என் மலர்
உள்ளூர் செய்திகள்
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.
- பக்தர்கள் குவிந்ததால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
திருவள்ளூர்:
திருவள்ளூரில் உள்ள வைத்திய வீரராகவ பெருமாள் கோவில் சிறப்பு பெற்றது. இந்த கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழுகிறது.
ஆண்டு தோறும் ஆடி அமாவாசை மற்றும் தை, ஆடி, புரட்டாசி மாதங்களில் வரும் மகாளய அமாவாசை தினத்தில் திரளான பக்தர்கள் கோவில் குளக் கரையில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து பெருமாளை வழிபடுவது வழக்கம்.

இன்று ஆடி அமாவாசை நாள் என்பதால் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க திருவள்ளூர் வீரராகவர் கோவிலுக்கு நேற்று நள்ளிரவு முதலே சென்னை, காஞ்சிபுரம், வேலூர், ராணிப் பேட்டை, திருவண்ணாமலை மற்றும் ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்தனர்.
பக்தர்கள் தங்கும் இடம், விடுதிகள் அனைத்தும் நிரம்பியதால் ஏராளமா னோர் கோவில் நுழைவு வாயில், வெளியே உள்ள சிமெண்ட் சாலை, பஸ் நிலையம், ரெயில் நிலையம், பெட்ரோல் பங்க் மற்றும் நடைபாதைகளிலும் தூங்கினர். இரவில் திடீரென சிறிது நேரம் மழை பெய்ததால் பக்தர்கள் கடும் அவதி அடைந்தனர்.

ஆடிஅமாவாசையை முன்னிட்டு இன்று அதி காலை வீரராகவர் கோயில் அருகில் உள்ள ஹிருத்தா பநாசினி குளம் மற்றும் காக்களூர் பாதாள விநாயகர் கோயில் அருகே உள்ள ஏரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். பின்னர் அவர்கள் அங்கு தயாராக இருந்த புரோகிதர்களிடம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
இதைத்தொடர்ந்து பக்தர்கள் மூலவர் வீரராகவப் பெருமாளை வழி பட வந்தனர். ஒரே நேரத்தில் திரளான பக்தர்கள் குவிந்ததால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் நீண்ட வரிசையில் காத்திருந்து அவர்கள் பெரு மாளை வழிபட்டனர். பக்தர்கள் கூட்டம் காரண மாக திருவள்ளூர் நகரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
- 18 நாட்கள் விரதம் இருந்து நேர்த்திக்கடன்.
- 15 க்கும் மேற்பட்வர்களுக்கு தலையில் காயம்.
குளித்தலை:
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள மேட்டு மகாதானபுரத்தில் ஸ்ரீ மஹாலட்சுமி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு விஜயநகரப் பேரரசின் மன்னரான கிருஷ்ண தேவராயர் ஆட்சியில் கட்டப்பட்டதாகும்.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு மாறுநாள் ஆடி 19-ம்நாள் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறும். இதற்காக பக்தர்கள் ஆடி மாதம் 1-ந் தேதியில் இருந்து 18 நாட்கள் விரதம் இருப்பார்கள். பின்னர் ஆடி 19-ல் நேர்த்தி க்கடன் செலுத்துவார்கள்.
அதன்படி இன்று நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில் விரதம் இருந்த ஆண்கள், பெண்கள் என 600-க்கும் மேற்பட்டோர் காலை 7 மணியில் இருந்து கோவில் முன்பு வரிசையாக அமர்ந்து காத்திருந்தனர்.
தொடர்ந்து கோவில் பாரம்பரிய பூசாரி மகாலட்சுமிக்கு அலங்கார அபிஷேகம் செய்தார். இதையடுத்து மேள தாளம் முழங்க ஆணிகள் பொருத்தப்பட்ட பாதணி மீது நின்று பூசாரி கொடிக்கம்பம் மீது தீபம் ஏற்றப்பட்டது.
