என் மலர்
உள்ளூர் செய்திகள்
- கடந்த சில நாட்களாக பெற்றோர் அவரை சரியாக படிக்கவில்லை என்று கண்டித்து வந்ததாக கூறப்படுகிறது.
- போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
களக்காடு:
நெல்லை மாவட்டம் களக்காடு ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். பாத்திர வியாபாரி. இவரது மகள் முத்துலெட்சுமி (வயது 17).
முத்துலெட்சுமி 12-ம் வகுப்பு படித்துள்ளார். கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதினார். ஆனால் அதில் தேர்ச்சி பெறவில்லை. இதையடுத்து மீண்டும் 2-வது முறையாக நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்தார்.
இந்நிலையில் இன்று காலை அவர் வீட்டில் தூக்கில் தொங்கினார். இதைப்பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் இறந்தார்.
இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக பெற்றோர் அவரை சரியாக படிக்கவில்லை என்று கண்டித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த முத்துலெட்சுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கலைஞரின் சிலையை திறக்கவாய்ப்பு பெற்றிருப்பது எனக்கு மகிழ்ச்சி.
- முதலமைச்சர் எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரில் உள்ள மரகதம் கந்தசாமி திருமண மண்டபத்தின் முன்பு முன்னாள் முதலமைச்சர் மறைந்த கருணாநிதிக்கு 3 அடி உயரத்தில் வெண்கல சிலை நிறுவப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது.
விழாவில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு, கருணாநிதியின் சிலையை திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் பேசியதாவது:-
எனக்கும் இந்த விழுப்புரம் மாவட்டத்திற்கும் ஒரு நெருங்கிய, மறக்க முடியாத சொந்தமும், பந்தமும் உண்டு. நான் இளைஞரணி செயலாளராகவும், சட்டப்பேரவை உறுப்பினராகவும், அமைச்சராகவும் பலமுறை இங்கு வந்துள்ளேன்.
ஆனால் துணை முதல்-அமைச்சராக பொறுப்பேற்று முதல் முறையாக உங்களுடைய அன்பைப்பெற்று இங்கு வந்துள்ளேன். அதுவும் முதல் நிகழ்ச்சியாக கலைஞரின் சிலையை திறக்கவாய்ப்பு பெற்றிருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
நான் 21 ஆண்டுகளுக்கு முன்பு, கடந்த 2003-ம் ஆண்டில் தளபதி நற்பணி மன்றம் சார்பாக கவுதமசிகாமணி ஏற்பாடு செய்த விளையாட்டுப்போட்டி தான், எனது பொது வாழ்வில் முதன்முறையாக தொடங்கி வைத்த போட்டியாகும்.
தற்போது விளையாட்டுத்துறை அமைச்சராகவும், துணை முதலமைச்சராகவும் பொறுப்பேற்று மாநில, தேசிய, சர்வதேச அளவிலான போட்டிகளை தொடங்கிவைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளேன்.
கலைஞரின் கொள்கைகள், லட்சியங்கள், அவருடைய எழுத்துக்கள் ஆகியவற்றை மக்களிடம் கொண்டு சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான் இதுபோன்று அனைத்து இடங்களிலும் கலைஞர் சிலையை திறந்து வைத்து வருகிறோம்.
கலைஞர் வழியில் சிறப்பாக ஆட்சி நடத்தி வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த மூன்றரை ஆண்டுகளாக ஏழை, எளிய மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.
முதலமைச்சராக தலைவர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு செயல்படுத்திய திட்டங்களில் சிலவற்றை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன். மகளிருக்கு கட்டண மில்லா பஸ் பயணம் திட்டத்தின் மூலம் மாதம் ரூ.900 முதல் ரூ.1,000 வரை மகளிர் சேமிக்கிறார்கள்.
இந்த திட்டத்தை மற்ற மாநிலங்களும் செயல்படுத்த தொடங்கியுள்ளன. அதேபோல் புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 கல்வி ஊக்கத்தொகைவழங்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் 2 லட்சம் மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர். இத்திட்டம் மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு தமிழ் புதல்வன் என்றபெயரில் மாதம் ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் காலை உணவு திட்டம் என்ற அற்புதமான திட்டம் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் முதன்முதலாக தொடங்கப்பட்டது.
இதுதவிர முத்தாய்ப்பு திட்டமாக கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தின் மூலம் தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் இதுவரை 1 கோடியே 16 லட்சம் மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது.
