என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • மதுவில்லா தமிழகம் என்று ஒரு கோடி கையெழுத்து வாங்கி ஆளுநரிடம் கொடுத்து இருக்கின்றோம்.
    • மது ஒழிப்பை பொறுத்த வரையில் தமிழகத்தில் பெரும்பாலான கட்சிகள் உறுதியாக இருக்கிறார்கள்.

    தூத்துக்குடி:

    நெல்லையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார்.

    தொடர்ந்து அவர் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை 1-ந்தேதி தொடங்கி தமிழக முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது. இந்த பணி வருகிற 15-ந்தேதி முடிவடையும். திருமாவளவன் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று கூறுகிறார்.

    1999-ம் ஆண்டு முதலே தமிழ் மாநில காங்கிரஸ் நிறுவனத் தலைவர் மூப்பனார் தலைமையில் ஒரு அணி பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அமைந்த போது இந்த கருத்து வலுவாக அப்போது கூறப்பட்டது.

    தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளிலும் உள்ள தொண்டர்கள் ஆட்சியிலும், அதிகாரத்திலும் உரிமை உள்ளது என்று கூறுவதே தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் எண்ணம்.

    அதே நேரத்தில் ஒரு இலக்கு இருக்க வேண்டும். என்னவென்றால் கூட்டணியோடு தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கோடு பணியாற்ற வேண்டும். இலக்கை நாம் சரியாக முறையாக பயன்படுத்திக் கொண்டால் நிச்சயமாக வருங்காலத்தில் தொண்டர்கள், தலைவர்கள் நினைப்பது போல எண்ணிக்கைக்கு ஏற்றவாறு ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு பெறுவதற்கான வாய்ப்பு நிறைய இருக்கிறது.

    முழு பூசணிக்காயை எந்த கட்சி வேண்டுமானாலும் சோற்றில் மறைக்க பார்க்கலாம். ஆனால் உண்மை நிலை இதுவாக தான் இருக்க முடியும். ஆட்சியில், அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று நினைப்பது இந்த கால அரசியலில் எந்த கட்சி தொண்டர்கள் நினைத்தாலும் அது தவறு கிடையாது.

    மது ஒழிப்பை பொறுத்த வரையில் தமிழகத்தில் பெரும்பாலான கட்சிகள் உறுதியாக இருக்கிறார்கள். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் காலத்தில் இருந்து மதுவில்லா தமிழகம் என்ற கொள்கையை உறுதிப்பட எல்லா கூட்டங்களிலும் பேசிக்கொண்டு இருக்கின்றோம். படிப்படியாக தமிழகத்தில் மது ஒழிப்பு தேவை என்பதை வலியுறுத்திக் கொண்டு இருக்கின்றோம்.

    மதுவில்லா தமிழகம் என்று ஒரு கோடி கையெழுத்து வாங்கி ஆளுநரிடம் கொடுத்து இருக்கின்றோம் என்றால் அது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மட்டும் தான். எனவே பல வழிகளில் போராட்டம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் போன்றவை நடத்தி இருக்கின்றோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது தூத்துக்குடி மத்திய மாவட்ட தலைவர் எஸ்.டி.ஆர். விஜய சீலன், தெற்கு மாவட்ட தலைவர் சுந்தரலிங்கம், மாநகர தலைவர் ரவிக் குமார் உட்பட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

    • குமுளி எல்லையில் முற்றுகை போராட்டம் நடத்த தமிழக விவசாயிகள் முடிவெடுத்துள்ளனர்.
    • எஸ்.டி.பி.ஐ. ஆகிய கட்சிகள் இதுபோன்று தமிழகத்துக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர்.

    கூடலூர்:

    கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவத்துக்கு பின் முல்லைப்பெரியாறு அணை உடைந்து விடும் என கேரள அரசியல் கட்சியினர் பிரசாரம் செய்து வருகின்றனர். மேலும் புதிய அணை கட்டியே தீருவோம் என பல்வேறு அமைப்பினரும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

    இடுக்கி எம்.பி. சூரியகோஸ் இப்பிரச்சனையை வலியுறுத்தி மக்களவையில் குரல் எழுப்பினார். கேரளாவில் எந்த கட்சி ஆட்சி அமைத்தாலும் முல்லைப்பெரியாறு அணை பிரச்சனையில் ஒரே கருத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.

    புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ.க.வைச் சேர்ந்த மத்திய இணை மந்திரி சுரேஷ்கோபியும் தற்போது அதில் இணைந்துள்ளார். அரசியல் கட்சியினர் மட்டுமின்றி பல்வேறு தன்னார்வலர் அமைப்பினர், யூடியூபர்கள் ஆகியோரும் முல்லைப்பெரியாறு அணை உடைந்து விடும் என்ற பீதியை தொடர்ந்து மக்களிடம் ஏற்படுத்தி வருகின்றனர்.

    வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழகத்தின் சார்பில் இருந்தே அதிக அளவு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. பொருளுதவி மட்டுமின்றி நிவாரண பொருட்களும் தமிழகம் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டன.

    இது போல இரு மாநில பிரச்சனையில் மக்களின் நலன் சார்ந்து தமிழக அரசு செயல்பட்டாலும் கேரள அரசியல் கட்சியினர் மற்றும் தன்னார்வலர்கள் என்ற போர்வையில் உள்ளவர்கள் முல்லைப்பெரியாறு அணைக்கு எதிராக தொடர்ந்து பொய் பிரசாரத்தை பரப்பி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

    எனவே இது போன்ற சம்பவத்தை கண்டித்து வருகிற 22-ந் தேதி குமுளி எல்லையில் முற்றுகை போராட்டம் நடத்த தமிழக விவசாயிகள் முடிவெடுத்துள்ளனர். இது குறித்து பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் தெரிவிக்கையில், பல்வேறு நிபுணர் குழுக்களின் ஆய்வுக்கு பின் முல்லைப்பெரியாறு அணை பலமாக உள்ளது என்று உச்சநீதிமன்றமே தீர்ப்பு வழங்கி இருக்கும் நிலையில் அதனை அவமதிக்கும் வகையில் கேரளாவில் தொடர்ந்து விஷம பிரசாரங்கள் பரப்பப்பட்டு வருகிறது.

    கேரளாவின் இடது சாரி கட்சிகள், காங்கிரஸ், பா.ஜ.க. கத்தோலிக்க இளைஞர் இயக்கம், ஆர்.எஸ்.பி., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், எஸ்.டி.பி.ஐ. ஆகிய கட்சிகள் இதுபோன்று தமிழகத்துக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர்.

    தமிழக அரசும் இப்பிரச்சனையில் எதிர்வினையாற்றாமல் மவுனமாக உள்ளது. எனவே விவசாயிகளை ஒன்றிணைத்து வருகிற 22-ந் தேதி குமுளி எல்லையை முற்றுகையிடும் போராட்டம் நடத்த உள்ளோம் என்றனர்.

    • கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் விசாரணை.
    • அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னகரம் மீனவ கிராமத்தில் இருந்து நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். சுமார் 9 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கே அடையாளம் தெரியாத, 50 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் நாட்டுப்படகு ஒன்றில் மிதந்து கொண்டிருந்தது. அதனை பார்த்த மீனவர்கள் உடனடியாக அந்த படகு மற்றும் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் சம்பவம் குறித்து கடலோர பாதுகாப்பு குழுமத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் உடலை கைப்பற்றி மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் சம்பவம் குறித்து விசாரித்ததில், கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு ராமேஸ்வரம் ஓலைக்குடா பகுதியை சேர்ந்த பன்னீர்ச்செல்வம் என்பவரின் காணாமல்போன நாட்டுப்படகு என்பது தெரிய வந்துள்ளது.

