என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • நகரின் ஒருசிலபகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    8-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    வருகிற 9-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில

    பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    • கொடநாடு கொலை, கொள்ளை நடந்தபோது சசிகலா சிறையில் இருந்தார்.
    • முன்னாள் அமைச்சர்கள் குறித்த கோப்புகள் போயஸ் கார்டனில் இருந்தன.

    கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார். அப்போது அவர் கூறியதாவது:

    * கொடநாடு கொலை, கொள்ளை நடந்த சூழ்நிலையை யோசித்து பாருங்கள்.

    * கொடநாடு கொலை, கொள்ளை நடந்தபோது சசிகலா சிறையில் இருந்தார்.

    * கொடநாடு கொலை, கொள்ளை நடந்த சமயத்தில் நான் டெல்லியில் விசாரணையில் இருந்தேன்.

    * எடப்பாடி பழனிசாமி கொடநாடு பங்களாவுக்கு போய் கோப்புகளை தேடி கொண்டிருந்தார்.

    * கொடநாடு பங்களாவில் எந்த ஃபைலை தேடினார்கள்.

    * முன்னாள் அமைச்சர்கள் குறித்த கோப்புகள் போயஸ் கார்டனில் இருந்தன.

    * முன்னாள் அமைச்சர்கள் குறித்த கோப்புகளை நான் தான் கிழித்தெறிந்தேன்.

    * கொடநாடு கொலை, கொள்ளை நடந்தபோது யார் ஆட்சி நடந்து கொண்டிருந்தது?

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சேலம் மாநகரில் இன்று அதிகாலை 2 மணியளவில் தொடங்கிய மழை விடிய விடிய சாரல் மழையாக பெய்தது.
    • மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த வாரம் பரவலாக மழை பெய்த நிலையில் பின்னர் வறண்ட வானிலையே நிலவியது. இதனால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

    இந்த நிலையில் சீதோஷ்ண நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டு நேற்றிரவு வானில் திடீரென கரு மேகங்கள் திரண்டன. பின்னர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாரல் மழையாக பெய்தது.

    குறிப்பாக ஏற்காட்டில் நேற்றிரவு 11 மணிக்கு தொடங்கிய மழை சாரல் மழையாக இன்று காலையும் பெய்தது. இதனால் ஏற்காட்டில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. மேலும் தொடர் மழையால் ஏற்காட்டில் நேற்றிரவு முதல் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் ஏற்காட்டில் வசிக்கும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். விடிய, விடிய பெய்து வரும் சாரல் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.

    சேலம் மாநகரில் இன்று அதிகாலை 2 மணியளவில் தொடங்கிய மழை விடிய விடிய சாரல் மழையாக பெய்தது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இன்று காலையிலும் மழை பெய்ததால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்பவர்களும் அவதி அடைந்தனர்.

    இதே போல டேனீஸ்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளிலும் விடிய விடிய மழை பெய்தது. இந்த மழையால் வயல்வெளிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக ஏற்காட்டில் 26.4 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சேலம் மாநகர் 9, டேனீஸ்பேட்டை 25.2 மி.மீ. மழை என மாவட்டம் முழுவதும் 61.6 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. இன்று காலையும் சேலம் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை தூறிய படியே இருந்தது.

    நாமக்கல் மாவட்டத்திலும் கொல்லிமலை செம்மேடு, புதுச்சத்திரம், சேந்தமங்கலம், ராசிபுரம், உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    மங்களபுரம்-20.20, புதுச்சத்திரம்-9, ராசிபுரம்-32, சேந்தமங்கலம்-2.20, கொல்லிமலை செம்மேடு-17 என மாவட்டம் முழுவதும் 80.40 மி.மீட்டர் மழை பெய்தது.

    • வரும் சட்டசபை தேர்தலில் நெல்லை தொகுதியில் தி.மு.க. வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும்.
    • நெல்லை சட்டசபை தொகுதி உறுப்பினராக தற்போது பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளார்.

    தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ளன. இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'உடன் பிறப்பே வா' என்ற தலைப்பில் சட்டமன்ற தொகுதி வாரியாக தி.மு.க. நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

    இந்த சந்திப்பின்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அவர்களுக்கு முக்கிய ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்.

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் 'உடன்பிறப்பே வா' நிகழ்ச்சியில் சங்கரன்கோவில், திருநெல்வேலி சட்டசபை தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார். ஆலோசனையில் தி.மு.க. தெற்கு மண்டல பொறுப்பாளர் எம்.பி. கனிமொழியும் பங்கேற்றார்.