ஒரு சில மாவட்டங்களில் இந்ததொகை விடுபட்டிருப்பதாக குறைகள் இருக்கிறது. அந்த குறைகள் விரைவில் நிவர்த்தி செய்யப்பட்டு தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் மாதந்தோறும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று இந்தநேரத்தில் உறுதி அளிக்கிறேன்.
நடந்து முடிந்த நாடாளுமன்றதேர்தலில் மிகப்பெரிய வெற்றியை தி.மு.க.விற்கு தேடிக் கொடுத்தீர்கள்.
40-க்கு 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வைத்து 100 சதவீதம் வெற்றியை கொடுத்தீர்கள். தி.மு.க. அரசுக்கு மக்களால் கொடுக்கப்பட்ட நற்சான்றுதான் இந்த வெற்றிக்கு காரணம்.
வரக்கூடிய 2026-ல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலிலும் தி.மு.க. தலைமையிலான நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு தந்து குறைந்தது 200 தொகுதிகளில் மாபெரும் வெற்றி பெற வைத்து தலைவர் மு.க.ஸ்டாலினை மீண்டும் முதலமைச்சராக ஆட்சி கட்டிலில் அமர வைக்க வேண்டும் என்ற நிலையை நீங்கள் எல்லோரும் ஏற்படுத்த வேண்டும். அதற்காக இன்று முதலே பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். நம்முடைய அரசின் திட்டங்கள் மூலம் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பயனாளி இருப்பார்.
அவர்களை தொடர்பு கொண்டு இப்போதே பிரசாரத்தை ஆரம்பிக்க வேண்டும். அதனை கலைஞர் சிலை முன்பு நாம் எல்லோரும் உறுதி ஏற்கவேண்டும். எந்த திசையிலிருந்து யார் வந்தாலும் டெல்லியில் இருந்து வந்தாலும், லோக்கலில் இருந்து வந்தாலும், எப்பேற்பட்ட கூட்டணி போட்டு வந்தாலும் அவர்களை வீழ்த்தி விட்டு தி.மு.க. கூட்டணியை மாபெரும் வெற்றி பெற வைக்கவேண்டும். அதற்காக நாம் அனைவரும் அயராது தேர்தல் பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிற மாநில செயலாளர்கள் கலந்துகொண்டனர்.
- தவெக தலைவர் விஜய் கூட்டணிக்கு அழைப்பு விடுத்திருப்பது குறித்தும் நிர்வாகிகளிடம் கருத்து கேட்கப்பட இருக்கிறது.
சென்னை:
அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிற மாநில செயலாளர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், நடிகர் விஜய் புதிய அரசியல் கட்சி தொடங்கியது குறித்தும், அதனால் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு பாதிப்பு வருமா? என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், தவெக தலைவர் விஜய் கூட்டணிக்கு அழைப்பு விடுத்திருப்பது குறித்தும் நிர்வாகிகளிடம் கருத்து கேட்கப்பட இருக்கிறது.
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 1½ ஆண்டுகளே இருப்பதால், அதுவரை மக்கள் பிரச்சனைகளை வெளியே கொண்டுவந்து போராட்டங்களை நடத்துவது குறித்தும் விவாதிக்கப்பட இருக்கிறது.
- எஸ்ஏபி.யில் இருந்தும், குமார் நகரில் இருந்தும் 60 அடி ரோட்டுக்கு செல்லக்கூடிய வாகனங்கள் ஒரே வழியாக அனுமதிக்கப்பட்டன.
- குறிப்பிட்ட நேரத்துக்கு பள்ளிக்கு குழந்தைகளை பள்ளியில் கொண்டு விடுவதற்கு முடியவில்லை.
திருப்பூர்:
திருப்பூர் மாநகரில் போக்குவரத்து நெருக்கடியை சரி செய்யும் வகையில் மாநகர போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி சில மாதங்களுக்கு முன்பு புஷ்பா சந்திப்பு பகுதியில் 'பிரீ சிக்னல்' முறையை அமல்படுத்தினர். இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
அதேபோல் தற்போது குமார் நகரில் சோதனை முறையில் போக்குவரத்து மாற்றத்தை போலீசார் மேற்கொள்ள நேற்று அமல்படுத்தினர். அதில் வளையங்காட்டில் இருந்து குமார் நகருக்கு வரும் வாகனங்களை தீயணைப்புத்துறை அலுவலகம் சிக்னல் அருகே திரும்பி செல்லும் (யூ டர்ன்) வகையிலும் அவிநாசி ரோட்டில் இருந்து வளையங்காடு செல்லும் வாகனங்கள் வழக்கம் போல் செல்லவும் அனுமதிக்கப்பட்டது.
