என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தின் இ-மெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
    • ராயபுரம் போலீசார் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் சோதனை மேற்கொண்டனர்.

    சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தின் இ-மெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

    ராயபுரம் போலீசார் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் சோதனை மேற்கொண்டனர்.

    இந்நிலையில், வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்ததை அடுத்து, மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் ராயபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தமிழக அரசு பிறப்பித்த ஆணையை முதலமைச்சரே மீறியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
    • சட்டப்படி நடக்காமல், இஷ்டப்படி நடப்பவர் அந்தப் பதவி வகிக்கவே தகுதியற்றவர் என்று கவர்னரை விமர்சித்திருந்தார்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    கோவையில் நேற்று செவ்வாய்க்கிழமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற இரு அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் ஆகிய இரு பாடல்களும் பாடப்படவில்லை. அன்னை தமிழையும், தேச ஒற்றுமையையும் அவமதிக்கும் வகையிலான தமிழக அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

    தமிழ்நாடு அரசின் பொதுத்துறை சார்பில் கடந்த 17.12.2021-ஆம் நாள் வெளியிடப்பட்ட 1037 என்ற எண் கொண்ட அரசாணையின் 7(இ) பிரிவின்படி, தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் நிகழ்வு தொடங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும். ஆனால், தமிழக அரசு பிறப்பித்த ஆணையை முதலமைச்சரே மீறியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

    திருப்பூரில் கடந்த 10.02.2019-ஆம் நாள் நடைபெற்ற பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படாததை அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டி கண்டித்தார். அதன்பின் கடந்த இரு வாரங்களுக்கு முன் சென்னையில் கவர்னர் பங்கேற்ற சென்னைத் தொலைக்காட்சி விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தின் ஒரு வரி விடுபட்டிருந்ததை சுட்டிக்காட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழகத்தின் சட்டத்தை மீறுவதாகும். சட்டப்படி நடக்காமல், இஷ்டப்படி நடப்பவர் அந்தப் பதவி வகிக்கவே தகுதியற்றவர்" என்று கவர்னரை விமர்சித்திருந்தார். இந்த விமர்சனம் தாம் பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டதை கண்டுகொள்ளாத முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பொருந்துமா? என்பதை அவர் தான் கூற வேண்டும்.

    தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்படுவதை தமிழ்நாட்டில் உள்ள தமிழுணர்வு மிக்க குடிமக்களால் சகித்துக் கொள்ள முடியாது. கோவையில் செவ்வாய்க்கிழமை தாம் பங்கேற்ற இரு அரசு நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவதை உறுதி செய்யாததற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இனிவரும் காலங்களில் அனைத்து அரசு விழாக்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் தவறாமல் இசைக்கப்படுவதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி செய்ய வேண்டும் என கூறியுள்ளார். 

    • இவரது பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.
    • நடிகை கஸ்தூரி கூறிய கருத்துக்கு கண்டனம் தெரிவித்தார்.

    தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில், நடிகை கஸ்தூரிக்கு நடிகர் எஸ்.வி. சேகர் கண்டனம் தெரிவித்தார்.

    சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி, "300 வருடங்களுக்கு முன் ராஜாவுக்கு அந்தபுரத்தில் பெண்களாக இருந்தவர்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் எல்லாம், தெலுங்கு பேசுபவர்கள் எல்லாம் இன்னைக்கு வந்து தமிழகர்கள் என... அப்படி சொல்லும்போது, எப்போதோ வந்த பிராமணர்களை தமிழர்கள் இல்லை என்று சொல்வதற்கு நீங்க யார்ங்க தமிழர்கள். அதனால்தான் உங்களால் தமிழர்கள் முன்னேற்ற கழகம் என வைக்க முடியவில்லை. திராவிடர் என்ற ஒரு சொல்லை கண்டுபிடித்து.." என்று தெரிவித்து இருந்தார்.

    இந்த விவகாரம் பூதாகாரமாக வெடித்தது. மேலும், இவரது பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். இது தொடர்பாக அவர் பெயரில் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இந்த நிலையில், செய்தியாளர்களை இன்று சந்தித்த நடிகர் எஸ்.வி. சேகர் நடிகை கஸ்தூரி கூறிய கருத்துக்கு கண்டனம் தெரிவித்தார்.

    இது தொடர்பாக பேசிய அவர், "பொது வெளியில் நாம் பேசும் போது, என்ன பேசுகிறோம் என்பதை விட எந்த வார்த்தைகளை பேசக்கூடாது என்பதை தெரிந்து கொண்டு போக வேண்டும். மைக்கை பார்த்ததும், வியாதிக்காரன் வாந்தி எடுத்த மாதிரி எல்லாவற்றையும் பேசினால் தப்பு வரத்தான் செய்யும். கஸ்தூரி பேசியது மிகவும் கண்டிக்கத்தக்க செயல். அவர்கள் பேச வேண்டுமெனில், பிரமாணர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறுவதே தப்பு," என்று தெரிவித்தார்.

