என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து வெளியிட்டுள்ளார்.
    • பேரறிஞர் அண்ணா அவர்களைப் பார்த்ததும், அவரது வெள்ளம் போன்ற மேடை உரையை நேரடியாகக் கேட்டதும் இல்லை.

    பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்த நாள் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து வெளியிட்டுள்ளார்.

    இதுகுறித்து கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    பல முதல்வர்களோடு பழகியிருக்கிறேன்; பார்த்திருக்கிறேன்.

    இந்த வகையில் என் மனதோரம் ஒரு குறை இருந்தது. பேரறிஞர் அண்ணா அவர்களைப் பார்த்ததும், அவரது வெள்ளம் போன்ற மேடை உரையை நேரடியாகக் கேட்டதும் இல்லை என்கிற குறை.

    அவருடனான என் தொடர்பெல்லாம் அவரின் எழுத்துக்களை வாசிப்பதன் மூலமாகத்தான் அமைந்தது.

    இன்றைய அவரது பிறந்தநாளில் அவரை வாழ்த்தும் நேரத்தில் முன்பொரு நிகழ்ச்சியில் என் அக்கா சொன்ன இந்த இனிய சம்பவம் நினைவுக்கு வந்தது.

    பேரறிஞர் அண்ணா புகழ் ஓங்குக.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • உங்களுடைய 'ஹெல்ப்' இல்லையென்றால் எங்களால் வந்திருக்க முடியாது என்றார்.
    • முதற்கட்டமாக 10 பேர் மீட்கப்பட்டோம். பிறகு 20 பேர் என 30 பேரும் மீட்கப்பட்டுள்ளனர்.

    உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உள்ள பராசக்தி என்ற பெண்ணிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.

    வணக்கம் நான் ஸ்டாலின் பேசுகிறேன் என்றார். அதற்கு அந்த பெண் வணக்கம் தெரிவித்து விட்டு நல்லபடியா வந்திட்டோம் என்றார். உங்களுடைய 'ஹெல்ப்' இல்லையென்றால் எங்களால் வந்திருக்க முடியாது என்றார்.

    உடனே முதலமைச்சர் அவரிடம், இப்போது எங்கிருக்கிறீர்கள் என்று கேட்டார்.

    மருத்துவ பரிசோதனையில் இருக்கிறோம் என்று பதில் அளித்தார். அங்கிருந்து வந்ததும் இங்கு ஏற்பாடு செய்து ஊருக்கு செல்ல உதவிடுமாறு சொல்லி இருக்கிறேன் என்றார்.

    அப்போது அந்த பெண், முதற்கட்டமாக 10 பேர் மீட்கப்பட்டோம். பிறகு 20 பேர் என 30 பேரும் மீட்கப்பட்டுள்ளனர்.

    உடனே முதலமைச்சர், "தைரியமாக இருங்கள்" என்று ஆறுதல் கூறினார். "நான் பேசியதாக எல்லோரிடமும் சொல்லுங்கள். அங்கிருக்கும் கலெக்டரிடமும் தொடர்ந்து பேசி வருகிறோம்" என்றார்.

    • மன்னிப்பு கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
    • அண்ணாமலையை நேரில் சந்தித்து விளக்கம் அளிப்பேன்.

    கோவை:

    கோவையில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் முன்பு அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் சீனிவாசன் ஜி.எஸ்.டி. தொடர்பாக நகைச்சுவையாக பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    அதற்கு மறுநாளே ஓட்டல் உரிமையாளர் சீனிவாசன், மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்து தான் அப்படி பேசியதற்காக வருத்தம் தெரிவித்தார்.

    நிர்மலா சீதாராமனிடம் அவர் மன்னிப்பு கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இது மேலும் சர்ச்சையை அதிகரித்தது.

    ஜி.எஸ்.டி வரி தொடர்பாக கேள்வி எழுப்பிய ஓட்டல் உரிமையாளர் மிரட்டி மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டுள்ளார் என தகவல் பரவியது.

    இந்த சம்பவத்துக்கு பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர்.

    இந்த வீடியோவை வெளியிட்டதற்காக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, ஓட்டல் உரிமையாளரை தொடர்பு கொண்டு மன்னிப்பு கேட்டார்.