அதேபோல் எஸ்ஏபி.யில் இருந்தும், குமார் நகரில் இருந்தும் 60 அடி ரோட்டுக்கு செல்லக்கூடிய வாகனங்கள் ஒரே வழியாக அனுமதிக்கப்பட்டன. அங்கேரிபாளையம் ரோட்டை ஒரு வழிபாதையாகவும் மாற்றியுள்ளனர். இந்தநிலையில் அங்கேரிப்பாளையம் சாலையை ஒரு வழிபாதையாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள்- பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கேரிபாளையம் சாலையில் 3 முக்கிய பள்ளிகள் செயல்படுவதாகவும் அங்கு படிக்கும் பல்லாயிரக்கணக்கான மாணவ மாணவிகளை பெற்றோர்கள் தான் தங்களது வாகனங்களில் கொண்டு விட்டுச்செல்கின்றனர்.
தற்போது ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டதால் மிகுந்த சிரமம் ஏற்படுவதாகவும், குறிப்பிட்ட நேரத்துக்கு பள்ளிக்கு குழந்தைகளை பள்ளியில் கொண்டு விடுவதற்கு முடியவில்லை. எனவே அங்கேரிப்பாளையம் சாலையை ஒருவழிப்பாதையாக மாற்றும் முயற்சியை உடனடியாக கைவிட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்த தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உயர் அதிகாரியிடம் பேசி மாற்று நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் இன்று காலை சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- சப்-கலெக்டர் நாராயணசர்மா திட்டத்தை தொடக்கி வைத்தார்.
- நீர்நிலைகளில் மீன் குஞ்சிகள் இருப்பு வைக்க நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மாமல்லபுரம்:
செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் ஊராட்சிப் பகுதிகளில் உள்ள குளம், ஏரிகளில் நாட்டு இன மீன் வகைகளான ரோகு, கட்லா, மிர்கால் ஆகியவற்றின் குஞ்சுகளை விட்டு, நாட்டு இன மீன்கள் அழியாமல் பாதுகாத்து வருகின்றனர்.
மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மீன் உற்பத்தியை பெருக்கும் வகையில் மீன்வளத்துறையுடன் இணைந்து செயல்படுத்தி வருகின்றனர்.
இதன்படி வட்டார வளர்ச்சி கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகளில் மீன் குஞ்சுகள் இருப்பு வைக்கப்படுகிறது., செங்கல்பட்டு மாவட்டத்தில் 500 ஏக்கர் பரப்பளவு நீர்நிலைகளில் மீன் குஞ்சிகள் இருப்பு வைக்க நிர்ணயிக்கப்பட்டுள்ளது

அதன்படி மீன்வளத்துறை, மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமை சார்பில், 4லட்சம் மீன் குஞ்சுகளை இருப்பு வைக்க தயாராகி வருகிறது.
அதற்காக ஆத்தூர் மீன்வள பண்ணையில் இருந்து கட்லா, ரோகு, மிர்கால் வகை மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது., முதல்கட்டமாக மீன் குஞ்சிகளை செங்கல்படாடு மாவட்ட சப்-கலெக்டர் நாராயணசர்மா திருக்கழுக்குன்றம் அடுத்த அகஸ்தீஸ்வரமங்கலத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட குளத்தில் 26 ஆயிரம் குஞ்சுகளை விட்டு திட்டத்தை தொடக்கி வைத்தார்.

மீன்வளத்துறை உதவி இயக்குனர் ஜனார்த்தனன், ஒன்றியக் குழு தலைவர் ஆர்.டி.அரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இவ்வகை மீன்கள் 7 மாதங்களில் வளர்ந்ததும் அதை பொது ஏலம் விட்டு பிடித்து விற்க்கும் போது கட்லா வகை கிலோ ரூ.220-க்கும், ரோகு வகை ரூ.190-க்கும், மிர்கால் 180-க்கும் விலை போகும் என கூறப்படுகிறது.
- சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறை அங்கு பதிவாகி இருந்த கால் தடத்தை ஆய்வு செய்தனர்.
