என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • மதுவிலக்கு கொள்கை வரையறுக்க கட்சிகளை ஒருங்கிணைப்பது, படிப்படியாக மதுக்கடைகளை மூடுவதுதான் மாநாட்டின் நோக்கம்.
    • அரசியலுக்காக மாநாடு நடத்தவில்லை.

    சென்னை:

    சுதந்திரப் போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான ராமசாமி படையாச்சியாரின் 107-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    இதனையடுத்து திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    மதுவிலக்கு மாநாட்டிற்கு முதலமைச்சருக்கு நேரில் அழைக்க வந்துள்ளேன்.

    மதுவிலக்கு கொள்கை வரையறுக்க கட்சிகளை ஒருங்கிணைப்பது, படிப்படியாக மதுக்கடைகளை மூடுவதுதான் மாநாட்டின் நோக்கம்.

    மதுஒழிப்பு மாநாட்டின் முதன்மையான நோக்கம் 2.

    1. அரசு மதுபான கடைகளை படிப்படியாக குறைக்க வேண்டும்.

    2. தேசிய கொள்கையை வரையறுக்க அனைத்து கட்சியினரும் ஒருங்கிணைந்து குரலெழுப்ப வேண்டும். திமுகவுக்கும் அந்த வேண்டுகோளை வைக்கிறோம்.

    அரசியலுக்காக மாநாடு நடத்தவில்லை. இந்த நோக்கத்தில் உறுதியாக இருக்க வேண்டும்.

    பாமகவோடு சேர்ந்து செயல்பட முடியாதபடி அவர்கள் தான் எங்களுக்கு நெருக்கடி கொடுத்தார்கள். நாங்கள் நெருக்கடி கொடுக்கவில்லை என்று கூறினார்.

    • நீர்வழிக்குட்டையில் மேலும் ஒரு முதலை இருப்பது தெரியவந்தது.
    • முதலைகளை பிடிக்கும் பணிகள் தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பெள்ளேபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பட்டக்காரனூர் கிராமத்தில் உள்ள நீர்வழிக்குட்டையில் வடவள்ளி, தாளத்துரை, கோபி ராசிபுரம் உள்ளிட்ட பகுதிகள் வழியாக செல்லும் தண்ணீர் தேங்கி, பின்னர் மறுகால் பாய்ந்து பவானி ஆற்றை சென்றடைகிறது.

    இந்த குட்டையில் கடந்தாண்டு பெய்த கனமழையால் தற்போது வரை 10 அடி அளவுக்கு தண்ணீர்தேங்கி உள்ளது.

    இந்த நிலையில் பட்டக்காரனூர் நீர்வழிக்குட்டையில் ஒரு முதலை பதுங்கி இருப்பது தெரிய வந்தது.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராமவாசிகள் உடனடியாக சிறுமுகை வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலின்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

    பின்னர் நீர்வழிக்குட்டையில் பதுங்கிய முதலையை பிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

    ஆனால் குட்டையில் அதிகளவில் சீமை கருவேல மரங்கள் இருப்பதால் அந்த முதலையை பிடிப்பது வனத்துறைக்கு சவால் மிகுந்த பணியாக உள்ளது.

    எனவே பொதுமக்களின் பாதுகாப்பு கருதி நீர்வழிக்குட்டையில் இருந்து முதலை வெளியே வர முடியாத அளவில் வனத்துறையின்ர் வலைகளை மட்டும் கட்டிவிட்டு சென்றனர்.

    இந்த நிலையில் பட்டக்காரனூர் கிராமத்தினர் அந்த பகுதிக்கு வந்து தற்செயலாக பார்வையிட்டனர்.

    அப்போது நீர்வழிக்குட்டையில் மேலும் ஒரு முதலை இருப்பது தெரியவந்தது.

    இதற்கிடையே நீர்வழிக்குட்டையில் தண்ணீர் வற்றத்தொடங்கி உள்ளதால் அந்த 2 முதலைகளும் கரையோரத்துக்கு வந்து படுத்து கிடப்பது தெரிய வந்தது.

    தொடர்ந்து சிறுமுகை வனத்துறையினர் உடனடியாக நீர்வழிக்குட்டைக்கு வந்து ஆய்வு நடத்தி அங்கு 2 முதலைகள் தென்படுவதை உறுதி செய்தனர். பின்னர் அந்த முதலைகளை பிடிக்கும் பணிகள் தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

    • கோவை டாடாபாத் பவர் ஹவுஸ் அருகில் இன்று மாலை 4 மணிக்கு போராட்டம்.
    • இந்தியா கூட்டணி கட்சிகள் நிர்வாகிகள் பங்கேற்பு.

