என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தமிழகத்தில், தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, கொலைகள் சர்வசாதாரணமாகி இருக்கின்றன.
- பொதுமக்கள் என, யார் உயிருக்கும் உத்தரவாதமில்லாத நிலை, தமிழகத்தில் நீடிப்பது அச்சத்திற்குரியது.
சென்னை:
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-
கோவையில் நேற்று வழக்கறிஞர் உதயகுமார் என்பவர், வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தில், தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, கொலைகள் சர்வசாதாரணமாகி இருக்கின்றன. சட்டம் ஒழுங்கு தனது நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் என்று உறுதியளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இது குறித்து எந்த நடவடிக்கைகளும் எடுத்ததாகத் தெரியவில்லை. மாறாக, அமைச்சர்கள், கொலைகள் நடக்கத்தான் செய்யும் என்ற ரீதியில் பேசுவது முற்றிலும் ஏற்கத்தக்கதல்ல.
ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் தொடங்கி, தி.மு.க. கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் என, யார் உயிருக்கும் உத்தரவாதமில்லாத நிலை, தமிழகத்தில் நீடிப்பது அச்சத்திற்குரியது.
சமூக வலைத்தளங்களில், தி.மு.க. அரசின் தவறுகளை விமர்சிப்பவர்களைக் கைது செய்வதற்காக மட்டுமே காவல்துறையினர் பயன்படுத்தப்படுகின்றனரே தவிர, காவல்துறையின் முக்கியக் கடமையான சட்டம் ஒழுங்கு, முற்றிலும் சீர்குலைந்து கிடப்பது, அரசியல் கடந்து மிகவும் வருந்தத்தக்கது.
சட்டம் ஒழுங்கைக்காக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 1400 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
- லோயர்கேம்ப் மின் உற்பத்தி நிலையத்தில் 126 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
கூடலூர்:
கேரளாவில் பருவமழை தீவிரம் அடைந்ததால் இடுக்கி மாவட்டத்தில் கனமழை பெய்தது. நீர்பிடிப்பு பகுதியில் பெய்த தொடர் மழையால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்தது.
இந்த நிலையில் தற்போது மழை குறைந்துள்ளதால், அணைக்கு நீர்வரத்தும் சரிந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 131.55 அடியாக உள்ள நிலையில் வரத்து 2483 கன அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 1400 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 5059 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.
கனமழை பெய்ததால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடி வரை உயரும் என விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர். தற்போது கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் நெல் சாகுபடி பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மழை குறைந்ததால் அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழக பகுதிக்கு திறக்கப்பட்ட தண்ணீர் மூலம் லோயர்கேம்ப் மின் உற்பத்தி நிலையத்தில் 126 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சுருளி அருவிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். மேலும் அமாவாசை உள்ளிட்ட தினங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர்.
கடந்த 3 நாட்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுருளி அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து யானைகள் நடமாட்டம் காரணமாக 2 நாட்கள் தடை நீட்டிக்கப்படுவதாக வனத்துறையினர் அறிவித்தனர். இன்று ஆடி பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுருளி அருவியில் புனித நீராட வந்தனர்.
ஆனால் தடை விதிக்கப்பட்டதால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். நாளை ஆடி அமாவாசை என்பதால் ஏராளமான பக்தர்கள் சுருளி அருவி மற்றும் முல்லைப்பெரியாற்றங்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள். எனவே நாளை சுருளி அருவிக்கு செல்ல அனுமதி வழங்கப்படுமா? என அவர்கள் எதிர்ப்பார்ப்புடன் உள்ளனர்.
- பிரபல யூடியூபர் இர்பான் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.
- ஹெல்மெட் அணியாமல் இர்பான் பைக் ஓட்டிய வீடியோன் வைரலானது.
பிரபல யூடியூபரான இர்பான் 'இர்பான் வியூஸ்' எனும் யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். உணவகங்களில் உள்ள உணவுகளை ரிவியூ செய்வதன் மூலம் பிரபலமான இவர் திரைப்பிரபலங்களுடன் உணவருந்தியவாரே நேர்காணல்களும் எடுத்து வருகிறார்.
பிரபல யூடியூபர் இர்பான் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். வகையில், அண்மையில் ஹெல்மெட் அணியாமல் பிரபல யூடியூபர் இர்பான் பைக் ஓட்டிய வீடியோ சமுக வலைத்தளங்களில் வைரலானது.
அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், "நடிகர் பிரஷாந்த் விட சக்தி வாய்ந்த youtuber இர்பான் தான். இதுவே TTF வாசனா இருந்தா உடனடி கைது தான்" என்று விமர்சித்தனர்.
இதனையடுத்து, ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியது முறையான நம்பர் ப்ளேட் இல்லாதது உள்ளிட்டவைக்காக யூடியூபர் இர்ஃபானுக்கு ரூ.1,500 அபராதம் விதித்து சென்னை போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தநிலையில் சமீபத்தில் ஒரு யூ-டியூப் சேனலுக்கு, நடிகர் பிரசாந்த் பேட்டியளித்தார். 'யூ-டியூப்'பை சேர்ந்த இளம்பெண் பின்னால் அமர, பிரசாந்த் தனது மோட்டார் சைக்கிளில் சென்னை தியாகராயநகர் சவுத் போக் சாலையை சுற்றி சுற்றி வந்து பேட்டியளித்தார். இந்த பேட்டி, சம்பந்தப்பட்ட யூ-டியூப்பில் வெளியாகி வைரலானது.
இதனையடுத்து போக்குவரத்து போலீசார் நடிகர் பிரசாந்துக்கு ரூ.1,000, உடன் சென்ற பெண்ணுக்கு ரூ.1,000 என மொத்தம் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பா.ஜ.க.வுக்கு ஆதரவான நிலையில் உள்ளதால் அவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்துவிட்டனர்.
- ராகுல் காந்தி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தினால் அதனை காங்கிரஸ் கட்சியினர் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்.
போடி:
தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஜனநாயகத்தை காப்பதற்காக யார் குரல் கொடுத்தாலும் அவர்களை சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமானவரித்துறை ஆகியவை மூலம் நசுக்கும் பணியில் மத்திய பா.ஜ.க. அரசு ஈடுபட்டு வருகிறது.
ராகுல் காந்தி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தினால் அதனை காங்கிரஸ் கட்சியினர் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். தெலுங்குதேசம் கட்சி எம்.பி.க்கள் சிலர் வீட்டில் மத்திய பா.ஜ.க. அரசு அமலாக்கத்துறையை ஏவி முன்பு சோதனை நடத்தினர். தற்போது அந்த கட்சியினர் பா.ஜ.க.வுக்கு ஆதரவான நிலையில் உள்ளதால் அவர்கள்மீதான வழக்குகளை ரத்து செய்துவிட்டனர்.

மக்களவையில் ஜாதி வாரி கணக்கெடுப்பு குறித்து ராகுல்காந்தி பேசியபோது அவருக்கு எதிராக பா.ஜ.க. எம்.பி. அனுராக்தாக்கூர் பேசியது ஆணவத்தின் உச்சம்.
வயநாடு நிலச்சரிவில் பேரிடர் குறித்து ஏற்கனவே எச்சரித்ததாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் தெரிவித்தார். ஆனால் அவ்வாறு பேரிடர் நடப்பதாக தெரிந்திருந்தால் ஏன் அங்கு தேசிய பேரிடர் மேலாண்மைக்குழு, ராணுவத்தை அனுப்பி வைக்கவில்லை. வயநாடு நிலச்சரிவிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ மனமில்லாமல் பா.ஜ.க. அரசியல் செய்து வருகிறது. ஆனால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அங்கு 2 நாட்களாக முகாமிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி வீடுகளை இழந்தவர்களுக்கு கட்சியின் சார்பில் வீடுகள் கட்டித்தரப்படும் என அறிவித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்தியா... என்று கூற என்னது. இந்தியா Unitary State நாடா என்று கேட்டு அமைச்சர் அதிர்ச்சியடைந்தார்.
- அமைச்சர் பொன்முடி தமிழகம் முழுவதும் சென்று இதேபோன்று கேள்வி கேட்க வேண்டும் என்று நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் கருத்து தெரிவித்தனர்.
சைதாப்பேட்டை:
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற உலக அரசியலமைப்பு நாள் நிறைவு விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது, Unitary State என்றால் என்ன? என்று மாணவர்களை நோக்கி அமைச்சர் பொன்முடி கேள்வி எழுப்பினார். ஆனால் மாணவர்கள் யாரும் பதில் கூறவில்லை.
