என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சென்னையில் இன்று விநாயகர் சிலை ஊர்வலம்- போக்குவரத்து மாற்றம்
    X

    சென்னையில் இன்று விநாயகர் சிலை ஊர்வலம்- போக்குவரத்து மாற்றம்

    • திருவொற்றியூர் மற்றும் அதன் அருகே உள்ள இடங்களில் வைக்கப்பட்டுள்ள சிலைகளை, திருவொற்றியூர் கடலிலும் கரைப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
    • விநாயகர் ஊர்வல பாதுகாப்பு பணியில் 16,500 போலீசாரும், 2 ஆயிரம் ஊர்காவல் படையினரும் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

    சென்னை:

    விநாயகர் சதுர்த்தி கடந்த 7-ந்தேதி விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதற்காக சென்னையில் இந்து அமைப்புகள் சார்பில் பொது இடங்களில் 1,524 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது. இந்த சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கு 11, 14, (அதாவது நேற்று) மற்றும் 15-ந்தேதி (அதாவது இன்று) ஆகிய 3 நாட்கள் போலீசார் அனுமதி வழங்கியிருந்தனர்.

    சாலைகள், முக்கிய தெருக்களில் வைத்து பூஜிக்கப்பட்ட பெரிய விநாயகர் சிலைகளில் ஒரு பகுதி 11-ந்தேதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டது.

    நேற்றும் ஏராளமான சிலைகள் கடலில் கரைக்கப்பட்டது. தற்போது வரை நூற்றுக்கும் மேற்பட்ட சிலைகள் கரைக்கப்பட்ட நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) விநாயகர் சிலைகள் அதிக எண்ணிக்கையில் கரைக்கப்பட உள்ளது.

    இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, சிவசேனா, பாரத் இந்து முன்னணி மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிலைகளுடன் பிரமாண்ட ஊர்வலம் நடைபெறுகிறது.

    விநாயகர் சிலைகளை அனுமதிக்கப்பட்ட 17 வழித்தடங்களின் வழியாக மட்டுமே எடுத்து செல்ல போலீசார் உத்தரவிட்டுள்ளனர். ஊர்வலத்தில் எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களும் நிகழாமல் இருக்க, சிலை கரைப்பு இடங்களில் தற்காலிக கட்டுப்பாட்டு அறைகள் மற்றும் காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

    பெரிய சிலைகளை தூக்கி சென்று கடலில் கரைப்பதற்கு ராட்சத கிரேன்களும், படகுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள், மோட்டார் படகுகள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. நீச்சல் தெரிந்த தன்னார்வலர்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    சென்னை மாநகரில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் பட்டினப்பாக்கம், நீலாங்கரை, காசிமேடு, திருவொற்றியூர் ஆகிய 4 இடங்களில் கரைக்கப்படுகிறது. நுங்கம்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர், புதுப்பேட்டை, பெரம்பூர், வியாசர்பாடி, புளியந்தோப்பு, பட்டாளம், சவுகார்ப்பேட்டை, அயனாவரம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், தேனாம்பேட்டை.

    தியாகராயநகர், எம்.ஜி.ஆர்.நகர், வடபழனி, சைதாப்பேட்டை, வில்லிவாக்கம், கொளத்தூர், திருமங்கலம், மதுரவாயல், கோயம்பேடு, அரும்பாக்கம் ஆகிய இடங்களில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை பட்டினம்பாக்கம் சீனிவாசபுரம் கடலில் கரைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    அடையார், கிண்டி, ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், நங்கநல்லூர், வேளச்சேரி, திருவான்மியூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகளை நீலாங்கரை கடலிலும், வட சென்னை பகுதிகளான தங்கசாலை, வண்ணாரப்பேட்டை, ராயபுரம், தண்டையார்பேட்டை, கொடுங்கையூர், மாதவரம் பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகளை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் கரைக்கப்படுகிறது.

    திருவொற்றியூர் மற்றும் அதன் அருகே உள்ள இடங்களில் வைக்கப்பட்டுள்ள சிலைகளை, திருவொற்றியூர் கடலிலும் கரைப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    விநாயகர் ஊர்வல பாதுகாப்பு பணியில் 16,500 போலீசாரும், 2 ஆயிரம் ஊர்காவல் படையினரும் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

    போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை முன்னிட்டு கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்படும்.

    * விநாயகர் சிலை ஊர்வலத்தின் காரணமாக திருவல்லிக்கேணியில் இருந்து சாந்தோம் நெடுஞ்சாலை நோக்கி வரும், செல்லும் வாகனங்கள், மெதுவாக சென்று, காந்தி சிலையிலிருந்து வலதுபுறமாக ஆர்.கே.சாலை, வி.எம் தெரு இடது, லஸ் சந்திப்பு, அமிர்தஜன் சந்திப்பு, டிசெல்வா சாலை, வாரன் சாலை வலது, டாக்டர் ரங்கா சாலை, பீமனா கார்டன் சந்திப்பு இடது திருப்பம், சி.பி. ராமசாமி சாலை, செயின்ட் மேரிஸ் சந்திப்பு, காளியப்பா சந்திப்பு இடதுபுறம் ஸ்ரீநிவாசா அவென்யூ - ஆர்.கே.மடம் சாலை வழியாக சென்று அவர்கள் இலக்கை அடையலாம்.

    * ஊர்வலம் ரத்னா கபே சந்திப்புக்கு அருகில் வரும்போது, ஜாம் பஜார் போலீஸ் நிலையத்தில் இருந்து எந்த வாகனமும் அனுமதிக்கப்படாது. ரத்னா கபே சந்திப்புக்கு பதிலாக இந்த வாகனங்கள் ஜானி ஜான்கான் சாலை வழியாக சென்று அவர்கள் இலக்கை அடையலாம்.

    * ஊர்வலம் டி.எச்.சாலைக்குள் நுழையும் போது, ஐஸ் ஹவுஸ் சந்திப்பில் இருந்து ரத்னா கபே சந்திப்பு நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்படாது, அதற்கு பதிலாக இந்த வாகனங்கள் பெசன்ட் சாலை, காமராஜர் சாலை வழியாக திருப்பி விடப்படும் அல்லது இடதுபுறம் ஜி.ஆர்.எச். சந்திப்பை நோக்கி சென்று அவர்களின் இலக்கை அடையலாம்.

    * மந்தைவெளியில் இருந்து சாந்தோம் சாலையை நோக்கி வரும் வாகனங்கள் தேவைப்பட்டால் தேவநாதன் தெரு, ஆர்.கே. மடம் சாலை வழியாக திருப்பி விடப்படும்.

    * கலங்கரை விளக்கம் முதல் சீனிவாசபுரம் உள்ள லூப் ரோட்டில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு செல்லும் வாகனம் மட்டும் அனுமதிக்கப்படும்.

    * விநாயகர் சிலைகள் கரைக்கும் இடங்களை சுற்றி சுமார் 10 கி.மீ சுற்றளவிற்கு எந்தவித வணிக வாகனங்களும் செல்ல அனுமதி இல்லை.

    Next Story
    ×