என் மலர்
உள்ளூர் செய்திகள்
- நொகனூர் வனப்பகுதி, அலஹள்ளி, தாவரகரை அகிய வனப்பகுதியில் 3 பிரிவுகளாக பிரிந்து முகாமிட்டுள்ளன.
- வனத்துறையினர் ட்ரோன் மூலம் யானைகள் நடமாட்டம் கண்காணித்து வருகின்றன.
தேன்கனிக்கோட்டை:
கடந்த வாரம் பன்னார்கட்டா வனப்பகுதியிலிருந்து 50 யானைகள் தளி வனப்பகுதி வழியாக ஜவளகிரி வனச்சரகத்திற்கு வந்துள்ளன. அதில் 30 யானைகள் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்குள் நகர்ந்துள்ளன.
அதில் 20 யானைகள் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள நொகனூர் வனப்பகுதியில் 20 யானைகள் குட்டிகளுடன் முகாமிட்டுள்ளன. அருகில் உள்ள நொகனூர் வனப்பகுதி, அலஹள்ளி, தாவரகரை அகிய வனப்பகுதியில் 3 பிரிவுகளாக பிரிந்து முகாமிட்டுள்ளன.
காட்டு யானைகள் அருகில் நொகனூர், மரகட்டா, ஆலஹள்ளி, அயன்புரிதொட்டி, தாவரகரை, மலசோனை, கண்டகாணப்பள்ளி, ஏணி முச்சந்திரம், பூதுக்கோட்டை, சந்தனப்பள்ளி, தல்சூர், குருபட்டி உள்ளிட்ட கிராமங்களில் இரவு நேரங்களில் புகுந்து, அவரை, துவரை, தக்காளி, முட்டைகோஸ், பீன்ஸ் ஆகிய பயிர்களை கூட்டம் கூட்டமாக வந்து தின்று நாசம் செய்கின்றன.
இந்நிலையில் தேன்கனிக்கோட்டை வனச்சகர அலுவலர் விஜயன் தலைமையில் 40 பேர் கொண்ட குழுவினர் நொகனூர் வனப்பகுதியில் முகாமிட்டுள்ள யானை கூட்டத்தை கண்காணித்து விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
வனத்துறையினர் ட்ரோன் மூலம் யானைகள் நடமாட்டம் கண்காணித்து வருகின்றன. விவசாய நிலங்கள், தோட்டங்களுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் யானைகள் நடமாட்டம் குறித்து தகவலை உடனடியாக வனத்துறைக்கு தெரிவிக்க வனத்துறை கேட்டுக்கொண்டு உள்ளனர்.
- தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை :
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரி பகுதிகளிலும் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
8-ந்தேதி தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
9-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் மற்றும் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
10-ந்தேதி கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் மற்றும் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
11-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
12-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25°-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31°-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24°-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை மற்றும் நாளை மறுநாள் வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
- மணிகண்டன் கடந்த 3 ஆண்டுகளாக அனுசியாவை காதலித்து வந்தது தெரியவந்தது.
- சம்பவத்தன்று அனுசியாவை கடத்திச் சென்று திருமணம் செய்வதற்கு மணிகண்டன் முயற்சி செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.
நெல்லை:
நெல்லை டவுன் ரத வீதி கீழத்தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகள் சப்பானி என்ற அனுசியா (வயது 28). இவர் நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் அலுவலகத்தில் வேலையை முடித்துவிட்டு புறப்பட்ட அனுசியாவை அந்த வழியாக காரில் வந்த 4 பேர் கும்பல் கடத்த முயற்சி செய்தது. உடனே சுதாரித்துக் கொண்ட அனுசியா கத்தி கூச்சலிட்டார்.
இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் பார்த்து ஓடி வந்தனர். தகவல் அறிந்து வந்த மேலப்பாளையம் போலீசார் காரில் வந்த 4 பேரை பிடிக்க முயற்சித்த நிலையில் 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். பிடிபட்ட 2 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று நடத்திய விசாரணையில் அவர்கள் டவுன் விளாகத்தை சேர்ந்த மணிகண்டன் ( 34), செய்துங்கநல்லூர் அருகே உள்ள அய்யனார்புரத்தைச் சேர்ந்த ஞானமூர்த்தீஸ்வரர்( 22) என்பது தெரியவந்தது.
