கான கொசுக்கள் சூழ்ந்து சூறாவளி உருவானது போன்று பரவிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராமில் 'பீயிங் புனே அபிஷியல்' என்ற பக்கத்தில் பகிரப்பட்ட அந்த வீடியோவில் ஆற்றங்கரைகளில் கொசுக்கள் குவிந்து கிடப்பதை காணமுடிகிறது.

  பின்னர் அந்த கொசுக்கள் சூறாவளி போல கூட்டமாக பறக்கிறது. இந்த வீடியோ வைரலாகி 45 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. இதைப்பார்த்த பயனர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர். புனே மாநகராட்சி அதிகாரிகள் ஆற்றங்கரை மற்றும் நதிகளை சுத்தம் செய்யும் திட்டத்தை விரைவுப்படுத்த வேண்டும். இதன் மூலம் பல பிரச்சினைகள் தீர்க்கப்படும் என ஒரு பயனரும், இதுபோன்ற கொசு சூறாவளி ஆபத்தானதாக தெரிகிறது என மற்றொரு பயனரும் பதிவிட்டனர். பொது சுகாதாரம் மோசமாக இருப்பதாக பயனர்கள் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

  • 23 பேர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
  • 85 ஆயிரம் குடும்பங்கள் மின்சாரம் இன்றி தவித்தனர்.

  அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தை சூறாவளி புயல் தாக்கியது. பலத்த மழையும் பெய்தது. புயலால் ஏராளமான வீடுகள், வாகனங்கள் சேதமடைந்தன. வீடுகளின் மேற்கூரைகள் காற்றில் பறந்தன. மரங்கள், மின் கம்பிகள் சரிந்து விழுந்தன.

  சூறாவளி புயல் மழைக்கு குழந்தை உள்பட 6 பேர் பலியானார்கள். 23 பேர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். புயல் காரணமாக டென்னசியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதில் 85 ஆயிரம் குடும்பங்கள் மின்சாரம் இன்றி தவித்தனர். புயலால், மாண்ட்கோமெரி கவுண்டி பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது. பல்வேறு இடங்களை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் மக்கள் வெளியேற முடியாமல் தவித்தனர். அவர்களை மீட்புக் குழுவினர் மீட்டு கொண்டு வருகிறார்கள்.

  • வாழை மரங்கள் இன்னும் 20 நாட்களில் அறுவடை செய்யப்படுவதாக இருந்தது.
  • பல விவசாயிகள் சாய்ந்த வாழை மரத்தை சோகத்துடன் பார்த்தனர்.

  தஞ்சாவூர்:

  தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு சுற்றுவட்டார பகுதியான வடுகக்குடி சாத்தனூர், வளப்பகுடி , மருவூர் ஆகிய பகுதிகளில் நெல்லுக்கு அடுத்த படியாக வாழை சாகுபடி அதிக அளவில் செய்யப்படும்.

  பல ஏக்கர் பரப்பளவில் வாழை மரங்கள் சாகுபடி செய்யப்பட்டு இருந்தன.

  இதில் பெரும்பாலான வாழை மரங்கள் இன்னும் 20 நாட்களில் அறுவடை செய்யப்படுவதாக இருந்தது.

  இந்த நிலையில் வடுகக்குடி, சாத்தனூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று மாலை சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டியது.

  இடைவிடாமல் பெய்த கனமழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடின.

  சூறாவளி காற்று தொடர்ந்து வீசியதால் அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் முறிந்து வேரோடு சாய்ந்தன.

  இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

  கஷ்டப்பட்டு கடன் வாங்கி சாகுபடி செய்த வாழை மரங்கள் இப்படி சேதம் ஆகிவிட்டதே என எண்ணி வேதனை அடைந்தனர்.

  பல விவசாயிகள் சாய்ந்த வாழை மரத்தை சோகத்துடன் பார்த்தனர்.

  இது குறித்து விவசாயிகள் கூறும்போது,

  எங்கள் பகுதியில் வாழை மரங்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படும்.

  தற்போது வாழை மரங்கள் ஆயுத பூஜையை முன்னிட்டு அறுவடை செய்யப்படுவதாக இருந்தது.