இதையடுத்து Unitary State என்றால் என்ன என்று கூடவா அரசியல் அறிவியல் படிக்கும் மாணவர்கள் இன்னும் படிக்கவில்லை? என்று அமைச்சர் பொன்முடி வினவினார். மேலும், Unitary State ஆட்சி முறையில் உள்ள நாடு எது? என்று மாணவர்களை நோக்கி அடுத்த கேள்வி கேட்டார்.
அப்போது மாணவர் ஒருவர், இந்தியா... என்று கூற என்னது. இந்தியா Unitary State நாடா என்று கேட்டு அமைச்சர் அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து, மேடையில் அமர்ந்திருந்த பல்கலைக்கழக துணைவேந்தர், அரசியல் அரசியல் பேராசிரியரை நோக்கி அமைச்சர் அதே கேள்வியை கேட்டார். இதற்கு அரசியல் அறிவியல் பேராசிரியர் 'புதுச்சேரி' என்று பதில் அளித்ததால் அமைச்சர் தனது பொறுமையை இழந்து, 'அட நீ ஏயா ஒருஆளு, நீ ஒரு அரசியல் அறிவியல் பேராசிரியர்'... என்ன பாடம் நடத்துகிறீர்கள்... வாத்தியார்களுக்கு முதலில் பயிற்சி அளிக்க வேண்டும். அதன்பிறகு தான் மாணவர்கள் படிப்பார்கள் என்று கூறி தனது கேள்விக்கு அவரே விளக்கம் அளித்தார்.
Unitary State என்றால் ஒரே மத்திய அரசாங்கம்... அதன் கீழே மாநிலங்கள் இருக்காது... மத்திய அரசாங்கம் மட்டும் இருக்கும். அதற்கு உதாரணம் பிரிட்டன்.. அதே மாதிரி Federal State கூட்டாட்சி... இந்த கூட்டாட்சிக்கு உதாரணம் அமெரிக்கா... கூட்டாட்சி என்றால் பல மாநிலங்கள் ஒன்றிணைந்து ஒரு மத்திய அரசை உருவாக்கி அதன் கீழே மாநில அரசுகள் இருப்பதற்கு பெயர் தான் கூட்டாட்சி என்றார்.
தமிழ்நாட்டில் உயர்கல்வியின் தரம் இன்னும் பல மடங்கு உயர வேண்டும் என்றால், முனைவர் பட்டம் பெற்ற முன்னாள் பேராசியரான அமைச்சர் பொன்முடி தமிழகம் முழுவதும் சென்று இதேபோன்று கேள்வி கேட்க வேண்டும் என்று நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் கருத்து தெரிவித்தனர்.
- கிண்டி சிறுவர் பூங்கா சென்னையில் உள்ள முக்கிய சுற்றுச்சூழல் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும்.
- பூங்காவில் ஏற்படுத்தப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட பல்வேறு வசதிகளை பார்வையிட்டார்.
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
சென்னை மாநகராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை வாயிலாக புதிய பூங்காக்களை உருவாக்குதல், பழைய பூங்காக்களை புனரமைத்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கிண்டி சிறுவர் பூங்கா சென்னையில் உள்ள முக்கிய சுற்றுச்சூழல் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். ஆண்டுதோறும் 7 முதல் 8 லட்சம் பார்வையாளர்கள் வருகை தருகின்றனர். மேலும், சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான பள்ளிகளைச் சேர்ந்த 60,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பூங்காவில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர்.
2022-23-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், இளம் வயதிலிருந்தே வனம் மற்றும் வன விலங்குகளைப் பற்றிய விழிப்புணர்வைக் குழந்தைகளுக்கு ஏற்படுத்த, கிண்டி குழந்தைகள் பூங்காவை மறுவடிவமைத்து, பறவைகள், வண்ணத்துப் பூச்சிகள், விலங்குகள் உள்ளடங்கிய இயற்கைப் பூங்காவாக அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பிற்கிணங்க, வனம் மற்றும் வனவிலங்குகள் பற்றிய விழிப்புணர்வை சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு ஏற்படுத்துவதற்காக தற்போதுள்ள கிண்டி சிறுவர் பூங்கா புனரமைக்கப்பட்டு 30 கோடி ரூபாய் செலவில் சிறுவர்களுக்கு இயற்கை பூங்காவாக அமைக்கப்பட்டு உள்ளதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
இப்பூங்கா திறப்பு விழாவின்போது, வனவிலங்குகளை மீட்பதற்கும், வனப்பகுதிகளில் ஏற்படும் காட்டுத்தீ போன்ற விபத்துகளை தடுக்கும் பணிகளை மேற்கொள்வதற்காகவும் 9 நவீன வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, இப்பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள வேடந்தாங்கல் பறவைகள் இருப்பிடத்தை திறந்து வைத்து, பூங்காவில் ஏற்படுத்தப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட பல்வேறு வசதிகளை பார்வையிட்டார்.
