என் மலர்
உள்ளூர் செய்திகள்
- காலையில் சென்னையில் வெயில் வாட்டி வைத்தது
- இரவில் மழை பெய்து வருவதால் சென்னையில் குளிச்சியான சூழல் நிலவுகிறது.
தமிழக உள் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், சென்னையில் எழும்பூர், எண்ணூர், திருவொற்றியூர், வண்ணாரப்பேட்டை பகுதிகளில் தற்போது மிதமான மழை பெய்து வருகிறது.
காலையில் வெயில் வாட்டி வைத்தது வந்த நிலையில், இரவில் மழை பெய்து வருவதால் சென்னையில் குளிச்சியான சூழல் நிலவுகிறது.
- அனைத்து மாவட்ட தலைநகர்களில் 11ம் தேதி காலை 10 மணிக்கு போராட்டம் நடைபெறும்.
- திமுக., காங்கிரஸ்., விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் அறிவித்துள்ளன.
SIR நடவடிக்கைக்கு எதிராக திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி 11ம் தேதி போராட்டம் அறிவித்துள்ளது.
அதன்படி, அனைத்து மாவட்ட தலைநகர்களில் 11ம் தேதி காலை 10 மணிக்கு போராட்டம் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.
போராட்டத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உள்ள கட்சி தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக., காங்கிரஸ்., விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் அறிவித்துள்ளன.
- கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,250-க்கும் சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து.
- வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.
தங்கம் விலையில் தொடர்ந்து ஏற்றம், இறக்கம் காணப்பட்டு வருகிறது. ஒரு சவரனுக்கு நேற்று ரூ.560 குறைந்தது. அதன்படி சென்னையில் நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ11 ஆயிரத்து 180-க்கும், சவரன் ரூ.89 ஆயிரத்து 440-க்கும் விற்பனையானது. தங்கம் விலை கடந்த 2 நாட்களில் பவுனுக்கு ரூ.1,360 குறைந்தது.
அதேபோல், இன்றும் தங்கம் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று உயர்ந்தது. கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,250-க்கும் சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்துக்கும் விற்பனையானது.
இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் ரூ.1,120 உயர்ந்து ரூ.90,560க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ரூ.90,560க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து, ரூ.11,320க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. காலையில், கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 164 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 64 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து, வெள்ளியின் விலை மாலையில் கிராமுக்கு மேலும் ஒரு ரூபாய் உயர்ந்த நிலையில் ரூ.165க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- மக்களை பாதுகாக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் இருக்கிறது.
- பேச வேண்டியவர்கள் பேசினால்தான் அனைத்தும் நடக்கும்.
மதுரையில் த.வெ.க. கூட்டணி குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பதில் அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு சட்டமன்றத்தில் அதிமுக பிரதான எதிர்க்கட்சி. சட்டப்பூர்வமான பிரதான எதிர்க்கட்சி.
முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி இருந்தார். 43 தொகுதிகளில் 1,92,000 வாக்குகள் தான் பின்னடைவு. இப்படி தான் ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததே தவிர,
ஐந்தரை கோடி வாக்காளர்களில் ஒரு லட்சத்து 92 ஆயிரம் வாக்காளர்கள் அதிமுக கூட்டணிக்கு கிடைத்திருந்தால், எந்த உள்குத்தும், வெளிகுத்தும், ஊமைகுத்தும் இல்லாமல் இருந்திருந்தால், நாங்கள் எல்லோரும் ஜெயிச்சிருப்போம்.
உள்குத்து, ஊமைக்குத்து என்றால் என்ன என்று கேட்காதீர்கள். அது வாங்கியவர்களுக்கு மட்டும்தான் தெரியும்.
இது ஒரு பருவமழை காலம். மக்களை பாதுகாக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் இருக்கிறது. பிப்ரவரி, மார்ச் மாதத்திற்கு பிறகு கூட்டம் குறித்து கேள்வி கேளுங்கள். அப்போது சொல்கிறோம்.
நான் சொல்லியோ.. நீங்கள் சொல்லியோ ஒன்றும் நடக்காது. பேச வேண்டியவர்கள் பேசினால்தான் அனைத்தும் நடக்கும். நல்லதே நடக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டம் கிட்டத்தட்ட 1¼ கோடி பேருக்கு மாதம் 1000 ரூபாய் கொடுக்கிறார்.
- திட்டங்களை எல்லாம் மக்களிடம் தொடர்ந்து பேசிப் பேசி அவர்களிடம் ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.
