என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • வைகை அணையின் நீர்மட்டம் 61.48 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 561 கன அடி வருகிறது.
    • பெரியாறு அணையின் நீர்மட்டம் 131.95 அடியாக உள்ளது.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரமுள்ள வைகை அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் முதல் மதுரை, திண்டுக்கல் மாவட்ட முதல்போக பாசனத்துக்காக கால்வாய் மூலம் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.

    தற்போது அணையில் 62 அடிக்கு தண்ணீர் இருப்பதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டத்தில் ஒரு போக பாசனத்துக்கு இன்று முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவில் 1797 ஏக்கர், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகாவில் 16452 ஏக்கர், மதுரை வடக்கு தாலுகாவில் 26792 ஏக்கர் என மொத்தம் 4541 ஏக்கர் நிலங்கள் பெரியாறு பிரதான கால்வாய் பாசன பகுதியின் கீழ் இரு போக பாசன நிலங்களாக உள்ளன.

    இந்த நிலங்களுக்கு முதல் போக பாசனத்துக்காக திறக்கப்பட்ட 900 கன அடி நீர் 45 நாட்களுக்கு முழுமையாகவும், 75 நாட்களுக்கு முறை வைத்தும் 120 நாட்கள் திறக்கப்பட்ட நிலையில் நேற்று காலை முதல் அந்த தண்ணீர் நிறுத்தப்பட்டது.

    இதனையடுத்து இன்று காலை முதல் வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட ஒரு போக பாசனத்துக்காக 1130 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீரின் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை, மதுரை மாவட்டத்தில் உள்ள வாடிப்பட்டி, மேலூர், மதுரை வடக்கு, திருமங்கலம், சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர் மற்றும் சிவகங்கை ஆகிய பகுதிகளில் சுமார் 1 லட்சத்து 5 ஆயிரத்து 2 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

    இந்த தண்ணீர் 45 நாட்களுக்கு முழுமையாகவும், 75 நாட்களுக்கு முறை வைத்தும் என 120 நாட்களுக்கு 8461 மில்லியன் கன அடி நீர் திறக்கப்படும் என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட உள்ளதால் நீர்மட்டம் குறைவதை ஈடுசெய்யும் வகையில் பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் வைகை அணைக்கு திறக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இன்று காலை நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 61.48 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 561 கன அடி வருகிறது. பாசனத்துக்கு 1130 கன அடி மற்றும் மதுரை மாநகர குடிநீருக்கு 69 என மொத்தம் 1199 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 3892 மி.கன அடியாக உள்ளது.

    பெரியாறு அணையின் நீர்மட்டம் 131.95 அடியாக உள்ளது. வரத்து 767 கன அடி. திறப்பு 900 கன அடி. இருப்பு 5153 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாகவும், சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 122.18 அடியாகவும் உள்ளது.

    • எனது வாழ்க்கை முழுவதையும் கட்சிக்காகவும், தொண்டர்களுக்காகவும் அர்ப்பணித்து விட்டேன்.
    • கேப்டன் மறைவுக்கு பிறகு அந்த கட்சி இல்லாமல் போய் விடும் என்று எண்ணினர்.

    கோவை:

    கோவை சிங்காநல்லூரில் தே.மு.தி.க. முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடந்தது. விழாவில் விஜயகாந்தின் மகனும், கட்சியின் இளைஞர் அணி செயலாளருமான விஜய பிரபாகரன் கலந்து கொண்டு பேசினார்.

    அவர் பேசுகையில் மறைந்த தனது தந்தையை நினைத்து மேடையிலேயே கண்ணீர் வடித்தார். அதை பார்த்து அங்கு திரண்டு இருந்த தொண்டர்களும், பெண்களும் கண் கலங்கினர்.

    மதுரையில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை 20 ஆண்டுகளுக்கு முன்பு தலைவர் விஜயகாந்த் தொடங்கினார். கட்சிக்கு பெயர் வைக்கும் பொழுது எங்களிடம் பெயர் குறித்து விவாதித்தார். முடிவில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்று பெயர் தேர்வு செய்யப்பட்டு இன்று 20 வருடத்தை கடந்து நிற்கிறது.