தமிழ்நாட்டிலேயே முதன் முறையாக இந்தப் பூங்காவில் 2800 சதுர மீட்டர் பரப்பளவில் மிகப்பெரிய நீர்வாழ் பறவைக் கூடம், வன உயிரின விழிப்புணர்வு மையம், விலங்குகள் மற்றும் பறவைகளின் விவரங்கள் அறிந்து கொள்ளும் வகையிலான எல்.இ.டி. மின் திரைகள், நூலகம், நிர்வாக கட்டிடம், அழகிய நுழைவுவாயில், நீருற்றுகள், செல்பி பாயிண்ட், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதி, மழை நீர் வடிகால் வசதிகள், நடைபாதைகள், சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், பார்வையாளர்களுக்கு உணவு மற்றும் சிற்றுண்டி கிடைக்கும் வகையில் நவீன கட்டமைப்புடன் கட்டப்பட்டுள்ள இரண்டு சிற்றுண்டி கூடங்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்கள், புதிய கழிவறைகள், மேம்படுத்தப்பட்ட வாகனம் நிறுத்துமிடம் போன்ற வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
அத்துடன், மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு ஏற்ற வகையில் அவர்களின் தேவைகள் அறிந்து இப்பூங்காவில் சிறப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் எல்லையோர மாவட்டங்களில் ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு 23.5.2024 முதல் 25.5.2024 வரை நடத்தப்பட்டது.
தமிழகத்தில் யானைகளின் எண்ணிக்கையையும் அதன் வாழ்வியல் முறைகளையும் அறிந்து கொள்ள உதவிடும் 2024-ம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு அறிக்கையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டார். 2017 கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் யானைகளின் எண்ணிக்கை 2,761 ஆக இருந்தது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றத்தில் இருந்து யானைகளின் பாதுகாப்பிற்காக மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு அறிக்கை 2023-ன் படி தமிழகத்தில் யானைகளின் எண்ணிக்கை 2,961 ஆக உயர்ந்தது. தற்போது அதன் தொடர்ச்சியாக, 2024-ம் ஆண்டிற்கான யானைகள் கணக்கெடுப்பு அறிக்கையின்படி தமிழகத்தில் தற்போது யானைகளின் எண்ணிக்கை 3063 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பொன்முடி, மா.சுப்பிரமணியன், மதிவேந்தன், மேயர் பிரியா, தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., பிரபாகர ராஜா எம்.எல்.ஏ., துணைமேயர் மகேஷ் குமார், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- குச்சனூர் சுயம்பு சனீஸ்வரர் கோவில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது.
- தமிழகத்தின் முக்கிய சனிபகவான் பரிகாரத்தலமாக விளங்குகிறது.
சின்னமனூர்:
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூர் சுயம்பு சனீஸ்வரர் கோவில் தமிழகத்தின் முக்கிய சனிபகவான் பரிகாரத்தலமாக விளங்குகிறது. இந்தக் கோவில் இந்து அறநிலையத் துறை மூலம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இந்த கோவிலில் தமிழகம் மட்டுமன்றி தென் மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தங்கள் குடும்பத்தில் உள்ள சனி தோஷம் நீங்கவும், திருமணத் தடைகள் காரியத் தடைகள் விலகவும் இங்கு வந்து பரிகாரம் செய்து சனீஸ்வரனை வழிபட்டு செல்கின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் வருகின்ற 5 சனிக்கிழமைகளில் குச்சனூர் சனீஸ்வரர் பெருமான் கோவிலில் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இன்று ஆடி 3-வது சனிக்கிழமை மற்றும் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு அதிகாலையிலேயே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.
தங்கள் தோஷம் விலக அருகில் உள்ள சுரபி நதிக்கரையில் நீராடி காகத்திற்கு எள் சாதம் வைத்து நல்லெண்ணெய் மற்றும் எள் தீபங்கள் ஏற்றி காக வாகனம் வாங்கி தலையை சுற்றி வைத்து பரிகாரங்கள் செய்தனர்.