இதில் மணிகண்டன் கடந்த 3 ஆண்டுகளாக அனுசியாவை காதலித்து வந்ததும் தெரிய வந்தது. மேலும் சம்பவத்தன்று அனுசியாவை கடத்திச் சென்று திருமணம் செய்வதற்கு மணிகண்டன் முயற்சி செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய அவரது கூட்டாளிகளான மாரிச்செல்வம் மற்றும் ஒரு வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
- 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை வலுவான கூட்டணியுடன் எதிர்கொள்வோம்.
- நீங்கள் அனைவரும் கட்சிப் பணியில் கவனம் செலுத்துங்கள் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை:
2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. அந்த வகையில் அ.தி.மு.க..வும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது.
இதன்படி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி காலை 10.35 மணியளவில் கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்தார்.
அப்போது அவரை அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்தோடு வரவேற்றார்கள். இதையடுத்து மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், தலைமை கழக செயலாளர் எஸ்.பி.வேலுமணி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
தமிழகம் முழுவதிலும் இருந்து அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் 82 பேரில் 81 பேர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். சென்னை மாவட்ட செயலாளர்களான ஜெயக்குமார், பால கங்கா, வெங்கடேஷ்பாபு, ஆர்.எஸ்.ராஜேஷ். தி.நகர் சத்யா, விருகை வி.என்.ரவி, ஆதி ராஜா ராம், கே.பி.கந்தன், வேளச்சேரி அசோக், மாதவரம் மூர்த்தி உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளரான பிறகு கட்சியை பலப்படுத்த எடப்பாடி பழனிசாமி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக உள்கட்சித் தேர்தலை நடத்துவதற்கு அவர் முடிவு செய்துள்ளார். ஏற்கனவே மாவட்டம் வாரியாக எடப்பாடி பழனிசாமி புகைப்படத்துடன் கூடிய உறுப்பினர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
இதனை வைத்து அனைத்து பதவிகளுக்கும் தேர்தலை நடத்துவதற்கு அ.தி.மு.க. தலைமை முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக இன்றைய கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அ.தி.மு.க. உள்கட்சி தேர்தலை விரைவாக நடத்தி முடிக்குமாறு மாவட்ட செயலாளர்களுக்கு அவர் உத்தரவிட்டு உள்ளார். அதே நேரத்தில் அடுத்த மாதம் நடைபெற உள்ள அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் குறித்தும் மாவட்ட செயலாளர்கள் கூட் டத்தில் ஆலோசிக்கப்பட்டது. 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டு நிச்சயம் வெற்றி பெற வேண்டும் என்று ஏற்கனவே கட்சியினருக்கு எடப்பாடி பழனிசாமி அறிவறுத்தி இருக்கிறார்.
இது தொடர்பாகவும் இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக மாநிலம் முழுவதும் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் செய்வதற்கும் முடிவு செய்துள்ளார்.
அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது குறித்தும் இன்றைய கூட்டத்தில் கருத்துக்கள் பரிமாறப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு கட்சியினர் இப்போதே தயாராக வேண்டும் என்றும், தி.மு.க. பா.ஜ.க.வை விமர்சிக்கலாம். அதே நேரத்தில் அந்த கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளை விமர்சிக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமியின் பேச்சு குறித்து மாநில நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-
2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை வலுவான கூட்டணியுடன் எதிர்கொள்வோம் என்றும், நீங்கள் அனைவரும் (மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள்) கட்சிப் பணியில் கவனம் செலுத்துங்கள் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
வருகிற சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இருந்தும் சில கட்சிகள் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு வர வாய்ப்பு இருப்பதால் அந்த கூட்டணியில் உள்ள கட்சிகளை பற்றி எந்த விமர்சனமும் செய்ய வேண்டாம் என்கிற கருத்தையும் அவர் பதிவு செய்துள்ளார். இதன் மூலம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நிச்சயம் புதிய கூட்டணி அமையும் என்கிற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முடிந்த பிறகு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம், தி.மு.க. கூட்டணியில் சலசலப்பு இருப்பதாக அ.தி.மு.க. தொடர்ந்து கூறி வருகிறது. ஆனாலும் தி.மு.க. கூட்டணி உறுதியுடன் இருப்பது போல தெரிகிறதே என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்து ஜெயக்குமார் கூறுகையில், "பழைய வரலாறுகளை புரட்டி பார்த்தால் கூட்டணி கணக்குகள் உங்களுக்கு புரியும். நாளை எப்படி இருக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது, சொல்ல முடியாது" என்று தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:-
சட்டமன்ற தேர்தலுக்கு 15 மாதங்களே இருப்பதால் கட்சியினர் தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார். பா.ஜ.க. மற்றும் தி.மு.க. அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும் என்றும் கூறி இருக்கிறார்.