  ஆனால் முதலீடு தொகை எடுக்கும் நேரத்தில் சூறாவளி காற்றால் வாழை மரங்கள் முறிந்து விழுந்து விட்டன.

  இதுபோன்று பருவ மழை பெய்யும் காலங்களில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.

  ஆண்டுதோறும் இது போன்று நடைபெறுவதனால் நெல்லுக்கு பயிர் காப்பீடு செய்வது போல வாழைக்கும் காப்பீடு செய்வதற்கு வழிவகை செய்து தர வேண்டும்.

  மேலும் தோட்டகலைத்துறை அதிகாரிகள் சேதமடைந்த வாழை மரங்களை கணக்கிட்டு இழப்பீடு அறிக்கை தாக்கல் செய்த அரசுக்கு வழங்க வேண்டும்.

  உடனடியாக இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

  • சூறாவளியுடன் கனமழை பெய்ததால் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது
  • 60 நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1650 பேர் வீடுகளை இழந்து தவிப்பு

  பிரேசில் நாட்டின் தென்மாநிலம்  ரியோ கிராண்ட் டோ சுல்-ஐ பயங்கரமான புயல் தாக்கியதில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். புயல் காரணமாக இடைவிடாத கனமழை பெய்ததால் 60 நகரங்கள் பாதிக்கப்பட்டன. 1,650 பேர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.

  ரியோ கிராண்ட் டோ சுல் மாநில கவர்னர் எட்வர்டோ லைட் கூறுகையில் ''பருவநிலை மாற்றம் காரணமாக மாநிலத்தில் உயிர்ப்பலி அதிகரித்து வருகிறது. இந்த புயலால் 60 நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இது வெப்பம் மண்டல சூறாவளியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

  பெண் ஒருவர் மீட்பு பணியின்போது வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டார். கயிறு கட்டி அந்த பெண்ணை மீட்டபோது, கயிறு அறுந்து ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். அவரை காப்பாற முடியவில்லை'' என்றார்.

  ரியா கிராண்ட் டோ சுல் பகுதியில் ஆற்றங்கரையோரம் வசித்து வந்த மக்கள், மொட்டை மாடியில் இருந்து உதவி கேட்பது போன்ற வீடியோ காட்சி நெஞ்சை பதைபதைக்க செய்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

  இதற்கு முன் ஜூன் மாதம் இதுபோன்று பயங்கர சூறாவளி புயல் ஏற்பட்டது. அப்போது 16 பேர் உயிரிழந்தனர். 40 நகரங்கள் பாதிக்கப்பட்டன.

  இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • சூறாவளி காரணமாக இந்த பகுதியில் கனமழை மற்றும் பெருமளவு பாதிப்பு
  • உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது

  அமெரிக்கா உள்ளிட்ட பல மேற்கத்திய நாடுகளில் இந்த வருடம் கோடை வெப்பம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிமாக தாக்கியது. இதுவரை இல்லாத வகையில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தை பலமான சூறாவளி தாக்க இருப்பதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.

  ஹிலாரி என பெயரிடப்பட்டுள்ள இந்த சூறாவளி நேற்று உருவானது. இது கிழக்கு பசிபிக் கடல் பகுதியை நோக்கி விரைகிறது. இந்த சூறாவளி மெக்சிகோ நாட்டிலும், அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலும் கனமழை பொழிவை ஏற்படுத்தலாம் என்றும் அறிவித்துள்ளனர்.

  கடைசியாக 1939-ம் ஆண்டு சூறாவளி காரணமாக இந்த பகுதியில் கனமழை மற்றும் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டது. இந்த முறையும் இது நடந்தால் கிட்டத்தட்ட 84 வருடங்களுக்கு பிறகு ஏற்படும் சூறாவளியாக இருக்கும். தற்போதைய நிலவரப்படி, மணிக்கு 140 மைல் (மணிக்கு 225 கி.மீ.) வேகத்தை அடைந்துள்ள இந்த சூறாவளியை 4வது ரகமாக தேசிய சூறாவளி மைய நிபுணர்கள் வகைப்படுத்தி இருக்கின்றனர்.