    • 2 வாலிபர்கள் திடீரென அரிவாளால் சரவணன் தோள்பட்டை, கையில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.
    • தொடர்ந்து சரவணனை வெட்டிவிட்டு சென்றது என்பது தெரிய வந்தது.

    நெல்லை:

    சென்னையை சேர்ந்தவர் சரவணன் (வயது 30). இவர் நெல்லை வண்ணார்பேட்டை தெற்கு புறவழிச்சாலையில் உள்ள ஒரு தியேட்டரில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

    இதற்காக வண்ணார்பேட்டை எட்டுத்தொகை தெருவில் ஒரு வாடகை வீட்டில் அவர் குடியிருந்து வருகிறார்.

    நேற்று நள்ளிரவு தியேட்டரில் இரவு காட்சி முடிவடைந்து அவர் வண்ணார்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எட்டுத்தொகை தெருவில் அவரை வழிமறித்த 2 வாலிபர்கள் திடீரென அரிவாளால் சரவணன் தோள்பட்டை, கையில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.

    இதில் காயம் அடைந்த சரவணனை அந்தப் பகுதி மக்கள் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடி வருகின்றனர்.

    முதல் கட்ட விசாரணையில் சரவணன் வேலை பார்க்கும் தியேட்டரில் நெல்லை டவுன் பகத்சிங் தெருவை சேர்ந்த கார்த்தி (28) என்பவர் பணியாற்றி வந்தார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு அவரை வேலையை விட்டு நீக்கி உள்ளனர்.

    தனது வேலை போனதற்கு சரவணன் தான் காரணம் என்று நினைத்த கார்த்தி, தனது நண்பரான ஜோதி சங்கர் என்பவரை அழைத்துக் கொண்டு நேற்று இரவு வண்ணார்பேட்டை எட்டுத்தொகை தெருவுக்கு வந்துள்ளார். தொடர்ந்து சரவணனை வெட்டிவிட்டு சென்றது என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    • லட்சுமணன் சம்பவ இடத்திலேயே பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
    • வாசுதேவனும் மது போதையில் இருந்தது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    மதுரை:

    மதுரை செல்லூர் நந்தவனம் பகுதியைச் சேர்ந்தவர் வாசுதேவன் (வயது 62). இவருக்கு ராமன், லட்சுமணன் என இரண்டு மகன்கள் இருந்தனர். இதில் லட்சுமணன் (22) படித்துவிட்டு, எந்தவித வேலைக்கும் செல்லாமல் மது போதைக்கு அடிமையாகி சுற்றித்திரிந்தார்.

    மேலும் அடிக்கடி மது குடிக்க பணம் கேட்டு தந்தை மற்றும் உறவினர்களிடையே தகராறிலும் ஈடுபட்டு வந்துள்ளார். பலமுறை பெற்றோர் அவரை கண்டித்தும் லட்சுமணன் திருந்தவில்லை. பல சமயங்களில் மது பாட்டிலை வாங்கி வந்து வீட்டிலேயே குடிக்கும் நிலைக்கு வந்ததால் அவரது பெற்றோர் கடும் ஆத்திரத்தில் இருந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு மது போதையில் நள்ளிரவில் வீடு திரும்பிய லட்சுமணன், மேலும் தனக்கு மது வேண்டும் என்று வற்புறுத்தி தந்தையிடம் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வாசுதேவன் தனது வீட்டில் உள்ள கிரைண்டர் கல்லை எடுத்து லட்சுமனின் தலையில் ஓங்கி அடித்துள்ளார்.

    இதில் நிலைகுலைந்த லட்சுமணன் சம்பவ இடத்திலேயே பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தகவல் அறிந்து போலீசார் விரைந்து வந்து இறந்த லட்சுமணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் மகனை கொடூரமாக கொலை செய்த வாசுதேவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் வாசுதேவனும் மது போதையில் இருந்தது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் செல்லூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • காற்றில் இருக்கக்கூடிய நச்சுத்தன்மை, வாயுக்களின் தரம் அறியும் இயந்திரம் கொண்டு சோதனை.
    • பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பு கூட்டத்திற்கு அழைக்காததால் அவர்கள் பள்ளி நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    சென்னை திருவொற்றியூர் கிராமத்தெருவில் தனியாருக்கு சொந்தமான விக்டரி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை 1500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    இந்த பள்ளி கட்டிடத்தின் 3-வது தளத்தில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள். அதற்கு எதிர் தளத்தில் ஆய்வுக்கூடமும் உள்ளது.