அ.தி.மு.க.வை விஜய் விமர்சிக்காதது ஏன் என்று தொடர்ந்து கேட்கிறீர்கள். விமர்சனம் செய்யும் அளவுக்கு எங்கள் கட்சியும் இல்லை, ஆட்சியும் இல்லை. அ.தி.மு.க. தலைவர்கள் மக்கள் போற்றும் ஆட்சியை தான் இதுவரை வழங்கி உள்ளனர். தி.மு.க. அரசை அனைவரும் விமர்சித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தான் மாறி மாறி பாராட்டிக் கொண்டு இருக்கிறார்கள். எனவே 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. நிச்சயம் படுதோல்வி அடையும். அ.தி.மு.க. ஆட்சிக்கு வரும்.
எங்கள் கட்சியின் தலைவி மீது தி.மு.க. பொய் வழக்குகளை போட்டி ருந்தது. அதில் இருந்து அவர் விடுதலையாகி விட்டார் என்பதை சீமான் புரிந்து கொண்டு பேச வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- திறந்த வெளி ஏலக்கொட்டகையில் தரப்பரிசோதனை நடைபெறுவதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
- அரசு அலுவலர்கள் தெரிவித்த விவரங்களுடன் விவசாயி தெரிவித்த விவரங்கள் சரியாக உள்ளதா என்று ஆய்வு செய்தார்.
தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விழுப்புரம் விற்பனைக் குழு-ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் 2 ஆயிரம் மெ.டன் கொள்ளளவு கொண்ட ஒரு கிடங்கு, 500 மெ.டன் கொள்ளளவு கொண்ட 2 கிடங்குகள், விவசாயிகள் உற்பத்தி செய்யும் பழவகைகள் (எளிதில் அழுகும் வேளாண் பொருட்கள்) இருப்பு வைத்து ஏல விற்பனை செய்வதற்காக 25 மெ.டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதன கிடங்கு மற்றும் ஒரு திறந்தவெளி எலக் கொட்டகை ஆகிய வசதிகள் உள்ளன. விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த நெல், நிலக்கடலை, பருத்தி, எள் ஆகிய வேளாண் பொருட்களை விற்பனை கூடத்திற்கு கொண்டு வந்த அன்றைய தினமே தரப்பரி சோதனை கருவிகளின் மூலம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் அடிப்படையில் ஏலதார்களால் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, ஏலம் விடப்படுகின்றன.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விழுப்புரம் விற்பனைக்குழு-ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி எள், நிலக்கடலை (மணிலா) மற்றும் நெல் உள்ளிட்ட விளைபொருட்கள் வைக்கப்பட்டுள்ள கிடங்குகளையும், திறந்த வெளி ஏலக்கொட்டகையில் தரப்பரிசோதனை நடைபெறுவதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நெல் விற்பனை செய்வதற்காக வந்திருந்த பிடாகத்தை சேர்ந்த சக்கரவர்த்தி என்ற விவசாயியிடம் தற்பொழுது நெல் விற்பனை செய்ததற்கான ஏலத்தொகை விவரம், எத்தனை நாட்களுக்குள் தங்களுடைய வங்கி கணக்கில் நெல்லிற்கான தொகை வரவு வைக்கப்படுகிறது என்பது குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டறிந்து, அரசு அலுவலர்கள் தெரிவித்த விவரங்களுடன் விவசாயி தெரிவித்த விவரங்கள் சரியாக உள்ளதா என்று ஆய்வு செய்தார்.
மேலும், வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் குடிநீர், கழிப்பறை வசதி, வாகன நிறுத்தும் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும், ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில், அன்றாட சந்தை நில விவரம், விளைபொருட்கள் இருப்பு பதிவேடு ஆகியவற்றை பார்வையிட்டும் ஆய்வு மேற்கொண்டார்.