- கல்குவாரி பகுதியை கடந்து செல்லவே பொதுமக்கள் அச்சப்பட்டு வருகிறோம்.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி வனச்சரகத்திக்கு உட்பட்ட சூசைபுரம், தொட்டகாஜனூர், பீம்ராஜ்நகர், ஒசூர் பகுதியில் கடந்த 2 வருடங்களாக அங்கு உள்ள கல்குவாரியில் பதுங்கி உள்ள சிறுத்தை ஆடு, மாடு, காவல் நாய்களையும் தாக்கி கொன்று வருவது தொடர்கதையாகி வருகிறது.
இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்து வந்தனர். தொடர்ந்து ஆடு மற்றும் நாய்களை வேட்டையாடிய சிறுத்தை அங்கு உள்ள கல்குவாரியில் சென்று பதுங்கி கொள்வதும் வாடிக்கையாகி விட்டது.
இந்நிலையில் தொட்டகாஜனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராசப்பா (42) விவசாயி. 4 மாடுகள், 5 ஆடுகள் வளர்த்து வருகிறார். வழக்கம் போல் வீட்டின் முன் உள்ள கொட்டகையில் கட்டி வைத்து விட்டு தூங்க சென்றுவிட்டார். காலை வந்து பார்த்த போது தனது ஆடு ஒன்று பாதி உடலை தின்ற நிலையில் இறந்து கிடந்து.
இது பற்றி உடனடியாக தாளவாடி வனத்துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறை அங்கு பதிவாகி இருந்த கால் தடத்தை ஆய்வு செய்தனர். இதில் கல்குவாரியில் இருந்து வந்த சிறுத்தை ஆட்டை கடித்துக் கொன்றது தெரியவந்தது.
இது குறித்து இப்பகுதி மக்கள் கூறும்போது, கடந்த 2 வருடமாக இங்கு உள்ள கல்குவாரியில் பதுங்கி இருக்கும் சிறுத்தை அவ்வபோது வெளியே வந்து நாங்கள் வளர்த்து வரும் ஆடு, மாடு, நாய்களை தொடர்ந்து வேட்டையாடி வருகிறது.
இதனால் கல்குவாரி பகுதியை கடந்து செல்லவே பொதுமக்கள் அச்சப்பட்டு வருகிறோம். இதுவரை 50-க்கும் மேற்பட்ட கால்நடைகளை சிறுத்தை கொன்றுள்ளது. தொடர்ந்து அட்டகாசம் செய்து வரும் சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என்றனர்.
- கஸ்தூரிக்கு சம்மன் அனுப்பி நேரில் விசாரிக்க போலீசார் முடிவு.
- கஸ்தூரி தனது கருத்துக்கள் அனைத்தையும் திரும்ப பெறுவதாக கூறியிருக்கிறார்.
சென்னை:
சென்னை எழும்பூரில் இந்து மக்கள் கட்சி சார்பில் பிராமணர்களை பாது காப்பதற்காக வன்கொடுைம தடுப்பு சட்டத்தை போல புதிய சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி அக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய நடிகை கஸ்தூரி தெலுங்கு பேசும் பெண்கள் பற்றி அவதூறான கருத்துக்களை கூறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து தெலுங்கு சங்கம் சார்பில் எழும்பூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இதன்படி கஸ்தூரி மீது கலவரத்தை தூண்டுதல், 2 பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்துதல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து எழும்பூர் போலீசார் கஸ்தூரியிடம் விசாரணை நடத்த முடிவு செய்திருப்ப தாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவருக்கு சம்மன் அனுப்புவது தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் போலீசார் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
கஸ்தூரிக்கு சம்மன் அனுப்பி குறிப்பிட்ட நாளில் நேரில் வரவழைக்க போலீசார் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.
இதற்கிடையே கஸ்தூரி தனது கருத்துக்கள் அனைத்தையும் திரும்ப பெறுவதாகவும், மன்னிப்பு கேட்பதாகவும் கூறியிருக்கிறார். இது பற்றியும் ஆலோசித்து வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- உடையார்பாளையம் உதவி கலெக்டர் அலுவலகத்தில் பேச்சு வார்த்தையில் நடந்தது.
- இந்த மோதலில் கொளஞ்சி மனைவி தேவகி, காமராஜ் மனைவி சரோஜா ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள குவாகம் கிராமம் வெற்றி தெருவை சேர்ந்தவர் கொளஞ்சி. இவரது மனைவி தேவகி (வயது 40). குவாகம் ஒன்றிய அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர். அதே பகுதியை சேர்ந்தவர் காமராஜ். அவரது மனைவி சரோஜா (55) குவாகம் ஒன்றிய தி.மு.க. கவுன்சிலர்.