    இந்த மக்கள் தொண்டு என்றும் தொடரும். தே.மு.தி.க.வை நீங்கள் தூக்கி எறிந்தாலும் சுற்றில் அடித்த பந்துபோல திரும்பி வந்து மக்களுக்கு உதவி செய்து கொண்டே இருப்போம். தே.மு.தி.க. மத, இன, மொழி, பாகுபாடு பார்க்காத கட்சி.

    அனைத்து மொழிகளையும் கற்றுக் கொள்வதில் தவறு இல்லை. நான் அரசியலுக்கு வந்திருப்பதால் வாரிசு அரசியல் என்று கூறுவதை ஏற்க முடியாது.

    என்னை மற்ற பெற்றோர்களை போல எனது பெற்றோர்களும் நன்றாக படிக்க வைத்து வேலைக்கு அனுப்ப வேண்டும். திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். ஆனால் தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கட்சி தொண்டர்கள் என்னை கட்சி பணிக்கு அழைத்தார்கள்.

    நான் எனது வாழ்க்கை முழுவதையும் கட்சிக்காகவும், தொண்டர்களுக்காகவும் அர்ப்பணித்து விட்டேன். எனது தாயார், விஜயகாந்த் உயிர் பிரியும் வரை அவரது கையை தனது கைக்குள் வைத்துக் கொண்டார்.

    கேப்டன் மறைவுக்கு பிறகு அந்த கட்சி இல்லாமல் போய் விடும் என்று எண்ணினர். மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்த முயன்றனர். ஆனால் தொண்டர்கள் வியர்வை சிந்தி கட்சியை வளர்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

    எனது தாயார் பிரேமலதா விஜயகாந்த், ஒரு தோளில் கட்சியையும், மறு தோளில் கேப்டனையும், எங்களையும் சுமந்துட்டு தொண்டர்களுக்காக இந்த கட்சியை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

    நல்லவர்கள் லட்சியம், வெல்வது நிச்சயம். அது என்றுமே தோற்க கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் தே.மு.தி.க. மாநகர், மாவட்ட செயலாளர் சிங்கை சந்துரு உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • ரொக்க பணம் மற்றும் 16 பவுன் தங்க நகைகள் கொள்ளை போயின.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கரூர்:

    கரூர் மாவட்டம் வாங்கல் காவல் நிலைய சரகம் எல்லை மேடு அருகே உள்ள காவிரிநகரை சேர்ந்தவர் பவுன்ராஜ் (வயது31).

    இவர் கரூரில் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டிவிட்டு கரூருக்கு சென்றிருந்தார்.

    நேற்று இரவு வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டில் வலது பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது லாக்கர் உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.25 லட்சம் ரொக்க பணம் மற்றும் 16 பவுன் தங்க நகைகள் கொள்ளை போயின.

    இதுபற்றி பவுன்ராஜ் வெங்கமேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்களும் வந்து தடயங்களை பதிவு செய்தார்கள்.

    அப்பகுதியில் கண்காணிப்பு கேமரக்களில் கொள்ளையர் உருவம் பதிவாகி உள்ளதா என்றும் ஆய்வு செய்யப்பட்டன. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அனைத்து நகர்ப்புற பகுதிகளிலும் பண்டிகை நிகழ்வுகள் களைகட்டின.
    • மலையாளிகள் அத்தப்பூக்கோலமிட்டு ஓணம் பண்டிகையை கொண்டாடினர்.

    கோவை:

    கேரள மாநிலத்தின் பாரம்பரிய பண்டிகையான ஓணம் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதன் ஒருபகுதியாக கோவையில் கேரள மக்கள் அதிகம் வசிக்கும் கோவை, மேட்டுப்பாளையம், வால்பாறை, பொள்ளாச்சி மற்றும் நகர்ப்புற பகுதிகளிலும் பண்டிகை நிகழ்வுகள் களைகட்டின.

    ஓணம் பண்டிகை யையொட்டி கோவை சுந்தராபுரம், ஆவாரம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மலையாளிகள் அத்தப்பூக்கோலமிட்டு ஓணம் பண்டிகையை கொண்டாடினர். பின்னர் அவர்கள் பாரம்பரிய உடை அணிந்து கோலத்தை சுற்றிலும் பாடல்கள் பாடியபடி நடனமாடி மகிழ்ந்தனர்.

