என் மலர்
உள்ளூர் செய்திகள்
- சித்தேசுவரர் சாமி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
- 21 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம்.
சேலம்:
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே கஞ்சமலை அடிவாரத்தில் சித்தர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்தேசுவரர் சாமி வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இங்கு மகா கணபதி, வெற்றி விநாயகர், ஞானசற்குரு பாலமுருகன், காளியம்மன் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன.
இந்த கோவில் பல ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாகும்.
மன்னன் அதியமான், அவ்வைக்கு கொடுத்த கருநெல்லி இந்த கஞ்சமலையில் விளைந்ததாகும். இவ்வாறு பிரசித்தி பெற்ற இக்கோவில் இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
கடந்த 2003-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து 21 ஆண்டுகளுக்கு பிறகு இக்கோவில் மகா கும்பாபிஷேக விழா இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது.
காலை 4.30 மணிக்கு மேல் திருப்பள்ளி எழுச்சி, தமிழ்திருமுறை பாராயணம், காலை 7 மணிக்கு மாகாதீபாராதனை, யாக சாலையில் இருந்து திருவருள், திருக்குடங்கள் புறப்பாடு, காலை, 6.30 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் மூலஸ்தான, ராஜ கோபுர கும்பாபிஷேகம், காலை 7.30 மணிக்கு மேல் 8 மணிக்குள் பால முருகன் கோவில் கும்பாபிஷேகம், காலை, 7.35 மணிக்கு மேல் 8.15 மணிக்குள் காளியம்மனுக்கு கும்பாபிஷேகம், காலை 9 மணிக்கு மேல் 10.45 மணிக்குள் கஞ்சமலை சித்தேஸ்வரசாமிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. 750-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணி க்கப்பட்டன. மேலும் சாதாரண உடையிலும் போலீசாரும் கண்காணி த்தனர். பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.
- திருவந்திபுரம் ஊர் பகுதியில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றிருந்தன.
- பொதுமக்கள் அதிகளவில் குவிந்ததால் கடலூர்-பாலூர் சாலையில் காலை முதல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கடலூர்:
கடலூர் அருகே திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்றதாகும். மேலும் பிராத்தனை செய்து கொண்டவர்கள் இங்கு திருமணம் செய்து கொண்டு தேவநாதசாமியை தரிசித்து சென்று வருகின்றனர்.
திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் முன்பு உள்ள மலையில் முகூர்த்த நாட்களில் அதிக அளவில் திருமணம் நடைபெற்று வருவதால் கூட்ட நெரிசல் அதிகரித்து வந்தது. இதனால் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் திருவந்திபுரத்தில் புதிதாக திருமண மண்டபம் கட்டும் பணி நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில் நாளையுடன் ஆவணி மாதம் முடிந்து நாளை மறுநாள் புரட்டாசி மாதம் தொடங்குவதால் தேவநாத சுவாமி கோவிலில் அதிகாலை 4 மணி முதல் திருமணங்கள் நடைபெறத் தொடங்கியது. இதனை தொடர்ந்து திருவந்திபுரம் ஊர் பகுதியில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றிருந்தன. மேலும் திருமண ஜோடிகள் திருவந்திபுரம் முகப்பு பகுதியில் இருந்து கோவிலுக்கு நடந்து சென்றனர்.
கோவில் திருமண மண்டபத்தில் 75 திருமணங்களும், அப்பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் சுமார் 25 திருமணங்கள் என 100 திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும். இதனால் பொதுமக்கள் அதிகளவில் குவிந்ததால் கடலூர்-பாலூர் சாலையில் காலை முதல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் அதிகாலை முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
- 20 நிமிட இடைவெளியில் ரெயில்கள் இயக்கப்படவில்லை.
- பயணிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.
சென்னை:
சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களின் போக்குவரத்துக்கு மின்சார ரெயில்களே பெரிதும் கை கொடுத்து வருகின்றன.
இந்த மின்சார ரெயில்கள் பராமரிப்பு பணிகளுக்காக தற்போது அடிக்கடி ரத்து செய்யப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் முகூர்த்த நாளான இன்று சென்னை கடற்கரையில் இருந்து பல்லாவரம் வரையில் மட்டுமே மின்சார ரெயில்கள் பெரிதும் இடைவெளிவிட்டே இயக்கப்பட்டன.
இதனால் குரோம்பேட்டை, தாம்பரம் சானிடோரியம், தாம்பரம் ஆகிய 3 ரெயில் நிலையங்களுக்கும் மின்சார ரெயில் சேவை முற்றிலும் தடைபட்டுள்ளது.
