search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    கேரள அரசியல் கட்சியினரை கண்டித்து போராட்டம் நடத்த தமிழக விவசாயிகள் முடிவு
    X

    கேரள அரசியல் கட்சியினரை கண்டித்து போராட்டம் நடத்த தமிழக விவசாயிகள் முடிவு

    • குமுளி எல்லையில் முற்றுகை போராட்டம் நடத்த தமிழக விவசாயிகள் முடிவெடுத்துள்ளனர்.
    • எஸ்.டி.பி.ஐ. ஆகிய கட்சிகள் இதுபோன்று தமிழகத்துக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர்.

    கூடலூர்:

    கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவத்துக்கு பின் முல்லைப்பெரியாறு அணை உடைந்து விடும் என கேரள அரசியல் கட்சியினர் பிரசாரம் செய்து வருகின்றனர். மேலும் புதிய அணை கட்டியே தீருவோம் என பல்வேறு அமைப்பினரும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

    இடுக்கி எம்.பி. சூரியகோஸ் இப்பிரச்சனையை வலியுறுத்தி மக்களவையில் குரல் எழுப்பினார். கேரளாவில் எந்த கட்சி ஆட்சி அமைத்தாலும் முல்லைப்பெரியாறு அணை பிரச்சனையில் ஒரே கருத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.

    புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ.க.வைச் சேர்ந்த மத்திய இணை மந்திரி சுரேஷ்கோபியும் தற்போது அதில் இணைந்துள்ளார். அரசியல் கட்சியினர் மட்டுமின்றி பல்வேறு தன்னார்வலர் அமைப்பினர், யூடியூபர்கள் ஆகியோரும் முல்லைப்பெரியாறு அணை உடைந்து விடும் என்ற பீதியை தொடர்ந்து மக்களிடம் ஏற்படுத்தி வருகின்றனர்.

    வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழகத்தின் சார்பில் இருந்தே அதிக அளவு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. பொருளுதவி மட்டுமின்றி நிவாரண பொருட்களும் தமிழகம் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டன.

    இது போல இரு மாநில பிரச்சனையில் மக்களின் நலன் சார்ந்து தமிழக அரசு செயல்பட்டாலும் கேரள அரசியல் கட்சியினர் மற்றும் தன்னார்வலர்கள் என்ற போர்வையில் உள்ளவர்கள் முல்லைப்பெரியாறு அணைக்கு எதிராக தொடர்ந்து பொய் பிரசாரத்தை பரப்பி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

    எனவே இது போன்ற சம்பவத்தை கண்டித்து வருகிற 22-ந் தேதி குமுளி எல்லையில் முற்றுகை போராட்டம் நடத்த தமிழக விவசாயிகள் முடிவெடுத்துள்ளனர். இது குறித்து பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் தெரிவிக்கையில், பல்வேறு நிபுணர் குழுக்களின் ஆய்வுக்கு பின் முல்லைப்பெரியாறு அணை பலமாக உள்ளது என்று உச்சநீதிமன்றமே தீர்ப்பு வழங்கி இருக்கும் நிலையில் அதனை அவமதிக்கும் வகையில் கேரளாவில் தொடர்ந்து விஷம பிரசாரங்கள் பரப்பப்பட்டு வருகிறது.

    கேரளாவின் இடது சாரி கட்சிகள், காங்கிரஸ், பா.ஜ.க. கத்தோலிக்க இளைஞர் இயக்கம், ஆர்.எஸ்.பி., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், எஸ்.டி.பி.ஐ. ஆகிய கட்சிகள் இதுபோன்று தமிழகத்துக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர்.

    தமிழக அரசும் இப்பிரச்சனையில் எதிர்வினையாற்றாமல் மவுனமாக உள்ளது. எனவே விவசாயிகளை ஒன்றிணைத்து வருகிற 22-ந் தேதி குமுளி எல்லையை முற்றுகையிடும் போராட்டம் நடத்த உள்ளோம் என்றனர்.

    Next Story
    ×