    அதனை தொடர்ந்து பன்னீர் செல்வத்திடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காணாமல் போன நாட்டுப்படகில் ஆண் உடல் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சாலை நடுவே அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை மூடிகள் நொறுங்கி கிடந்தது.
    • மாமல்லபுரம் வந்த சுற்றுலா பயணிகள் கடும் சிரமம் அடைந்தனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை பார்வையிட தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். வார இறுதிவிடுமுறை நாட்களில் சுற்றுலாபயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

    மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகள் கிழக்கு ராஜவீதி சாலை வழியாக சென்றுதான் அங்குள்ள புராதன சின்னங்களை சுற்றி பார்க்க முடியும். அதேபோல் பேருந்து நிலையம் வரும் அரசு பஸ்களும் அதே வழியாகத்தான் சென்று திரும்ப வேண்டும். ஒருவழி பாதை இல்லாததால் விடுமுறை நாட்களில் இந்த பிரதான சாலைகளில் எப்போதும் நெரிசலுடனே வாகனங்கள் ஊர்ந்து செல்லும். இந்த நிலையில் அப்பகுதியில் சாலை நடுவே அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை மூடிகள் நொறுங்கி கிடந்தது. இதை விடுமுறை நாளான நேற்று மாமல்லபுரம் பேரூராட்சி ஊழியர்கள் பகல் நேரத்தில் சரிசெய்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மேலும் போக்குவரத்து போலீசாரும் அங்கு இல்லாததால் வாகன ஓட்டிகள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. நீண்ட நேர வாகன நெரிசலுக்கு பின்னர் அந்த பகுதியை வாகன ஓட்டிகள் கடந்து சென்றனர். இதனால் மாமல்லபுரம் வந்த சுற்றுலா பயணிகள் கடும் சிரமம் அடைந்தனர்.

    • விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் தி.மு.க.வுக்கும் எந்த விரிசலும் இல்லை.
    • மத்திய அரசு ஏன் ஒரு தனிப்பட்ட சட்டத்தை இயற்றக்கூடாது இதுதான் எங்கள் கேள்வி.

    மது ஒழிப்பு சம்பந்தமான கோரிக்கை கடிதத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் திருமாவளவன் வழங்கி மாநாட்டில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தார். அதன் பிறகு இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோரும் உடன் இருந்தனர்.

    சந்திப்பு முடிந்ததும் திருமாவளவன் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்க சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்து தமிழ்நாடு திரும்பிய நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அவரை சந்தித்து எங்கள் வாழ்த்துகளையும் பாராட்டுதலையும் தெரிவித்தோம்.

    அமெரிக்காவில் இருந்த 2 வார காலமும், ஏராளமான நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். தமிழர்கள் தமிழக முதலமைச்சருக்கு மிகச்சிறப்பான வரவேற்பை நல்கினர்.

    பல ஆயிரம் கோடி முதலீட்டுக்கான 19 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருக்கிறது. முதலமைச்சரின் இந்த பயணம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

    தமிழ்நாட்டுக்கு ஏராளமான அன்னிய முதலீட்டுக்கான வாய்ப்பும் உருவாகி இருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு நாங்கள் வரவேற்று அவருக்கு பாராட்டுகளை தெரிவித்தோம்.

    கேள்வி:- ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்று பேசினீர்களே? என்ன காரணம் என்று முதலமைச்சர் கேட்டாரா?

    பதில்:- அதுபற்றி எதுவும் பேசவில்லை. அது எங்களுடைய கருத்து. அவ்வளவுதான். நாங்கள் 1999-ல் இருந்து பேசி வருகிற ஒரு கருத்து. அது இப்போதைக்கு சமூக ஊடகங்களில் பெரிதாக பேசப்படுகிறது.

    அந்த கோரிக்கையை நாங்கள் எப்போதும் பேசிக்கொண்டே இருக்கிறோம். பேசிக்கொண்டே இருப்போம். எந்த நேரத்திலே, எப்போது, எந்த கருத்தை எந்தக் கொள்கையை, எந்த நிலைப்பாட்டை வலுவாக பேச வேண்டுமோ அந்த நேரத்தில் பேசுவோம்.

    கேள்வி:- 2026 தேர்தலில் இந்த கோரிக்கையை வைப்பீர்களா?