    கடந்த மாதம் 26-ந் தேதி இந்த ஆய்வுக்கூடத்தில் இருந்து ரசாயன வாயு கசிவு ஏற்பட்டது. இதனால் வகுப்பறையில் இருந்த 45 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம், மூச்சுத்திணறல், கண் எரிச்சல், தொண்டை எரிச்சல் ஏற்பட்டது. சில மாணவிகள் வாந்தி ஏற்பட்டு மயங்கி விழுந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

    இதனால் கடந்த 1 வாரமாக பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பள்ளியில் உள்ள ஆய்வுக்கூடத்தை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆனால் தற்போது வரை ஆய்வுக்கூடத்தில் ரசாயன வாயுகசிவு ஏற்பட்டுள்ளதை கண்டுபிடிக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

    தீபாவளி விடுமுறை முடிந்து நேற்று முன்தினம் மீண்டும் பள்ளி திறக்கப்பட்டது. ஆனால் ரசாயன வாயுகசிவு குறித்து மாவட்ட கல்வி துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு துறையிடமிருந்து எந்த ஒரு அறிக்கையும் வெளியிடவில்லை. பெற்றோர்களிடம் பள்ளி நிர்வாகம் ஏதும் கூறவில்லை என்று கூறி பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ஏராளமானோர் பள்ளியை முற்றுகையிட்டு பள்ளி நிர்வாகிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது திடீரென்று 9 மாணவிகள் மயக்கம் அடைந்தனர். மீண்டும் பள்ளியில் ரசாயன வாயு கசிவு ஏற்பட்டதால் மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பெற்றோர்கள் அலறி அடித்துக்கொண்டு தங்கள் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு சென்றனர். மயக்கம் ஏற்பட்ட மாணவிகளை ஆம்புலன்ஸ் மூலம் எல்லையம்மன் கோவில் அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இது பற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர், தாசில்தார் சகாயராணி, திருவொற்றியூர் மண்டல அதிகாரி புருஷோத்தமன், மருத்துவத்துறை அதிகாரிகள் உடனடியாக பள்ளிக்கு வந்தனர். மாநகராட்சி வடக்கு வட்டாரத் துணை கமிஷனர் ரவிகட்டா தேஜா அதிகாரிகளுடன் பள்ளியை ஆய்வு செய்தனர்.

    இந்நிலையில் தனியார் பள்ளியில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தொடர்ந்து இன்று 3-வது நாளாக சோதனை நடத்தினர்.

    காற்றில் இருக்கக்கூடிய நச்சுத்தன்மை, வாயுக்களின் தரம் அறியும் இயந்திரம் கொண்டு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சோதனை நடத்தினர்.

    இதற்கிடையே, சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களை, பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பு கூட்டத்திற்கு அழைக்காததால் அவர்கள் நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • கொடுக்கும் பணத்தை சிறிது சிறிதாக தந்துவிடுகிறேன் என்று ஆனந்தியிடமும், அவரது தங்கை அனுவிடமும் வாக்குறுதி கொடுத்துள்ளனர்.
    • ஆனந்தியிடம் வாங்கிய பணத்தில் ரூ.3 லட்சத்து 84 ஆயிரத்தை திருப்பி கொடுத்துவிட்டனர்.

    மதுரை:

    மதுரை எஸ்.எஸ்.காலனி நாவலர் நகர் 1-வது தெருவைச் சேர்ந்தவர் நந்தகுமார். இவரது மனைவி ஆனந்தி (வயது 32). இவரின் தங்கை அனு, பொட்டபாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்தார். அப்போது அவருடன் படித்த திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த மதன் என்பவரது மனைவி அம்பிகாவின் அறிமுகம் கிடைத்துள்ளது. இருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். அதன் அடிப்படையில் அம்பிகா அடிக்கடி ஆனந்தி வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்.

    இந்த நிலையில் அம்பிகா பெரிய அளவில் சொந்தமாக தொழில் செய்ய இருப்பதாகவும் அதற்கு பணம் தேவைப்படுவதாகவும் ஆனந்தியிடம் தெரிவித்துள்ளார். அதில் முதலீடு செய்வதற்கு பணம் தேவைப்படுவதாக கூறி ஆனந்தியிடம் கடனாகவும் கேட்டுள்ளார். அவ்வாறு கொடுக்கும் பணத்தை சிறிது சிறிதாக தந்துவிடுகிறேன் என்று ஆனந்தியிடமும், அவரது தங்கை அனுவிடமும் வாக்குறுதி கொடுத்துள்ளனர்.