    கோவை:

    கோவையில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் முன்பு அண்ணாபூர்ணா ஓட்டல் உரிமையாளர் சீனிவாசன் ஜி.எஸ்.டி. தொடர்பாக நகைச்சுவையாக பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    மறுநாளே ஓட்டல் உரிமையாளர் சீனிவாசன், மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்து தான் அப்படி பேசியதற்காக வருத்தம் தெரிவித்தார். நிர்மலா சீதாராமனிடம் அவர் மன்னிப்பு கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

    ஜி.எஸ்.டி வரி தொடர்பாக கேள்வி எழுப்பிய ஓட்டல் உரிமையாளர் மிரட்டி மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டுள்ளார் என தகவல் பரவியது.

    இந்த விவகாரத்தில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை கண்டித்து கோவையில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இந்தநிலையில் தி.மு.க. கூட்டணியான இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று நிர்மலா சீதாராமனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கோவை டாடாபாத் பவர் ஹவுஸ் அருகில் இன்று மாலை 4 மணிக்கு போராட்டம் நடக்க உள்ளது.

    ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், விடுதலைசிறுத்தைகள், ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.

    • ஆணழகன் போட்டியை கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
    • ஆணழகன் போட்டியை பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கண்டு ரசித்தனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்ட அளவிலான அமெச்சூர் ஆணழகன் போட்டி நடைபெற்றது.


    மாவட்ட அளவிலான அமெச்சூர் ஆணழகன் போட்டியை கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.


     பின்னர் ஆணழகன் போட்டியில் கலந்து கொள்ளும் ஒவ்வொருவரையும் அருகில் சென்று அவர்களிடம் கைகுலுக்கி விஜய் வசந்த் வாழ்த்து தெரிவித்தார்.

    ஆணழகன் போட்டியை பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கண்டு ரசித்தனர்.

    • கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளராக கும்பகோணம் ரதிமீனா பி.எஸ்.சேகர் நியமனம்.
    • அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளராக அரியலூர் முன்னாள் எம்.எல்.ஏ. ப.இளவழகன் நியமனம்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    எம்.ஜி.ஆர். இளைஞரணி துணை செயலாளர் பொறுப்பில் இருக்கும் எம்.எஸ்.ஆர். ராஜவர்மன் (சாத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ.) அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு கழக புரட்சித் தலைவி பேரவை இணை செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

    கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளராக கும்பகோணம் ரதிமீனா பி.எஸ்.சேகர், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளராக அரியலூர் முன்னாள் எம்.எல்.ஏ. ப.இளவழகன் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • ஜாகுவார், லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலை பனப்பாக்கத்தில் 400 ஏக்கரில் ரூ.9,000 கோடியில் டாடா மோட்டார்ஸ் அமைக்க உள்ளது.
    • பனப்பாக்கத்தில் 250 ஏக்கரில் ரூ.400 கோடியில் அமைய உள்ள மெகா காலணி உற்பத்தி பூங்காவிற்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்ட உள்ளார்.

    சென்னை:

    ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் அமையும் ஜாகுவார், லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலைக்கு செப். 28-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்ட உள்ளார்.

    ஜாகுவார், லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலை பனப்பாக்கத்தில் 400 ஏக்கரில் ரூ.9,000 கோடியில் டாடா மோட்டார்ஸ் அமைக்க உள்ளது. பனப்பாக்கத்தில் அமைய உள்ள கார் உற்பத்தி ஆலையின் மூலம் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

    பனப்பாக்கத்தில் 250 ஏக்கரில் ரூ.400 கோடியில் அமைய உள்ள மெகா காலணி உற்பத்தி பூங்காவிற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்ட உள்ளார்.

    • மாநாடு தேதி அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
    • தளபதி மாநாடு நடத்துவதற்கு எந்த தேதியை அறிவிக்கிறாரோ அந்த நாள் எங்களுக்கு வெற்றி திருநாள்.

    விக்கிரவாண்டி:

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார்.

    அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த இந்த அறிவிப்புக்கு பிறகு கட்சியின் முதல் மாநாட்டை நடத்த நடிகர் விஜய் தீவிரம் காட்டினார்.

    இதற்காக முதல் கட்டமாக அவர், கடலூரில் உள்ள பிரபல ஜோதிடர் சந்திரசேகரிடம் கட்சி கொடி மற்றும் மாநாடு நடத்த தேதி ஆகியவை குறித்து கேட்டதாக தெரிகிறது.

    அதன்படி, நடிகர் விஜய் கடந்த ஆகஸ்டு 22-ந் தேதி கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தி, முதல் மாநாட்டில் கட்சியின் கொள்கை, கொடியின் விளக்கம், கட்சியின் நிலைப்பாடுகள் குறித்து விளக்குவதாக அறிவித்தார். இது விஜய் கட்சியின் தொண்டர்கள் மற்றும் ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

    இதைத் தொடர்ந்து சேலம், திருச்சி உள்ளிட்ட சில இடங்களில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மாநாடு நடத்துவதற்கான இடத்தை பார்வையிட்டனர்.

    இதனால் மாநாடு எங்கு நடைபெறும் என்ற ஆர்வம் மேலோங்கியது. இப்படி இருக்கும் பட்சத்தில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலையில் மாநாடு நடத்த இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை அறிவிக்கப்படவில்லை.

    இந்த நிலையில் வருகிற 23-ந் தேதி மாநாடு நடத்துவதற்கு பாதுகாப்பு அளித்திட அனுமதி கேட்டு விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கடந்த மாதம் 28-ந் தேதி அக்கட்சியினர் மனு அளித்தனர். இதையடுத்து 21 கேள்விகள் பட்டியலிடப்பட்டு தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்துக்கு கடந்த 2-ந் தேதி விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் கடிதம் அனுப்பியிருந்தார்.

    தொடர்ந்து போலீசார் கேட்ட 21 கேள்விகளுக்கான பதிலை கடிதமாக புஸ்சி ஆனந்த் கடந்த 6-ந் தேதி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேசிடம் அளித்தார். அதன் பிறகு மாநாட்டுக்கு அனுமதி வழங்கி 33 நிபந்தனைகளுடன் கூடிய கடிதம் ஒன்றை கடந்த 8-ந் தேதி காவல்துறை வழங்கியது.

    இதற்கிடையில் முதல் மாநாட்டை மிக பிரமாண்டமாக நடத்த பல்வேறு கெடுபிடி போடப்பட்டதால், அதற்கான பணிகள் தொடங்காமல் உள்ளது. மேலும் 23-ந் தேதி திட்டமிட்டபடி மாநாடு நடைபெறுமா? என்ற சூழல் உருவானது.

    இது ஒருபுறம் இருக்க விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஜய் கட்சியினர் சுவர் விளம்பரங்களில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    இந்த சூழ்நிலையில் மாநாட்டிற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருங்கள் என்று தொண்டர்களுக்கு நடிகர் விஜய் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். இதனால் மாநாடு தேதி தள்ளிப்போவது உறுதியானது.

    இதுகுறித்து, கட்சி நிர்வாகிகள் கூறுகையில், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் உள்ள நிலங்களின் உரிமையாளர்கள் 27 பேரிடம் மாநாடு நடத்த செப்டம்பர் 23-ந் தேதி வரை ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. மொத்தம் 85 ஏக்கர் நிலத்தில், ஒரு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் கொடுப்பதாக கூறி ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த நிலையில் ஒப்பந்த காலம் 23-ந் தேதியுடன் முடிவடைவதால், ஒப்பந்த தேதியை நீட்டிக்கும் பணி தற்போது தொடங்கியுள்ளது என்றனர்.

    மேலும் நடிகர் விஜய்யின் ஜாதகப்படி மாநாட்டை அக்டோபர் மாதம் 20-ந் தேதி முதல் 27-ந்தே திக்குள் நடத்தலாம் (அதாவது ஐப்பசி முதல் வாரத்தில்) என ஜோதிடர் ஆலோசனை வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மீண்டும் கடலூர் ஜோதிடரை இந்த வாரத்தில் சந்திக்க உள்ளதாகவும், அதன் பிறகு மாநாடு தேதி அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    இது குறித்து மாவட்டத் துணைத் தலைவரும், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளருமான பனையபுரம் வடிவேல் கூறியதாவது:-

    தளபதியின் தமிழக வெற்றி கழக கட்சியின் அரசியல் முதல் மாநாடு எங்களது மாவட்டத்தில் நடத்துவதற்கு இடம் தேர்வு செய்த எங்கள் தளபதிக்கு முதலில் நன்றி சொல்லிக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறோம்.

