என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

குளித்தலை அருகே சுவரில் துளை போட்டு புகுந்து மதுபாட்டில்கள், பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்கள்
- கடையில் பொருத்தப்பட்டிருந்த 4 சிசிடிவி கேமராக்களையும் திருடிச் சென்றுள்ளனர்.
- இரண்டாவது முறையாக திருட்டு நடந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குளித்தலை:
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே பில்லா பாளையம் முனவாசிப்பட்டி செல்லும் சாலையில் அரசு டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. நேற்று இரவு மதுபான கடை ஊழியர்கள் தங்களது வேலையை முடித்துவிட்டு கடையினை பூட்டி சென்றனர்.
நள்ளிரவு இங்கு வந்த மர்ம நபர்கள் கடையின் பின்பக்க சுவற்றில் கடப்பாரையால் துளையிட்டு உள்ளே புகுந்தனர். அங்கு ரூ.28 ஆயிரம் மதிப்பிலான 150-க்கு மேற்பட்ட உயர் ரக மதுபான பாட்டில்கள் மற்றும் ரூ. 6030 பணத்தினை திருடி சென்று விட்டனர்.
இன்று காலை மதுபான கடைக்கு அரசு குடோனில் இருந்து மது பாட்டில்கள்கள் இறக்க வந்துள்ளனர். அப்போது கடை ஊழியர்கள் கடையை திறந்த போது மதுபான பாட்டில்கள் இல்லாமல் இருப்பதை பார்த்தும், பின் பக்க சுவற்றில் துளையிட்டதை கண்டும் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து லாலாபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மது பாட்டில்களையும் பணத்தினை திருடி சென்ற மர்ம நபர்கள் தாங்கள் போலீசார் மற்றும் மோப்ப நாயிடம் சிக்கிக் கொள்ளக் கூடாது என மிளகாய் பொடியை தூவி சென்றுள்ளனர்.
கடையில் பொருத்தப்பட்டிருந்த 4 சிசிடிவி கேமராக்களையும் திருடிச் சென்றுள்ளனர்.
கடந்த 45 நாட்களுக்கு முன்பு இதேபோல் மேலதாளியாம்பட்டி டாஸ்மாக் கடையில் சுவரைத் துளையிட முயன்று முடியாததால் பூட்டை உடைத்து நீண்ட வாளை(பட்டாகத்தி) கடையில் உள்ளே போட்டுவிட்டு மது பாட்டில்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இரண்டாவது முறையாக திருட்டு நடந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