    ஓணம் தினத்தின் முக்கிய நிகழ்வாக மலையாள மக்கள் இன்று வீடுகளில் காலையில் கனி கண்டு கடவுளை வணங்கி வழிபாடுகள் நடத்தினர்.

    பின்னர் அவர்கள் கோவில்களுக்கு சென்றும் ஒருவருக்கு ஒருவர் வழத்துக்களை பரிமாறியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    கோவை ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையையொட்டி அதிகாலை 5 மணியளவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் மற்றும் நிர்மால்ய பூஜை மற்றும் சீவேலி பூஜை வழிபாடுகள் நடைபெற்றது.

    மேலும் 2 ஆயிரம் கிலோ பூக்களால் பிரமாண்டமாக அத்தப்பூ கோலம் போடப்பட்டு இருந்தது. இதனால் கோவில் வளாகத்தில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.

    மேலும் மாவட்ட அளவிலான கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள் மற்றும் வங்கிகளும் இந்த முறை ஓணம் பண்டிகை சிறப்பாக அனுசரிக்கப்பட்டது.

    நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, கூடலூர், பந்தலூர், சேரம்பாடி உள்ளிட்ட பகுதிகளிலும் ஓணம் பண்டிகை களைகட்டி காணப்பட்டது. அங்கு வசிக்கும் மலையாளிகள் அந்தந்த பகுதிகளில் உள்ள அய்யப்பன் கோவில்களுக்கு சென்று சிறப்பு வழிபாடுகளை நடத்தினர்.

    தொடர்ந்து அவர்கள் ஓணம் திருவிழாவின் முக்கியமான ஓணம் விருந்து படைக்கும் பணியில் குடும்பத்துடன் ஈடுபட்டனர். மலையாளிகள் படைத்து இருந்த ஓணம் விருந்து சைவ சாப்பாட்டில் ஓலன், காளன், எரிசேரி, உப்பேரி, அன்னாசி பழ பச்சடி, கிச்சடி, புளி இஞ்சி, சிப்ஸ், கூட்டுக்கறி, அவியல், சாம்பார், தக்காளி ரசம், சம்பாரம் உள்பட பல்வேறு உணவு வகைகள் இடம்பெற்றிருந்தன.

    பின்னர் மலையாளிகள் வீடுகளில் விருந்துணவை சுவாமிக்கு படைத்து வழிபாடு நடத்தினர். தொடர்ந்து அவர்கள் உறவினர்களுடன் ஒன்றாக அமர்ந்து ஓணம் விருந்தை சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

    ஓணம் பண்டிகை யையொட்டி கோவை, நீலகிரி மாவட்டங்களில் உள்ள பூ மார்க்கெட்டுகளில் வியாபாரிகள் ஏராளமான பூக்களை வரவழைத்து இருந்தனர். மேலும் பூக்கள் மலிவான விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இந்தாண்டு வயநாடு நிலச்சரிவு சம்பவத்தால் கோவை, நீலகிரியில் ஓணம் பண்டிகை களையிழந்து காணப்பட்டது.

    அதிலும் குறிப்பாக கோவை பூ மார்க்கெட்டில் பூக்கள் வரத்து அதிகரித்து இருந்தபோதிலும் அவற்றின் விலை குறைத்து தான் விற்பனை செய்யப்பட்டது.

    இருப்பினும் கேரள மக்கள் பெருமளவில் வராததால் பூ மார்க்கெட்டுகள் கூட்ட மின்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் பூக்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்த விவசாயி களும், பெருமளவில் விற்ப னையை எதிர்பார்த்து இருந்த வியாபாரிகளும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    • பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு வருகின்ற 21.9.2024 அன்று நடைபெறும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
    • அன்றைய தினத்திற்கு முன்போ அல்லது பிறகோ நடத்துவதற்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் செய்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

    சென்னை:

    அ.தி.மு.க. தலைமை கழகம் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்த நாளை முன்னிட்டு, அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று மதுரவாயல் வடக்கு பகுதியில் இன்று நடைபெற இருந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரை ஆற்றுவார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், திருவள்ளூர் மத்திய மாவட்டக் கழகப் பொருளாளர் ஜாவித் அகமத் திடீரென அகால மரணமடைந்து விட்டதால், இப்பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு வருகின்ற 21.9.2024 அன்று நடைபெறும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

    ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்டத்தில் 21.9.2024 அன்று நடைபெற உள்ள பிற பொதுக்கூட்டங்களை, அன்றைய தினத்திற்கு முன்போ அல்லது பிறகோ நடத்துவதற்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் செய்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வயிற்றெரிச்சலில் சாதி வர்ணம் வேறு பூசுகிறார்கள்.
    • தி.மு.க.வும், கங்கிரசும் குறி வைத்து தாக்கி வருகிறார்கள்.