    இந்த நிலையில், வரும் சட்டசபை தேர்தலில் நெல்லை தொகுதியில் தி.மு.க. வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும். நெல்லை தொகுதியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும். திருநெல்வேலி தொகுதியில் வெற்றி பெறவில்லை என்றால் பதவிகள் பறிக்கப்படும் என்று நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் எச்சரிக்கை விடுத்தார்.

    நெல்லை சட்டசபை தொகுதி உறுப்பினராக தற்போது பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளார்.

    • 7 பேரும் இன்று வரை மாவட்டப் பதிவாளர்களாக பணி செய்வது எப்படி என்பதை பதிவுத்துறை விளக்குமா?
    • பதிவுத்துறை உதவி ஐஜி பணிக்கான பதவி உயர்வுப் பட்டியல் திரும்பப்பெறப்பட வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    வருவாய்த்துறையில் தகுதிகாண் பருவத்தை நிறைவு செய்யாத உதவியாளர்களுக்கு பணிவிதி விலக்கு அளித்து துணை வட்டாட்சியர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதே நடைமுறையை பதிவுத்துறை உதவித் தலைவர் பணிக்கான பதவி உயர்வு வழங்குவதில் பதிவுத்துறை பின்பற்றாதது ஏன்? யாருடைய பதவி உயர்வை தடுப்பதற்காக தி.மு.க. அரசு இவ்வாறு செய்தது?

    பதவி உயர்வுக்கான தகுதி காண் நாளில், எந்தவித குற்றச்சாட்டுக்கும் ஆளாகாத பல சார்பதிவாளர்களின் பெயர்கள் பதவி உயர்வுக்கான பட்டியலில் விடுபட்டிருக்கிறது. தகுதியின்றி பதவி உயர்வு பெற்ற 7 பேர் மாவட்ட பதிவாளர் பணியியிலிருந்து பதவி இறக்கம் செய்யப்படுவார்கள் என்று தமிழ்நாடு அரசு அறிவித்த பிறகும், அந்த 7 பேரும் இன்று வரை மாவட்டப் பதிவாளர்களாக பணி செய்வது எப்படி என்பதை பதிவுத்துறை விளக்குமா?

    பதிவுத்துறை உதவித் தலைவர் பணி நியமனத்தில் அப்பட்டமாக விதிமீறலை நிகழ்த்தியுள்ள தி.மு.க. அரசு, அதை மறைப்பதற்காக பொய்களை கட்டவிழ்த்து விடக் கூடாது. எனவே நான் ஏற்கனவே வலியுறுத்தியதைப் போல, பதிவுத்துறை உதவி ஐஜி பணிக்கான பதவி உயர்வுப் பட்டியல் திரும்பப்பெறப்பட வேண்டும்; ஒருங்கிணைந்த பணி மூப்புப் பட்டியலை பதிவுத்துறை உடனடியாக வெளியிட வேண்டும்; அது குறித்து சம்பந்தப்பட்டவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்து உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள வழிகாட்டுதல்களின் அடிப்படையில் பதிவுத்துறை உதவித் தலைவர், மாவட்ட பதிவாளர் உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • விஜய் தலைமையில் வலுவான கூட்டணி அமைந்தால் கடுமையான போட்டியாக அமையும்.
    • 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்திற்கு தான் செல்லும்.

    சென்னை அடையாறில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியிருப்பதாவது:-

    வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக- தவெக இடையே தான் போட்டி.

    2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்திற்கு தான் செல்லும்.

    விஜய் தலைமையில் வலுவான கூட்டணி அமைந்தால் கடுமையான போட்டியாக அமையும்.

    மனோஜ் பாண்டியன் திமுகவிற்கு சென்றது வருத்தமளிக்கிறது. இருப்பினும், மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்ததற்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம்.

    பல கட்சிகளுடன் கூட்டணி தொடர்பாக கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடக்க கட்டத்தில் உள்ளது. இறுதி முடிவு எடுக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குன்னூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தூவப்பட்டன.
    • வறட்சி காலங்களில் பூத்துக்குலுங்கும் இந்த மலர்கள், மண்ணின் உறுதித்தன்மையை அதிகரிப்பதுடன், நிலச்சரிவை கட்டுப்படுத்தும் திறனும் உடையது.

    ஊட்டி:

    நீலகிரி மலைப்பகுதிகள், சாலையோரங்கள் மற்றும் புல்வெளி பகுதிகளில் காட்டு டேலியா மலர்கள் பல வண்ணங்களில் பூத்துகுலுங்கி, சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்த்து உள்ளன.