விவசாயிகள் விற்பனை செய்த விளைபொருட்களுக்கான ஏலத்தொகை அவர்களின் வங்கிக்கணக்கில் இ-நாம் மின்னணு ஏல முறை திட்டத்தின்கீழ், வரவு வைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதை கணினியில் அமர்ந்து கணினியை இயக்கி ஆய்வு மேற்கொண்டார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- விஜய்யின் நடிப்பு, நடனம், வசனம் என அனைத்தும் வள்ளியம்மாளை கவர்ந்துள்ளது.
- ஒவ்வொரு படத்திலும் விஜய்யை ரசித்து வந்த வள்ளியம்மாள் ஒரு கட்டத்தில் விஜய்யை தனது மகனாகவே பாவித்து வருகிறார்.
வி.கே.புரம்:
நடிகர் விஜய்க்கு ஏராளமான பெண் ரசிகைகள் உள்ளனர். அந்த வகையில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 65 வயது மூதாட்டி ஒருவர் விஜய்யின் தீவிர ரசிகையாக மட்டுமின்றி, விஜயை தனது மகனாகவே பாவித்து வாழ்ந்து வருகிறார்.
அம்பாசமுத்திரம் அருகே உள்ள மன்னார்கோவில் கிராமத்தை சேர்ந்தவர் வள்ளியம்மாள் (வயது 65). இவருக்கு வெங்கடேசன் என்ற ஒரே ஒரு மகன் மட்டும் உள்ளார்.
கணவரை இழந்த நிலையில் வள்ளியம்மாள் தனது மகனுடன் மன்னார்கோவில் கிராமத்தில் வசித்து வருகிறார். வள்ளியம்மாள் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நடிகர் விஜய்யின் தீவிர ரசிகையாக இருந்து வருகிறார்.
விஜய்யின் முதல் படமான நாளைய தீர்ப்பு கடந்த 1992-ம் ஆண்டு வெளியானது. அப்படத்தை பார்த்த வள்ளியம்மாள் அன்று முதல் விஜய்யின் நடிப்பு பிடித்து அவரது ரசிகையாக மாறினார்.
1993-ம் ஆண்டு வெளியான செந்தூரப்பாண்டி படத்தில் விஜயகாந்த் உடன் விஜய் இணைந்து நடித்திருப்பார். அந்தப் படத்தையும் திரையில் பார்த்த வள்ளியம்மாள் விஜய்யின் தீவிர ரசிகையாக மாறத் தொடங்கினார். அன்று முதல் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக விஜய் நடிப்பில் வெளியான திரைப்படங்களை ஒன்று விடாமல் தியேட்டரில் சென்று பார்த்து வந்துள்ளார்.
விஜய்யின் திரைப்படம் ஒரு தியேட்டரில் எத்தனை நாட்கள் ஓடுகிறதோ, அதுவரை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று வள்ளியம்மாள் தவறாமல் அந்த படத்தை பார்த்து வருகிறாராம்.
விஜய்யின் நடிப்பு, நடனம், வசனம் என அனைத்தும் வள்ளியம்மாளை கவர்ந்துள்ளது. ஒவ்வொரு படத்திலும் விஜய்யை ரசித்து வந்த வள்ளியம்மாள் ஒரு கட்டத்தில் விஜய்யை தனது மகனாகவே பாவித்து வருகிறார்.
கடந்த பல ஆண்டுகளாகவே வள்ளியம்மாள் ஊருக்குள் தனக்கு விஜய்யுடன் சேர்த்து மொத்தம் 2 மகன் அதில் நடிகர் விஜய் தான் எனக்கு மூத்த மகன் என்று கூறி வருகிறார். இதன் காரணமாகவே ஊருக்குள் வள்ளியம்மாள் பாட்டியை விஜய் வள்ளியம்மாள் என்று அழைத்து வருகின்றனர்.
விஜய்யின் நினைவாக வள்ளியம்மாள் பாட்டி வீட்டில் ஆங்காங்கே விஜய் நடித்த படங்களின் புகைப்படங்கள் மற்றும் விஜய் தனது மனைவியுடன் இருக்கும் படங்களை பிரேம் செய்து மாட்டி வைத்துள்ளார்.
