என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குளித்தலை"

    • போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
    • குளித்தலை நகரின் முக்கிய பகுதியில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

    குளித்தலை:

    கரூர் மாவட்டம், குளித்தலை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் கருணாநிதி. ஓய்வு பெற்ற அரசு கலைக் கல்லூரி பேராசிரியர். இவரது மனைவி சாவித்திரி. ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர் குளித்தலை பகுதியில் மெட்ரிக் பள்ளி நடத்தி வருகிறார். அந்த பள்ளியில் தாளாளராகவும் உள்ளார். தற்போது இவர்கள் தங்களது வீட்டை புதுப்பித்து கட்டி வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கருணநிதி குடும்பத்துடன் வெளியூர் சென்றனர். பின்னர் நேற்று இரவு 11 மணி அளவில் வீட்டிற்கு வந்தனர். பின்னர் நள்ளிரவில் அனைவரும் தூங்கச் சென்றனர்.

    இன்று அதிகாலை 3 மணி அளவில் இவர்களது வீட்டின் பின்பகுதி வழியாக மர்ம 3 நபர்கள் நுழைந்தனர். முகமூடி அணிந்திருந்த அவர்கள் வீட்டின் மேல் மாடிக்கு சென்றனர்.

    சத்தம் கேட்டு தூங்கிக் கொண்டிருந்த அவரது இளைய மகள் பல் மருத்துவர் அபர்ணா விழித்து பார்த்தார். அப்போது 3 பேர் முகமூடி அணிந்தபடி ஆயுதங்களுடன் நிற்பதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்தார். உடனே மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டினர். சத்தம் கேட்டு கருணநிதி, சாவித்திரி ஆகியோர் அங்கு வந்தனர். உடனே கொள்ளையர்கள் அபர்ணாவை அரிவாளால் தாக்கினர். உடனே தாய் சாவித்திரி தடுத்தார். இதில் அபர்ணா, சாவித்திரி ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது.

    பின்னர் கொள்ளையர் கத்தி, அரிவாள் முனையில் அங்கு இருந்த ரூ. 9 லட்சம் மற்றும் 31 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்தனர். இது குறித்து மற்றவர்களுக்கு தகவல் தெரிவிக்க கூடாது என்பதற்காக அவர்கள் 3 பேரின் செல்போன்களையும் பறித்தனர். பின்னர் கொள்ளையர் 3 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.

    இதுபற்றி கருணாநிதி அக்கம்பக்கத்தினர் மூலமாக குளித்தலை போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கொள்ளையர் தாக்கியதில் காயம் அடைந்தசாவ்த்திரி, அபர்ணாவை போலீசார் மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜோஸ் தங்கையா விரந்து வந்து விசாரணை நடத்தி னார். கொள்ளையர்கள் குறித்து சி.சி.டி.வி. காட்சிகளை கொண்டு தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் கைரேகை நிபுணர்கள் தடயங்களை பதிவு செய்தனர். மோப்பநாய் லக்கி வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்திலிருந்து குளித்தலை மணப்பாறை ரயில்வே கேட் வரை மோப்பம் பிடித்தபடி சென்று நின்று விட்டது.

    குளித்தலை நகரில் ஆட்கள் நடமாட்டம் உள்ள மையப் பகுதியில் அதிகாலையில் வீடு புகுந்த மர்ம நபர்கள் பணம் மற்றும் நகைகளை கொள்ளை அடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

    குற்றவாளிகளை பிடிப்பதற்காக போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குளித்தலை நகரின் முக்கிய பகுதியில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். 

    • கடையில் பொருத்தப்பட்டிருந்த 4 சிசிடிவி கேமராக்களையும் திருடிச் சென்றுள்ளனர்.
    • இரண்டாவது முறையாக திருட்டு நடந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    குளித்தலை:

    கரூர் மாவட்டம், குளித்தலை அருகே பில்லா பாளையம் முனவாசிப்பட்டி செல்லும் சாலையில் அரசு டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. நேற்று இரவு மதுபான கடை ஊழியர்கள் தங்களது வேலையை முடித்துவிட்டு கடையினை பூட்டி சென்றனர்.