இதை தொடர்ந்து நேர்த்திக்கடன் செலுத்த அமர்ந்து இருந்த பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்தார், இதை பக்தி பரவசத்துடன் பக்தர்கள் கண்டு தரிசித்தனர், இந்த தேங்காய் உடைக்கும் போது 15 க்கும் மேற்பட்வர்களுக்கு தலையில் காயம் ஏற்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் குடிபாட்டு மக்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் டி.எஸ்.பி.க்கள் காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் செந்தில்குமார், முத்துகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் சுமார் 200-க்கும் மேற்பட்ட போலீஸார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்,
கரூர் மாவட்டத்தில் இந்நிகழ்ச்சி மிகவும் சிறப்பு பெற்றது என்பதால் இதை காண சென்னை, கோவை, திருச்சி, பெங்க ளூரு, தேனி, மதுரை, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல பகுதியில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.
- முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தும், அதன்பின் சுவாமி தரிசனம் செய்தும் வழிபட்டனர்.
- கோவிலில் அதிகளவில் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.
திருச்செந்தூர்:
தமிழ் மாதங்களில் ஆடி மற்றும் தை மாதம் வரும் அமாவாசையானது முக்கிய விரத நாட்களாகும். இந்நாட்களில் இந்துக்கள் நதிக்கரை மற்றும் கடற்கரையில் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடுவது வழக்கமாகும்.
இந்த ஆண்டுக்கான ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து கால சந்தி பூஜையாகி தீர்த்தவாரி நடைபெற்றது.
ஆடி அமாவாசையை முன்னிட்டு, அதிகாலையில் இருந்து ஏராளமானோர் கடலில் புனித நீராடி, தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தும், அதன்பின் சுவாமி தரிசனம் செய்தும் வழிபட்டனர். இதனால் கோவிலில் அதிகளவில் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.
- யானை ஒன்று வாழை மரங்களை சேதப்படுத்தி வந்துள்ளது.
- யானை தாக்கியதில் விவசாயியின் வலது கால் முறிவு ஏற்பட்டுள்ளது .
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் ஏரியூர் அருகே தொன்ன குட்டஹள்ளி குட்டக்காடு பகுதியைச் சேர்ந்த சின்ன ராஜ். இவரது மகன் செல்வகுமார், இவர் அவருடைய விவசாய நிலத்தில் சுமார் 4 ஏக்கரில் வாழை மரங்கள் வைத்து விவசாயம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் அடிக்கடி ஒற்றை யானை ஒன்று அவரது விவசாய நிலத்தில் உள்ள வாழை மரங்களை சேதப்படுத்தி வந்துள்ளது. அதேபோல் நேற்று இரவு ஒற்றை யானை வாழை தோட்டத்தை சேதப்படுத்தி விட்டு விவசாயி தூங்கி கொண்டிருந்த போது விவசாயியை தாக்கியுள்ளது. அருகிலுள்ள விவசாயிகள் இதனைக் கண்டு சத்த மிட்டத்துடன் பட்டாசுகளை வெடித்து அங்கிருந்து யானையை விரட்டி அடித்தனர்.
பின்னர் காயம் அடைந்த விவசாயியை 108 ஆம்புலன்ஸ் மூலம் பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். யானை தாக்கியதில் விவசாயியின் வலது கால் முறிவு ஏற்பட்டுள்ளது .
இந்த சம்பவம் அப்பகுதி கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. உடனடியாக வனத்துறையினர் ஒற்றை யானையை காட்டுக்குள் விரட்ட வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
- தடுப்பணைக்கு செல்லும் நுழைவு வாயில் அடைக்கப்பட்டது.
- தடுப்புகள் அமைத்து கண்காணிக்கும் போலீசார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணை பவானி ஆற்றின் குறுக்கே சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அணையாகும். சுமார் 15 அடி உயரத்தில் இருந்து 300 மீட்டர் நீளத்திற்கு அருவி போல் தண்ணீர் கொட்டுகிறது.
இந்த தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கும், ரசிப்பதற்கும் கோபி, சத்தி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வந்து செல்கிறார்கள்.