தனது வீட்டு பீரோவில் விஜய்யின் புகைப்படம் மற்றும் அவர் குறித்த செய்திகளை பத்திரப்படுத்தி வருகிறார். விஜய் மீது தீராத அன்பை வள்ளியம்மாள் பாட்டி செலுத்தி வருகிறார்.
வள்ளியம்மாள் கூறும் போது, நடிகர் விஜய் தான் எனக்கு தலைமகன். செந்தூரபாண்டி படம் பார்த்ததில் இருந்து விஜய்யை பார்க்க வேண்டும் என்பது தான் எனது வாழ்நாள் ஆசை.
விஜய் வரலாறு புத்தகம் மூலம் அவர் பற்றிய அனைத்து விபரங்களையும் தெரிந்து வைத்துள்ளேன். சினிமாவை விட்டுவிட்டு விஜய் அரசியலுக்கு வந்தது வருத்தம் தான். இருந்தாலும் அவர் அரசியலில் வெற்றி பெற்று முதலமைச்சராகி அனைத்து மக்களுக்கும் நல்லது செய்ய வேண்டும். முதலமைச்சரோடு நின்று விடாமல் பிரதமராக வேண்டும் என்பது எனது ஆசை என்றார்.
- யாழ்ப்பாணம் சிறைக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டனர்.
- இலங்கை கடற்படையால் இந்த ஆண்டு மட்டும் 450 மீனவர்கள் கைதாகியுள்ளனர்.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த மாதம் 23-ந்தேதி 399 விசைப்படகுகள் மீன்பிடி அனுமதி டோக்கன் பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றன. நள்ளிரவில் அவர்கள் இந்திய கடல் எல்லையில் கச்சத்தீவு அருகே வலைகளை விரித்து மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல்கள் மீனவர்கள் மீன் பிடித்த பகுதிக்கு மின்னல் வேகத்தில் வந்தது. அவர்களை பார்த்ததும் மீனவர்கள் அங்கிருந்து அவசரம், அவசரமாக புறப்பட்டனர். இருந்தபோதிலும் 2 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்தனர்.
அதில் இருந்த ராமேசுவரம் மீனவர்கள் 16 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி சிறை பிடித்தனர். அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்து இலங்கைக்கு கொண்டு சென்றனர். பின்னர் ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்தநிலையில் காவல் நிறைவடைந்ததையடுத்து இன்று 16 மீனவர்களும் ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். அவர்களுக்கு வருகிற 20-ந்தேதி காவலை நீடித்து கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து மீண்டும் அவர்கள் யாழ்ப்பாணம் சிறைக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டனர்.
இலங்கை கடற்படையால் இந்த ஆண்டு மட்டும் 450 மீனவர்கள் கைதாகியுள்ளனர். அவர்களுக்கு சொந்தமான 61 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
விழுப்புரம்:
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், பொதுமக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செயல்படுத்தி வரும் பல்வேறு சிறப்புத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்டம் வாரியாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
இதையடுத்து இன்று (புதன்கிழமை) காலை 9.40 மணிக்கு சுற்றுலா மாளிகையில் இருந்து வெளியே வந்தார். அவருடன் அமைச்சர் பொன்முடியும் வந்தார். சுற்றுலா மாளிகை வாசலில் தி.மு.க. வக்கீல்கள் அணி சார்பில் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் சிக்னல் பகுதிக்கு வந்தார். உதயநிதி ஸ்டாலினை சாலையின் இருபுறமும் மக்கள் திரண்டு வரவேற்றனர். மக்கள் வெள்ளத்தில் அவர் மிதந்து வந்தார்.
அவருக்கு கேரள செண்டை மேளம், பறை இசை முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. விழுப்புரத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். அங்கு விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
சாக்கு மூட்டைகளை நீங்களே கொண்டு வருகிறீர்களா என கேட்டார். அதற்கு விவசாயிகள் சாக்கு மூட்டைகளை நாங்கள் தான் கொண்டு வருவோம். கொள்முதல் செய்த பின்னர் அதனை எடுத்து சென்று விடுவோம் என்றனர். வியாபாரிகள் உரிய முறையில் பணம் வழங்குகிறார்களா என கேட்டார்.