    எங்கள் தளபதி மாநாடு நடத்துவதற்கு எந்த தேதியை அறிவிக்கிறாரோ அந்த நாள் எங்களுக்கு வெற்றி திருநாள். அன்று மாநாட்டு வெற்றி திருவிழாவை எங்கள் மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையுடன் ஒருங்கிணைந்து வெற்றிகரமாக நடத்தி காட்டுவோம். எங்கள் தளபதியின் உத்தரவுக்காக நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்தியாவில் 150 வகைப்பட்ட குறிஞ்சி மலர்கள் உள்ளன.
    • நீலநிற குறிஞ்சிப்பூக்கள் பூக்கத் தொடங்கியுள்ளன.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தின் மேற்குத் தொடா்ச்சி மலை பகுதியில் குறிஞ்சி மலா்கள், தற்போது அதிகளவில் பூக்கத் தொடங்கி உள்ளன. ' ஸ்ட்ரோபைலைன்தீஸ் குந்தியானா' தாவரவியல் பெயா் கொண்ட இத்தகைய மலர்களில் ஏறக்குறைய 200 வகைகள் உண்டு.

    இவை அனைத்தும் ஆசிய நாடுகளில் மட்டுமே காணப்படுகின்றன. இந்தியாவில் 150 வகைப்பட்ட குறிஞ்சி மலர்கள் உள்ளன.

    அதிலும் குறிப்பாக 30-க்கும் மேற்பட்ட குறிஞ்சி மலர் வகைகள் தற்போது நீலகிரி, கொடைக்கானல் ஆகிய மலைப் பகுதிகளில் மட்டுமே பூத்து குலுங்கி வருகின்றன.

    மேலும் 3 ஆண்டுகள் முதல் 12 ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் மலர்ச்செடிகள் வரை குறிஞ்சியில் ஏராளமான வகைகள் உண்டு.

    அவற்றில் 12 ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் 30 முதல் 60 செ.மீ. உயரமுடைய நீலக்குறிஞ்சி மலர்கள் தனித்துவமாக கருதப்படுகிறது.

    நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி அருகே எப்பநாடு, பிக்கமந்து, கொரனூா், எடக்காடு உள்ளிட்ட பகுதிகளில் தற்போது நீலநிற குறிஞ்சிப்பூக்கள் பூக்கத் தொடங்கியுள்ளன.

    மலைச்சரிவுகளில் 12 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் நீலக்குறிச்சி மலர் செடிகள் உள்ளன. ஸ்ட்ரோபிலாந்தஸ் குந்தியானஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட இந்த செடிகள் தற்போது பூத்து குலுங்க தொடங்கி உள்ளன.

    பச்சைப்பசேல் காடுகளில் நீல நிறத்தில் பூத்து குலுங்கு நீலக்குறிஞ்சி மலர்ச்செடிகளை அந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் பார்த்து வியப்புடன் ரசித்து செல்கின்றனர். அவர்கள் பூத்து குலுங்கும் நீலக்குறிஞ்சி செடிகளுக்கு முன்பாக புகைப்படம் எடுத்து நண்பர்களுக்கு பகிர்ந்து வருகின்றனர்.

    மேலும் நீலகிரி மலைத்தொடரில் லட்சக்கணக்கில் குறிஞ்சி மலர்கள் பூத்து உள்ளதால், அந்த பகுதிகளுக்கு தேனீக்கள் மற்றும் அரிய வகை பறவைகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது.

    • முகமது நபிகள் பிறந்த நாளை முஸ்லிம்கள் மிலாது நபியாக கொண்டாடுகிறார்கள்.
    • மிலாது நபிக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    சென்னை:

    முகமது நபிகள் பிறந்த நாளை முஸ்லிம்கள் மிலாது நபியாக கொண்டாடுகிறார்கள். நாளை மிலாது நபி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி:-

    அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் பிறந்த நன்நாளாம் ''மீலாது நபி'' திருநாளில், உலகெங்கும் வாழும் அன்பிற்கினிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும், ''உண்மையைப் பேசுதல்; தூய எண்ணத்தோடு வாழ்தல்; ஏழை, எளியோருக்கு உதவிபுரிதல்; அனைவரிடத்திலும் அன்புடனும், நற்பண்புடனும் பழகுதல்; புகழையும், அறத்தையும் தராத செயல்களை செய்யாதிருத்தல்'' என்பது இறைத்தூதர் நபிகள் நாயகம் உலகிற்கு நல்கிய போதனைகள் ஆகும்.