அதேபோல் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் திருப்பூர், கோவை, கரூர், சேலம், நாமக்கல் உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான மக்கள் வரு கிறார்கள்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக குளிக்க முடியும் என்பதாலும் அரசு விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் கொடிவேரி அணைக்கு வருவது வழக்கம்.
இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பவானி சாகர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்து உள்ளது. இதனால் நீர்வரத்து அதிகரித்து பவானிசாகர் அணை நிரம்பும் நிலையில் உள்ளது. இதனால் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது.
மேலும் பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் பாசனத்துக்கு 1500 கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் பவானி ஆற்றில் அதிகளவு தண்ணீர் சென்று கொண்டு உள்ளது.
இதனால் கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. மேலும் நீர்வரத்து அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது.
இந்த நிலையில் விடு முறை நாட்களில் மக்கள் அதிகளவில் வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. இதை யொட்டி பாதுகாப்பு கருதி கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து கொடிவேரி தடுப்பணைக்கு செல்லும் நுழைவு வாயில் அடைக்கப்பட்டது.
மேலும் கொடிவேரி தடுப்பணை பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு அங்கு தடைக்கான அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு இருந்தது. போலீசார் மற்றும் அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பொதுமக்கள் பலர் கொடிவேரிக்கு வந்து இருந்தனர். அவர்களை போலீசார் தடுத்தி நிறுத்தி நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் கொடிவேரியில் மக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது என அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
மேலும் இது பற்றி தெரியாமல் பல்வேறு பகதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் கார், வேன், இரு சக்கர வாகனங்களிலும் வந்திருந்தனர். கொடிவேரியில் தடை விதிக்கப்பட்டு இருந்ததால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதை தொடர்ந்து அந்த பகுதியில் போலீசார் தொடர்ந்து கண்காணித்து மக்கள் அணைக்கு செல்லாத வகையில் பாதுகாப்பு பணயில் ஈடுபட்டு வருகிறார்கள்.
- ஐந்தருவியில் பாறைகள் தெரியாதபடி அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.
- காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை தமிழக - கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
ஒகேனக்கல்:
கர்நாடகா, கேரள மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. குறிப்பாக கேரளா மாநிலத்தின் வயநாடு பகுதியில் கனமழை பெய்து வருகிறது.
அதன் காரணமாக கர்நாடகா மாநிலத்தில் உள்ள கபினி அணையின் நீர்மட்டம் 84 அடி நீர் இருப்பு 80.60 அடி நீர் இருப்பு உள்ளது அணைக்கு வரும் நீர்வரத்து 32 ஆயிரத்து 559 கனஅடி நீரானது அணைக்கு வருகிறது. அணையில் இருந்து நேற்று 33 ஆயிரத்து 771 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இதேபோல் கிருஷ்ணராஜசாகர் அணையானது 124.80 அடி கொள்ளளவு கொண்டது அணையின் நீர்மட்டம் 122.24 அடி அளவில் தண்ணீர் உள்ளது.
அணைக்கு வரும் நீர் வரத்தானது 73 ஆயிரத்து 500 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் நேற்று 57 ஆயிரத்து 398 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இரு அணைகளில் இருந்தும் உபரி நீரானது 91,169 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது.
கர்நாடகா மாநிலத்தில் உள்ள இரு அணைகளில் இருந்து கடந்த 2 தினங்களாக ஒரு லட்சம் கனஅடிக்குள் தண்ணீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படுவதால், தமிழக-கர்நாடகா எல்லையான பிலிக்குண்டுலு வழியாக தருமபுரி மாவட்ட ஒகேனக்கலுக்கு நீர்வரத்து சரிய தொடங்கியது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று முன்தினம் 1.35 லட்சம் கன அடியாக வந்து கொண்டிருந்த நீர்வரத்து கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டதால் நீர்வரத்து நேற்று மாலை 6 மணி நிலவரப்படி 80ஆயிரம் கன அடியாக குறைந்தது.
அதனைத் தொடர்ந்து இன்று காலை 6 மணி நிலவரப்படி மேலும் சரிந்து நீர்வரத்து 75 ஆயிரம் கன அடியாக குறைந்து வந்து கொண்டிருக்கிறது. நீர்வரத்து சற்று குறைந்து வந்தபோதிலும், ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, சினிப்பால்ஸ், ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.