சென்னை:
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அணைக்கட்டு சட்டசபை தொகுதியில் நடந்த கேள்வி பதில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவரிடம் 2026-ம் ஆண்டு தேர்தலில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்படுமா? என்ற ஒரு கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அளித்த பதில் வருமாறு:-
தலைவருடைய எதிர்பார்ப்பும், எனது எண்ணமும் இதுதான். நிச்சயம் உங்களின் கோரிக்கையைத் தலைவரிடத்தில் எடுத்துச் சொல்லி 2026 தேர்தலில் இளைஞர்களுக்கு அதிகமான வாய்ப்புகளைப் பெற்றுத் தர நான் முயற்சிக்கிறேன். இங்கு வந்திருக்கின்ற மூத்த கழக நிர்வாகிகள், அதற்கு முக்கியத்துவம் கொடுத்து புதிதாக வரக்கூடிய இளைஞர்களை நீங்கள்தான் வழிநடத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
நம்முடைய அரசு இந்த 4½ ஆண்டுகளில் பெண்கள், இளைஞர்கள், முதியோர்கள், குழந்தைகள், திருநங்கைகள் மாற்றுத் திறனாளிகள் இப்படி அத்தனை பேருக்கும் நம்முடைய தலைவர் பார்த்துப் பார்த்து பல்வேறு திட்டங்களை கொடுத்திருக்கிறார். இந்தத் திட்டங்களை எல்லாம் மக்களிடம் தொடர்ந்து பேசிப் பேசி அவர்களிடம் ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.
இந்த 4½ ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் 941 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு 31 லட்சம் பேர்களுக்கு புதிதாக வேலைவாய்ப்புகளை நாம் வழங்கி இருக்கின்றோம். அதுமட்டுமல்ல, நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக 10 லட்சம் மாணவர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கி 3 லட்சம் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பும் வழங்கி இருக்கின்றோம்.
யாருமே எதிர்பார்க்காத 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' திட்டம் கிட்டத்தட்ட 1¼ கோடி பேருக்கு மாதம் 1000 ரூபாய் கொடுக்கிறார். 'தமிழ்ப் புதல்வன் திட்டம்', புதுமைப் பெண் திட்டம், தாயுமானவர் திட்டம், 70 வயதுக்கு மேல் இருக்கக்கூடிய முதியோர்கள் இனிமேல் ரேஷன் கடைக்குப் போகத் தேவையில்லை. அவர்களின் வீடுகளுக்கே மாதந்தோறும் அந்த ரேஷன் பொருட்கள் வந்து சேரும் என்ற திட்டம். நேற்று முன்தினம் ஒரு ஜி.ஓ. போட்டிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 70 வயதைக் குறைத்து இப்போது 65 வயதாக மாற்றிவிட்டார்.
இப்படி ஒவ்வொரு பிரிவாக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்குப் பொறுப்பு, இது இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழகத்தில் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது.
- இதுபோன்ற குற்றச் சம்பவங்கள் மதுபோதையில் இருப்பவர்களாலேயே நிகழ்கின்றன.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளை போலீசார் விரைந்து கைது செய்துள்ளனர். எனினும் தமிழகத்தில் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. கடந்த 2024-ம் ஆண்டில் போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை 3,407-ல் இருந்து 5,319-ஆகவும், பாலியல் வன்கொடுமை வழக்குகள் 406-ல் இருந்து 471-ஆகவும் அதிகரித்துள்ளது. இது பெண்களின் பாதுகாப்பில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதையே காட்டுகிறது. இதுபோன்ற குற்றச் சம்பவங்கள் மதுபோதையில் இருப்பவர்களாலேயே நிகழ்கின்றன.
கடந்த 2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம் என தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட பெரும்பாலான அரசியல் கட்சிகள் வாக்குறுதி அளித்தன. இனியும் தாமதிக்காமல், தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் கட்டுப்படுத்த பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசு முன்வரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- கொஞ்சம் கொஞ்சமாகத் தான் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
- தனித்து நின்று நாங்கள் நிச்சயம் வலிமை பெறுவோம்.
சென்னை:
நாம் தமிழர் கட்சியின் மாநில நிர்வாக குழு கலந்தாய்வு கூட்டம் சென்னை, வடபழனியில் இன்று நடைபெற்றது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
234 சட்டமன்ற தொகுதிகளில் இருந்தும் வந்திருந்த நிர்வாகிகள் மத்தியில் சட்டமன்ற தேர்தலை எதிர் கொள்வது தொடர்பாக சீமான் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து பேசினார்.