    பதில்:- தேர்தலுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நாங்கள் நடத்துவது தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான பல்லாயிரக்கணக்கான கைம்பெண்கள் கண்ணீர் சிந்த வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் கோரிக்கையைத் தான் நாங்கள் முன் நிறுத்தி இந்த மாநாட்டை நடத்துகிறோம்.

    எனவே இதை திசை திருப்பும் வகையில் தேர்தல் அரசியலோடு பிணைத்து பார்க்க வேண்டாம். இணைத்து பார்க்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    கேள்வி:- அ.தி.மு.க.வுக்கு நேரடியாக நேரில் சென்று அழைப்பு விடுப்பீர்களா?

    பதில்:- நாங்கள் தி.மு.க.வுக்கு நேரடியாக அழைப்பு கொடுக்கவில்லை. பேசப்பட்ட விவரங்களில் இருந்து உங்கள் கருத்தும் எங்கள் கருத்தும் ஒன்றுதான். உங்கள் மாநாட்டில் எங்கள் தரப்பில் இருந்து 2 பேர் பங்கேற்பார்கள் என்று முதலமைச்சர் கூறி இருக்கிறார்.

    இந்த நிலையில் இந்த கருத்தில் உடன்படுகிறவர்கள், எங்கள் மாநாட்டில் பங்கேற்பதில் எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை.

    விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் தி.மு.க.வுக்கும் எந்த விரிசலும் இல்லை. எந்த நெருடலும் இல்லை. நாங்கள் எங்கள் கொள்கை நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம். அதை நாங்கள் முன்னிறுத்துகிறோம். அவ்வளவுதான்.

    தேர்தலுக்கு இன்னும் 15 மாதம் இருக்கிறது. இந்த நிலையில் எங்கள் மாநாட்டில் தி.மு.க. பங்கேற்பதாக கூறி இருக்கிறார்கள். இதற்கு பிறகு அவர்களுடைய நிலைப்பாடு என்ன என்பது எங்களுக்கு தெரியாது.

    இது எல்லோருக்குமான பிரச்சனை. ஒரு கட்சிக்கான பிரச்சனை இல்லை. ஒரு கூட்டணிக்கான பிரச்சனை இல்லை. இது மக்கள் பிரச்சனை.

    யாரெல்லாம் மது விலக்கில் உறுதியாக இருக்கிறார்களோ அவ்வளவு பேரும் சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என்பதுதான் எங்களது பொதுவான அறை கூவல்.

    நான் ஏற்கனவே சொல்லி உள்ளேன். இதை தேர்தலோடு முடிச்சி போட வேண்டாம். எல்லோரும் சேர்ந்து குரல் கொடுப்போம். எல்லோரும் சேர்ந்து பேசுவோம். மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்போம்.

    இந்திய ஒன்றிய அரசு எனக்கு இதிலே எந்த பொறுப்பும் இல்லை என்பது போல் வேண்டும் காணாமலும் இருக்கிறது. இந்தியா முழுவதும் போதை பொருள் பழக்கம் தீவிரமாக இருக்கிறது.

    இந்தியா முழுவதும் 4 மாநிலங்களை தவிர எல்லா மாநிலங்களிலும் மதுபான வியாபாரத்தை அரசே முன் நின்று நடத்துகிறது. இதற்கு மத்திய அரசுக்கு பொறுப்பு இருக்கிறதா? இல்லையா? இதுதான் விடுதலை சிறுத்தைகள் எழுப்புகிற கேள்வி.

    இதற்காக மத்திய அரசு ஏன் ஒரு தனிப்பட்ட சட்டத்தை இயற்றக்கூடாது இதுதான் எங்கள் கேள்வி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 175 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • போலீசார் கோர்ட்டில்ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கீவளுர் தண்டு மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள வீட்டில், டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களை மொத்தமாக வாங்கி பதுக்கி அதிக விலைக்கு விற்று வருவதாக ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு தகவல் வந்தது.

    இதையடுத்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் மற்றும் போலீசார் கீவளூர் பகுதியில் உள்ள பூசனம் என்பவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் ஏராளமான மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.