ஐந்தருவியில் பாறைகள் தெரியாதபடி அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. நீர் வரத்து தொடர்ந்து அதிக அளவில் வருவதால் சுற்றுலா பயணிகள் நலன் கருதி அருவியில் குளிக்கவும் பரிசல் இயங்கவும் விதிக்கப்பட்ட தடையானது 18 நாளாக தொடர்ந்து நீடிக்கிறது.
காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை தமிழக - கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் போலீசார், வருவாய் துறையினர், தீயணைப்பு மீட்பு படையினர் மற்றும் ஊர் காவல் படையினர் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
- வீட்டின் மேற்கூரை பகுதிக்கு மேல் மண் ஓடு அமைக்கப்பட்டுள்ளது.
- 4 பக்கமும் மரக்கட்டைகளை கொண்டு தூண் அமைத்துள்ளார்.
நெல்லை:
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே பரம்பு என்ற கிராமத்தை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன். விவசாயி.
இயற்கை மீதும் இயற்கை சார்ந்த பொருட்கள் மீதும் அதிக ஆர்வம் கொண்ட இவர் ஊருக்கு அருகில் உள்ள தனது நிலத்தில் இயற்கை சார்ந்த புதிய வீடு கட்ட திட்டமிட்டார்.
அதன்படி சிமெண்ட் வீட்டுக்கு பதிலாக முழுக்க முழுக்க மரப்பலகைகளை பயன்படுத்தி தனது வீட்டை கட்டமைக்க சிவசுப்பிரமணியன் திட்டமிட்டுள்ளார்.
எனவே மரச்சிற்ப கலை படித்துள்ள தனது நண்பரான சோமசுந்தரத்திடம் சிவசுப்பிரமணியன் தனது ஆசையை கூறியுள்ளார். அதேசமயம் அதிக செலவு செய்து கட்டப்படும் வீடு என்பதால் எந்த குறையும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக சோமசுந்தரம் முதலில் தயக்கம் காட்டினார்.
இருப்பினும் சிவசுப்பிரமணியன் என்ன நடந்தாலும் நடக்கட்டும். நீங்கள் வேலையை தொடங்குங்கள் என சோம சுந்தரத்தை ஊக்கப்படுத்தி உள்ளார்.
இதனால் கடந்த 2021-ம் ஆண்டு வீடு கட்டும் பணி தொடங்கப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக அடித்தளம் மட்டும் கற்கள், சிமெண்ட், மணல் கலவையை கொண்டு கட்டிய நிலையில், தொடர்ந்து அடித்தளத்திற்கு மேல் பகுதியில் 4 புறத்திலும் மற்றும் மேற்கூரை சேர்த்து முழுக்க முழுக்க மரப்பலகைகளை கொண்டு வீடு கட்டி உள்ளனர்.

மொத்தம் சுமார் 500 சதுர அடி பரப்பளவில் இந்த வீடு கட்டமைக்கப்பட்டுள்ளது. போர்டிகோ, வரவேற்பறை, ஒரு படுக்கை அறை மற்றும் ஒரு சமையல் அறை ஆகிய அறைகளை இந்த வீடு கொண்டுள்ளது. மழையில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக மரப் பலகைகளுக்கு இடையே வாட்டர் ப்ரூப் பேஸ்ட் பயன்படுத்தி உள்ளனர்.
அதேபோல் கூடுதல் பாதுகாப்புக்காக வீட்டின் மேற்கூரை பகுதிக்கு மேல் மண் ஓடு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது பெரும்பாலும் சிமெண்ட் வீடு கட்டும்போது நான்கு பக்கமும் காலாம்பாக்ஸ் எனப்படும் காங்கீரிட் தூண்கள் அமைக்கப்படும். இது தான் கட்டிடத்தின் உறுதித்தன்மையை உறுதி செய்யும்.