    அதனை நம்பிய ஆனந்தி கடந்த ஆண்டு பிப்ரவரி முதல் டிசம்பர் மாதம் வரை பல்வேறு தவணைகளில் ஆனந்தி மற்றும் அவருடைய சகோதரி அனு ஆகியோர் வங்கி கணக்கிலிருந்து அம்பிகா மற்றும் மதன் ஆகியோருக்கு ரூ.12 லட்சத்து 25 ஆயிரம் வரை பணம் அனுப்பி உள்ளனர். பின்னர் ஆனந்தியின் வீட்டிற்கு நேரடியாக வந்து 3 லட்சம் ரூபாய் பணத்தை அம்பிகாவும் அவரது கணவரும் பெற்றுள்ளனர்.

    ஆனந்தியிடம் வாங்கிய பணத்தில் ரூ.3 லட்சத்து 84 ஆயிரத்தை திருப்பி கொடுத்துவிட்டனர். மீதி பணம் ரூ.15 லட்சத்து 25 ஆயிரத்தை திருப்பி தருமாறு ஆனந்தி பலமுறை கேட்டுள்ளார். அதற்கு மதனும் அவரது மனைவி அம்பிகாவும் ஆனந்தி மற்றும் அனுவை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் கொடுத்துள்ளனர்.

    இதையடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆனந்தி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். கோர்ட்டு உத்தரவுப்படி எஸ்.எஸ்.காலனி போலீசார் பண மோசடி மற்றும் கொலை மிரட்டல் விடுத்த அம்பிகா மற்றும் அவரது கணவர் மதன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்று பாஜகவினர் பல ஆண்டுகளாக கூறி வருகின்றனர்.
    • பாஜகவினரை கிண்டலடிக்கும் விதமாக சேகர்பாபு பேசிய வீடியோ இணையத்தில் வைரல்

    சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் போரூரில் 16.60 ஏக்கர் பரப்பளவில் ரூ.12.60 கோடி மதிப்பில் ஈரநிலை பசுமை பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான சேகர்பாபு பூங்காவின் பணிகளை நேரில் இன்று காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது பூங்கா ஏரியில் தாமரை வளர்ந்திருப்பதை அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டிய அமைச்சர் சேகர்பாபு, ஏரியில் கூட தாமரை வளரக்கூடாது என்று கிண்டலாக பேசினார். அமைச்சர் சேகர்பாபுவின் பேச்சை கேட்டு அதிகாரிகள் சிரித்தனர்.

    தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்று பாஜகவினர் பல ஆண்டுகளாக கூறிவரும் நிலையில், அதனை கிண்டலடிக்கும் விதமாக சேகர்பாபு பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • தமிழ்நாடு நாயுடு மகாஜன சங்கம் சார்பில் அளித்த புகாரில், 6 பிரிவுகளில் திருநகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • நடிகை கஸ்தூரி மீது திருச்சி குற்றப்பிரிவு போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசிய புகாரில், நடிகை கஸ்தூரி மீது மதுரையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு நாயுடு மகாஜன சங்கம் சார்பில் அளித்த புகாரில், 6 பிரிவுகளில் திருநகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல், நடிகை கஸ்தூரி மீது திருச்சி குற்றப்பிரிவு போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் அவர் மீது நேற்று 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

    இந்நிலையில், அரசு ஊழியர்கள் குறித்த நடிகை கஸ்தூரியின் சர்ச்சை பேச்சுக்கு, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    அரசு ஊழியர்களின் குறிப்பிட்ட பிரிவினர் அதிக லஞ்சம் பெறுவதாக பேசிய நடிகை கஸ்தூரியின் தரம் தாழ்ந்த பேச்சிற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெறும் நிகழ்வுகளை வைத்து, குறிப்பிட்ட பிரிவுகளை சார்ந்த ஊழியர்களை கொச்சைப்படுத்துவதா ? என்றும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    மேலும், குறிப்பிட்ட பிரிவினர் மீது தவறான பிம்பம் ஏற்படும் வகையில் விதமாக பேசிய நடிகை கஸ்தூரி மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

    • சிவக்குமாரின் தாயார் கலாவதி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
    • ஆயுள் தண்டனை கைதி சிவக்குமார் சேலம் மத்திய சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

    வேலூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் மாணிக்கம்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 30). இவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

    இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலூர் சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. ராஜலட்சுமி வீட்டில் வேலைகள் செய்வதற்காக சிவக்குமாரை, சிறைத்துறை வார்டன்கள் அழைத்து சென்றுள்ளனர்.