கொளஞ்சி மற்றும் காமராஜ் ஆகியோருக்கு இடையே அரசியல் முன் பகை இருந்து வந்தது. கொளஞ்சி வீட்டின் எதிர்ப்புறம் மாரியம்மன் கோவில் ஒன்று உள்ளது அதன் அருகே ஒரு காலி மனை உள்ளது.
இந்த மனையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு கொளஞ்சி மண் கொட்டினார். அப்போது காமராஜ் அந்த இடம் கோவிலுக்கு சொந்தமானது எனக் கூறி மண் கொட்ட எதிர்ப்பு தெரிவித்தார். அதன் தொடர்ச்சியாக இரு தரப்பினருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இது குறித்து குவாகம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் உடையார்பாளையம் உதவி கலெக்டர் அலுவலகத்தில் பேச்சு வார்த்தையில் நடந்தது. அதில் பிரச்சனைக்குரிய இடம் கொளஞ்சிகே சொந்தம் என உதவி கலெக்டர் உத்தரவிட்டார். இதனால் கொளஞ்சி நேற்று காலிமனையில் மண் நிரவ ஆரம்பித்தார். அப்போது மீண்டும் இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது.
தகவல் அறிந்த குவாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர். அப்போது போலீசாரின் முன்னிலையில் இரு தரப்பினரும் மாறி மாறி கல்லால் தாக்கி கொண்ட னர். அப்போது கொளஞ்சி மற்றும் அவரது தரப்பைச் சேர்ந்த நபர்களின் வீடுகள் மீது நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டது. மேலும் வீடுகள், 4 பைக்குகள் ஒரு கார் அடித்து நொறுக்கப்பட்டன. உடனே போலீசார் இருதரப்பை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டவர்களை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
சம்பவ இடத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், துணை போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் தாக்குதலில் வெடித்த, வெடிக்காத நாட்டு வெடிகுண்டுகளை தடயவியல் நிபுணர் குமாரவேல் தலைமையிலான போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த மோதலில் கொளஞ்சி மனைவி தேவகி, காமராஜ் மனைவி சரோஜா ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் காயம் அடைந்த இருதரப்பை சேர்ந்த 5 பெண்கள் உட்பட 7 பேர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று திரும்பினர்
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட கொளஞ்சி தரப்பில் கந்தசாமி, தனவேல், அனிதா, ஆனந்தி ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
காமராஜ் தரப்பில் காமராஜ், திரிசங்கு, பாலச்சந்திரன்,சங்கர், பரமசிவம், சூர்யா, உட்பட 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மோதலை தவிர்ப்பதற்காக அங்கு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
- உடனே வீராவை உறவினர்கள் உடனடியாக மீட்டு மத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
- புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள வேலுவை தேடி வருகின்றனர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள மாட மாடரஅள்ளி, அண்ணா நகர் பகுதியை சேர்ந்த பூங்காவனம் என்பது மகன் வீரா (வயது 33).
இவர் கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியில் உள்ள செயின்ட் ஜான்சன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருந்தாளுனராக வேலை செய்து வருகின்றார்.
தீபாவளி பண்டிகைக்காக விடுமுறையில் வீரா சொந்த ஊருக்கு வந்தார்.
அதே பகுதியைச் சேர்ந்தவர் தொழிலாளி வேலு. இவருடைய மனைவிக்கும், வீராவிற்கும், கள்ள தொடர்பு இருப்பதாக கூறி நேற்று வேலு விடுமுறையில் ஊருக்கு வந்த வீராவிடம் தகராறில் ஈடுபட்டார்.
இதில் ஆத்திரமடைந்த வேலு தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வீராவை சரமாரியாக வெட்டி உள்ளார். இதில் வீராவிற்கு கை, விரல்கள், தலை, கண் ஆகிய பகுதிகளில் வெட்டு காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் மயங்கி கீழே விழுந்தார். அப்போது வீராவின் அலறல் சத்தம் அவரது உறவினர்கள் ஓடிவந்தனர். அதற்குள் வேலு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
உடனே வீராவை உறவினர்கள் உடனடியாக மீட்டு மத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இதுகுறித்து வீரா மத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள வேலுவை தேடி வருகின்றனர்.
- Leopard movement is currently increasing in residential areas, குடியிருப்பு பகுதிகளில் தற்போது சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
- தொடர்ந்து 2 சிறுத்தைகளும் தங்களுக்குள் செல்ல சண்டை போட்டு விளையாடின.