- தொடக்க காலத்தில் 3 லட்சம் பேர் வரை அம்மா உணவகங்களில் சாப்பிட்டு வந்தனர்.
- பெரும்பாலான உணவகங்களில் மாவு அரைக்கும் எந்திரம் பழுதாகி வெளியில் பணம் கொடுத்து அரைக்கும் நிலை ஏற்பட்டது.
சென்னை:
சென்னையில் வேலைக்காக தங்கும் இளைஞர்கள் கூலி தொழிலாளர்கள், ஆதரவற்றவர்கள் குறைந்த செலவில் வயிறாற சாப்பிட வேண்டும் என்பதற்காக அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டன.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் 2013-ம் ஆண்டு சென்னையில் 200 வார்டுகளில் தொடங்கப்பட்ட அம்மா உணவகத்திற்கு நல்ல வரவேற்பு இருந்ததால் 400 ஆக விரிவாக்கம் செய்யப்பட்டது.
அரசு ஆஸ்பத்திரிகளிலும் தொடங்கியதால் வெளியூர்களில் இருந்து வரும் நோயாளிகளின் உறவினர்கள் பயன் அடைந்தனர். 3 வேளையும் மலிவு விலையில் உணவு கிடைத்ததால் இத்திட்டம் பிற மாநகரப் பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டது.
மழை வெள்ளப் பாதிப்பு, கொரோனா பேரிடர் காலத்தில் அம்மா உணவகம் சென்னைவாசிகளுக்கு பெரிதும் கை கொடுத்தது.
தொடக்க காலத்தில் 3 லட்சம் பேர் வரை அம்மா உணவகங்களில் சாப்பிட்டு வந்தனர். ஆனால் படிப்படியாக இந்த எண்ணிக்கை குறையத் தொடங்கியது.
சென்னை மாநகராட்சி மூலம் நடத்தப்பட்டு வரும் இந்த உணவகங்கள் தொடர் வருவாய் இழப்பால் ஆண்டுக்கு ரூ.300 கோடி வரை நஷ்டத்தை சந்தித்தது.
இதனால் அம்மா உணவகங்களை பராமரிக்க ஆர்வம் காட்டவில்லை. 10 வருடங்களுக்கு முன்பு வாங்கப்பட்ட பாத்திரங்கள், எந்திரங்கள் பழுதானதால் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் கஷ்டப்பட்டனர்.
பெரும்பாலான உணவகங்களில் மாவு அரைக்கும் எந்திரம் பழுதாகி வெளியில் பணம் கொடுத்து அரைக்கும் நிலை ஏற்பட்டது. சமையல் பாத்திரங்கள் ஓட்டை உடைசலாக மாறியது. அம்மா உணவகங்களை பராமரித்து சீரமைக்க முடியாத நிலையில் சாப்பிடக் கூடியவர்களின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்தது. கடந்த 2 மாதத்திற்கு முன்பு 75 ஆயிரம் பேர் மட்டுமே சாப்பிட்டனர்.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்வார்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆய்வு செய்தார். உணவின் தரத்தை ஆய்வு செய்தபோது அவற்றின் நிலையை அறிந்து அம்மா உணவகங்களை சீரமைக்கவும், பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில் சென்னை மாநகராட்சி கூட்டத்தில் அம்மா உணவகங்களை சீரமைக்க ரூ.7 கோடியே 6 லட்சம் நிதி ஒதுக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சேதம் அடைந்த பாத்திரங்கள், எந்திரங்களை மாற்றி புதிதாக வாங்குவதற்கு முடிவு செய்யப்பட்டது. ஒரு மாதத்திற்குள் 388 அம்மா உணவகங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து தரத்தை உயர்த்த வேண்டும் என்ற உத்வேகத்தில் அதிகாரிகள் செயல்படுகிறார்கள்.
அம்மா உணவகங்களில் சேதம் அடைந்த பாத்திரங்கள் கணக்கெடுக்கும் பணி முடிந்து விட்டது. எந்தெந்த பொருள் வாங்க வேண்டும் என்ற விவரங்களை மண்டல அலுவலர்களிடம் கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு அம்மா உணவகத்துக்கும் ரூ.2 லட்சம் வீதம் செலவிட தீர்மானிக்கப்பட்டு புதிய பாத்திரங்கள், மாவு அரைக்கும் எந்திரம், சப்பாத்தி எந்திரம், மிக்சி உள்ளிட்டவை வாங்க பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.
