என் மலர்
உள்ளூர் செய்திகள்
- ராமசாமி படையாட்சியாரின் 107-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
- ராமசாமி படையாட்சியர் திருவுருவ சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சென்னை:
சுதந்திரப் போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான ராமசாமி படையாட்சியாரின் 107-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
சென்னை கிண்டியில் உள்ள ராமசாமி படையாட்சியார் திருவுருவ சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள உருவ படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
- மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை உடனடியாக விடுவிக்கவும் மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- இலங்கை அரசின் இந்த மனிதாபிமானமற்ற கொடூரச் செயல் கடும் கண்டனத்திற்குரியது.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழக மீனவர்கள் தங்கள் மீன்பிடித் தொழிலை மேற்கொள்ளக்கூடாது என்ற தீய நோக்கத்துடனும், தமிழக மீனவர்கள் மத்தியில் ஓர் அச்ச உணர்வை ஏற்படுத்தும் எண்ணத்துடனும் இலங்கை அரசு செயல்பட்டு வருகிறது.
தங்களுடைய பாரம்பரியமான இடத்தில் மீன்பிடித் தொழிலை மேற்கொண்டிருந்த தமிழக மீனவர்களை எல்லைத் தாண்டியதாக பொய்க் குற்றம் சாட்டி அவர்களை சிறையில் அடைத்து கொடுமைப்படுத்துவது என்பது மிருகத்தனமான செயல். இலங்கை அரசின் இந்த மனிதாபிமானமற்ற கொடூரச் செயல் கடும் கண்டனத்திற்குரியது.
ஏழை மீனவர்களின் எதிர்காலத்தையும், வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு, இந்திய மீனவர்கள் மீதான இலங்கை அரசின் தொடர் தாக்குதல்கள் மற்றும் தொடர் துன்புறுத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும்; இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை உடனடியாக விடுவிக்கவும் மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்குத் தேவையான அழுத்தத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசுக்கு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தமிழகத்தில் வெயிலின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகிறது.
- தென்மேற்கு காற்று குறைந்ததன் காரணமாக வெப்பநிலை அதிகரித்துள்ளது.
சென்னை:
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகிறது. ஒரு சில இடங்களில் மட்டும் மிதமான மழை பெய்து வருகிறது. பெரும்பாலான இடங்களில் வெப்பநிலை அதிகரித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை வட மாநிலங்களில் பெய்து வரும் நிலையில் தமிழகத்தில் உஷ்ணம் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.
கோடைகாலம் போல் வெயில் மீண்டும் வறுத்தெடுத்து வருவதால் மக்கள் வெளியில் நடமாட முடியவில்லை. வாகன ஓட்டிகள் கடும் சிரமங்களை சந்திக்கின்றனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
அதிக பட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2 முதல் 3 செல்சியஸ் அளவுக்கு இயல்பை விட அதிகமாக இருக்கக் கூடும் என்றும் அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் போது ஓரிரு இடங்களில் அசவுகரியம் ஏற்படலாம் என்றும் தெரிவித்துள்ளது.
சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
வெப்பநிலை உயர்வதற்கான காரணம் குறித்து வானிலை ஆய்வாளர்கள் கூறும்போது,
மேற்கு வங்காளம் கடலோர பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் வறண்ட வானிலை காணப்படுகிறது.
தென்மேற்கு காற்று குறைந்ததன் காரணமாக வெப்பநிலை அதிகரித்துள்ளது. இன்னும் ஒருசில நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றனர்.
- ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ரூ.54,920-க்கு விற்பனையானது.
- வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது.
சென்னை:
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ரூ.54,920-க்கு விற்பனையானது.
இந்நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.55,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.6,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.98-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- சில மின்சார ரெயில்கள் பகுதி நேர ரத்து.
- திருத்தணி - அரக்கோணம் இடையே பகுதி நேர ரத்து.
சென்னை,
அரக்கோணம் - ஜோலார்பேட்டை வழித்தடத்தில் உள்ள அரக்கோணம் பணிமனையில் இன்று (திங்கட்கிழமை) மற்றும் 18-ந்தேதி மதியம் 12 மணி முதல் மதியம் 2 மணி வரையில் (2 மணி நேரம்) பராமரிப்பு பணி நடைபெறுவதால் சில மின்சார ரெயில்கள் பகுதி நேர ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை சென்டிரலில் இருந்து இன்று மற்றும் 18-ந்தேதி காலை 10, 11.45 ஆகிய நேரங்களில் புறப்பட்டு திருத்தணி செல்லும் மின்சார ரெயில்கள் அரக்கோணம் - திருத்தணி இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.