கடற்கரையில் இருந்து பல்லாவரம் வரையில் இயக்கப்படும் ரெயில்களும் வழக்கம் போல 20 நிமிட இடைவெளியில் இயக்கப்படவில்லை. காலை 8.30 மணியில் இருந்து ஒரு மணிநேர இடைவெளிவிட்டே ரெயில்கள் இயக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.
முகூர்த்த நாளான இன்று பொதுமக்கள் தாங்கள் செல்லும் இடங்களுக்கு ரெயில் பயணத்தையே பெரிதும் நம்பியிருந்தனர்.
ஆனால் மின்சார ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டு இருந்ததால் திருமண நிகழ்ச்சி களுக்கு சென்றவர்கள் கடுமையான பாதிப்பை சந்தித்தனர்.
மணிக்கணக்கில் காத்திருந்தே மின்சார ரெயில்களில் பயணம் செய்ய நேரிட்டது. மின்சார ரெயில்கள் ரத்து செய்யப் பட்டதையடுத்து கூடுதல் பஸ் சேவைகளும் இயக்கப்பட்டன.

பஸ்களில் மக்கள் கூட்டம் அலை மோதியது. மெட்ரோ ரெயில்களிலும் மக்கள் இன்று அதிக அள வில் பயணம் மேற்கொண்ட னர். இதன் காரணமாக மெட்ரோ ரெயில்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
திருமண வீடுகளுக்கு செல்வதற்காக பட்டுச் சேலை பட்டு வேட்டியுடன் வீட்டில் இருந்து புறப்பட்ட கணவன்-மனைவி பலர் திருமண வீடுகளுக்கு செல்வதற்கு முன்பாகவே சேலைகளும் வேட்டிகளும் நெரிசலில் சிக்கி கசங்கி போயிருந்ததையும் காண முடிந்தது.
இதுபற்றி பொதுமக்கள் கூறும்போது, "இது போன்ற முகூர்த்த நாட்களை எல்லாம் கணக்கில் கொண்டு இனி வரும் காலங்களில் அதிகாரிகள் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
பொதுமக்கள் அதிக அளவில் விடுமுறை நாட்களில் ரெயில்களை பயன்படுத்துவதாக இருந்தால் அன்றைய தினம் பராமரிப்பு பணிகளை தள்ளி வைத்துவிட்டு வேறு ஒரு நாளில் அந்த பணிகளை செய்ய வேண்டும்" என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
- தமிழகத்தை பொறுத்தவரை அ.தி.மு.க. ஆட்சி தான் மீண்டும் வரும். கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை.
- தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க. இந்த இரண்டு திராவிட கட்சிகள் தான் மாறி மாறி ஆட்சி அமைக்க முடியும்.
மதுரை:
மதுரையில் இன்று முன்னாள் அமைச்சர் செல்லுர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-
கோவையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்ற விழாவில் பேசிய தொழிலதிபர் மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம் தொடர்பாக எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடியார் விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளார். பாரதிய ஜனதாவின் இந்த நிலைப்பாடு மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். இதனை மக்கள் நன்றாக புரிந்துள்ளனர்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தின் பெருமை, கலாச்சாரம் ஆகியவற்றை பேணுவதாக பிரதமர் மோடி வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் இப்போது அதற்கு எதிர்மாறாக மத்திய அமைச்சர் நடந்துள்ளார். இது விரும்பத் தகாத சம்பவம் ஆகும்.
வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. வலிமையான ஒரு இயக்கமாக தேர்தலை சந்திக்கும். அ.தி.மு.க. மகா சமுத்திரம் போன்றது. எங்களுக்கு ஒரே எதிரி தி.மு.க. தான். வேறு யாரையும் நாங்கள் பொருட்படுத்தவில்லை. பாரதிய ஜனதாவை பொருத்தவரை அதன் மதவாதத்தை அ.தி.மு.க. ஒரு போதும் ஏற்கவில்லை. எங்களை பொறுத்தவரை கூட்டணி தேவையில்லை.
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளிலேயே தி.மு.க.வின் ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டு விட்டது. தி.மு.க. ஒருமுறை ஆட்சிக்கு வந்தால் தொடர்ந்து மறுமுறை ஆட்சிக்கு வராது இதுதான் வரலாறு. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விட பல மடங்கு திறமை கொண்டவராக எடப்பாடியாரை மக்கள் பார்க்கிறார்கள். எனவே வருகிற 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில் அ.தி.மு.க. மகத்தான வெற்றியை பெறும். மீண்டும் எடப்பாடியார் முதலமைச்சராக வருவார்.