    அப்போது டி.ஐ.ஜி. வீட்டில் இருந்த பணம், வெள்ளி பொருட்களை திருடியதாக கூறி சிவக்குமாரை சிறை வார்டன்கள், காவலர்கள் சிறையில் தனி அறையில் அடைத்து சித்ரவதை செய்ததாக கூறப்பட்டது.

    இதுதொடர்பாக சிவக்குமாரின் தாயார் கலாவதி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த நீதிபதிகள் இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டனர்.

    அதன்பேரில் வேலூர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வேலூர் சரக சிறைத்துறை டி.ஐ.ஜி.ராஜலட்சுமி, ஜெயில் சூப்பிரண்டு அப்துல்ரகுமான், ஜெயிலர் அருள்குமரன் உள்பட 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    ஆயுள் தண்டனை கைதி சிவக்குமார் சேலம் மத்திய சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

    இதையடுத்து ஏற்கனவே வேலூர் சரக முன்னாள் டி.ஐ.ஜி. ராஜலட்சுமி, ஜெயில் சூப்பிரண்டு அப்துல்ரகுமான், ஜெயிலர் அருள்குமரன் ஆகியோர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

    இதனை தொடர்ந்து வார்டன்கள் சுரேஷ், சேது, சிறைக்காவலர்கள் ராஜூ, ரஷித், மணி, பிரசாந்த், ராஜா, தமிழ்செல்வன், விஜி, பெண் சிறைக்காவலர் சரஸ்வதி, செல்வி ஆகிய 11 பேர் நேற்று சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

    • 2021 ஆட்சி பொறுப்பேற்றது முதல் ஒவ்வொரு மாவட்டத்திற்கு பயணித்து நலத்திட்ட உதவிகளை வழங்கும் திட்டத்தை நடத்தியுள்ளேன்.
    • கோவை மாவட்டத்திற்கு அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த கம்பேக் கொடுத்திருக்கிறார் அமைச்சர் செந்தில்பாலாஜி.

    கோவை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக நேற்று கோவை சென்றார். கோவையில் பொதுமக்களை நேரில் சந்தித்து கள ஆய்வு மேற்கொண்டார்.

    அரசின் நலத்திட்டங்கள், வளர்ச்சிப்பணிகள் முறையாக மக்களை சென்றடைகிறதா? என்பதை ஆய்வு செய்து அதிகாரிகளுடனும் ஆலோ சனை நடத்தினார்.

    நேற்றைய நிகழ்ச்சிகள் முடிந்ததும் இரவு கோவை ரேஸ்கோர்சில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தங்கினார்.

    இன்று 2-வது நாளாக அவர் தனது கள ஆய்வை தொடர்ந்தார். காந்திபுரம் மத்திய ஜெயில் அருகே உள்ள மைதானத்தில் செம்மொழி பூங்கா கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அந்த பணியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பணிகள் எந்தளவு முடிந்துள்ளது. இன்னும் என்னென்ன பணிகள் எஞ்சியுள்ளன என கேட்டறிந்தார். பணிகளை விரைந்து முடிக்குமாறும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    தொடர்ந்து கோவை காந்திபுரம் திறந்த வெளி சிறைச்சா லையின் ஒரு பகுதியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ரூ.300 கோடி மதிப்பில் 8 தளங்களுடன் மிகப்பெரிய நூலகம் மற்றும் அறிவியல் மையம் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று நடந்தது.

    இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று அடிக்கல் நாட்டி நூலகம் கட்டும் பணியை தொடங்கி வைத்தார். விழாவில் ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள், தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

    விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், கோவையில் அமைய உள்ள நூலகத்துக்கு தந்தை பெரியார் பெயர் சூட்டப்படுவதாக அறிவித்தார். தொடர்ந்து அவர் பேசியதாவது:-

    கோவையில் இங்கு குழுமியுள்ள மாணவ செல்வங்களை சந்திக்கும்போது எனக்கு ஒரு புதிய உணர்ச்சியை, ஆற்றலை ஏற்படுத்தி உள்ளது. சில மாதத்துக்கு முன்பு தமிழ்புதல்வன் திட்டத்தை கோவையில் தொடங்கி வைத்தேன். இன்று நூலக அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்றதில் மகிழ்சசி பெருமையடைகிறேன்.

    2021 ஆட்சி பொறுப்பேற்றது முதல் ஒவ்வொரு மாவட்டத்திற்கு பயணித்து நலத்திட்ட உதவிகளை வழங்கும் திட்டத்தை நடத்தியுள்ளேன். கோவைக்கு 3 முறை நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றேன். அப்போது மாவட்டத்திற்கான திட்டங்களை தொடங்கியும், பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் உள்ளேன். புதிய திட்டங்களையும் அறிவித்துள்ளேன்.