    நள்ளிரவு இங்கு வந்த மர்ம நபர்கள் கடையின் பின்பக்க சுவற்றில் கடப்பாரையால் துளையிட்டு உள்ளே புகுந்தனர். அங்கு ரூ.28 ஆயிரம் மதிப்பிலான 150-க்கு மேற்பட்ட உயர் ரக மதுபான பாட்டில்கள் மற்றும் ரூ. 6030 பணத்தினை திருடி சென்று விட்டனர்.

    இன்று காலை மதுபான கடைக்கு அரசு குடோனில் இருந்து மது பாட்டில்கள்கள் இறக்க வந்துள்ளனர். அப்போது கடை ஊழியர்கள் கடையை திறந்த போது மதுபான பாட்டில்கள் இல்லாமல் இருப்பதை பார்த்தும், பின் பக்க சுவற்றில் துளையிட்டதை கண்டும் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து லாலாபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    மது பாட்டில்களையும் பணத்தினை திருடி சென்ற மர்ம நபர்கள் தாங்கள் போலீசார் மற்றும் மோப்ப நாயிடம் சிக்கிக் கொள்ளக் கூடாது என மிளகாய் பொடியை தூவி சென்றுள்ளனர்.

    கடையில் பொருத்தப்பட்டிருந்த 4 சிசிடிவி கேமராக்களையும் திருடிச் சென்றுள்ளனர்.

    கடந்த 45 நாட்களுக்கு முன்பு இதேபோல் மேலதாளியாம்பட்டி டாஸ்மாக் கடையில் சுவரைத் துளையிட முயன்று முடியாததால் பூட்டை உடைத்து நீண்ட வாளை(பட்டாகத்தி) கடையில் உள்ளே போட்டுவிட்டு மது பாட்டில்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இரண்டாவது முறையாக திருட்டு நடந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • குளித்தலை ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
    • போதிய உறுப்பினர்களின் ஒப்புதல் இல்லாததால்

    கரூர்

    குளித்தலை ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் நேற்று ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் விஜய விநாயகம் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் இளங்கோவன் முன்னிலை வகித்தார்.

    குளித்தலை ஊராட்சி ஒன்றியத்தில் நியமனக்குழு, வேளாண்மை உற்பத்திக்குழு, கல்விக்குழு, பொதுநோக்கக்குழு அமைப்பது தொடர்பான தீர்மானம் கொண்டுவரப்பட்டது. தீர்மானம் வாசித்து முடிந்த பிறகு எழுந்த தி.மு.க. ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டத்தை ஒத்தி வைக்கும்படி கூறிவிட்டு வெளியேறினர்.

    பின்னர் வெளியே வந்த தி.மு.க. ஒன்றியக்குழு உறுப்பினர்கள் நிருபர்களிடம் கூறுகையில், தற்பொழுது ஒன்றியக்குழுவில் தி.மு.க. உறுப்பினர்கள் 7 பேர் உள்ளனர். தலைவர், துணைத்தலைவர், ஒரு ஒன்றிய குழு உறுப்பினர் என அ.தி.மு.க.வில் 3 பேர் மட்டுமே உள்ளனர். அ.தி.மு.க.வை காட்டிலும் தி.மு.க. உறுப்பினர்கள் அதிக பெரும்பான்மையில் உள்ளோம்.

    அப்படி இருக்கும் சமயத்தில் தற்போது ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் கூறப்படும் நியமனக்குழு உள்ளிட்ட குழுக்களில் அ.தி.மு.க.வை சேர்ந்த தலைவர், துணைத்தலைவர் ஆகியோர் முக்கிய பொறுப்புகளில் வருவதை ஏற்க முடியாது. எனவே கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டுமென்று கூறிய வெளியேறியதாக தெரிவித்தனர்.