தமிழகத்தை பொறுத்தவரை அ.தி.மு.க. ஆட்சி தான் மீண்டும் வரும். கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க. இந்த இரண்டு திராவிட கட்சிகள் தான் மாறி மாறி ஆட்சி அமைக்க முடியும். கூட்டணி ஆட்சி என்பது தமிழக மக்களால் விரும்பத்தகாத ஒன்றாகும். கூட்டணி ஆட்சி அமைந்த மகாராஷ்டிரா உள்ளிட்ட வடமாநிலங்களில் நிலைமை என்னவாக இருக்கிறது என்று மக்களுக்கு நன்றாக தெரியும். எனவே தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடம் இல்லை.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சுற்றுப்பயணம் செய்து தொழில் முதலீட்டை ஈர்த்து வந்துள்ளதாக கூறுகிறார். ஆனால் இதுவரை பல முதலமைச்சர்கள் அமெரிக்காவுக்கு சென்றுள்ளனர். இவர் மக்களின் வரிப்பணத்தில் ஜாலியாக சுற்றுலா சென்று வந்துள்ளார். மற்றபடி அதில் குறிப்பிடத்தக்க ஒன்றுமில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- கூட்டணி ஆட்சி என்பது விளிம்பு நிலை மக்களின் அதிகார வேட்கைக்கான ஒரு குரல்.
- தனி மெஜாரிட்டியாக பாஜக வெற்றி பெற்றாலும், கூட்டணி கட்சிக்கு அங்கீகாரம் தருகிறார்கள்.
திருச்சி:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
மது ஒழிப்பில் மத்திய, மாநில அரசுகளுக்கு தான் பொறுப்பு உள்ளது என்பது போல ஒரு பார்வை இருக்கிறது. இந்திய அரசமைப்புச் சட்டம் உறுப்பு எண் 47 அதற்கான ஒரு வாய்ப்பை உருவாக்கி தருகிறது.
இது தொடர்பாக 2-வது 5 ஆண்டு காலத்திலும் 3-வது ஐந்தாண்டு காலத்திலும் விரிவாக காங்கிரஸ் ஆட்சி காலத்திலே பேசப்பட்டிருக்கிறது. ஸ்ரீமன் நாராயணன் தலைமையில் ஒரு குழுவை அமைக்கப்பட்டது. அந்த குழு ஏராளமான பரிந்துரைகளையும் தந்திருக்கிறது.
அந்த குழு பரிந்துரையில் மிக முக்கியமானது மதுவிலக்கு தொடர்பான சட்டம் இயற்ற வேண்டும், 1958-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதிக்குள்ளாக ஒரு சட்டத்தை இயற்ற வேண்டும் என்று கூறி இருக்கிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாடு என்பதை தேர்தல் அரசியலோடு இணைத்து பார்க்க கூடாது. இதனை மக்கள் பிரச்சனையாக பார்க்க வேண்டும். மது என்பது சமூக பிரச்சனையாகவும், தேசிய பிரச்சனையாகவும் பார்க்க வேண்டும்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்திற்கு பலியான 69 பேரும் தலித்துகள் கிடையாது. பல சமூகத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர். எனவே மதுவினால் எல்லா சமூகத்தினரும் பாதிக்கப்படுகிறார்கள். மதுவினால் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்திற்கும், ஊருக்கும், நாட்டிற்கும் பாரமாக இருக்கிறார்கள். எனவே 100 சதவீத தூய நோக்கத்தோடு இந்த மது ஒழிப்பு மாநாட்டை நாங்கள் முன்னிறுத்துகிறோம். இதில் எந்த அரசியல் கணக்கும் இல்லை என்பதை மறுபடியும், மறுபடியும் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.
1977ல் இருந்து டெல்லியில் கூட்டணி ஆட்சி நடக்கிறது. தனி மெஜாரிட்டியாக பாஜக வெற்றி பெற்றாலும், கூட்டணி கட்சிக்கு அங்கீகாரம் தருகிறார்கள். தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி நடப்பது ஒன்றும் தவறல்ல. அப்படி ஒரு கோரிக்கை எழுப்புவதும் தவறில்லை.