இது தவிர பில்லிங் மெஷின் வாங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. டோக்கன் கொடுப்பதற்கு பதிலாக பில்லிங் எந்திரம் புதிதாக வாங்கி பயன்படுத்தப்பட உள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
முதலமைச்சரின் உத்தரவுப்படி அம்மா உணவகங்களை சீரமைக்க விரைவான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. 388 உணவகங்களுக்கு தேவையான பொருட்கள் வாங்கப்பட உள்ளது. 10 வருடத்திற்கு முன்பு வாங்கப்பட்ட பொருட்கள் எல்லாம் பழுந்தடைந்து விட்டன. அவற்றிற்கு பதிலாக புதிய பாத்திரங்கள் விரைவில் வாங்கப்படுகிறது. தற்போது அம்மா உணவகங்களை சீரமைக்கும் பணி தொடங்கி உள்ளதால் விற்பனை அதிகரிக்க தொடங்கியுள்ளது. தினமும் 75 ஆயிரம் பேர் உணவு சாப்பிட்டு வந்த நிலையில் தற்போது 1.5 லட்சமாக உயர்ந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு சங்கர் சுவாமிகள் அருள்வாக்கு வழங்கினார்.
- விழாவில் கோவில்பட்டி மட்டுமின்றி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நடராஜபுரம் தெருவில் உள்ள சிவசக்தி பத்திரகாளியம்மன் கோவில், மலையாளத்து சுடலை மகாராஜா கோவில் ஆடி கொடை விழா மற்றும் பூக்குழி திருவிழா கடந்த 1-ந்தேதி தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சாமக்கொடை மற்றும் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி இன்று அதிகாலை நடைபெற்றது. இதில் கோவில் பூசாரி ஸ்ரீ சங்கர் சுவாமிகள் கை மற்றும் நாக்கு ஆகியவற்றை அறுத்து அதில் வழிந்த ரத்தத்தை உணவில் கலந்து சாப்பிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையடுத்து ஆட்டினை அறுத்து அது சுடலை மகாராஜா சுவாமிக்கு கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
பின்னர் ஸ்ரீ சங்கர் சுவாமிகள் குழந்தைகளை கையில் வைத்துக் கொண்டு மேளதாளம் முழங்க பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு சங்கர் சுவாமிகள் அருள்வாக்கு வழங்கினார்.
அப்போது அவர் கூறுகையில், தர்மம் அழிந்து அநீதி அதிகரித்த காரணத்தினால் தான் வயநாடு நிலச்சரிவு போன்ற இயற்கை சீற்றங்கள் நடைபெற்று வருவதாகவும், அந்த இயற்கை சீற்றங்கள் தமிழகத்தை நோக்கி வருவதாகவும், மக்களின் சுயநலம்தான் இதற்கு காரணம் என்றார். விழாவில் கோவில்பட்டி மட்டுமின்றி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை 31 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தியவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்
- தமிழக அரசு, 2009-ம் ஆண்டு பட்டியல் இனத்தவர்களுக்கான 18 சதவீத இட ஒதுக்கீட்டில், அருந்ததியர்களுக்கு 3 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கியது.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ் நாட்டில் இட ஒதுக்கீட்டிற்கு சட்டப்பாதுகாப்பை பெற்றுத் தந்த இயக்கம் அ.தி.மு.க. இட ஒதுக்கீடு கொள்கையை தமிழகத்தில் 100 சதவீதம் அமல்படுத்தி, பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்கள் அனைவரும் இன்று வரை பயனடைந்து வருகின்றனர் என்றால், அதற்கு முக்கிய காரணம் அ.தி.மு.க. தான். கழகத்தின் காவல் தெய்வங்களான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது பெயர்கள் தமிழகத்தின் இட ஒதுக்கீட்டு வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் என்றென்றும் பொறிக்கப்பட்டிருக்கும்.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை 31 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தியவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.; 1991-96 ஆட்சிக் காலத்தில் சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, அன்றைய மத்திய அரசிடம் போராடி, 69 சதவீத இட ஒதுக்கீட்டை அரசியல் சாசன சட்டத்தின் 9-வது அட்டவணையில் சேர்த்து
தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து, 'சமூக நீதி காத்த வீராங்கனை' என்ற பட்டத்தைப் பெற்றவர் புரட்சித் தலைவி அம்மா. தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களில், மிகவும் தாழ்த்தப்பட்டவர்களாக இருக்கின்ற அருந்ததியர்களின் வளர்ச்சிக்காக, கழக நிறுவனர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா வழியில், எனது தலைமையிலான அ.தி.மு.க. தொடர்ந்து தாழ்த்தப்பட்ட மக்களை, குறிப்பாக அருந்ததியரை கண் இமைபோல் பாதுகாத்தது வந்தது.