    இந்தநிலையில் ஓட்டல் உரிமையாளர் மன்னிப்பு கேட்கும் வீடியோவை வெளியிட்டதாக கூறி சிங்காநல்லூர் மண்டல பா.ஜ.க. தலைவர் சதீஷ், மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்த நடவடிக்கையை கோவை மாவட்ட பா.ஜ.க. தலைவர் ரமேஷ்குமார் எடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பா.ஜ.க. மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவவிநாயகம், மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம், மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகர் ஆகியோரின் ஒப்புதலோடு கோவை சிங்காநல்லூர் பா.ஜ.க. மண்டல தலைவராக செயல்பட்டு வரும் ஆர். சதீஷ், கட்சியின் ஒற்றுமை மற்றும் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்பட கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டு உள்ளார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    ஆனால் சதீஷ் தன் மீதான குற்றச்சாட்டை எடுத்துள்ளார். நான் வீடியோ எடுத்து பரப்பவில்லை எனவும், இதுதொடர்பாக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையை நேரில் சந்தித்து விளக்கம் அளிப்பேன் எனவும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சதீஷ் கூறியதாவது:-

    நான் பாரதீய ஜனதாவில் கிளை தலைவரில் இருந்து மண்டல தலைவர் வரை பொறுப்பு வகித்துள்ளேன். கடந்த 31-ந் தேதியே எனது பதவி காலம் முடிந்து விட்டது. முடிந்த பதவியை தான் கோவை மாவட்ட தலைவர் ரத்து செய்துள்ளார்.

    மற்றொன்று அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவது என்பது மாநில தலைமையும், தேசிய தலைமையும் தான் செய்வார்கள். அதையும் மாவட்ட தலைவர் செய்துள்ளார்.

    இந்த பிரச்சனையில் வீடியோ எடுத்தது அங்கிருந்த 4, 5 பேர் தான். நான் அந்த வீடியோவையே இதுவரை சரியாக கூட பார்க்கவில்லை. இந்த செயலை யார் செய்திருப்பார்கள் என்ற தகவல் எனக்கு வந்தது. அந்த தகவலை தான் நான் பிறருக்கு அனுப்பினேன். பார்வேட் செய்தது தவறு என்றால் வீடியோ வெளியிட்ட நபர் மீது கட்சி விரோத நடவடிக்கை கண்டிப்பாக எடுக்க வேண்டும்.

    மாநில தலைவர் அண்ணாமலை வந்த பிறகு என் மீது எந்த தவறும் இல்லை என்பதை நிரூபிப்பேன். அவரை நேரில் சந்தித்து விளக்கம் அளிப்பேன். மீண்டும் கட்சி பணி செய்வேன்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • மக்கள் ஏராளமானோர் பங்கேற்று மல்லிகேஸ்வரரை தரிசனம் செய்தனர்.
    • கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம், இனிப்புகள் வழங்கபட்டது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் உள்ள மல்லிகேஸ்வரர் கோவில் புதுப்பிக்கப்பட்டு அதன் கோபுர விமானம் மற்றும் மூலவருக்கு இன்று காலை 7:50க்கு கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. முற்றிலும் கருங்கல்லினால் கட்டப்பட்ட புதிய ராஜகோபுரம் நிர்மானம் செய்யப்பட்டு அதன் விமானத்திலும் புனித நீர் ஊற்றப்பட்டது.

    கடந்த வியாழக்கிழமை முதல் கணபதி ஹோமத்துடன் பல்வேறு வேல்விகள் நடத்தப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவில், 7ம் நூற்றாண்டில் பல்லவ மன்னர்கள் மாமல்லபுரத்தை துறைமுகமாக ஆட்சி செய்தபோது மன்னரின் அரசவையில் அமைச்சராக இருந்த பரஞ்சோதி என்பவரால் கட்டப்பட்ட பழமையான கோவிலாகும்.


    13 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நடைபெற்ற இந்த மகா கும்பாபிஷேகத்தில் மாமல்லபுரம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் ஏராளமானோர் பங்கேற்று மல்லிகேஸ்வரரை தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் நந்திகேஸ்வரர் பிரதோஷ கமிட்டியினர் கோவில் நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர். கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம், இனிப்புகள் வழங்கபட்டது.

    • அண்ணாவின் 116-வது பிறந்த நாள் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • தமிழ்நாட்டுக்கு ஆற்றிய பணிகளை என்றென்றும் போற்றி மகிழ்வோம் என்றார்.

    பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்த நாள் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.

    இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    சுயமரியாதைத் திருமணங்களைச் சட்டப்பூர்வமாக்கியது. மதராஸ் மாநிலம் என்ற பெயரைத் தமிழ்நாடு' என மாற்றியது. தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையைச் செயல்படுத்தியது என்று தமிழக அரசியல் களத்தில் புதிய வரலாறு படைத்த பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளில், அவர் தமிழ்நாட்டுக்கு ஆற்றிய பணிகளை என்றென்றும் போற்றி மகிழ்வோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • 2 யானைகள் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து கீழே இறங்கி எந்தவிதமான அச்சமும் இன்றி சாதாரணமாக மீண்டும் வயல்களுக்குள் புகுந்தது.
    • குளத்தில் குளித்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    செங்கோட்டை:

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதியையொட்டி உள்ள விவசாய நிலங்களில் அவ்வப்போது வனவிலங்குகள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துவதும், அந்த வனவிலங்குகளை விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபடுவதும் தொடர் கதையாகி வருகிறது.

    இந்நிலையில் கடந்த சில வாரங்களாக செங்கோட்டையை அடுத்துள்ள மேக்கரை, பண்பொழி, வடகரை உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் முகாமிட்டு மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள விவசாய நிலங்களில் கீழே இறங்கி பயிர்களை நாசப்படுத்தி வருகின்றன.

    கடந்த சில நாட்களாக செங்கோட்டையை அடுத்த பண்பொழி பகுதியில் யானை கூட்டம் விவசாய நிலங்களை சேதப்படுத்திக் கொண்டிருந்த நிலையில், அதனை விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் மற்றும் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    நேற்று நள்ளிரவில் 2 யானைகள் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து கீழே இறங்கி எந்தவிதமான அச்சமும் இன்றி சாதாரணமாக மீண்டும் வயல்களுக்குள் புகுந்தது.

    தொடர்ந்து இன்று காலை அந்த 2 யானைகளும் அந்த பகுதியில் உள்ள ஒரு குளத்திற்கு சென்று ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தன. அவை குளத்தில் குளித்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    சமீப காலமாக பொதுமக்கள் அதிகம் வசித்து வரும் ஊர் பகுதிக்குள் காட்டு யானை கூட்டம் புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி வரும் நிலையில், அவற்றால் பொதுமக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படுவதற்கு முன்னர் தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வனத் துறையினர் மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • முன்பதிவில்லா மெமு சிறப்பு ரெயில் இன்று இரவு இயக்கப்படுகிறது.
    • 12 ரெயில் பெட்டிகளும் முன்பதிவு இல்லாத பெட்டிகளாக இருக்கும்.

    தஞ்சாவூா்:

    தெற்கு ரெயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருச்சியில் இருந்து தாம்பரத்திற்கு முன்பதிவில்லா மெமு சிறப்பு ரெயில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இயக்கப்படுகிறது.

    திருச்சியில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்படும் ரெயில் (வண்டி எண்-06008) பூதலூர், தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், பரங்கிப்பேட்டை, கடலூர் துறைமுகம், திருப்பாதிரிபுலியூர், பண்ருட்டி, விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு வழியாக தாம்பரத்திற்கு நாளை (திங்கட்கிழமை) காலை 6.05 மணிக்கு சென்று அடையும்.

    இந்த ரெயிலில் 12 ரெயில் பெட்டிகளும் முன்பதிவு இல்லாத பெட்டிகளாக இருக்கும். எனவே, பயணிகள் இந்த ரெயில் சேவையை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கட்சியினர் யானை சின்னம் பொருத்திய செங்கோலை பரிசாக வழங்கினர்.
    • விஜய்யின் 69-வது படத்தின் போஸ்டரை வைத்து அரசியல் படமா?

    தஞ்சை:

    மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி ஏற்று விழா பல்வேறு இடங்களில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் குட்டி கோபி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கொடி ஏற்றினார்.

    அதனைத் தொடர்ந்து, பெண்களுக்கு நல உதவியாக புடவைகள் வழங்கினார்.

    மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில் மேல வீதியில் 50 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சிக்கொடியை ஏற்றினார். கொடியேற்றும் நிகழ்வில் கலந்து கொண்ட புஸ்ஸி ஆனந்துக்கு கட்சியினர் யானை சின்னம் பொருத்திய செங்கோலை பரிசாக வழங்கினர். மேலும், கட்சி நிர்வாகி ஒருவரின் புதிய காரில் கட்சிக் கொடியை பொருத்தினார்.

    இந்த நிகழ்வுகளில் தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் என சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதற்கு முன்னதாக, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புஸ்ஸி ஆனந்துக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து மலர் தூவியும், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சால்வை அணிவித்தும் வரவேற்பளித்தனர்.