2016ல் இந்த கோரிக்கையை வலியுறுத்தி நாங்கள் ஒரு கருத்தரங்கை நடத்தி உள்ளோம். இது தொடர்பாக ஒரு புத்தகமும் வெளியிட்டு உள்ளோம். இந்த கருத்து யாருக்கும் எதிராகவும், யாரையும் மிரட்டுவதற்காகவும் சொல்லப்படுகிற கருத்தல்ல. ஜனநாயக ரீதியாக எழுப்ப வேண்டிய கோரிக்கைகள். அதிகாரமில்லாதவர்களின் குரல் இது. விளிம்பு நிலையில் கிடக்கும் மக்களின் குரல் இது.
அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதுதான் உண்மையான ஜனநாயகமும் கூட. கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்பது இயல்பாக மக்களிடம் இருந்து எழும் குரலே தவிர, இது விடுதலை சிறுத்தைகள் ஏதோ திட்டமிட்டு காய்களை நகர்த்துகின்றன என்பது அல்ல. நாங்கள் எந்த காயையும் நகர்த்தவில்லை. ஓர் இடத்தில் அதிகாரத்தை குவிப்பது இல்லை ஜனநாயகம். அதிகாரத்தை பகிர்ந்து அளிப்பதுதான் ஜனநாயகம். நான் அரசியலில் முதன் முதலில் காலடி எடுத்து வைத்த போதே எழுப்பிய முழக்கம், கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம், எளிய மக்களுக்கும் அதிகாரம் என்பதுதான்.
அதிகாரம் என்பது ஒரு குறிப்பிட்ட கட்சியிடம் மட்டும் இருக்க கூடாது. கூட்டணி ஆட்சி என்பது விளிம்பு நிலை மக்களின் அதிகார வேட்கைக்கான ஒரு குரல். கூட்டணி ஆட்சி கோரிக்கை குறித்து 2026 தேர்தல் வரும் போது பார்த்துக்கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழ்நாட்டை உலக அளவில் நிமிரச் செய்தவர் அண்ணா.
- அண்ணாவின் புகழை மறைத்து, கருணாநிதியின் புகழ் பாடுகிறது தி.மு.க..
சென்னை:
சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த பிறகு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டை உலக அளவில் நிமிரச் செய்தவர் அண்ணா. அவரது ஆட்சிக் காலத்தில் கொண்டு வந்த திட்டங்கள் இன்றளவும் நிலைத்துள்ளது.
பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை கொண்டாட தி.மு.க.வுக்கு தகுதி இல்லை. கடந்த 3 ஆண்டு தி.மு.க. ஆட்சியில் அண்ணாவின் பெயர் ஒரு திட்டத்திற்கு கூட வைக்கவில்லை. அண்ணாவின் புகழை மறைத்து, கருணாநிதியின் புகழ் பாடுகிறது தி.மு.க..
அண்ணாவின் கொள்கை முழுமையாக மறக்கப்பட்டு ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் கிளை இயக்கமாக தி.மு.க. மாறி இருக்கிறது. அண்ணாவை இழிவு படுத்திய அதே பா.ஜ.க. தலைவர்களை அழைத்து வந்து அரசு விழாக்களில் பங்கேற்க செய்துள்ளது.
இந்த ஆட்சியால் ஈர்க்கப்பட்டு இருக்கும் பொருளாதார முதலீடுகள் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிடுவாரா? அவர் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு சென்றாரா? அல்லது அவர் முதலீடு செய்ய வெளிநாடுகளுக்கு பயணம் செய்தாரா? என்ற கேள்வியும் மக்களிடையே எழுந்துள்ளது.

தி.மு.க. கூட்டணியில் இருக்கும் கட்சிகள் நீரில் பூத்த நெருப்பு போல உள்ளது. திருமாவளவன் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு கேட்பது போன்று பேசி இருப்பது தி.மு.க.விற்கு பயத்தை ஏற்படுத்தி உள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடத்தும் மது ஒழிப்பு மாநாடு பொது நோக்கத்தோடு நடத்தப்படுகிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மதுஒழிப்பு மாநாடுக்கு எங்கள் தலைமையை நேரடியாக சந்தித்தோ அல்லது கடிதம் மூலமாகவோ அழைப்பு விடுத்தால் மாநாட்டில் பங்கேற்பது குறித்து முடிவு எடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மறைமுக தேர்தல் கூட்ட ணியை அ.தி.மு.க. தொடங்கி விட்டதா? என்ற கேள்விக்கு, அரசியலில் அனைத்தும் நடக்கும் என்று டி.ஜெயக்குமார் பதில் அளித்தார்.
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை.
- தமிழ்நாடாக தலைநிமிர்ந்து நடைபோட வித்திட்டவர் பேரறிஞர் அண்ணா.