    வடமாநில தொழிலாளர்களை குறிவைத்து மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு அவர் தொடர்ந்து விற்று வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து பூசனத்தை கைது செய்தனர். அவரிடம் இருந்து மொத்தம 175 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் கைதான பூசனத்தை போலீசார் கோர்ட்டில்ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மதுபாட்டி ல்களை பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    • நபிகள் நாயகம் பிறந்தநாளையொட்டி மதுக்கடைகள் அடைப்பு.
    • மதுக்கடைகள் நாள் முழுவதுமாக மூடப்பட வேண்டும் என்று கலெக்டர் உத்தரவு.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    நாளை (17-ந் தேதி) நபிகள் நாயகம் பிறந்தநாளையொட்டி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து இந்திய தயாரிப்பு மற்றும் அயல்நாட்டு டாஸ்மாக் மதுபான கடைகள் மதுபான சில்லறை விற்பனை கடைகள், ஆகியவை நாள் முழுவதுமாக மூடப்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாரத்தான் ஓட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு இ.கருணாநிதி எம்.எல்.ஏ. சான்றிதழ் கோப்பைகளை பரிசாக வழங்கினர்.
    • மாநகராட்சி ஆணையர் சிவராஜ் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

    தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் மக்கும் குப்பை, மக்கா குப்பைகளை தரம் பிரிப்பது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் மாரத்தான் ஓட்டப்பந்தயம் குரோம்பேட்டை எம்.ஐ.டி. கல்லூரியில் தொடங்கியது. 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்ற மராத்தான் போட்டியை நகராட்சி நிர்வாக இயக்குனர் சிவராஜ் தொடங்கி வைத்தார்.

    இதில் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, துணை மேயர் காமராஜ், மண்டலக் குழு தலைவர்கள் இ.ஜோசப் அண்ணாதுரை, பம்மல் வே.கருணாநிதி, மாநகராட்சி ஆணையர் சிவராஜ் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். தாம்பரம்- வேளச்சேரி சாலையில் முடிவுற்ற மாரத்தான் ஓட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு இ.கருணாநிதி எம்.எல்.ஏ. சான்றிதழ் கோப்பைகளை பரிசாக வழங்கினர்.

    • பின்னலாடை நிறுவனத்தின் ஒரு பகுதியில் தீப்பற்றி எரிந்துள்ளது.
    • தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் நெருப்பெரிச்சல் ஜி என் கார்டன் பகுதியில் முத்துக்குமார் (55) என்பவருக்கு சொந்தமான பின்னலாடை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. நேற்று விடுமுறை என்பதால் நேற்று முன்தினம் இரவு நிறுவனம் மூடப்பட்டு சென்ற நிலையில் பணிக்கு யாரும் வேலைக்கு வராததால் காவலாளி மட்டும் பணியில் இருந்துள்ளார்.

    இந்நிலையில் இன்று அதிகாலை பின்னலாடை நிறுவனத்தின் உட்பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியுள்ளது. உடனடியாக காவலாளி சென்று பார்த்த போது பின்னலாடை நிறுவனத்தின் ஒரு பகுதியில் தீப்பற்றி எரிந்துள்ளது. உடனடியாக உரிமையாளர் மற்றும் தீயானைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். நிறுவனம் முழுவதும் பின்னலாடை துணிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த காரணத்தால் மளமளவென நிறுவனம் முழுவதும் தீ பரவியுள்ளது.

    திருப்பூர் வடக்கு தீயணைப்புத் துறையினர் நான்கு தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மூன்று மணி நேரத்திற்கு மேலாக பத்துக்கும் மேற்பட்ட லாரிகளில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீயணைக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

    ஆனாலும் பின்னலாடை நிறுவனத்தில் உற்பத்திக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த துணிகள் மற்றும் உற்பத்தி செய்து பண்டல் போட்டு வைக்கப்பட்டிருந்த துணிகள், பின்னலாடை இயந்திரம் , கட்டிடம் என பல கோடி மதிப்பில் பொருட்கள் சேதமடைந்துள்ளது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும் தீ விபத்து குறித்து அனுப்பர்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்டு பேசிய வீடியோ வெளியாகி பேசுபொருளான நிலையில் முதலமைச்சரை சந்தித்தார்.
    • கூட்டணியில் ஏற்பட்டுள்ள சில முரண்களை களையவும் பேச்சுவார்த்தை என தகவல் வெளியாகி உள்ளது.

