என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • பக்தர்கள் அதிகாலையிலேயே அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடினர்.
    • அதிகாலை 3 மணிக்கே கோவில் நடை திறக்கப்பட்டது.

    ராமேசுவரம்:

    ஆடி மாத அமாவாசை நாள் என்பது முன்னோர்களை நினைத்து வழிபட உகந்த நாளாக கருதப்படுகிறது. ஆண்டின் அனைத்து மாதங்களிலும் அமாவாசை நாட்கள் வந்தாலும் தை அமாவாசை, புரட்டாசி மாதத்தில் வரும் மகாளாய அமாவாசை, ஆடி அமாவாசை போன்ற நாட்கள் இந்து சமயத்தை பொறுத் தவரை முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

    குறிப்பாக ஆடி மாதம் வரும் ஆடி அமாவாசை தினத்தில் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது விசேஷமானதாக கருதப்படுகிறது.

    குறிப்பாக ஆற்றின் கரையிலோ, கடற்கரையிலோ முன்னோர்களை நினைத்து சிறிது எள்ளும், தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் செய்தாலே அவர்களது தாகமும், பசியும் அடங்கிவிடும் என்று புராணங்கள் கூறுகின்றன. அவ்வாறு வழிபாடு நடத் துவதால் முன்னோர்களின் அருளாசி கிடைப்பதுடன், நம் தலைமுறைகள் செழிக்கும் என்பதும் ஐதீகம்.

    அந்த வகையில் இந்த ஆண்டு இன்று ஆடி அமா வாசையாகும். அதாவது அமாவாசை திதியானது நேற்று மாலை 3.50 மணிக்கு தொடங்கி, இன்று மாலை 4.42 மணிக்கு முடிவடைகிறது. இதையொட்டி இன்று நீர்நிலை மற்றும் பல்வேறு கோவில்களில் பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    ஆடி அமாவாசையை முன்னிட்டு தென்னகத்து காசி என்று போற்றப்படும் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். நேற்று முதலே பஸ், வேன், கார் உள்ளிட்ட வாகனங்களில் திரண்டனர். அவர்கள் இன்று அதிகாலையிலேயே அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடினர்.

    பின்னர் அவர்கள் மறைந்த தங்களுடைய தந்தை, தாயார், தாத்தா, பாட்டி, பாட்டனார், முப் பாட்டனார் உள்ளிட்டோ ரின் பெயர்களை கூறியும், நினைவில் இருந்த முன் னோர்களுக்கு புரோகிதர்கள் மூலம் கடற்கரை உள்ளிட்ட இடங்களில் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

    தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடி ராமநாத சுவாமி, பர்வத வர்த்தினி அம்பாளை வழி பட்டனர். முன்னதாக இன்று அதிகாலை 3 மணிக்கே கோவில் நடை திறக்கப்பட்டது.

    4 மணி வரை ஸ்படிக லிங்க தரிசனம் நடைபெற்று தொடர்ந்து வழக்கமான பூஜை நடைபெற்றது. வழக் கமாக பகல் 1 மணிக்கு நடை சாத்தப்படும். ஆடி அமாவாசையான இன்று நடை சாத்தப்படாது. இரவு 9 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும் என்றும், இன்று அதிகாலை முதல் இரவு வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்யவும், தீர்த்த நீராடவும் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கோவில் இணை ஆணையர் சிவராம் குமார் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே தற்போது ராமேசுவரம் கோவிலில் நடைபெற்று வரும் ஆடி திருக்கல்யாண திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக 7-வது நாளான இன்று (4-ந்தேதி, ஞாயிற்றுக்கிழமை) ஆடி அமாவாசையை முன்னிட்டு காலை 9 மணிக்கு அம்பாள் தங்கப்பல்லக்கிலும், பகல் 11 மணிக்கு ஸ்ரீ ராமபிரான் தங்க கருட வாகனத்தில் அக்னி தீர்த்த கடற்கரையில் தீர்த்தவாரி பூஜைக்கு எழுந் தருளும் நிகழ்ச்சியும் நடை பெற்றது.

    • அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியாக நீடித்து வருகிறது.
    • கர்நாடகாவில் மழையின் தீவிரம் குறைந்ததால் நீர்வரத்தும் படிபடியாக குறைந்தது.

    சேலம்:

    கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்தது. இதன் காரணமாக கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகள் நிரம்பியதையடுத்து உபரிநீர் தமிழகத்துக்கு காவிரியில் வெளியேற்றப்பட்டது. அதிகபட்சமாக 2 லட்சம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக நீர்வரத்து அதிகரித்து மேட்டூர் அணையும் நிரம்பியது.

    கடந்த 30-ந் தேதி மாலை 6 மணிக்கு அணை நிரம்பியதும் உபரிநீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. பின்னர் படிபடியாக உபரிநீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு அதிகபட்சமாக 1.80 லட்சம் கனஅடி வரை திறக்கப்பட்டது. இதன் காரணமாக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிபாளையம், மற்றும் ஈரோடு மாவட்டத்தில் காவிரி கரையோரம் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. முன்எச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு வசித்த பொதுமக்கள் பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையே கர்நாடகாவில் மழையின் தீவிரம் குறைந்ததால் நீர்வரத்தும் படிபடியாக குறைந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இதனால் உபரிநீர் திறப்பும் வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியாக நீடித்து வருகிறது. ஆனாலும் தொடர்ந்து காவிரி கரையோர பகுதிகளை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    • ஆடி அமாவாசையும் ஆடி பெருக்கும் பூச நட்சத்திர தினத்தன்று வந்ததால், வழக்கத்தை விட திரளான பக்தர்கள் ஜோதி தரிசனத்தில் பங்கேற்றனர்.
    • வள்ளலார் சித்திபெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாக திருமாளிகையில், நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு வழிபாடும், மவுன தியானமும் நடைபெற்றது.

    வடலூர்:

    கடலூர் மாவட்டம் வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்திய ஞானசபை உள்ளது. இங்கு மாதந்தோறும் பூச நட்சத்திரத்தில் ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுவது வழக்கம். அதன்படி ஆடி மாத பூச நட்சத்திர தினத்தையொட்டி நேற்று இரவு 7.45 மணிக்கு 6 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் திரளானோர் கலந்து கொண்டு அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை, அருட்பெருஞ்ஜோதி என்ற வள்ளலாரின் மகாமந்திரத்தை உச்சரித்தவாறு ஜோதி தரிசனம் மேற்கொண்டனர்.

    ஆடி அமாவாசையும் ஆடி பெருக்கும் பூச நட்சத்திர தினத்தன்று வந்ததால், வழக்கத்தை விட திரளான பக்தர்கள் ஜோதி தரிசனத்தில் பங்கேற்றனர். தொடர்ந்து வள்ளலார் சித்திபெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாக திருமாளிகையில், நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு வழிபாடும், மவுன தியானமும் நடைபெற்றது.

    • வயநாடு மாவட்டத்தில் வரலாறு காணாத நிலச்சரிவு ஏற்பட்டு 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
    • 24 தமிழர்களும் உயிரிழந்துள்ள செய்தி மிகுந்த வேதனையை தருகிறது.

    கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் ஏராளமான மக்கள் வீடுகள், உடமைகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பாக 18 எம்.எல்.ஏ.க்கள் தங்களது ஒரு மாத சம்பளத்தை நிவாரணமாக வழங்க முடிவு செய்துள்ளனர்.

    இதுதொடர்பாக காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் வரலாறு காணாத நிலச்சரிவு ஏற்பட்டு 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததோடு, நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்து உடைமைகளை இழந்து பரிதாப நிலையில் உள்ளனர். இதில் 24 தமிழர்களும் உயிரிழந்துள்ள செய்தி மிகுந்த வேதனையை தருகிறது.