    சென்னை:

    மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை குறி வைத்து தி.மு.க.வும், காங்கிரசும் தாக்குகின்றன. அதன் மற்று மொரு வெளிப்பாடுதான் கோவை சம்பவத்தின் பின்னணி என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கூறினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    சமூக நீதி பற்றி பேசும் தி.மு.க. ஆட்சியில் பட்டியலினத்தவர்கள் மீது நடத்தப்படும் கொடுமைகள் அதிகரித்து வருகிறது. அதை பற்றி யாரும் பேசுவதில்லை. ஆனால் ஒரு பெண்மணி உயர்ந்த பொறுப்பில் இருக்கிறார்.

    இவர்கள் செய்யும் தவறுகளை பாராளுமன்றத்தில் பட்டியலிடுகிறார். இவர்கள் பேசுவதை புரிந்து கொண்டு தமிழிலேயே பதிலும் கூறுகிறார்.

    இவர்கள் செய்யும் எல்லா தவறுகளையும் டெல்லியில் தோலுரித்து விடுகிறார் என்பதால் ஏற்பட்ட வயிற்றெரிச்சலில் இதில் சாதி வர்ணம் வேறு பூசுகிறார்கள்.

    தமிழகத்தில் மத்திய நிதி மந்திரியை தனிப்பட்ட முறையில் தி.மு.க.வும், கங்கிரசும் குறி வைத்து தாக்கி வருகிறார்கள்.

    அதனால்தான் இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி இருக்கிறார்கள். இதற்கெல்லாம் நாங்கள் பயப்படப் போவதில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள அண்ணா சிலைக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்ததுடன் உருவப் படத்துக்கும் மலர் தூவி வணங்கினார்.
    • அண்ணா அறிவாலயம் சென்று அங்கு உள்ள அண்ணா சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருத் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    சென்னை:

    பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்த நாள் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் உள்ள அண்ணா சிலை அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. சென்னையில் அண்ணாசாலையில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு, எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ஐ.பெரியசாமி, ரகுபதி, சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா, ப.ரங்கநாதன், ஜோசப் சாமுவேல், பரந்தாமன், தலைமைச் செயலாளர் முருகானந்தம் மற்றும் செய்தித்துறை அதிகாரிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

    இதன் பிறகு வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள அண்ணா சிலைக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்ததுடன் உருவப் படத்துக்கும் மலர் தூவி வணங்கினார்.

    இதில் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர் பெரு மக்களுடன் எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், கனிமொழி எம்.பி., சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் நே.சிற்றரசு, மயிலை வேலு, ஜெ.கருணா நிதி எம்.எல்.ஏ., எழிலன், மோகன், பூச்சிமுருகன் உள்ளிட்ட பலா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இதன் பிறகு அண்ணா அறிவாலயம் சென்று அங்கு உள்ள அண்ணா சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருத் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    இதில் பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி முருகன், துறைமுகம் காஜா உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்று அண்ணா உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    • சண்முக விலாசம் மண்டபம் முன்பு மனம் உருகி வேண்டிக் கொண்டார்.
    • ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நடிகர் விஷால் திருச்சி ஆதீனத்துடன் நேற்று வந்தார். அவர் கோவில் மூலவர் அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

    தொடர்ந்து சுவாமி சண்முகர், சத்ரு சம்ஹார மூர்த்தி ஆகிய சன்னதிகளில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டார். பின்னர் கோவிலில் இருந்து வெளியே வந்த அவர் சண்முக விலாசம் மண்டபம் முன்பு மனம் உருகி வேண்டிக் கொண்டார்.