முன்னதாக சீமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கூட்டணிக்காக காத்திருக்காமல் 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடுகிறோம் களத்தை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம். நல்ல அரசியல் உருவாக வேண்டும் என்கிற எண்ணத்தோடு செயல்பட உள்ளோம்.
வாக்குக்கு பணம் கொடுக்கும் கட்சிகளுக்கு மத்தியில் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி பணம் வாங்காமல் 35 லட்சம் பேர் எனக்கு வாக்களித்துள்ளனர்.
இது 60 லட்சமாக உயர்ந்து ஒரு கோடியை எட்டும் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது.
கொஞ்சம் கொஞ்சமாகத் தான் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அவசரம் காட்டக்கூடாது. நான் தற்போது மக்களுக்கு கசாயம் கொடுத்து வருகிறேன். அது மெதுவாகத்தான் வேலை செய்யும். கூட்டணி விஷயத்தில் விஜயகாந்த் செய்த தவறை நான் நிச்சயம் செய்ய மாட்டேன். அரசியல் கட்சிகளுக்கு மாற்று என்று கூறிவிட்டு அந்த கட்சிகளோடு கூட்டணி அமைத்தால் எப்படி மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
10 சதவீத வாக்குகளை தனித்து நின்று பெற்ற விஜயகாந்த் கூட்டணி அமைத்த பிறகு என்ன ஆனார் என்பது அனைவருக்கும் தெரியும். அதன் பிறகு தான் அவரது வாக்கு சதவீதம் குறைந்தது. எனவே எந்த தேர்தலிலும் யாருடனும் எப்போதும் கூட்டணி கிடையாது.
தனித்து நின்று நாங்கள் நிச்சயம் வலிமை பெறுவோம். ஆட்சி அதிகாரத்தில் அமர்வோம் என்கிற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு சீமான் கூறினார்.
- புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, முடிவுற்ற திட்ட பணிகள் திறப்பு விழா, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது.
- ரூ. 773 கோடியே 19 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் திட்ட பணிகளை வழங்குகிறார்.
புதுக்கோட்டை:
திருச்சி மற்றும் புதுக்கோட்டைமாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 9-ந்தேதி திருச்சி வருகிறார். அன்றைய தினம் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு இரவு சாலை மார்க்கமாக கார் மூலம் திருச்சி வருகிறார். பின்னர் டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள நெடுஞ்சாலை துறை சுற்றுலா மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கிறார்.
மறுநாள் 10-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. எம். பழனியாண்டி இல்ல திருமண விழாவில் கலந்து கொள்கிறார்.
இந்த திருமண நிகழ்ச்சி திருச்சி சோமரசம்பேட்டை டாக்டர் கலைஞர் திடலில் நடைபெறுகிறது. விழாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி மணமக்களை வாழ்த்தி பேசுகிறார்.
அதன் பின்னர், அங்கிருந்து புறப்பட்டு திருச்சி கொட்டப்பட்டு பகுதியில் உள்ள பாவை அறக்கட்டளை தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் அன்புச்சோலை முதியோர் இல்ல செயல்பாடுகளை தொடங்கி வைக்கிறார். பிறகு, புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வுக்காக கீரனூர் புறப்பட்டு செல்கிறார். கீரனூர் அருகே உள்ள களமாவூர் மூகாம்பிகை பொறியியல் கல்லூரி திடலில் இந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெறுகிறது. இதில் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, முடிவுற்ற திட்ட பணிகள் திறப்பு விழா, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது.
விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ரூ.201 கோடியே 70 லட்சம் மதிப்பிலான 103 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.223 கோடியே 6 லட்சம் செலவில் முடிவுற்ற 577 திட்ட பணிகளை திறந்து வைத்தும், 44 ஆயிரத்து 93 பயனாளிகளுக்கு ரூ. 348 கோடியே 43 லட்சம் மதிப்பிலான மொத்தம்
ரூ. 773 கோடியே 19 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் திட்ட பணிகளை வழங்குகிறார். இந்த நிகழ்ச்சிக்காக மூகாம்பிகை கல்லூரி வளாகத்தில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
- முதல்வர் தலைமையில்தான் இந்த கூட்டம் நடந்திருக்க வேண்டும்; ஆனால் ஏன் வரவில்லை?