    நபிகள் நாயகம் பிறந்தநாளன்று, அவரது போதனைப்படி அன்பு பெருகவும், அமைதி தவழவும், சமரசம் உலவவும், சகோதரத்துவம் தழைக்கவும் அயராது உழைத்திட உறுதி ஏற்போம் எனக் கூறி, இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயமார்ந்த ''மீலாது நபி'' நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    மேலும் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    • 30 பேருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
    • இன்று மாலை 5 மணியளவில் டெல்லி வந்தடைகிறார்கள்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த வசந்தா (வயது 58), பிரேமாவதி (70), தமிழரசி (64), உமாராணி (61), அலமேலு கிருஷ்ணன் (73), பார்வதி (70), பராசக்தி (75) உள்ளிட்ட 29 பேரும், கோவை பீளமேடு ரெயில் நிலைய மேலாளராக பணியாற்றி வரும் கோமதி சிவராமன் உள்பட 30 பேர் உத்தரகாண்ட் மாநிலம் ஆதிகைலா சுக்கு ஆன்மிக பயணம் செல்ல முடிவு செய்தனர்.

    அதன்படி 29 பேர் கடந்த 1-ந் தேதி சிதம்பரத்தை சேர்ந்த கனகராஜ் தலைமை யில் சிதம்பரத்தில் இருந்து ரெயில் மூலம் சென்னை சென்றனர். அங்கிருந்து விமானம் மூலம் டெல்லிக்கு சென்றனர். கோவை பீளமேடு ரெயில் நிலைய மேலாளர் கோமதி கோவை யில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு சென்றார்.

    பின்னர் 30 பேரும் டெல்லியில் இருந்து 2 வேன்கள் மூலம் இமயமலைக்கு சென்றனர். தொடர்ந்து அங்கு சுற்றி பார்த்துவிட்டு, அனைவரும் உத்தரகாண்டில் உள்ள ஆன்மிக தலங்களுக்கு சென்று சுற்றி பார்த்தனர்.

    இதற்கிடையே உத்தரகாண்டில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இருப்பினும் ஆன்மிக சுற்றுலா சென்ற 30 பேரும் ஆதி கைலாஷ் பகுதிக்கு வேன்களில் புறப்பட்டனர்.

    அப்போது பித்தோரகர் மாவட்டம் அருகில் சென்றபோது, ஆதி கைலாஷ் பகுதியில் இருந்து 18 கி.மீ. தொலைவில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. மேலும் மழை வெள்ளத்தால் சாலையும் துண்டிக்கப்பட்டதால், 30 பேரும் ஆதி கைலாஷ் பகுதிக்கு செல்ல முடியாமலும், சொந்த ஊருக்கு திரும்ப முடியாமலும் தவித்தனர்.

    பின்னர் அவர்கள் பித்தோரகரில் உள்ள நாராயணா ஆசிரமத்தில் கடந்த 4 நாட்களாக தங்கியிருந்தனர். இருப்பினும் அங்கிருந்து அவர்கள் வெளியேற முடியாததால், உதவி கேட்டு செல்போன் மூலம் கடலூர் மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில் குமாரை தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தனர்.

    இதற்கிடையே தமிழர்கள் சிக்கிய தகவல் கிடைத்தவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு அரசு உயர் அலுவலர்கள் உத்தரகாண்ட் அரசை தொடர்பு கொண்டு சிக்கியுள்ள தமிழர்களை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர்.

    இதையடுத்து கடலூர் மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் மூலம் உத்தரகாண்ட் மாநிலம் பித்தோரகர் மாவட்ட கலெக்டரை தொடர்பு கொண்டு 30 பேரையும் மீட்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டார்.