மறுமார்க்கமாக திருத்தணியில் இருந்து இதே தேதிகளில் மதியம் 12.35, 2.20 ஆகிய நேரங்களில் புறப்பட்டு மூர்மார்க்கெட் வரும் மின்சார ரெயில்கள் திருத்தணி - அரக்கோணம் இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பா.ம.க.வை இழிவுபடுத்துவது எங்கள் நோக்கம் இல்லை.
- அனைவரும் ஒன்று சேர்ந்தால் நிச்சயம் மதுக்கடைகளை மூட முடியும்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாங்கள் எல்.கே.ஜி., தான். பா.ம.க., பி.ஹெச்.டி.தான். இதில் வருத்தப்படுவதற்கு ஒன்றும் இல்லை. தி.மு.க. கூட்டணியில் தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளது. அதில் ஒன்றும் பிரச்சினை இல்லை. மதுவிலக்கு என்பது அனைவருக்குமான பிரச்சினை. மது ஒழிப்பு மாநாட்டில் அனைவரும் பங்கேற்கலாம் என அழைப்பு விடுத்துள்ளோம். இந்த மாநாட்டில் பங்கேற்பதும், பங்கேற்காமல் இருப்பதும் அவரவர்கள் விருப்பம்.
நிறைய கசப்பான அனுபவங்களால் சேர்ந்து செயல்பட முடியாத நிலைக்கு பா.ம.க.வினர் தான் எங்களை தள்ளிவிட்டனர். அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. பா.ம.க.வை இழிவுபடுத்துவது எங்கள் நோக்கம் இல்லை. மதுவிலக்கு மாநாடு குறித்து பல்வேறு விமர்சனங்கள் வருகிறது. எங்கள் நோக்கத்தில் எவ்வித களங்கமும் இல்லை. களங்கம் கற்பிக்க பலரும் நினைக்கிறார்கள். அதை நாங்கள் பொருட்படுத்த விரும்பவில்லை.
மதுக்கடைகளுக்கு எதிராக அனைவரும் சேர்ந்து குரல் எழுப்புவார்கள். மதுக்கடைகள் இருக்கக்கூடாது என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. மதுக்கடைகள் இருக்கட்டும் என எந்த அரசியல் கட்சியும் சொல்ல வாய்ப்பு இல்லை. மதுவால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படுகிறது. மதுவுக்கு எதிராக அனைவரும் ஒருமித்த கருத்தில் இருக்கும் போது ஏன்? சேர்ந்து குரல் கொடுக்க கூடாது. அனைவரும் ஒன்று சேர்ந்தால் நிச்சயம் மதுக்கடைகளை மூட முடியும்.
மதுவிலக்கை பேசுவதால் கூட்டணியில் விரிசல், பின்னடைவு ஏற்பட்டாலும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம்.
அதிகாரத்தில் பங்கு என்ற பதிவை திமுக மிரட்டியதால் நீக்கியதாக கூறினார்கள். தற்போது திமுக கூட்டணியில் இருப்பதாகவே நான் நம்புகிறேன்.
மதுவிலக்கை பேசுவதால் எந்த விளைவுகள் வந்தாலும் எதிர்கொள்ள தயார் என திட்டவட்டமாக அவர் கூறினார்.
'ஆட்சி, அதிகாரத்தில் பங்கு' என திருமாவளவன் பேசிய நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று அவர் சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- சில சம்பவங்கள் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
- விசிக கூட்டணியில் இருந்து விலகும் என்று கூறப்பட்டது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் மது ஒழிப்பு மாநாடு அறிவித்தது, அதன் பிறகு கூட்டணி ஆட்சி அமைப்பது தொடர்பாக அவர் பேசிய பழைய வீடியோ வெளியிடப்பட்டு, பிறகு அது டெலீட் செய்யப்பட்டது போன்ற சம்பவங்கள் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
மேலும், திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து விரைவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி விலகி விடும் என்பது போன்ற கருத்துக்கள் பேசு பொருளாக காரணமாக அமைந்துள்ளன. தொல் திருமாவளவனின் சமீபத்திய அறிவிப்புகள் மற்றும் பேச்சுக்களுக்கு திமுக தலைவர்கள் விளக்கம் அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளன் நாளை காலை 11 மணி அளவில் தமிழக முதல்வர் முக ஸ்டாலினை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்திய செயல்பாடுகள் சர்ச்சையானதைத் தொடர்ந்து திருமாவளவன் மற்றும் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.