  இதனால் தென்மேற்கு அமெரிக்காவில் இன்று தொடங்கி அடுத்த வாரம் புதன்கிழமை வரை கடும் புயல் காற்றும், கனமழையும் பெய்யக்கூடும் என்றும் இது நாளை, நாளை மறுநாள் மேலும் தீவிரமடையலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த புயல் காரணமாக கடுமையான சேதங்கள் உண்டாகலாம் எனவும் தேசிய வானிலை சேவை எச்சரித்துள்ளது.

  இந்த சூறாவளி தெற்கு கலிபோர்னியா, தெற்கு நிவேடா, மேற்கு அரிசோனா மற்றும் தென்மேற்கு உட்டா பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. சூறாவளி மற்றும் கனமழை எச்சரிக்கையை அடுத்து, மக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் வெள்ள நீர் புகுவதை தடுக்க மண்மூட்டைகளை அடுக்கியும், மின்சாரம் துண்டிக்கப்பட்டால் அதை சமாளிக்க ஜெனரேட்டரையும் தயார் செய்து வருகின்றனர்.

  மழை வெள்ளத்தால் சாலை போக்குவரத்து வசதி தடைபடலாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால், அவசரகால சேவை அமைப்புகளும், பேரிடர் மேலாண்மை அமைப்புகளும், மக்களுக்கு பாதுகாப்பான தங்குமிட வசதிகளையும், அங்கு தேவைப்படும் உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களையும் சேமித்து, சீராக வினியோகம் செய்வதற்கான முன்னேற்பாடுகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

  • பலத்த மழையால் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
  • டொக்சூரி புயலில் சிக்கி 39 பேர் பலியாகி உள்ளனர்.

  பீஜிங்:

  பசிபிக் பெருங்கடலில் டொக்சூரி என்று பெயரிடப்பட்ட புயல் உருவானது. சூப்பர் சூறாவளி புயலாக வலுவடைந்து பிலிப்பைன்சை நெருங்கிய போது அதன் தீவிரத்தை சற்று இழந்தது. பின்னர் பிலிப்பைன்சை கடுமையாக தாக்கியது.

  ஆனால் கனமழை மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 13 பேர் உயிரிழந்தனர். அதன் பின் தைவானை தாக்கிய டொக்சூரி புயல், தென் கிழக்கு சீனாவை நோக்கி நகர்ந்தது. இதில் புஜியான் மற்றும் குவாங்ஷோ மாகாணங்களை சூறாவளி புயல் தாக்கியது.

  சுமார் 175 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. அதனால் மரங்கள், மின்கம்பங்கள் சரிந்து விழுந்தன. பலத்த மழையால் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

  புஜியான், குவாங்ஷோ மாகாணத்தை சேர்ந்த சுமார் 7 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் சுமார் 10 லட்சம் பேர் அவதியடைந்துள்ளனர்.

  புயல் வலுவிழந்ததை அடுத்து மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் டொக்சூரி புயல் காரணமாக தலைநகர் பீஜிங் மற்றும் அதைச் சுற்றியுள்ள மாகாணங்களில் சிவப்பு எச்சரிக்கையை அந்நாட்டின் வானிலை மையம் விடுத்துள்ளது.

  புஜியான் மாகாணத்தில் கரையை கடந்து புயல், நாட்டின் வடக்கு பகுதியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் தலைநகர் பீஜிங் உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

  தற்போது பீஜிங்கில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழை 1-ந் தேதி வரை நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

  இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. பீஜிங்கில் பூங்காற்று ஏரிகள் மற்றும் ஆற்றங்கரை சாலைகள் மூடப்பட்டுள்ளன.

  தியான்ஜின், ஹெபே, ஷான்டாங் உள்ளிட்ட மாகாணங்களில் மழை பெய்து வருகிறது.

  சீனா, பிலிப்பைன்ஸ் தைவான் ஆகிய நாடுகளை புரட்டி போட்டுள்ளது டொக்சூரி. புயலில் சிக்கி 39 பேர் பலியாகி உள்ளனர்.

  • டெக்சாஸில் கடந்த புதன்கிழமை குறைந்தது நான்கு சூறாவளிகள் பதிவாகியுள்ளன.
  • மழை மற்றும் பலத்த காற்று மாநிலத்தின் சில நகரங்களையும் தாக்கியது குறிப்பிடத்தக்கது.