    2023 தொடக்கத்தில் அந்த திட்டங்கள் நிலை குறித்து மண்டல வாரியாக ஆய்வு கூட்டங்களையும் நடத்தி உள்ளேன். இந்த ஆண்டு தொடக்கத்தில் பாராளுமன்ற தேர்தல் வந்தது. தேர்தல் முடிந்ததும் அமைச்சரவை கூட்டம் நடத்தி கடந்த 3 ஆண்டுகளில் நாம் அறிவித்த திட்டங்களின் நிலை குறித்து அமைச்சர்கள் துறை ரீதியாக ஆய்வு செய்ய சொன்னேன். நான் தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்க அமெரிக்க பயணம் சென்றேன். அதை முடித்து அமைச்சர்களை சந்தித்து துறை ரீதியான ஆய்வுகளை கோட்டையில் நடத்தி கொண்டிருந்தேன்.

    மாவட்டங்கள் வாரியாக நான் நேரடியாக ஆய்வு செய்யலாம் என்று சொல்லி நான் தொடங்கிய பயணத்தில் முதல் மாவட்டமாக தேர்ந்தெடுத்தது இந்த கோவை மாவட்டத்தை தான். நேற்று காலை இங்கு வந்ததில் இருந்து பல்வேறு பணிகளை ஆய்வு செய்துள்ளேன். பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்துள்ளேன். மாவட்டம் முழுவதும் மக்களுக்கு தேவையான கோரிக்கைகளையும் கேட்டுள்ளேன். அதில் ஒரு கட்டமாக மாபெரும் நூலகத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ளேன்.

    கோவை மாவட்டத்திற்கு அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த கம்பேக் கொடுத்திருக்கிறார் அமைச்சர் செந்தில்பாலாஜி. அவரது சிறப்பான வேகமான செயல்பாட்டை பார்த்து, நடுவில் சில தடைகளை ஏற்படுத்தினார்கள். அந்த தடைகளை உடைத்து மீண்டும் வந்திருக்கிறார். கோவைக்காக சிறப்பாக செயல்பட வந்திருக்கிறார். அது உறுதி.

    கலைஞர் நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்தினோம். அதன் நினைவாக தான் மதுரையில் மாபெரும் நூலகத்தை அமைத்தோம். பல்லாயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பயன் அடைந்துள்ளனர். அதேபோன்று கோவையிலும் கலைஞர் பெயரிலும் அமைக்க வேண்டும் என கோரிக்கை வந்தது. கோவையில் நூலகம் அமைக்கப்படும் என அறிவித்தேன். அடுத்த ஆலோசனையில் அறிவியல் மையமும் அமைக்கலாம் கருத்துக்கள் வந்தது.

    அது வந்ததும் எனக்கு நினைவுக்கு வந்தது தந்தை பெரியார். சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகம், மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் இருக்கு. அதனால் கோவையில் அவர்கள் 2 பேரையும் உருவாக்கிய தந்தை பெரியார் பெயரில் நூலகம், அறிவியல் மையம் அமைவது தான் பொருத்தமாக இருக்கும்.

    தொண்டு செய்து பழுத்த பழம் தான் தந்தை பெரியார். 80 ஆண்டுகளுக்கு முன்பே வரும் உலகம் எப்படி இருக்கும் என கனவு கண்ட பகுத்தறிவு ஆசான். இந்த இளைய சமுதாயம் வாழ தந்தை பெரியார் நூலகமும், அறிவியல் மையமும் கோவையில் கம்பீரமாக மிக சிறப்பாக அமைய உள்ளதை மகிழ்ச்சியாக தெரிவிக்கிறேன்.

    அடிக்கல்நாட்டு விழாவில் இந்த நூலகத்தின் திறப்பு விழா தேதியையும் அறிவிக்கிறேன். 2026-ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தநூலகம் திறக்கப்படும். திராவிட மாடல் அரசு சொன்னதை செய்யும். கோவையில் புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா கட்டிடத்தை திறந்து வைத்தேன்.

    கோவையின் அடையாளமாக மாற உள்ள செம்மொழி பூங்கா பணிகளையும் பார்வையிட்டுள்ளேன். ரூ.133 கோடி மதிப்பில் நடக்கும் அந்த பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு ஜூன் மாதம் அது திறக்கப்பட உள்ளது.