சென்னை:
பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்த நாள் இன்று சிறப்பாக கொண்டாடப் பட்டது.
இதையொட்டி தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் உள்ள அண்ணாசிலை அலங்கரித்து வைக் கப்பட்டிருந்தது. சென்னையில் அண்ணாசாலையில் அமைந்துள்ள அண்ணாசிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு, எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ஐ.பெரியசாமி, ரகுபதி, சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா, ப.ரங்கநாதன், ஜோசப்சாமுவேல், பரந்தாமன், தலைமைச்செயலாளர் முருகானந்தம் மற்றும் செய்தித்துறை அதிகாரிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
இதன் பிறகு வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள அண்ணா சிலைக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து உருவப்படத்துக்கும் மலர் தூவி வணங்கினார்.
இதில் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்களுடன் எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், கனிமொழி, சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் நே.சிற்றரசு, மயிலை வேலு, ஜெ.கருணா நிதி எம்.எல்.ஏ., எழிலன், மோகன், ஏ.எம்.வி. பிரபாகர்ராஜா எம்.எல்.ஏ. பூச்சிமுருகன் உள்ளிட்ட பலா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதன் பிறகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயம் சென்று அங்குள்ள அண்ணா சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருத் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி னார்.
அண்ணா அறிவாலய கட்டிடத்தின் மேலே அமைக்கப்பட்டிருந்த 75-ம் ஆண்டு தி.மு.க. பவளவிழா இலட்சினையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதில் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி முருகன், துறைமுகம் காஜா உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

இதேபோல் அண்ணா சாலையில் உள்ள அன்பகத்தில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 75-வது ஆண்டு தி.மு.க. பவள விழா இலட்சினையை திறந்து வைத்து கொடியேற்றினார். இதில் இளைஞரணி மாநில நிர்வாகிகள் மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறி இருப்பதாவது:-
75 ஆண்டுகளாக தி.மு.க. இந்த சமூகத்தில் மாற்றங்கள் பல ஏற்படுத்தி, தலைசிறந்த தமிழ்நாடாக நாம் தலைநிமிர்ந்து நடைபோட வித்திட்டவர் நம் பேரறிஞர் அண்ணா!
தலைவர் கலைஞர் அவர்கள் தன் இறுதி மூச்சிலும் "அண்ணா… அண்ணா…" என்றே பேசினார், எழுதினார். அத்தகைய உணர்வுப்பூர்வமான தம்பிமார்களைப் பெற்ற ஒப்பற்ற பெருமகன்.
ஒரு இனத்தின் அரசாகச் செயல்பட நம்மை ஆளாக்கிய பேரறிஞர் பெருந்தகை அண்ணாவைப் போற்றி வணங்குகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- அண்ணன்-தம்பிக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
- அண்ணன், தம்பி 2 பேரும் சவுந்தர் என்பவருடன் சேர்ந்து மது அருந்தினர்.
திருச்சி:
திருச்சி கீழதேவதானம் பகுதியை சேர்ந்தவர் பாண்டியராஜன். இவருடை மகன்கள் ரமேஷ் (வயது 50), பிருத்விராஜ் (48). திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. ஆதிதிராவிடர் நலக்குழுவில் துணை அமைப்பாளராக பிருத்விராஜ் பொறுப்பு வகித்து வந்தார். பிருத்விராஜூக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
கடந்த 2016-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட உள்ளாட்சி தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு பிருத்விராஜ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால் அந்த தேர்தல் ரத்து ஆனதுடன், மீண்டும் நடந்த தேர்தலில் அந்த வார்டு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்தநிலையில் நேற்று காலை அண்ணன்-தம்பிக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் அவர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். பின்னர் பிற்பகலில் வீட்டின் 3-வது மாடியில் உள்ள தனி அறையில் அண்ணன், தம்பி 2 பேரும் சவுந்தர் என்பவருடன் சேர்ந்து மது அருந்தினர்.
அப்போது, அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் ரமேசும் அவருடைய நண்பர் சவுந்தரும் வீட்டை விட்டு சென்றுவிட்டனர். மாலையில் நீண்ட நேரமாகியும் பிருத்விராஜ் கீழே வராததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் மாடிக்கு சென்று பாா்த்தனர்.