    சிவப்பு, மஞ்சள், ஊதா, வெள்ளை உள்ளிட்ட பல வண்ணங்களில் மலரும் இந்த டேலியா மலர்கள் ஊட்டி சாலையோரங்கள், கேத்தரின் நீர்வீழ்ச்சி சாலைகள், மலைச்சரிவுகள் மற்றும் தொட்டபெட்டா மலைச்சாலைகளில் பூத்து பரவி உள்ளது.

    மலையின் குளிர்காற்றில் சூரியஒளி படும்போது இந்த காட்டு மலர்கள் ஆடும் தோற்றம், பயணிகள் புகைப்படம் எடுப்பதற்கு ஏற்ற அழகிய இயற்கை காட்சியாக அமைந்து உள்ளது.

    ஊட்டிக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் கூறுகையில், "இத்தனை வண்ண மலர்கள் இயற்கையாகவே இங்கு மலர்கின்றன என்பது ஆச்சரியம்" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளனர்.

    நீலகிரி மலையின் இயற்கை சமநிலையை பேணுவதில் இத்தகைய காட்டு மலர்கள் முக்கிய பங்கு வகிப்பதால் அவற்றை பறிப்பது அல்லது சேதப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

    நீலகிரி மலைப்பகுதிகளில் பசுமையும் மலர்களும் இணையும் இந்த காலத்தில் ஊட்டியில் பூத்து குலுங்கும் டேலியா மலர்கள், சுற்றுலா பயணிகளுக்கு இயற்கை அழகின் சிறந்த அனுபவமாக திகழ்கின்றன.

    நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவை தடுக்கும் வகையில் ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில், டைத்தோனியா டைவர்சிபோலியா எனப்படும் மெக்சிகன் காட்டு சூரியகாந்தி விதைகள், குன்னூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தூவப்பட்டன.

    வறட்சி காலங்களில் பூத்துக்குலுங்கும் இந்த மலர்கள், மண்ணின் உறுதித்தன்மையை அதிகரிப்பதுடன், நிலச்சரிவை கட்டுப்படுத்தும் திறனும் உடையது.

    வழக்கமாக அக்டோபர்-நவம்பர் மாதங்களில் பூக்கும் பருவம் கொண்ட காட்டு சூரிய காந்தி, தற்போது, மேட்டுப்பாளையம்-குன்னூர் சாலையில் பரவலாக பூத்துக் குலுங்குகின்றன. வாசம் இல்லாத மலராக இருந்தாலும், கண்களுக்கு குளிர்ச்சிதரும் வண்ணம் கொண்டிருப்பதால், இந்த பூக்களை சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்.

    சமீபத்தில் பெய்த மழை காரணமாக சூரியகாந்தி செடிகள் செழுமையாக வளர்ந்து இருப்பதால், நிலச்சரிவு ஆபத்து நீங்கி இருப்பதாக இயற்கை ஆர்வலர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளனர்.

    • அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், ரகுபதி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது.
    • ம.நீ.ம., ம.ம.க., ஐ.யூ.எம்.எல்., ஆம் ஆத்மி உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட 20 கட்சிகள் பங்கேற்றுள்ளன.

    கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்தையடுத்து, கட்சிகள் மேற்கொள்ளும் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தியது.

    இந்நிலையில் பொதுக்கூட்டங்கள், பிரசார கூட்டங்கள் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், ரகுபதி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது.

    கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், சி.பி.எம்., சி.பி.ஐ., வி.சி.க., தே.மு.தி.க., ம.தி.மு.க., பா.ஜ.க., த.வா.க., ம.நீ.ம., ம.ம.க., ஐ.யூ.எம்.எல்., ஆம் ஆத்மி உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட 20 கட்சிகள் பங்கேற்றுள்ளன.

    • பாட்டாளி மக்கள் கட்சியை நான் அமைதியாக நடத்திக்கொண்டிருந்த போது அதில் பிளவு ஏற்பட்டுள்ளது.
    • அன்புமணியோடு சேர்ந்துகொண்டு சமூக வலைதளங்களில் திட்டுகின்றனர்.

    விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாஸ் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அரசியலில் சில தவறுகள் செய்தது உண்டு, அதில் ஒன்று அன்புமணியை மத்திய அமைச்சராக்கியது. அருவருக்கத்தக்க வகையில் அன்புமணியின் செயல்பாடுகள் உள்ளது.

    பாட்டாளி மக்கள் கட்சியை நான் அமைதியாக நடத்திக்கொண்டிருந்த போது அதில் பிளவு ஏற்பட்டுள்ளது. என்னோடு 5 எம்எல்ஏக்கள் இருந்தனர். அதில் 3 எம்எல்ஏக்கள் தற்போது அன்புமணி கும்பலோடு போய்விட்டனர்.