    இவர்களது துயர் துடைக்க சட்டமன்ற காங்கிரஸ் கட்சி சார்பாக 18 சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களது ஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதியாக வழங்குவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இளமை பருவத்தில் பொறியாளர் படிப்பு படித்து சென்னையில் பயிற்சி பெற்று ராணுவ பொறியாளராக பணியில் சேர்ந்த சீதா ஷெல்கே என்பவர் வயநாடு பகுதியில் சூரல்மலை பகுதியில் 144 ராணுவ வீரர்களுடன் 36 மணி நேரத்தில் இரும்பு பாலம் அமைத்து நிவாரண பணிகள் துரிதமாக நடைபெற மகத்தான சாதனை புரிந்தது மிகுந்த வரவேற்புக்குரியது.

    ராணுவ பொறியாளர் சீதா ஷெல்கே வயநாட்டில் பேரிடருக்கு எதிராக ஒரு ராணுவ வீரராக பணியாற்றியதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அதேபோல, கேரள மாநிலம், வயநாடு மாவட்டம், சூரல்மலை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி படுகாயம் அடைந்தவர்களுக்கு ஆற்று வெள்ளத்தின் நடுவே ஜிப்லைன் கம்பி மூலம் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் செவிலியர் சபீனா என்பவர் முதலுதவி சிகிச்சை மேற்கொண்டு சாதனை படைத்துள்ளார்.

    நீலகிரி மாவட்டம், கூடலூரில் உள்ள தனியார் புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனையில் பணியாற்றி வரும் இவர் ஜிப் லைன் மூலம் ஆற்றை கடந்து சென்று சிகிச்சை அளிக்க ஆண் செவிலியர்கள் இல்லாத நிலையில் துணிச்சலாக செயல்பட்டு மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் வழங்கியும், நோயாளிகளுக்கு முதலுதவி சிகிச்சையும் அளித்துள்ளார். இவரது சேவை மனப்பான்மை மிக்க துணிச்சலான பணியை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்."

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சிறப்பு மருத்துவ முகாம்களின் எண்ணிக்கை இன்று 50ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன.
    • வெள்ளச் சூழலைப் பொறுத்து மருத்துவ முகாம்களின் எண்ணிக்கை தேவைக்கேற்ப அதிகரிக்கப்படும் என்று அறிவிப்பு.

    காவிரி ஆறு மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    அப்பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநில சுகாதாரத்துறை மருத்துவ முகாம்களை அமைத்துள்ளது.

    காவிரி டெல்டா மாவட்ட மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படாமல் இருக்க, 37 மருத்துவ முகாம்கள் உடனடியாக அமைக்கப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தெரிவித்துள்ளார்.

    இந்த முகாம்களின் எண்ணிக்கை இன்று 50ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன.

    வெள்ளச் சூழலைப் பொறுத்து மருத்துவ முகாம்களின் எண்ணிக்கை தேவைக்கேற்ப அதிகரிக்கப்படும் என்றும் கூறினார்.

    மேலும், இந்த மருத்துவ முகாம்களில் சளி, காய்ச்சல், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரையின் அளவு போன்ற புகார்கள் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தேவையான சிகிச்சை அளிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

    இந்நிலையில், இன்றைய நிலவரப்படி நாமக்கல், ஈரோடு, கடலூர், கரூர், தஞ்சாவூர், தருமபுரி ஆகிய இடங்களில் 1,531 பேர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த பகுதிகளில் தயார் நிலையில் உள்ள துணை மருத்துவ பணியாளர்கள் மற்றும் 108 ஆம்புலன்ஸ் சேவைகளுடன் போதுமான அளவு நுண்ணுயிர் எதிர்ப்பிகள், ஓஆர்எஸ் பாக்கெட்டுகள் உள்ளன.