  தெற்கு அமெரிக்க மாநிலமான டெக்சாஸில் சக்திவாய்ந்த சூறாவளி தாக்கியதில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பத்து பேர் படுகாயமடைந்துள்ளனர்.

  இதுகுறித்து அண்டை நகரமான லுபாக் தீயணைப்பு சேவை தனது டுவிட்டர் பக்கத்தில், "மட்டாடர் நகரம் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடும் சூறாவளியை கொண்டு வந்துள்ளது. இதில் சிக்கி நான்கு பேர் இறந்துள்ளனர் மற்றும் 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்" என்று குறிப்பிட்டுள்ளது.

  வடக்கு டெக்சாஸில் உள்ள மோட்லி கவுண்டியின் முக்கிய நகரமாக கருதப்படும் மட்டாடர் நகரில் 600 மக்கள் தொகை கொண்டுள்ளது. மட்டாடர் மேற்கு பகுதியில் சூறாவளியால் கட்டிடங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.

  டெக்சாஸில் கடந்த புதன்கிழமை குறைந்தது நான்கு சூறாவளிகள் பதிவாகியுள்ளன. மழை மற்றும் பலத்த காற்று மாநிலத்தின் சில நகரங்களையும் தாக்கியது குறிப்பிடத்தக்கது.

  • சூறாவளிக்கு ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தது.
  • பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளது.

  பிரேசிலியா:

  பிரேசில் நாட்டில் ஷியோகிராண்ட டொசூல் மாநிலத்தில் புயல் காரணமாக கடும் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இந்த சூறாவளிக்கு ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தது. ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தது.

  இடைவிடாமல் மழை கொட்டி தீர்த்ததால் ரோடுகளில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடுயது. தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்தனர்.

  அவர்களை மீட்பு குழுவினர் விரைந்து சென்று படகு மூலம் மீட்டனர். வெள்ளத்தில் சிக்கிய 3,713 பேரை அவர்கள் பத்திரமாக மீட்டனர். 20-க்கும் மேற்பட்டவர்களை வெள்ளம் அடித்து சென்றது. அவர்கள் ஹெலிகாப்டர் மூலம் அதிரடியாக மீட்கப்பட்டனர். இந்த சூறாவளி புயலுக்கு 4 மாத குழந்தை உள்பட 13 பேர் பலியாகிவிட்டனர், 20-க்கும் மேற்பட்டவர்கள் மாயமாகி விட்டனர். அவர்கள் கதி என்னவென்று தெரியவில்லை, அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. ஆயிரக்கணக்கானவர்கள் வீடுகளை இழந்துவிட்டனர்.

  அவர்கள் அங்குள்ள விளையாட்டு மைதானங்களில் தற்காலிமாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பலர் வீடுகளை விட்டு அப்புறப்படுத்தப்பட்டு விட்டதால் உயிர்சேதம் பெருமள வில் இல்லாமல் தடுக்கப்பட்டது.

  • 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் காரா நகரம் சூறாவளியால் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திய நகரங்களில் ஒன்றாகும்.
  • பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பலர் தங்கள் நகரங்களில் வெளிப்புறத்தில் உள்ள விளையாட்டு கூடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

  பிரேசிலின் தெற்கு மாநிலமான ரியோ கிராண்டே டோ சுலியில் நேற்று முன்தினம் கடுமையான வெப்பமண்டல சூறாவளி தாக்கியது. இதில், 11 பேர் உயிரிழந்தனர். 25 பேர் மாயமாகி உள்ளனர்.

  புயலை தொடர்ந்து கனமழை பெய்ததால் காணாமல் போன 25 பேரை கண்டுபிடிக்க வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் தேடுதல் பணி நடந்து வருகின்றன.

  இதில் குறிப்பாக, 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் காரா நகரம் சூறாவளியால் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திய நகரங்களில் ஒன்றாகும்.

  இதுகுறித்து ரியோ கிராண்டே டோ சுலி மாநிலத்தின் ஆளுநர் எட்வார்டோ லைட் கூறுகையில், " காரா நகரின் நிலைமை எங்களை மிகவும் கவலையடையச் செய்கிறது. பாதிக்கப்பட்ட முக்கிய பகுதிகளை விரைவாக வரைபடமாக்கி, ஆதரவு தேவைப்படும் மக்களை அடையாளம் காண வேண்டியது அவசியம்.