- அதிமுக ஆட்சியில் விருப்பு, வெறுப்பின்றி பிற கட்சிகளின் கூட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
பொதுக்கூட்டங்கள், பிரசார கூட்டங்கள் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், ரகுபதி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது.
கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், சி.பி.எம்., சி.பி.ஐ., வி.சி.க., தே.மு.தி.க., ம.தி.மு.க., பா.ஜ.க., த.வா.க., ம.நீ.ம., ம.ம.க., ஐ.யூ.எம்.எல்., ஆம் ஆத்மி உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட 20 கட்சிகள் பங்கேற்றன.
இந்நிலையில், அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்ற அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
முதலமைச்சர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற வேண்டும்.
ஆனால் முதலமைச்சர், துணை முதலமைச்சர் இருவரும் ஏன் பங்கேற்கவில்லை என்று தெரியவில்லை. எங்களது ஆட்சி காலத்தில் ஆயிரத்துக்கும் மேல் பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த அனுமதி கொடுத்தோம்.
விருப்பு, வெறுப்பின்றி பிற கட்சிகளின் கூட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால் இந்த 4 ஆண்டுகளில் நாங்கள் அனுமதி கேட்டால் உடனே கொடுப்பதில்லை. திமுக ஆட்சியில் கூட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த நீதிமன்றத்தைதான் நாட வேண்டியுள்ளது. எனவே காவல்துறை பாகுபாடு இன்றி பாதுகாப்பு வழங்க வலியுறுத்தினோம்.
கூட்டங்களுக்கான விதி அனைத்துக் கட்சிக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேர் வரை கூடினால் வைப்புத்தொகை 3 லட்ச ரூபாய்.
- அனைவரும் அமைதியாக கலைந்து செல்வதை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.
கரூரில் கடந்த செப்டம்பர் 27-ந்தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயம் அடைந்தனர்.
இனி இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க அரசியல் கட்சி பொதுக்கூட்டங்கள் பிரசாரங்களுள், ரோடு ஷோ நிகழ்ச்சிகள் போன்றவை நடத்தும்போது அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்க அனைவருக்கும் அனுமதி வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து சமர்ப்பிக்க வேண்டும் என அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சில நாட்களுக்கு முன்பு வழிகாட்டுதல்களை உருவாக்க ஆலோசனை நடத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து இன்று சென்னை தலைமை செயலகத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் மற்றும் நாடாளுமன்ற, சட்டசபை உறுப்பினர்களை கொண்ட கட்சிகளின் பிரதிநிதிகளுடன் இந்த ஆலோ சனை கூட்டம் நடத்தப்பட் டது. இதில் அரசு சார்பில் மூத்த அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, மா.சுப்பிரமணியன் மற்றும் தலைமை செயலாளர் முருகானந்தம், உள்துறை செயலாளர், டி.ஜி.பி. கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தி.மு.க. சார்பில் ஆர்.எஸ்.பாரதி, என்.ஆர்.இளங்கோ, அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், இன்பத்துரை எம்.பி. கலந்து கொண்டனர்.
அதுபோல் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, விடுதலைச் சிறுத்தைகள் எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.பவானி உள்பட பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்று கருத்துகளை தெரிவித்தனர்.
பிரசார கூட்டங்களுக்கான விதிகள் அனைத்து கட்சிகளுக்கும் ஒரேமாதிரி இருக்க வேண்டும் என்று பலர் வலியுறுத்தினார்கள்.
இந்நிலையில் வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது தொடர்பாக நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் அரசு தரப்பில் முன்மொழியப்பட்ட பரிந்துரைகள்:
* அரசியல் கட்சிக் கூட்டங்களுக்கு டெபாசிட் தொகை நிர்ணயிக்க முடிவு
* 5000 முதல் 10,000 பேர் வரை கலந்து கொள்ளும் கூட்டங்களுக்கு ரூ.1 லட்சம் நிர்ணயம்
* 50,000 பேருக்கு மேல் கலந்துகொள்ளும் கூட்டங்களுக்கு ரூ.20 லட்சம் டெபாசிட் தொகையாக நிர்ணயிக்க திட்டம்
* ரோடு ஷோ நடத்தும் அரசியல் கட்சிகளிடமிருந்து வைப்புத்தொகை வசூலிக்க அரசு தரப்பில் பரிந்துரை
* 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேர் வரை கூடினால் வைப்புத்தொகை 3 லட்ச ரூபாய்.