    பொதுமக்கள் தூய்மையை கடைபிடிக்க வேண்டும் என்றும் சோப்பு போட்டு கைகளை கழுவ வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். காய்ச்சிய தண்ணீரைக் குடிக்கவும், சத்தான உணவுகளை உட்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது.

    குழந்தைகள் வெள்ள நீர் அல்லது அருகிலுள்ள பகுதிகளுக்கு செல்லாமல் இருப்பதை பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும். டெங்கு, மலேரியாவை தடுக்க கொசுவலை பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும்.

    மேலும், மீட்புப் பணியாளர்கள் அறிவுறுத்தும் வரை மக்கள் தற்காலிக தங்குமிடங்களை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் வதந்திகளைப் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

    மழைக்காலத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவ முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டு மருத்துவ உதவிகளை பெற்றுக்கொள்ளுமாறு மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    • தமிழகத்தில் தொடர்ந்து நிலவிவரும் படுகொலைகள்.
    • மின்கட்டண உயர்வு உள்ளிட்டவை கண்டித்து ஆர்ப்பாட்டம் அறிவிப்பு.

    தமிழகத்தில் சீர்கெட்ட சட்டம்- ஒழுங்கு, மின் கட்டண உயர்வு உள்ளிட்டவை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என நாம் தமிழர் கட்சி தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

    பேரன்பு கொண்டு நாங்கள் பெரிதும் நேசிக்கின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!

    தமிழகத்தில் தொடர்ந்து நிலவிவரும் படுகொலைகள், சீர்கெட்ட சட்டம்-ஒழுங்கு, மின்கட்டண உயர்வு இவற்றையெல்லாம் கண்டித்து,

    மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

    சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நாளை (04-08-2024) காலை 11 மணிக்கு மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!

    இலக்கு ஒன்றுதான்! இனத்தின் விடுதலை!

    இனம் ஒன்றாவோம்! இலக்கை வென்றாவோம்!

    நாம் தமிழர்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • நகராட்சி அலுவலகம், ஆணையர் அறையில் சோதனை செய்தனர்.
    • ஆணையர் முதல் டிரைவர் வரை பலர் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பட்டுக்கோட்டை:

    தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் நேற்று மாலை அவசர கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டம் முடிந்த பிறகு கவுன்சிலர்கள் வெளியேறினர். பின்னர், நகராட்சி அதிகாரிகளை வைத்து ஆணையர் குமரன் கூட்டம் நடத்தியுள்ளார்.

    அப்போது திடீரென பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. நந்தகோபால் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் அருண் பிரசாத், சரவணன், பத்மாவதி மற்றும் லஞ்ச ஒழிப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் தலைமை காவலர்கள் அடங்கிய குழுவானது டெபுட்டி இன்ஸ்பெக்சன் செல் ஆபீஸர் ஐயம்பெருமாள் மற்றும் குணசேகரன் ஆகியோர் சென்று அதிகாரிகளிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். நகராட்சி அலுவலகம், ஆணையர் அறையில் சோதனை செய்தனர்.

    நேற்றிரவு 8 மணிக்கு தொடங்கிய சோதனை இன்று (சனிக்கிழமை) காலை 6 மணி வரை மேற்கொள்ளப்பட்டது. சோதனை முடிவில் கணக்கில் வராத கையூட்டு தொகைகளை வைத்திருந்த நகராட்சி ஆணையர் குமரனிடமிருந்து ரூ.5 லட்சம் கைப்பற்றப்பட்டது. இதேப்போல் உதவி பொறியாளர் மனோகரனிடம் ரூ.80 ஆயிரம், ஒப்பந்ததாரர் எடிசனிடம் ரூ.66 ஆயிரம், டிரைவர் வெங்கடேசனிடம் ரூ.8 ஆயிரம் என மொத்தம் ரூ.6 லட்சத்து 54 ஆயிரம் கணக்கில் வராத கையூட்டு பணம் சோதனையில் கைப்பற்றப்பட்டது. மேலும் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியது.

    பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் நடந்த இந்த அதிரடி சோதனையில் ஆணையர் முதல் டிரைவர் வரை பலர் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • போதைப் பொருட்கள் நாடு கடந்து இந்தியாவுக்குள் நுழைகிறது. இதை யார் தடுக்க வேண்டும்.
    • தமிழ்நாட்டு காவல்துறை மீது நம்பிக்கை இருக்கிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அடுத்த ஓடா நிலையில் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 219-வது நினைவு நாளையொட்டி அவரது உருவ சிலைக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    பின்னர் செல்வப்பெருந்தகை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தியாகத்தின் திருஉருவமாய் இந்த மண்ணில் பிறந்து வளர்ந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சுந்தரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலைக்கு காங்கிரஸ் சார்பில் வீரவணக்கத்தை செலுத்தி உள்ளோம். பிரிட்டிஷ்காரர்களை விரட்டி அடித்த பெருமை தீரன் சின்னமலைக்கு உண்டு. ஆனாலும் பிரிட்டிஷ்காரர்களால் தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்டார்.

    இந்திய சுதந்திரப் போராட்ட வேங்கை, தீப்பொறி இந்த மண்ணிலிருந்து பிறந்தது. இது போன்ற தலைவர்கள் வாங்கி கொடுத்த இந்த சுதந்திரத்தை இன்று கேலிக்கூத்தாக்கியுள்ளது பாசிச சக்திகள். சுதந்திரத்துக்காகவும், இந்த மண்ணுக்காகவும் போராடியவர் தீரன் சின்னமலை. அவரை எப்படி பிரிட்டிஷ்காரர்கள் பலி வாங்கினார்களோ அதே போல் பிரிட்டிஷ் ஏகாதிபதியத்தை எதிர்த்தவர்களையும் அவர்கள் பலி வாங்கினர். அவரைப் போன்று இப்பவும் சுதந்திரத்துக்காகவும், மக்களின் வாழ்வாதாரத்துக்காகவும் ராகுல் காந்தி குரல் கொடுத்து வருகிறார். அவர் மீது உண்மைக்கு புறம்பான பொய்யான வழக்குகள் போடப்படும் நிலை இந்த மண்ணில் நிகழ்ந்து வருகிறது. இதை வன்மையாக கண்டிக்கிறோம்.

    சட்ட ஒழுங்கை பாதுகாப்பது அரசின் கடமை. போதைப்பொருட்கள் எங்கிருந்து வருகிறது. போதைப் பொருட்கள் நாடு கடந்து இந்தியாவுக்குள் நுழைகிறது. இதை யார் தடுக்க வேண்டும். பா.ஜ.க அரசிடம் தான் ராணுவ அமைப்பு, விமானம், கடற்படை, பிரிவு என பல்வேறு அமைப்புகள் இருக்கு. அவர்களால் ஏன் தடுத்து நிறுத்த முடியவில்லை. குஜராத் தான் போதை பிறப்பிடம் என்று சொல்கிறார்கள். அங்கிருந்துதான் தமிழ்நாடு பல்வேறு இடங்களுக்கு செல்கிறது என்று சொல்கிறார்கள். இதை தடுத்து நிறுத்த வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உள்ளது. போதைப் பொருள் கலாச்சாரம் எங்கு ஆரம்பிக்கிறது என்று பார்க்க வேண்டும். குஜராத்தில் ஒரு தொழிற்சாலையில் பிடித்திருக்கிறார்கள். அங்கு கட்டுப்படுத்தினாலே தமிழ்நாட்டுக்குள் போதைப் பொருட்கள் வராது என ஆய்வாளர்கள் கட்டுரை எழுதி உள்ளனர்.

    அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற நிபுணர்கள் கேட்ட கேள்விக்கு, பதில் அளித்து செல்வப்பெருத்தகை கூறும் போது, நாங்கள் எல்லாம் பாதுகாப்பாக தான் இருக்கிறோம். தமிழ்நாட்டு காவல்துறை மீது நம்பிக்கை இருக்கிறது. கொலை வழக்கில் புலன் விசாரணை நடந்து வருகிறது. தி.மு.க.வைச் சேர்ந்த அமைச்சர் கே.என். நேருவின் தம்பி ராமஜெயம் படுகொலை செய்யப்பட்டு 10 வருடங்கள் ஆகிறது. பத்தாண்டுகள் ஆகிறது யாரையும் கண்டுபிடிக்கவில்லை. அப்போது அவங்க ஆட்சி தானே நடந்தது.

    கொலை வழக்கில் கண்டபடி யாரையும் பிடித்து சிறையில் அடைக்க முடியாது. தீவிர புலன் விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளியை அடையாளம் கண்டுபிடிக்க வேண்டும். இப்பொழுது எங்களது மாவட்ட தலைவர் ஜெயக்குமார் கொலை வழக்கு ஆகட்டும் சி.பி.சி.ஐ.டி ஐ.ஜி அன்பு என்னிடம் எல்லா விவரத்தையும் கூறியுள்ளார். ஏறக்குறைய குற்றவாளி அருகே நெருங்கி விட்டார்கள். கொலை வழக்குகளை எடுத்தும் கவுத்தோம் என்று செய்துவிட முடியாது. புலன் விசாரணை அடிப்படையில் உண்மையான குற்றவாளியை வெளியே கொண்டு வர வேண்டும்.

    விசாரணை நடந்து வருகிறது. கண்டிப்பாக உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிப்பார்கள். தி.மு.க.வுடன் இந்திய கூட்டணி வலிமையாக உள்ளது நாங்கள் யாரிடமும் செல்ல வேண்டியதில்லை. நாங்கள் நேர்மையாக இருக்கிறோம். எங்களுக்குள் எந்த ஒரு பாரபட்சமும் கிடையாது. தி.மு.க. தலைமையில் இந்திய கூட்டணி தமிழ்நாட்டில் வலிமையாக உள்ளது. எங்கள் கூட்டணியை யாராலும் அசைக்க முடியாது. கார்த்திக் சிதம்பரம் ஆகட்டும், ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஆகட்டும், நான் ஆகட்டும் கூட்டணி குறித்து நாங்கள் தீர்மானிக்க முடியாது அகில இந்திய தலைமை தான் தீர்மானிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விபத்து குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • ஒரே குடும்பத்தில் 4 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே உள்ள ரெண்டலப்பாறையை சேர்ந்தவர் ஜார்ஜ் (வயது 30). எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி அருணா (28). இவர்களுக்கு ரக்ஷிதா (7) என்ற மகளும், ரக்ஷன் (5) என்ற மகனும் உள்ளனர். இன்று அருணாவின் தாய் சரோஜாதேவி (60) என்பவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு ஜார்ஜ் தனது குடும்பத்தினருடன் திண்டுக்கல்-நத்தம் சாலையில் வந்து கொண்டிருந்தார்.

    நல்லாம்பட்டி அருகே இவர்கள் வந்து கொண்டிருந்த போது எதிரில் நத்தம் நோக்கி வந்த ஒரு கார் கண்ணிமைக்கும் நேரத்தில் ஜார்ஜ் மோட்டார் சைக்கிள் மீது மோதி சுமார் 100 மீட்டர் தூரம் இழுத்துச் சென்றது. அப்போது மற்றொரு பைக்கில் வந்த நொச்சிஓடைப்பட்டியை சேர்ந்த குழந்தைசாமி என்பவர் மீதும் மோதியது. இதில் ஜார்ஜ், அருணா, அவரது 2 குழந்தைகள் ஆகியோர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர்.

    இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் காரை ஓட்டி வந்த நபரை சுற்றி வளைத்து பிடித்தனர். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பலியான 4 பேர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்த சரோஜாதேவி உள்பட 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஒரே பைக்கில் 5 பேர் வந்ததால் கார் மோதிய வேகத்தில் பைக்கை நிறுத்த முடியாமல் விபத்தில் அவர்கள் சிக்கிக்கொண்டது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியடைய வைத்தது. மேலும் ஒரே குடும்பத்தில் 4 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • வடிவேலு நடிக்கும் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு சில வாரங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
    • பொது மக்கள் போட்டா போட்டி போட்டு அங்கு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    கல்லிடைக்குறிச்சி:

    நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, முக்கூடல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இயக்குனரும், நடிகருமான சுந்தர்.சி இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு சில வாரங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்த படத்திற்காக அம்பாசமுத்திரம் மற்றும் கல்லிடைக்குறிச்சி ரெயில்வே நிலையங்களின் எதிரே கடந்த 2 நாட்களாக படப்பிடிப்பு பணி முழு வீச்சில் நடை பெற்று வருகிறது. இந்த காட்சிகளில் நடிப்பதற்காக நகைச்சுவை நடிகர் வடிவேலு அங்கு முகாமிட்டுள்ளார்.

    இந்நிலையில் நேற்று அந்த இடத்தில் ஒரு கேரவனில் வடிவேலு தங்கியிருப்பதை கேள்விப்பட்டு அவரை பார்ப்பதற்காக அப்பகுதி மக்கள் திரண்டனர். அவர்கள் கேரவினை முற்றுகையிட்டு நின்று கொண்டிருந்தனர்.

    இதனை அறிந்த வடிவேலு, வேனில் இருந்து இறங்கி வெளியே வந்து முகம் கோணாமல் அனைவருடனும் தனித்தனியாக நின்று கொண்டு செல்பி எடுக்க போஸ் கொடுத்தார். பொது மக்கள் போட்டா போட்டி போட்டு அங்கு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    • பவானி காவிரி கரை பகுதிகளில் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
    • கூடுதுறை அழகிய தீவு போல் காட்சியளிக்கிறது.

    பவானி:

    ஈரோடு மாவட்டம் பவானி நகரில் பிரசித்தி பெற்ற கோவிலாக பவானி சங்கமேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெற்று வருவது வழக்கம்.

    அதேபோல் ஆடி அமாவாசை அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து குடும்பத்தில் இறந்த முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் செய்து வழிபாடு மேற்கொள்வதும், ஆடி 18 அன்று தம்பதியர் புதிய தாலிக்கயிறு மாற்றிக் கொள்ளும் நிகழ்ச்சியும் காவிரி தாயை வழிபாடு மேற்கொள்ளும் நிகழ்ச்சியும் நடைபெறுவது வழக்கம்.

    இந்த நிலையில் மேட்டூர் அணை முழு கொள்ளளவு நிரம்பிய நிலையில் உபரி நீராக அணையில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதனால் பவானி காவிரி கரை பகுதிகளில் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் கரைபுரண்டு ஒடுகிறது. பவானி கூடுதுறை இரட்டை விநாயகர் சன்னதியின் மேல் படிக்கட்டு முதல் தண்ணீர் தொட்டு செல்கிறது. இதனால் கூடுதுறை அழகிய தீவு போல் காட்சியளிக்கிறது.

    இதையடுத்து பக்தர்களின் நலன் கருதி மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுபடி சங்கமேஸ்வரர் கோவில் நிர்வாகத்தினர் மூலம் காவிரி ஆற்றுக்கு பக்தர்கள் செல்லாத வகையில் தகர செட் அமைத்து அடைக்கப்பட்டு பாதுகாப்பு செய்து உள்ளனர். அதேபோல் ஆண், பெண் என பக்தர்கள் தனித்தனியாக குளிக்கும் வகையில் 2 இடங்களில் சமர்பாத் அமைத்து குளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் தொட்டிகள் அமைத்து குளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பொதுமக்கள் திதி, மற்றும் தர்ப்பணம் கொடுக்க பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது.