    அதன் பேரில் ஆசிரமத்தில் தங்கியிருந்த 30 பேரும் நேற்று காலை 11 மணி அளவில் ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, தட்சுல்லா பகுதிக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு அவர்களுக்கு உணவு, உடை கொடுக்கப்பட்டது. பின்னர் 30 பேருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

    இதனை தொடர்ந்து அவர்கள் வேன் மூலம் டெல்லி புறப்பட்டனர். அவர்கள் சுமார் 550 கி.மீ. தூரம் பயணம் செய்து இன்று மாலை 5 மணியளவில் டெல்லி வந்தடைகிறார்கள். அங்கிருந்து அவர்கள் விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட உள்ளனர்.

    இன்று நள்ளிரவு அல்லது நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலை அவர்கள் சென்னை வந்தடைவார்கள். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு காலை 10 மணியளவில் சிதம்பரம் வந்தடைகிறார்கள்.

    நிலச்சரிவில் சிக்கிய 30 பேரும் மீட்கப்பட்டதால் உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • இந்தியா முழுவதும் மதுக்கடைகள் திறந்து இருக்கின்றன.
    • மதுவை உற்பத்தி செய்கின்ற முதலாளிகளை எதிர்க்கின்ற செயலாகும்.

    திருவாரூர்:

    மது போதை பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு குறித்த விளக்க மண்டல செயற்குழு கூட்டம் திருவாரூரில் நடந்தது. கூட்டத்திற்கு கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கி பேசியதாவது:-

    மது ஒழிப்பு என்கிற உணர்வு பூர்வமான பிரச்சனையை கையில் எடுத்துள்ளேன். அனைத்து கட்சிகளும் மதுவேண்டாம், மதுவிலக்கு வேண்டும் என்பார்கள், ஆனால் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த மாட்டார்கள். இதனால் தான் இந்தியா முழுவதும் மதுக்கடைகள் திறந்து இருக்கின்றன. இதற்கு அனைவரும் ஒன்றிணைந்து மதுவிலக்கு என்ற முடிவு எடுத்தால் நிச்சயம் மதுவை ஒழிக்க முடியும் மது என்பது மிகப்பெரிய லாபம் தரும் தொழில், மிகப்பெரிய கட்டமைப்பினை கொண்டது. மதுக்கடைகளை மூடுவது என்பதை விட மது ஆலைகளை மூட வேண்டும்.

    டாஸ்மாக் கடையை மூடுவது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. டாஸ்மாக் என்பது கார்பரேசன் தமிழ்நாடு அரசே உருவாக்கி உள்ளது. இதற்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகிறது. பெரிய தொழில் அதிபர்களுடன் முரண்படுகின்ற விசயம். மதுவை உற்பத்தி செய்கின்ற முதலாளிகளை எதிர்க்கின்ற செயலாகும். இது குறித்து தொடக்கத்தில் இருந்து பேசி வருகிறேன்.

    நாங்கள் மது ஒழிப்பு குறித்து பேசுவதால் தற்போது தி.மு.க. கூட்டணியை சிலர் உடைக்க நினைத்து பேசி வருகின்றனர். தேர்தலில் அரசியல் வேறு, மதுவிலக்கு கொள்கை வேறு என்று கூறுகிறோம். மதுவிலக்கு குறித்து தி.மு.க., அ.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள் என அனைவரும் கூறுகிறோம். தமிழகத்தில் மட்டும் மதுவிலக்கு என்பது மட்டுமல்ல, தேசிய அளவில் மதுவிலக்கு கொண்டு வந்தால் பயன் அளிக்கும்.

    தூய்மையான நோக்கத்துக்கு தேர்தல் அரசியல் முடிச்சு போட வேண்டாம். மது ஒழிப்பு கொள்கையால் அரசியலில் எந்த பாதிப்பு வந்தாலும் சந்திக்க தயார். கூட்டணி உறவில் பாதிப்பு வந்தாலும் வரலாம். தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு செய்வோம். இப்போது நாங்கள் தி.மு.க கூட்டணியில் இருக்கிறோம். கூட்டணியில் தொடர்கிறோம், தொடரும் என நம்புகிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ராமசாமி படையாட்சியாரின் 107-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
    • ராமசாமி படையாட்சியர் திருவுருவ சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    சென்னை:

    சுதந்திரப் போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான ராமசாமி படையாட்சியாரின் 107-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

    சென்னை கிண்டியில் உள்ள ராமசாமி படையாட்சியார் திருவுருவ சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள உருவ படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    ×