தமிழக அரசு, 2009-ம் ஆண்டு பட்டியல் இனத்தவர்களுக்கான 18 சதவீத இட ஒதுக்கீட்டில், அருந்ததியர்களுக்கு 3 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கியது. ஆனால், அருந்ததியர் மக்களை வஞ்சிக்கின்ற வகையில் சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டைப் பறிக்கும் வகையிலான வழக்குகள் 2010-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் திட்டமிட்டு தாக்கல் செய்யப்பட்டன.
இந்நிலையில் பஞ்சாப், அரியானா மாநிலங்களைச் சேர்ந்த உள் இடஒதுக்கீடு சம்பந்தமான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு வழக்கும் உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றது.
எனது தலைமையிலான அம்மாவின் அரசு, அருந்ததியர் மக்களுக்கான உள் இடஒதுக்கீடு பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக, 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அன்றைய ஆதிதிரா விடர் நலச் செயலாளர் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு, அதன் பரிந்துரைகளின்படி அம்மாவின் அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டு மூத்த வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டு திறம்பட கருத்துக்களை எடுத்துரைத்தனர். அதன் அடிப்படையில் 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அருண்மிஷ்ரா தலைமையிலான 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு, அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டிற்கு சாதகமான இடைக்காலத் தீர்ப்பை வழங்கியது.
பின்பு இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது. அம்மாவின் அரசு மேற்கொண்ட சட்ட நடவடிக்கைகளின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, இன்றைய தமிழக அரசும் வாதங்களை எடுத்து வைத்ததன் அடிப்படையில்,
'அரசியல் சாசன 14-வது பிரிவை உள் ஒதுக்கீடு மீறவில்லை; பட்டியலின உட்பிரிவுகள் எதுவும் பட்டியல் வகுப்பினர் என்ற வரையறையில் இருந்து விலக்கப்படவில்லை; பட்டியல் இனத்தவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க எந்தத் தடையும் இல்லை. எனவே, எஸ்சி., எஸ்.டி. பிரிவில் உள் இடஒதுக்கீடு வழங்கியது செல்லும்' என்ற தீர்ப்பை 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் அமர்வு 1.8.2024 அன்று வழங்கியுள்ளது.
இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு வருவதற்கு முக்கிய காரணம் நீதிபதி அருண்மிஷ்ரா தலைமையிலான 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழங்கிய தீர்ப்புதான் என்பதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
இவ்வழக்கில் அ.தி.மு.க. எடுத்த முயற்சிகள், சட்ட முன்னெடுப்புகள், வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை என்பதை இந்த நேரத்தில் குறிப்பிட்டு, இந்தத் தீர்ப்பினைப் பெறுவதற்கு உறுதுணையாக இருந்த சட்ட வல்லுநர்கள், முழு ஆதரவு அளித்த தமிழ்நாடு அருந்ததியர் சமுதாய மகாசபை, அருந்ததியர் சமூக மக்கள் உள்ளிட்ட அனைவருக்கும், அ.தி.மு.க. சார்பில் எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- உயர்கல்விக்கு அரசு அதிக அளவில் நிதி ஒதுக்க வேண்டும்.
- உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடான இந்தியா, 3-வது இடத்தை நோக்கி முன்னேறுகிறது.
வேலூர்:
வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் 39-வது ஆண்டு பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில், இளநிலை, முதுநிலை மாணவர்கள் 8,205 பேர் பட்டமும், 357 பேர் முனைவர் பட்டமும், சிறப்பிடம் பிடித்த 65 பேர் தங்கப் பதக்கமும் பெற்றனர்.