வால்பாறை:
வால்பாறை பகுதியில் பொதுவாக பனிக்காலம் தொடங்கும் நிலையில் அங்கு சிறுத்தைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படும். மேலும் வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஊருக்குள் வரும் சிறுத்தைகள் அங்குள்ள வீடுகளில் வளர்க்கப்படும் நாய், கோழி, ஆடு போன்றவைகளை வேட்டையாடி தின்றுவிட்டு தப்பி செல்வது வழக்கம்.
வால்பாறை கூட்டுறவு காலனி, துளசிங்க நகர், காமராஜர் நகர், அண்ணா நகர் ஆகிய குடியிருப்பு பகுதிகளில் தற்போது சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வனத்தில் இருந்து வெளியேறிய 2 சிறுத்தைகள் தேயிலைத்தோட்டத்தில் இருந்து குடியிருப்புக்குள் நுழைந்தன. பின்னர் அங்குள்ள சாலையில் சிறிது நேரம் படுத்து ஓய்வெடுத்தன. தொடர்ந்து 2 சிறுத்தைகளும் தங்களுக்குள் செல்ல சண்டை போட்டு விளையாடின. பின்னர் அவை மீண்டும் குடியிருப்பில் இருந்து வனப்பகுதிக்குள் சென்று மறைந்தன.
இந்த காட்சிகள் அங்குள்ள வீட்டில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளன. இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
- 2 ஆண்டுகளாக பரத நாட்டிய பயிற்சி பெற்றார்.
- பரத நாட்டியத்திலும் பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தி அசத்தினார்.
மேலசொக்கநாதபுரம்:
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தை சேர்ந்த சண்முகமணி-நளினி தம்பதியின் மகள் சனா (வயது11). இவர் அமெரிக்காவில் பிறந்துவளர்ந்தவர். இருந்தபோதும் தாய் தந்தையர் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் என்பதால் தமிழக கலைகள் மீது சிறுமிக்கு மிகுந்த ஆர்வம் இருந்து வந்தது.
இதனால் தமிழகத்தின் பாரம்பரிய கலையான பரத நாட்டியம் கற்க ஆர்வம் கொண்டார். அதன்படி அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் போடியில் கடந்த 2 ஆண்டுகளாக பரத நாட்டிய பயிற்சி பெற்றார்.
பரதநாட்டியம் பயின்று வரும் காலகட்டத்தில் பள்ளி படிப்பு கெடாமல் இருப்பதற்காக இங்குள்ள தனியார் ஆங்கில வழி கல்வியில் 5-ம் வகுப்பு வரை பயின்று வந்தார்.
மேலும் பரத நாட்டியத்திலும் பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தி அசத்தினார். இதனையடுத்து உலக சாதனைக்காக பரத முத்திரைகள் செய்து அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார்.
இவர் 27 வினாடிகளில் 52 பரத முத்திரைகள் செய்து காட்டி விருக்ஷா உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
அவருக்கு போடி முன்னாள் எம்.எல்.ஏ. லட்சுமணன் சான்றுகள் மற்றும் பதக்கங்கள், கேடயங்களை வழங்கி வாழ்த்தினார்.
முற்றிலும் தமிழ் பேசத் தெரியாத நிலையில் தமிழர்களின் பாரம்பரிய நாட்டியக் கலையான பரதநாட்டியம் பயில்வதற்கு அமெரிக்காவில் இருந்து போடி வந்து பரத முத்திரைகளில் உலக சாதனை படைத்து மீண்டும் அமெரிக்கா திரும்ப செல்ல உள்ளார்.
- நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின் தீவிரம் குறைந்ததால் நீர்வரத்தும் குறைய தொடங்கியது.
- தற்போது அணையில் 74.10 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
சேலம்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருந்தது. கடந்த சில நாட்களாக மழை அதிகமாக இருந்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 107 அடியாக உயர்ந்தது.
இந்த நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின் தீவிரம் குறைந்ததால் நீர்வரத்தும் குறையதொடங்கியது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து அதிகளவில் திறந்து விடப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் குறைய தொடங்கியது.
இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 106.92 அடியாக குறைந்து காணப்பட்டது. அணைக்கு வினாடிக்கு 10 ஆயிரத்து 566 கனஅடி தண்ணீர் நேற்று வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று 9 ஆயிரத்து 929 கனஅடியாக குறைந்து காணப்பட்டது. மேலும் காவிரி டெல்டா பாசனத்துக்கு 12 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 600 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 74.10 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.