    மயிலாடுதுறை வள்ளாலகரம் ஊராட்சி சேந்தங்குடியில் கொடி ஏற்றிய பின்னர் புஸ்ஸி ஆனந்த் கூறியதாவது:-

    2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெறுவதே தமிழக வெற்றிக் கழகத்தின் நோக்கமாகவும், இலக்காக உள்ளது. முதல்-அமைச்சர் நாற்காலியில் நிச்சயம் விஜய் அமருவார். இதற்காக தொண்டர்கள் அனைவரும் கட்சி பணி ஆற்றிட வேண்டும்.

    தொண்டர்கள் அனைவரும் ஜாதி, மதத்தை கடந்து மக்களோடு மக்களாக இணைந்து மக்கள் சேவை செய்ய வேண்டும். விஜய்யின் 69-வது படத்தின் போஸ்டரை வைத்து அரசியல் படமா? அல்லது பொழுதுபோக்கு படமா? என்று இப்போது கூறமுடியாது. தற்போது கட்சி கொடியேற்று விழாவிற்கு வந்துள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக புஸ்ஸி ஆனந்த் வருகையை யொட்டி மயிலாடுதுறை மேலவீதி பகுதியில் கட்சியினர் அலங்கார வளைவு அமைத்திருந்தனர்.

    அப்பகுதிக்கு சென்ற போலீசார் அனுமதி பெறாமல் போக்குவரத்திற்கு இடையூறு அளிக்கும் வகையில் சாலையை ஆக்கிரமித்து அலங்கார வளைவு அமைக்கப்பட்டிருந்ததாக கூறி, அதனை அகற்ற கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • புலி அருவி, ஐந்தருவியில் அதிக அளவில் கூட்டம் அலைமோதியது.
    • மெயின் அருவி பகுதியில் அமைந்துள்ள செல்பி பாய்ண்டில் புகைப்படம் எடுத்து குடும்பமாக வந்த சுற்றுலா பயணிகள் உற்சாகமடைந்தனர்.

    தென்காசி:

    குற்றாலத்தில் சீசன் முடிவடைந்த நிலையிலும் அருவிகளில் சீராக தண்ணீர் விழுந்து வருவதால் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குற்றால அருவிகளில் குளிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினம் என்பதால் காலை முதலே உள்ளூர் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி வெளியூர் மற்றும் அண்டை மாநிலமான கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாடுவதை முன்னிட்டு ஓணம் விடுமுறை என்பதாலும் அங்கிருந்தும் சுற்றுலா பயணிகள் குற்றால அருவிகளில் குளிக்க முகாமிட்டுள்ளனர்.

    புலி அருவி, ஐந்தருவியில் அதிக அளவில் கூட்டம் அலைமோதியது. மெயின் அருவி பகுதியில் அமைந்துள்ள செல்பி பாய்ண்டில் புகைப்படம் எடுத்து குடும்பமாக வந்த சுற்றுலா பயணிகள் உற்சாகமடைந்தனர். அருவிக்கரை பகுதியில் இருக்கும் கடைகளிலும் கூட்டம் அலைமோதியது. 

    • மெய்யழகன் படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
    • சென்னையில் மெய்யழகன் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடந்துள்ளது.

    96 பட இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள படம் மெய்யழகன். 'கார்த்தியின் 27'-வது படமான இந்த படத்தை சூர்யா- ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது.

    இப்படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அண்மையில் படத்தின் டீசர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகிறது.

    சென்னையின் மிகப்பெரிய மாலில் ஏராளமான ரசிகர்கள் சூழ மெய்யழகன் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடந்துள்ளது. இந்நிகழ்வில் கார்த்தி, ஸ்ரீதிவ்யா, அரவிந்த்சாமி உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்று பல விஷயங்களை பகிர்ந்து கொண்டனர்.

    அந்நிகழ்வில் பேசிய அரவிந்த் சாமி, "என்னை போல் மாப்பிள்ளை வேண்டும் என கேட்பவர்களுக்கு என்னுடைய நிஜ வாழ்க்கையை பற்றி தெரியாதே என நினைப்பேன். பட கதாபாத்திரங்களை வைத்து நான் அப்படிதான் இருப்பேன் என நம்பிவிடுகின்றனர். ஆனால் நிஜத்தில் அப்படி இல்லை. சினிமாவில் ஒரு மேஜிக் இருக்கிறது. என்னை பற்றி எல்லாம் தெரிந்தால் நீங்கள் அப்படி சொல்ல மாட்டீர்கள்" என்று தெரிவித்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சில முடிவுகளை எடுப்பார்கள். அதை தலைமை முடிவெடுக்கும். தேர்தல் நேரத்தில் எடுக்கும்.
    • அடுத்த தேர்தலில் தான் பேச வேண்டும். போன தேர்தலில் அந்த மாதிரி ஒப்பந்தம் இல்லை.