அங்கு பிருத்விராஜ் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அருகில் உடற்பயிற்சி செய்யும் கர்லா கட்டை ரத்தக்கறையுடன் கிடந்தது. உடனே இதுபற்றி கோட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், மாடியில் அமர்ந்து 3 பேரும் மது அருந்திய போது, தகராறு ஏற்பட்டது. இதில் தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த ரமேஷ் அங்கிருந்த கர்லா கட்டையால் தனது தம்பி பிருத்விராஜை அடித்து கொலை செய்ததும், பின்னர் ரமேசும், சவுந்தரும் அங்கிருந்து தப்பிச்சென்றதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து பிருத்விராஜின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறார்கள். இந்தநிலையில் பிருத்விராஜின் அண்ணனை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.
தேர்தல் தொடர்பான முன் விரோதத்தில் தம்பியை கொலை செய்ததாக கைதான பிருத்விராஜின் அண்ணன் ரமேஷ் பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளார். தொடர்ந்து போலீசார் அவருடைய நண்பரை தேடி வருகிறார்கள்.
- அ.தி.மு.க.வின் வரலாறு யாரையும் குறை சொல்லக்கூடாது என்பது தான்.
- 2026- இல் அ.தி.மு.க. ஆட்சி அமைவது உறுதி.
தஞ்சாவூர்:
தஞ்சையில் இன்று பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை ஒட்டி அவரது சிலைக்கு அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழு இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
எம்ஜிஆர், ஜெயலலிதா கட்டி காத்த இயக்கம் அ.தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பது பெரும்பாலான தொண்டர்களின் விருப்பமாகும். அ.தி.மு.க.வின் வரலாறு யாரையும் குறை சொல்லக்கூடாது என்பது தான்.
என்னைவிட அ.தி.மு.க. வரலாறு பற்றி பேச யாருக்கும் தகுதி இல்லை. சிலர் அவர்களின் கருத்துக்களை கூறலாம். அ.தி.மு.க பொதுச்செயலாளரை தொண்டர்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால் விதியை மாற்றி தேர்ந்தெடுத்துள்ளனர்.
அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்று நான் பலமுறை வலியுறுத்தி வருகிறேன். அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் ஒன்று இணையும் என முன்பு கூறியிருந்தேன். ஆனால் வரும் பிப்ரவரி மாதத்திற்குள் கண்டிப்பாக ஒன்றிணையும். 2026- இல் அ.தி.மு.க. ஆட்சி அமைவது உறுதி. நான் கட்சி வேஷ்டி கட்டுகிறேன். தைரியம் இருந்தால் என் மீது வழக்கு போட்டு பார்க்கட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உத்தரகாண்ட் மாநிலம் ஆதி கைலாஷ்க்கு ஆன்மிக சுற்றுலா சென்றனர்.
- சொந்த ஊருக்கு திரும்பமுடியாமலும் 30 பேரும் தவிப்பு.
டேராடூன்:
உத்தரகாண்ட் மாநிலம் மிகச்சிறந்த ஆன்மிக சுற்றுலா தலமாக விளங்குகிறது.
இமயமலை மற்றும் இமயமலை அடிவாரத்தில் உள்ள கோவில்களுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் புனித யாத்திரை செல்கின்றனர்.
குறிப்பாக உத்தரகாண்ட் மாநிலம் பத்ரிநாத், கேதார்நாத் உள்ளிட்ட இடங்கள் ஆன்மிக சுற்றுலாவுக்கு பெயர் பெற்றவை. அதேபோல் ஆதி கைலாஷ் பகுதிக்கும் அதிகமானவர்கள் புனித யாத்திரை சென்று வருகின்றனர்.

அந்த வகையில் தமிழ்நாட்டில் இருந்து 30 பேர் உத்தரகாண்ட் மாநிலம் ஆதி கைலாஷ் பகுதிக்கு ஆன்மிக சுற்றுலா சென்றனர். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த வசந்தா (வயது 58), பிரேமாவதி (70), தமிழரசி (64), உமாராணி (61), அலமேலு கிருஷ்ணன் (73), பார்வதி (70), விஜய
லட்சுமி (62), வாசுகி (69), குமாரி (61), பராசக்தி (75) உள்ளிட்ட 17 பெண்கள் உள்பட 30 பேர் உத்தரகாண்ட் மாநிலம் ஆதி கைலாஷ்க்கு ஆன்மிக சுற்றுலா சென்றனர்.
அவர்கள் 30 பேரும் கடந்த 1-ந் தேதி சென்னை வந்து, அங்கிருந்து ரெயில் மூலம் உத்தரகாண்ட் மாநிலம் சென்றனர். தொடர்ந்து அங்கிருந்து வேன் மூலம் அனைவரும் உத்தரகாண்டில் உள்ள ஆன்மிக தலங்களுக்கு சென்று சுற்றி பார்த்தனர்.