எனவே சோமசுந்தரம் வீட்டின் உறுதித்தன்மைக்காக 4 பக்கமும் மிக கனமான மரக்கட்டைகளை கொண்டு தூண் அமைத்துள்ளார்.
மேலும் படுக்கை அறையில் துணி உள்ளிட்ட பொருட்களை வைத்து எடுப்பதற்கு வசதியாக அதே மரக்கட்டைகளை கொண்டு கபோர்டு அமைத்துள்ளார். மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் இயற்கை சூழலோடு அமைந்துள்ள பரம்பு கிராமத்தில் மிகவும் வித்தியாசமான முறையில் மரக்கட்டைகளால் சிவசுப்பிரமணியன் அமைத்துள்ள வீடு பார்ப்போரை கவர்ந்து உள்ளது.
இதுகுறித்து சோமசுந்தரம் கூறுகையில், வெளிநாடு களில் இது போன்று மரக்கட்டை வீடுகள் அமைப் பது வழக்கம். தமிழ்நாட்டில் தென் தமிழக பகுதியில் இது போன்ற மரக்கட்டை வீட்டை எனக்கு தெரிந்தவரை யாரும் கட்டவில்லை.
இங்கு நான் தான் முதலில் கட்டியுள்ளேன். செலவை பொறுத்தவரை 2-க்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை. 600 சதுர அடியில் மரக்கட்டையால் வீடு கட்ட ரூ.15 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரை ஆகி உள்ளது. அதிகபட்சம் ஒரு வருடத்திற்குள் வீட்டை கட்டி முடித்து விடலாம். அனைவரும் இது போன்ற இயற்கை சார்ந்த மர வீடுகளுக்கு மாற வேண்டும் என்று கூறினார்.
- லாரியில் உள்ள பெட்டியில் ரூ.42 லட்சம் வைக்கப்பட்டிருந்தது.
- கண் இமைக்கும் நேரத்தில் கொள்ளையடித்து சென்றனர்.
குளித்தலை:
திருச்சி மாவட்டம், ஊட்டி மேட்டுப்பாளையத்தில் இருந்து தினமும் லாரியில் பீட்ரூட், கேரட், பீன்ஸ், நூக்கோல், சவ் சவ் உள்ளிட்ட காய்களை தினமும் கும்பகோணம் மார்க்கெட்டுக்கு கொண்டு செல்வது வழக்கமாக உள்ளது, லாரியில் டிரைவர் மட்டுமே வருவார்.
வாரத்தில் ஒருநாள் டிரைவருடன் பணம் வசூல் செய்பவரும் சேர்ந்து வந்து காய்களை கும்பகோணம் மார்க்கெட்டில் இறக்கிவிட்டு பணம் வசூல் செய்து செல்வது வழக்கம்.

இந்நிலையில் நள்ளிரவு ஒரு லாரி மேட்டுப்பாளையத்தில் காய்கறிகளை ஏற்றிக்கொண்டு கும்பகோணத்துக்கு சென்றது. அங்கு காய்கறியை இறக்கிவிட்டு ஊரு திரும்பினர். லாரியை மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த டிரைவர் ஆனந்த் ஓட்டினார். அவருடன் பணம் வசூல் செய்பவர் லோகேஷ் வந்திருந்தார்.
லாரியில் உள்ள பெட்டியில் வசூலான பணம் ரூ.42 லட்சம் வைக்கப்பட்டிருந்தது. லாரி அதிகாலை திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை அருகே கரூர் முதல் திருச்சி செல்லும் புறவழிச்சாலையில் காவல்காரபாளையம் பெட்ரோல் பங்க் அருகில் வந்தது. அப்போது டிரைவர் ஆனந்த் லாரியை நிறுத்திவிட்டு உடன் வந்த லோகேசுடன் அங்குள்ள டீக்கடையில் டீ குடிக்க சென்றார்.
அப்போது அங்கு காரில் பயங்கர ஆயுதங்களுடன் ஒரு கும்பல் வந்தது. திடீரென்று அவர்கள் லாரியில் ஏறி பெட்டியை உடைத்து ரூ.42 லட்சத்தை எடுத்தனர். பின்னர் கண் இமைக்கும் நேரத்தில் காரில் ஏறி தப்பிவிட்டனர்.