    இந்தநிலையில் போதிய உறுப்பினர்களின் ஒப்புதல் இல்லாத காரணத்தினால் கூட்டத்தை ஒத்தி வைப்பதாக ஒன்றிய குழு தலைவர் விஜயவிநாயகம் அறிவித்தார்.

    கடந்த மாதம் நடந்த ஒன்றியக்குழு கூட்டத்தில் 7 தி.மு.க. உறுப்பினர்களும் கலந்து கொள்ளாத காரணத்தினால் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது."

    • குளித்தலை பகுதியில் கடும் பனிமூட்டம் காணப்படுகிறது
    • வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்

    கரூர்:

    குளித்தலை பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. ஆங்காங்கே காட்டாற்று வெள்ளமும் கரைபுரண்டு ஓடியது. இந்நிலையில் நேற்று முதல் குளித்தலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. காலை 8 மணி வரை பனிமூட்டம் காணப்படுவதால், காலையில் வேலைக்குச் செல்லும் விவசாய கூலித் தொழிலாளர்கள் பணிக்கு செல்ல முடியாமல் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். சாலை தெரியாமல் இருப்பதால் வாகன ஓட்டிகளும் முகப்பு விளக்கை ஒளிர விட்டு வாகனத்தில் செல்கின்றனர். தொடர்ந்து பனிப்பொழிவு அதிகரித்தால் பூக்கள், காய்கறிகள் கருகும் அபாயம் ஏற்படும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

    • 18 நாட்கள் விரதம் இருந்து நேர்த்திக்கடன்.
    • 15 க்கும் மேற்பட்வர்களுக்கு தலையில் காயம்.

    குளித்தலை:

    கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள மேட்டு மகாதானபுரத்தில் ஸ்ரீ மஹாலட்சுமி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு விஜயநகரப் பேரரசின் மன்னரான கிருஷ்ண தேவராயர் ஆட்சியில் கட்டப்பட்டதாகும்.

    இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு மாறுநாள் ஆடி 19-ம்நாள் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறும். இதற்காக பக்தர்கள் ஆடி மாதம் 1-ந் தேதியில் இருந்து 18 நாட்கள் விரதம் இருப்பார்கள். பின்னர் ஆடி 19-ல் நேர்த்தி க்கடன் செலுத்துவார்கள்.

    அதன்படி இன்று நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில் விரதம் இருந்த ஆண்கள், பெண்கள் என 600-க்கும் மேற்பட்டோர் காலை 7 மணியில் இருந்து கோவில் முன்பு வரிசையாக அமர்ந்து காத்திருந்தனர்.

    தொடர்ந்து கோவில் பாரம்பரிய பூசாரி மகாலட்சுமிக்கு அலங்கார அபிஷேகம் செய்தார். இதையடுத்து மேள தாளம் முழங்க ஆணிகள் பொருத்தப்பட்ட பாதணி மீது நின்று பூசாரி கொடிக்கம்பம் மீது தீபம் ஏற்றப்பட்டது.

    இதை தொடர்ந்து நேர்த்திக்கடன் செலுத்த அமர்ந்து இருந்த பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்தார், இதை பக்தி பரவசத்துடன் பக்தர்கள் கண்டு தரிசித்தனர், இந்த தேங்காய் உடைக்கும் போது 15 க்கும் மேற்பட்வர்களுக்கு தலையில் காயம் ஏற்பட்டது.

     இந்நிகழ்ச்சியில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் குடிபாட்டு மக்கள் கலந்து கொண்டனர்.

    போலீஸ் டி.எஸ்.பி.க்கள் காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் செந்தில்குமார், முத்துகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் சுமார் 200-க்கும் மேற்பட்ட போலீஸார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்,

    கரூர் மாவட்டத்தில் இந்நிகழ்ச்சி மிகவும் சிறப்பு பெற்றது என்பதால் இதை காண சென்னை, கோவை, திருச்சி, பெங்க ளூரு, தேனி, மதுரை, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல பகுதியில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.

    ×