இதற்கிடையே உத்தரகாண்டில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டு வருகிறது. ஆனால் அதை பொருட்படுத்தாமல் ஆன்மிக சுற்றுலா சென்ற தமிழர்கள் 30 பேரும் ஆதிகைலாஷ் பகுதிக்கு வேனில் புறப்பட்டனர்.
அப்போது பித்தோரகர் மாவட்டம் அருகில் சென்ற போது, ஆதி கைலாஷ் பகுதியில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில், தவாகாட் - தானாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது.
இதனால் தமிழர்கள் 30 பேரும், ஆதி கைலாஷ் பகுதிக்கு செல்ல முடியாமலும், சொந்த ஊருக்கு திரும்ப முடியாமலும் நிலச்சரிவில் சிக்கி தவிக்கிறார்கள். அவர்களால் அங்கிருந்து திரும்பி வர முடியாத நிலை உருவாகி உள்ளது.
இதுபற்றி தகவல் அறிந்தவுடன் உத்தரகாண்ட் போலீசார் மற்றும் பேரிடர் மீட்பு படையினர் அங்கு மீட்பு பணியை தொடங்கி உள்ளனர். இதற்கிடையே நிலச்சரிவில் சிக்கி தவிக்கும் தமிழர்கள் தங்களின் உறவினர்களுக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அவர்களின் உறவினர்கள் கடலூர் மாவட்ட கலெக்டர் ஆதித்ய செந்தில்குமாரிடம் இதுபற்றி தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து தமிழக அரசும் 30 தமிழர்களை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுதொடர்பாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், கடலூர் மாவட்ட கலெக்டர் ஆதித்ய செந்தில்குமாரை தொடர்பு கொண்டு பேசினார்.
கலெக்டர் ஆதித்ய செந்தில்குமார், தமிழக அரசு சார்பில் உத்தரகாண்ட் மாநிலம் பித்தோரகர் மாவட்ட கலெக்டர் கோசுவாமி உள்ளிட்ட அதிகாரிகளிடம் பேசி, தமிழர்களை பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து நிலச்சரிவில் சிக்கிய 30 தமிழர்களுக்கு உணவு, குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது அவர்கள் நலமாக உள்ளனர். நிலச்சரிவில் சிக்கிய தமிழர்களை ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதாவது நிலச்சரிவு ஏற்பட்டதால் சாலை போக்கு
வரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. அதன்படி இன்று 30 தமிழர்களும் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட உள்ளனர்.
இது குறித்து கலெக்டர் ஆதித்ய செந்தில்குமார் கூறியதாவது:-
உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ஆன்மிக யாத்திரை பயணமாக சிதம்பரத்தை சேர்ந்த 30 பேர் சென்றுள்ளனர். அங்கு ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் 30 பேரும் சிக்கிக்கொண்டனர்.
இதில் ராணிப்பேட்டை, சீர்காழி, பெங்களூரை சேர்ந்தவர்கள் 6 பேர் ஆவர். மீதம் உள்ளவர்கள் கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். அனைவரும் அங்கு ஆசிரமம் அருகே உள்ள முகாமில் பாதுகாப்பாக உள்ளனர்.
அவர்களை பத்திரமாக மீட்குமாறு பித்தோரகர் மாவட்ட கலெக்டர் கோசுவாமி உள்ளிட்ட அதிகாரிகளிடம் போன் மூலமாக தொடர்பு கொண்டு பேசி உள்ளேன். இன்று வானிலை சீராக இருந்தால் நிலச்சரிவில் சிக்கி உள்ள 30 தமிழர்கள் ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பாக மீட்கப்படுவார்கள் என அம்மாவட்ட கலெக்டர் தகவல் தெரிவித்து உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுபற்றி அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறுகையில், 'சிதம்பரத்தில் இருந்து உத்தரகாண்ட் மாநிலம் ஆதிகைலாசுக்கு ஆன்மிக சுற்றுலா சென்ற 30 பேரும் பாதுகாப்பாக உள்ளனர்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் உத்தரகாண்ட் மாநில தலைமை செயலாளர் மற்றும் அதிகாரிகளிடம் பேசி 30 பேரையும் பாதுகாப்பாக சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றார்.
- சமூகநீதி - சுயமரியாதை - மாநில உரிமையைக் கொள்கை முழக்கமாய் கொண்டு தமிழ்நாட்டின் தடம் மாற்றியவர்.