    வெளியே வந்த அவரை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இதையடுத்து விஷால் திருச்சி ஆதீனத்துடன் பேட்டரி காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சென்னையில் பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது.
    • கிரேன் மற்றும் டிராலி வசதிகளும் கடற்கரை பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன

    சென்னை:

    தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 7-ந் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் விநாயகர் சிலைகள் பூஜைக்காக வைக்கப்பட்டன.

    சென்னையில் 1,500-க்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு தினமும் பூஜைகள் நடைபெற்றன.

    கடந்த 11-ந் தேதி அன்று 100-க்கும் மேற்பட்ட சிலைகள் கரைக்கப்பட்டன. நேற்றும் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப் பட்டது. இந்த நிலையில் இன்று சென்னையில் பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது.

    சென்னை மாநகர் முழு வதும் வைக்கப்பட்டிருந்த சிலைகளில் இதுவரை கரைத்தது போக 1,300 சிலைகள் இன்று 17 வழித் தடங்கள் வழியாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.

    பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரை, நீலாங்கரை பல்கலை நகர், திருவொற்றியூர் பாப்புலர் எடை மேடை, காசிமேடு மீன்பிடி துறை முகம் ஆகிய 4 இடங்களில் சென்னை மாநகர பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் அனைத்தும் ஊர் வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.

    சென்னை புறநகர் பகுதிகளான ஆவடி பகுதியில் வைக்கப்பட்டிருந்த 600-க்கும் மேற்பட்ட சிலைகள் எண்ணூர் கடற்கரை பகுதியில் கரைக்கப்பட்டன. இதேபோன்று தாம்பரம் சுற்று வட்டாரத்தில் வைக்கப்பட்டிருந்த 600 சிலைகளும் கடலில் கரைக்கப்பட்டன.

    இதையொட்டி கடற்கரை பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு இருந்தது. பெரிய விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக கிரேன் மற்றும் டிராலி வசதிகளும் கடற்கரை பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

    விநாயகர் சிலைகளை கடலில் கரைப்பவர்கள் தண்ணீரில் மூழ்காமல் இருப்பதற்காக முன்னேற்பாடுகளையும் போலீசார் மேற்கொண்டு இருந்தனர்.

    நன்கு நீச்சல் தெரிந்த வீரர்களும், மீனவர்களும் சிலைகள் கரைக்கப்பட்ட இடங்களில் கண்காணிப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர். மெரினா கடற்கரை பகுதி முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டு இருந்தது.

    சென்னை மாநகர் முழுவதும் 16,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டிருந்தனர். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணிகளை கவனித்தார்கள். சென்னை போலீஸ் கமிஷனர் அருண் மேற் பார்வையில் கூடுதல் கமிஷனர்கள் கண்ணன், நரேந்திரன் நாயர் ஆகியோரும் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு இருந்தனர்.

    ஊர்வல பாதைகள் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது. உயர் போலீஸ் அதிகாரிகள் தாங்கள் இருக்கும் இடங்களில் இருந்து ஊர்வலத்தை கண்காணிப்பதற்கான வசதிகளும் செய்யப்பட்டிருந்தன.

    இன்று காலை 10 மணியில் இருந்தே விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. பல்வேறு இடங்களில் பிற்பகலில் சிலைகள் எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.

    இந்து முன்னணி, பாரத் இந்து முன்னணி உள்பட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்டிருந்த அனைத்து சிலைகளுமே கடைசி நாளான இன்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.

    பாரத் இந்து முன்னணி சார்பில் புளியந்தோப்பு, பட்டாளம் ஆஞ்சநேயர் கோவில் அருகில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. பாரத் இந்து முன்னணி மாநில தலைவர் ஆர்.டி. பிரபு ஜி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

    இதேபோன்று அனைத்து இந்து இயக்க நிர்வாகிகளும் தங்களது பகுதியில் விநாய கர் ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர். விநாயகர் ஊர் வலம் மற்றும் சிலை கரைப்பை யொட்டி சென்னை மாநகர் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு இருந்தனர்.

    • விடுமுறை நாட்களில் ஏராளமான கூட்டம் அலைமோதுவது வழக்கம்.
    • வழக்கம் போல் அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.

