என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 9-ந்தேதி திருச்சி வருகை
- புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, முடிவுற்ற திட்ட பணிகள் திறப்பு விழா, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது.
- ரூ. 773 கோடியே 19 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் திட்ட பணிகளை வழங்குகிறார்.
புதுக்கோட்டை:
திருச்சி மற்றும் புதுக்கோட்டைமாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 9-ந்தேதி திருச்சி வருகிறார். அன்றைய தினம் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு இரவு சாலை மார்க்கமாக கார் மூலம் திருச்சி வருகிறார். பின்னர் டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள நெடுஞ்சாலை துறை சுற்றுலா மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கிறார்.
மறுநாள் 10-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. எம். பழனியாண்டி இல்ல திருமண விழாவில் கலந்து கொள்கிறார்.
இந்த திருமண நிகழ்ச்சி திருச்சி சோமரசம்பேட்டை டாக்டர் கலைஞர் திடலில் நடைபெறுகிறது. விழாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி மணமக்களை வாழ்த்தி பேசுகிறார்.
அதன் பின்னர், அங்கிருந்து புறப்பட்டு திருச்சி கொட்டப்பட்டு பகுதியில் உள்ள பாவை அறக்கட்டளை தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் அன்புச்சோலை முதியோர் இல்ல செயல்பாடுகளை தொடங்கி வைக்கிறார். பிறகு, புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வுக்காக கீரனூர் புறப்பட்டு செல்கிறார். கீரனூர் அருகே உள்ள களமாவூர் மூகாம்பிகை பொறியியல் கல்லூரி திடலில் இந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெறுகிறது. இதில் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, முடிவுற்ற திட்ட பணிகள் திறப்பு விழா, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது.
விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ரூ.201 கோடியே 70 லட்சம் மதிப்பிலான 103 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.223 கோடியே 6 லட்சம் செலவில் முடிவுற்ற 577 திட்ட பணிகளை திறந்து வைத்தும், 44 ஆயிரத்து 93 பயனாளிகளுக்கு ரூ. 348 கோடியே 43 லட்சம் மதிப்பிலான மொத்தம்
ரூ. 773 கோடியே 19 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் திட்ட பணிகளை வழங்குகிறார். இந்த நிகழ்ச்சிக்காக மூகாம்பிகை கல்லூரி வளாகத்தில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.