    சென்னை:

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சந்தித்தார்.

    பூரண மதுவிலக்கை வலியுறுத்தி விசிக நடத்தும் மாநாட்டிற்கு முதலமைச்சருக்கு அழைப்பு விடுக்க உள்ளதாக திருமாவளவன் கூறி இருந்தார்.

     

    ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்டு பேசிய வீடியோ வெளியாகி பேசுபொருளான நிலையில் முதலமைச்சரை சந்தித்தார்.

    தேசிய அளவில் மதுவிலக்கு கொள்கையை உருவாக்கி தனி சட்டம் இயற்றுவதற்கு திமுக-வை வலியுறுத்த முதலமைச்சரை சந்திப்பதாகவும் கூட்டணியில் ஏற்பட்டுள்ள சில முரண்களை களையவும் பேச்சுவார்த்தை என தகவல் வெளியாகி உள்ளது.

    • சத்யாவின் நடத்தையில் அவரது கணவருக்கு சந்தேகம் எழுந்தது.
    • போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தாராபுரம்:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதியை சேர்ந்தவர் சத்யா (வயது 30). இவருக்கும், திருமணத்திற்கு பெண் பார்த்து வந்த திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த பேக்கரி உரிமையாளர் ஒருவருக்கும் இடையே செல்போன் செயலி மூலம் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள ஒரு கிராமத்திற்கு சென்று அங்குள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னர் இந்த தம்பதிகள் தாராபுரம் வந்து குடும்பம் நடத்தினர்.

    அப்போது சத்யாவின் நடத்தையில் அவரது கணவருக்கு சந்தேகம் எழுந்தது. இதனால் சத்யா மீது தாராபுரம் போலீசில் அவரது புதுக்கணவர் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் சத்யாவை அழைத்து விசாரித்தபோது அவர் சிறிது நேரத்தில் வருகிறேன் என்று கூறிவிட்டு தலைமறைவானார். அதன்பின்னர் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த சத்யாவை பிடித்து வந்து விசாரித்தனர். விசாரணையில், சத்யா சென்னையை சேர்ந்த ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதும், அடுத்து கரூரைச் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டரை கரம் பிடித்ததும், பின்னர் மாட்டு வியாபாரி ஒருவரை ஏமாற்றி பணம் பெற்றதும், அடுத்து மற்றொரு வாலிபரை பதிவு திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி குழந்தை பெற்ற திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இதையடுத்து போலீசார் சத்யாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையில் சத்யாவின் திருமணத்திற்கு உடந்தையாக இருந்த பெண் புரோக்கரான கரூர் மாவட்டம் காந்தி கிராமம் பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வி (32) என்பவரை போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் தலைமறைவாக இருந்த தமிழ்செல்வியை தாராபுரம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அள்ளி ராணி தலைமையிலான போலீசார் கரூர் அருகே வைத்து கைது செய்தனர். பின்னர் அவரை தாராபுரம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது பல திடுக்கிடும் தகவல்களை அவர், போலீசாரிடம் கூறியுள்ளார். தமிழ்செல்வி திருமணமாகி முதல் கணவரை பிரிந்து தற்போது வேறு ஒருவருடன் வசித்து வருகிறார். சத்யாவுக்கும் தமிழ்ச்செல்விக்கும் இடையே கடந்த 2021-ம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டது. அப்போதுதான் பேஸ்புக் மற்றும் ஆன்லைன் வழியாக பெண் பார்ப்பவர்களை நோட்டமிட்டு பணம் பறிக்க திட்டமிட்டுள்ளனர். அதன்படி பெண் பார்ப்பவர்களை புரோக்கர் என அறிமுகமாகி சத்யாவின் படத்தை அனுப்பி திருமணத்திற்கான ஏற்பாடுகளை தமிழ்செல்வி செய்துள்ளார்.