    தி.மு.க ஆட்சியில் திட்டத்தை அறிவித்தால் அதனை குறிப்பிட்ட காலத்திற்கு திறந்து வைப்போம். உயர்தர சிறப்பு மருத்துவமனை, கலைஞர் நூற்றாண்டு நூலகம், ஜல்லிக்கட்டு அரங்கம், வரலாற்றை எடுத்துக்காட்டும் கீழடி அருங்காட்சியகம். அந்த வரிசையில் இந்த பெரியார் நூலகம் இடம் பெற போகிறது.

    தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் நில எடுப்பு நடவடிக்கையில் விலக்கு அளிக்கப்படட நில உரிமையாளர்களுக்கு விடுவிப்பு ஆணைகளை வழங்கினேன். இது 35 ஆண்டு கால பிரச்சனை. பாராளுமன்ற தேர்தலுக்கு பிரசாரத்துக்கு வந்தபோது என்னிடம் மனு கொடுத்தனர். நான் அமைச்சர் முத்துசாமியிடம் கொடுத்து நிரந்தர தீர்வு காண வேண்டும் என சொன்னேன். நேற்று மட்டும் 10 ஆயிரம் குடும்பங்கள் பயனடையும் வகையில் அந்த ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு ஊருக்கும், மக்களுக்கும் தேவையான திட்டங்கள் என்ன. வட்டார மக்களின் எதிர்பார்ப்பு என்ன என அறிந்து அந்த திட்டங்களை செயல்படுத்துகிறோம். என்னை பொறுத்தவரை ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் ஒவ்வொரு நாளையும் மக்களுக்கு நன்மை செய்யும் நாளாக பயன்படுத்தி வருகிறோம். ஒவ்வொரு தனி மனித கவலையையும் போக்கும் அரசாக திராவிட மாடல் அரசு உள்ளது. கலைஞர் மகளிர் உரிமை திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம் என ஏராளமான திட்டங்களால் மக்களுக்கு நன்மை செய்கிறோம்.

    மக்களின் வாழ்க்கையோடு, திராவிட மாடல் அரசு இரண்டற கலந்துள்ளது. வாக்களித்தவர்கள், வாக்களிக்க மறந்தவர்கள், வாக்களிக்க மனமில்லாதவர்கள் என எந்த வேறுபாடும் இல்லாமல் அனைத்து மக்களுக்குமான அரசாக நாம் செயல்பட்டு வருகிறோம். அதனால் தான் மக்கள் நம்மை தொடர்ந்து ஆதரிக்கின்றனர். இன்னும் என்னிடம் நிறைய எதிர்பார்க்கிறார்கள். கடந்த சட்டமன்ற தேர்தலை விட நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. இது தான் நம்மை பலரும் விமர்சிக்க காரணம். எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் அதனை பொருட்படுத்தாமல் மக்களுக்கான எங்கள் பணியை தொடர்ந்து செய்து கொண்டு தான் இருப்போம்.

    இன்றைக்கும் நாம் பார்க்கும் நவீன தமிழ்நாட்டை உருவாக்கியது திராவிட முன்னேற்ற கழக ஆட்சி. எங்களுக்கு ஒரு மிஷன் இருக்கும். அதனை செயல்படுத்துவதற்காக மிஷன் தான் ஆட்சி அதிகாரம். 50 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வடமாநிலமும், தமிழ்நாடும் எப்படி இருந்தது என்று பாருங்கள். இப்போது அதே வடமாநிலத்தோடு, தமிழ்நாட்டை ஒப்பிட்டு பாருங்கள். அது உங்களுக்கே புரியும்.

    தமிழ்நாடு இந்தியாவிலேயே 2-வது பொருளாதார மாநிலம். அதிக நகரமயமான மாநிலம். ஐ.நாவின் வளர்ச்சி இலக்கை செயல்படுத்துவதில் முதல் மாநிலம். இந்தியாவின் முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் கிட்டத்தட்ட 20 விழுக்காடு தமிழகத்தில் தான் உள்ளது. தொழிற்சாலைகள் குறியீட்டில் 48 விழுக்காடு மேற்கொண்டது தமிழ்நாடு தான். தெற்காசியாவில் சுற்றுலாவில் முதல் மாநிலம் தமிழ்நாடு.

    வறுமையின்மை, பட்டினி விழிப்பு, தரமான கல்வி, பாலின சமத்துவம், குடிநீர், வேலை வாய்ப்பு, குறைந்த விலைவாசி, பொருளாதார குறியீடு, தொழில், அமைதி, உற்பத்தி என எந்த புள்ளி விவரத்தை எடுத்தாலும் தமிழகம் தான் முன்னணி மாநிலமாக இருக்கும்.