    திருச்செந்தூர்:

    முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறந்த பரிகார தலமாக விளங்கி வருகிறது. இங்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் தொடர் விடுமுறை நாள் என்பதால் ஏராளமான பக்தர்கள் இன்று அதிகாலையில் இருந்தே கடல் மற்றும் நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    விடுமுறை நாட்களில் ஏராளமான கூட்டம் அலைமோதுவது வழக்கம். அந்த வகையில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், முகூர்த்த நாள் என்பதாலும் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    அதனால் தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் 5 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    வழக்கம் போல் அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தது.

    பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் பக்தர்கள் வந்த வாகன நெருக்கடியால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. ஆனாலும் போக்குவரத்து போலீசார் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாதவாறு சரி செய்தனர்.

    • ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேக விழா.
    • ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேக விழா. 7 சீர்வரிசை தட்டுகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.

    மங்கலம்:

    திருப்பூர் மாவட்டம் மங்கலம் பகுதியில் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் ஸ்ரீ விஷ்வக்சேனர், ஸ்ரீ கருடாழ்வார், ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் மற்றும் பரிவார தெய்வங்கள் உள்ளன.

    ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெற்றது. இதையொட்டி மங்கலம் இஸ்லாமியர்களின் பூர்வீக பள்ளிவாசலான மங்கலம் சுன்னத்வல் ஜமாஅத் பெரியபள்ளிவாசல் சார்பில் மங்கலம் பெரிய பள்ளிவாசலில் இருந்து ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு 7 சீர்வரிசை தட்டுகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.

    அவை கோவில் திருப்பணிக்குழு மற்றும் கும்பாபிஷேக விழாக்கமிட்டி நிர்வாகிகளிடம் வழங்கப்பட்டது. மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக நடைபெற்ற நிகழ்வு காண்போரை ஆச்சரியப்பட வைத்தது. இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருவொற்றியூர் மற்றும் அதன் அருகே உள்ள இடங்களில் வைக்கப்பட்டுள்ள சிலைகளை, திருவொற்றியூர் கடலிலும் கரைப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
    • விநாயகர் ஊர்வல பாதுகாப்பு பணியில் 16,500 போலீசாரும், 2 ஆயிரம் ஊர்காவல் படையினரும் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

    சென்னை:

    விநாயகர் சதுர்த்தி கடந்த 7-ந்தேதி விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதற்காக சென்னையில் இந்து அமைப்புகள் சார்பில் பொது இடங்களில் 1,524 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது. இந்த சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கு 11, 14, (அதாவது நேற்று) மற்றும் 15-ந்தேதி (அதாவது இன்று) ஆகிய 3 நாட்கள் போலீசார் அனுமதி வழங்கியிருந்தனர்.

    சாலைகள், முக்கிய தெருக்களில் வைத்து பூஜிக்கப்பட்ட பெரிய விநாயகர் சிலைகளில் ஒரு பகுதி 11-ந்தேதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டது.

    நேற்றும் ஏராளமான சிலைகள் கடலில் கரைக்கப்பட்டது. தற்போது வரை நூற்றுக்கும் மேற்பட்ட சிலைகள் கரைக்கப்பட்ட நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) விநாயகர் சிலைகள் அதிக எண்ணிக்கையில் கரைக்கப்பட உள்ளது.

    இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, சிவசேனா, பாரத் இந்து முன்னணி மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிலைகளுடன் பிரமாண்ட ஊர்வலம் நடைபெறுகிறது.

    விநாயகர் சிலைகளை அனுமதிக்கப்பட்ட 17 வழித்தடங்களின் வழியாக மட்டுமே எடுத்து செல்ல போலீசார் உத்தரவிட்டுள்ளனர். ஊர்வலத்தில் எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களும் நிகழாமல் இருக்க, சிலை கரைப்பு இடங்களில் தற்காலிக கட்டுப்பாட்டு அறைகள் மற்றும் காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

    பெரிய சிலைகளை தூக்கி சென்று கடலில் கரைப்பதற்கு ராட்சத கிரேன்களும், படகுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள், மோட்டார் படகுகள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. நீச்சல் தெரிந்த தன்னார்வலர்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    சென்னை மாநகரில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் பட்டினப்பாக்கம், நீலாங்கரை, காசிமேடு, திருவொற்றியூர் ஆகிய 4 இடங்களில் கரைக்கப்படுகிறது. நுங்கம்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர், புதுப்பேட்டை, பெரம்பூர், வியாசர்பாடி, புளியந்தோப்பு, பட்டாளம், சவுகார்ப்பேட்டை, அயனாவரம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், தேனாம்பேட்டை.