டீ குடித்து விட்டு வந்த டிரைவர் ஆனந்த், லோகேஷ் ஆகியோர் திரும்பி வந்து பார்த்தபோது பணம் கொள்ளை போனது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
தகவல் அறிந்த ஜீயபுரம் டி.எஸ்.பி. பாலச்சந்தர், ஜீயபுரம் இன்ஸ்பெக்டர் குணசேகரன், சோமரசம்பேட்டை இன்ஸ்பெக்டர் முகமது ஜாபர் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து டிரைவர் ஆனந்த், லோகேசிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து தனிப்படைகள் அமைத்தும் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- நான் படிக்கும் போது எனது ஆசிரியர்கள் சொல்லி கொடுத்ததை நான் சரியாக கவனிக்கவில்லை.
- குடும்பத்தில் நாம் அனைத்து காரியங்களையும் பகிர்ந்து கொள்வது மனைவியிடம் மட்டுமே.
திருப்பூர்:
திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகரும், இயக்குனருமான கே.பாக்யராஜ் கலந்து கொண்டு குடும்பம் ஒரு கதம்பம் என்ற தலைப்பில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நான் இந்த அளவிற்கு உயர்ந்த இடத்தை அடைந்ததற்கான பெருமை என்னுடைய ஆசிரியர்களையே சாரும். நான் படிக்கும் போது எனது ஆசிரியர்கள் சொல்லி கொடுத்ததை நான் சரியாக கவனிக்கவில்லை. அதேநேரம் வாத்தியார்கள் எனக்கு சொல்லிக் கொடுத்த விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எனவே வாத்தியார்கள் என்றாலே எனக்கு தனி மரியாதை உண்டு.
பொதுவாக மனிதன் வலியை தாங்கக்கூடியது 10 பாயிண்ட் என்றால் ஆண்கள் 7 பாயிண்டிலேயே உயிரிழக்கக்கூடிய சூழல் ஏற்படுகிறது என்றும், ஆனால் பிரசவ வலியில் பெண்கள் 7.6 பாயிண்ட் வரை வலியை தாங்குகிறார்கள் என்று புள்ளி விபரம் கூறுகிறது.
எனவே தாய்மை என்பது பெண்களுக்கு மரியாதைக்குரிய சமாச்சாரம் ஆகும். குடும்பத்தில் நாம் அனைத்து காரியங்களையும் பகிர்ந்து கொள்வது மனைவியிடம் மட்டுமே. அந்த அளவிற்கு நாம் அந்நியோன்யமாக இருக்கும்போது, அதை பார்க்கும் குழந்தைகளும் நல்ல முறையில் வளருவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
- 6 மாதத்திற்கு முன்பு இந்து சமய அறநிலை துறை கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.
- சாமி ஊர்வலத்தை காண ஏராளமானோர் திரண்டனர்.
சிங்காரப்பேட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த நொச்சிப்பட்டி கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஸ்ரீ பட்டாபிராமர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் காலை, மாலை என 2 வேளை பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு இந்து சமய அறநிலை துறை கட்டுப்பாட்டின் கீழ் இந்த ஸ்ரீ பட்டாபிராமர் கோவில் செயல்பட தொடங்கியது.
கடந்த இரண்டு நாட்களாக ஆடிப்பெருக்கு தினத்தில் ஸ்ரீ பட்டாபிராமர் சாமி கோவிலுக்கு அருகில் உள்ள அனுமன் தீர்த்தம் பகுதியில் உள்ள அனுமந்தீஸ்வரர் ஆலயத்தில் கொண்டு சென்று புனித தீர்த்தம் கொண்டு வருவது வழக்கம்.