- திராவிட இயக்கத்தின் கலங்கரை விளக்கமாய் என்றென்றும் வழிகாட்டும் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளில் அவர் வழி நடந்து உரிமைப்போரை வென்றெடுப்போம்.
சென்னை:
தி.மு.க, துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழி இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
'அண்ணா' வெறும் பெயரல்ல. அவர் ஒரு வரலாற்றின் பெருங்குரல் - பண்பாட்டின் குறியீடு - உரிமைப்போரின் முன்னோடி - தமிழ்நாட்டின் அடையாளம் - திராவிட மாடலின் தொடக்கம்.
சமூகநீதி - சுயமரியாதை - மாநில உரிமையைக் கொள்கை முழக்கமாய் கொண்டு தமிழ்நாட்டின் தடம் மாற்றியவர்.
திராவிட இயக்கத்தின் கலங்கரை விளக்கமாய் என்றென்றும் வழிகாட்டும் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளில் அவர் வழி நடந்து உரிமைப்போரை வென்றெடுப்போம்.
இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.
'அண்ணா' வெறும் பெயரல்ல. அவர் ஒரு வரலாற்றின் பெருங்குரல் - பண்பாட்டின் குறியீடு - உரிமைப்போரின் முன்னோடி - தமிழ்நாட்டின் அடையாளம் - திராவிட மாடலின் தொடக்கம். சமூகநீதி - சுயமரியாதை - மாநில உரிமையைக் கொள்கை முழக்கமாய் கொண்டு தமிழ்நாட்டின் தடம் மாற்றியவர். திராவிட இயக்கத்தின்… pic.twitter.com/f4cRNDLphk
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) September 15, 2024
- வைகை அணையின் நீர்மட்டம் 61.48 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 561 கன அடி வருகிறது.
- பெரியாறு அணையின் நீர்மட்டம் 131.95 அடியாக உள்ளது.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரமுள்ள வைகை அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் முதல் மதுரை, திண்டுக்கல் மாவட்ட முதல்போக பாசனத்துக்காக கால்வாய் மூலம் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.
தற்போது அணையில் 62 அடிக்கு தண்ணீர் இருப்பதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டத்தில் ஒரு போக பாசனத்துக்கு இன்று முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவில் 1797 ஏக்கர், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகாவில் 16452 ஏக்கர், மதுரை வடக்கு தாலுகாவில் 26792 ஏக்கர் என மொத்தம் 4541 ஏக்கர் நிலங்கள் பெரியாறு பிரதான கால்வாய் பாசன பகுதியின் கீழ் இரு போக பாசன நிலங்களாக உள்ளன.
இந்த நிலங்களுக்கு முதல் போக பாசனத்துக்காக திறக்கப்பட்ட 900 கன அடி நீர் 45 நாட்களுக்கு முழுமையாகவும், 75 நாட்களுக்கு முறை வைத்தும் 120 நாட்கள் திறக்கப்பட்ட நிலையில் நேற்று காலை முதல் அந்த தண்ணீர் நிறுத்தப்பட்டது.
இதனையடுத்து இன்று காலை முதல் வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட ஒரு போக பாசனத்துக்காக 1130 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீரின் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை, மதுரை மாவட்டத்தில் உள்ள வாடிப்பட்டி, மேலூர், மதுரை வடக்கு, திருமங்கலம், சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர் மற்றும் சிவகங்கை ஆகிய பகுதிகளில் சுமார் 1 லட்சத்து 5 ஆயிரத்து 2 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
இந்த தண்ணீர் 45 நாட்களுக்கு முழுமையாகவும், 75 நாட்களுக்கு முறை வைத்தும் என 120 நாட்களுக்கு 8461 மில்லியன் கன அடி நீர் திறக்கப்படும் என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட உள்ளதால் நீர்மட்டம் குறைவதை ஈடுசெய்யும் வகையில் பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் வைகை அணைக்கு திறக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 61.48 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 561 கன அடி வருகிறது. பாசனத்துக்கு 1130 கன அடி மற்றும் மதுரை மாநகர குடிநீருக்கு 69 என மொத்தம் 1199 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 3892 மி.கன அடியாக உள்ளது.
பெரியாறு அணையின் நீர்மட்டம் 131.95 அடியாக உள்ளது. வரத்து 767 கன அடி. திறப்பு 900 கன அடி. இருப்பு 5153 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாகவும், சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 122.18 அடியாகவும் உள்ளது.