    இதுசாதாரணமாக நடக்கவில்லை. கொள்கையும், லட்சியமும் கொண்டு அதை அடைவதற்கான தொலைநோக்கு பார்வை, செயல்திட்டங்கள் கொண்ட மக்களுக்கான அரசை நடத்துவதால் இது சாத்தியமாயிற்று. இதை இன்னும் எளிதில் சொல்ல வேண்டும் என்றால், இந்த இயக்கத்தை தொடங்கும்போது பேரறிஞர் அண்ணா வடக்கு வாழ்கிறது. தெற்கு தேய்கிறது என்றார். ஆனால் இன்றைக்கு நாங்கள் தெற்கை வளர்த்திருக்கிறோம். இன்னும் ஒருபடி மேலே போய் சொல்ல வேண்டும் என்றால் வடக்கிற்கும் தெற்கு தான் வாரி வழங்குகிறது. அது தான் உண்மை நிலை. அதை யாரும் மறுக்க முடியாது. என்னை பொறுத்த வரை கோட்டையில் இருந்து பணியாற்றுவது இல்லாமல் களத்தில் பணியாற்றுபவன் இந்த ஸ்டாலின் என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது.

    வரலாற்றில் நிலைத்து இருக்க கூடிய திட்டங்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையில் ஒளியேற்றும் திட்டங்களை செயல்படுத்தியவன் தான் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். உங்களுக்கு ஆற்ற வேண்டிய கடமையும், பணியும் ஏராளம் இருக்கிறது. உங்களது ஆதரவு எங்களுக்கு வேண்டும். அது எங்களை வேலை செய்ய தூண்டும். ஆகவே உங்களுக்காக உங்களில் ஒருவனாக நான் இருப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து காந்திபுரத்துக்கு காரில் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்கள் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்ட முதலமைச்சரும் பதிலுக்கு மக்களை பார்த்து கைகூப்பி வணங்கியும், கைகளை அசைத்தபடியும் சென்றார்.

    விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ. வேலு, முத்துசாமி, செந்தில்பாலாஜி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மு.பெ. சாமிநாதன், கயல் விழி செல்வராஜ், தலைமை செயலாளர் முருகானந்தம், கணபதி ராஜ்குமார் எம்.பி., கலெக்டர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன், மேயர் ரங்கநாயகி உள்பட பலர் பங்கேற்றனர்.

    • நொகனூர் வனப்பகுதி, அலஹள்ளி, தாவரகரை அகிய வனப்பகுதியில் 3 பிரிவுகளாக பிரிந்து முகாமிட்டுள்ளன.
    • வனத்துறையினர் ட்ரோன் மூலம் யானைகள் நடமாட்டம் கண்காணித்து வருகின்றன.

    தேன்கனிக்கோட்டை:

    கடந்த வாரம் பன்னார்கட்டா வனப்பகுதியிலிருந்து 50 யானைகள் தளி வனப்பகுதி வழியாக ஜவளகிரி வனச்சரகத்திற்கு வந்துள்ளன. அதில் 30 யானைகள் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்குள் நகர்ந்துள்ளன.

    அதில் 20 யானைகள் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள நொகனூர் வனப்பகுதியில் 20 யானைகள் குட்டிகளுடன் முகாமிட்டுள்ளன. அருகில் உள்ள நொகனூர் வனப்பகுதி, அலஹள்ளி, தாவரகரை அகிய வனப்பகுதியில் 3 பிரிவுகளாக பிரிந்து முகாமிட்டுள்ளன.

    காட்டு யானைகள் அருகில் நொகனூர், மரகட்டா, ஆலஹள்ளி, அயன்புரிதொட்டி, தாவரகரை, மலசோனை, கண்டகாணப்பள்ளி, ஏணி முச்சந்திரம், பூதுக்கோட்டை, சந்தனப்பள்ளி, தல்சூர், குருபட்டி உள்ளிட்ட கிராமங்களில் இரவு நேரங்களில் புகுந்து, அவரை, துவரை, தக்காளி, முட்டைகோஸ், பீன்ஸ் ஆகிய பயிர்களை கூட்டம் கூட்டமாக வந்து தின்று நாசம் செய்கின்றன.

    இந்நிலையில் தேன்கனிக்கோட்டை வனச்சகர அலுவலர் விஜயன் தலைமையில் 40 பேர் கொண்ட குழுவினர் நொகனூர் வனப்பகுதியில் முகாமிட்டுள்ள யானை கூட்டத்தை கண்காணித்து விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

    வனத்துறையினர் ட்ரோன் மூலம் யானைகள் நடமாட்டம் கண்காணித்து வருகின்றன. விவசாய நிலங்கள், தோட்டங்களுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் யானைகள் நடமாட்டம் குறித்து தகவலை உடனடியாக வனத்துறைக்கு தெரிவிக்க வனத்துறை கேட்டுக்கொண்டு உள்ளனர்.

    ×