    அய்யா என்று அன்போடு அழைத்தவர்கள் இப்போது அன்புமணியோடு சேர்ந்துகொண்டு சமூக வலைதளங்களில் திட்டுகின்றனர்.

    தமிழ்நாட்டில் 32 மாவட்டங்கள் இருந்தது. இப்போது 38 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. அதற்கு நான்தான் காரணம். பல்வேறு போராட்டங்களை வன்முறை இல்லாமல் நடத்தி உள்ளேன், என்னை எதிர்ப்பவர்களுக்கும் நாகரீகமாக பதிலடி கொடுப்போம்.

    என்னுடன் இருந்தவர்களுக்கு பொறுப்புகள் கொடுத்து அன்புமணியும், அவரது மனைவியும் கோமாளி தனம் செய்கிறார்கள்.

    அன்புமணி தரப்பு இன்னும் துப்பாக்கி மட்டுமே பயன்படுத்தவில்லை. அதையும் சீக்கிரம் பயன்படுத்திவிடுவார்கள்.

    ஒரே கட்சியில் இருந்தவர்களை பிரித்து தன் பக்கம் வைத்துக்கொண்டு கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களால் அடிதடி செய்கிறார்கள்.

    அன்புமணியிடம் இருப்பது அரசியல் கட்சி அல்ல, அது ஒரு கும்பல்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
    • சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.

    ஒகேனக்கல்:

    கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து கடந்த 4 நாட்களாக வினாடிக்கு 6,500 கனஅடியாக நீடித்து வந்தது.

    இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    இதனால் சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.

    மேலும் அவர்கள் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர். பின்னர் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.

    சுற்றுலா பயணிகள் மீன் சாப்பாடு வாங்கி கொண்டு பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

    • மது போதையில் இருந்த அந்த போலீஸ்காரர் சேரில் அமர்ந்தபடியும் தள்ளாடிய நிலையில் அமர்ந்திருந்தார்.
    • பொதுமக்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.

    வத்தலக்குண்டு:

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இன்று நடைபெற்ற அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள நேற்று மாலை கொடைரோடு வழியாக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். பின்னர் அங்கிருந்து தரைவழி மார்க்கமாக வாடிப்பட்டி வழியே கொடைரோடு பயணியர் விடுதிக்கு வந்தடைந்தார். அங்கு மாவட்ட கலெக்டர் சரவணன் மற்றும் எஸ்.பி. பிரதீப் ஆகியோர் கவர்னர் ரவிக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

    அதன் பின் நிலக்கோட்டை, வத்தலக்குண்டு வழியாக கொடைக்கானல் சென்றார். இந்நிலையில் கொடைரோடு, அம்மையநாயக்கனூர், நிலக்கோட்டை, வத்தலக்குண்டு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அப்போது கொடைரோடு அருகே அம்மையநாயக்கனூர் அரசு மருத்துவமனை மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே பாதுகாப்பு பணியில் சாலை ஓரம் நின்று கொண்டிருந்த நிலக்கோட்டை காவல் சரகத்திற்கு உட்பட்ட விளாம்பட்டியைச் சேர்ந்த அபிமன்யு என்ற போலீஸ்காரர் சீருடையில் மது போதையில் தள்ளாடிக் கொண்டிருந்தார்.

    பின்னர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதனை கவனித்த அருகில் இருந்த மற்ற போலீசார் அவரை கைத் தாங்கலாக அழைத்து சென்று சாலையோரத்தில் இருந்த ஒரு வாகனத்தின் மறைவில் சேர் போட்டு அமர வைத்தனர். மது போதையில் இருந்த அந்த போலீஸ்காரர் சேரில் அமர்ந்தபடியும் தள்ளாடிய நிலையில் அமர்ந்திருந்தார். இதனை அந்த வழியில் சென்ற பொதுமக்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.

    கவர்னர் வருகையின் போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் காலை முதலே மது போதையில் இருந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • ரேஸை தடுக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    சென்னை:

    ராயப்பேட்டை பீட்டர்ஸ் பாலத்தில் நள்ளிரவில் பைக் ரேஸின்போது ஏற்பட்ட விபத்தில், ரேஸில் ஈடுபட்ட சுஹைல், எதிரே ஹெல்மெட் அணிந்து வந்த குமரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    மேலும் பைக் ரேஸில் ஈடுபட்ட வாலிபர் சுஹைலின் நண்பர் சோயல் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ரேஸை தடுக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இருப்பினும், நள்ளிரவில் ரேஸில் ஈடுபடும் சம்பவங்கள் அரங்கேறி வருவது குறிப்பிடத்தக்கது. 

    ×