- பெரியாரின் பிறந்ததாள் மூகநீதி நாள கடைபிடிக்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் 2021ல் அறிவித்திருந்தார்.
- கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் "சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு" நிகழ்ச்சி நடைபெறும்.
பெரியார் பிறந்தநாளான 17ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது.
அன்றைய தினம், சமத்துவம் சகோதரத்துவம். சமதர்ம கொள்கைகளுக்காக என்னை நான் ஒப்படைத்துக்கொள்வேன்' என உறுதிமொழி ஏற்குமாறும் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பெரியாரின் பிறந்ததாள் மூகநீதி நாள கடைபிடிக்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் 2021ல் அறிவித்திருந்தார்.
இதுகுறித்து திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தந்தை பெரியார் பிறந்த நாள் "சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு" தலைமைக் கழகம் அறிவிப்பு "தந்தை பெரியாரின் ஒவ்வொரு பிறந்த நாளும் "சமூகநீதி நாளாக" கடைபிடிக்கப்படும் என்றும், அப்பிறந்த நாள் அன்று "சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்க வேண்டும்" என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 6.9.2021 அன்று சட்டப்பேரவையில் அறிவித்ததற்கிணங்க, தந்தை பெரியார் பிறந்த நாளான 17.9.2024 அன்று காலை 10.30 மணி அளவில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள அறிஞர் அண்ணா முத்தமிழறிஞர் கலைஞர் சிலை முன்பு, கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் "சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு" நிகழ்ச்சி நடைபெறும்.
இதில் சென்னை வடக்கு, சென்னை வடகிழக்கு, சென்னை கிழக்கு, சென்னை மேற்கு, சென்னை தென்மேற்கு, சென்னை தெற்கு ஆகிய மாவட்டக் கழகச் செயலாளர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்நிகழ்ச்சியில் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட, பகுதி, வட்டக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைத்து அணி நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் தவறாது சுலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தந்தை பெரியார் பிறந்த நாள் "சமூக நீதி நாள் உறுதிமொழி"
- பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியும் யாதும் ஊரே யாவரும் கேளிர் எனது என்ற பண்பு நெறியும் வாழ்வியல் சுடைபிடிப்பேன்!
- வழிமுறையாகச் சுயமரியாதை பகுத்தறிவு ஆளுமைத்திறனும் கூர்மைப் பார்வையும் கொண்டதாக என்னுடைய செயல்பாடுகள் அமையும்!
- சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை நான் ஒப்படைத்துக் கொள்வேன்!
- மானுடப் பற்றும் மனிதாபிமானமும் ஒன்றே எனது இரத்த ஓட்டமாக அமையும்!
- சமூக நீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர இந்த நாளில் உறுதியேற்கிறேன்! -முதல்வர் மு.க.ஸ்டாலின்
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- விநாயகர் சிலையை எடுத்து வந்த பக்தர்கள் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
- உயர்போலீஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பக்தர்களிடம் பேச்சுவார்த்தை.
சென்னை பாலவாக்கத்தில் விநாயகர் சிலை கரைப்பின்போது, கிரேன் மூலம் தூக்கியபோது எடை தாங்காமல் விநாயகர் சிலை கிழே விழுந்து உடைந்தது.
இதனால் விநாயகர் சிலையை எடுத்து வந்த பக்தர்கள் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சிலை உடைந்து விழுந்ததற்கு போலீசார் அவசரப்படுத்தியதே காரணம் என பக்தர்கள் குற்றம்சாட்டினர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உயர்போலீஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பக்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பக்தர்களை சமாதானப்படுத்தினர்.
பின்னர் போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு பின் ஒருவழியாக பக்தர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். கிரேன் மூலம் தூக்கியபோது விநாயகர் சிலை உடைந்து விழுந்ததால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
விநாயகர் சிலைகளை கரைக்கும்போது பொதுமக்கள் யாரும் கடலுக்கு செல்லாமல் இருக்க கடற்கரை முழுதும் ஒரு கிலோமீட்டர் அளவிற்கு தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
- இதுவரை 1000க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டுள்ளன.
- 2,000-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் 1,500 விநாயகர் சிலைகள் கடந்த 7-ந்தேதி பூஜைக்காக வைக்கப்பட்டன.