அங்குள்ள நெல், பஞ்சு உள்ளிட்ட 12 குடோன்களையும் ஆய்வு செய்தார். பின்னர் வெளியே வந்த அவருக்கு மல்லர் கம்பர் விளையாட்டு சிறுவர் , சிறுமிகள் 6 முதல் 21 வயது வரை உள்ள வீரர், வீராங்கனைகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
விழுப்புரம் நகராட்சி 13-வது வார்டில் முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பராஜ், நகர இளைஞரணி செயலாளர் மணிகண்டன் தலைமையிலும், காந்தி சிலை அருகே விழுப்புரம் நகர்மன்ற தலைவர் தமிழ் செல்வி பிரபு, துணைத் தலைவர் சித்திக் அலி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையில் எம்.ஆர்.ஐ.சி. ஆர்.சி. பள்ளியின் எதிரே விழுப்புரம் சட்டமன்ற தொகுதி இளைஞரணி சார்பில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு விழா நூலகத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அரசின் அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்று, விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்துத்துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள், அதன் முன்னேற்றங்கள் குறித்து ஆய்வு செய்தார். பின்னர் கலைஞர் அறிவாலயம் வந்தார். அங்கு விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க. பல்வேறு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களுடன் கலந்தாய்வு நடத்தினார். அதன்பின்னர் திருச்சி புறப்பட்டு சென்றார்.
- சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
- பகுதி வாரியாக பணிகள் முடிந்த பகுதிகளில் மெட்ரோ ரெயில் இயக்கப்பட உள்ளது.
சென்னை:
சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள் ரூ.63,246 கோடி மதிப்பில் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த திட்டம் சென்னை மாதவரம் - சிப்காட், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி, மாதவரம் - சோழிங்கநல்லூர் ஆகிய 3 வழித்தடங்களில் 118.9 கி.மீ. தூரத்துக்கு செயல்படுத்தப்பட உள்ளன.
இதற்காக சுரங்கப்பாதைகள், உயர்மட்ட பாதைகள், ரெயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. 2026-ம் ஆண்டு முதல் 2-ம் கட்ட மெட்ரோ ரெயிலை இயக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. முதலில் பகுதி வாரியாக பணிகள் முடிந்த பகுதிகளில் மெட்ரோ ரெயில் இயக்கப்பட உள்ளது.

2-ம் கட்ட திட்டத்துக்கான டிரைவர் இல்லாத முதல் மெட்ரோ ரெயில் பூந்தமல்லியில் உள்ள மெட்ரோ ரெயில் டெப்போவிடம் கடந்த அக்டோபர் மாதம் ஒப்படைக்கப்பட்டது. மற்றொரு ரெயில் அடுத்த மாதம் வர உள்ளது. இதன் தயாரிப்பு பணிகள் ஆந்திர மாநிலம் ஸ்ரீ சிட்டியில் உள்ள உற்பத்தி ஆலையில் நடந்து வருகிறது.
டிரைவர் இல்லாத மேலும் 9 ரெயில்கள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் வர உள்ளன. இதுகுறித்து மெட்ரோ ரெயில் அதிகாரிகள் கூறியதாவது:-
முதல் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தில் டிரைவர்களுடன் கூடிய 4 பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரெயில் இயக்கப்படுகிறது. 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தில் டிரைவர் இல்லாத 3 பெட்டிகளுடன் கூடிய மெட்ரோ ரெயில் இயக்கப்பட உள்ளது. பயணிகளின் தேவையை பொருத்து அது 6 பெட்டிகளை கொண்டதாக மாற்றப்படும்.
டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் கடந்த சில வாரங்களாக நடந்து வருகிறது. இதுவரை 50 சதவீத சோதனைகள் முடிந்துள்ளன. ரெயிலை இயக்கும் போது எந்த பிரச்சினையும் எழவில்லை.
நாங்கள் ரெயில்களின் அனைத்து பாகங்களையும் சரிபார்த்து வருகிறோம். ரெயிலின் வேகம், அது எவ்வாறு இயங்குகிறது என்பது குறித்து இந்த மாத இறுதியில் சோதனை செய்யப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
- முதல்வர் கோயம்புத்தூருக்கு வருவது மூலமாக நிறைய திட்டங்கள் கிடைத்துள்ளது.
- ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி என்ற அடிப்படையில் நான் கலந்துகொண்டேன்.