    ஆடிப்பெருக்கு விழாவையொட்டி இன்று அதிகாலை முதலே பொதுமக்கள் பலர் கூடுதுறைக்கு வந்து இருந்தனர். இதை தொடர்ந்து ஆண்கள் மற்றும் பெண்கள் தனித்தனியாக ஷவர் பாத் மற்றும் தொட்டிகளில் நிரப்பட்ட தண்ணீர்களில் புனித நீராடினர். புதுமண தம்பதிகள் பலர் வந்து ஷவர்களில் புனித நீராடி சங்கமேஸ்வரர், வேதநாயகி அம்மனை வழிபட்டனர்.

     

    தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து விட்டு சென்றனர். மேலும் பலர் கன்னிமார் பூஜை செய்தனர்.

    இதே போல் அம்மாபேட்டை காவிரி கரை பகுதிகளில் பக்தர்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் பக்தர்கள் புனித நீராடவும், தர்ப்பணம் கொடுக்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    இதையடுத்து அம்மாபேட்டை சொக்கநாதன் கோவில் காவிரி கரை படித்துறை, சிங்கம் பேட்டை, காடப்பநல்லூர், காட்டூர், நெரிஞ்சிபேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள காவிரி கரையோர பகுதிகளில் பக்தர்கள் புனித நீராட ஆற்றில் இருந்து குழாய்கள் மூலம் தண்ணீர் எடுத்து ஷவர் அமைக்கப்பட்டு உள்ளது.

    அதில் பக்தர்கள் பலர் புனித நீராடி திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து வருகிறார்கள். மேலும் பக்தர்கள் பலர் ஷவர்களில் குளித்து விட்டு சொக்கநாதரை வழிபட்டனர். இதில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் வருவாய் துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

    இதே போல் ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் இன்று பொதுமக்கள் பலர் வந்து இருந்தனர். ஆனால் அங்கு பொதுமக்கள் உள்ளே செல்லாத வகையில் தடுப்பு அமைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு அன்று மக்கள் காவிரி தாய் வழிபாடு நடத்துவார்கள். ஆனால் தடை விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் ஏமாற்றுத்துடன் சென்றனர்.

    மேலும் இந்த பகுதியில் தண்ணீர் அதிகளவில் செல்வதால் மக்கள் புனித நீராடவும், திதி மற்றும் தர்ப்பணம் கொடுக்கவும் தடை விதிப்பட்டு இருந்தது. இதையடுத்து காலை முதலே மக்கள் வந்த வண்ணம் இருந்தனர். அவர்களை போலீசார் எச்சரித்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    மேலும் பொதுமக்கள் கருங்கல்பாளையம் காளிங்கராயன் வாய்க்காலில் பக்தர்கள் பலர் தடையை மீறி புனித நீராடி காவிரி தாய் வழிபாடு நடத்தினர். பொதுமக்கள் பலர் காளிங்கராயன் வாய்க்காலில் திதி, தர்ப்பணமும் கொடுத்தனர்.

    இதே போல் கொடுமுடி காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளிலும் பக்தர்கள் புனித நீராட அனுமதிக்கவில்லை. ஆனால் பக்தர்கள் திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து விட்டு சென்றனர். மேலும் பக்தர்கள் பலர் கொடுமுடிக்கு வந்து மகுடேஸ்வரர் மற்றும் வீரநாராயண பெருமாளை வழிபட்டு சென்றனர். அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச 27°-28° வெப்பநிலை செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வலுவான தரைக்காற்று 30 -40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வலுவான தரைக்காற்று 30 -40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மாவட்டம், கோவை மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    5-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    6-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27°-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச 27°-28° வெப்பநிலை செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    இன்று முதல் 7-ந்தேதி வரை மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    ×