    சென்னை:

    கூட்டணி ஆட்சி என்ற கருத்தை வலியுறுத்தி பேசி வரும் திருமாவளவன் குறித்து தி.மு.க. செய்தி தொடர்பு குழு தலைவர் டி.கே.எஸ். இளங்கோவனிடம் நிருபர்கள் பேட்டி கண்டனர். அதன் விவரம் வருமாறு:-

    கே: ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்று திருமாவளவன் 2 நாளாக கருத்து தெரிவித்து வருகிறாரே?

    ப: இதை தலைமையோடு தேர்தல் நேரத்தில் பேசி முடிவெடுக்க வேண்டியது. இப்போது அதுகுறித்து நாங்கள் பேசுவதற்கு ஒன்றுமில்லை.

    கே: கடந்த வாரம் மது ஒழிப்பு மாநாடு அறிவிக்கிறார். இப்போது ஆட்சியில் அதிகாரம் பங்கு குறித்து திருமாவளவன் பேசுகிறாரே?

    ப: கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறும் போதுதான் அவர் அதை பேச முடியும்.

    ப: அவர் பேசட்டும். பொது வெளியில் பேசுவதற்கு நாங்கள் எப்படி பதில் சொல்ல முடியும். எங்களிடம் பேசினால் தலைவர்கள் பதில் சொல்வார்கள்.

    கே: மது ஒழிப்பு மாநாட்டில் தி.மு.க.வும் கலந்து கொள்ளலாம் என்று திருமாவளவன் கூறி வருகிறாரே?

    ப: அவர் பேசியதை வைத்து நீங்கள் கேட்கிறீர்கள்.

    ஆனால் சீட் ஷேர் என்பது கூட்டணி கட்சிகள் அனைத்தும் அமர்ந்து பேசும்போது, சில முடிவுகளை எடுப்பார்கள். அதை தலைமை முடிவெடுக்கும். தேர்தல் நேரத்தில் எடுக்கும்.

    இப்போது அதற்கு பதில் சொல்லக்கூடிய எந்த முடிவையும் தி.மு.க. எடுக்கவில்லை.

    கே: அமைச்சரவை மாற்றம் குறித்து முதலமைச்சர் பேசி இருக்கிறார். இந்த நேரத்தில் ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்று திருமாவளவன் எதனால் பேசுவார்?

    ப: அதுதான் சொல்கிறேன். அதுபற்றி இப்போ பேசுவதில் வேலை கிடையாது. அடுத்த தேர்தலில் தான் பேச வேண்டும். போன தேர்தலில் அந்த மாதிரி ஒப்பந்தம் இல்லை. அடுத்த தேர்தலில் என்ன வருகிறது என்று பார்ப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சித்தேசுவரர் சாமி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
    • 21 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே கஞ்சமலை அடிவாரத்தில் சித்தர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்தேசுவரர் சாமி வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இங்கு மகா கணபதி, வெற்றி விநாயகர், ஞானசற்குரு பாலமுருகன், காளியம்மன் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன.

    இந்த கோவில் பல ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாகும்.

    மன்னன் அதியமான், அவ்வைக்கு கொடுத்த கருநெல்லி இந்த கஞ்சமலையில் விளைந்ததாகும். இவ்வாறு பிரசித்தி பெற்ற இக்கோவில் இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

    கடந்த 2003-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து 21 ஆண்டுகளுக்கு பிறகு இக்கோவில் மகா கும்பாபிஷேக விழா இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது.

    காலை 4.30 மணிக்கு மேல் திருப்பள்ளி எழுச்சி, தமிழ்திருமுறை பாராயணம், காலை 7 மணிக்கு மாகாதீபாராதனை, யாக சாலையில் இருந்து திருவருள், திருக்குடங்கள் புறப்பாடு, காலை, 6.30 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் மூலஸ்தான, ராஜ கோபுர கும்பாபிஷேகம், காலை 7.30 மணிக்கு மேல் 8 மணிக்குள் பால முருகன் கோவில் கும்பாபிஷேகம், காலை, 7.35 மணிக்கு மேல் 8.15 மணிக்குள் காளியம்மனுக்கு கும்பாபிஷேகம், காலை 9 மணிக்கு மேல் 10.45 மணிக்குள் கஞ்சமலை சித்தேஸ்வரசாமிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.


    விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. 750-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணி க்கப்பட்டன. மேலும் சாதாரண உடையிலும் போலீசாரும் கண்காணி த்தனர். பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

    ×