இந்த சிலைகளில் ஒரு பகுதி கடந்த 11-ந்தேதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட சிலைகள் கரைக்கப்பட்ட நிலையில் நேற்று மற்றும் இன்று விநாயகர் சிலைகள் அதிக எண்ணிக்கையில் கரைக்கப்பட்டு வருகின்றன.
இன்று 1,300 சிலைகளுடன் பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. சிலைகள் கரைப்பதற்கு இன்று கடைசி நாள் என்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பட்டினப்பாக்கம், நீலாங்கரை, காசிமேடு, திருவொற்றியூர் ஆகிய 4 இடங்களில் சென்னை மாநகரில் வைக்கப்பட்டுள்ள சிலைகளை கரைக்கப்படுகின்றன.
இந்நிலையில், சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் இதுவரை 1000க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டுள்ளன. இதனால், பொது மக்கள் குவிந்துள்ளனர்.
5 அடிக்கு மேல் உள்ள சிலைகள் கிரேன் உதவியுடன் கரைக்கப்பட்டு வருகின்றன. 2,000-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- சென்னை தேனாம்பேட்டை காமராஜனர் அரங்கில் வைகோ பேட்டி அளித்தார்.
- மதிமுகவுக்கு திருமாவளவன் அழைப்பு விடுத்தால் அது குறித்து யோசிப்போம்.
தமிழ்நாட்டில் உள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி போல் தமிழ்நாட்டில் தற்குறி யாரும் இல்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ காட்டமாக தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் PhD படிப்பில் தரம் இல்லை என ஆளுநர் ரவி கூறியது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பதில் அளித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டை காமராஜனர் அரங்கில் வைகோ பேட்டி அளித்தார்.
அப்போது மேலும் அவர் கூறியதாவது:-
தினமும் எதையாவது உளறுகிறார் ஆளுநர் ரவி.. இதைப்போல் மோசமான ஆளுநர் எந்த மாநிலத்திலும் இருந்ததில்லை. ஆர்.என்.ரவியை போல தற்குறி யாரும் கிடையாது.
முன்னாள் ஆளுநரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினோம். இந்த ஆளுநரை எதிர்த்து போராட்டம் நடத்துவோம்.
திமுகவுக்கு மதிமுக எப்போதும் உறுதுணையாக இருக்கும். மது ஒழிப்பு போராட்டத்தை மதிமுகவை போல் மற்ற எந்த கட்சிகளும் நடத்தியதில்லை.
ஜனநாயகத்தில் கருத்து சொல்வதற்கு இடம் உண்டு என்ற வகையில் திருமாவளவன் கருத்து கூறியிருக்கிறார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்க மதிமுகவுக்கு திருமாவளவன் அழைப்பு விடுத்தால் அது குறித்து யோசிப்போம்.
கோவை அன்னபூர்ணா உணவக உரிமையாளர் அவமதிக்கப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்.
முதலீடுகள் ஈர்ப்பு தொடர்பாக எதிர்க்கட்சிகள் அரசியலுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை குற்றம்சாட்டுகின்றனர். ஈர்க்கப்பட்ட முதலீடு குறித்து முதலமைச்சர் தெளிவாக கூறிவிட்டார். வெள்ளை, மஞ்சள் அறிக்கை தேவையில்லாதது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- 5 மீனவர்களை மொட்டை அடித்து இலங்கை அரசு அனுப்பியுள்ளது.
- மீனவர்கள் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினர்.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு விடுதலையான தமிழக மீனவர்களை மொட்டை அடித்து திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.
தலா ரூ.50,000 அபராதம் செலுத்தியதால் மீனவர்கள் விடுதலை செய்யப்பட்ட நிலையில், 5 மீனவர்களை மொட்டை அடித்து இலங்கை அரசு அனுப்பியுள்ளது.
இதைக்கண்டித்து, ராமேஸ்வரம் மீனவர்கள் இதையடுத்து, இலங்கை அரசை கண்டிக்கும் விதத்தில் தங்கச்சிமடம் வலசை பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், இலங்கை அரசின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த மீனவர்கள் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களுக்கு மொட்டையடித்து திருப்பி அனுப்பி வைத்த இலங்கை அரசைக் கண்டித்து செப்.20ம் தேதி ராமேஸ்வரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
மேலும், இலங்கை அரசின் அராஜக போக்கிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கண்டனம் தெரிவித்துள்ளது.
இலங்கையை கண்டித்தும், மீனவர் பிரச்சனையில் பாராமுகமாக உள்ள மத்திய அரசையும் கண்டித்து ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.