  கடந்த இரண்டு நாட்களில் அதிகாரிகள் 2,400 பேரை மீட்டுள்ளனர்.

  இந்த தருணத்தில் முதலில் மனித உயிர்களைப் பாதுகாப்பதுதான் எங்களின் முக்கிய நோக்கமாகும். சிக்கித் தவிக்கும் மக்களை மீட்டு, காணாமல் போனவர்களைக் கண்டுபிடித்து, குடும்பங்களுக்கு அனைத்து ஆதரவையும் அளித்து வருகிறோம்.

  மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பலர் தங்கள் நகரங்களில் வெளிப்புறத்தில் உள்ள விளையாட்டு கூடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். பல பகுதிகளில் மண்சரிவு அபாயம் இருப்பதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

  • ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று மாலை சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்ததால் ஆங்காங்கே மின் கம்பங்கள்-மரங்கள் முறிந்து விழுந்தன.
  • பஸ் நிலையம் எதிரில் உள்ள சத்தி சாலையில் மழை நீர் தேங்கி நின்றது. அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனம் ஒன்று பாதாள சாக்கடை குழி இருப்பது தெரியாமல் சிக்கிக்கொண்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

  ஈரோடு:

  ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று மாலை சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்ததால் ஆங்காங்கே சாலைகளில் மழைநீர் தேங்கி நின்று குண்டும் குழியுமாக காட்சி அளித்தது.

  குறிப்பாக திண்டல், செங்கோடம்பாளையம், நசியனூர், முத்தம்பாளையம், ரங்கம்பாளையம், பெருந்துறை சாலை பகுதிகளில் காற்று, மின்னல் இடியுடன் மழை பெய்தது.

  பெருந்துறை சாலை செங்கோடம்பாளையம் அருகே சாலையோர மரம் விழுந்தது. நசியனூர் ராயபாளையம் உள்பட பல்வேறு இடங்களிலும் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலையில் முறிந்து விழுந்த மரத்தை மின் வாரிய ஊழியர்கள் அப்புறப்படுத்தினர்.

  ஈரோடு முத்தம் பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதி 1-ல் மின்கம்பத்தின் மீது மின்னல் இடி தாக்கி மின்கம்பம் ஒடிந்தது. இதனால் மின் தடை ஏற்பட்டது. நசியனூர் ராயபாளையம் பகுதியில் டிரான்ஸ்பார்மர் சரிந்து விழுந்து முற்றிலும் மின்தடை ஏற்பட்டது.

  இதேப்போல் நசியனூர் சாலை திண்டல்-ஈரோடு உள்பட பல்வேறு இடங்களில் கம்பம் சாய்ந்தும் கம்பிகளாலும் பாதிப்பு ஏற்பட்டது.

  ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடப்படாமல் உள்ளதால் ஆங்காங்கே வாகனங்கள் சிக்கி கொள்வது வாடிக்கையாக உள்ளது. குறிப்பாக மழை பெய்யும் போது மழை நீர் ஆங்காங்கே தேங்கி நிற்பதால் பாதாள சாக்கடை குழிகள் இருப்பது தெரியாமல் சிக்கி கொள்கின்றனர்.

  இந்நிலையில் நேற்றிரவு ஈரோட்டில் பெய்த மழையின் காரணமாக பஸ் நிலையம் எதிரில் உள்ள சத்தி சாலையில் மழை நீர் தேங்கி நின்றது. அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனம் ஒன்று பாதாள சாக்கடை குழி இருப்பது தெரியாமல் சிக்கிக்கொண்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

  இதையடுத்து இன்று காலை கிரேன் மூலம் சரக்கு வாகனம் மீட்கப்பட்டு போக்குவரத்து சரி செய்யப்பட்டது. இதேபோல் ஈரோடு வ.உ .சி பூங்கா காய்கறி மார்க்கெட்டில் வழக்கம்போல் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சி அளித்ததால் காய்கறிகளை வாங்க வந்த பொதுமக்கள், வியாபாரிகள் கடும் சிரமம் அடைந்தனர்.