கோவை மாவட்டம் அனுப்பர்பாளையத்தில் ரூ.300 கோடியில் மாபெரும் நூலகத்திற்கும், அறிவியல் மையத்திற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் கலந்து கொண்டார்.
இதைத்தொடர்ந்து அவர் முதலமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்து உரையாற்றினார்.
இதுதொடர்பாக கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கோயம்புத்தூரில் எனது தொகுதி தொடர்பாகவும், கோயம்புத்தூர் மெட்ரோ, விஷ்வ கர்மா திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்துள்ளேன். முதல்வர் பரிசீலிப்பதாய் தெரிவித்துள்ளார்.
முதல்வர் கோயம்புத்தூருக்கு வருவது மூலமாக நிறைய திட்டங்கள் கிடைத்துள்ளது. சாலைகள் எல்லாம் கிடைக்கிறது என்று நன்றி தெரிவித்தேன். திரும்பவும் கோவைக்கு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது திமுக கட்சி நிகழ்ச்சி அல்ல. இது அரசாங்கத்தின் நிகழ்ச்சி. அதுமட்டுமல்ல இது எனது தொகுதியில் நடக்கும் நிகழ்ச்சி. ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி என்ற அடிப்படையில் நான் கலந்துகொண்டேன்.
என்னை பொறுத்தவரை தொகுதி மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள். அவர்களுக்கான சில கோரிக்கைகளை நான் நிறைவேற்ற வேண்டி உள்ளது.
எதிர்க்கட்சி என்றாலும் அவர்கள் ஆளும் அரசாங்கத்தில் இருக்கின்றபோது அந்த விதத்தில் தான் அணுகுகிறேனே தவிர கட்சி ரீதியாக பார்க்கவில்லை என்று கூறினார்.
- கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
- கடும் தள்ளு முள்ளு ஏற்பட்டு திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.
திண்டிவனம்:
கடலூர் மாவட்டம் புவனகிரி மஞ்ச கொல்லை கிராமத்தில் வன்னியர் சமூகத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரை வழிமறித்து குறிப்பிட்ட ஒரு சமூகத்தை சார்ந்தவர்கள் குடி போதையில் அந்த வாலிபரை கடுமையாக அடித்தும், காலால் முகத்தில் உதைத்தும் அராஜகம் செய்தாக கூறப்படுகிறது.
அந்த வாலிபர் கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். வாலிபரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பா.ம.க.வினர் சாலை மறியல் செய்தனர்.
இந்த நிலையில் வன்னியர் சமூக மக்களிடம் ஏற்பட்ட பதட்டத்தை தணிக்க அப்பகுதிக்கு சென்று வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி சமாதானம் செய்துள்ளார்.
ஆனால் விடுதலை சிறுத்தைகள் விநிர்வாகி ஒருவர்.தா. அருள்மொழியை கழுத்தை அறுத்து விடுவதாக கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. அது காணொளியாக முகநூலில் வலம் வந்தது.
இந்த நிலையில் வன்னியர் சங்க தலைவர் மீது கொலை மிரட்டல் விடுத்த அந்த நபர் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என திண்டிவனம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட 200-க்கும் மேற்பட்ட பா.ம.க.வினர் வந்தனர்.
அப்போது நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் போராட்டம் செய்யவிடாமல் பா.ம.க.வினர் மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகளை போலீசார் தடுத்ததால் அப்பகுதியில் கடும் தள்ளு முள்ளு ஏற்பட்டு திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
- கடந்த சில நாட்களாக பெற்றோர் அவரை சரியாக படிக்கவில்லை என்று கண்டித்து வந்ததாக கூறப்படுகிறது.
- போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
களக்காடு:
நெல்லை மாவட்டம் களக்காடு ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். பாத்திர வியாபாரி. இவரது மகள் முத்துலெட்சுமி (வயது 17).
முத்துலெட்சுமி 12-ம் வகுப்பு படித்துள்ளார். கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதினார். ஆனால் அதில் தேர்ச்சி பெறவில்லை. இதையடுத்து மீண்டும் 2-வது முறையாக நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்தார்.
இந்நிலையில் இன்று காலை அவர் வீட்டில் தூக்கில் தொங்கினார். இதைப்பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் இறந்தார்.
இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக பெற்றோர் அவரை சரியாக படிக்கவில்லை என்று கண்டித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த முத்துலெட்சுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






