என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

விடிய விடிய சாரல் மழை- ஏற்காட்டில் கடும் குளிரால் மக்கள் அவதி
- சேலம் மாநகரில் இன்று அதிகாலை 2 மணியளவில் தொடங்கிய மழை விடிய விடிய சாரல் மழையாக பெய்தது.
- மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த வாரம் பரவலாக மழை பெய்த நிலையில் பின்னர் வறண்ட வானிலையே நிலவியது. இதனால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
இந்த நிலையில் சீதோஷ்ண நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டு நேற்றிரவு வானில் திடீரென கரு மேகங்கள் திரண்டன. பின்னர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாரல் மழையாக பெய்தது.
குறிப்பாக ஏற்காட்டில் நேற்றிரவு 11 மணிக்கு தொடங்கிய மழை சாரல் மழையாக இன்று காலையும் பெய்தது. இதனால் ஏற்காட்டில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. மேலும் தொடர் மழையால் ஏற்காட்டில் நேற்றிரவு முதல் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் ஏற்காட்டில் வசிக்கும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். விடிய, விடிய பெய்து வரும் சாரல் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.
சேலம் மாநகரில் இன்று அதிகாலை 2 மணியளவில் தொடங்கிய மழை விடிய விடிய சாரல் மழையாக பெய்தது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இன்று காலையிலும் மழை பெய்ததால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்பவர்களும் அவதி அடைந்தனர்.
இதே போல டேனீஸ்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளிலும் விடிய விடிய மழை பெய்தது. இந்த மழையால் வயல்வெளிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது.
மாவட்டத்தில் அதிகபட்சமாக ஏற்காட்டில் 26.4 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சேலம் மாநகர் 9, டேனீஸ்பேட்டை 25.2 மி.மீ. மழை என மாவட்டம் முழுவதும் 61.6 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. இன்று காலையும் சேலம் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை தூறிய படியே இருந்தது.
நாமக்கல் மாவட்டத்திலும் கொல்லிமலை செம்மேடு, புதுச்சத்திரம், சேந்தமங்கலம், ராசிபுரம், உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
மங்களபுரம்-20.20, புதுச்சத்திரம்-9, ராசிபுரம்-32, சேந்தமங்கலம்-2.20, கொல்லிமலை செம்மேடு-17 என மாவட்டம் முழுவதும் 80.40 மி.மீட்டர் மழை பெய்தது.