இந்த நிலையில் நொச்சிப்பட்டி கிராம பகுதி மக்கள் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளிடம் தங்கள் பகுதிக்கு தற்பொழுது வரையிலும் சுவாமி ஊர்வலம் வந்ததே இல்லை. எனவே, தங்கள் ஊர் பகுதியில் சாமி ஊர்வலம் வருவதற்கு அனுமதி வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதைத்தொடர்ந்து அதிகாரிகள் அளிக்கப்பட்ட உத்தரவின் பேரில் ஸ்ரீ பட்டாபிராமர் சாமி ஊர்வலம் நொச்சிப்பட்டி கிராமத்தில் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தது. இப்பகுதி மக்களுக்கு பிரமிக்கும் வகையில் காட்சி யளித்தார். சாமி ஊர்வலத்தை காண அப்பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டனர்.
200 ஆண்டுகளாக சாமி ஊர்வலம் காணாத அப்பகுதி மக்கள் தற்போது தங்களது ஊரில் சாமி திருவீதி உலா வருவதை கண்டு பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
- பல்வேறு நாடுகளை சேர்ந்த நடுவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- 6 பிரிவுகளாக தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்றது.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் இன்று 2-வது நாளாக தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. இதில் பல்வேறு வகையான நாய்கள் இடம்பெற்று சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தது. தி கொடைக்கானல் கென்னல் அசோசியேசன், தி மெட்ராஸ் கெனைன் கியம், தி சேலம் அக்மி கென்னல் கிளப் சார்பில் கொடைக்கானலில் தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி நேற்று தொடங்கியது.
2 நாட்கள் நடைபெற்ற இந்த கண்காட்சியில் நாடு முழுவதும் இருந்து 424 நாய்கள் பங்கேற்றன. பாக்ஸர், டாபர்மேன், கிரேடன், ஜெர்மன் செப்பர்டு, ஆஸ்திரேலியன் புல்டாக், பக், டாக்செண்ட், ஆப்கான் கவுண்ட், பிகில், பொமேரியன், கோல்டன் ரெட்ரீவர், சிஜூ, சிப்பி பாறை, ராஜபாளையம், ஹஸ்கி உள்ளிட்ட 60 வகையான நாய் இனங்கள் போட்டியில் பங்கு பெற்றன.

நாய்களின் வகைகளுக்கேற்ப 6 பிரிவுகளாக தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்றது. நாய்களின் பராமரிப்பு, விதிமுறை, கீழ்ப்படிதல் ஆகியவற்றின் அடிப்படையில் பரிசுகள் வழங்கப்பட்டன.
இன்று நடைபெற்ற கண்காட்சியில் ஒட்டுமொத்த சாம்பியன்களை தேர்ந்தெடுக்க பல்வேறு நாடுகளை சேர்ந்த நடுவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பல்வேறு வகையான நாய் இனங்கள் அணிவகுத்து சென்றது சுற்றுலா பயணிகளை கவர்ந்தது. இன்று விடுமுறை தினம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அவர்கள் பிரையண்ட் பூங்கா, நட்சத்திர ஏரி, வெள்ளி நீர்வீழ்ச்சி உள்ளிட்ட இடங்களை கண்டு ரசித்ததுடன், நாய் கண்காட்சியிலும் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
- மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியில் நீடிக்கிறது. அணைக்கு நீர்வரத்தும் திறப்பும் இல்லை.
- மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 969 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
கூடலூர்:
கேரளாவில் பெய்த கனமழையால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் வேகமாக உயர்ந்தது. அதனைத் தொடர்ந்து அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
தற்போது மழை ஓய்ந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து 1145 கன அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 131.75 அடியாக உள்ளது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 1400 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
இந்த தண்ணீர் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாய பாசனம் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வைகை அணையை வந்து சேருகிறது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணை ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்ட விவசாய பாசனத்திற்கு ஆதாரமாக உள்ளது. கூடுதல் தண்ணீர் திறப்பால் அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகிறது.
கடந்த 10 நாட்களில் 2½ அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 56.50 அடியாக உள்ளது. மழை கை கொடுக்கும் பட்சத்தில் விரைவில் 57 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணைக்கு 1266 கனஅடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 969 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியில் நீடிக்கிறது. அணைக்கு நீர்வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 115.96 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. பெரியாறு 0.8 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.