விழாவுக்கு தலைமை தாங்கி பல்கலைகழக வேந்தர் ஜி.விசுவநாதன் பேசியதாவது:-
நாட்டில் 10 சதவீதம் பேர் மட்டுமே உயர்கல்வி பெறுகின்றனர். தேசிய கல்விக் கொள்கை உயர்கல்வி விகிதத்தை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என தெரிவிக்கிறது. இது சாத்தியமாக வேண்டுமெனில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் நிதியை கல்விக்கு ஒதுக்க வேண்டும். ஆனால், அதிகபட்சம் 3 சதவீதம் மட்டுமே ஒதுக்கப்படுகிறது. இதனால், கல்விச் சுமையை பெற்றோரே ஏற்க வேண்டியுள்ளது. எனவே, மத்திய, மாநில அரசுகள் கல்விக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றார்.

கவுரவ விருந்தினராக பங்கேற்ற டொயோட்டோ இந்தியா நிறுவனத்தின் முதுநிலை செயல் அதிகாரி டி.ஆர்.பரசுராமன் பேசுகையில்:-
உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடான இந்தியா, 3-வது இடத்தை நோக்கி முன்னேறுகிறது. மேலும், இளம் தலைமுறையினர் அதிகமுள்ள நாடாகவும் இந்தியா திகழ்கிறது. ஏற்றுமதி வாய்ப்புகள் அடுத்த 10 ஆண்டுகளில் 29 முதல் 30 சதவீதமாக உயரும்.
சிறு, குறு தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 6.8 கோடியிலிருந்து 14 கோடியாக மாற வாய்ப்பு உள்ளது. சைபர் செக்யூரிட்டி, ரோபாடிக்ஸ், ஆட்டோமேஷன், டிரோன்கள், 3-டி பிரிண்டிங், சாட் ஜி.பி.டி., ப்ளாக் செயின் உள்ளிட்ட 15 துறைகளில் அதிக வேலை வாய்ப்புகள் உருவாகி வருகின்றன என்றார்.

தேசியக் கல்வித் தொழில்நுட்பமன்றம் மற்றும் தேசிய அங்கீகார வாரியத் தலைவர் அனில் டி.சஹஸ்ரபுதே மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கி பேசியதாவது:-
உயர்கல்விக்கு அரசு அதிக அளவில் நிதி ஒதுக்க வேண்டும். அதேநேரத்தில், தனியார் நிறுவனங்களும் பங்களிக்க வேண்டும். உயர் கல்வி விகிதத்தை அதிகரிக்க, அரசுடன் தனியார் நிறுவனங்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மாணவர்கள் கல்வியுடன், தனித்திறன்கள் மற்றும் நற்பண்புகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
உயர்கல்வி படிக்கும் பெரும்பாலான மாணவர்கள் கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பப் பிரிவுகள் மீதே ஆர்வம் கொண்டுள்ளனர். சிவில், ஆட்டோ மொபைல், மெக்கானிக்கல் துறை களிலும் அதிக வேலைவாய்ப்புகள் உள்ளன என்பதை மாணவர்கள் உணர வேண்டும்.
நாட்டில் 2014-ல் 400 ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் இருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 1.50 லட்சமாக உயர்ந்துள்ளது. சுய தொழில் மூலம் அதிக வருவாய் ஈட்டுவதுடன், பலருக்கும் வேலை வாய்ப்பு அளிக்க முடியும். எனவே, மாணவர்கள் சுயதொழில் தொடங்க அதிக ஆர்வம் காட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், வி.ஐ.டி. துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், ஜி.வி.செல்வம், உதவி துணைத் தலைவர் காதம்பரி எஸ்.விசுவ நாதன், துணைவேந்தர் வி.எஸ். காஞ்சனா பாஸ்கரன், இணை துணை வேந்தர் பார்த்தசாரதி மல்லிக், பதிவாளர் டி.ஜெயபாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
- ஆடி பெருக்கை முன்னிட்டு இன்று காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது.
திருச்செந்தூர்:
இன்று ஆடி 18, ஆடி பெருக்கை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்
ஆடி மாதம் 18ம் தேதி ஆடி பெருக்கு என்று நம் முன்னோர்கள் கருதி இந்த நாளை புனித நாளாக கருதி விவசாய பணிகள் தொடங்குவது, வீடுகள் கட்டுமான பணிக்கு நாள் செய்வது என செய்து வருகின்றனர்.
அந்த வகையில் இன்று கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை அந்த வகையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அதிகாலையில் இருந்து ஏராளமான பக்தர்கள் கடல் மற்றும் நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
ஆடி பெருக்கை முன்னிட்டு இன்று காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 5.30க்கு விஸ்வரூப தரிசனம், 6மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.