    தியாகராயநகர், எம்.ஜி.ஆர்.நகர், வடபழனி, சைதாப்பேட்டை, வில்லிவாக்கம், கொளத்தூர், திருமங்கலம், மதுரவாயல், கோயம்பேடு, அரும்பாக்கம் ஆகிய இடங்களில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை பட்டினம்பாக்கம் சீனிவாசபுரம் கடலில் கரைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    அடையார், கிண்டி, ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், நங்கநல்லூர், வேளச்சேரி, திருவான்மியூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகளை நீலாங்கரை கடலிலும், வட சென்னை பகுதிகளான தங்கசாலை, வண்ணாரப்பேட்டை, ராயபுரம், தண்டையார்பேட்டை, கொடுங்கையூர், மாதவரம் பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகளை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் கரைக்கப்படுகிறது.

    திருவொற்றியூர் மற்றும் அதன் அருகே உள்ள இடங்களில் வைக்கப்பட்டுள்ள சிலைகளை, திருவொற்றியூர் கடலிலும் கரைப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    விநாயகர் ஊர்வல பாதுகாப்பு பணியில் 16,500 போலீசாரும், 2 ஆயிரம் ஊர்காவல் படையினரும் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

    போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை முன்னிட்டு கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்படும்.

    * விநாயகர் சிலை ஊர்வலத்தின் காரணமாக திருவல்லிக்கேணியில் இருந்து சாந்தோம் நெடுஞ்சாலை நோக்கி வரும், செல்லும் வாகனங்கள், மெதுவாக சென்று, காந்தி சிலையிலிருந்து வலதுபுறமாக ஆர்.கே.சாலை, வி.எம் தெரு இடது, லஸ் சந்திப்பு, அமிர்தஜன் சந்திப்பு, டிசெல்வா சாலை, வாரன் சாலை வலது, டாக்டர் ரங்கா சாலை, பீமனா கார்டன் சந்திப்பு இடது திருப்பம், சி.பி. ராமசாமி சாலை, செயின்ட் மேரிஸ் சந்திப்பு, காளியப்பா சந்திப்பு இடதுபுறம் ஸ்ரீநிவாசா அவென்யூ - ஆர்.கே.மடம் சாலை வழியாக சென்று அவர்கள் இலக்கை அடையலாம்.

    * ஊர்வலம் ரத்னா கபே சந்திப்புக்கு அருகில் வரும்போது, ஜாம் பஜார் போலீஸ் நிலையத்தில் இருந்து எந்த வாகனமும் அனுமதிக்கப்படாது. ரத்னா கபே சந்திப்புக்கு பதிலாக இந்த வாகனங்கள் ஜானி ஜான்கான் சாலை வழியாக சென்று அவர்கள் இலக்கை அடையலாம்.

    * ஊர்வலம் டி.எச்.சாலைக்குள் நுழையும் போது, ஐஸ் ஹவுஸ் சந்திப்பில் இருந்து ரத்னா கபே சந்திப்பு நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்படாது, அதற்கு பதிலாக இந்த வாகனங்கள் பெசன்ட் சாலை, காமராஜர் சாலை வழியாக திருப்பி விடப்படும் அல்லது இடதுபுறம் ஜி.ஆர்.எச். சந்திப்பை நோக்கி சென்று அவர்களின் இலக்கை அடையலாம்.

    * மந்தைவெளியில் இருந்து சாந்தோம் சாலையை நோக்கி வரும் வாகனங்கள் தேவைப்பட்டால் தேவநாதன் தெரு, ஆர்.கே. மடம் சாலை வழியாக திருப்பி விடப்படும்.

    * கலங்கரை விளக்கம் முதல் சீனிவாசபுரம் உள்ள லூப் ரோட்டில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு செல்லும் வாகனம் மட்டும் அனுமதிக்கப்படும்.

    * விநாயகர் சிலைகள் கரைக்கும் இடங்களை சுற்றி சுமார் 10 கி.மீ சுற்றளவிற்கு எந்தவித வணிக வாகனங்களும் செல்ல அனுமதி இல்லை.

    ×