* 20 ஆயிரம் பேரில் இருந்து 50 ஆயிரம் பேர் வரை கூடினால் ரூ.8 லட்சம் வைப்புத்தொகை
* 50 ஆயிரத்துக்கு மேல் கூடினால் ரூ.20 லட்சம் மதிப்பு தொகையும் கட்ட பரிந்துரை
* 5000 முதல் 10 ஆயிரம் பேர் வரை கூடினார் ரூ.1 லட்சம் வைப்புத்தொகை
* நிகழ்ச்சிக்கு முன்னதாக 2 மணி நேரம் முன்னர் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என பரிந்துரை
* ரோடு ஷோ பொதுக்கூட்டங்கள் 3 மணி நேரத்திற்கு உள்ளதாக முடிக்க வேண்டும்.
* அனைவரும் அமைதியாக கலைந்து செல்வதை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.
* 3 மணி நேரத்திற்கு மேல் கால அவகாசம் தேவைப்பட்டால் காவல்துறை அதிகாரி முடிவெடுப்பார்.
* குறிப்பிட்டதை விட 50 சதவீதம் மேல் எண்ணிக்கை கூடினால் வைப்புத்தொகை திரும்பத் தர மாட்டாது.
இதைத் தொடர்ந்து அரசு பல்வேறு நிபந்தனைகளுடன் பிரசார கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து ஐகோர்ட்டில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்யும்.
- தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிட்டுள்ளது.
- ஞாயிற்றுக்கிழமை 5,041 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.
சென்னை:
வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளியூர்களுக்கும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் பயணிகள் பலர் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள். இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிட்டுள்ளது.
அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) 340 பஸ்களும், நாளை மறுநாள் 350 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதேபோல், சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) 55 பஸ்களும், நாளை மறுநாள் 55 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கும் 100 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதவரத்தில் இருந்து நாளை மற்றும் நாளை மறுநாள் 20 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், வருகிற ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த வார விடுமுறையில் நாளை சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு 5 ஆயிரம் பயணிகளும், நாளை மறுநாள் 4,982 பயணிகளும் மற்றும் ஞாயிற்றுக்கிழமை 5,041 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.
சிறப்பு பஸ் இயக்கத்தை கண்காணிக்க அனைத்து பஸ் நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியை பயன்படுத்தி தங்களது பயணத்தை மேற்கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சென்னையில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் 2,500 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்றுள்ளது.
- போட்டியில் 30 நாடுகளைச் சேர்ந்த 4,000 பேர் பங்கேற்றனர்.
இந்திய மாஸ்டர்ஸ் தடகள சம்மேளனம் சார்பில் 23-வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. வருகிற 9-ந்தேதி வரை இந்த போட்டி நடைபெறுகிறது.
35 வயதுக்கும் மேற்பட்டவருக்கான இந்த போட்டியில் 30 நாடுகளைச் சேர்ந்த 4,000 பேர் பங்கேற்றனர்.
உடல் ஆரோக்கியத்தை ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டு நடத்தப்படும் இந்தப்போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
விழாவில் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா போட்டிக்கான தூதர் நடிகர் ஆர்யா, இந்திய மாஸ்டர்ஸ் தடகள சங்கம் பொதுச் செயலாளர் டேவிட் பிரேம்நாத், துணைத்தலைவர் எம்.செண்பகமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தப்போட்டி முதலில் இந்தோனேசியாவில் நடத்த திட்டமிடப்பட்டது. பின்னர் இந்தியாவுக்கு மாற்றப்பட்டது. 3-வது தடவையாக ஆசிய மாஸ்டர்ஸ் தடகள போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதற்கு முன்பு 2000, 2006ம் ஆண்டுகளில் பெங்களூருவில் நடைபெற்றது.
கடைசியாக 2023-ம் ஆண்டு பிலிப்பைன்சில் நடந்த ஆசிய மாஸ்டர்ஸ் தடகளபோட்டியில் இந்தியா 264 பதக்கங்களை பெற்றது. சென்னையில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் 2,500 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்றுள்ளது.
ஆசிய மாஸ்டர்ஸ் தடகள போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அமைச்சர் பி.கே.சேகர்பாபு, நடிகர் ஆர்யா, இந்திய மாஸ்டர்ஸ் தடகள சங்க துணைத்தலைவர் செண்பகமூர்த்தி அருகில் உள்ளனர்.