    குறிப்பாக வசதி படைத்தவர்களை மட்டும் தேர்வு செய்து திருமணம் செய்து வைத்துள்ளார். திருமணத்திற்காக புரோக்கர் கமிஷனாக ஒரு தொகையை வாங்கிக் கொண்டு சத்யாவுக்கு தாய், தந்தை, உறவினர் என ஒரு சிலரை ஏற்பாடு செய்து எளிமையான முறையில் திருமணம் நடத்தி வைத்துள்ளார். மேலும் சத்யா எளிமையான குடும்பத்தைச் சேர்ந்தவர், அவருக்கு நீங்கள் தான் நகை போட்டு திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனவும் நிர்பந்தம் செய்துள்ளனர். அவர்கள் பெண் கிடைத்தால் போதும் என்று சத்யாவுக்கு 10 முதல் 20 பவுன் நகை வரை கொடுத்து திருமணம் செய்து கொள்வார்கள். இரண்டு நாட்கள் முதல் ஒரு வாரம் வரை திருமணமானவர்களுடன் குடும்பம் நடத்தி விட்டு பின்னர் நகை, பணத்துடன் அங்கிருந்து சத்யா, கரூர் சென்று விடுவார்.

    இதேபோல் 20-க்கும் மேற்பட்டோரை ஏமாற்றியுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் திருமணம் செய்து கொள்ளாமல் கணவன்- மனைவியாக வாழ்வதற்கும் தமிழ்செல்வி சத்யாவை பயன்படுத்தியுள்ளார். 30-க்கும் மேற்பட்டோர் உடன் தனிமையில் இருப்பதை வீடியோ மற்றும் போட்டோக்களை எடுத்துக் கொண்டு அவர்களை மிரட்டி ரூ.10 முதல் 20 லட்சம் வரை பணம் பறித்துள்ளனர். இவ்வாறு 53 பேரிடம் ஏமாற்றி பணம் பறித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளனர். மேலும் சத்யாவின் பெயரில் கொடுமுடி அருகே ரூ.4 கோடி மதிப்பிலான இடம் வாங்கி இருப்பதும் தெரியவந்துள்ளது. திருமணத்திற்காக போடப்பட்ட நகைகள் அனைத்தையும் புரோக்கர் தமிழ்ச்செல்வி பெயரில் வங்கி லாக்கரில் பதுக்கி வைத்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மதுவிலக்கு கொள்கை வரையறுக்க கட்சிகளை ஒருங்கிணைப்பது, படிப்படியாக மதுக்கடைகளை மூடுவதுதான் மாநாட்டின் நோக்கம்.
    • அரசியலுக்காக மாநாடு நடத்தவில்லை.

    சென்னை:

    சுதந்திரப் போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான ராமசாமி படையாச்சியாரின் 107-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    இதனையடுத்து திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    மதுவிலக்கு மாநாட்டிற்கு முதலமைச்சருக்கு நேரில் அழைக்க வந்துள்ளேன்.

    மதுவிலக்கு கொள்கை வரையறுக்க கட்சிகளை ஒருங்கிணைப்பது, படிப்படியாக மதுக்கடைகளை மூடுவதுதான் மாநாட்டின் நோக்கம்.

    மதுஒழிப்பு மாநாட்டின் முதன்மையான நோக்கம் 2.

    1. அரசு மதுபான கடைகளை படிப்படியாக குறைக்க வேண்டும்.

    2. தேசிய கொள்கையை வரையறுக்க அனைத்து கட்சியினரும் ஒருங்கிணைந்து குரலெழுப்ப வேண்டும். திமுகவுக்கும் அந்த வேண்டுகோளை வைக்கிறோம்.

    அரசியலுக்காக மாநாடு நடத்தவில்லை. இந்த நோக்கத்தில் உறுதியாக இருக்க வேண்டும்.

    பாமகவோடு சேர்ந்து செயல்பட முடியாதபடி அவர்கள் தான் எங்களுக்கு நெருக்கடி கொடுத்தார்கள். நாங்கள் நெருக்கடி கொடுக்கவில்லை என்று கூறினார்.

    ×